தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்

This entry is part 20 of 41 in the series 8 ஜூலை 2012

இஸ்லாமிய மார்க்கப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியமண்ணிலும், தமிழகத்தின் பலபகுதிகளிக்கு வருகைதந்த அரேபிய மார்க்க பிரச்சாரகர்களும், இந்தியாவிலும், தமிழகத்திலும் தோன்றி இஸ்லாத்தை ஆழமாக அடித்தளமக்கள் மத்தியில் கொண்டு சென்ற சூபிகள் என்னும் மெய்ஞானிகளும் முக்கிய பங்குவகிக்கின்றனர்.

இஸ்லாம் ஆட்சிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்பாகவே அரேபிய மண்ணின் மார்க்க பிரச்சாரச் குழுக்கள் கடல்வழிப் பயணமாக இங்கு வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தெரியவருகின்றன.

கி.பி. 632 ல் கேரளத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் சேரமான் பெருமாள் இஸ்லாமிய சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டார். அப்போது கோழிக்கோடு நகரின் முக்கிய வியாபாரியாக இருந்த பஹ்ரைன் நாட்டைச் சார்ந்த இபுராகீம் சாபந்தர் என்பவரே இதற்கான காரணம் என இப்னுபதூதர்• தனது 13-ம் நூற்றாண்டு பயணநூலில் தகவல் குறிப்புகள் மூலம் தெரிவிக்கிறார்.

கேரள கடற்கரைகளில் வணிகம் செய்ய வந்த வணிகக் குழுக்களின் மூலமாகவும் இஸ்லாத்தின் செல்வாக்கு இம்மண்ணில் பரவத் துவங்கியுள்ள விளைவுதான் இது.

இலங்கையில் ஆதம்நபி பாதம் பதித்திருந்த ஆதம் மலையைக்காண அரேபியாவிலிருந்து ஷெய்கு ஷஹிருத்தீன் தலைமையில் சில முஸ்லிம்கள் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர். கடல்கொந்தளிப்பும், புயலும் ஏற்படவே படகு திசைமாறி கேரளாவில் கொடுங்கநல்லூரில் கரைசேர்ந்தது. அப்போது அம்மக்களை சேரமான் பெருமாளிடம் கொண்டு வந்து நிறுத்த, முகமது நபிகள் பற்றியும், இஸ்லாம்பற்றியும் அவர்கன் தெரிவிக்க அதன்பால் மன்னர் சேரமான்பெருமாள் ஈர்க்கபட்டதாகவும், ஆதம்மலையை பார்த்துவிட்டு திரும்பிவரும்போது இக்குழுவினை இங்கு வந்துவிட்டு செல்லும்படி கோரியதாகவும், பிறகு மன்னர் தன்நாட்டை 18 பகுதிகளாக பிரித்து குடும்ப உறவினர்களிடம் ஆளக்கொடுத்துவிட்டு அந்த அரேபியக்குழுவோடு மக்கா சென்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சேரமான் பெருமாள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுச் கொண்டபிறகு தன்பெயரை அப்துர் ரகுமான் சாமிரி என மாற்றிக் கொண்டார். மக்காவிற்கு சென்றபிறகு திமிஷ்கு நாட்டு மன்னர் மாலிக்ஹபீபின் மகளான ருகையாவை மணம் செய்து கொண்டார் என்பதும், தான் புதிதாய் ஏற்றுக்கொண்ட இஸ்லாத்தை கேரளாவிலும் மக்கள் மத்தியில் பின்பற்றும்மதமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அப்துர் ரகுமான் சாமிரியின் கோரிக்கைகளுக்கு இணங்க மன்னர் மாலிக் ஹபீப் தன் மகன் மாலிக்இப்னுதீனார், குடும்பத்தினர் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் ஒருகுழுவாக கேரளாவிற்கு சாமிரியுடன் அனுப்பி வைத்தார் என்பதும், வரும்வழியில் உடல்நலக் குறைவால் சாமிரி ஸகர் முல்லாவில் மரணமடைந்தார் என்பதும் சில தகவல்களாக நமக்கு தெரிய வருகின்றன.
கி.பி. 644-ல் மாலிக் இபுனுதீனார் தலைமையிலான இஸ்லாமிய பிரச்சாரக்குழுவினர் கொடுங்கநல்லூரை வந்தடைகின்றனர். இக்குழுவில் மாலிக் இப்னுதீனாரின் மகன்களான ஹபீப், தகீயுதீன், மூஸா உமர், முகம்மது அலி, அப்துரஹ்மான், ஹுசைன், இப்ராகீம், ஹுசைன் முதலானவர்களும் மகள்களான பாத்திமா ஆயிஷா, ஸைனபா, தனீரத், ஹலிமா உள்ளிட்ட பெண்களும் மேலும்பல மார்க்க அறிஞர்களும் அதில் இருந்துள்ளனர். கேரளத்தின் பலபாகங்களுக்கும் தமிழகத்தின் தென்பகுதிக்கு அக்குழுவின் முகமது இப்னுமாலிக் என்பவரும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். திருவிதாங்கோடு பகுதியிலிருந்து தென்குமரியில் இஸ்லாமிய பிரசாரம் துவங்கியதாகாவும் தகவல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கேரளப் பகுதிகளிலும் இதையொட்டிய இன்றைய தமிழகப்பகுதிகளிலும் வைதீக இந்துமதத்தின் சாதிபிடிமானங்கள் தீவிரமாக நிலைபெற்றிருந்ததை சமூக வரலாறுகளின் மூலமாக அறியமுடிகிறது.சமணர்களை கழுவிலேற்றிய சம்பவமும் சைவஆதிக்கமும் நிலைபெற்றிருந்ததைப் பார்க்கலாம். மனிதனை இழிந்தவனாக, கீழ்நிலையில் உள்ளவனாக, சொத்து வைக்க உரிமையற்றவனாக, கோயிலுக்குள்ளும் உயர்ஜாதியினரின் தெருக்களிலும் நுழைய உரிமையில்லாதவனாக ஊரின் சேரிபுறங்களில் குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்வனாக. சாதிரீதியாக, சமூகரீதியாக ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரம் புத்துணர்வை உருவாக்கியது. இதன்விளைவு பிற ஒடுக்கபட்ட சாதிகளிலிருந்து இஸ்லாத்தின் பெருவாரியான மக்கள் வருகை புரிந்ததும் நிகழ்ந்திருக்க கூடும். மகான் மாலிக் முகமதுவின் தீவிரப்பிரசாரப் பணியில் இஸ்லாத்திற்கு வந்த மக்களுக்கு தொழுகை வணக்க முறைகளுக்காக திருவிதாங்கோடு முன்பு தெங்கநாட்டின் தலைநகராக இருந்த தேங்காய்பட்டனம், குளச்சல், கோட்டாறு, ஆளூர் போன்ற இடங்களில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இஸ்லாமியபணியாற்றி. இறைஇல்லங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வுகளை, பரப்பி வாழ்ந்த மகான் மாலிக்முகமது இம்மண்ணிலேயே உயிர் நீத்தார் என்பதும் அவரது உடல் திருவிதாங்கோட்டு ஜும்மா மஸ்ஜிதினருகில் அடக்கப் பட்டுள்ளதும் தெரியவருகிறது.

நபிகள் நாயகத்தின் உற்ற சகக்களான தமீம்-உல்-அன்சாரி, முகமது உக்காசா ஆகியோர் தங்களது இறுதிகட்ட வாழ்க்கையை தமிழகத்திற்கு வந்து இஸ்லாமியப் பிரச்சாரப்பணி செய்து நிறைவுபடுத்தி இருக்கின்றனர். முகமது உக்காசா அவர்களின் அடக்கவிடம் தென்ஆற்காடு மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை யிலுள்ள மகமூது பந்தர் என்னும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. மற்றொரு நபித்தோழரான தமீம்-உல்-அன்சாரியவர்களின் அடக்கவிடம் சென்னைக்கு அருகே தெற்கில்உள்ள சஹிது பந்தர் என்னும் இடத்திலும் அமையப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரிமாவட்டத்தின் கேட்டாறு ஊரில் ஈராக் நாட்டைச் சேர்ந்த காஸிம் (வலி) அவர்களது அடக்கவிடம் உள்ளதும் இது கி.பி. 624 ல் (ஹிஜ்ரி 4) உருவானது என்பதும் வரலாற்று ஆதாரமாகும்.
இதுபோன்றே திருநெல்வேலி மாவட்டத்தில் அப்துல் ரஹ்மான்(வலி) அவர்களது அடக்கவிடம் உள்ளதும், இது கி.பி. 624 (ஹிஜ்ரி 8)ல் ஏற்பட்டது என்பதும் வரலாற்று செய்திகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்தியாவிற்கு வந்து இஸ்லாமியத்தை மக்களிடம் பரப்பிய வரலாற்றில் இஸ்லாமிய மெய்ஞானி நத்ஹர்வலியின் பங்கு மிக முக்கியமானதாகும். தப்லே ஆலம் பாதுஷா என்றழைக்கப்பட்ட இவர்தம் ஆன்மீக உரைகளும், விளக்கங்களும் மக்களை வெகுவாக இஸ்லாத்தின்பால் கொண்டுவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அலி(ரலி) அவர்களின் வழித்தோன்றல் என்றும் சிரியநாட்டின் மன்னனாக இருந்த அகமது கபீர் அவர்களின் மகன் என்பதான தகவலும் உள்ளடங்கும். திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள நத்தர்ஷா வலிதர்கா ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்ததாகும் ஹிஜ்ரி 417 (கி.பி. 997) ரமலான் பிறை 14ல் காலமான இவரின் அடக்கவிடம் அமைந்துள்ளது. எனினும் திருச்சி மெயின்கார்ட்கேட் பகுதியில் உள்ள ஹோலிகிராஸ் புனித சிலுவைக்கல்லூரிக்கு பின்பக்கத்தில் இடிபாடுகளுடன் பிரதான பள்ளிவாசல் ஒன்று காணப்படுகிறது. கி.பி. 738 ல் (ஹஜ்ரி 116) இதுகட்டப்பட்டதாகவும், அப்துல்லா இப்னுமுகம்மது அன்வரால் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்குமான கல்வெட்டு சான்றும் இங்குள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் ஏர்வாடி நகரில் சையது இப்ராகீம் ஸகீது வலியுல்லாவின் தர்கா தமிழகத்திலும் கேரளத்திலும் இஸ்லாம் பரவிய வரலாறுக்கும் தியாகங்களுக்கும் சாட்சி பகருவதாக அமைந்துள்ளது ஹிஜிரி 530ல் (கி.பி. 1109 ) மொரோக்காவில் பிறந்த சையிது இப்ராஹீம் ஷஹிது வலி மதிநாவில் கல்விகற்று ஹுசைனி யூசுப் என்ற தர்வேஷுடன் சேர்ந்தும், அவரது மரணத்திற்கு பிறகுதனித்தும் டுனிஸ், திரிப்போலி எகிப்து, லிபியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் சென்று சமயபிரச்சாரம் செய்தார். ஹிஜ்ரி 557ல் முதல் தடவை வடமேற்குபகுதியான சிந்துபகுதிக்கும், இந்தியாவிலிருந்து வந்து பிரச்சாரம் செய்தார். சிந்துமன்னன் ஆப்தாப், அவர்தம்பி மெஹ்தாப் ஆகியோர் ஷஹீதவர்களின் குழுவை எதிர்த்து போரிட்டபோது ஆப்தாப் போரில் இறந்தான். படைகள் சரணடைந்தன. இதுபோன்றே குஜராத்திற்குள் நுழைந்தபோது குஜராத் மன்னன் கரோடாசிங் ஷஹீதுக் குழுவை எதிர்த்து போரிட்டனர்.

மதினா சென்றுவிட்டு ஹிஜ்ரி 582ல் (கி.பி. 1161) தனது குடும்பத்தார் 121 பேர்களுடனும், ஐயாயிரம் தொண்டர்களுடனும் 40 நாள் கப்பல்பயணம் மூலமாக கேரளமண்ணின் கண்ணூர் வந்து சேர்ந்தார். கோணத்தில் சமயப்பிரச்சாரம் செய்ததைத் தொடர்ந்து பாண்டியநாட்டு காயல்பட்டணம் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அப்போது திருநெல்வேலிப்பகுதியை ஆண்ட குலசேகரபாண்டியனின் அனுமதிபெற்று காயலபட்டினப்பகுதிகளில் மார்க்கப் பிரச்சாரம் நிகழ்த்தினார் மதுரைப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள முயன்றபோது மன்னன் திருப்பாண்டியன், மறுத்து இபுராகீம் ஸகீது அவர்களது பிரச்சார மற்றும்படைக் குழுவையை வைகை நதிக்கரையை விட்டு விரட்டியபோது திருப்பாண்டியனை எதிர்த்து போரிட்டார். இபுராகீம் சகீது அவர்கள் ஆட்சியின்கீழ் மதுரை வந்தது. முகவையை ஆண்டுகொண்டிருந்த விக்கிரமபாண்டியன் அப்பகுதியில் இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொள்ள மறுத்துவிட்டுநெல்லையை ஆண்டு போரில் தோற்ற குலசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்கச் மதுரையை நோக்கி படை எடுத்தான், இபுராகீம் சகீது அவர்களின் படை முகவையை முற்றுகையிட்டபோது தலைமை தாங்கி பேரிட்ட ஸகீது அவர்களின் மகன் அபுதாஹிர் அம்பு பாய்ந்து மரணமடைந்தார். ஸகீது அவர்கள் நேரில் போரில் ஈடுபட்டபோது விக்கிரமபாண்டியன் கொல்லப்பட்டான். சோழர்கள் மதுரையை மீட்க திரும்பி வந்தபோது போரும் நாடுபிடிப்பதும் என் நோக்கமல்ல என்று கூறி தீன் நெறியை பரப்புவதே எம்நோக்கம் என்றுரைத்து மதுரை நகரை மனமுவநது விட்டுக் கொடுத்து விட்டார்.
பிறகு அந்நாளில் தம் ஆட்சிப்பகுதியில் பவுத்திரமாணிக்கப் பட்டினம் என்றழைக்கப்பட்ட ஏர்வாடியை தலைநகராக்கி ஆட்சி செலுத்தி வந்தார்கள். இதற்குபின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அரபகத்திற்கு திருப்பி அனுப்பினார் இச்சமயம் மன்னர் மதுரை திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்ட ஆந்திர மன்னன் துணையுடன் பெரும்படையை திரட்டி இபுராகீம் ஸகீது அவர்களோடு போர்புரிந்த போது திருப்பாண்டியனால் வீசப்பட்ட ஈட்டி பாய்ந்து அவர்கள் மரணமடைந்தார்கள் . ஹிஜிரி 592ம் ஆண்டு (கி.பி. 1171) துல்காயிதாபிறை 23ம்நாள் 65வது வயதில்) ஏறத்தாழ 10 ஆண்டுக்கு மேலாக பாண்டிய நாட்டுப்பகுதிகளில் வாழ்ந்துள்ள சையது இபுராகீம் ஸகீது வலியுல்லாவின் காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரத்தின்தன்மை தழைத்தோங்கியுள்ளது.
நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் அப்துல் காதிர் என்னும் இயற்பெயருடைய ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்களின் அடக்கவிடம் அமையப்பெற்றுள்ளது. வடஇந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் மாணிக்கபூரில் கி.பி. 1490ல் பிறந்த (ஹிஜ்ரி 910 ரபியுல்அவ்வல் 10) இவர் இஸ்லாமிய நெறிகளின்பால் ஆழ்ந்த ஈடுபாடுடையவர் ஆன்மீக பயிற்சி பெற்ற 404 ஆன்மீக மாணவர்களுடன் ஹிஜ்ரி 947ல் (கி.பி. 1527) உலகின் பல பாகங்கங்களுக்கும் சென்று இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார். மக்கா சென்று ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றிவிட்டு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் அரபு நாட்டிலேயே சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இறுதியில் பொன்னானிப்பகுதிக்கு கப்பல்மூலம் வந்திறங்கிய ஷாகுல்ஹமீது நாயகம் அவர்கள் முஹல்லத்தீவு, இலங்கை ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து தமிழகத்தின் கீழக்கரை, காயல்பட்டினம், மேலப்பாளையம், மதுரை பகுதியின் நத்தம், ஆயக்குடி, பொதிகைமலை, திருச்சி, இறுதியாக தஞ்சைக்கு வந்தும் பல இடங்களுக்குச் சென்று அடித்தட்டு மக்கள் மத்தியிலும் பிறசமய ரிஷிகளை கவர்ந்தும், மன்னர்களை அடிபணியச்செய்தும் தனது இஸ்லாமிய சமயப்பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது தஞ்சைமன்னன் அச்சுதப்பநாயக்கன் ஷாகுல்ஹமீது நாயகத்திற்கு தங்கிப்பிரச்சாரம் செய்ய இலவசமாய் வழங்கிய நாகூர் நிலப்பகுதியில் ஹிஜிரி 978ல் (கி.பி. 1558) உயிர்நீத்தார். ஷாகுல்ஹமீது நாயகம் ஏழத்தாழ இருப்ததுஎட்டு ஆண்டுகளுக்கும்மேலாக இப்பகுதியில் தங்கி பிரச்சாரம் செய்தார் எனவும், அவர்தம் ஆன்மீக உரையைக்கேட்டும் சமுதாய சேவையை மதித்தும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள். என்பதும் இங்கே மிகமுக்கியமாக குறிப்பிடவேண்டிய செய்தியாகும்.

இவ்வாறாக தமிழகம் முழுவதும் அமையப்பெற்றிருக்கும் தர்காக்களும், கபறுகளும், இஸ்லாமிய சிந்தனையை தமிழ் மக்களுக்கு ஊட்டிய ஞானிகளின் அடக்கவிடங்களாகவே அமையப்பெற்றுள்ளன. இஸ்லாத்திற்காக, இஸ்லாத்தை பரப்புவதற்காக உயிர்நீத்த மன்னர்கள், படைவீரர்கள் ஒருபுறமும், இஸ்லாமிய பிரச்சாரத்தையும் சமய அடிப்படையில் மக்கள் பணியாற்றியும், இலக்கியங்களின்மூலம் இஸ்லாமிய பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியும் மறைந்த சூபிச கவிஞர்கள் மறுபுறமுமாக நம் தமிழ் மண்ணில் இனங்காட்டப்படுவதைக் காணலாம். இஸ்லாமிய ஆன்மீகச் செல்வர்களின் மக்கள் சார்ந்த வாழ்க்கை நெறியும், தூய, எளிய நேர்மையான, சகோதரத்துவ பண்புநெறியும், ஆற்றலும், தமிழ்மரபின் சித்த மருத்துவம் சார்ந்த ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடும் உடல், மனம் பற்றிய கண்ணோட்டமும், சாதீயத்தை ஏதிர்த்த சமத்துவநோக்கும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தை மையம்கொண்டே செயல்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

Series Navigationகள்ளக்காதல்மோட்டுவளை
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Nathen says:

    இந்தக் கட்டுரை வெளி நாட்டில் இருந்து ஒரு மதம் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு வந்தது என்று சொல்கின்றது. இது போன்று, தமிழ் நாட்டில் இருந்த சிவ நெறிகளும் குறள் நெறிகளும் அரபு
    நாடுகளில் ஏதேனும் கொஞ்சமாவது பரவி இருக்கின்றதா?

  2. Avatar
    punai peyaril says:

    போரும் நாடுபிடிப்பதும் என் நோக்கமல்ல என்று கூறி தீன் நெறியை பரப்புவதே எம்நோக்கம் என்றுரைத்து மதுரை நகரை மனமுவநது விட்டுக் கொடுத்து விட்டார்.—> இவர் தான் நேரில் பார்த்தார்… நாம் புஜபலம் மறந்து ஈவு இரக்கம் என்று இருந்ததால் எல்லா வந்தேறிகளும் இங்கு கொள்ளையடித்து தேசம் சிதைத்தனர்… ஏதோ மோடிமஸ்தான் வேலை நடந்து தான் நமது அடையாளம், நாடு சீர் செய்யப்பட வேண்டும்… என்ற வேண்டுதல் மோடியால் பலிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *