வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5

This entry is part 11 of 41 in the series 8 ஏப்ரல் 2012


தியானம் என்பது யாது?
தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று.
விக்கிபீடியா
தியானம் என்பது,
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்வது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.
தியானம் குறித்து பல்வேறு கருத்துகள், சிந்தனைகள்.
’தீ வளர்க்கும் தியானம்’, என்னும் நூல் முழுக்கவும் தியானம் குறித்தும், அதுபற்றிய விளக்கமும், அதை எவ்விதம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறுகிறது.ஒரு துறை சார்ந்த நூல் என்னும் பட்சத்தில் விமர்சனம் என்பதை விட, அந்த நூலில் இடம்பெறும் கருத்துகளின் சாரத்தை இக்கட்டுரையில் பதிவு செய்தால், மேலதிகமாக வாசிக்க ஆர்வம் எழக்கூடும்.
’மனத்தை அதன் இருப்பறிந்து அதை வசப்படுத்துவதே தியானம். தியானம் செய்யப்படும் போது தனியாக மனம் இருப்பதில்லை. ஆகவே மனமே தியானப் பொருளாக மாறி விடுகிறது. மனத்தை மனத்தின் வழியாக மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். விழிப்பு நிலையில் உடல் தான் முக்கியமாகிறது. தியானம் என்பது இந்த நிலையைத் தாண்டி மறந்து போவது ஆகும்.நான் என்று உடலை எண்ணிக்கொண்டிருக்கும் மனிதன் உடலை ‘நான்’, தனிப்படுதலே தியானச்சாதனையாகும்.’

தியானம், நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது. கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது. உலகத்திலிருந்து தப்பித்து ஓடமாட்டோம். இந்த உலகத்திலேயே இருப்போம். ஆனால், நடைபெறும் அனைத்தையும் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு அழகான விளையாட்டாக … மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்வோம். விளையாட்டுத் தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதியாக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.

நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால், நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர. மனிதர் இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்து கொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம். மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது. ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின், பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார். இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள் படகுகள் போல ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே தியான நிலையை அடைவதற்கான பேரின்பத்தை அனுபவிப்பதற்கான ஒரு ஊடகம். ஒரு பாதை. மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் இவர் வழிகாட்டும் பாதை இது.
ஒஷோவின் தியான வழிமுறைகளில் காணக்கிடைக்கும் செய்தியிது.
ஒருநாள் ஒரு ஜென் குரு வகுப்பெடுத்துக்கிட்டு இருக்கும் போது, ஒரு இளம்துறவி அவர்கிட்ட இதே கேள்விய கேக்குறாரு. “எனக்கு ஒரு சந்தேகம் குருவே. தியானத்தினுடைய அடிப்படை என்பது என்ன?”. அதுக்கு அவரு குரு சொன்ன பதில் ‘கவனித்தல்’. நம்ம இளம் துறவிக்கு அந்த பதில் சரியாப் படல. அதனால திரும்ப கேக்குறாரு, “கவனித்தல் பற்றி நான் கேக்கவில்லை குருவே. தியானத்தின் அடிப்படையான அம்சம் பற்றித் தெரிந்து கொள்ளவே கேட்டேன்”. இதற்கும் குரு சொன்ன பதில். “கவனித்தல், கவனித்தல் மற்றும் கவனித்தல். இதுதான் அடிப்படை அம்சம்”.

இந்த ஜென் கதையக் கேட்டப்ப, அந்த இளம் துறவி வகுப்ப கவனிக்காம வேற எதையோ யோசிச்சு கேள்வி கேட்டதாலதான் அந்த குரு கவனிக்குறதப் பத்தி சொல்றாறோன்னு தோணும். ஆனா உண்மையாவே தியானம் கவனிக்குறதுலதான் இருக்கு. ஆனா எதை கவனிப்பது?

“கண்ணை மூடி உங்க மூச்சுக்காற்றை கவனிங்க”. அப்புறம் “எதிரில் எரியும் விளக்கின் சுடரை கவனிங்க”. எத்தனையோ யோகா வகுப்புகள்ல இதையேதான் திரும்பத்திரும்ப சொல்றாங்க. அதுக்கப்புறம் ஈசியா ஒன்னு சொல்வாங்க “மனதை ஒருநிலைப்படுத்துங்கள்”,என்பது தான்.

பொதுவாக தியானத்தில சொல்லப்படும் கவனித்தல் என்பது, நாம் அப்போது இருக்கும் நிலையிலேயே மிகவும் “நெருக்கமாக கவனித்தல்”என்று பொருள்படும். மேற்கண்ட கதையிலிருந்து தன்னை உணர்தலின் அவசியமும் நுட்பமும் விளங்கும்.
இவ்விதமாக தியானம் குறித்து பல வேறு கருத்தியல்கள் உள்ளன. வடிவுடையான், தனக்கே உரிய முறையில் எளிதில் விளங்கும் தன்மையோடு தியான வழிமுறைகளை முன்வைக்கிறார்.
ஆசனம்
சரி. தியானம் என்றதும் நினைவுக்கு வருவது ஆசனம்.ஆசனம் என்பது உடலை அமர்த்தும் நிலை. உடல் வலியின்றி ஒரே நிலையில் நெடுநேரம் இருப்பதற்கு எந்த ஆசனம் எவருக்குப் பயிற்சி செய்ய இலகுவாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவனுக்குக் குறிப்பிட்ட ஒருநிலையில் அமர்ந்து சிந்திப்பது சுலபமாக இருக்கும். ஆனால் மற்றவனுக்கு அது கடினமாக இருக்கலாம்.
ஆயினும் பொதுவாக பத்மாசனம் மிகவும் சிறந்ததாக இருக்கும் என்கிறார்.
பத்மாசனம்:
பத்மாசனம் என்பது யாது?
’பத்மம்’ என்றால் சமஸ்கிருதத்தில் தாமரை என்று அர்த்தம். தாமரை மலர் போன்ற வடிவம் கொண்டதால் இந்த ஆசனம் பத்மாசனம் என்று கூறப்படுகிறது.
பத்மாசனத்தில் எப்படி அமர்வது, மேலும் சின்முத்திரை அதன் வகைகள் குறித்து விளக்கமாக எழுதியுள்ளார்.தியானம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பயிற்சி நூல்போல உள்ளது எனலாம்.
நூலின் முதல் அத்தியாயத்தில் கிரகங்கள் பற்றியும் அவற்றிற்கும் மனித வாழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அழகுபட விளக்குகிறார்.ஒளிக்கதிர்கள் மற்றும் அவற்றின் மேன்மை அவை எவ்விதம் செயலூக்கம் கொள்கின்றன என்பதை சொல்லும் வடிவுடையான், ஞானம் பெற்ற யோகியின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வரையப்படுவதை நியாயப்படுத்துகிறார்.
’மனித உடலில் ஒளிக்கற்றை எல்லாத்திசைகளிலும் வீசியபடி ஓர் உறையிருக்கிறது. இந்த உறையில் இருந்துதான் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா எனப்படும் கதிர் வீச்சுகள் உடலில் உண்டாகின்றன. இந்த கதிர் வீச்சுக்கு ஏற்பத்தான் உடலின் ஆரோக்கியம் அமைகிறது. இந்த கதிர் வீச்சு அதிகம் உள்ளவன் தன்னை அடக்கியாளுவான் என்பது உண்மை’
என் போன்று இத்துறை சார்ந்து பரிச்சயம் அதிகம் அற்றவர்களுக்கு இது முற்றிலும் புதிய செய்தி. அதிகம் அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டக்கூடியதும் கூட.
பயிற்சிக்கு இடத்தேர்வு:
முடியும் என்றால் ஒரு தனியறையை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் தூங்கலாகாது.குளித்துவிட்டு உடலாலும் மனத்தாலும் தூய்மையான பின்னரே அவ்விடத்திற்கு செல்லுங்கள்.
குளித்தால் உடல் தூய்மையாகும். மனம்?
தியானம் செய்யத் துணிபவர் மீது அத்துணை நம்பிக்கை.
பழங்காலத்தில் ரிஷிகள் மலைக்குகைகளில் தியானம் செய்ததற்கான காரணம் இதுவே.
பிரணாயாமம்:
உடலியக்கத்தை உறுதி செய்வது மூச்சு. அந்த மூச்சை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவது பிரணாயாமம். பிராணாயாமத்தில் தியானம் வலுப்பெறுவதாகக் குறிப்பிடுகிறார். மேலும்,பிராணாயாமத்தில்பூராகம், கும்பகம், ரேசகம் என மூன்று வகைகள் எனப்பதிவு செய்கிறார்.
குண்டலினி குறித்த விரிவான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.மனித உடலின் படம் வரைந்து சுரப்பிகளுக்கு தியானத்தின் மூலம் கிட்டும் ஊக்கம் பற்றியும் தெளிவாகப்பேசுகிறார்.
பத்து நாடிகளின் விபரங்கள், சுவாச ஓட்டங்களின் பிரிவுகள் என விரிவாக வடிவுடையான் விவரிக்கிறார்.
தியானத்தை அறிவியல் நோக்கோடு எழுதும் வடிவுடையான், எளிய முறையில் வாசகர்கள் தியானம் செய்யத் தொடங்குவதற்குத் தூண்டுகோலாக கட்டுரைகளை அமைத்திருக்கிறார்.
நூலின் இறுதியில் சித்தர்கள் கூறும் பிராணாயாமம் என 39 விஷயங்களை குறிக்கிறார்.
வாசிக்கும் வாசகன் தானும் தியானம் மேற்கொள்ள வேண்டும் என்னும் உத்வேகத்தைத் தரவல்லதாக நூலில் உள்ள விஷயங்கள் உள்ளன.
படிப்பவர்க்கு நிச்சயம் பயன் தரத்தக்க நூல்.

வெளியீடு:
கற்பகம் புத்தகாலயம்
4/2,சுந்தரம் தெரு,
தி.நகர்
சென்னை-6000 017
பதிப்பாளர்:
திரு நல்லதம்பி
தொலை பேசி: 24314347
அலை பேசி: 9600063554
=======தமிழ்மணவாளன்

Series Navigationசுணக்கம்ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது.—> இல்லை. ஐந்து முக்கிய சப்தங்களில் ஒன்று குருவால் காதில் சொல்லப்படும். அதை தொடர்ந்து உள்மனதில் ஒலிப்பதே முதல் நிலை தியானம். பின் Resonance ஏற்படுத்தும் காலகட்டத்தில் முழுதாய் நிசப்தமான அமைதி நம்மை ஆட்கொள்ளும். இது தியானம். மற்றபடி சாமி பெயரை திரும்ப திரும்ப சொல்லுதல் கடவுள் வேண்டுதல் என்று சொல்லலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *