நூபுர கங்கை

7
0 minutes, 0 seconds Read
This entry is part 21 of 28 in the series 29 ஏப்ரல் 2012

 

பழமுதிர் சோலையில்
நூல் விடும் கண்ணீர்
ஏன் இந்த சோக இழை?

கல் மனம் உருக்கிய‌
மோனத்தின்
வெள்ளி நீர்க் கொடியிது.

அழகர் மலை இங்கு
பாறை விரித்து அம‌ர்ந்து
ப‌த்மாச‌ன‌ம் செய்த‌து.

குளிப்ப‌வ‌ர்க‌ளுக்கு
முதுகில் சாட்டைய‌டிக‌ள்
த‌ண்ணீர்க்க‌யிற்றில்.

ம‌லையே போதையில்
புதைந்த‌துவோ?
பாட்டில்க‌ளில் டாஸ்மாக் தீர்த்த‌ம்.

கள்ளழகனா?கதிர் வேலனா?
மெல் ஒலி உதிர்த்து
நீர் நடத்தும் பட்டிமன்றம்.

அடர் இலையில் சுடர் மலரில்
நிழல் பரப்பிய சங்கப்பலகையில்
திருமுருகாற்றுப்படை இது.

கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள்
ம‌னிதத்”தேர்வில்” தோற்றுப்போன‌தில்
கிழிந்து கிட‌ந்த‌து “டார்வின்”புத்த‌க‌ம்.

நூபுரச் சிலம்பு உடைந்ததில்
நீர்ப்பரல் யாவும்
பாண்டியன் கண்ணீர்த்துளிகள் தான்.

திருமாலிருஞ்சோலை ந‌டுவே
காம‌ம் செப்பிய‌ தும்பிக‌ளின்
சிற‌குத்துடிப்பில் திரும‌ண‌ங்க‌ள்.

சுடுவெயில் ம‌துரைக்கு
ப‌சுமயில் தோகையின் சாம‌ர‌ம்
க‌விதைக‌ள் வீசும்.

=========================

Series Navigationகடவுளும் கடவுளும்அக்கினி புத்திரி
author

ருத்ரா

Similar Posts

7 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு ருத்ரா,

    ஒவ்வொன்றும் முத்து முத்தான வரிகள்… அற்புதம்
    //கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள்
    ம‌னிதத்”தேர்வில்” தோற்றுப்போன‌தில்
    கிழிந்து கிட‌ந்த‌து “டார்வின்”புத்த‌க‌ம்.//

    மிகவும் கவர்ந்த வரிகள்….

    அன்புடன்
    பவள சங்கரி.

  2. Avatar
    சோமா says:

    பவளசங்கரியின் வார்த்தையே என்னுடையதும். மனிதக்குரங்கு டார்வின் கவிதை தனித்து நிற்கிறது.

  3. Avatar
    ruthraa says:

    நன்றி பவளசங்கரி அவர்களே

    அழகர்மலை என்றாலே அழகிய குரங்குக்கூட்டங்கள் நம் மனத்தை மனத்தைக் கவர்ந்துவிடும்.அவற்றிடம் வடையையோ பழத்தையோ பறி கொடுப்பது ரசமான அனுபவம்.முன்னோர்கள் பின்னோர்களிடம் விளையாடும் அன்பு விளையாட்டாய் எடுத்துக்கொள்ளவேண்டும் அதை. “நூபுரகங்கை” யில் இவைக‌ளின் த‌னி உல‌கம் அற்புத‌மான‌து.
    உங்க‌ள் ர‌ச‌னைக்கு என் ந‌ன்றி

    அன்புட‌ன்
    ருத்ரா

  4. Avatar
    ruthraa says:

    அன்புட‌ன்
    ருத்ரா

    ந‌ன்றி சோமா அவ‌ர்ளே

    டார்வின் சொன்ன‌ கோட்பாட்டு வ‌ட்டம் அந்தந்த‌ இன‌த்தின் எல்லா உயிர்க‌ளுக்கும் முற்றுப்பெற்றது என்று வைத்துக்கொள்வோம் அப்போது காடுகளும் கடல்களும் வெறுமையாகி நிற்கும்.ஆனால் இந்த முற்றுப்பெறாத மிச்ச வட்டத்தில் (ரிசைஜுவல் சர்கிள்)தான் மனிதன் பெறவேண்டிய அறிவு செல்வங்கள் நிறைய உள்ளன.உங்களுடன் இக்கவிதையை பகிர்ந்து கொள்ளவதில் மிக்க மகிழ்ச்சியும் மிக மிக நன்றியும்.

    அன்புட‌ன்
    ருத்ரா

  5. Avatar
    jayashree shankar says:

    ///////நூபுரச் சிலம்பு உடைந்ததில்
    நீர்ப்பரல் யாவும்
    பாண்டியன் கண்ணீர்த்துளிகள் தான்//////.

    கவிஞர் ருத்ரா அவர்களுக்கு…

    கண் முன்னே அழகர் மலையை….நூபுர கங்கையைக் காட்டி…
    அப்படியே கோவலன் கதைக்கு மனதைத் திருப்பி….
    அன்றைய சம்பவங்கள் இன்றைக்கு நினைவுகளைப் புரட்டச் செய்து…
    இந்தச் சித்திரைக்கு எங்களை கவிதைக்குள் அழைத்துச் சென்று
    திருவிழா….காண வைத்ததோ நூபுர கங்கை…!

    கவிதைக் காட்சி அருமை…அருமை…
    நன்றி
    ஜெயஸ்ரீ ஷங்கர்

  6. Avatar
    ruthraa says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே

    சித்திரா பௌர்ணமி மதுரைக்கு மட்டுமே
    ஒரு தீபாவளிக்குள் இன்னொரு தீபாவளி.
    ஆனால் நரகாசுரர்கள் இல்லாத தீபாவளி.
    அதனால் பட்டாசுகள் தேவையில்லை.
    பாருங்கள் எல்லோருமே
    அங்கு கிருஷ்ணர்கள் தான்.
    “மக்கள் வெள்ளமே” ஒரு கிருஷ்ணாவதாரம்.
    மயிற்பீலி மகுடத்தில் அவர்கள்
    நீர் பீய்ச்சுவதும் சலங்கைகள் ஒலிப்பதும்
    மறக்க முடியாது.
    அழகர்போயில் சாலையின்
    நாளங்கள் தோறும் அந்த‌
    சலக் சலக் ஒலிகள்
    நம் செவிகளில் அன்னத்தூவிகள் வருடி
    கிச்சு கிச்சு மூட்டும்.
    இந்த “வைகைத்”திருவிழா
    வையகம் எல்லாம் நனைக்கும்.
    இந்த விழாவை பகிர்ந்து கொண்டு
    மட்டற்ற மகிழ்ச்சி தந்தமைக்கு
    தங்களுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ருத்ரா

  7. Avatar
    ruthraa says:

    அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே

    அது அழகர்கோயில் சாலை என “பிழை திருத்தம்” போட எண்ணினேன்.ஆனால் அது “அழகர் போன”சாலை என்பதே சரி.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *