நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்

This entry is part 12 of 41 in the series 8 ஜூலை 2012

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை ஒன்று போரூரில் இயங்கி வருகிறது என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. சுபம் டிராவல்ஸ் தண்டபாணி வீட்டில் ஒரு கூட்டம் நடந்ததாக அன்பர் ஒருவர் சொன்னார். இடம் பிடிபடவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். ஒரு மாலை நடைப்பயிற்சியில் கண்ணில் பட்டது அந்தச் சுவரொட்டி. மனிதநேயக் குறும்படங்கள் திரையிடல் என்று முகவரி கொடுத்திருந்தார்கள். பொறியியல் நிறுவனம் நடத்தும் செல்வம் அதை ஏற்பாடு செய்திருந்தார். அவரிடம் பெயரும் செல்பேசி எண்ணும் கொடுத்தபிறகு, நிகழ்வு பற்றிய தகவல் எனக்கு வந்தது.

த மு எ ச வின் போரூர் கிளைத் தலைவர் ஞானம் என்னிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். மாதக் கூட்டங்களுக்கு அழைப்பதாக வாக்குறுதி தந்தார். சுற்றி நின்றிருந்தவர்கள் எல்லோரும் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள்.

மாலை ஏழு மணி அளவில் நான்கு குறும்படங்கள் திரையிட்டார்கள். ஒவ்வொரு படம் முடிந்தபின்னும் கேள்வி பதில் செஷன். பல சிறுவர்கள் ஆர்வமாக பதில் சொன்னார்கள். சரியான பதில்களுக்குப் பரிசு – புத்தகங்கள்.

முதல் படம் பிரேமானந்தின் “ அதிசயம் அற்புதம் “ நாசர் நடித்திருந்தார். போலிச் சாமியார்களைப் பற்றியது. ஏறத்தாழ டாக்டர் கோவூர் ரகம். கண்ணை மூடிக்கொண்டு காதால் படிக்கும் சாமியார் கதை. பக்தர்கள் சீட்டில் எழுதியவற்றை கண்ணால் மூடிக் கொண்டு காதால் படிக்கிறார் சாமியார். சூட்சுமம் முதல் சீட்டில் இருக்கிறது. முதல் சீட்டில் இருக்கும் கேள்வி, கேள்வி கேட்ட பக்தருக்கு இரண்டாவதாகப் படிக்கப் படுகிறது. அப்போது முதல் கேள்வி? அது சாமியாரின் செட்டப்பாக கூட்டத்தில் இருக்கும் நபருக்கு முன்கூட்டியே திட்டமிட்டபடிக் கேட்கப்படும் கேள்வி. அவரும் அது சரியெனத் தலையாட்டுவார். சரிபார்க்க சாமியார் சீட்டைப் பிரிக்கும்போது அதில் இருக்கும் கேள்வியைப் படித்து, இரண்டாவதாக வரும் சீட்டிற்கு முதல் சீட்டின் கேள்வியைச் சொல்லி விடுவார். எப்படி டிரிக். நாசரின் குரலிலேயே சொல்லப்படும் கதைக்கு ஏகத்துக்கு வரவேற்பு.

அழகியபெரியவனின் “ நடந்த கதை “ ஏற்கனவே பார்த்த குறும்படம். செருப்பு மறுக்கப்பட்ட கீழ்சாதி இளைஞன் ராணுவத்தில் சேர்ந்து பூட்சுடன் மேல்சாதித் தெருவில் நடைபோடும் புரட்சி வித்து. அதன் பிறகு கீழ்சாதித் தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் செருப்புகள் முளைப்பது கவிதையான முடிவு. இயக்கம் பொன். சுதா.

இசையரசுவின் “ என் கண்ணே “ ஒரு உண்மைச் சம்பவம். படிக்கிற வயதில் மூன்று சக்கர சைக்கிளில் பெடல் கூட எட்டாத சிறுவன் ஒருவன் செல்ல, அவனது விசிலோசைக்கு வண்டி நகருகிறது. மூட்டைகள் ஏற்றப்படுவதும், இறக்கப்படுவதும், பணம் சிறுவன் சட்டைப் பைக்குள் திணிக்கப்படுவதும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விடுகிறது. வழியில் சீருடையுடன் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமியரை ஏக்கத்துடன் பார்க்கு சிறுவனின் ஒற்றை ஷாட். கேமரா பின்னோக்கி பயணிக்கும்போது அதிர்ச்சி காத்திருக்கிறது. சிறுவனின் விசிலோசைக்கு வண்டியைத் தள்ளுவது அவனது கண் தெரியாத அப்பா! அம்மா இல்லை. அதனால் சிறுவனே வேலை செய்ய வேண்டிய துர்பாக்கியம். களம் திரைப்பட இயக்கம் பங்கெடுத்துக் கொண்ட இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ஷாகுல்.

கீகீ என்றொரு படம் பூனைக்குட்டியைப் பற்றியது. பொம்மி கண்டெடுத்த பூனைக்குட்டி. மனிதர்களுக்கே சோறில்லாத ஏழை வீட்டில் பூனைக்குட்டி விரட்டப்படுகிறது. நடுவில், வீட்டு வேலைக்கு, வடநாட்டில் உள்ளவர்களுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர்கள். பொம்மிக்கு மூவாயிரம் பேசி அனுப்பப்படும் தருணத்தில் தடுக்கிறார் அந்த ஊரின் பள்ளிக்கூட ஆசிரியர். அப்படி அனுப்பப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை பற்றி விளக்குகிறார். பொம்மியின் அம்மா தெளிவாகிறார். அடுத்து கோகிலா என்கிற சிறுமியை அனுப்ப ஆயத்தமாகும்போது பொம்மியின் அம்மாவே தடுக்கிறாள். பொம்மி பூனைக்குட்டியை அம்மா பூனையிடம் விட்டுவிட்டு வரும்போது படம் முடிகிறது. சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாகச் சொல்கிறது இந்தப் படம். பிரிக்கப்பட்ட பூனைக்குட்டி ஒரு உருவகம் என்பது எல்லோருக்கும் புரிந்ததா என்பது சந்தேகமே. ஆனாலும் வெகுவாக ரசிக்கப்பட்ட படம் இது.

0

Series Navigationகோவை இலக்கியச் சந்திப்பு‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *