சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

This entry is part 22 of 41 in the series 8 ஜூலை 2012

அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து ‘சேட்டை’ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதற்கு அநேக காரணங்கள் இருந்தன. அவளது கூந்தலுக்குச் செய்திருந்த அலங்கோலம்! அது எவ்விதத்திலும் என் மனதைக் கவரவில்லை. காதுகளில் தொங்கும் பெரிய காதணிகள்! அவற்றுக்கும் நான் விருப்பமில்லை. கூடாரத் துணியால் தைக்கப்பட்ட இறுக்கமான காற்சட்டையும் அதற்குப் பொருத்தமான மேற்சட்டையும் அவளது விருப்பத்துக்குரிய ஆடைகள். எனவே வெளித்தோற்றத்திலேயே எனக்கு அவளைப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனாலும் அவளிடம் மிக அழகானதொரு புன்னகையொன்றிருக்கிறது. அது எவரிடமும் அபூர்வமாகக் காணக் கிடைக்கும் நேர்மையானதொரு புன்னகை. எவ்வாறாயினும் எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.

அவளது நடவடிக்கைகளும் எப்பொழுதும் என் மனதைக் கவரவில்லை. இவ்வாறான கல்வி நிலையங்கள் இருப்பது கற்பதற்குத்தான். அவளுக்கு, அளவுக்கதிகமாக கூச்சலிடும் உற்சாகமான நண்பர்கள் இருந்தனர். அவர்களிலும் அதிகப்படியாக இருந்தவர்கள் பையன்கள்தான். அவர்களுக்கு அதிக வேலையில்லை. நான் மிகுந்த கவனத்தோடும் தேவையோடும் படித்துக் கொண்டிருக்கும்போது கூட அவர்கள் வேடிக்கையாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார்கள். கொண்டாட்டம், கொண்டாட்டம் முடிவேயில்லாத கொண்டாட்டம். நான் அவர்களிலொருவனாக இல்லாதது குறித்து மகிழ்கிறேன். நான் தனியாகவே படிக்கின்றேன். கல்வி கற்கவே இது போன்ற கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

ஓர் நாள், அவள் ஓரு இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விதத்தை நான் கண்டிருக்கிறேன் அல்லவா. அவன் அவளது சகோதரனாக இருப்பதற்கும் அனேக இடமிருக்கிறது. ஆனாலும் அவன், அவளது காதலர்களுள் ஒருவனாக இருப்பானென்றே நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு எண்ணுவதற்கே நான் மிகவும் விரும்புகிறேன். அவளுக்குப் பல காதலர்கள் இருக்கக் கூடும்.

நான் வகுப்பு முடிந்து, வீட்டுக்குப் போவதற்காகப் பேரூந்தில் ஏறினேன். அவளும் அதே பேரூந்தில் ஏறினாள். உள்ளே காலியாக இருந்த ஒரேயொரு இருக்கையில் நான் அமர்ந்தேன். அதே ஆசனத்தில் எனது வலது பக்கத்தில் அவள் அமர்ந்தாள். நான் யன்னலினூடாக தூரத்தே பார்வையைச் செலுத்தினேன். பேரூந்து நகரத் தொடங்கியது. சிறிது தூரம் பயணித்துக் கொண்டிருக்கையில், நடத்துனர் வந்து பணம் கேட்டார். அவள் பணம் கொடுக்க முற்படுகையில் ஐந்து ரூபாய் நாணயமொன்று அவளது கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து உருண்டு வந்து எனது இரு பாதங்களினருகில் நின்றது. நான் அதைக் காணாதது போல இருந்தேன். அவள் என்னையும் நாணயத்தையும் மாறி மாறிப் பார்க்கும் விதம் எனது ஓரக் கண்ணில் தெரிந்தது. ‘தேவையிருந்தால் கேட்கட்டும்.’ நான் அப்படியே இருந்தேன். சிறிது நேரத்தில் அவளும் அது குறித்த எண்ணத்தைக் கை விட்டிருக்கக் கூடும்.

கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும்போது சிறுவர்கள் இருவர் பேரூந்தில் ஏறினர். ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும். அவர்கள் அமர்வதற்கு இடமொன்றைத் தேடினர். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். எனக்கென்றால் அவர்களிடம் எந்த விஷேசமும் தென்படவில்லை. பொதுவான வகைப்படுத்தலுக்கமைய அவர்கள் துர்நாற்றம் வீசும் சிறு விலங்குகள். அவள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் புன்முறுவலொன்றைத் தேக்கி பார்த்துக் கொண்டேயிருந்தாள். இதென்றால் பைத்தியமேதான்! சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவர்களை அருகில் வருமாறு தலையால் சைகை செய்தாள். அவர்களும் முந்திக் கொண்டு வந்தனர். அவள் அவர்களை தன்னருகில் அழைத்துக் கொண்டாள். அத்தோடு நின்றுவிடாமல் தன் மடியிலும் அமர்த்திக் கொண்டாள்.

ஆகவே அவர்கள் மகிழ்வாகப் பயணித்தார்கள். குட்டிச் சிறுமி ஏதோவொரு பெரிய கதையை சுவைபடச் சொல்லிக் கொண்டிருந்தாள். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவளைக் கூர்ந்து நோக்கி, மிகுந்த கவனத்தோடு அதற்குச் செவிமடுத்தாள். குட்டிச் சிறுவனும் தன் மழலைக் குரலில் ஏதோ கூறினான். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அதையும் மிகுந்த ஈடுபாட்டோடு செவிமடுத்தாள். அவர்களைச் செல்லம் கொஞ்சினாள். நான் இவற்றையெல்லாம் ஓரக் கண்ணால் பார்த்தபடியிருந்தேன். அவர்களோடு செல்லம் கொஞ்சி விளையாடும் ஆசை எனக்குள்ளும் எழுந்தது. ஆனாலும் நான் மிகுந்த முயற்சியோடு அதைத் தவிர்த்துக் கொண்டேன். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் மீது எனக்கிருக்கும் வெறுப்பினாலோ, எனது பாதங்களுக்கருகிலிருக்கும் நாணயத்தினாலோ நான் அதனைத் தவிர்த்திருக்கலாம். மெல்லிய வேதனையொன்று என்னுள்ளே எழுந்தது. நான் அனுபவிக்காத பேரானந்தமொன்றை அவள் அனுபவிக்கிறாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். நான் துயரத்தோடு இருக்கிறேன்.

கொஞ்ச தூரம் பயணித்த பின்பு சிறுவர்கள் இருவரும் இறங்கிச் சென்றனர். அவர்களது விளையாட்டு முடிந்தது. அடுத்து வரும் நிறுத்தத்தில் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணும் இறங்கிப் போவாள். ஆகவே நான் தனித்துப் போவேன். வழமையைப் போன்ற தனிமைக்குள்ளேயே தனித்துப் போவேன். எனக்கு கர்வமளிக்கக் கூடிய, பிரகாசமான, செழிப்பான எதிர்காலம் நோக்கிச் செல்லும் எனது இப் பயணத்தின் ஒவ்வொரு கணத்திலும் நான் அனுபவிக்கும் வேதனை மிகுந்த தனிமைக்குள்ளேயே மீண்டும் நான் தனித்துப் போவேன். பேரூந்திலிருந்து இறங்கப் போகும் அவளையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு பேரூந்திலிருந்து இறங்கிப் போனாள். நான் எடுத்துக் கொடுக்காத ஐந்து ரூபாய் நாணயம் குறித்து அவள் மறந்திருப்பாளா? அது இன்னும் எனது பாதங்களுக்கருகில்தான். நான் அதைப் பொறுக்கியெடுத்தேன். நாளைய தினம் அவளைச் சந்திக்கும்போது அதைக் கொடுப்பதா வேண்டாமா என்பது குறித்த குழப்பமொன்று என் மனதில் உண்டானது. எவ்வாறாயினும் நாளைய தினம் அவள் புன்னகைத்தால், நானும் பதிலுக்கு புன்னகைப்பேன்.

மூலம் – அனுஷ்க திலகரத்ன (சிங்களத்தில்)

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Series Navigationமோட்டுவளைநேற்றைய நினைவுகள் கதை தான்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *