துருக்கி பயணம்-5

This entry is part 27 of 43 in the series 17 ஜூன் 2012

 

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

– நாகரத்தினம் கிருஷ்ணா

 

மார்ச்-31

 

உயிர் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாட்களும் முக்கியமானதுதான். கப்படோஸை பிரிகிறபோது மனதைச் சமாதானப்படுத்த வேறு காரணங்கள் உடனடியாகத் தோன்றவில்லை. இனி திரும்பவும் கப்படோஸ் அனுபவம் வாய்க்குமா? இங்கு கழித்த இரண்டு நாட்கள் போல மறுபடியும் அமையுமாவென என்னை நானே கேட்டுக்கொண்டபோதுதான், நமது வாழ்க்கையில் எல்லா நாட்களும் முக்கியமானவையென நினைத்துக்கொண்டேன். இன்னொரு கப்படோஸ் எனக்கு அவசியமற்றதாகப் பட்டது. கப்படோஸ் கப்படோஸ் மட்டுமே அப்படி இருக்கவேண்டும். வேறொரு நாட்டில் வேறொரு பிரதேசம் அதன் சாயலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது, மனம் அலுப்பில் நுரைதள்ளக்கூடும். உலகத்தின் சுவாரஸ்யமே ‘அதைப்போல இது’, ‘மற்றவரைபோல நானென’ சொல்லிக்கொள்ளாத இருப்புகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தங்கிய விடுதி, ஊழியர்கள், மக்கள் இப்படி எல்லோரும் வேறாக இருந்ததாலேயே, நினைவில் இருக்கிறார்கள். குறிப்பாக அமீது என்ற இளைஞரை மறக்க முடியாது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பகலில் நாங்கள் வெளியிற் செல்கிறபோதும், தங்கிய ஓட்டலில் காலை சிற்றுண்டி, இரவு உணவு என சாப்பிட்டபோதும் கப்படோஸ் பிரதேச உணவை ( பயண ஏற்பாட்டாளர்க்கு அதில் இலாபமும் இருக்கக்கூடும்)  சிபாரிசு செய்தார்கள். வேண்டாமென்றால் வேறு உணவிற்கு வாய்ப்பிருந்தது. அந்த வேற்று உணவுகள் இரண்டொரு ஐரோப்பிய மற்று துருக்கிய உணவுகள். அண்ட்டல்யாவில் தங்கியிருந்தபோன்று அதிக பல்வகையான உணவுகளுக்கு வாய்ப்பில்லை.

 

உணவு பிரியர்களுக்காக:  காலை உணவுக்கு துருக்கியில் காவல்ட்டி ( kahvalti) என்று பெயர். ஏற்கனவே காலையில் என்ன உண்டோமென்பதை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் அங்கே எழுதாதவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். பிரத்தியேக உணவுகளின் பெயர்களை  (துருக்கி பெயர்கள்) சிலவற்றை கேட்டுக் குறித்துக்கொண்டாலும், பின்னர் எங்கள் வழிகாட்டியிடம் காட்டிய பொழுது, அவற்றை திருத்தினார்.  பலபெயர்களை தவறாக காதில் வாங்கிக்கொண்டு கையேட்டில் குறித்துவைத்திருந்தேன். Bazlama, lavash ரொட்டிகளில் குறிப்பிடப்படவேண்டியவை.  இறைச்சி தூவிய Lahmacun வாய்க்கு ருசியாக இருந்தது. இதை துருக்கியரின் பிஸ்ஸா எனவும் சொல்லக்கேட்டேன். ஹொமோஸ் (houmous) கப்படோஸில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது: கொத்துகடலையையும் எள்ளையும் சேர்த்து அரைத்த தொகையல் போன்ற ஒன்று, கொஞ்சம் புளிக்கவும் செய்கிறது, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். பதப்படுத்தபட்ட மிளகாய், ஆலிவ் (ஊறுகாய்?) ஆகியவற்றையும் துருக்கியர்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். துருக்கி காபி: பால்கலவாத மிக ஸ்ட்ராங்கான கறுப்புகாபி. முயற்சி செய்தேன், தொடர விருப்பமில்லை.

 

கப்படோஸ் எனும்போது நினைவில் நிற்கக்கூடிய நபர் உணவு விடுதியிலில் பணியாற்றிய அமீது. இருபது வயதைத் தாண்டாத இளைஞர். பயிற்சி மாணவராக இருக்கவேண்டும்.  பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள மொழியில் உரையாடுவது அவருக்கான குறியீடு. அவரவருக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளும்வகையில் மேசைகளில் உணவுவகைகள் காத்திருக்க, விருந்தினர் அம்மேசைகளை நெருங்கினால் போதும், அமீதுவின் கண்களோடு பற்களும் அகலத் திறக்கும், அதை நாங்கள் புன்னகையென எடுத்துக்கொண்டோம்.  பாலினத்திற்கேற்ப முஸே அல்லது மதாம் மூக்கடைப்புடன் ஒலிக்கும். தொடர்ந்து சூப் வேண்டுமா என்பது ஆங்கிலத்தில் கேட்பார். அவர் வாக்கியத்தை முடிக்குமுன்பே கோப்பையில் ஊற்றப்பட்ட சூப்பின் ஆவி உங்கள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டிருக்கலாம். முதல் முறையாக அவரது உபசரிப்பைக் கண்டு குதூகலித்து பதிலுக்கு புன்னகைத்தது உண்மை.  அதுவே இரண்டாவது மூன்றாவதெனத் தொடர்ந்தபோது, இளைஞரைகண்டு ஒளியவேண்டியிருந்தது. மூன்றாம்நாள் மாலை, மறுநாள் ஓட்டலை காலிசெய்யவிருந்ததால், இரவு உணவைமுடித்துக்கொண்டு அறைக்குத் திரும்புவதற்கு முன், வரிசையில் நின்று இளைஞரிடம் எங்கள் குழுவினர் விடைபெற்றுக்கொண்டது அற்புதமான காட்சி.

 

காலையில் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேற்பு கூடத்தில் நேரத்திற்கு இருந்தோம்.  பனி கொட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை நேற்றும் அதற்கு முந்தைய நாளும் பனி இல்லையே என்றளவில் ஆறுதல். ஐரோப்பாவில் குளிர்காலமென்பது டிசம்பர் நான்காவது வாரத்தில் ஆரம்பித்து மார்ச் நான்காவது வாரம் முடிய என்பது பொதுவிதி. இருப்பினும், மார்ச் மாதத்தில் இரண்டாவதுவாரத்திற்குப்பிறகு பணிப்பொழிவு அரிது. கப்படோஸில் பனிப்பொழிவு அன்று கடுமையாகவே இருந்தது. எங்கள்  ஓட்டுனர் பேருந்தை நிதானமாகவே செலுத்தினார்.

 

காலையில் கைவினை நெசவு ஊடாக தரைவிரிப்புகள் செய்யும் நிறுவனமொன்றை பார்வையிட எங்களை அழைத்துச்சென்றார்கள். நவீன சுற்றுலா அகராதியில் எங்கள் சுற்றுலாவிற்கு கலாச்சார சுற்றுலா என்று பெயர். சுற்றுலாவின்போது ஏதாவதொரு நிறுவனத்தின் தயாரிப்பை – நுகர் பொருளை- பார்வையிட அழைத்துசெல்வார்கள். சுற்றுலா பயணிகளில் 90 விழுக்காட்டினர் ஏமாளிகள் என்று பரிபூரணமாக  நம்புகிறார்கள். சுற்றுலா கட்டணம் கவர்ச்சிகரமாக இருக்கும். அக் கட்டண இழப்பை ஈடு செய்ய இதுபோன்ற துனை சுற்றுலா திட்டங்கள் உதவுகின்றன. தரை விரிப்பு நிறுவனத்தில் நுழைந்தவுடன் ராஜ உபச்சாரம். கோட்டு சூட்டுடன் ஒரு விரிவுரையாளர் உங்களை வரவேற்பார். உலக அளவில் தங்கள் பொருட்களுக்குள்ள வரவேற்பை கவர்சிகரமான உரிச்சொற்களுடன் புகழ்பாடுகிறார். பக்கிங்காம் அரண்மணைக்குப்பிறகு உங்கள் வீட்டு வரவேற்பறையைமட்டுமே எங்கள் தரைவிரிப்பு அலங்கரிக்கப்போகிறது என்கிறார், சொல்லி முடித்ததும், நமது தேவைக்குரிய பானங்கள் (ஒயின், ஸ்னாப்ஸ், தேநீர்..) வரவழைக்கப்படுகின்றன. கம்பளம், பட்டு பருத்தி என மூவகை நூல்களையும் கலந்தும் தனித்தனியாகவும் செய்திருந்த விரிப்புகள் விரித்துபோட்டபொழுது, அடடா! ஆகா! உச்சுகள். விலை? பக்கிங்காம் அரண்மனைக்கு நெசவு செய்த நுணுக்கமும், ஞானமும் உங்கள் வீட்டிற்கு வருகிறதென்றால் விலையைபற்றி யோசிக்க என்ன இருக்கிறது. உங்களுக்குத் தலைச்சுற்றல் வராதெனில் கடிதம் எழுதுங்கள் விலையைச் சொல்கிறேன். விரிவுரையாளரின் சொற்பொழிவுக்குப்பிறகு, ஒவ்வொரு சுற்றுலா பயணியையும் தேடி விற்பனையாளர் முதலைகள் படையெடுக்கின்றன. ஸ்பெயினில் எருதுசண்டை பார்த்திருக்கிறீர்களா? ஏறக்குறைய அதே அணுகுமுறை. என்னை அணுகியபோதே அவர்களுக்கு நெற்றியில் என்ன எழுதியிருக்கிறதென ஊகித்திருக்கவேண்டும். அரைமணி நேரத்திற்குக்கூடுதலாக எங்களிடம் ஒரு பெண்மணிவிவாதித்தாள். எனது மனைவி அருகிலில்லையெனில் ஒருவேளை துருக்கிப்பெண்மணியின் பிரெஞ்சுக்காக இல்லாவிட்டாலும் அவள் முகத்திற்காகவாவது அசடு வழிந்திருப்பேன். அவள் சாமர்த்தியமான பேச்சையெல்லாம் சமாளித்து  எங்கள் வீட்டிற்கு பக்கிங்காம் அரண்மனை வேலக்காரி கூட வரமாட்டாள், உங்களுக்கேன் வீண் சிரமமென்றேன். வேண்டிய விலையில் கிடைக்கும் என்றாள், எதுவென்று கேட்க ஆசை.  வயதும் மனைவியும் தடையாக இருந்தார்கள், தவிர்த்தேன். விலையைப் பாதியாகக்குறைத்தாள், நான்கு தவணையில் கட்டலாம் என்றாள். வீட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றாள். ம்.. இல்லை. அநேகமாக அன்றிரவு அவள் சபித்திருக்கக்கூடும்.

 

Mustapa Pasa (Sinosa)அண்டல்யாவிற்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பாக காணநேர்ந்த சிறு நகரம் அதனையும் அங்கிருந்த சந்தையையும் கண்டோம். ஒட்டோமான் காலத்தில் இங்கே கிரேக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்திருக்கிறார்கள். அப்பொழுது பெயர் சினாசோஸ். இன்றைக்கும் ஒன்றிரண்டு கிரேக்க குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை அந்நகரம் சினாசோஸ். துருக்கியர் தேனீரோ அவர்கள் மதுவையோ அருந்தும்போது, கணப்படுப்பை எரியவிட்டு சுற்றிலும் மணிக்கணக்கில் உட்கார்ந்துகொண்டு ஊர்க்கதைகளை அளக்கிறார்கள்.தேனீரை இந்தியாவில் சாய் என்பதுபோல சே என்கிறார்கள். அங்கே பெண்களை தவிர்த்துவிட்டு எங்கள் வழிகாட்டி, ஓட்டுனர், டாக்டர், இன்னும் நான்குபேரென உட்கார்ந்து துருக்கி-பிரெஞ்சு அரசியல் பேசினோம்.

 

Saratli: இரண்டாவதாக நாங்கள் பார்த்தது. கப்படோஸ் அருகில் எண்ணற்ற நிலவறை கிராமங்கள் இருக்கின்றன. அதாவது இருந்தன.  அவற்றில் ஒன்று சராத்தலி. ஏற்கனவே கொரேம், உர்க்கூட் போன்ற இடங்களில் மலைகளை குடைந்து மக்களும், மதகுருமார்களும் வசித்தற்கான காரணங்களைக் கூறினேன். அவை இக் கிராமங்களுக்குப்பொருந்தும், அதாவது எதிரிகள் படையெடுக்கிறபோது நிலவறை உறைவிடங்கள் அவர்களுக்கு மிகப்பாதுகாப்பாக இருந்திருக்கின்றன. இதில் வியப்புக்குரிய விடயம், குடியிருப்பு ஒவ்வொன்றிர்க்கும் ஒரு சுரங்க வழி, அது தவிர குடியிருப்புக்களிடையேயும் தொடர்புகள். உள்ளே அறைகள், கிணறு, சூரிய ஒளி உள்வாங்கிக்கொள்வதற்காக மறைவான திறப்பு, காற்றுவாங்கிகள், உணவு தானியங்களை சேமிக்க ஜாடிகள் என எல்லாம் உபயோகத்திலிருந்திருக்கின்றன. இறந்தவர்களை அக்குடியிருப்புகளிலேயே புதைத்துமிருக்கிறார்கள். சில நிலவறை கிராமங்கள் பல அடுக்குகளைக்கொண்டவை. துருக்கி அரசாங்கத்தின் தொல் பொருள் இலாகா இவ்விடங்களை மிகப்பொறுப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.

 

பேருந்தில் தொடர்ந்து பயணம். மீண்டும் கொன்யா, தொரஸ் மலைத்தொடர் எனக்கடந்து வழியில் கிராமங்களில் நிறுத்தி அவ்வப்போது கிடைக்கும் பழங்களை: ஆரஞ்சு, ஆப்ரிகாட், திராட்சை – வாங்கிக்கொண்டு அண்டல்யா ஓட்டலை அடைந்தபோது மாலை மணி ஐந்து. (பொதுவாக 30யூரோவிலிருந்து 50யூரோவரை இரண்டுபேருக்கான அறைகிடைக்கிறது. ஐரோப்பாவினும்பார்க்க மலிவு. இந்தியாவில் கூட நட்சத்திர ஓட்டல்களில் இன்று 5000 ரூபாய்க்குக்குறைந்து அறைகளில்லை). ஓட்டலில்  எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் பெட்டிகளைபோட்டுவிட்டு, ஒருமணி நேரம் அக்கடாவென்று ஓய்வு. மாலை 6.30 க்கு சிறிது வெளியிற் சுற்றிவிட்டுவரலாம் எனக் கிளம்பியபொழுது, டாக்டர் தம்பதிகள் எதிர்பட்டார்கள். பக்கத்தில்தான் கடல் அங்கிருந்து தான் வருகிறோம் என்றார்கள். நானும் எனது மனைவியும் கடலை பார்த்துவருவதென்று கிளம்பினோம் ஓட்டலின் பின்புறம் இருபது முப்பது மீட்டரில் ஆரவாரமின்றி கடல் உறங்குவதுபோல கிடந்தது. ஒரு மணிநேரத்துக்குமேல் இருந்திருப்போமென நினைக்கிறேன். ஓட்டலுக்குத் திரும்பும்போது இரவு எட்டு மணி.

 

(தொடரும்)

 

Series Navigationநினைவுகளின் சுவ ட்டில் (89)ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 24)
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *