விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “

This entry is part 16 of 28 in the series 29 ஏப்ரல் 2012

மயிலாப்பூரில், இருந்து பல ஆண்டு காலமாக இயங்கி வரும், பாரம்பரியம் மிக்க சபை ‘கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ‘. ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு மேல், கோடை நாடக விழா நடத்தி, நாடகக் கலையை நசிந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். பாராட்டுக்கள்.

27.04.2012 அன்று மாலை மேடையேறிய நாடகம் தான் தலைப்பில் வரும் நாடகம். நகைச்சுவை நாடகம் என்பதைத், தலைப்பிலேயே உணர்த்தும் இக்குழுவினர்க்கு ஒரு ஷொட்டு. மெட்ரோ கட்டுமானமும் , அதனால்  ஒரு வழிப்பாதையுமாகவும், ஆகிவிட்ட சென்னைச் சாலைகளுக்கு, பொருத்தமான தலைப்பு! போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளைத் தவிர்த்து, சந்து, பொந்துகளில் புகுந்து, சாமர்த்தியமாகப், போகும் இடத்திற்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரும் குறுக்கு வழிகள்! இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கை தேர்ந்தவர்கள். ஆனால் இதையே, எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்தால், டிராபிக் ஜாம்தான். கதையும் அதை ஒத்ததுதான்.. ஆனால் சொன்ன விதம்?

மௌலியின் நாடக மேடைப் பிரவேசம் “ பிளைட் நெ. 172 “ நகைச்சுவைத் துணுக்குகளுக்கு ஒரு புதிய பரிமாணம் கொடுத்த நாடகம் அது. அதைத் தொடர்ந்து தான் பலரும் புறப்பட்டார்கள். வெங்கட்டும், கிரேசி மோகனும் ஜெயித்தார்கள். சிலர் we also ran என்பது போல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மௌலிக்குப் பின்னால் UAA என்கிற நாடகக் குழு இருந்தது. ஒய் ஜி பி, ஏ ஆர் எஸ் என்கிற மேடை ஜாம்பவான்கள் இருந்தனர். ஆனாலும் மௌலியின் தனித்தன்மை, அஸைடில் அவர் சொல்லுகிற காமெண்டுகள். ( ‘ ஒங்க பேச்சுல வீரம் மட்டுமல்ல, நிறைய ஈரமும் இருந்தது ‘ ‘ பேனாவுல இங்க் கொட்டுது.. அது பவுண்டன் பேனா.. அப்படித்தான் கொட்டும்! ‘ )

விவேக் ராஜகோபாலுக்கு நகைச்சுவை வருகிறது. ஆனால் மேடை நாடக வித்தைகள் தெரியவில்லை. ஆரம்பம் முதலே, நாடகத்தில் வரும் துணுக்குகளுக்கு அரங்கம் நிறைந்த ஆர்ப்பாட்டம், கைத்தட்டல். சாம்பிளுக்குச் சில:

வக்கீல்: ஜாதகப் பொருத்தம் பாக்குற ஜோசியர் மேலேயே match fixing case போட்டவன் நான்.

அரவிந்த்: நான் மக்களை ஏமாத்த மாட்டேன்!

வக்கீல்: பூ நெறைய இருந்ததுன்னா பூக்கள். மக்கு நெறைய இருந்ததுன்னா மக்கள். ஏமாத்தலாம்.. தப்பில்ல. கவலைப்படாதீங்க! இந்த ஒலகமே உங்கள எதிர்த்தாலும், நான் காப்பாத்தறேன்.

ஜூனியர் வக்கீல்: நான் அவர மாதிரி பெரிய ஆள் இல்ல.. அதனால்.. இந்தத் தெருவே எதிர்த்தாலும் உங்களக் காப்பாத்தறேன்.

ஷ¥ட்டிங் ஸ்டார் வேதன், டாக்டர் அரவிந்தின் பேஷண்ட். ஒரு சாலை விபத்தில் வேதன், அரவிந்தின் நல்ல நண்பர் சுந்தரைக், கார் ஏற்றிக் கொன்று விட்டு, தப்பிவிடுகிறான். விவரம் அறியும் அரவிந்த் அவன் மேல் வழக்குப் போடுகிறார். வேதன் தன் பிரபலத்தால், வழக்கில் ஜெயித்து விடுகிறான். அவனைப் பழி வாங்க, வக்கீல் சரவணன் கொடுக்கும் யோசனைதான், அரவிந்த் இறந்து போய், அதன் பழி வேதன் மேல் விழ வைப்பது. அரவிந்த நெருப்பில் இறந்ததாக நடித்து, சத்யமூர்த்தியாக சரவணனிடமே ஜூனியராகச் சேர்ந்து, வேதனுக்குத் தண்டனை வாங்கித் தருவது கதை.

இம்மாதிரிக் கதைகளில், காட்சிகளை நேர்க்கோட்டில் பயணப்படச் செய்வது, பார்வையாளனுக்கு அதிகக் குழப்பத்தைத் தராது. ஆனால் பின்நோக்குக் காட்சிகளில் கதையைச் சொல்ல விழையும் ராஜகோபால், அன்னியப்பட்டுப் போகிறார் ரசிகனிட மிருந்து. நடிப்பவர்களெல்லாம் இளைஞர்கள். ஒரு கல்லூரி நாடகத்துக்குரிய முனைப் போடு நடிக்கிறார்கள். மேடை நாடகம், அதையும் தாண்டி உன்னதமானது என்பதை அவர்கள் உணர, தேர்ந்த நாடகப் பயிற்சியாளர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்வது பலன் தரும். ராஜகோபால், சரவணனாகத் தெளிவாகப் பேசுகிறார். அதை ரசிகர் களிடம் கொண்டு சென்றதில், நாரத கான சபை ஆடியோ நுட்பத்திற்குப், பங்கு உண்டு. நாரத கான சபை ஒலி அமைப்பாளர் முரளி, எந்த நாடகத்தையும் பார்ப் பதில்லை. அவர் உலகம், ஒலி சீரமைப்பு அறைக்குள்ளேதான். எந்த நாடகத்திற்கும் அவர் பங்கு முக்கியமானது.

நாடக உத்திகளில் ஸ்பாட் லைட்டிங் என்று ஒரு உத்தி உண்டு. பேசுபவர் ஒருவர், அல்லது இருவர், குறைந்த வசனங்கள், கதையை வேறொரு களத்திற்குக் கடத்தும் நோக்கம் ஆகியவைக்கு இந்த உத்தி பயன்படுத்தப்படும். மேலும் நடிகைகள் உடை மாற்ற நேரமும், பின்னால் வரும் காட்சிக்குத் தேவையான ஜோடனைகளுக்கு, செலவிடப்படும் நேரமும், பார்வையாளானை வெறுமையாக வைத்துவிடாமல், பாது காக்கும் உத்திகளில், இது ஒன்று. ஏறக்குறைய பழைய நாடக கட்டியங்காரன் ரகம். ஆனால் அதை ராஜகோபால் சுத்தமாகப் பயன்படுத்தவேயில்லை. இரண்டு வசனங் களுக்குக்கூட விளக்கை அணைத்து, ஜோடனையை மாற்றி, நேரத்தை வீணாக்கு கிறார். திருத்திக் கொள்ள வேண்டிய தவறு இது.

இவர்களது முதல் நாடகம் “ கண்டபடி கண்டுபிடி “ போன வருடம் போட்டது. நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வருடம் கொஞ்சம் அனுபவம் தெரிகிறது. விரைவு ரயில் மாதிரி வசனங்களை ஒப்பிக்காமல், மக்கள் சிரிப்புக்கும், கைத்தட்டலுக்கும் நிதானிக் கிறார்கள். ஆனால் இன்னமும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

#

கொசுறு

நாரத கான சபையின் வளாகம் இன்னமும் அரசின் open space reservation (OSR) ல் வரவில்லை போலிருக்கிறது. உட்லாண்ட்ஸ் ஓட்டலின் கிளை, இன்னமும் பலரின் சுவை நரம்புகளுக்கு நிழல் தருகிறது. நாடகம் இல்லாத நாட்களில் அங்கு நடிகர் ஸ்ரீகாந்தைப் பார்க்கலாம். காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகர், பாஸ்கி, கிரீஷ் என பல பிரபல முகங்கள் அங்கு அடிக்கடி காணப்படும். நாடக நாட்களில் அன்றைய நாடகம் பற்றிய விமர்சனங்களூம் அங்கேயே பரிமாறப்படும், இட்லி, வடை சாம்பார், ரவா மசாலா தோசையுடன்.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10தங்கம் 4 – நகை கண்காட்சி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *