பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-3)

This entry is part 6 of 33 in the series 27 மே 2012


இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

தலைவர்களைப் பாடுதல்

பாரதி தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேசியத் தலைவர்களைப் பாராட்டிக் கவிதைகள் யாத்தார். காந்தியைப் பற்றிப் பாடும்போது,

‘‘வாழ்க நீ எம்மான் இந்த வையத்துள்

நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி

விடுதலைத் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர்

பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி!

மகாத்மா நீ வாழ்க! வாழ்க!’’ (ப.72)

என்று வாழ்த்திப் பாடுகின்றார். இதனைப் போன்றே திலகர், தாதாபாய் நவ்ரோஜி, பாலகங்காதர திலகர், லாலாலஜபதிராய் ஆகியோரின் தியாக வாழ்க்கையை எடுத்துரைத்து வாழ்த்துகின்றார். செக்கிழுத்த செம்மலாம் வ.உ.சி. சிறை புகுந்தபோது,

‘‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்

மன்னனென மீண்டான் என்றே

கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ

வருந்தலைஎன் கேண்மைக் கோவே!

தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவோம்

நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி

வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே

வாழ்த்துதி நீ வாழ்தி! வாழ்தி!’’ (ப..84)

என்று வீராவேசத்துடன் பாரதி வாழ்த்துகிறார். இவை அனைத்தும் தேசத்தலைவர்கள் மீது பாரதி கொண்டிருந்த பற்றினைத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளன.

பாரதத்தின் மாமணிகளாக விளங்கிய சான்றோர்களையும் பாரதி போற்றிப் பாடியுள்ளது சிறப்பிற்குரியது. அபேதாநந்தா, இரவிவர்மா, குவளைக் கண்ணன், குரு குள்ளச்சாமி, குரு கோவிந்தசாமி, குருகோவிந்தர், குரு யாழ்ப்பாணத்துச் சாமி, சுப்புராம தீட்சிதர், தாயுமானவர், சாமிநாதையர், நிவேதிதா, வெங்கடேச ரெட்டப்பப்பூபதி உள்ளிட்டோர் பற்றி பாரதி போற்றிப் பாடியுள்ளார்.

பட்டுக்கோட்டையாரும் பாரதிவழியிலேயே தேசத் தலைவர்களை,

‘‘……………….செக்கிழுத்த சிதம்பரமே!

உயிரிழந்தும் செங்குருதி மண்ணிற் பாய்ந்தும்

உரிமைக்கொடி காத்திட்டக் குமரக் குன்றே!

வறுமையினைச் சுமந்து கொண்டு விடுதலைத் தாய்

வருகைக்கு முழக்கமிட்ட பாரதியே!

கொடுமையெலாம் விடுதலையின் குறிதான் என்று

குறுநகைத்த தில்லையாடி வள்ளியம்மா!

ஒருமையிலே சக்தி இல்லை பண்மை வேண்ம்

ஒன்று திரள்வோம் என்ற சுபாஷ் வீரா!

உரிமை பெற்றும் கடமையெல்லாம் முடிப்பதற்குள்

மதவெறியால் பலியான பெரியோய் காந்தி!

தான் மறைந்தும் புகழ் மறையாத் தொண்டு செய்த

தலைவர்களே!’’ (பக்.,221-222)

என்று போற்றிப் பாடுகின்றார். தமது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைத் தலைவருமான ஜீவா அவர்களைப் பற்றி,

‘‘புவியினிலே சுவர்க்கத்தைச் சமைப்பதற்குப்

போராடும் வர்க்கத்தின் தலைவன் ஜீவா

தன்னலமே சிறிதும் இலா இயக்கம் தந்த

தமிழ்க் கலையின் முழுவடிவம் கலைஞன் ஜீவா!’’ (ப.,227)

என்று பாடுகின்றார்.

பாரதியைப் போற்றிப்பாடும் பட்டுக்கோட்டையார் பாரதிதாசனைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார். பாவேந்தர் பாரதியிடம் கொண்ட பக்தியை பட்டுக்கோட்டையார் பாவேந்தரிடம் கொண்டிருந்தார். இதனை,

‘‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மு. அண்ணாமலையும் கொஞ்சநாள் எங்கிட்ட புதுச்சேரியில் இருந்தாங்க. இரண்டு பேரும் என்பாட்டைப் பேர்த்து எழுதுவானுங்க. பட்டுக்கோட்டை இருக்கானே ரொம்ப அமைதி. என் எதிரிலேயே பயபக்தியோட வாய்கூடத் திறக்காம உட்கார்ந்து இருப்பான். என்கிட்ட அளவு கடந்த மரியாதை. எதை எழுதினாலும், ‘‘பாரதிதாசன் வாழ்க’’ன்னு மேலே போட்டுட்டுத்தான் எழுதுவான். அவன் இவ்வளவு வேகமா வளருவான்னு நான் அப்ப நெனைக்கல. அந்த அறிகுறி எதுவும் அப்பத் தெரியல’’ (கே.ஜீவபாரதி, காலமறிந்து கூவிய சேவல், பக்.,106 – 107)

என்ற பாவேந்தரின் கூற்றே தெளிவுறுத்துகின்றது.

பாரதியின் மீது பற்றுக் கொண்டு,

‘‘பாரதிக்கு நிகர் பாரதியே’’

என்று மக்கள் கவிஞர் பாடினார். ஆனால் தான் குருவாக ஏற்றுக் கொண்ட பாரதிதாசன் மீது ஒரு பாடல் கூடப் பாடவில்லை என்பது விளங்கிக் கொள்ள இயலாததாக அமைந்துள்ளது. இருப்பினும் பாவேந்தர் தனது குரு என்ற நிலையில் மக்கள் கவிஞர் ஒவ்வொரு முறை எழுதும்போதும் பாரதிதாசன் வாழ்க என்று எழுதிய காரணத்தாலேயே பாவேந்தரைப் பற்றி பாடல் எழுதவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற நாடு போற்றிய பண்பாளர்கள்

தாம் வாழ்ந்த நாட்டைப் பற்றி மட்டும் பாடாது உலகில் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்ற நாடுகளையும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தோல்வியடைந்த நாடுகளையும் பாரதி பாடுகின்றார். அங்ஙனம் பாடி நமது தேசத்திலும் மக்கள் ஒன்றுதிரண்டு போராடிப் புரட்சி செய்து வெள்ளையரை ஓட்டி சுதந்திரம் பெற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அவரின் உள்ளக்கிடக்கையே,

‘‘மகாளி பராசக்தி உருசிய நாட்

டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே

ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி!

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’’ ப.,96)

என்று ரஷ்யப் புரட்சி குறித்த பாடலாக வெளிப்பட்டது.

பெல்ஜியம் வீழ்ந்தபோது,

‘‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!

அன்னியன் வலியனாகி

மறத்தினால் வந்து செய்த

வன்மையைப் பொறுத்தல் செய்யாய்!’’(ப.,88)

என்று வாழ்த்துகின்றார். எங்கெங்கு கொடுங்கோலாட்சிக்கு எதிராக மக்கள் போராடினார்களோ அந்நாடுகளைப் பாடி, மக்களுக்கு அந்த நாடுகளெல்லாம் போராடும்போது நாம் மட்டும் அடிமைகளாக வாழலாமா? இது தகுமா? என்ற வினாக்களை எழச் செய்து மக்களைப் போராட்டத்திற்கு ஒன்று திரட்டுகின்றார்.

பாரதி ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடியதைப் போன்று மக்கள் கவிஞரும் பாடுகின்றார். இருப்பினும் இருவரது நோக்கமும் இதில் வேறுபட்டுக் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. கொடுங்கோலன் ஆட்சியிலிருந்து விடுபட்ட ரஷ்யா முன்னேற்றமடைந்த நாடாகக் காட்சியளிக்கின்றது. அங்கு பொதுவுடைமை நிலவுகின்றது. மக்கள் மகிழ்வாக வாழ்கின்றார்கள். அதுபோன்று சுதந்திரம் பெற்ற நமது நாடும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்று ஆவலுற்ற மக்கள் கவிஞர்,

‘‘ஒடித்தார்கள் அடிமையெனும் விலங்கைச் சென்று

உடைத்தார்கள் அதிகாரக் கோட்டை தன்னை!

…………………… ………………………………. ………………………………….. ………………………………….

அடக்கு முறைக்கு அஞ்சாத லெனின் ஸ்டாலின்

ஆரம்பித்த புரட்சியிலே அமைதி கண்டார்

நடத்தென்றார் சோவியத்தை மக்கள் அன்னார்

நட்டு வைத்த செம்பயிரும் நட்பும் வாழ்க!’’ (ப.,174)

‘‘புதிய ஒளி வீசுதுபார் இமயம் தாண்டிப்

புன்சிரிப்புக் காட்டுதுபார் இன்பம் அங்கே!

கதைபுனைந்து கூறவில்லை கண்ணில் தோன்றும்

காட்சியினை ரஷ்யாவின் மக்களாட்சி’’ (ப.,218)

என்று சோவியத் நாட்டில் பொதுவுடைமை மலர்ந்து பயன் விளைவிப்பது போன்று நமது நாட்டிலும் மலர்ந்து மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்று பாடுகின்றார். மக்கள் அனைத்தையும் பெற்ற மகிழ்வில் நாடு முன்னேற்றம் காண வேண்டும் என்ற மக்கள் கவிஞரின் உன்னத எண்ணம் பாடலில் மிளிர்வது நோக்கத்தக்கது.

பாரதியும் பட்டுக்கோட்டையும் உலகில் முன்னேற்றம் கண்ட நாடுகளைப் போன்று பாரதமும் முன்னேற்றம் காண விழைந்தனர். அதன் வெளிப்பாடாகவே பிறநாடுகளைப் போற்றி அவற்றை உதாரணம் காட்டி அது போன்று நாமும் வரவேண்டும் என்ற முன்னேற்ற எண்ணத்தை மக்களின் மனதில் விதைக்க கவிஞர்கள் முயல்கின்றனர். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியவர்கள்

மக்கள் அனைவரும் பேதமின்றிச் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்று இரு கவிஞர்களும் விரும்பினர். பாரதியார் மக்கள் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து ஒருங்கிணைந்து போராடினால்தான் சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என்று கருதியதால்,

‘‘பாருக்குள்ளே சமத்தன்மை  – தொடர்

பற்றுஞ் சகோதரத் தன்மை

யாருக்கும் தீமை செய்யாது – புவி

யெங்கும் விடுதலை செய்யும்’’ (ப.,212)

என்று சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் மக்கள் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

விடுதலை பெற்ற நாட்டில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வாழ்ந்தால் நாடு சீர்கெட்டு சுதந்திரத்தை இழந்துவிடும். அதனால் மக்கள் அனைவரும் பேதம் பாராது சரிநிகர் சமமாக இருந்து வாழ வேண்டும் என்று விரும்பிய மக்கள் கவிஞர்,

‘‘மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்

மதிப்பது நம் கடமை!

வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்

வாழ்வது அறிவுடைமை!

உழைப்பை மதித்துப் பலனைக் கொடுத்து

உலகினில் போரைத் தடுத்திடுவோம்

அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து

அருள் விளக்கேற்றிடுவோம்!’’ (ப.82)

என்று பாடுகின்றார்.

‘‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் _ நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் _ ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்’’

என, பாரதியார், இந்திய மக்கள் அனைவரையும், எல்லாரும் இந்நாட்டு மன்னர் என மும்முறை அழுத்தந் திருத்தமாக உரைக்கிறார்.

பட்டுக்கோட்டையார் பாரதியின் இவ்வடிகளை ஒரு பாடலுக்குத் தொடக்கமாகவே அமைத்துக் கொண்டு,

‘‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே – நாம்

எல்லோரும் இந்நாட்டு மன்னரே

நல்லாரும் பொல்லாரும் நல்வழிச் செல்லாரும்

உள்ளாரும் காசுபணம் இல்லாமல் இருந்தோரும்”(ப.,83)

என்று எவரேயாயினும் எல்லோரும் இந்நாட்டு மன்னரே எனக் குரல் கொடுக்கிறார்.

திரையுலகில் யாரும் வலியுறுத்தாத சமதர்ம சகோதரத்துவத்தை வலியுறுத்திப் பாடிய கவிஞர் பட்டுக்கோட்டையாரே ஆவார். திரைப்படத்தை தமது கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஒரு ஊடகமாகப் பட்டுக்கோட்டையார் பயன்படுத்திக் கொண்டார்.

‘‘போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’’ என்று பாடிய பாவேந்தரின் மாணவரல்லவா மக்கள் கவிஞர். அதனால் தான் போரைத் தவிர்த்து சமாதான சகவாழ்வினை மக்கள் வாழ வேண்டும் என வலியுறுத்துகின்றார். உலகில் சமாதானம் வளர்ந்தால் மட்டுமே யாரும் சுதந்தித்தை இழக்காது அமைதியாக உன்னத வாழ்வினை வாழ முடியும் என்ற காலத்திற்கேற்ற நீதியை,

‘‘தானத்தில் சிறந்தது என்ன?

நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

அதிலும் சிறந்தது என்ன?

பல அகிம்ஸா மூர்த்திகள்

ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்’’ (ப.,25)

என்று மக்கள் மனதில் பதிகின்ற வண்ணம் எடுத்துரைக்கின்றார். இதிலும் பாரதியின் கருத்தோட்டம் படிந்திருப்பதைக் காணலாம். விடுதலைக் கவியும், புரட்சிக் கவியும் எடுத்துரைத்த கருத்துக்களைக் காலத்திற்கேற்ப  தொடர்ந்து விளக்கிச் செல்லும் மக்கள் கவியின் பாங்கு போற்றுதற்கு உரியதாக அமைந்துள்ளது.

ஒற்றுமையைப் பாடிய கவிஞர்கள்

பாரதி வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேய அடக்குமுறை அதிகரித்திருந்தது. வெள்ளையர்கள் மக்களிடையே பல்வேறு பேத முறைகளைப் புகுத்தி அவர்களை ஒன்று சேரவிடாது பிளவுபடுத்தியிருந்தனர். அதனால் மக்கள் தங்களைப் பற்றியும் தங்களது நாட்டைப் பற்றியும் அறியாது தங்களுக்குள் வேறுபட்டு ஒற்றுமையின்றி சண்டையிட்டுக் கொண்டு வாழ்ந்தனர். அவர்களை ஒன்றுபடுத்தினால் ஒழிய வெள்ளையரை வெளியேற்ற முடியாது என்று கருதிய பாரதி,

‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வே  – தம்மில்

ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே’’ (ப..17-18)

‘‘ஒற்றுமையால் மேன்மையுண்டாம்

ஒன்றையொன்று துன்பிழைத்தல்

குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே’’(ப.,224)

‘‘ஒற்றுமை வலிமையாம்’’(ப.,205)

என்று ஒற்றுமையை மக்களிடையே வலியுறுத்திப் பாடினார். பாரதியின் இந்தச்சில அடிகளிலே உள்ளம் பறிகொடுத்த பட்டுக்கோட்டை, அவ்வடிகளை

‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு!

உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்

ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்றுபட்டால்)’’(ப.,115)

‘‘ஒற்றுமையில் ஓங்கிநின்ற சக்தியாலே – மக்கள்

உள்ளமெல்லாம் பொங்குதடா வெள்ளம்போலே’’ (ப.,90)

என்று அவ்வாறே தன் பாடல்களில் எடுத்தாண்டு காலத்திற்கேற்ற அறத்தினை மக்கள் மனதில் விதைக்கின்றார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் மக்கள் மனங்களில் சாதி, இனம், மொழி, அரசியல் உள்ளிட்ட பல்வேறுவிதமான வேற்றுமை உணர்வுகள் மேலோங்கி இருந்து வந்ததையும் அதனால் நாடு பிளவுபட்டுப் போகக்கூடும் என்பதையும் கண்டுணர்ந்த மக்கள் கவிஞர் திரையிசைப் பாடல்களின் பல இடங்களில்,

‘‘பச்சைக் கொடிகள் வேலியிலே

பாகுபாடின்றித் தழைக்குது – அதைப்

பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள்

பக்கம் ஒன்றாய்ப் பறக்குது’’

என வாய்ப்பு நேரும் போதெல்லாம் மக்கள் கவிஞர் ஒற்றுமையை வலியுறுத்திப் பாடல்கள் பாடினார். இயற்கையைச் சுட்டிக்காட்டி ஒற்றுமையை வலியுறுத்தும் மக்கள் கவிஞரின் திறம் வியப்பிற்குரியதாக உள்ளது.

மேலும் திரையிசையில் ஒற்றுமையை இவரளவுக்கு வலியுறுத்திப் பாடிய கவிஞர் யாருமிலர் என்று கூறலாம். பாரதி நாடு விடுதலை பெறுவதற்கு மக்கள் ஒற்றுமை அவசியம் என்று உணர்ந்து பாடினான். பட்டுக்கோட்டையோ நாடு சிதையாது, முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையாக இருந்து நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோகத்தில் பாடினான். இந்நாட்டைக் கெடுக்கும் தீய சக்திகள் மறைய வேண்டும் உன்னத எண்ணம் மக்கள் கவிஞரின் பாடல் வரிகளில் மிளிர்வதைக் காணலாம். இருவரது நோக்கமும் நாட்டின் முன்னேற்றத்தை அடியொற்றியிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

(தொடரும்…)

 

 

 

Series Navigationமொலோனி மிக்ஸர்: சென்னைவாசிகளின் விசித்திர குடிநீர்!முள்வெளி அத்தியாயம் -10
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *