– அருணகிரி
”What was unfolding in Mumbai was unfolding elsewhere, too. In the age of global market capitalism, hopes and grievances were narrowly conceived, which blunted a sense of common predicament. Poor people didn’t unite, they competed ferociously amongst themselves for gains as slender as they were provisional. And this undercity strife created only the faintest ripple in the fabric of the society at large. The gates of the rich, occasionally rattled, remained unbreached. The politicians held forth on the middle class. The poor took down one another, and the world’s great, unequal cities soldiered on in relative peace”- Katherine Boo.
————————————-
சேரிகள், அதிலும் குறிப்பாக மும்பைச் சேரிகளை நம் திரைப்படங்களும் மேற்குலகும் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறது. ஸ்லம் டாக் மில்லியனர் சமீபத்திய ஆஸ்கார் உதாரணம். ’நாயகன்’ மும்பைச்சேரியை மையமாக்கி எடுக்கப்பட்ட கதை. கிரிகரி ராபர்ட்ஸ் மும்பை சேரியில் வாழ்ந்து அந்த அனுபவங்களின் அடிப்படையில் புனைந்த ”சாந்தாராம்” ஒரு முக்கியமான படைப்பு. அந்த வரிசையில் இந்த வருடம் வெளிவந்திருக்கும் Behind the Beautiful forevers ஒரு தனித்தன்மை வாய்ந்த புத்தகம். இதனை எழுதிய கேதரின் பூ (Katherine Boo) ஸ்வீடன் வம்சாவளி அமெரிக்கர். இந்தியரை மணந்தவர். தொடர்ந்து அமெரிக்க ஏழைகளின் வாழ்நிலை பற்றி எழுதி வரும் பத்திரிகையாளர். ஏழ்மையை கவனப்படுத்தும் பத்திரிகை இதழியலுக்காக புலிட்ஸர் பரிசு பெற்றவர். கேதரின் பூ எழுதியிருக்கும் முதல் புத்தகம் இது.
அண்ணாவாடி
சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக அழிக்கப்படவுள்ள அண்ணாவாடி என்கிற மும்பைச்சேரியின் மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் பற்றி இந்தப்புத்தகம் பேசுகின்றது. கட்டிடக்கூலிகளாக வந்த மும்பைத் தமிழர்களால் 90-களில் உருவாக்கப்பட்ட சேரிதான் அண்ணாவாடி. பிறகு படிப்படியாக அவர்கள் அங்கிருந்து வேறிடம் போய்விட, எல்லா மாநிலமும் கலந்த ஒரு நவீன சேரியாக அண்ணாவாடி உருவெடுக்கிறது. இன்று அங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது கிடைக்கும் சில்லறை வேலைகளைச் செய்கிறார்கள். பலர் குப்பை பொறுக்குகிறார்கள். குப்பையின் பொருட்களை விற்கும் மாபெரும் சந்தையின் அடிமட்ட தொழிலாளிகளாக பெரும்பாலும் இருப்பவர்கள் பதின்ம வயது சிறுவர்கள். அண்ணாவாடியைச்சுற்றி செல்வமும் நவீனமும் ஐந்து நட்சத்திரக் கட்டிடங்களாய் எழுந்து நிற்கின்றன. சர்வதேச விமான நிலையமும், ஹையாட் ஹோட்டலுமாக அண்ணாவாடியை இந்தியப் பொருளாதார வெற்றி சூழ்ந்துள்ளது. அண்ணாவாடியின் அப்துல் ஹுசைனின் சகோதரி சொல்கிறாள்: “எங்களைச்சுற்றி இருப்பதெல்லாம் ரோஜாக்கள், அவற்றின் நடுவில் கிடக்கும் மலம் நாங்கள்”.
எல்லா சேரிகளையும் போல அழுக்கும் நோயும் அன்றாட வாழ்க்கையின் போராட்டங்களும் நிறைந்ததாகத்தான் அண்ணாவாடியும் இருக்கிறது. வஹாபி சமூகத்தைச்சேர்ந்த சோம்பேறிக்குடிகார கரம் ஹுசைனின் ஒன்பது பிள்ளைகள் கொண்ட பெருங்குடும்பம், அதன் சுமையையெல்லாம் தன் தலைமேல் சுமக்கும் கரம் ஹுசைனின் மகன் குப்பை பொறுக்கும் சிறுவன் அப்துல், தன் இரண்டு வயதுக்குழந்தையை வாளித்தண்ணீரில் அமுக்கிக்கொன்ற எண்ணற்ற கள்ளக்காதலர்களையுடைய ஒற்றைக்கால் ஃபாத்திமா, தமையனாலும் தகப்பனாலும் தினமும் அடி வாங்கி கல்யாணத்துக்குமுன் விஷம் குடித்து இறக்கும் தமிழ்ப்பெண் மீனா, போட்டியற்ற ஆபத்தான உயரங்களில் குப்பை பொறுக்கப்போகும் சுனில் ஷர்மா, திருட்டுப்பொருட்களை விற்று கண் குதறப்பட்டு கொலை செய்யப்படும் காலு என்கிற தீபக் ராய், சேரியின் முதல் தாதாவான ராபர்ட், சோரம் போயாகிலும் தன் குடும்பத்தை மேலே கொண்டு வந்து விடவேண்டுமென்று அதிகாரத்தையும் பணத்தையும் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் சிவசேனா அரசியல்வாதி ஆஷா, சேரிக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தந்து கொண்டே சேரியின் முதல் பட்டதாரியாகி விடப் பாடுபடும் அவள் பெண் மஞ்சு, தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்து எலிவிஷம் குடித்து இறந்துபோகும் சஞ்சய் ஷெட்டி- என்று அவலமும் நிராசையும், கண்ணீர் வற்றிப்போன விரக்தியுமாய் இந்தப்புத்தகம் நம் மனதை உலுக்கிப் போடுகிறது.
சேரியின் பன்றிகளும் கொசுக்களும்
சர்வதேச விமானநிலைய விரிவாக்கத்துக்காக அழிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, சேரியில் நீண்ட காலம் வாழ்ந்த குடும்பங்களின் புனர்வாழ்வுக்கு வேறிடத்தில் சிறியதொரு வீட்டினை கட்டித்தர அரசு முன்வருகிறது. அதுவே அங்குள்ள ஏழைகள் பலருக்கு வினையாகிறது. குடிநீர் வசதியுடன் அரசு கட்டித்தரும் புது வீட்டை பலமடங்குக்கு விற்று லாபம் பார்க்கும் வாய்ப்பாக, சேரிக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகளுக்கு இது ஆகிறது. அண்ணாவாடியை நோக்கி அவர்கள் பார்வை திரும்புகிறது. எழுதப்படிக்கத்தெரியாத அனாதரவான மூன்று குழந்தைகளின் தாய் கீதாவிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கிக்கொண்டு அவரது குழந்தைகளுடன் வீட்டை விட்டே அடித்து துரத்தப்படுகிறார். அவளை அடித்து கீழே தள்ளும் குண்டர்கள் அவள் வீட்டு அரிசியில் கெரசினைக் கொட்டுவதைப் படிக்கும்போது இது உண்மையில் வெறும் சேரி ஏழ்மையை விவரிக்கும் புத்தகம் இல்லையென்பது சட்டென்று உரைக்கிறது.
அண்ணாவாடியில் யாரும் பிச்சை எடுப்பதில்லை. சொல்லப்போனால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்கள். நிதி நிறுவனங்கள் திவாலாகி உலகப்பொருளாதாரமே அடி வாங்கும்வரை அப்துல் தினமும் கடுமையாய் உழைத்து குப்பை பொறுக்கி ஐநூறு ரூபாய் வரை கூட சம்பாதிக்க முடிகிறது. வறுமை அவர்களை வீழ்த்துவதில்லை. அன்றாட சோற்றுச்சவால்கள் அவர்களை வீழ்த்துவதில்லை. சோம்பேறித்தனம் அவர்களை வீழ்த்துவதில்லை. அவர்களை வீழ்த்துவது அண்ணாவாடியின்மீது கரிப்புகையாய்க் கவிழ்ந்திருக்கும் மனிதம் மரத்துப்போன லஞ்ச ஊழலும், அதிகாரிகளின் அலட்சியமும், அடித்துப் பிடுங்கும் பேராசையும்தான்.
ஒரு ஆஸ்பத்திரி செலவின் சுமையில் தெருவுக்கு வந்து விடக்கூடும் விளிம்பு வாழ்க்கை வாழ்கின்ற மனிதர்களிடமிருந்து லஞ்சப்பணம் பிடுங்குகிறார்கள் போலீஸ்காரர்கள், வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார் அரசின் ஸ்பெஷல் எக்ஸிக்யுடிவ் ஆஃபீஸர் பூர்ணிமா பைக்ராவ். குப்பை பொறுக்க அனுமதிப்பதற்காக கட்டிட செக்யுரிடிகள் சிறுவர்களிடம் லஞ்சம் வாங்குகிறார்கள். சேரி ஜனங்களின் சிகிச்சைக்கு டாக்டர்கள் லஞ்சம் கேட்கிறார்கள்- லஞ்சம் என்பது மூத்திரச்சந்தின் நாத்தம் போல அனைத்து அதிகார அமைப்புகளின் அத்தனை மூலைகளிலும் நிறைந்திருக்கிறது. லஞ்சம் வாங்குபவர்கள் எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கிறது- அவர்கள் எல்லோருமே உயரதிகாரியின் பங்குக்காகவே லஞ்சம் வாங்குகிறார்கள்.
சேரி மேம்பாட்டுக்கான அரசு நிதிகள் எல்லாம் போலி ஆவணங்கள் வழியாக அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாலும், ஆஷா போன்ற சேரியின் அரசியல் தரகர்களாலும் மடைமாற்றி களவாடப்படுகின்றன. அரசு தரும் குடிநீர்க்குழாயை ஆக்கிரமித்து அதை உபயோகிக்க பணம் வசூலிக்கிறது சிவசேனா. ஆனால் குடிநீர்க்குழாய்க்கென்று சேரி ஏழைகளிடம் வசூலித்த பணத்தை சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிய வோர்ல்ட் விஷன் ’சமூக சேவகரு’க்கு சிவசேனா எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் சேரி மக்கள். .
சிஸ்டர் பௌலெட்டின் ”Handmaids of the blessed trinity” கத்தோலிக்க இல்லத்தால் தத்தெடுக்கப்படும் தெருக்குழந்தைகள், உடம்பு சரியில்லாமல் போகும்போது மீண்டும் தெருவில் விடப்படுகிறார்கள், பதினொரு வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் மீண்டும் சேரியின் குப்பைபொறுக்கும் வாழ்க்கைக்குள்ளேயே துரத்தி விடப்படுகிறார்கள். ஆனால் மனிதர்களது உள்நோக்கங்களைப்புரிந்து கொள்ளும் இடமாக சுனில் ஷர்மாவுக்கு சிஸ்டர் பௌலெட்டின் அனாதை இல்லம் அமைகிறது. பத்திரிகைகள் போட்டோவுக்கு வரும் நாட்களில் மட்டும் அனாதை இல்லத்தில் ஐஸ்கிரீம் கிடைப்பதற்கும், குழந்தைகளுக்கு அன்பளிப்பாய் வரும் உணவு, உடைப்பொருள்களெல்லாம் ரகசியமாய் வெளியே விற்பனை செய்யப்படுவதற்கும், வெள்ளைக்காரர்கள் முன் சிஸ்டர் பௌலெட் அடிக்கடி ”நான் மதர் தெரசாவுக்கு வலதுகையாக இருந்தபோது” என்று பேசுவதற்கும், தாயோ தந்தையோ இருக்கும் குழந்தைகளைக்கூட “எய்ட்ஸ் அனாதை” என்று காட்டித்தருவதற்கும் பின்னுள்ள காரணங்களை அவனால் புரிந்து கொள்ள முடிகிறது.
காலேஜ் பெண் மஞ்சுவை நடுவயதுக்கார மொரீஷிய கிறித்துவ “சகோதரரு”க்கு மணம் முடிக்க சிஸ்டர் பௌலெட் மஞ்சுவின் தாய் ஆஷாவிடம் இமை படபடக்க சிபாரிசு செய்கையில், சிஸ்டருக்கு இதன்மூலம் கிடைக்கப்போகும் கமிஷன் குறித்த சிந்தனை ஆஷாவுக்கு எழுகிறது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், பன்றிகள், சமூக சேவகர்கள், கொசுக்கள், பத்திரிகைகள் என்று எல்லா தரப்புக்கும் பணம், அதிகாரம், வாழ்சூழல், புகழ், செய்தி என்று அந்தந்த தரப்புக்கான பலனை அண்ணாவாடி அளிக்கிறது.
விதிகளும், விதிவிலக்குகளும்
சேரியில் உள்ளவர்களை சுரண்டுவதும் அவர்களது வாழ்க்கையைச்சிதைப்பதும் சேரிக்கு வெளியே இருப்பவர்கள் மட்டும் அல்ல. சேரியில் உள்ள கீழ்மட்ட ஏழைகள் சேரியின் மேல்மட்ட ஏழைகளால் சுரண்டப்படுகிறார்கள், பணம் பிடுங்கப்படுகிறார்கள், காட்டித் தரப்படுகிறார்கள். வட இந்தியருக்கெதிரான சிவசேனா கலவரங்களால் சம்பாத்யம் இழந்து உள்வாடகை தர இயலாமல் ”குடும்பத்துடன் தெருவில்தான் நிற்க வேண்டும்” என்று கண்ணீருடன் கெஞ்சும் பீஹாரின் இந்துப்பெண்ணை அப்துலின் தாய் எந்த மனச்சுணக்கமும் இன்றி நிராகரிக்கிறாள். முஸ்லீம்களுக்கு முஸ்லீம்கள் உதவ வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருக்கும் அவளுக்கு அண்டைவீட்டு பாத்திமாவாலேயே கேடு வருகிறது.
அப்துல் தன் வீட்டை புதுப்பிக்கும் வேலையைத்துவங்கும்போது அப்துலின் தாய்க்கும் அவளது அடுத்த வீட்டு பாத்திமாவுக்கும் பெரும் வாக்குவாதம் தொடங்குகிறது. ஜெஹ்ருன்னிஸா குடும்பம் தன்னைத் தாக்கியதாக பாத்திமா போலீஸ் ஸ்டேஷனின் பொய்ப்பிராது கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து கெரசின் ஊற்றிக்கொண்டு எரிந்து போகிறாள். தன் சேமிப்பு அத்தனையும் வழக்கில் இழந்து சாகிநாகாவுக்கு குப்பை பொறுக்க போகிறான் அப்துல்.
பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப்போகும் அப்துலுக்கு அத்தனை நம்பிக்கையின்மையிலும் கண்ணீர் பொங்க அவனுக்கு நன்னடத்தை போதித்த ஹிந்து “மாஸ்டர்” ஒருவர் வழிகாட்டி குருவாகிறார். நீரும் பனிக்கட்டியும் ஒரே பொருளால் ஆக்கப்பட்டிருந்தாலும் வெவ்வேறான இயல்புடையவையாக இருக்கின்றன. ”சுற்றிலும் எல்லோரும் நீராக இருந்தாலும் தான் பனிக்கட்டியாக இருக்கவேண்டும்” என்பதே சிறைவாழ்வில் இருந்து மீளும் அப்துலுக்கு லட்சியமாகிறது. திருட்டுப்பொருட்களை வாங்கவோ விற்கவோ மறுக்கிறான். தன் புத்திக்கூர்மையால் போட்டி குறைந்த குப்பைக்கூளங்களை கண்டுபிடிக்கும் சோனுவும் அப்துல்போலவே திருட்டுப்பொருட்களுக்கு ஆசைப்படாதவன். சம்பாதித்த பணமெல்லாம் சட்ட ஒழுங்கு அமைப்பின் லஞ்ச ஊழல் பசிக்கும் அதிகார ஆணவங்களுக்கும் தின்னக்கொடுத்து அன்றாடங்காய்ச்சியாகிப்போன வறுமையிலும், சுயமதிப்பையும் நேர்மையின் கம்பீரத்தையும் மட்டும் அணிந்து கொண்டு, உயிர் வாழ்தலுக்கான வலிமையைப் பெற முயலும் அப்துலும், புத்தியை மட்டும் நம்பி நல்லவனாய் வாழ முயலும் சோனுவும் அண்ணாவாடியின் விதிவிலக்குகள்தான்.
பெரும்பான்மையான அண்ணாவாடி மக்களுக்கு எதிர்காலம் குறித்த கனவு இருக்கிறது; ஆனால் நம்பிக்கை இல்லை. சேரி வாழ்க்கையின் மீதான அருவருப்பு இருக்கிறது. ஆனால் சேரியிலிருந்து வெளியேற முடிவதில்லை. இலக்கு தெரிகிறது, ஆனால் பாதைகள் எல்லாம் ஊழலின் சகதிக்குழியால் மூடப்பட்டிருக்கின்றன.
கற்பனையற்ற நிஜம்
இந்த புத்தகம் நாவல் போல படிக்கக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் கற்பனை கிடையாது. அண்ணாவாடி சேரி வாழ்வின் ஒவ்வொரு வரியும் அப்பட்டமாக உண்மையிலேயே நடந்த விஷயங்கள். 2007-லிருந்து 2011 வரை கேதரின் பூ அண்ணாவாடியில் தினமும் வாழவே செய்தார். முதலில் அவரை விசித்திரமாகப் பார்த்த அங்குள்ள மக்கள் பிறகு படிப்படியாக அவரது இருப்பையே உதாசீனம் செய்யும் அளவுக்கு அந்த சேரி வாழ்க்கையின் அம்சங்களில் ஒன்றாக தன்னை ஆக்கிக்கொண்டார். தொடர்ந்து 4 வருடங்கள் அங்குள்ளவர்களுடன் பேசிப்பழகி அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒளிப்பதிவாலும், உரையாடல்களாலும் பதிவு செய்தார். பதிவு செய்வதற்கான காரணத்தையும் சொல்லி விட்டே செய்திருக்கிறார்.
காங்கிரஸ் அரசியல்வாதி, சிவசேனா கார்ப்பொரேட்டர் சுபாஷ் சாவந்த், அண்ணாவாடி போலீஸ்காரர்கள், ஸ்பெஷல் எக்ஸிகியுட்டிவ் ஆபீசர் ஆகியோரிலிருந்து சேரியின் கீதா வரை- பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, கற்பனை இல்லை என்றே ஆவணப்படுத்துகிறார். நான்குவருட ஒளிப்பதிவுகள், உரையாடல்கள், பேட்டிகள் என்று மிக விரிந்த நேரடி தரவுகளை வைத்திருக்கிறார்.
இந்திய ஏழ்மைக்கும் வறுமைக்கும் இந்து மதத்தைக் காரணம் சொல்லும் சில மேற்கத்திய ஆய்வாளர்களின் அபத்தக்கருத்தை நிராகரிக்கிறார். வலிமையற்றிருக்கும் மத்திய அரசை லஞ்ச ஊழலின் காரணங்களில் முக்கியமான ஒன்றாகச்சுட்டிக் காட்டுகிறார். மேற்குல பத்திரிகைக்காரர்கள் பொதுவாகச் செய்வது போல் சேரி மக்களுக்கு தீர்வு வழங்கும் பீடத்தில் தன்னை அமர்த்திக்கொள்ளாமல், ஒரு சுவர்ப்பல்லி போல வெறுமனே சேரியை அவதானித்து பதிவு செய்திருக்கிறார். சேரி மக்களின் எதிர்காலத்தை நம்பிக்கையூட்டும் விஷயமாகச் சொல்வதை கவனமாகத் தவிர்க்கிறார். ஒவ்வொரு பாத்திரத்தின் அந்தரங்க மனவோட்டங்களைப்பேசும்போது கூட, அது தன் கருத்து அல்ல, சேரியின் பாத்திரத்தால் தன்னிடம் பகிரப்பட்டதே என்கிறார். இந்த வகை எழுத்து பத்திரிகைத்துறையில் immersive journalism எனப்படுகிறது.
இந்தப்புத்தகம் வெளிவந்தவுடன் மும்பைக்காரர்கள் சிலர் அண்ணாவாடிக்குச்சென்று பார்த்து ஆஷாவின் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியில் காட்சிகள் நிறமிழந்து தெரிவது உட்பட புத்தகத்தில் வரும் சிறு சிறு விஷயங்கள்கூட அப்படியே உண்மையாய் இருப்பதைக் கண்டு பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த எழுத்துக்கள் எதுவும் அந்த சேரி ஜனங்களின் வாழ்க்கையை உடனே மாற்றி விடப்போகிறதென்று என்று அவரும் சரி, அந்த சேரி ஜனங்களும் சரி நம்பவில்லை. அவர்களது விதியை மாற்றக்கூடிய வல்லமை உள்ள வெளிமக்களின் பார்வைக்காக நிர்க்கதியான வாழ்க்கையை வாழும் சேரி மக்கள் சிலரின் நான்கு வருட வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
பத்திரிகை தார்மீகம்- சில கேள்விகள்
இதில் சில கேள்விகள் எழாமலில்லை. அண்ணாவாடிச்சேரி கடந்த சில மாதங்களில் அகில உலகப்பிரபலம் அடைந்திருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு அண்ணாவாடியின் ஊழல் போலீசால், அரசியல் சக்திகளால் புதுத்தீமை ஏதும் விளையாமல் இருக்குமா என்று கேதரின் பூவால் உறுதியளிக்க முடியாது. அதேபோல இந்தப்புத்தகம் இந்தியிலோ மராத்தியிலோ மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும்வரைதான், அண்ணாவாடியின் ஜனங்களின் சண்டைகள், ஒருவர் மற்றவரைப்பற்றி சொல்லியிருக்கும் அபிப்ராயங்கள் ஆகியவை அவர்களுக்கிடையே பெரிய பூசல்களை விளைவிக்காமல் இருக்கும். அண்ணாவாடிச்சேரியே இல்லாமல் போகும் நிலையில் இது அத்தனை முக்கியம் பெறாது என்றாலும், சேரியின் மனிதர்களையும் அவர்களது அந்தரங்க வாழ்க்கையையும் இந்த வகையில் வெளிச்சம்போடுவதன் மீதுள்ள சாரமான கேள்வி பேசப்பட வேண்டியதே.
– சஃபாரி விலங்குகளைப்படமெடுப்பது போல சேரி ஜனங்களின் பிரச்சனைகளில் எந்த விதத்திலும் தலையிடாமல் விலகி நின்று பதிவு செய்வதை எந்த எல்லைவரை இதழியல் தர்மம் என்று நியாயப்படுத்திக்கொள்ள முடியும்?
– ஆக்ஸிடெண்ட் ஆகி சேரி ஜனங்கள் பார்வையிலேயே தெருவோரத்தில் மாலை வரை ரத்தம் இழந்து ஒருவர் சாகும் சம்பவத்தில் ஆவணப் பத்திரிகையாளரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
– பாத்திமாவின் பொய்பிராது குறித்து போலீஸிடம் தன் ஆவணத்தரவுகளை கேதரின் பூ அளித்தாரா?
– மனித அவலம் என்பது நேஷனல் ஜியாக்ரபியின் விலங்குச்சண்டை டாக்குமெண்டரிபோல விலகியிருந்து ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றா?
– அண்ணாவாடி வீடியோக்களும், ஆஷா, மஞ்சு போன்ற ”கதாபாத்திரங்களின்” போட்டோக்களும் வலைத்தளங்களில் வெளியாகி விட்டன. சேரி மனிதர்களின் தனிமனித அந்தரங்கங்கள், ரகசியங்கள் ஆகியவை மீது கேதரின் பூ வைத்திருக்கும் மதிப்பு என்ன?
– அநியாயங்களின்மேல் பகிரங்க வெளிச்சம் போட்டு பெயர் குறிப்பிட்டு வெளிப்படையாய் எழுதியது, நீண்ட கால நோக்கில் இதனால் ஒரு நல்லது விளையலாம் என்கிற எண்ணத்தில்தான், என்கிறார் கேதரின் பூ. ஆனால்,
அமெரிக்காவில் வாழும் அமெரிக்க பிரஜை ஒருவர், அமெரிக்க ஏழ்மையை அம்பலப்படுத்தி எழுதுவதும் அதே அமெரிக்க பிரஜை இந்திய ஏழ்மையின் கூறுகளை அதே போல் பெயர் சொல்லி வெளிச்சம் போட்டு எழுதுவதும் ஒரே மாதிரி விளைவை உருவாக்குமா?
– ஆஷா பொய் ஆவணம் மூலம் அரசு பணத்தை கையாடியதும் அதில் மஞ்சு சாட்சிக்கையெழுத்து போட்டதும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. மஞ்சுவிற்கும் விஜய்க்கும் இடையில் முகிழ்த்த மெல்லிய காதல் பற்றி பேசப்பட்டுள்ளது. ”மஞ்சுவிற்கு திருமணம் ஆக இருக்கிறது- நான் கவலைப்படுவதெல்லாம் புத்தகத்தில் இருப்பதை யாராவது தவறாக உபயோகித்துவிடக்கூடாது என்றுதான்” என்று சொல்லும் ஆஷாவின் கவலை, ஒரு தாயின் இயல்பான கவலை.
– தன் தாய் ஆஷாவின் நடத்தையும் ரகசிய இரவு சந்திப்புகளும் சேரியில் தெரிந்த விஷயம்தான் என்று மஞ்சு ஒரு பேட்டியில் விரக்தியாகச் சொல்கிறாள். மஞ்சுவின் 18 வயது தம்பி கணேஷ் இறுகிய குரலில் “தனிப்பட்ட விஷயங்களை பொதுவில் எழுதியிருக்கக்கூடாது” என்கிறான். ஆஷா, மஞ்சு, கணேஷ் ஆகியோரின் மன உணர்வுகளும் குரலெழுப்ப பலமற்ற தரப்பின் உணர்வுதானே. அதற்கான இடமும் மதிப்பும் புலிட்ஸர் வென்ற ஒரு பத்திரிகையாளருக்குத் தெரியாதா?
இதுபோன்ற கேள்விகள் இதழியல் துறையில் பலகாலம் பலவிதமாய் விவாதிக்கப்பட்டு வரும் கேள்விகள்தான். இந்தக்கேள்விகளை மீண்டும் எழுப்பவும் விவாதிக்கவும் இந்தப்புத்தகம் விரிந்ததொரு களத்தை அளிக்கிறது.
முடிவாக
சேரியைச் சுற்றியுள்ள இந்தியர் அனைவரும் இகழ்ச்சியாய் உணர வேண்டும் என்றே எழுதியதுபோலத்தான் கேதரின் பூவின் நடையும், பல இடங்களில் வெளித்தெறிக்கும் அவரது கூர்மையான எள்ளலும் இருக்கிறது. சேரிச்சுற்றாலா எனப்படும் ஸ்லம் டூரிஸத்திற்காக மும்பை வரும் வெளிநாட்டுப்பயணிகளுக்கு இன்னொரு முக்கியமான இடம் பார்க்கக் கிடைக்கும். இந்தியாவின் லஞ்ச அரசியல், ஊழல் அமைப்புகள், பேரம் பேசப்படும் சட்டம்-ஒழுங்கு, அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் என்று அத்தனையையும் உலகத்தின் கூண்டில் ஏற்றி தலைகுனிய வைப்பதில் இந்தப்புத்தகம் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடையலாம். அதில் தவறில்லை. நம் ஊர்க்காரர் யாராவது இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கலாம்; ஆனால் அதற்கு இந்த அளவு பிராபல்ய வெளிச்சம் கிட்டியிருக்காது. கட்டாயம் இந்தப்புத்தகம் சில பரிசுகளையும் வெல்லப்போகிறது. படமாகக்கூட எடுக்கப்படலாம். இவை எதிலும் தவறில்லை. உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தக்கூடாது என்கிற கடமை எதுவும் மேற்கின் ஊடகங்களுக்கு இல்லை. சொல்லப்போனால் இந்தியாவை தொடர்ந்து கீழ்மையாகவே எல்லா விதத்திலும் காட்டி வரும் மேற்கத்திய ஊடகங்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவும் கூடாது. அதே சமயம் இந்தப்புத்தகம், சேரி மக்களின் அன்றாட வாழ்வுக்கான போராட்டத்தின் அம்சம் எதையும் நீட்டி முழக்கியோ, அதிகப்படுத்தியோ சொல்லவில்லை. நம் கண்முன் இது காட்சிப்படுத்துவது உண்மையின் ஆவணத்தையே. இதைக்காணவும் கண்டு நாணவும் நமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எழுதியவருக்கு இல்லை.
வெளிநாட்டவர் சொல்கிறார்கள் என்பதற்காக வேண்டாம். நமக்காக, நம் எதிர்காலத்தின் ஆரோக்கியத்துக்காக, நம் நாட்டின் பாதுகாப்புக்காக, நம்மை நாமே சீர்செய்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அண்ணாவாடியல்ல உண்மையில் நம் அசிங்கம். லஞ்சம், பேராசை, அடித்துப்பிடுங்கும் அராஜகம், அதிகாரவர்க்க அலட்சியம், அவலத்திலும் லாபம் தேடும் கீழ்க்குணம் ஆகியவை பலமற்ற எளிய இந்தியனின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அடித்து வீழ்த்தி விட முடியுமென்றால் அதுவே நம் அசிங்கம்.
சேரிக்கு உள்ளே ஏற்பட வேண்டிய மாற்றம் சேரிக்கு வெளியே தொடங்க வேண்டும். அந்தத் தொடக்கத்தின் சிறு துளிர்ப்பையாவது இந்தப்புத்தகம் சாத்தியமாக்கும் என்றால், இதன் அத்தனை எதிர்மறை விஷயங்களையும் அது சமன்செய்துவிடும்.
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011