மோட்டுவளை

This entry is part 21 of 41 in the series 8 ஜூலை 2012

நித்ய கல்யாணி
—-
ஒருவருக்கு கஷ்டம் எனில், அவன்/அவ ஆடிய ஆட்டத்திற்கு இருமி இருமிச் சாவான்(ள்), என்னைப் பாடாய் படுத்தியதற்கு கை கால் இழுத்துக் கொண்டு தான் சாவாய் என்று.. ஏன்..? தமிழ் சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி முன்பொருமுறை குமுதத்தில் ஒரு பக்க கதை எழுதினார், “ ஒரு இட்லிக்கார கிழவியிடம் ஒரு ரௌடி ரவுடித்தனம் பண்ணிக் கொண்டேயிருக்க… அவளோ “உங் கால்ல கட்ட முளைக்க…” என்று திட்டுவது மட்டுமே முடிந்தது…
கட்டைல்ல மயிர் தான் முளைக்கும்… கால் எப்படி…?
ஆனால், ஒரு நாள் முளைத்தது…
ஆக்ஸிடெண்டில் அவன் கால் போக கட்டையே காலாக வந்தது.
இப்படியாக கதைகள் படித்த போது, எனக்கும் யாராவது தீங்கு செய்பவர்களை பார்த்தால், தண்டனை கிடைக்கும் என நினைத்ததுண்டு….
தண்டனை கிடைக்காமல் வாழ்பவரைப் பார்க்கும் போது, “போன பிறவியில் அவன் செய்த புண்ணியம் என்று… வியாக்கியானம் வந்தது.
இந்த பாரதி இருக்கானே பாரதி, அவன் என்ன தப்பு செய்தான்..? யானை தூக்கிப்போட்டு மிதித்துக் கொல்ல…? இல்லை நம்ம விவேகானந்தரை பாருங்கோ…. பட்டுனு ஒரு நாள் போயாச்சு… இத்தனைக்கும், அமெரிக்கா சென்றால் கூட “எனதருமை சகோதர சகோதரிகளே…” என்றழைத்தாரே… அவர் என்ன சிலர் மாதிரி அமெரிக்காவிற்கு ஆன்மீகம் பரப்பப் போகிறேன் என்று போய் ஜீன்ஸும், கூலிங்கிளாஸுமாக டண்டணக்கா ஆட்டமா போட்டார்..?
பின் ஏன், இப்படி நடக்குது.
வீட்டின் எல்லா இடத்திலும், வாசல், புழக்கடை, சமையலறை, பெட்ரூம், என்று சுத்தி சுத்தி வந்து எல்லாருக்கும் என்ன வேண்டும் என்று அறிந்து புரிந்து அவர்கள் கேட்கும் முன்னரே செய்தேனே… ஆனால் இப்போது மோட்டுவளை மட்டும் தானே என வானமாய் ஆகிப்போனது.
இந்த கைகள் யார் யார் என்று கேட்டு கேட்டு வகையாய் வக்கனையாய் சமைத்துப் போட்டு , அன்புடன் பரிமாறியதே… அந்த கை இப்போது எனக்காக கூட எதுவும் செய்ய முடியாமல் கிடக்கிறதே..
கால்கள், சிறுவயதில் பாட்டியுடன் திருமால் பிரகாரத்தைச் சுற்றி சுற்றி வந்தது..
பின் அம்மாவிற்காக ஆத்தங்கரைக்கு குடமுடன் ஓடியது…
பின் மும்பையில் வாக்கப்பட்ட போது , கணவன் வேகத்தை கண்டு அதற்கு இணையாய் நடந்தது….
டிபன் பாக்ஸ் மறந்து போன பிள்ளைக்காய் தெருவரை மூச்சிறைத்தாலும் ஓடியதே..
இன்று நான் என்ன நினைக்கிறேன்..? அறை ஓரத்தில் இருக்கும் பாத்ரூம் போய் மலஜலம் கழிக்கத்தானே…
மனசு நினைக்கிறது….
ஆனால், கைகால்கள் அசைவதில்லை…
நெஞ்சத்தொட்டு சொல்லு என்று பேசிய காலம் போய் , மனசு என்பதன் செயல்நிலைப்பாடு மூளையில் என்று புரிந்தது….
மொத்தமாய் , உறவு , நட்பு என்று அதிகமாய் வந்த கூட்டம் குறைந்து குறைந்து இன்று மோட்டுவளையும், மூத்திரடப்பாவும் துணையுமாய்…
கணவன் அன்பானவன்,, தலைமாட்டில் கோதிவிட்டு கையாய் காலாய் இருக்கிறேன் என்றான்…
ஆனால் நிதர்சனம்…?
பர்ஸ் இளைக்க இளைக்க அவன் வேலைக்கு போய் இருக்க வேண்டிய நிர்பந்தம்… இதோ காலை மாலை என இரு ஷிப்டில் நர்சுகள்… அது தான் கட்டுப்படியாகிறது…
அமெரிக்காவில் இருந்து ஸ்கைப்பில் குழந்தைகள், பேரக் குழந்தையுடன்….., பார்த்தல்… அவர்கள் பேச்சைக் கேட்டல்…
அதில் ஒரு பேரப்பிள்ளை ஆனந்த் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே….
“… ஏம் பாட்டி.. நீ தான் குட் கேர்ள் ஆச்சே.. பின்னே ஏன் சாமி இப்படி பண்ணுச்சு…”
அந்த சின்னஞ் சிறுசு அதிலிருந்து சாமி கும்பிடச் சொன்னா , கும்பிடுவதே இல்லையாம்…. நானும் சொல்லிப் பாத்தாசு…
ஆனா, எனக்கே அது ஒரு சிந்தனைய தூண்டுச்சு…
எப்படியாச்சு… இப்படி எனக்கு….
பைக்கில் எப்போவாவது கடைக்கு கூட்டிச் செல்வார். பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு ஏன் காரில் சென்று எரிபொருளை வீணாக்க வேண்டும் என்று… 25கிமீ வேகம் தாண்ட முடியாது ரோடு தான். சிக்னலில் பச்சைக்காக நின்று கொண்டிருந்தோம்.. குறுக்கு சிக்னலில் சிகப்பு விழும் முன் வரும் மஞ்சளில் விரைந்த ஒரு கார் காரணும், எதிரில் இவனது சிக்னல் மஞ்சள் கண்டவுடன் அடுத்து தனக்கு பச்சையென்று, தனது சிக்னல் ஃபோஸ்டில் பச்சைவரும் முன்பே விரைந்து வேகமெடுத்த பைக்காரனும், தங்கள் மோதலை தவிர்க்க இப்படி அப்படி ஆடிய ஆட்டத்தில் எங்கள் பகுதியில் மோதப்பட்டு தூக்கியெறிப்பட்டோம்…
அதில் எல்லோரும் நல்லவேளையாக தப்பித்தார்கள்.
ஆனால் நான்…?
நான் மல்லாக்க தூக்கியெறியப்பட்டு, மீடியன் கம்பிகள் மேல் விழுந்தேனாம்… எனக்கு எதுவும் ஞாபகமில்லை…
ஏதோ மோதியது கூட நினைவில்லை..
நினைவுகள்— மோட்டுவளை பார்த்தது தான்… விதவிதமாக…

முதலில் ஆஸ்பத்திரி வார்டு மோட்டுவளை.… அப்படி இப்படி நகர முடியாமல் கழுத்தில் பிடிமான பிடிப்பினார். மேல்குத்திய பார்வை மட்டும் தான்…
அப்ப அப்ப யாராவது எட்டி என் முகம் பார்க்கும் நேரம் தவிர மோட்டுவளை… மோட்டுவளை தான்….
மேலே வெளீரென்று கொஞ்சம் பளீச்சென்று ஆஸ்பத்திரி மோட்டுவளை…
இரண்டு மூன்று லைட்டுகள் நீண்ட படி, ஆபரேஷன் தியேட்டர் மோட்டுவளை… ( ஆம் இரு மூன்று தடவை ஆப்பரேஷன் பல மாத இடைவெளியில் நடந்தது… )
பின் நகரும் மோட்டுவளை… இந்த அதிர்ஷ்டம் முதலில் ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு போகும் போது கிடைத்தது..
அப்புறம் ஆகாய தரிசனம், ஒரு கட்டடத்திலிருந்து என்னை பிரிதொரு கட்டடத்திற்கு மாற்றும் போது நடந்தது…
கொஞ்சம் இருட்டாய் நிரந்தரமாய் ஆனால் நான் நகர்ந்து கொண்டு அது நகராமல் ஒரு மோட்டுவளை…-அது ஆம்புலன்ஸ் உள் மோட்டுவளை..
அப்புறம் வந்த மோட்டுவளை இப்போ வீட்டின் இந்த அறை மோட்டுவளை…
எனக்கு வாகாய் நீட்டிக்கொண்டு டிவி மாட்டப்பட்டது. ரிமோட் இயக்க முடியா நிலையில் கைகள்… அடுத்தவர் காணும் காட்சியாவும் என் காட்சி போலானது…

என் கணவர் ”டைவிங் பெல் அண்ட் த ஃபட்டர்பிளை” படத்தை போட்டுவிட்டார்… அந்த மாதிரி அக்கறை இந்த மாதிரி விபத்தில் வாழ்வு தொலைத்தவர்களுக்கு என்னைக்கு வருமோ என்று தோன்றியது…
இங்கு தான் விபத்தில் காசு கிடைத்தால் கூட அதை பிடுங்கித் தின்னும் பிணத்திண்ணிகள் கும்பலில் தப்பிப்பதே கடினமே…
ஆனால், அந்த படத்தில் ஒரு கண் இமைப்பு கொண்டு பேசும் முயற்சி எனக்குள் ஒரு உத்வேகத்தைத் தூண்டியது…
கணவன் தலைமாட்டில் படித்த, ”காக்க காக்கா கனகவேல் காக்க….” மெதுவாய் மேனியெங்கும் பரவி இன்னும் வேகம் தந்தது…
விதவிதமான பாடல்கள் விதவிதமான சக்தியை தூண்டியது…
”குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா.. குறையொன்றும் இல்லைக் கண்ணா..… “ எம் எஸ் அம்மா தன் மடியில் என் தலை தாங்கி எனக்காய் பாடியது போலிருந்தது… முதலாய் விழிகள் ஓரத்தில் நீர்த்துளிகள்…
வந்து பார்த்தவர் அமெரிக்க ஜெர்மானியர் தான்…
பாடல்கள் கேட்க உற்சாகப்படுத்தினார்…
அணுஅணுவாக சித்ரவதை அனுபவித்தாலும், அணுஅணுவாக சித்திரம் போல் சிரிக்க கற்றுக் கொண்டு வருகிறேன்.. –அந்த படம் பார்த்த நாள் முதலாய்…
பின் ஸ்டிவன் காஃப்கின்ஸ் கேள்விபட்டு ஒரு நாள் நானும் ஒரு நாற்காலில் மிண்ணனு சாதனங்களுடன் வாழ்வில் வாழ்ந்து பார்க்க ஆசை….
அதன் முன்னோட்டமாகத்தான் நான் சொல்ல சொல்ல இந்த சிறிய கதை இன்னொரு ஜீவன் மூலமாக…
மோட்டுவளையே வானம் என்றதால் என் கண்வன் அதில் நட்சத்திரங்களை ஒட்டினான்… ரசித்தேன்..
பின்னொரு நாள் பறவைகளை தொங்க விட்டான், விழி சுருக்க அவன் புரிந்து அவற்றை கூண்டிலிருந்து வெளியே விடுவித்தான்…
அகத்தின் அழகு முகத்தில் இருக்கு என்பார்கள்… என் முக அழகு அருமை தான், அக அழகும்… ஆனால், காய்கறியாய் வாழ்வு நிலை.. (வெஜிடபிள் ஸ்டேட்டஸ்)..
பூவையர் என்றதால், பூவாகி இப்போது காயாகினேனா..?
எறும்புக்கு உணவென்றே, ஹீஸ்டன் போய் கூட அரிசிகோலம் இட்டேன்…
வருந்தும் மனதுகள் என்றே கடிந்து பேசியதில்லை..
சமையல் ரூமூக்குள் மாமியார் போட்ட தடையை மீறாமல், குடும்ப அமைதி காட்டினேன்..
வேலை பார்த்த இடத்தில் கேட்டுப் பாருங்கள்…
எங்கள் வீதியில் அருகே அயர்ன்காரரிடம்…
வேலைக்காரி பால்காரரிடம்,
காம்பவுண்ட் செக்யூரிட்டி… என யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்…
அவளுக்கா இப்படி… பாவப்பட்ட பொண்ணு… என்ன திரிஷ்டியோ, முன்வினையோ என்பார்கள்..
என் மனதுள் ஒரு கேள்வி விடை தேடி…
”..என்ன தவறு செய்தேன்…?” இப்படியாக..?
பிளீஸ் , அது மட்டும் தெரிஞ்சால் போதும்…
—————

Series Navigationதமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
author

நித்ய கல்யாணி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *