முன்னால் வந்தவன்

1
0 minutes, 3 seconds Read
This entry is part 26 of 28 in the series 29 ஏப்ரல் 2012
இப்படி ஒரு தடாலடி வேலையை  எலி என அறியப்படும் ராமகிருஷ்ணன் செய்துவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருமுறையும் எப்படியோ என்னை அறியாது கூட இருக்கும் நண்பர்கள் செய்துவிடும் திருட்டு அல்லது சில்மிஷங்களில் மனசே இல்லாமல் தலையைக்கொடுத்துத் துன்பம்  ஏற்கிற ஜன்மமாகவே ஏன் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. 

ராமகிருஷ்ணன், கூட இருந்தே குழிபறிக்கிறவன் என்பதால் காரணப்பெயராக எலி என்று மிகச்சரியான பெயர் வாங்கி,  அப்படி அழைக்கப்படுவதால் எந்தவித கோபமும் கொள்ளாதவனாகவே இருந்தான்.  அவர்கள் வீட்டிலேயே  கூட அவனை எலி என்றே கூப்பிடத்தொடங்கியதில் அவன் தன் உண்மைப்பெயரையே மறந்து பரீட்சையில் விடைத்தாள்களில்கூட பெயரை எலி என்றும் சிலசமயங்களில் தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேல் என்பதுபோல தன் பெயரை எலி ராமகிருஷ்ணன் என்றும் எழுதிவந்தான். அவன் விடைத்தாள்களில் பெயரே எழுதாவிட்டாலும் கூட அவன் வாங்கும் மார்க்கை வைத்தே யார் அந்த விற்பன்னன் என்பதை ஈசியாக எங்கள் ஆசிரியர் லோகையன் கண்டுபிடித்துவிடுவார். எங்களது வகுப்பில் இன்னொரு ராமகிருஷ்ணனும் இருந்ததால் எலி என்ற பெயர் இருவரையும் வித்தியாசப்படுத்திக் காட்டவும் உபயோகமாய் இருந்தது.

 

எலியின் அப்பா ரயில்வே ஆஸ்பத்திரியில் ஃபார்மஸிஸ்ட்டாக இருந்தார். எலியின்  வீட்டுக்குள் நுழைந்தாலே மருந்து வாடை அடிக்கும். அந்த வீட்டின் ஹாலில் சுழன்று சுழன்று எரியும் சீரியல் பல்புகளின் வெளிச்சக் கட்டத்திற்குள் ஸ்ரீரங்கம் ரங்கனாதர், திருப்பதி வெங்கடாசலபதி, சமயபுரம் மாரியம்மன் எல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்க எலியின் தாத்தா அடுத்த ஃபோட்டோவிற்குள் சூர்ணம் இட்டுக்கொண்டு பதவிசான மனைவி புடவைக்குள் தன்னை  மூடிக்கொண்டு முகம் மட்டும் மூடாமல் மலர்ந்து அருகிலிருக்க என்ன காரணத்தாலோ முறைத்துக்கொண்டிருப்பார் . பக்கத்தில் இருக்கும் ஃபோட்டோவில் எலியின் அப்பா டையெல்லாம் கட்டிக்கொண்டு இடதுகையை ஃப்ராக்ச்சர் ஆனதுபோல் மடித்துக்கொண்டிருக்க அந்தக் கையில் ஒரு கோட்டும் அதன் மேல் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் தொங்கிக்கொண்டிருக்கும். அதைப் பார்த்துவிட்டு என் தம்பி எலியிடம், ” உங்கப்பா என்ன டாக்டராடா? ” என்று கேட்டபோது அருகிலிருந்த எலியின் அம்மாவின் முகம் கோபத்தில் சிவந்து, ” ஆமா! பெரிய டா…க்ட்டரு ” என்று எல்லா எழுத்தையும் அழுத்தியும் நீட்டியும் சொன்னார். உடனே எலி எங்களை மேலும் பேசவேண்டாம் என்பதற்கு அடையாளமாக அவன் உதட்டின்மேல் ஒற்றை விரலை வைத்து,  டிக் அடிப்பதுபோல் தலையை ஒருபக்கமாய் ஆட்டி வெளியில் போய்விடச் சொன்னான். திரும்பிவரும் போதும் என் தம்பி அந்த ஃபோட்டோவையே பார்த்துக்கொண்டே வந்ததில் எலியின் அம்மா  அழ ஆரம்பித்து சத்தமாக,  ” என்னை ஏமாத்தினது போதாதுன்னு இந்த ஃபோட்டோவ மாட்டி ஊரைவேற ஏமாத்தணுமாக்கம் ”  என்று ஒரு முக்கிய கேள்வியை  எதிரே இல்லாத எலியின் அப்பாவை இருப்பது போல் பாவித்துக் கேட்டுக்கொண்டு தான் ஏமாந்த கதையை ஃப்ளாஷ்பேக்கில் ஓட்டிக்கொண்டிருந்தாள்.

 

எலியின் அப்பா ஒன்றும் டாக்டர் இல்லாவிட்டாலும், பொன்மலை ரயில்வே காலனியின் பெரும்பகுதிக்கு அவ்ர்தான் அவசர மருத்துவமும், நகர முடியாத பெருசுகளுக்கு வீட்டு மருத்துவமும் செய்துகொண்டிருந்தார். ஒரு சில கேஸ்களுக்கு வீட்டிலேயே ஆபரேஷன் கூட செய்ததாக எலி சொன்னபோது  என் இன்னொரு நண்பன் சங்கரன் , ” அப்போ அவர் ஹவுஸ் சர்ஜன் வேறயா ? ” என்று தனக்குத் தெரிந்த மருத்துவப் புலமையைக் காட்டிகொண்டான். எலி எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும்,   தலை இருந்தவரைக்கும் போகவே போகாத தலைவலி கொண்டிருந்த என் அப்பாவுக்கும் மருந்து மாத்திரைகளை சப்ளை செய்துகொண்டிருந்தான். மருந்து வாங்கிக்கொண்ட ஆசிரியர்களும் அதற்குப் பிரதி உபகாரமாக பரீட்சையில் அவன் எழுதாத கேள்விகளுக்கும் சேர்த்து நல்ல மதிப்பெண்களைக் கொடுத்துக்கொண்டுதானிருந்தனர். ஒருமுறை கலியன் என்ற சிறுவயது வாத்தியார் எலியிடம் ரகசியமாக ஏதோ கேட்க, ” அவன் அப்பாகிட்ட கேட்டு வாங்கிட்டு வர்றேன் சார் ” என்றவுடன் அவர் அவசரமாக , ” உங்கப்பாகிட்டல்லாம் ஒண்ணும் கேட்டுடாத! நான் எழுதித்தர்றேன். அதே மாதிரி  டப்பா அட்டைமேல அச்சடிச்சிருந்தா எடுத்துக்கிட்டு வா!  ஆனா யாருக்கும் தெரியக்கூடாது, என்ன புரியுதா? ” என்று ரகசியமாய்ச் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டினான். ஆனால் ஆர்வக்கோளாறில் அடுத்த நாள் அவன் பறக்கவிட்டுக் கொண்டிருந்த பலூன்கள்  கலியன் வாத்தியாருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை.

 

பலவருடங்களாக ஒரே க்ளாசிலேயே படித்துக்கொண்டிருந்த பள்ளியின் நிரந்தரத் தலைவன் எங்கள் கேப்டன் ஷம்சுதீன் ஒரு முறை எங்கள் வகுப்புத் தோழர்களுக்காக ஏதாவது டானிக் கொண்டுவரச் சொல்லி எலியை வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன டானிக்கைக் கொண்டுவருவது என்று தெரியாமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்த எலியை ஒரு நாள் ஷம்சுதீன் ஏதோ கோபத்தில் முதுகு வீங்க அடித்து, ” தா…ளி! நாளைக்கு மாத்திரம் நீ டானிக் கொண்டு வரல, உங்கப்பனப் பத்தி நோட்டீஸ் போட்டுருவேன், ஜாக்கிரதை ! அதுக்கப்புறம் உங்கப்பா ஒனக்குக்கூட ஊசி போடமுடியாது தெரிஞ்சுக்க ” என்று மிரட்டிவிட்டான். அதில் ரொம்ப பயந்து போன எலி வீட்டில் அவன் அப்பா ஷெல்ஃபிற்குள் மறைத்து வைத்திருந்த இருமல் மருந்து பாட்டில்களில் இருந்ததையெல்லாம் ஒரு பெரிய பாட்டிலில் கொட்டி ”  அயர்ன் டானிக் ” என்று வேறு ஒரு பாட்டிலில் ஒட்டியிருந்த லேபிளைப் பிய்த்து  அந்தப் பெரிய பாட்டிலின்மேல் ஒட்டி அடுத்த நாள் ஸ்கூலுக்கு எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். நடுவில் பிடிப்பதற்கு ஏதுவாக இருபுறமும் குழிந்திருந்த அந்த பெரிய பாட்டிலின் அழகிலும்,  ஐயர்ன் டானிக் என்பது ரயில்வேக்குப் பொருத்தமான ஒன்றுதான் என்றும் மயங்கிய ஷம்சுதீன் எலியை வெகுவாகப் பாராட்டிவிட்டு, டானிக் ஸ்வீட்டாக இருந்ததால் எங்களுக்கெல்லாம் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துவிட்டு  அரை பாட்டிலை அவனே குடித்துவிட்டான். அன்று சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டும் வகுப்பில் அவனின் ஆஸ்தான பின்பெஞ்சில் அவன் தூங்கிக்கொண்டே இருந்ததில் பயந்துபோன நானும் எலியும் அவனை மெல்ல வெளியே தள்ளிக்கொண்டு வந்து அவனின் உளரல்களைக் கவனிக்காது, வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள யானைப் பார்க்கில் படுக்க வைத்துவிட்டோம். ரொம்ப நேரமாகியும் அவன் எழுந்திருக்காததால் அவனை அங்கேயே விட்டுவிட்டு நானும் எலியும் வீட்டிற்கு ஓடிவிட்டோம். அவன் அங்கிருந்து வீட்டிற்கு எப்படிப் போனான் என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. ஆனால், மதியம் வகுப்பிலேயே தூங்குவதற்கு அவன் எலியை அதே டானிக்கைக் கொண்டு வரச்சொல்லி மிரட்டியபடியே இருந்தான்.

 

இதன் நடுவில், எலியின் அப்பா உடம்பு சரியில்லாத லோகையன் சாரின் வயதான அம்மாவிற்கு ஊசி போட்டதில், அந்த அம்மா அடுத்த நாளே இறந்து போனது எலியின் அப்பாவின் தொழிலுக்குக் கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அதனால் அதுவரை அவன் பள்ளிக்கு அதிகம் கொண்டுவராத சிரிஞ்ச்களை இப்போது கொண்டுவந்ததில் நாங்களெல்லாம் தண்ணீர் பீய்ச்சி அடித்து விளையாடினோம். அந்த வருட அரையாண்டு தேர்வில் லோகையன் சார், எலிக்கு எல்லா சப்ஜெக்டுகளிலும் ஃபெயில் மார்க் வரும்படி பார்த்துக்கொண்டதில் எலி கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அப்படி லோகையன் சாரைப் பழிவாங்கும் ஒரு ஐ.எஸ்.ஐ ப்ளானில்தான் நான் தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டேன்.

 

லோகையன் சார் உட்காரும் சேரில் பபுள்கம் வைப்பது, அல்லது குண்டூசியை வைப்பது, அல்லது அந்தச் சேரின் வெள்ளை ஒயரின்மீது வெள்ளைப் பெயிண்டைத் தடவிவைப்பது, அல்லது அந்தச் சேரின் ஒரு காலை உடைத்து சரியாக இருப்பதுபோல் நிறுத்திவைத்து அவர் உட்காரும்போது கீழே விழவைப்பது போன்ற ஐடியாக்களிலெல்லாம் திருப்திப் படாத எலி மண்டையைத் தான் மாத்திரம் பிய்த்துக்கொள்ளாது என்னையும் அதில் ஆட்படுத்தியிருந்தான். ” ஐயரே! நீ மட்டும் சாயந்தரத்துக்குள்ள  ஒரு நல்ல ஐடியா கொடுக்கலன்னா, நான் இதுவரைக்கும் குடுத்த மாத்திரை மருந்துக்கெல்லாம் நீ பணம் கொடுக்க வேண்டியிருக்கும். நீயும் ஒங்கப்பாவும்  சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்கன்னு எங்க மாமாகிட்ட சொல்லிடுவேன் ” என்று மிரட்டியதில் நான் உண்மையிலேயே கலங்கிப் போய்விட்டேன். ஏனெனில் அவன் மாமா தினமும் குடித்துவிட்டு அடிதடியில் ஈடுபடுபவன். அந்த ஆள் எங்கள் வீட்டின்முன் நின்றுகொண்டு கெட்டவார்த்தைகளைப் பொழிந்துகொண்டிருக்கும் காட்சி மனதில் ஓட என் வயிறு கலங்கி நான் உடனடியாக டாய்லெட்டிற்கு ஓடவேண்டியதாயிற்று. டாய்லெட்டில் இருக்கும்போதே நான் இப்படி வேளை கெட்ட வேளையில் டாய்லெட் வரக் காரணமான  எலியின் மாமாவை விட்டே லோகையன் சாரை ஏன் மிரட்டக் கூடாது என்று தோன்ற வயிறு சற்று நிதானத்திற்கு வந்துவிட்டது. ஆனால், எலி அந்த ஐடியாவை நான் சொல்லிமுடிப்பதற்கு முன்னாலேயே நிராகரித்துவிட்டான்.  ” லோகையன் வாத்தியாரே முன்னாள் மிலிட்டரி ஆளு ! எங்க மாமா மிலிட்டரி ஆளுங்ககிட்டெல்லாம் ஒண்ணும் வெச்சுக்க மாட்டாரு ” என்று சொன்னவுடன் நானும் எப்படியாவது மிலிட்டரியில் சேர்ந்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வெறும் தயிர்சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு எப்படி மிலிட்டரியில் சேர்வது? என் சொந்தக்காரர்கள்கூட யாரும் மிலிட்டரியில் இருந்ததாகவோ அல்லது இருப்பதாகவோ தெரியவில்லை. எலிக்கு ஏதாவது ஐடியா சொல்லாவிட்டால் அவமானம் நிச்சயம் என்றுதான் தோன்றியது.

 

ஆனால் எனக்கு ரொம்ப வேலை வைக்காமல், எலியே ஒரு முடிவுக்கு வந்தவனாக, ” நீ  ஒண்ணும் எனக்கு ஐடியா குடுக்கப் போறதில்ல. அது எனக்கு நல்லா தெரிஞ்சுடுச்சு. அட்லீஸ்ட் நான் சொல்றதையாவது செய் ” என்று என்னைக் கதிகலங்க அடித்தான். நான் எதையாவது சொல்லி அவன் செய்து மாட்டிக்கொண்டால்கூட, ” எனக்கு ஒண்ணும் தெரியாது.  நான் அவனைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு ” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். அதை லோகையன் வாத்தியார்கூட நம்பிவிடுவார். ஆனால் லோகையன் வாத்தியாருக்கு எதிராக  எதையாவது செய்து மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான்.  ” அவன் சொன்னா என்னடா ? ஒனக்கு எங்க போச்சு புத்தி ? நீ செய்யலாமாடா இப்படி ? என்று நிச்சயம்  எனக்கு டீ.சி. கொடுத்து ஸ்கூலைவிட்டு அனுப்பிவிடுவார். எலி சொல்வதைச் செய்யாவிட்டால் மருந்து மாத்திரைகளுக்கான பணத்தைக் கொடுக்கவேண்டும்.  எங்கப்பாவின் ஒரு வருடச் சம்பளத்தைச் சேர்த்தால்கூட அவன் சொல்லும் கணக்கிற்கு ஈடாகுமா என்றும் தெரியவில்லை. என்  அப்பாவிற்கு வந்த தலைவலியால் எனக்கு வந்த தலைவலி இது.  என்ன செய்வது என்று தெரியாமல் நான் முழித்துக்கொண்டிருக்கும்போதே ” என்ன பெரிசா யோசிக்கிற ? நான் சொல்றத கவனமா கேளு ” என்று  எம் என் நம்பியார் மாதிரி கண்களை உருட்டி என் கவனத்தை அவனிடம் திருப்பினான்.

 

சமீபத்தில் மேல கல்கண்டார்கோட்டை ஷண்முகா டாக்கீசில் ஓடிய ‘ லக்ஷ்மி கல்யாணம் ‘ என்ற சினிமாவைப் பார்த்திருந்த எலியின் ப்ளான் இதுதான். லோகையன் சார் தினமும் காஃபி வாங்கி வருவதற்கு என்னையோ அல்லது  எப்போதும் முதல் மார்க் வாங்கும் குணாவையோ தான் அனுப்புவது வழக்கம். அடுத்த நாள் காலையில் சாருக்கு நானே வாலண்டியராகக் காஃபி வாங்கப் போகவேண்டும். ரயில்வே கேண்டீனில் காஃபி வாங்கியபின் வெளியேவந்து எலி என்னிடம் கொடுக்கும் மோஷன் போவதற்கான  லேக்ஸேடிவ் மாத்திரைகளை அதில் போட்டுக் கொண்டுவரவேண்டும். ” ரொம்ப சிம்பிள்தான் . செஞ்சுடு. நாளைக்கு லீவு கீவு போட்டுடலாம்னு மாத்திரம் நினைக்காத, ஆமாம் !  ” என்று ஆணையோடு எச்சரிக்கையையும் விடுத்தான். அவன் இதைச் சொன்ன க்ஷணத்திலிருந்து லேக்ஸேடிவ் இல்லாமலேயே  எனக்கு வயிற்றில் இடி இடிக்க ஆரம்பித்துவிட்டது.

 

ராத்திரியெல்லாம் எனக்குத் தூக்கம் வரவில்லை.  லோகையன் சார் மறு நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிடவேண்டும் என்றும் அல்லது எலிக்கே உடம்பு சரியில்லாமல் போய் பள்ளிக்கு வராமலிருந்து விடவேண்டும் என்றும் இவ்வாறு பலப்பல வேண்டுதல்களை மாரியம்மனிடம் வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் வேண்டுதல்களுக்கு மாரியம்மன் செவி சாய்க்கவில்லை. லோகையன் சார் வேறு அன்று வெள்ளை பேண்ட் போட்டுக்கொண்டிருந்தார்.  ” இன்னிக்குப் போய்  எதுக்கு வெள்ளைக் கலர்ல பேண்ட் இவருக்கு ? ” என்று மனம் வேதனைப்பட்டது. லோகையன் சாரோ அன்று அவருக்கு வரப்போகிற அவஸ்தையை அறியாது  வழக்கத்துக்கு மாறாக சந்தோஷமாகவே இருந்தார். எலியும் தயாராக வந்திருப்பதை சட்டைப் பையைத் தட்டிக் காண்பித்தான்.  முகத்தில் கொஞ்சம்கூடக் கவலையோ பயமோ இல்லாமல் எப்படி எலியால் இருக்க முடிகிறது என்று எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. அவனுக்கென்ன கவலை. வேலையை என்னிடம் அல்லவா கொடுத்திருக்கிறான் பாவி .  லக்ஷ்மி கல்யாணம் படத்தை ஏன் இப்போது பார்த்து ஷண்முகா டாக்கீசில் போட்டான் என்று தியேட்டர் முதலாளி மீது என் கோபம் திரும்பியது எவ்வளவு அபத்தம் என்று உடனேயே புரிந்துவிட்டது. வயிற்றுப் போக்கு மாத்திரை இல்லை என்றால், வேறு ஏதாவது தூக்க மாத்திரை போடும் ஐடியாவிற்கு ஒரு சினிமா வந்திருக்கும்.  . ப்ரேயர் முடிந்து வரும்போதே எலி என்னிடம்  சரக்கைப் பாகெட்டில் திணித்துவிட்டான். நான் லோகையன் சார் காஃபி சாப்பிடும் நேரத்திற்காகக் காத்திருந்தேன்.  ” யார்றா இன்னிக்குக் காஃபி வாங்கியாறப் போறது ? ” என்று அவர் கேட்டு முடிக்கு முன்னரே என்னைப் பக்கத்திலிருந்த எலி எழுப்பிவிட்டு விட்டான். நானும் பாட்டிலை எடுத்துக் கொண்டு என் தலைவிதியை நொந்துகொண்டே புறப்பட்டேன்.

 

நான் காஃபியை வாங்கிக்கொண்டு  எலி கொடுத்த இரண்டு மாத்திரைகளில் ஒன்றை மாத்திரம் காஃபியில் போட்டுவிட்டு இன்னொன்றை தூக்கி எறிந்துவிட்டேன். லோகையன் சாருக்கு என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அதுதான் என்று மனதை சமாதானப் படுத்திக்கொண்டு சூடு ஆறிப்போய்விட்டால் மாத்திரையைப் போட்டது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில்

வழக்கத்தைவிட வேகமாய் ஸ்கூலுக்கு வந்துவிட்டேன்.  ஆனால், நான் போன பின் வயிறு மதர்ப்பாக இருக்கிறதென்று குணாவையும்  லோகையன் சார் காஃபிக்குப் பதிலாக டீ வாங்கச் சொல்லி  ” வேகமாப் போடா ” என்று அனுப்பியிருந்திருக்கிறார். ஆனால் குணா என்னைப் பார்ப்பதற்கு முன்பே நான்  ஸ்கூலுக்கு வந்துவிட்டேன். எனக்குப் பின் குணாவும் வந்துவிட எங்களைக் கவனிக்காது போர்டில் கணக்குப் போட்டுக்கொண்டிருந்த லோகையன் சார் சற்று நேரத்தில் திரும்பிப் பார்த்து,  ”  யார்லே முன்னால வந்தது ? ” என்று கேட்க கடைசி நேரத்திலாவது சாரை விபத்திலிருந்து காப்பாற்ற நான் ” அவந்தான் சார் ” என்று சொல்லும் அதே சமயத்தில் குணாவும் ” அவந்தான் சார் ” என்று சொன்னது கோரசாகப் போய்விட்டது. லோகையன் சாரும் சிரித்துக்கொண்டே ” ரெண்டையும் கலந்து குடிச்சுடலாமா ” என்று கேட்டுவிட்டு, காஃபியை வாங்கிக் கொண்டு டீயை பக்கத்து க்ளாஸ் துரைசாமி சாருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டார். சரி அவர் தலைவிதி அவ்வளவுதான்  என்று நான் போய் என் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன். எலி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாலும் நான் அவன் பக்கம் திரும்பவில்லை.

 

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் லோகையன் சார் அவசரம் அவசரமாக வீட்டிற்குக் கிளம்பி விட்டார்.  துரைசாமி சாரிடம் சைக்கிளை வேறு வாங்கிச் சென்றதில் எலிக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி என்பதை அவன் முகம் காட்டிக்கொடுத்தது. ஆனால் அவன் சந்தோஷம் மத்தியானமே  காணாமல் போயிற்று.  லோகையன் சார்  மதியம் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டார் என்பது மாத்திரமல்ல. காலையை விடவும் இன்னும் அதிக சந்தோஷத்தோடு வேறு இருந்தார்.  இரண்டு நாட்களாகப் பசியில்லாமல் படுத்திக் கொண்டிருந்த வயிறு சரியாகப் போய்விட்டதாகவும், இன்று  முன்னால் வந்தவன் வாங்கி வந்த  காஃபி குடித்ததிற்குப் பின் வயிறு ” க்ளியர் ” ஆகிவிட்டாதாகவும்  லோகையன் சார் துரைசாமி சாரிடம் சைக்கிள் சாவியைக் கொடுக்கும்போது சொல்லிக்கொண்டிருந்ததை நானும் எலியும் கேட்டோம்.  லோகையன் சார் வெள்ளைக் கலர் பேண்ட்டை மாற்றி வேறு பேண்ட் போட்டுக்கொண்டு வந்திருந்ததை நான் கவனித்ததை எலியும்  கவனிக்கத் தவறவில்லை.

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழுபள்ளிப்படை
author

ரமணி

Similar Posts

Comments

  1. Avatar
    ganesan says:

    எலியின் தாத்தா அடுத்த ஃபோட்டோவிற்குள் சூர்ணம் இட்டுக்கொண்டு பதவிசான மனைவி புடவைக்குள் தன்னை மூடிக்கொண்டு முகம் மட்டும் மூடாமல் மலர்ந்து அருகிலிருக்க என்ன காரணத்தாலோ முறைத்துக்கொண்டிருப்பார் . பக்கத்தில் இருக்கும் ஃபோட்டோவில் எலியின் அப்பா டையெல்லாம் கட்டிக்கொண்டு இடதுகையை ஃப்ராக்ச்சர் ஆனதுபோல் மடித்துக்கொண்டிருக்க அந்தக் கையில் ஒரு கோட்டும் அதன் மேல் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் தொங்கிக்கொண்டிருக்கும்.
    ramani reminds me the style of the great writer Sujatha…may be ramani who hails from srirangam is the great fan of srirangam sujatha.Sujatha wrote srirangam devathaigal y shouldn’t ramani write ponmalai angels…good!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *