மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27

This entry is part 25 of 33 in the series 27 மே 2012

30. நள்ளிரவைக் கடந்து மூன்று சாமங்கள் கழிந்திருக்கலாம். செண்பகம் மொட்டைமாடியில் உறங்காமல் குட்டிபோட்ட பூனைபோல உலாத்தினாள். குளிர்ந்தகாற்றுடன் கரிய இருளும் உடலைத் தொட்டுக் கடந்து சென்றாலும் மனதைபோலவே உடலும் அனலாய்க் கொதித்தது. கவிழ்ந்திருந்த வானத்தில் நட்சத்திரங்கள்கூட மெருகு குலைந்த கற்கள்போல பொலிவிழந்திருந்தன. அண்மையில்தான் எங்கோ மல்லிகைபூத்திருக்கவேண்டும். மல்லிகை பூக்களின் மணத்தோடு, தேனுண்டு அம்மலர்களில் உறங்கிபோன தேனீக்களின் மணமும் கலந்து வீசியது. கண்களை மூடி மல்லிகை மணம் முழுதும் தனக்கே தனக்கென்று நினைத்தவள் போல சுவாசக்குழலில் அவற்றைத் திணித்தாள். இயற்கையின் சுகந்தத்தை இதுபோன்று நுகர்ந்து வெகுநாட்களாயிற்று.

புத்தம் புது பூக்களுக்கே உரிய நறுமணம். மணத்திற்கு நிறமுண்டா? அவள் சுகித்த மணத்திற்கு மல்லிகையின் வெண்மைநிறத்தையே சொந்தமாக்கலாமென நினைத்தாள். பூக்களின் மணத்தில், வராக நதிநீரின் குளிர்ச்சியும் இணைந்து புத்தம்புது மோர்வாடை அடித்தது. சிறுமியாக இருந்தநாட்களில் கோவில் நந்தவனத்தில், அர்ச்சகர் கண்களில் படாமல் கைநிறைய மல்லிகைமொட்டுகளை பறித்து பொத்தியில் வைத்து புழக்கடை பானை நீரில் போட்டுவைப்பாள். கைகளை அலம்பிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபின்னரும் நிமிடத்திற்கொருமுறை உள்ளங்கைகளை முகர்ந்து பார்ப்பாள். இரவுவேளைகளைல் தாழம்பாயில் உறக்கம் வராமல் புரளும்போதும் அப்படி செய்வதுண்டு.

மெல்ல நடந்து மாடி ஓரமிருந்த கைப்பிடிசுவரில் அணைந்து நின்றாள். இரவு உறங்கவா ஓய்வெடுக்கவா? ஓய்வெடுப்பதுதான் நோக்கமெனில் பகற்காலங்களில் எடுக்கலாமே. ஆக இரவு உறங்குவதற்காக. செண்பகத்தைத்தவிர கிருஷ்ணபுரத்தில் எல்லோருக்குமே நிம்மதியாக உறக்கம் வருகிறது. விலங்கினங்கள், புள்ளினங்கள், மலைக்கோட்டை தோப்புகள், தடாகங்கள் ஆகிய அனைத்தும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கின்றன. சிதம்பரத்தில் ஏழைப் புலவனின் மகளாக இருந்தபோது படுத்ததும் இவள் கூட உறங்கியிருக்கிறாள்.

கிருஷ்ணப்ப நாயக்கர் ஒவ்வொரு அமாவாசைக்கும் மறுதினம் நள்ளிரவைக்கடந்து முதல் சாமத்தில் சந்திப்பதென்று கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களுக்குள் வாயொப்பந்தம் கைசாற்றிடப்பட்டுள்ளது. சாட்சிகள் ராகவ ஐயங்காரும், பட்டத்து மகிஷியும், மன்னரின் முதல் மனைவியுமான இலட்சுமிதேவியும். இரவென்றும் பாராமல் வாய்விட்டு சிரிக்கவேண்டும்போலிருந்தது. மன்னருடன் ஒப்பந்தம் எனக்கூறினால் அசல் கமலக்கண்ணியேகூட நகைக்கக்கூடும்.

சிதம்பரம் செண்பகம் அடிமை: அம்மா கால் பிடிக்கட்டுமா? வெந்நீர் விளாவி வைத்திருக்கிறேன் குளிக்க வருகிறீர்களா? சோறு குழைந்துவிட்டது மன்னியுங்கள் அக்கா? காலை மடக்குங்கள் கொஞ்சம் துடைப்பம் போடவேண்டும். என்பது போன்ற அடிமை வசனங்களுக்குப் பழகியிருந்தாள். தவிர இவளினும் பார்க்க குண்டிசிறுத்த சிரிக்கியை அக்காவென்று அழைக்கவேண்டும். அந்தக்குட்டிக்காக பூக்கட்டும்போது மல்லிகையையும் மருக்கொழுந்தும் அளவில் சமமாய் இருக்கிறதா? என்பதில் கவனமாய் இருக்கவேண்டும். அவள் ஆத்தாள் கிழத் தெவடியாளுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். வெற்றிலையில் நரம்பெடுக்க மறந்தால் கோபம். பட்டுபுடவைகளை அடித்து துவைத்தால் கோபம். தயிர் புளித்து போனால் கோபம். எத்தனை நாட்கள் எச்சில் சோற்றுக்கும் புளித்த நீருக்கும் தவம் கிடந்திருப்பாள். அப்பாவை நினைத்ததும், கண்களில் நீர் துளிர்த்தது.

கிருஷ்ணபுரம் செண்பகம் வேறு. நேற்று பணிப்பெண் இடத்திலிருந்து இவள் செய்தவற்றை இன்று எஜமானி இடத்தில் இவளை வைத்து பணிவிடைசெய்ய ஒருவர் இருவரல்ல பத்து பணிப்பெண்கள். இரு கைகளையும் உயர்த்தி இருட்டில் கைவிரல்களை முகத்திற்கு நேரே எண்ணிப்பார்த்துக்கொண்டாள். போதாதெனில் கிருஷ்ணப்ப நாயக்கர் கூடுதலாக இரண்டு பணிப்பெண்களை அனுப்பியும் வைப்பார். அந்த இரண்டுபேருமாக சித்தராங்கியும் அவள் ஆத்தாளும் இருக்கவேண்டுமென நினைத்தாலும் நடக்ககூடியதுதான். கிருஷ்ணப்ப நாயக்கரே கால்பிடிக்க தயாராக இருக்கிறபொழுது இச் சிறுக்கிகள் எம்மாத்திரம். காலம் எத்தனை விசித்திரமானது:

“வீட்டில் ஒரு மாகாணி அரிசி இல்லை. இருந்த ஆபரணங்களையெல்லாம் ஒவ்வொன்றாக விற்று சாப்பிடாயிற்று. அரசரும் எங்களை கவனிப்பதில்லை. செண்பகம் எனக்கு பரத்தை தொழில் அலுத்துவிட்டது. உன்னால் உதவ முடியுமென்றால் சொல் இங்கேயே கூட வேலைக்குச்சேர்ந்து விடுவேன். இப்போதெல்லாம் அதிகாலையில் எழுந்து வாசற்படியில் நீர்தெளித்து, கோலம்போடுவது யாரென்று நினைக்கிறாய்? சாட்சாத் நானேதான். அதை இங்கேயும் செய்வேன்..” சித்ராங்கி கண்களில் நீர்தளும்ப கூறிய வார்த்தைகள் அப்படியே மனதிற் பதித்துவிட்டன.

சித்ராங்கியை நினைக்க பாவமாகவும் இருந்தது. அவளால் இவளுக்கு தீங்கெதுவும் ஏற்படவில்லை. மாறாக அன்பைப்பொழிந்திருக்கிறாள். என்ன செய்வது, சில நேரங்களில் சித்ராங்கி தன்னை எஜமானியாகக் காட்டிக்கொண்டிருக்கிறாள். அப்போதுகூட இவள் மன நோக எதையும் செய்தவளில்லை. அவளுக்குப் பாதகம் செய்ய மனம் ஒப்பவில்லைதான். என்ன செய்வது எல்லாம் ஜெகதீசனால் வந்த வினை? அவன் மேலுள்ள கோபத்தை அந்த பேதைப்பெண்ணிடமும் காட்டி தொலைக்கவேண்டியிருக்கிறது.

சண்டாளன் என்ன பேசினான்? நான் கூடாதாமே? அத்தனை சுலபமாக மறக்க கூடியதா என்ன. அவனுக்கு வேண்டியவர்கள் எவரென்றாலும் எனக்கும் வைரிகள். இந்த நாட்டில் எத்தனை நடுகல்கள், எவ்வளவு தேவதைகள்? எத்தனையெத்தனை கன்னிச்சாமிகள்? அவர்களில் ஒருத்தி என்கிற அந்தஸ்து எனக்கும் வேண்டும், கிராமத்து எல்லையில் நடுகல்லாக நிற்கவேண்டும். தேவதையெனக்கூறி பாவாடை சாற்றவேண்டும், பலியிடல் வேண்டும். குரல்வளையைக் கடித்து உதடுகள் சிவக்க பச்சை இரத்தத்தை மாந்தவேண்டும். பின்புறம் கலகலவென்று யாரோ சிரிப்பதுபோலிருந்தது. ஜெகதீசன் சிரிப்பு. வாழைக்கொல்லையில் அடிக்கடிக்கேட்டுப் பழகிய சிரிப்பு, இப்போது அருவருப்பாக ஒலித்தது, எரிச்சலூட்டியது: கண்கள் சிவக்க சட்டென்று திரும்பினாள். வலக்கையை நீட்டி, “வாடா வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன். ஏன் இவ்வளவு தாமதம்? -என்றாள்.

– கமலக்கண்ணி விடு என்னை? எதற்காக இப்படியொரு மூர்க்கம்? – கிருஷ்ணப்ப நாயக்கர்.

– மன்னியுங்கள், யாரோ எவரோவென்று நினைத்துவிட்டேன்.

– என்ன செய்வது, எனக்கு நேரம் சரியில்லை. எச்சம்ம நாயுடுவின் கைக்குத் தப்பிய உயிர் உன் கையால் போயிருக்கும்.

– மன்னிப்பு கோரினேனே?

– சரி சரி மன்னித்தேன். எனது மூன்றாவது மனைவி அவளுடைய தாய்வீட்டில் ஏதோ பிரச்சினைகள் என்று கூறினாள். அதைக் காதுகொடுத்து கேட்கவேண்டிய நிர்ப்பந்தம். அதால்தான் இவ்வளவு தாமதம். கல்யான மகாலிலேயே நீயும் தங்கினால் இதுபோன்ற பிரச்சினைகள் எழாது.

– ஏதேதோ காரணம் கூறி என்னை சமாளிக்கப் பார்க்கறீர்? எனது குழந்தையையே உங்கள் சுய நலத்திற்கு பலிகொடுத்திருக்கிறேன் எனபதை மறந்து பேசுகிறீர்.

– அமைதியாகப் பேசு. உனக்கு என்ன குறை வைத்திருக்கிறேன். நீ கேட்டதனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்குமாறு நம்முடைய ராகவ ஐயங்காருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். எனது ஆணையை விக்கினங்களின்றி நிறைவேற்றிவருகிறார் என்பதையும் அறிவேன். தவிரவும் நீ நாடறிந்த மகாராணி இல்லை என்பதைத் தவிர குறைகளென்ன?

– எனது மகன் எப்படி இருக்கிறான்?

– இராகவ அயங்கார் சொல்லவில்லயா? அவ்வப்போது கிடைக்கிற தகவல்களை பகிர்ந்துகொள்கிறாராமே?

– இல்லையென்று யார் சொன்னது. இருந்தாலும் அதை மன்னர் வாயால் கேட்க நேர்ந்தால் எனக்குத் திருப்தி.

– அவன் இப்போது மன்னர் வெங்கடபதி தவமிருந்து பெற்றபிள்ளை. விஜயநகர பேரரசின் வருங்கால பட்டத்து இளவல். சிக்கம்ம நாயக்கன் என்று பெயர். எல்லாம் நாம் நினைப்பது போல நடக்கிறது வேறென்ன வேண்டும். அந்த பரந்தாமனுக்கு நன்றி.

– நடப்பதனைத்திற்கும் சிங்கபுரம் ஸ்ரீ ரங்கநாதர் தயவு மட்டும்போதாது. உங்களுக்கு அனுக்கிரகம் பண்ணச்சொல்லி எனக்கு உத்தரவிட்ட கமலக்கண்ணிக்கும், உதவிய பாதரே பிமெண்ட்டாவுக்கும், கொள்ளிடத்து பாளையக்கார இளைஞன் வேங்கடவனுக்கும், உங்கள் ராஜகுரு ராகவ ஐயங்காருக்குங்கூட நீங்கள் நன்றி பாராட்டவேண்டும்.

– ஏது நான் மறந்தாலும் நீ அவர்களை மறக்கமாட்டாய் போலிருக்கிறதே. இன்றிரவு நான் உன்னுடன் தங்க இயலாது. வேளையாய் நித்திரை கொள்ளவேண்டும்.

– ஏன் என்ன விஷயம்?

– ஒலாந்துகாரர்கள் தேவனாம்பட்டணத்தில் ஒரு கோட்டைகட்ட வேணுமென்று நம்மிடம் உத்தரவு கேட்டிருக்கிறார்கள். அதனால் வரும் இலாப நட்டங்களை கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஓலை எழுதவேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் முக்கிய காரியஸ்தர்களை அது சம்பந்தமாக கலந்தாலோசிக்கவேண்டும்.

– எனக்கு நீங்கள் ஒரு சகாயம் செய்ய வேண்டுமே?

– இதென்ன விந்தையாக இருக்கிறது? ராகவ ஐயங்காரிடம் கூறினால் நிறைவேற்றிவைக்கப்போகிறார்.

– அதை நான் விரும்பவில்லை. எனது நேரடி கட்டுபாட்டின்கீழ் ஐந்துவீரர்களும் அவர்களுக்கு ஒரு தலைவனும் வேண்டும். நான் எதைச் சொன்னாலும் காரனம் கேட்காமல் உடனே நிறைவேற்றிவைப்பவர்களாகவும் அவர்கள் இருக்கவேண்டும்.

– அதற்கென்ன அப்படியே செய்வோம்.

(தொடரும்)

Series Navigationஆவணப்படம்: முதுமையில் தனிமைகொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *