’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’

This entry is part 5 of 41 in the series 8 ஜூலை 2012

”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். ஆஹா அப்படியா?.இப்பவே பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி இவன்க வாயில் விழுந்திட்டதுன்னு ஒவ்வொருத்தனுக்கும் நெனைப்பு. அப்ப சுஷ்மா ருசி கண்ட பூனையா?.வெரிகுட்…..வெரிகுட்…சுலுவாய் அமுக்கிடலாம் அந்த நொடி முதலே அவளை வீழ்த்துவதற்கான வியூகங்கள் ஒவ்வொருத்தனுக்குள்ளும் ஓட ஆரம்பித்தன.
அது கனிமவள சர்வே டிபார்ட்மெண்ட்டின் துணை இயக்குநர் அலுவலகம்,ஹெட் ஆபீஸ் மும்பையில் இருக்கிறது. இங்கே எம்ப்ளாயிஸ் மொத்தம் பதினைந்து பேர்கள். அதில் மொத்தமும் சேவல்கள் என்பதுதான் அதிலுள்ள  சோகம். உள்ளதில் ஒன்றிரண்டைத் தவிர, மற்றதெல்லாம்  கல்யாணமாகாத விடலைகள். ஐயா!  பெண்ணினம் கேட்கிற-33- சதவீதத்தை  எங்க ஆபீஸுக்கு குடுங்கன்னு இங்க யாரும் சட்டம் பேசல சார்.. வாசனைக்குக் கூடவா ஒரு பொண்ணை போஸ்டிங் போடக்கூடாது?. பையன்கள் வெறுத்துப் போய் கிடக்கிறார்கள். எப்பவும் முகங்களில் ஒரு வார தாடி, அலட்சியமான டிரஸ் சென்ஸ், இதுதான் ஆபீஸ். இந்த வறண்ட பாலையில் குளிர்ச்சி வேண்டுமென்றால் ஆபீஸ் காலண்டரில் உள்ள பெண்களைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கெல்லாம் சூப்பர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு.. பாத்ரூம் சுவரில் பிபாஷா பாசுவும், மல்லிகா ஷெராவத்தும் 75% நிர்வாணத்தில் செக்ஸியான ப்ளோஅப்களில் பையன்களை கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் குமார் ஏற்பாடு.. இப்போது சாபவிமோசனத்துக்கான நேரம் வந்துவிட்டது. சுஷ்மா என்றோரு பெண்,சாரி…சாரி… ஒரு மலர் குவியல், மும்பையிலிருந்து மாறுதலில் இங்கே இறக்குமதியாகப் போகிறது.. அதுதான் இன்றைய தலைப்புச் செய்தி. போஸ்ட் என்னவோ ஓ.ஏ. தான்,எடுபிடி, இருக்கட்டுமே,. அதுதான் வசதி, சுலுவாய் மிரட்டியே மடக்கிடலாம்.
“ஹெட்கிளார்க் சார்! சுஷ்மாவா?,சூசையம்மாவா?.”—இது சுதாகர்.
“ஏம்பா?”
“இல்லே கிறிஸ்டியனா, முஸ்லீமான்னு? .”
“என்ன மதம் மாறி ட்ரை பண்ணப்போறீயா?.”—–அங்கே கொல்லென்று சிரிப்பு கிளம்பியது.
“ ஏய் சுதாகர்! எதுக்கும் பைபிள்,குர்ரான் ரெண்டையும் உரு அடிச்சி வெச்சிக்கோ.”
“ஆமாம்டா. சுஷ்மா பைபிளில் ஆறாம் அதிகாரத்தில ஷ்யூரா ஒரு கேள்வி கேப்பாள்.”
“கேட்டுக்கோப்பா.ரம்லான் நோன்பு அனுஷ்டானங்களையும் தரோவா பார்த்து வெச்சிக்கோ.”
கேட்டவனுக்கு ஏண்டா கேட்டோம்னு ஆகிவிட்டது.. பிலுபிலுன்னு வந்திட்றானுங்க.. ஹெட்கிளார்க் ஆரம்பித்தார்.
“தோ பாருங்கடா தம்பிங்களா! சர்ப்ளஸ்னுதான் அந்த பொண்ணைத் தூக்கி இங்க போட்டிருக்காங்க. அதிகபட்சம் ஆறு மாசம். அப்புறம் திருப்பிக் கூப்பிட்ருவாங்க. நீ பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறதுக்குள்ளே அவ மும்பைக்கு பறந்துட்டிருப்பாள், விட்ரு. அப்புறம் தாடி வளர்ப்பே. புரியுதா?..”
“இல்லை சார்.அந்தக்  கட்டம் தாண்டிப் போயாச்சி. ஆர்டர் வந்து இந்த பத்து நாளில் சுதாகர்  சுஷ்மா என்ற அந்த பேரை வெச்சே குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டான் சார்.”— இது குமாரின் நக்கல் பேச்சு.. சுதாகர் எரிச்சல் பட்டான்.
“டேய்! யோக்யா! மூட்றா தெரியும். முன்ன திவ்யா ஜாய்ன் பண்ணப்போ நீ என்ன பண்ண?. விஷயம் தெரியாம ரோஸ் பவுடரை அப்பிக்கிட்டு வந்து போஸ் குடுத்தியே ஞாபகமில்லே?. ரோஸ் பவுடர் அப்பிக்கிட்டா காக்கா கலர் மாறும்னு எப்படித்தான் நம்பினாயோ?.அப்புறம் என்னாச்சி?. தளதளன்னு இருப்பான்னு நெனச்சே, அந்தம்மா பொலபொலன்னு பழுத்த பழமா வந்தாங்க.வந்த திவ்யா மேடம்  மூணு மாசத்தில ரிடையர்மெண்ட்ல போச்சுது. அப்பத்தான் பெயரைப் பார்த்து ஏமாறக்கூடாதுன்னு ஒரு பாடம் கத்துக்கிட்டே.”.
சிரிப்பு அங்கே அலைஅலையாய் பரவியது. அந்த ஆபீஸ் அப்படித்தான். ஒருத்தரையொருத்தர் வாரிக் கொள்வதும், வழியறதுமாய் இருப்பார்கள். இளைஞர்கள் பட்டாளம்.விதிவிலக்காய் இரண்டு கிழங்கள் பி.ஏ.வும்,ஹெட்கிளார்க்கும் ப்ளஸ் நடுத்தர வயசில் கடுவன் பூனையாக எங்கள் துணை இயக்குநர்..
காலை பத்தரை மணி இருக்கும் ஆஹா…ஆஹா….சுஷ்மா……சுஷ்மா வந்தே வந்து விட்டாள். அவளைப் பார்த்ததுதான் தாமதம் ஆபீஸே ஹோ வென்று உறைந்து நின்றது.அ.ப்.ப்..பா! ஹால் முழுக்க ஜிவ்வென்று குளிர் கவ்வியது. கோதுமை ரொட்டி சிவப்பாய்தானிருக்கும் என்று யோசித்து வைத்திருந்தார்கள்.. ஆனாலும் இப்படியொரு சிவப்பா? ரோஸ் மலர் மாதிரி.அதுகூட அவள் நிறத்திற்கு ஒரு மாற்று குறைவாகத்தானிருக்கும் சாம்பல் கண்களில் என்ன ஒரு துள்ளல்?. எத்தனையோ பார்க்கிறோம். சாதாரண காட்டன் சுடிதாருக்குள்ளே என்னமாதிரி அனாட்டமிடா. அதான்யா நம்பாளுங்க ஹீரோயின்களை வடக்கே போய் பிடிக்கிறானுவ.. எல்லோரும் பிரமித்துப் போய் கிடக்கிறான்கள். அவள் ஹாலின் மையத்தில் நின்று, எல்லோரையும் பார்த்து, சிநேகமாய் சிரித்து, நமஸ்தே சொல்ல, க்ளீன் போல்ட்.. எங்கியும் மூச்சுபேச்சு இல்லை. ஃபைலை பார்க்கிறேன் பேர்வழி என்று அவனவனும் முகத்தை புதைத்துக் கொள்ள, பி.ஏ. சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார்
“என்னப்பா குமார்! எதுவும் அர்ஜெண்ட் லெட்டராப்பா?..மும்முரமா ஃபைல் பார்க்கிறே?.”
“ஆமாம் சார் டி.ஓ.ஆர்.. ஸ்டெட்மெண்டை இன்னிக்குள்ள முடிச்சி ஆபீஸர் டேபிளுக்கு அனுப்பியாவணும்.அர்ஜெண்ட்.”—குமார் சீரியஸாக ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சரி…சரி…ஃபைலை தலைகீழாய் பிடிச்சிட்டிருக்க பாரு, சரியா பிடி.”—அவனுக்கு வெட்கமாகிவிட்டது.
சுஷ்மா கொஞ்ச நேரத்தில் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்துக் கொண்டு, டைரக்டர் அறையிலிருந்து வெளியே வந்து டெஸ்பேட்ச் சீட்டில் உட்கார, எல்லோரும் அவசர அவசரமாக ஃபைல்களை. தூர தள்ளிவிட்டு,அவளை விழுங்க ஆரம்பித்தார்கள். அதன் உக்கிரம் தாங்காமல் தலை குனிந்துக் கொண்டாள்.சோமு சூன்யத்தை வெறிக்கிறான், உள்ளே சுஷ்மாவுடன் டூயட் போகிறது என்று அர்த்தம்.. விவஸ்தையில்லாமல் அவளையே விழுங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கர் விஷயமே தனி.. டூயட்லாம் வேஸ்ட் அவனுக்கு.நேரடியாய் அதிரடிதான் கனவில்.
காலஓட்டத்தில் மெதுமெதுவாய் அந்த அலுவலகத்தில் மாற்றங்கள் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தன ..,மூணு நாலு மாச இடைவெளியில் ஏனோதானோ டிரஸ், சொரசொரப்பான தாடை,திருத்தம் செய்யப்படாத மீசை, .பிபாஷாபாசு, மல்லகா ஷெராவத்தின் ப்ளோஅப்கள், இயக்குநரின் கடுகடு தன்மை எல்லாம் போயேபோச். ஆபீஸே அலம்பிவிட்டது போல கலர்ஃபுல்லாக ஃப்ரஷ்ஷோ ஃப்ரஷ்..
“ஹாய், குமார்! உனக்கு ப்ளூ கலர் டீ ஷர்ட்டும்,ப்ளாக் பேண்ட்டும் சூப்பராய் இருக்கும்னு சுஷ்மாதான் சொன்னாள். ஓகே…ஓகே.! அதுக்காக அதே கலர்ல ஏழு செட் எடுத்துட்டியா என்ன?.. வாரம் பூராவும் இதே கெட்டப்புல அலையற.”—குமார் முகத்தைத் தூக்கிக் கொண்டு போனான்.
சுஷ்மா ரொம்ப ஜோவியல்..சிரிக்கசிரிக்கப் பேசறது மட்டுமில்லே, எல்லோரிடமும் தொட்டுத் தொட்டு பேசறதும் ஓவர்.. பையன்கள்தான் பாவம்.வெக்கை பிடித்து மெலிந்துப் போகிறான்கள்.. அவள் வீடு தாராவியில்தானாம். சுமாராய் தமிழை குதறுகிறாள். இதே ஆண் ஓ.ஏ.வாயிருந்தால் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணியிருப்பாங்க, இங்கே பாரு ஈ மாதிரி மொய்க்கிறானுங்க. ஹெட்கிளார்க்குக்கு இதெல்லாம் எரிச்சலாயிருந்தது.. என்ன பொண்ணு இவள்?.. கூச்சநாச்சமில்லாம இப்படி இழையறா.. ஆனால் அவள் அப்படி இழைந்தாலும், அவள் நோட்டம் எங்கே இருக்கிறது?என்று அவருக்கு இன்றைக்குத்தான் தெரிய வந்தது
முக்கியமான வருடாந்திர செலவினங்கள் பற்றிய பதிவேட்டை செக் பண்ணிக்கிட்டு இருக்கும் போது உறுத்தியது. தன்னை யாரோ கவனிக்கிறார்கள்.. சட்டென்று நிமிர்ந்தார். எதிரே டெஸ்பேட்ச்சிலிருந்து சுஷ்மா வைத்தகண்ணை எடுக்காமல் இவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஆபீஸில் ஒருத்தருமில்லை. டீ டைம். இவர் பார்த்ததும் குனிந்துக் கொண்டாள்.. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் பார்க்க, அதே போதையேறும் பார்வை.. என்ன இந்தப் பொண்ணூ./,முந்தாநாள் அப்படித்தான், “நீ டெய்லி எக்ஸைஸ் பண்ணுது சாப். பாடி ஸ்மார்ட்டா இருக்குதே, அச்சா…அச்சா,”— அப்படீன்னிட்டுப் போனாள்.காலையில் வந்து ஹேர் டை யூஸ் பண்ணுங்கோ சாப்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறா. அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. வயசு வாய்தா வாங்கினாலும் இந்த மனசு கேட்கிறதா?. உள்ளே சின்னதாய் ,தளதளன்னு செடி ஒன்று துளிர் விட ஆரம்பித்திருந்தது.. போதாக் குறைக்கு போகும்போதும் வரும்போதும் இவரை பார்வையால் துளைக்கிறாள். சிருங்கார செய்தியைப் புரியவைக்கும் பார்வை.
மனுஷனுக்கு அதிர்ஷ்டம்னா அதிர்ஷ்டம், அப்படியொரு அதிர்ஷ்டம். அதுவும் இந்த வயசிலா அடிக்கும்?.அடிச்சிட்டதே. மதியம் மாடியிலிருந்த ரெக்கார்ட் ரூமில் இவர் 2008 ஆம் ஆண்டின் பட்ஜெட் ஃபைலை மும்முரமாய் தேடிக் கொண்டிருக்க, சுஷ்மா ஓடிவந்தாள்.
“சாப்!…சாப்!..ஒத்திக்கோ க்யா ஃபைல்? போல். மை(ன்) தேடுது.”—உரிமையுடன் அவர் கையைப் பற்றி இழுத்தாள். அப்புறம் இருவரும் சேர்ந்து தேட, அந்த முக்கால் மணி நேரத் தேடலில் ,அவ்வப்போது கைகள்,விரல்கள்,உடல்கள், என்று ஒன்றோடொன்று உரச, அந்த உரசலில் கொஞ்சநாட்களாய் உள்ளே கோமாவில் கிடக்கும் அவருடைய மன்மதராசா விழித்துக் கொண்டு ஆட,.. காதோரம் உஷ்ணமாய் ஜுரம்.போல் உணர்ந்தார்.. தன் மேல் அவளின் உடல் படும்போதெல்லாம்
அவளிடம் எவ்வித சலனமுமில்லை.. ஒதுங்குதலோ,முகச்சுளிப்போகூட  கிடையாது. மாறாக ஜில்லென்று ஒரு பார்வை. இதுக்கென்ன அர்த்தம்? உம்ம் தானே? டாய்! கிழமே! வேண்டாம், அவள் சின்னவயசு, பம்பாய்காரி சோஷியல் டைப், அப்பா மாதிரி. மேலே பட்டால் என்னன்னு விட்டுட்டிருப்பாள்., இல்லை எருமை ஒண்ணு உரசிட்டுப் போச்சின்னு எடுத்துக்கிட்டிருப்பாள். வேணாம் விட்ரு., போய் மாட்டிக்காத. குடையும் மனசை அலட்சியப்படுத்தினார். மெதுமெதுவாய் நகர்ந்து, இடைவெளியில்லாமல் நெருக்கமாய் நிற்கிறார். உணர்ச்சி மேலீட்டில் மேல்மூச்சு வாங்குகிறது.. ஒரு கட்டத்தில் என்ன தேடுகிறோம் என்பதே அவருக்கு மறந்து விட்டது. அவள் திரும்பி,சிரித்துக் கொண்டே,அவர் தோளை அழுந்த பிடித்துக் கொண்டு, ஸ்டூல் மேலே ஏறினாள்.அவளின் இளமையும், நிறமும்,வாளிப்பும்…..அவர் நிலைகுலைந்து நிற்க,, மனசு சுஷ்மா…சுஷ்மா…என்று புலம்ப, மேலிருந்து தேவ புருஷர்கள் அந்த நேரம் பார்த்துதானா ததாஸ்த்து சொல்லணும்.?. அவள் பரண்  மேலிருந்து ஒரு ஃபைல்கட்டை தூக்கிக் கொண்டு இறங்குகையில், பேலன்ஸ் தவறி அப்படியே இவர்மேல் சரிய, அப்படியே ஒரு முழுமையான ஆலிங்கனத்தில் இவருக்கு இடம்,வயசு,சூழல், எல்லாம் மறந்து,போக, ஆவேசமாய் இழுத்து,அவள் திமிற திமிற அழுத்தி ஒரு உம்மா கொடுத்து விட்டார்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அவள் திகைத்து,தடுமாறி, நம்பமாட்டாதவளய், கண்ணீர் தளும்பி நிற்கிறது. ஓவென்று அழவில்லை,ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. நீங்களா? என்பதைப் போல் ஒரு பார்வை., அவ்வளவுதான். தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டாள். போச்சி, எல்லாமே போச்சி.. அப்படியே சரிந்து ஸ்டூலில் உட்கார்ந்தார். என்ன ஜென்மம் நான்?. என்னை அப்பா ஸ்தானத்தில்,ஒரு சகோதரன் ஸ்தானத்தில் வெச்சிருந்திருப்பாள்.மேபீ தாத்தா ஸ்தானத்தில் கூட  இனி எப்படி அவளை எதிர் கொள்வேன்?. நான் மிருகம். நாய் ஜென்மம். வெளியே தெரிந்தால் ஒருத்தன் மதிப்பானா?. தலை கவிழ்ந்தபடி வெளியே வந்தார். ஆபீஸ் நிசப்தமாக இருந்தது, ஆழம் காணாத நிசப்தம். சுஷ்மாவின் குரல் ஆபீஸரின் அறைக்குள் கேட்டது. எந்த நிமிஷம் வெடிக்குமோ?. கூனிக்குறுகி உட்கார்ந்துக் கொண்டார். அன்றைக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை
அவர் ராத்திரி முழுக்க தூங்கவில்லை.. இவ்வளவு அழகான ஒரு பெண் போயும்போயும் என்னை மாதிரி ஒரு கிழவனை. விரும்புவாள்னு எப்படி நம்பினேன்?. காலையில் முதல் வேலையாய் அவள் வீட்டிற்குப் போய் மன்னிப்பு கேட்டால்தான் மனசு ஆறும். என் முகத்தில் காரித் துப்பினாலும் பரவாயில்லை.. பாரம் குறையும்.. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, காலையிலேயே சுஷ்மாவைப் பார்க்க கிளம்பிவிட்டார். குத்தியெடுக்கும் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவரைப் பார்த்துவிட்டு சுஷ்மா எதுவும் பேசவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டு விடுவிடுவென்று உள்ளே போய் விட்டாள். பின்னாலேயே இவர்.. சுஷ்மா…சுஷ்மா..ப்ளீஸ்! ஊஹும் சத்தம் வெளியே வரவில்லை.தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொள்கிறது.. திரும்பினாள்.
“ஏன்..ஏன்..அப்டி பண்ணீங்கோ சாப்?..எனுக்கு இங்க யாரும் இல்லே அதானே?..”—மேலே பேசமுடியாமல் முகத்தை பொத்திக் கொண்டு குலுங்கினாள்.
“சுஷ்மா!..ப்ளீஸ்…நான் ஒரு கிறுக்கன். வயசுக்கேத்த புத்தியில்லை எனக்கு. மன்னிச்சிடு ப்ளீஸ்…ப்ளீஸ்.”
அவளை சமாதானப் படுத்தும் நோக்கில் கிட்டே போய் தயங்கித் தயங்கி அவள் தோளைத் தொட்டார்.. அவள் தடுக்கவில்லை., குலுங்கிக் குலுங்கி அழுதாள்.அப்புறம் அவர் தேற்ற, இவள் அழ, கொஞ்ச நேரம் கழித்துதான் அவருக்கு உறைத்தது., அவளுடைய தோளின் மேல் போட்ட கையை அவர் இன்னும் எடுக்கவில்லை.. அப்புறம் ஒவ்வொரு கட்டமாய் நடந்தேறிய விஷயங்களை எப்படியென்று அறுதியிட்டுக் கூற இயலாது.. ஆற்றுப் படுத்தும் போதே  அவள் அடங்கிப் போனாள். ஒரு முறை எதிர்ப்பு காட்டினாள்., அதுவும் பாதியிலேயே பலவீனப்பட்டு விட்டது..எல்லாம் முடிஞ்சிப் போச்சுது..மன்மதராசாவின் அம்பு தைத்துவிட்டது..
“சுஷ்மா!    .”—அவள் மலங்க மலங்கப் பார்த்தாள்..தலையைப் பிடித்துக் கொண்டு, சத்தமின்றி அழுதாள். அவருக்கு அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது.
“அழாதே சுஷ்மா!.”—அவசரத்துடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு கதறி தீர்த்து விட்டாள்..
“அரே பக்வான்! என்கு ஏன் இப்பிடி நடந்துச்சி? எல்லாம் போச்சி. ஆபீஸ்ல தெரிஞ்சா எப்டீ முழிப்பேனோ ஐயோ!..”
“சுஷ்மா! அழாதே.இதெல்லாம் என்னையறியாம ஏதோ ஒரு வேகத்தில நடந்துப் போச்சி.. நான் வெளியே மூச்சு காட்டமாட்டேன், நீயும் காட்டாதே. அதான் நல்லது..”
அவள் சரியென்பது போல மவுனமாக இருந்தாள். அவளை அணைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார். அப்பாடா. தேகமெங்கும் ஒரே பூரிப்பு., உள்ளே மனசு குதியாட்டம் போட்டது. ஆபீஸில் சொன்னால் ஒரு பய நம்பமாட்டான். அவனவன் நாக்கை தொங்கப் போட்டுங்கிடக்கிறான். எனக்கே ஒண்ணும் புரியல.எப்படி இது?,என்ன அதிசயம்?. தடிதடியா இளவயசுப் பசங்க சுஷ்மா..சுஷ்மான்னு ஜெபிச்சிக்கிட்டு கிடக்க,, இந்த கிழவனை வரிச்சிக் கிட்டாளே.உம் நம்மகிட்ட இருக்கிற ஏதோ ஒரு கவர்ச்சி அவளை வீழ்த்திடுச்சி. அடுத்த வாரம் ப்ராவிடண்ட் ஃபண்ட் லோன் போட்டார். எழுபத்தைந்தாயிரம்..ரூபாய்.  அருமையாய் சிவப்புக்கல் பதித்து, புது மோஸ்தரில் ஒரு நெக்லஸ் வாங்கி பரிசளித்தார். மனைவி ரொம்ப நாட்களாய் ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிற பொன் தாலியை இன்னும் வாங்கித் தராதது உள்ளே குத்தியது. இது ஓவர் செலவுதான்.சரி என்ன பெரிய பணம்?.இந்த அழகுக்கு இதுக்கு மேலேயே செய்யணும்..
சுஷ்மா ரொம்ப சென்ஸிடிவ், பொஸஸிவ்னஸ் ஜாஸ்தி.. ஒரு நாள் போகலேன்ன கூட எப்படி தவித்துப் போகிறாள்.?. வாழ்க்கை அவருக்கு சுவையாக நகர ஆரம்பித்தது. இரண்டு நாட்களய் ஏ. ஜி’ஸ் ஆடிட் நடக்கிறது. இடுப்பொடிய வேலை. கொஞ்ச நாட்களாய் நிறைய ஜி.பி.எஃப். வித்ட்ராயல்ஸ் நடந்திருக்கே ஏன் என்று அப்ஜெக்‌ஷன் வந்தது. இதென்ன கேள்வி?. அவனவனுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள். எனக்குத் தெரிஞ்சி குமாருக்கு அப்பாவின் வைத்தியச் செலவு.,பி.ஏ.சாருக்கு தன் மகளுக்கு நகை வாங்கணும். கல்யாணத்துக்கு ரெடியா நிக்கிறாள்.சனியன் நன் வாங்கறபோதுதானா இந்தப் பிரச்சினை வரணும்?. எனக்கு எரிச்சலாயிருந்தது.
“சார்! ஏதாவது அப்ஜெக்‌ஷன்னா எழுதிட்டுப் போங்க.”
சனியன் பிடிச்ச வேலை. இரண்டு நாளாய் சுஷ்மா வீட்டுப் பக்கம் போகமுடியல, வேலை டைட்டா இருக்கு. மதியம் வந்து யாருக்குந்தெரியாம கண்ணை கசக்கிவிட்டுப் போகிறாள். உங்களுடையது விருத்தாப்பிய ஜாதகம், இன்னொரு களத்திரம் வந்து ஒட்டிக்கும் என்றானே. அப்படியே பலிச்சிடுச்சே.. ஐயோ! சங்கரிக்கு தெரிஞ்சா கச்சேரி வெச்சிடுவாளே. வாயைத் திறந்தா எட்டூருக்குக்  கேக்குமே.. சிவா பயல நெனச்சாத்தான் அச்சமா இருக்கு.கோபக்காரன். அவனே கல்யாண வயசில மதமதன்னு நிக்கிறான்.?.இப்பப் போயி உனக்கொரு சித்திடான்னா?. உம்.ம்.எல்லாவற்றையும் சமாளித்துத்தான் ஆவணும். வேளச்சேரி ப்ளாட்டை சுஷ்மா பேருக்கு எழுதி வெச்சிடணும். பின்னால எனக்கு பிறக்கிற குழந்தைகளோட அந்த வீட்ல செட்டில் ஆயிடலாம்.
இப்பல்லாம் சுஷ்மா ரொம்ப போல்ட். ஆச்சர்யமா இருக்கு.காலையில் பி.ஏ. எதுக்கோ அவளைத் திட்றார், இவள் பொருட்படுத்தவே இல்லை, நின்றுகூட பதில் சொல்லாமல் போகிறாள். எனக்கே பி.ஏ.ன்னா கொஞ்சம் அலர்ஜிதான். நடப்பதெதுவும் எனக்குப் புரியல. ஆபீஸில் நிறைய மாற்றங்கள். சுஷ்மா..சுஷ்மான்னு சுத்திசுத்தி வந்து வழிஞ்சிக்கிட்டிருந்த பயல்களெல்லாம், தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு மாறிகிடக்கின்றானுங்க. கிண்டலும்,சிரிப்பும் அடியோடு போச்சு. பழையபடி தாடி வளர்க்க ஆரம்பிச்சிட்டானுங்க. என்னாச்சி?. நம்ம விஷயம் தெரிஞ்சிப் போச்சா?. ஓகே! என்னைக்காவது ஒரு நாள் தெரிஞ்சித்தானே ஆவணும். அவருக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது.
காலையில் எழுந்திருக்கும் போதே மண்டையிடித்தது.புரிந்துவிட்டது. சுஷ்மா வீட்டில் கொஞ்சம் அதிகமாய் சாப்பிட்டு விட்ட பாதாம் பர்பியினால் ஷுகர் லெவல் பி.பி.400 ஐத் தாண்டியிருக்கும். அந்த சமயங்களில் குளிர் சுரமும், வாயிலும்,உள்ளே அந்தரங்கப் பகுதியிலும் கொப்புளம் போட்டு ரணமாகிவிடுதலும் ஏற்படும்.. எல்லாம் சரியாக எப்படியும் ஒரு வாரமாகிவிடும். இப்போதும் வழக்கம் போல் அதே,அப்படியே. மனுஷன் வாயைக்கட்டினால்தானே?.—உள்ளே சங்கரி திட்டிக் கொண்டிருக்கிறாள். லீவு போட்டுவிட்டு குளுகோரெட் ஃபோர்ட் மாத்திரையளவை கூட்டிப் பார்த்தார். ஊஹும்,காய்ச்சல் நின்றபாடில்லை. அந்தரங்கப் பகுதியில் கொப்பளங்கள் உடைந்து, ரணமாகி..நரக வேதனை
இனிமேல் ஆகாதென்று டாக்டர்.உமாசங்கரைப் பார்த்தார். செக் பண்ணிட்டு ரத்தப் பரிசோதனைக்கு அனுப்பினார்.அதற்குள் உடம்புக்கு என்னாச்சு…என்னாச்சுன்னு சுஷ்மாவிடமிருந்து கால்கள். ஒரு நாள் நான் இல்லேன்னாலும் தவிச்சிப் போயிட்றா. டாக்டர் ரிசல்ட்டைப் பார்த்து விட்டு இவரை ஏற இறங்கப்  பார்த்தார்..
“லெட்டர் தர்றேன், டாக்டர் கல்யாணத்தைப் பாருங்க..”
“என்ன சார்? எதுவும் சீரியஸ் ப்ராப்ளமா?.”
“ஆங்! ,எஸ்.டி.டி. பாஸிட்டிவ். பொம்பளை சீக்கு வாங்கியிருக்கீங்க.இந்த வயசில  லாட்ஜுக்குப் போனீங்களா?.”
அவருக்கு தலை கிர்.ர்.ரடித்தது.,பேச்சு வரவில்லை,வாய் வறண்டு போய் பேந்தபேந்த விழித்தார்.. பொம்பளை சீக்கா? எனக்கா?.ஐயோ! பொத்தென்று நாற்காலியில் விழுந்தார். தான் சிறுகச் சிறுக கட்டிய சின்ன வீடு கோட்டை தன் கண்ணெதிரிலேயே மளமளவென்று சரிவதைக் கண்டார்.ஐயோ! ஏமாந்துட்டேனே.புத்தி கெட்டவன் மும்பையிலேயிருந்து வர்றாளே என்ன ஏதுன்னு விசாரிச்சேனா?.
மறுநாள் போனபோது டாக்டர் கல்யாணம் கிளினிக்கில் ஹால் கொள்ளாத கூட்டம்.. சுஷ்மாக்கள் தந்த வெகுமதிகள்.ஒதுங்கிப் போய் உட்கார்ந்தார்.ஐம்பத்தைந்து வயசில பொம்பளை சீக்கு என்றால் டாக்டர் கூட என்ன நினைப்பார்?..அவமானம் பிடுங்கித் தின்றது.. சார்! சுஷ்மான்னு ஒரு கழிசடை எங்க ஆபீஸில சார்.—இல்லை கழிசடைன்றது தப்பு.. சார்! சுஷ்மான்னு ஒருத்தி எங்க ஆபீஸ்ல சார். ஓகே! இப்படி ஆரம்பிச்சா போறும்.
கூட்டம் அதிகமாக இருக்கவே வெளிப்புறமாக வந்து வேப்பமர நிழலில் நின்றார். அந்தரங்கத்தில் விண் விண்ணென்று வலி. மரத்தில் நிறைய பறவைகள் கூட்டம் கீ..கீ..கீ..என்று ஒரே சப்தம். இதுகளுக்கு பொட்டை குருவி சீக்கு வராதா?,அதுங்களுக்கு ஃப்ரீ செக்ஸ் ஆச்சே?. .டாக்டரின் குரல் கேட்கிறது.. அப்போதுதான் கவனித்தார். தான் நிற்குமிடம் டாக்டர் அறைக்கு நேர் பின்புறம்.
“உம்..சொல்லுங்க எங்கே இந்த  சீக்கு வாங்கினீங்க?.”
“சார்! சுஷ்மான்னு ஒருத்தி எங்க ஆபீஸில சார்!.”
திடுக்கிட்டார். ஐயோ! நான் சொல்லவேண்டியதை வேற எவனோ சொல்றானே. ஓடிப் போய் எட்டிப் பார்க்க, உள்ளே பி.ஏ.. பரிதாபமாக நிற்கிறார்.
“சிஸ்டர்! இதோ பாரு இன்னொரு சுஷ்மா ஸிண்ட்ரோம் கேஸ்..’—சொல்லிவிட்டு டாக்டர் சிரிக்க, நர்ஸ் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
“உங்க ஆபீஸ்ல இன்னும் எத்தனை பேர்தான்யா வேலை செய்றீங்க? சுஷ்மான்னு ஒருத்தின்னு சொல்லிக்கிட்டு வர்றதில .நீ ஐந்தாவது ஆளு.. வயசானவங்களுக்கு அந்தப் பொண்ணு இப்பத்தான் .சான்ஸ் குடுக்கிறா போல. இது கிழவர்களின் வாரம்.”—டாக்டர் ராகம் போட்டு சொல்ல பி..ஏ.நெளிகிறார்.
“டாக்டர்! நான் அப்படிப் பட்டவன் இல்லீங்க.என் வயசுக்கு அந்த நெனப்பெல்லாம் கிடையாது டாக்டர். நம்பவே முடியல. ஆபீஸ்ல நெருப்பு மாதிரி இருப்பா. சும்மா இருந்தவனை ஸ்மார்ட்டா இருக்கீங்க, டை யூஸ்..பண்ணுங்க—இப்படி சொல்லி சொல்லியே கவுத்திட்டாளே. உத்தமி மாதிரி என்னமா நடிச்சா சார்.?.”
டாக்டர் சிரித்தார்.
“த்தூ! உன் வயசுக்கு இப்படியெல்லாம் பேச வெட்கமாயில்லே?.உம் பொண்ணு வயசு இருப்பாளா அவ?. அந்தப் பொண்ணு இங்க வந்து அஞ்சாறு மாசந்தான் ஆயிருக்கு.அதுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் தெரியாம இத்தனை பேரையும் கரெக்டா  மடக்கி பணம் கறந்திட்டாள்னா என்ன அர்த்தம்?. அவ ஒரு புரொபஷனல் ப்ராஸ்டிடியூட்..நெருப்புமாதிரி நடிச்சி கவுக்கறது,ஒருத்தருக்கொருத்தர் தெரியாம பலரை கவுக்கறது ,இதெல்லாம் அவ தொழில் திறமை., தொழிலுக்கான உத்தி. சரீ நீங்க எவ்வளவு பணம் குடுத்திருக்கீங்க?..”
“ஜி.பி.எஃப். லோன் போட்டு ஐம்பதாயிரம் குடுத்திருக்கேன் டாக்டர்..”—தலையில் அடித்துக் கொண்டார்.
“ச்சீய்! உங்களில் கல்யாணமாகாதவன், ஆனவன், வயசானவன், இப்படி எல்லாரும் சகட்டுமேனிக்கு அவளை யூஸ் பண்ணியிருக்கீங்க. இதுக்கு நீங்கள்லாம் வெட்கப்படணும்யா.. போய்யா! உங்களுக்கெல்லாம் இந்த தண்டனை நியாயமானதுதான். வீட்டிலே பொண்டாட்டிய வெச்சிக்கிட்டு இந்த வயசில இங்க வந்து நிக்கிறியே வெட்கமாக இல்லை?.. அந்தப் பொண்ணை நெனைச்சால்தான் ரொம்ப பாவமா இருக்கு. ஆபீஸில் உங்களை மாதிரி அதிகாரிகளின் நிர்பந்தங்களினால்தான் அவ கொஞ்சம் கொஞ்சமா இப்படி ஆகியிருக்கணும். கீழ் மட்ட உத்தியோகம் என்ன பண்ண முடியும்?. பாவம் நிச்சயம் எந்தப் பொண்ணும் விரும்பி  இதை ஏத்துக்கிட்டிருக்கமாட்டா..அதிலும் உன்னைமாதிரி கிழவன்களை சகிச்சிக்கிறது எவ்வளவு கஷ்டம்?.உம்.. இந்த மாத்திரையை பத்துநாள் சாப்பிட்டுட்டு வா., இப்ப கிளம்பு. அடுத்து எந்தக் கிழவன் சுஷ்மான்னு வர்றான்னு பார்ப்போம்..”—டாக்டர் எரிச்சலுடன் நெக்ஸ்ட் என்று கத்தினார்.
வெளியே கேட்டுக் கொண்டிருந்த ஹெட்கிளார்க்குக்கு நாக்கு ஒட்டிக் கொண்டது.ஐயோ! ஜி.பி.எஃப். லோன் போட்டதுக்கு அவனவனுக்கு ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கும்னு நெனைச்சேனே.ஒரே காரணம்தான்னு இப்பத்தானே தெரியுது.. புலம்பலாய் புலம்பிக் கொண்டிருந்தவர் எதையோ பார்த்துவிட்டு திடீரென்றுஎதிர் திசையில்  தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.. தூரத்தில் தன் காரை நிறுத்திவிட்டு,சுற்றுமுற்றும் பார்த்தபடி, சோகமாய் அவர்களின் டைரக்டர் வந்துக் கொண்டிருந்தார்.. ஓடுகிற ஹெட்கிளார்க் நினைத்துக் கொண்டார்.
“ ஹும்! இருப்புக்கார மனுஷன் ஜி.பி.எஃப்.. லோன் போடாமலே அட்டிகை வாங்கியிருப்பார்.”

*************************************************************************************************.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (92)‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    punai peyaril says:

    இது மாதிரி கதைகள் கண்டிப்பாக திண்ணைக்கு தேவை தானா…? வேதனையாய் இருக்கிறது… மஞ்சரி, அமுதசுரபி,கணையாழி போன்றவை அச்சுப் பத்திரிக்கைகளாய் வந்து போணியாகாமல் இருந்திருக்கலாம்… அந்த மரியாதை , சுலபத்தில் கிடைக்கக் கூடியதா..? திண்ணையை அந்த நிலையில் தானே வைத்திருப்பவர்கள் அதிகம் எனும் நினைப்புடன்…. இக்கதையை இங்கு படித்த வருத்தமுடன்…

  2. Avatar
    s.ganesan says:

    i endorse the view of punaipeyaril…i did not expect such a story?from narayanan….even his friend the writer jaisree wont like it i hope…..

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      புனைபெயரில்மற்றும் திரு.கணேசன்,அவர்களின் கருத்துகளுக்கு நன்றி.மனிதர்களின் மறுபக்கங்களை,பலவீனங்களை,வக்கிரங்களை, சற்று ஹாஸ்யம் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறேன். அதற்கு இவ்வளவு ஆவேசம், அருவருப்பு ஏன்?.மகாத்மா முகங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது எனக்கு உடன்பாடானதில்லை.நன்றி.

  3. Avatar
    bandhu says:

    அந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லோரின் சிந்தனை ஓட்டத்தையும் பார்த்தால், எந்த பெண் கிடைத்தாலும் எப்படி அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ளலாம் என்பதிலேயே இருக்கிறது. ஒரு பெண் அவருக்கு சாதகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ளும்போது விளைவுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்ற ஒரு கோணத்தை நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.

    அதே சமயம், இது போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்றும் நினைக்க தோன்றுகிறது!

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      எல்லோரிடமும் உறைந்திருக்கும் சாத்தானை இனங்காட்டும் கதை இது.பாதிக்கப்பட்டவள் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்வதோடு,பக்க விளைவுகளாய் அவர்களுக்கு தண்டனையும் தரப்படுகிறது.சரியாய் புரிந்துக் கொண்டதற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *