தமிழ் நாட்டில் காங்கிரஸ் மகாசபை அகலக் கால் பதித்து வளரக் காரணமாயிருந்த மூத்த தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவரான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மக்கள் அளித்த செல்லப் பெயர் ‘துப்பாக்கி நாயுடு.’ வரதராஜுலு பொதுக் கூட்ட மேடைகளில் பேசுகையில் அடிக்கொருதரம் சுட்டு விரலை நீட்டி, எதிராளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். இந்த சுவாரசியமான தகவலை வ.ரா.வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலிலிருந்து பதிவு செய்திருப்பவர், வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள ஆய்வாளர் பழ. அதியமான் (பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு).
பழ. அதியமான் கையாளும் மொழி அவருடைய மொழி. அதனால்தான் அவருடைய ஆய்வு நூல்கள் வறட்டுத்தனமான அறிவிக்கைப் பலகைகள் போலன்றி சுயமான வசீகரத்துடன் சலிப்பின்றி வாசித்துச் செல்லத் தக்கவையாக அமைந்துவிடுகின்றன. பொதுவாக ஆய்வு நூல்களில் காண அரிதான நகைச்சுவை அவ்வப்போது மெலிதாக இழையோடிச் செல்வதும் பழ. அதியமான் நூல்களின் தனித்தன்மை. அவருடைய அண்மைய நூலான வரதராஜுலு நாயுடு வரலாறு இந்தத் தனித் தன்மையைச் சிறிது கூடுதலாகவே வெளிப்படுத்துகிறது எனலாம். அரிய புகைப்படங்கள், தனிக் கட்டுரைகள், செய்திக் குறிப்புகளுடன் தரமான கட்டமைப்புடன் வெளியாகி யிருப்பது நூலின் தனிச் சிறப்பு.
வரதராஜுலு நாயுடு ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த ஆளுமை. அது முழுமையாக வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து வந்தது பெருங் குறை. அதியமானின் ஆய்வு இந்தக் குறையைப் பெருமளவு தீர்த்து வைத்திருப்பது தமிழ் நாட்டின் அரசியல்-சமூக-பண்பாட்டு தளங்கள் குறித்து ஆர்வம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஆறுதல் அளிக்கிறது. நூலுக்கு அவர் வைத்துள்ள தலைப்பு வரதராஜுலுவைச் சரியாக அறியாதவர்களுக்கு நூலைப் படிப்பதற்கு முன்பே ஒரு தவறான அபிப்பிராயத்தை உருவாக்கி விடலாம் என்பதை அவர் சிறிது யோசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் வரதராஜுலுவுக்கு நண்பர்கள் பலர்! ஏன், ராஜாஜிகூட அவருடைய நெருங்கிய நண்பர்தான்! வரதராஜுலு காங்கிரசிடம் பிணங்கி, கட்சியிலிருந்தே விலகியிருந்த போதும் ராஜாஜி அவர் வீடு தேடிச் சென்று அவர் விரும்பும் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுமாறு வேண்டியதுண்டு. தமிழ் நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை முன்னின்று நடத்துமாறும் ராஜாஜி அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டதுண்டு.
காந்திஜியே அவரைத் தம் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்தபோதிலும், காந்திஜியின் அடிப்படைக் கோட்பாடான அஹிம்சையை ஏற்காமலேயே வரதராஜுலு நாயுடு காங்கிரசில் நீடித்து வந்திருக்கிறார். இதையெல்லாம்விட முக்கியம், ஹிந்து மஹா சபையின் தலைவர் விநாயக தாமோதர வீர ஸாவர்க்கர் அவர்களுக்கும் நம்பிக்கைக்குரிய நண்பராக விளங்கியவர்தான் நாயுடு! ஜனசங்கத்தை நிறுவிய பெருமைக் குரிய சியாமா பிரஸாத் முகர்ஜி, ஹிந்து மகா சபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே ஆகியோருடன் கருத்தொருமித்து மனமொத்த நட்பு பூண்டவர், நாயுடு.
ஈ.வே.ரா. அவர்களோ, தமது ‘குடியரசு’ இதழில் வரதராஜுலு புதிய கட்சியைத் தொடங்க முற்படுகையில் தாமும் ஒரு தலைவராக நடமாட வேண்டும் என்பதற்காகவே ஒரு கட்சியை அவர் தொடங்குகிறார் என்று அவரது முயற்சிக்கு உள்நோக்கம் கற்பித்தும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவாறு ஏளனம் செய்தும், இகழ்ந்தும் எழுதி மகிழ்ந்தவர். ‘வரது, வரது’ என்று ‘குடியரசி’ல் அவர் எழுதியது நட்புரிமையால் என்பதைவிட அவரைக் கிண்டல் செய்யவே என்பதை எழுதப்பட்ட தொனியில் இருந்தே எளிதில் கண்டுகொண்டு விட முடியும்.
ஹிந்து மஹா சபையில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக வரதராஜுலுவைப் பாழடைந்த மாளிகையில் வவ்வாலாய்த் தலைகீழாகத் தொங்குபவர் என்று வர்ணித்தவர், ஈ.வே.ரா. ‘தேசியமே பேசி, தேசியத்திற்கே உடல் பொருள் ஆவியையும் தத்தம் செய்கிறவர் என்றும், அதுவே எனது மதம் என்றும் தன்னைப் பற்றித் தானே விளம்பரம் செய்துகொண்டு வந்த தோழர் வரதராஜுலு நாயுடு தான் தலைவராகி மகா சபைப் பிரசாரம் நடத்துகிறார்’ என்று ஹிந்து மகாசபை ஏதோ தேசியத்திற்கு விரோதமானது என்பதுபோலக் குற்றம் சாட்டித் தமது குடியரசில் எழுதியவர், ஈ.வே.ரா. என்னதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டாலும் நட்புக்குரிய ஒருவரை இப்படியா தூற்றுவது? இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியே தமது நூலில் பதிவு செய்துள்ள ஆய்வாளர் பழ. அதியமான், பிராமணர், பிராமணர் அல்லாதார் என்கிற பலவீனப்பட்டுப்போன ஒரு பிணக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதில் சில சமயங்களில் கருத்தொருமை கொண்டார் என்பதற்காகவே வரதராஜுலுவை ஈ.வே.ரா.வின் நண்பர் என முத்திரை குத்த எப்படி மனந் துணிந்தார்?
வரதராஜுலு எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது ஹிந்துத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தத் தவறியதுமில்லை, அதனைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்ததுமில்லை. தமது ஹிந்துத்துவக் கோட்பாட்டை வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் உரத்துப் பேசியவர்தான், வரதராஜுலு.
“நாயக்கருடன் (ஈ.வே.ரா.) எனக்கு நீண்ட நெருங்கிய நட்பு இருப்பினும், அவருக்கு நான் சொல்லிக் கொள்வேன்: இலங்கையின் ராவணக் காலத்திலிருந்தும், தில்லியின் ஒளரங்கசீப் பிலிருந்தும், ஜின்னா, நாயக்கர்வரை பலம் வாய்ந்த பலரும் ஹிந்து நாட்டை எதிர்த்தனர். பலன் என்ன, இந்த உலகம் அறியும். ஹிந்து மஹா சபைக்கு எதிரான மிரட்டல் எச்சரிக்கை பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் அவர் (ஈ.வே.ரா.) வெளிப்படையாக ஒரு பெரும் இனத்தை அவமானப்படுத்துவதற்கும், வருத்துவதற்காகவும் நான் வருத்தப் படுகிறேன். ஹிந்து நாகரிகத்தின் பழம் பெருமை, உயர்ந்த தன்மைகள் குறித்து இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் பலமுறை விவாதித்திருக்கிறேன். ஆனால் எப்போதும் அவரை நம் கலாசாரத்தின் மீதான பெருமையை உணரவைக்க என்னால் முடியவில்லை. அவர் எப்போதும் ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார். இன்னும் சொன்னால் எல்லா மதத்தின் மீதும் அவற்றின் கலாசாரத்தின் மீதும் அவர் எதிர் கருத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதெல்லாம் ஏனோ முஸ்லிம்களோடு உறவுகொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக நிற்கிறார். இதனால் ஹிந்து இனம் மற்றும் ஹிந்து மகா சபைக்கு எதிராக அவர் தொடுத்திருக்கும் புனிதமற்ற போரை எதிர்க்கும் புனிதக் கடமை எனக்கு உரியதாகிறது. பிராமணருக்கும், பிராமணரல்லாதாருக்கும் இடையில் பொதுவானதாக எதுவும் இல்லையானால் முஸ்லிம்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இடையில் மட்டும் ஏதாவது பொதுவாக இருக்க முடியுமா என்று ஆச்சர்யப்படுகிறேன். காலம் காலமாகச் சேர்ந்து வந்த அறிவின் பெருக்கத்தில் ஹிந்து கலாசாரம் அடிகொண்டுள்ளது. ஹிந்துக்கள் மகத்தான பழங்காலத்தையும் உறுதியான, பெரிய அகன்ற எதிர்காலத்தையும் கொண்டவர் கள். இந்த மாகாண ஹிந்துக்களை ஒருங்கிணையுமாறும், தார்மிகமான எல்லா வழிகளி லும், நீதிக்கட்சி, மற்றும் முஸ்லிம் லீகின் கோரிக்கைகளை எதிர்க்கவும் அழைக்கிறேன்” என்று மிகவும் கண்ணியமாக ஈ.வே.ரா.வை விமர்சித்தவர், வரதராஜுலு.
பிராமண-பிராமணரல்லாதார் என்ற விவாதம் திராவிட- ஆரிய யுத்தமாக மாற்றப்படுகிறது. இது வரலாற்று அடைப்படை அற்றது. ஹிந்துவை அழிக்க ஹிந்து அல்லாதவர்கள் பயன் படுத்தப்படுகிறார்கள் என்று சுட்டிக் காட்டும் வரதராஜுலு, இன்னொரு இடத்தில் வெளிப் படையாகவே, ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவரான நீதிக் கட்சித் தலைவர் ஸர். ஏ.டி.பன்னீர்செல்வம் ஹிந்துக்களைப் பிளவு படுத்த ஆரியன்-திராவிடன் என்ற புதுக் கொள்கையைக் கண்டுபிடித்துப் பரப்புகிறார் என்று குற்றஞ் சாட்டுகிறார் (சென்னை கோகலே மண்டபத்தில் 1939 ஆகஸ்ட் 29 அன்று நிகழ்த்திய உரை).
“ஹிந்து மதம் சென்னையில் சந்தித்துவரும் மிகப் பெரும் பிரச்சினை பிராமணர்-பிராமணர் அல்லாதார் சச்சரவே. அது இரு தரப்பாருக்கும் நன்மை எதையும் தரவில்லை. ஹிந்து மதத்தின் அழிவை விரும்பும் சில ஹிந்து அல்லாதார் ஹிந்துக்களின் உள்பிரச்சினையான இதை வளர்க்கின்றனர். அரசுப் பணிகளில் பிராமணர் அதிகம் என்ற பிரச்சினை இட ஒதுக்கிட்டுச் சட்டம் வந்தவுடன் குறைந்துவிட்டது. இப்போது வெளியில் தெரியும் பிரச்சினை எதுவுமில்லை” என்று சொல்கிறார், வரதராஜுலு. இத்தனையையும் பதிவு செய்துவிட்டுத்தான் ஹிந்து சமய-சமூகங்களின் பரம வைரியான பெரியாரின் நண்பர் என்று தமது புத்தகத்துக்குப் பெயரிட்டு வாசகன் மனதில் வரதராஜுலுவைப் பற்றி ஒரு தவறான பிம்பம் உருவாக இடமளிக்கிறார், அதியமான்!
1934-ல் சென்னை ராஜதானி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்த தருணத்தில் ராஜாஜியைப் போலவே நீதிக் கட்சித் தலைவர் பொப்பிலி அரசரும் தமது கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு அவரைக் கேட்டுக்கொண்டது வரதராஜுலுவின் ஆளுமையைப் புரிந்து கொள்ள உதவும் பதிவு. காங்கிரஸ் கட்சியின் அப்போதைய பூரண சுயராஜ்யக் கோரிக்கையுடன் ஒத்துப்போக இயலாத வரதராஜுலு காங்கிரசிலிருந்து விலகிவிட்டிருந்த தருணம் அது. அரசியலில் பிராமணரல்லாதாருக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லை என்ற அதிருப்தியினாலும் அன்று காங்கிரஸில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருந்தமையாலும் அவருக்கு நீதிக் கட்சியின்பால் அதன் பிராமணர் அல்லாதார் சார்பிற்காக மட்டுமே அனுதாபம் ஏற்பட்டிருந்தது உண்மையே. ஆனால் அவரது ‘தேசிய’ என்பதைவிடவும் ‘ஹிந்துத்துவ’ உள்ளம் நீதிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட ஒப்பவில்லை. சுயேற்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரிடம் தோற்றுப் போனார்.
அன்றைய காலகட்டத்தில் பிராமணர்-பிராமணர் அல்லாதார் வேற்றுமை உணர்வு தமிழ் நாட்டில் ஆழமாகவே வேரூன்றிவிட்டிருந்தது. வாக்காளர்களில் பிராமணரைக் காட்டிலும் பிராமணர் அல்லாதார் எண்ணிக்கை கூடுதலுங் கூட. ஆனாலும் மக்களிடையே பிராமணர் அல்லாதார் என்ற வகுப்புணர்வைக் காட்டிலும் தேசிய உணர்வே மிகுந்திருந்தமையாலும், அன்று காங்கிரஸ் கட்சியின் மீதே தேசிய முத்திரை அழுத்தமாக விழுந்திருந்ததாலும் சுயேற்சையாக நின்ற வரதராஜுலு தோற்க நேர்ந்தது. தமிழ் நாடு காங்கிரஸில் பிராமணர் ஆதிக்கம் என்பது இயல்பாக நிகழ்ந்த ஒரு அம்சமேயன்றி திட்டமிட்டு, சதி செய்து நடந்த முன்னேற்பாடு அல்ல என்பதற்கு இது ஒரு ஆதாரம் என்பதோடு வரதராஜுலு பிராமணர் அல்லாதார் என்கிற வகுப்புணர்வுள்ளவர் அல்லர் என்பதற்கும் சான்றாக அமைந்து விட்டது. ஏனென்றால் நாயுடுவை அவரது சொந்தத் தொகுதியான சேலத்திலேயே வெற்றி கொண்ட செட்டியாரும் பிராமணரல்லாதாராக இருந்த போதிலும் பிராமணர்-பிராமணரல்லாதார் என்கிற பேத உணர்வுள்ளவர் அல்லர்.
உண்மையில் வரதராஜுலு நாயுடு ஈ.வே.ரா. அவர்களைப் போல எதற்கெடுத்தாலும் பிராமணர் மீது குற்றங் காணும் தீவிர பிராமண துவேஷி அல்லர். 1914 ஆம் ஆண்டு நவம்பர் நாலாம் நாள் ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியான அவரது பிராமணர்களுக்கு ஆதரவான கடிதம், ஒரு பிராமணரால்கூட எழுதியிருக்க முடியாது!
“என்.எஸ். என்ற பெயரில் தங்கள் இதழில் எழுதும் ஒரு கனவான் நம் நாட்டில் பொதுவாக நிலவி வரும் பிராமண எதிர்ப்புணர்வு குறித்து எழுதியிருப்பது அக்டோபர் 31 ஆம் நாள் இதழில் வெளியாகியுள்ளது” என்று தொடங்குகிறது, வரதராஜுலுவின் கடிதம்.
“அப்துர் ரஹ்மான் (இன்னொரு வாசகராக இருக்கலாம்) கருத்தும் இதே போல அமைந்திருப்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் இவர் மிகுந்த கவனத்துடன் பிராமணப் புரோகிதர்கர்களது இயல்பின் மீதே குறி வைத்துள்ளார். உலகிலேயே மிகமிகப் புறக் கணிக்கப்பட்ட, எவருக்குமே ஊறு விளைவிக்காத ஒரு ஜீவன் இருக்குமேயானால் அது இந்தியாவில் உள்ள பிராமணப் புரோகிதராகத்தான் இருக்க முடியும்” என்று எழுதுகிறார், வரதராஜுலு.
“பிராமணப் புரோகிதர்கள் எளிமையிலும் எளிய வாழ்க்கை நடத்தி, காலம் முழுவதும் உயர்ந்த நோக்கங்களுக்காகவே பொழுதைச் செலவிட்டவர்கள். இவர்கள் மட்டும் இல்லையெனில், ஹிந்துக்களாகிய நாம் உலகிலேயே உன்னதமான தத்துவ ஞானம் மிக்க முன்னோர்களின் வழித்தோன்றல்கள் என்கிற பிரக்ஞையை இழந்து, இன்றைக்கு பர்மியர்கள் (தமது தொன்மைச் சிறப்பை இழந்து) வாழ்ந்து வருவதைப்போலவே நாமும் இருந்திருப்போம். மூடத்தனமான புரோகிதம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்று கூறுவது முட்டாள்தனம். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இடைவிடாத அந்நியத் தாக்குதல்களுக்கு உள்ளாகியும் தனது தேசிய மரபை இழக்காத ஹிந்து பாரம்பரியதைத் தமது குழந்தைகள் இழந்துவிடுவார்களோ என்கிற நியாயமான அச்சம் காரணமாகவே அவர்கள் காலப் போக்கிலான மாற்றங்களை விரும்பாமல் இருக்கக் கூடும். மற்றபடி தேசிய வழியில் முன்னேற்றம் காண்பதை அவர்கள் ஆதரிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும், பாரிஸ்டர் களாகவும், டாக்டர்களாகவும் விளங்குபவர்கள் பெரும்பாலும் பிராமணப் புரோகிதர்களின் சந்ததியாரே அல்லவா? எனவே நமது புரோகிதர்கள் மீது யோசனையற்ற விமர்சனங்களை யும், வெறுப்புகளையும் வீச வேண்டாமென்று நமது மேற்கத்தியக் கல்வி பயின்ற இந்தியர் களை வேண்டுகிறேன். நம்முடைய பணி அன்பின் அடிப்படையில் அமைய வேண்டுமே யன்றி வெறுப்பின் மீது அல்ல. திருவாளர் ரஹீமைப் போன்றவர்கள் ஒரு மவுல்வியையோ, பாதிரியாரையோ பார்த்தால் அவர்கள் எந்த அளவுக்குக் காலத்திற்கு ஒவ்வாத மனப்போக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். மேற்கத்தியக் கல்வி முறையின் பெறுமானத்தை ஒரு பிராமணப் புரோகிதருக்குப் புரிய வைத்து, ஒப்புக் கொள்ளவும் வைப்பதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால் ஒரு மவுல்வியையோ, கிறிஸ்தவப் பாதிரியாரையோ ஹிந்து தத்துவஞான மரபை ஒப்புக்கொள்ளச் செய்வதில் பலமுறை தோல்வியே கண்டிருக்கிறேன். பிராமணர்-பிராமணர் அல்லாதார் உணர்வுகளைப் பேசுவது இன்றைக்கு ஒரு ’ஃபாஷனா’கி விட்டிருக்கிறது. நம் நாட்டில், குறிப்பாக நமது மாகாணத்தில் இத்தகைய உணர்வுகள் நிலவுவது அழிவுக்கே அடிகோலும் என்பதுதான் எனது கருத்து. நமது ஒருமித்த முன்னேற்றத்தைக் காணப் பொறாதவர்கள்தான் இப்படி யொரு பேத உணர்வை நமக்குள் புகுத்திவிட்டிருக்கிறார்கள். அதற்கு இணங்க நாமும் நமது வளர்ச்சியைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறோம். பிராமணர் உயர்நிலையை அடைந்தால் அது நல்லதுதான். அவரைப் பிடித்து இழுத்து நமது நிலைக்குத் தள்ளுவது பைத்தியக்காரத்தனம். மாறாக நாமும் அவர் நிலைக்கு உயர முற்படுவதுதான் புத்திசாலித் தனம். அதேசமயம் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாரை உயர் நிலைக்குத் தூக்கி விடும் கடமை உள்ளது. எவரோ சிலர் நம்மை வெறுக்குமாறு அவர்களுக்குத் தவறான புத்திமதி கூறியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் நம்மை நேசிப்பது அவசியம்.”
பிராமணர் அல்லாதார் என்கிற உணர்வுள்ளவர் என்கிற பிம்பம் வாய்த்துள்ள வரதராஜுலு நாயுடு, நீதிக் கட்சி தோன்றும் முன்பே எழுதியுள்ள கடிதம்தான் இது! நீதிக் கட்சி தோன்றிய பிறகோ, அதன் பிராமணரல்லாதாரின் பிரதிநிதி என்கிற தோற்றத்தைக் குலைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் நாடு காங்கிரஸ் நிறுவிய சென்னை மாகாண சங்கம் என்கிற பிராமணர் அல்லாதாருக்கான அமைப்பில் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்தான் வரதராஜுலு. அந்த அமைப்பில் அப்போது உடனிருந்தவர்தான் ஈ.வே.ரா. அவர்களும்!
‘இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு, பிராமணர் – பிராமணர் அல்லாதார் பிரச்சினை தீர்ந்துவிட்டது. இனி பிராமணருடன் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று பிற்காலத்தில் வலியுறுத்தியவர், வரதராஜுலு.
‘ஹிந்து கலாசாரம், தொன்மையான ஆழ்ந்த தத்துவம் ஆகியவற்றை நமக்குப் பாதுகாத்துக் கொடுத்திருப்பவர்கள் பிராமணர்களே’ என்றும் அவர் சிறிதும் தயக்கமின்றி எழுதி வந்திருக்கிறார்.
1925-ல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கட்சி ஏற்கவேண்டும் என்ற தீர்மானத்தை ஈ.வே.ரா. வலியுறுத்தியபோது அதை எதிர்த்தவர், வரதராஜுலு.
காங்கிரசிலிருந்து விலகிய வரதராஜுலு நாயுடு, ஹிந்து மகா சபையில் சேர்ந்தது, இயல்பாக நிகழ்ந்த ஒரு வளர்ச்சியேயன்றி திடீர் மனமாற்றம் அல்ல. தமிழ் நாட்டில் தான் வேரூன்றுவதற்கு அவரது வருகை பேருதவியாக இருக்கும் என்பதால் அவரைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுத் தனது முக்கியத் தலைவர்களுள் ஒருவராக வரித்துக் கொண்டது, ஹிந்து மகா சபை. அகில பாரத ஹிந்து மகா சபையின் பொதுச் செயலாள ராக அவரை நியமித்தது.
வரதராஜுலு நாயுடு மிகக் குறுகிய காலமே ஹிந்து மகா சபையில் இருந்த போதிலும் அங்கு அவர் ஆற்றிய பணி ஆவேசம் மிக்கதாகவே இருந்தது. கடைசியாக அவர் சிறை வாசம் அனுபவித்ததும் ஒரு ஹிந்து மகா சபைக்காரர் என்ற முறையில் பாகல்பூரில் தடையை மீறி மகாசபை மாநாட்டில் கலந்துகொண்டதற்காகத்தான். அந்தச் சிறை வாசம் இரண்டு வாரங்கள் போல மட்டுமே நீடித்தது என்றாலும்!
ஹிந்து மகா சபையிலிருந்து வரதராஜுலு நாயுடு விலக நேர்ந்ததுகூடக் கட்சி நிர்வாகம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தானே யன்றி, கொள்கை வேறுபாட்டால் அல்ல. மீண்டும் அவர் காங்கிரஸில் சேர்ந்த பிறகுங்கூட அவரது ஹிந்துத்துவ உணர்வு மறைந்துவிடவில்லை. காங்கிரஸ் மேடைகளில் வரதராஜுலு நிகழ்த்திய உரைகள் ஒரு ஹிந்துத்துவரின் குரலாகவே ஒலித்தன.
தாழ்த்தப்பட்டோரை ஆதி ஹிந்துக்கள் என்று அழைத்தவர், வரதராஜுலு. ஹிந்து குருகுலங்களையும் நடத்தியவர். பாகிஸ்தான் பிரிவினையை வன்மையாகக் கண்டித்து அகண்ட ஹிந்துஸ்தானத்தை வலியுறுத்தியவர். பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்த ஸாவர்க்கரின் புத்தகம் ‘1857 விடுதலைப் போர்’ தமிழில் வெளிவரவும், ரகசியமாய் விநியோகம் செய்யப்படவும் நிதி உதவி வழங்கியவர். வரதராஜுலு நாயுடுவின் இந்தக் கண்ணுக்குப் புலனாகாத மறுபுறத்தை பழ. அதியமான் மனச்சாட்சிக்கு விரோதமின்றி முழுமையாகப் பதிவு செய்துள்ளார் என்றாலும் ஓர் ஆய்வாளருக்கு இருக்கக் கூடாத மனநிலையுடன் தமது ஹிந்துத்துவ எதிர்ப்புணர்வையும் தம் நூலில் பதிவு செய்து விட்டிருக்கிறார்.
எவ்விதச் சார்புமின்றி விவரங்களைப் பதிவு செய்வதுதான் ஓர் ஆய்வாளருக்குரிய எழுத்து தர்மம். ஆய்வின் இறுதியில் சொந்த விருப்பு வெறுப்புகளற்ற விமர்சனமாக அவர் முடிவுரை எழுதலாம். ஆனால் அந்த விமர்சனமும் தக்க தர்க்க நியாயங்களுடன் அமைய வேண்டும். ஆனால் இதற்கு முரணாக, ஆய்வில் அனுபவம் வாய்ந்த பழ. அதியமான் தமது நூலை எழுதிச் செல்கையில் ஆங்காங்கே ஹிந்துத்துவத்தின் மீது தமக்குள்ள வெறுப்பை விதைத்துக் கொண்டு செல்வது வியப்பூட்டுகிறது.
வ.வே.சு ஐயர் பொறுப்பில் நடந்த சேரன்மாதேவி குருகுல நடைமுறையைக் கண்டித்து வரதராஜுலு நாயுடு ஆர்ப்பரித்து எழுந்ததை அறிந்ததால்தான் (அவருடைய பிரமணர் அல்லாதார் சார்பு நிலைக்காக) அவரது வரலாற்றை ஆய்வு செய்து எழுத முடிவு செய்ததாக வாக்கு மூலம் அளிக்கிறார், பழ. அதியமான். இவ்வளவுக்கும், ‘இந்தப் பாழாய்ப்போன சேரன் மாதேவி குருகுல விவகாரத்தால் அல்லவா பலரையும் இழக்க நேர்ந்தது’ என்று வரதராஜுலுவே ஒருமுறை வருந்த நேரிட்டது. அதையும் அதியமான் பதிவு செய்தே இருக்கிறார். வரதராஜுலு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ சாதனைகள் செய்திருக்க, அவரது மறைவுச் செய்தியைத் தமது விடுதலை நாளிதழில் ‘குருகுலப் போராட்ட வீர்ர் டாக்டர் பி. வரதராஜுலு மறைந்தார்’ என்று அவரது வாழ்கையின் பிரதான அம்சமே பிராமண எதிர்ப்புதான் என்ற எண்ணம் தோன்றுமாறு தலைப்பிட்டு வெளியிட்டார், ஈ.வெ.ரா. இத்தகைய மன அவசத்துடனேயே அதியமானும் இதே நூலில் இன்னொரு இடத்தில் ஒரு ஹிந்து மஹா சபைக்காரரின் வரலாற்றை எழுதத்தான் வேண்டுமா என யோசித்த தமக்கு, ஈ.வே.ரா. அவர்கள், மறைந்த வரதராஜுலு நாயுடுவின் முகத்தை ஆழ்ந்து நோக்கி அவருக்கு விடைகொடுக்கும் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் மனம் நெகிழ்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து நூல் எழுத முடிவு செய்யும் உறுதிப்பாடு ஏற்பட்டதாகத் தமது சார்பு நிலையை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ஒரு புகைப்படம்தான் அவரைத் தமது நூலுக்கு ‘பெரியாரின் நண்பர்’ எனத் தோரணம் கட்டத் தூண்டியது போலும்.
ஓர் அனுபவம் மிக்க ஆய்வாளர் இப்படியொரு தீண்டாமைக் கொள்கையை அனுசரிப்பது எந்த அளவுக்குச் சரி என்பதையும் பழ. அதியமான் யோசிக்க வேண்டும்.
[பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு — பழ. அதியமான். பக்கங்கள்: 479 விலை: ரூ. 375/- காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் 629 001]
நன்றி: ஆழம், ஜூலை, 2012 (கிழக்குப் பதிப்பகம், சென்னை 600 014 வெளியிட்டு வரும் மாத இதழ்)
- அம்மா என்றால்….
- காக்க…. காக்க….
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2
- நினைவுகளின் சுவட்டில் (92)
- ’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’
- ‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்
- வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)
- அம்மாவாகும்வரை……!
- எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
- கோவை இலக்கியச் சந்திப்பு
- நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்
- ‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
- முள்வெளி அத்தியாயம் -16
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)
- உகுயுர் இனக் கதைகள் (சீனா)
- கள்ளக்காதல்
- தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்
- மோட்டுவளை
- சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
- நேற்றைய நினைவுகள் கதை தான்
- தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்
- கங்குல்(நாவல்)
- சிரியாவில் என்ன நடக்கிறது?
- ராஜமௌலியின் “ நான் ஈ “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1
- கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு
- குறிஞ்சிப் பாடல்
- புள்ளியில் விரியும் வானம்
- சுப்புமணியும் சீஜிலும்
- பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்