ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
தமிழ்நாடு சமூக நல வாரியம்
திருமதி .அம்புஜம்மாள் தொடங்கி திருமதி சரோஜினி வரதப்பன், இன்னும் பலர் அதன் தலைமைப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் பல. அதனால்தான் அவர்கள் இன்றும் வரலாற்றில் நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
திருமதி. அம்புஜம்மாள் அண்ணல் காந்திஜியின் மகள். ஆம் அப்படித்தன் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பெற்ற தந்தையின் பெயர் திரு சீனிவாசன் ஆகும் ஆனாலும் தனக்கு தந்தைகள் இருவர் என்று கூறி காந்திஜி அவர்களையும் சேர்த்துக் கொண்டு பேசுவார்கள். அவர்களின் நிறுவனத்தின் பெயர் கூட சீனிவாசகாந்தி நிலையம் என்ற பெயரைத் தாங்கியுள்ளது. அந்தளவு காந்திஜியின் மேல் பற்று கொண்டிருந்தவர். இவரின் பிள்ளைப் பருவத்தை அவசியம் நாம் பார்க்க வேண்டும்
இவர்கள் குடும்பம் சாதாரணமானதல்ல. கல்வி, பொருளாதார நிலை எல்லாவற்றிலும் உயர்ந்த ஓர் பிராமணக் குடும்பம். மயிலாப்பூரில் இருக்கும் லேடி சிவசாமிஅய்யர் உயர்நிலைப்பள்ளியும் திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியும் இக்குடும்பதினர் முயற்சியில் தோன்றியவை. ஆயினும் மூட நம்பிக்கை கொண்டவர்கள். அம்புஜம் மூன்றவது பெண்ணாகப் பிறந்தது முதல் குறை.. பிறந்த மூன்றும் பெண்குழந்தைகள். அன்பும் ஆதரவும் கிடைக்க வில்லை. தோல்வியாதி இருந்ததால் பிறர் அருகில் வரமாட்டார்கள். ஒரு அக்கா இறக்கவும் ராசியில்லாதவள் என்ற வசைப்பாட்டு வேறு. வீட்டின் வெறுப்பில் அவர்களைக் கல்விக் கூடம் கூட அனுப்பாமல் செய்தது. இப்படியும் ஒரு குடும்பமா என்று நினைக்கின்றீர்களா? அவரது தந்தை பிரபல நீதிபதி.
அம்புஜத்தின் தோல் வியாதிக்கு சென்னை வெய்யில் என்பது தெரியவும் பங்களூர் அனுப்பி வைக்கப்பட்டு சரியாகவும் கொண்டு வரப்பட்டார். வெகு நாட்கள் கழித்து ஓர் தம்பி பிறந்தான் ஆனால் அந்தத் தம்பியைக் கொஞ்சக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. முதலில் கல்வி மறுக்கப்பட்டாலும் வீட்டில் இருந்து கொண்டு படிக்க அனுமதி கிடைத்தது.
ராஜாஜி அவர்கள் வெளி நாடு சென்று திரும்பி வந்த பொழுது இவர்கள் வீட்டில் வரவழைக்கப்பட்டு விருந்து கொடுத்தனர். கடல் கடந்து செல்வது பிராமண ஆச்சாரத்தின்படி குற்றம். எனவே அப்படிப்பட்ட ஓர் பிராமணனைக் கூப்பிட்டு விருந்து கொடுத்ததால் அம்புஜத்தின் பாட்டி இனி ஒரு டம்ப்ளர் தண்ணீர் கூட அந்த வீட்டில் குடிக்க மாட்டேன் என்று வீட்டைவிட்டுச் சென்று விட்டார். இது அம்புஜத்தின் மனத்தில் சாதி, மூடப்பழக்கம் இவைகளின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.
இதனை எழுதும் பொழுது என் பிள்ளைப் பருவம் நினைவிற்கு வருகின்றது. சிறையில் பல இனத்தவருடன் வாழ்ந்தது, உணவு சமைத்து உண்டது இதனால் என் தந்தையும் பிராமணர்களுக்கு ஆகாதவரானார். ஐந்து ஆண்டுகள் கழித்து மனைவியையும் மகளையும் பார்க்க வந்த என் தந்தை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பப்பட்டார். என் மனத்தில் சாதி மீது வெறுப்பை முதலில் விதைத்த அனுபவம் அது.
உலக வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும். பிறப்பிலே எவனும் உயர்ந்தவன் என்றோ தாழ்ந்தவன் என்றோ கிடையாது. ஏழைகளின் உழைப்பிலே வாழும் கூட்டம் ஒருபுறம், அவர்களை ஏணியாக வைத்துக் கொண்டு தன்னை வளர்த்து வரும் கூட்டம் இன்னொருபுறம். பிரிவினைகள் மனித நேயத்தை அழிக்கும் ஓர் விஷப்பூச்சி. அது எந்த தோற்றத்தில் வந்தாலும் சரி. மாற்றுக் கருத்துக்கள் இருக்கும். இது என் கருத்து. அவ்வளவுதான்.
அம்புஜம்மாள்: வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் அவர்களைச் செதுக்கியது.
ஓர் மனிதனின் வளர்ச்சி அவன் கருவாய் உருவாகவும் தொடங்கிவிடுகின்றது. குழந்தைதானே என நினைத்துப் பெற்றோர்கள் அதன் முன் பேசுவதும், சண்டை போடுவதும் இன்னும் பல செயல்கள் அதன் முன்னால் நடப்பது எல்லாம் குழந்தையைப் பாதிக்கின்றது. இன்று உலகத்தின் போக்கு பல விஷயங்களில் ஆரோக்கியமானதாக இல்லை. வீட்டிலாவது பெற்றோர்கள் அக்கறை எடுத்து நடந்து கொள்ளல் வேண்டும். அவர்களுக்கும் இப்பொழுது கவனச் சிதறல்கள்.
வரலாற்று நாயகிகளின் வரலாற்றைப் பார்க்கும் பொழுது அவர்களின் பிள்ளைப் பருவச் சூழ்நிலை அவர்களை எப்படி பாதித்திருக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் பிள்ளைகளை மட்டும் குறை கூறுதல் சரியல்ல. ஒவ்வொன்றையும் விமர்சிக்கின்றோம். தவறுகள் வளரும் பொழுது அதனைத் தடுக்க எத்தனை பேர்கள் முன் வந்திருக்கின்றோம். உணவு வேண்டுமென்றால் சமைக்க வேண்டும். சமைக்கும் விதம் எழுதினால் சோறு கிடைத்துவிடுமா? இன்று பேச்சும் எழுத்தும் அதிகமாகி விட்டது. நல்லவர்கள், அறிஞர்கள் சிலராவது சேர்ந்து, நடக்கும் குற்றங்களைக் களைய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முயல்கின்றோமா ?
நல்லது செய்ய வேண்டும் என நினைத்து ஆக்க பூர்வமான செயல்களில் இறங்கினாலும் நம் முயற்சிகளை முடக்க இப்பொழுது தீய சக்திகள் மலிந்து விட்டன. தவறைச் சுட்டிக் காட்டிய ஒருவனை திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பாதையில் கொன்றதைச் செய்தியாகப் பார்க்கின்றோம். இருக்கும் தைரியமும் போய்விடும். பிரிவினை வாதங்களை விடுத்து ஒன்றுபடும் முயற்சியை முதலில் எடுக்க வேண்டும். அதுவும் முடியுமா? பழங்கதை பேசி, பிறர்மேல் பழி சுமத்தி ஒன்றைப் பலவாக்கிக் கொண்டிருக்கின்றோம். நல்ல இயக்கங்கள் தோன்றினாலும் காலப் போக்கில் அவைகளும் வியாபார ஸ்தலமாவதைக் காண்கின்றோம். நல்ல மனம் படைத்தவர்கள் இன்னும் இருக்கின்றார்கள். திகைத்துப் போய் அயர்ந்து இருக்கின்றார்கள். தீய சக்தி ஓங்கிவிட்டது. நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் காணும் காட்சிகள் அனலாய்ச் சுடுகின்றன. இந்த உலகின் எதிர்காலம் என்ன?
நாம் இப்பொழுது நம் மதிப்பிற்குரிய அம்புஜம்மாளைக் காணலாம்.
அவரது அக்கா இறந்தார். அதற்கு அவரை ராசியில்லாதவர் என்று பழித்தனர். வெகு நாட்கள் கழித்து பிறந்த தம்பியைக் கொஞ்சி மகிழ்வதில் கூட இவர்களுக்கு பங்கில்லை. தனிமைப் படுத்தப்பட்டார். பன்னிரண்டு வயதில் திருமணம். பதினைந்து வயதில் குழந்தை. இதுதான் அன்றைய வாழ்க்கை.
அவர்கள் வாழ்க்கையிலும் மாறுதல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட ஆரம்பித்தன. வீட்டுக்கருகில் இருந்த ஓர் மாதர் சங்கத்தில் சேர்ந்தார். உலகப் போர் நடக்கும் பொழுது ஜவான்களுக்கு துணிகள், மருந்துகள் சேகரித்து அனுப்பும் முயற்சியில் இவரும் சேர்ந்து கொண்டார்.
இதே போன்று கார்கில் போர் நடக்கும் பொழுது நாங்கள் உதவிகள் செய்திருக் கின்றோம். அம்புஜம்மாளுக்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது. முதலில் காச நோய் வந்தது. தம்பியும் அடிபட்டு ஊனமானான். பெற்றவளும் இதயநோயால் படுத்துவிட்டார்கள் அக்குடும்பத்திற்கு ஓர் ஆறுதல்மட்டும் கிடைத்தது. தந்தை அட்வொகேட் ஜெனெரலானார்
அம்புஜம்மாளின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படக் காரணமாயிருந்த ஓர் நிகழ்வு நடந்தது. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்திஜி விடுதலைப் போராட்டத்தைத் துவக்கியிருந்தார். சென்னைக்கு வந்த பொழுது இவர்கள் வீட்டில்தான் தங்கினார். அவருடைய எளிமை, அன்பு, கனிவான பேச்சு அம்புஜம்மாளைக் கவர்ந்தது. சமுதாய அக்கரையையும் அதன்மேன்மைக்குப் பணிசெய்யவும் விதையூன்றப்பட்டது.
மேலும் அவர்களைச் சமுதாயத்தில் நெருங்க வைக்க இரு கசப்பு சம்பவங்கள் நடந்தன. இந்தியர்களுக்கு சுயாட்சி என்ற போராட்டத்தைத் தொடக்கிய அன்னிபெசண்ட் அம்மையாரை பிரிட்டீசாரால் கைது செய்ய முயன்ற பொழுது வீட்டுக் காவலில் வைக்க அம்புஜம்மாளின் தந்தைதான் ஆலோசனை கூறினார்.
மாதர் சங்கப் பெண்மணிகள் சேர்ந்து காலையில் பக்திபாடல்களைப் பாடிக்கொண்டு சுற்றி வருவர். பக்திப் பாடலுடன் தேசிய விடுதலைப் பாடல்களும் பாடப்பட்ட பொழுது அந்தப் பெண்களைக் கைது செய்தனர். அவர்களில் ஒருவரான அம்மையாரை மட்டும் பெரிய இடத்துப் பெண் என்று கைது செய்யவில்லை. இந்த சலுகையை வெறுத்தார்.
இப்பொழுது நடப்பதென்ன ? பெரியவர்களின் பெயரைச் சொல்லியே எத்தனை மோசடிகள் நடக்கின்றன. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமான தந்தையின் மேல் கோபம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். சிற்றப்பா வீட்டில் தங்கினார்.
இதுவரை எங்கும் சொல்லாத எழுதாத ஒரு நிகழ்வை இங்கு பதிய விரும்புகின்றேன்
என் தந்தை ஓர் சுதந்திரப் போராட்டக்காரர். மும்முறை சிறை சென்றவர். பல மொழிகள் தெரியும். எனக்குப் பல கலைகள் கற்றுக் கொடுத்தவர். என் துணிச்சலுக்கும் சுதந்திர வாழ்க்கைக்கும் துணை நின்றவர். பிள்ளைப் பருவ முதல் மிகப் பெரியவர்களை இலக்கிய மேதைகளை, கல்கி போன்ற கதாசிரியர்களை அறிமுகப் படுத்திவைத்தவர். எங்கு சென்றாலும் கூட்டிச் சென்று உலகைக் காட்டியவர். கதரைத் தவிர எதுவும் உடுத்தாதவர். எளிமையைப் போதித்தவர். அவர் ஓர் குற்றம் புரிந்தார். நாங்கள் எட்டய புரத்தில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்த காலம். கடை மூடவும் கட்சிக் காரர்கள் வருவார்கள் கூடிப் பேசுவார்கள். எங்கள் வீடும் கடையும் சேர்ந்திருக்கும். இடையில் உள்ள அறையில் தான் புத்தகங்கள் வைக்கப் பட்டிருந்தன. ஓர் இரவில் புத்தகம் எடுக்கச் சென்ற பொழுது தற்செயலாக நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கே நாட்டு நிலவரம் மட்டும் பேசிக் கொண்டிருக்கவில்லை. குடித்துக் கொண்டிருந்தார்கள்
கதராடை கையால் நூற்று நெய்யப்பட்டு வருவது. உழைப்பின் அடையாளம் என்று மதித்தேன். அதை உடுத்தியவர்கள், காந்திஜியின் பெயரைச் சொல்லுகின்றவர்கள் குடிப்பதா? கோபமும் வெறுப்பும் வந்தது. என்னால் வீட்டை விட்டுப் போக முடியவில்லை. ஆனால் பெற்றவர் மீது கோபம், பேசுவதை நிறுத்தினேன். பல முறை காரணம் கேட்டார். ஒரு நாள் சொல்லிவிட்டேன். அன்று முதல் அவர் குடிப்பதை விட்டாலும் என் மனத்தில் காயம் தங்கிவிட்டது. அரசியலில் போலி முகமும் உண்டு என்பதைப் புரிந்து கொண்ட முதல் நாள் அது.
அரசியல் படிக்கப்பிடிக்கும். தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டு. ஆனால் ஒரு நாளும் அரசியல் வாழ்க்கையில் சேரக்கூடாது என்ற வைராக்கியம் பிறந்தது. இது போன்று இன்னும் சில சம்பவங்கள் என்னைக் காத்தது..
வீட்டைவிட்டு வெளியில் வந்த அம்புஜம்மாள் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டார். கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி மறுப்பு என்று போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
அதன் பின்னர் அவரே காங்கிரஸ் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து நடத்த ஆரம்பித்தார். கூட்டத்தில் கலப்பது என்பதற்கும் ஏற்பாடுகள் செய்து மற்றவர்களைக் கலந்து கொள்ளும்படி செய்வது என்பதும் வேறு. ( organising capacity ). இத்திறன் இருந்ததால் தமிழகத்தில் கூட்டங்களைக் கூட்டி விழிப்புணார்வை ஏற்படுத்தி தங்கள் சமுதாயத்திற்கு தொண்டு நிறுவனங்கள அமைத்துக் கொள்ளும் தகுதியை வளர்த்தார். பம்பாய் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற பொழுது காந்திஜியுடன் இன்னும் நெருங்கிப் பழக முடிந்தது. அம்புஜவல்லி என்ற பெயரை அம்புஜம் என்று மாற்றியவர் காந்திஜி. காந்திஜிக்கு அருகில் இருந்து விசிறிக் கொண்டே இருப்பார். அப்பொழுது காந்திஜி மற்றவர்களுடன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார். காந்திஜியின் தாக்கம் அவரிடம் நிறைய இருந்தது. திரும்பி வந்த பின்னரும் வார்தாவிற்கு அம்புஜம்மாளை அழைத்தார் காந்திஜி. ஆனால் அவருடைய தந்தை அனுப்ப மறுத்தார். உடனே உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்தார்.
இந்த இடத்திலும் என் சொந்த அனுபவம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். என் பள்ளித் தோழி பெரியவளானதும் அவர்கள் வீட்டில் அவளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு உண்ணா விரதம் இருந்தேன். அவளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி உட்கார்ந்து விட்டேன். ஒப்புதல் கிடைக்கும் வரை என் உண்ணா விரதப் போராட்டம் நீடித்தது. அதுதான் என்னுடைய முதல் உண்ணா விரதப் போராட்டம். தொடர்ந்து என் வாழ்க்கையில் பல முறை இருந்தேன். ஆம் என் பணிக்களத்தில். வீட்டில் அல்ல. தொடர்களில் அந்த நிகழ்வுகளும் வரும்.
எங்கள் காலத்தில் காந்திஜியால் உண்ணாவிரதமும் சத்தியாகிரகப் போராட்டமும் மக்கள் மனத்தை ஈர்த்த செயல்கள். எங்கோ இருந்த காந்திஜியால் இந்தியாவின் ஓர் மூலையில் இருக்கும் குக்கிராம மக்களையும் சின்னஞ்சிறு சிறுவர்களையும் அவர் வழியில் செல்ல வைத்தது. காந்திஜியின் இயக்கம் ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்தது. பிரிவினைவாதமல்ல.
அம்புஜமாளின் தந்தை பின்னர் அனுமதி வழங்க அவர் வார்தா சென்றார். அவருடைய தந்தை மரிக்கவும் சென்னைக்கு வந்தார். காந்திஜியின் அறிவுரைப்படி ஓர் இல்லம் தொடங்கினார். சகோதரனின் இடத்தில் கையில் இருக்கும் பணம் கொண்டு ஆரம்பித்த நிறுவனம்தான் சீனிவாசகாந்தி நிலையம். ஆதரவற்றவர்களுக்குக் கல்வி, தொழில்கல்வி கற்றுக் கொடுக்கும் நிறுவனமாக வளர்ந்தது.
இத்தகைய சிறந்த பெண்மணி தமிழ்நாடு சமூக நல வாரியத்தில் ஏழு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
மாநில வாரியம் மத்திய வாரியத்தின் கிளையாகும். எல்லா மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் இந்த வாரியமும் மகளிர் நலத்துறையுடன் இணைக்கப்பட்டது. பின்னர் அதன் தலைவி நியமனத்தாலும், அதன் செயலாளர் மகளிர் நலத்துறை இயக்குனர் என்றும் அமைக்கப்பட்டது. மாவட்டங்களிலும் ஓர் நியமனத் தலைவி இருப்பார். அந்த மாவட்ட மகளிர் நல அதிகாரி அதன் செயலாளராவார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தி லிருந்தும் பஞ்சாயத்து தலைவர்களால் நியமிக்கப்பட்ட ஓர் பெண் பிரதிநிதி இதன் அங்கத்தினராவார். அந்தந்த மாவட்டங்களின் தேவைகள், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் பணிகளின் முன்னேற்றம் இவைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும்.
இந்த இடத்தில் ஓர் உண்மை சொல்ல வேண்டும். மாநில வாரியத்தைப் போல் மாவட்ட அமைப்புகள் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டன என்று கூற மாட்டேன். அங்கே பணியாற்றும் மாவட்ட அதிகாரியுடன் அந்தத் தலைவிக்கும் உள்ள தொடர்பின் வலிமையைப் பொறுத்து அதன் இயக்கமும் அமையும்.
மாநில வாரியத்தில் சிறப்பு உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள். மாநில அளவில் திட்டங்கள் ஆய்வு செய்யப்படும்.
வடஆற்காடு மாவட்ட அதிகாரியாக நான் இருந்த பொழுது மாவட்ட அளவில் ஓர் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கு திருமதி அம்புஜம்மாள், திருமதி சரோஜினி வரதப்பன் வந்திருந்தனர். அப்பொழுது இயக்குனராக இருந்த மிஸ். ரமேஷ், ஐ.ஏ. எஸ் அவர்களும் வந்திருந்தார். மாவட்டத்தின் தலைவியின் பெயர் திருமதி பங்கஜம் ஆவார். மாவட்ட ஆட்சியாளரின் மனைவி திருமதி பானுமதி அவர்களும் வந்து கலந்து கொண்டார். எப்பொழுதும் மாவாட்டப் பணிகளில் மாவட்ட ஆட்சியாளின் மனைவியையும் பங்கு கொள்ள வைப்போம். இந்த அமைப்பால் பிரச்சனைகள் ஏற்படும்பொழுது ஆட்சி யாளரிடம் தகவல் சீக்கிரம் போய் பிரச்சனைகளுக்கு விடிவு பிறக்கும். இந்த ஒருங்கிணைப்பு முறை மிகச் சிறந்த அளவில் உதவி செய்தது என்பதை மறத்தல் முடியாது.
இது போன்று ஏற்பாடு செய்யப்படும் சிறப்புக் கூட்டங்களில் மாவட்டம் முழுவதும் நியமிகப்பட்ட பெண்கள் மட்டுமல்ல பல மகளிர் மன்றக் கன்வீனர்களும் கலந்து கொள்வர். இதற்கு அரசு நிதி உதவி கிடையாது. பந்தல் அலங்காரம் போன்றவைகள் கிடையாது. ஓர் அரங்கம் வேண்டும். ஏதாவது ஓர் இடத்தை இலவசமாகப் பெறுவோம். மைக், மாலைகள் இவைகளுக்குச் செலவு கொஞ்சம்தான். சாப்பாட்டுக் கடைகூட வைக்க மாட்டோம். இந்தச் செலவை ஏதாவது ஓர் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். அரிமா சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்பின் கிளைகளையும் சேர்த்துக் கொள்வோம்.
ஒருங்கிணைப்பின் ஒற்றுமையைக் காணலாம்.
எக்காரியமும் ஒன்றுபட்டுச் செய்யும் பொழுது அது சக்தி வாயந்ததாக இருக்கும். தலைமையில் இருப்பவர்க்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது. நேர்மையும் இருத்தல் வேண்டும்.
திருமதி அம்புஜம்மாள் அதிகம் படிக்காதவர். ஆனால் பின்னர் அவராகக் கற்றுக் கொண்டது நிறைய. காந்திஜியின் அறிவுரையின்படி மொழி பெயர்ப்பு நூல்கள் எழுதினார். பத்மஶ்ரீ பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் ஓர் வேலையில் கவனமாக இருக்கும் பொழுது பார்த்தால் அவரது வேகம் தெரியும். அனதாரவாய் வருபவரிடம் முதலில் கேள்விகள் கேட்காமல் உணவளித்து இருக்க இடமளித்து வந்தவரின் நிலை அமைதியான பின்தான் பிரச்சனைகளைக் கேட்கச் சொல்வார். அலுவலக அதிகாரி போல் அங்கே செயல்படக் கூடாது. அன்பு அன்னையாய் இருக்க வேண்டும்.
காந்தி கிராமத்தில் சவுந்திரம் அம்மாவிடம் பயிற்சி பெற்றேன். திருமதி அம்புஜம்மாள், திருமதி சரோஜினி வரதப்பன் ஆகியோரிடம் பணியாற்றினேன். வழிகாட்டி என்னைச் செயல்படுத்தியவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள். சென்னையில் இருக்கும் காலங்களில் எங்களுக்கு அறிவுரை கூற வந்தவர்கள் திருமதி துர்காபாய் தேஷ்முக்கும் திருமதி முத்துலட்சுமி ரெட்டியும் ஆவார்கள். வரலாற்றுப் புத்தகங்களில் பார்க்கின்றோம். நானோ அந்த வரலாற்று நாயகிகள் வாழ்ந்த காலத்தில் இருந்து நேரில் பார்த்தவள். அந்தச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற பெண்களில் நானும் ஒருத்தி.
தொண்டு நிறுவனங்களில் பல அரசு மான்யம் பெற்று நடைபெறும். அவைகளை அரசுப் பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். பல திட்டங்கள் வாரியத்திடம் மான்யம் பெற்று நடக்கும். அதற்கு வாரியத்தில் பணியாற்று கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள். பெரியவர்கள் வழி காட்டி, ஆலோசனைகள் வழங்குவார்கள். இன்னும் பல தொண்டு நிறுவன்ங்கள் அரசிலிருந்தோ அல்லது வாரியத்திலிருந்தோ நிதி உதவி எதுவும் பெறாமல் அவர்கள் சுயமாக ஏற்பாடுகள் செய்து கொண்டு நிறுவனங்களை நடத்து வார்கள். ஆனாலும் வாரியத்துடன் இணைந்திருப்பார்கள்..
அடுத்து திருமதி. சரோஜினி வரதப்பன் அவர்களைப் பற்றியும் செல்வி பார்கவி பற்றியும் நாம் பார்க்கலாம். அத்துடன் சில தொண்டு நிறுவனங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
“தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் தீயதுதான் மிஞ்சும். மனிதர்களே நீங்கள் சகோதரர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்கிறீர்கள் ? முகத்தோற்றத்தை பார்த்துக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்பு சொல்”
பைபிள்
தொடரும்.
- அம்மா என்றால்….
- காக்க…. காக்க….
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2
- நினைவுகளின் சுவட்டில் (92)
- ’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’
- ‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்
- வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)
- அம்மாவாகும்வரை……!
- எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
- கோவை இலக்கியச் சந்திப்பு
- நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்
- ‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
- முள்வெளி அத்தியாயம் -16
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)
- உகுயுர் இனக் கதைகள் (சீனா)
- கள்ளக்காதல்
- தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்
- மோட்டுவளை
- சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
- நேற்றைய நினைவுகள் கதை தான்
- தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்
- கங்குல்(நாவல்)
- சிரியாவில் என்ன நடக்கிறது?
- ராஜமௌலியின் “ நான் ஈ “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1
- கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு
- குறிஞ்சிப் பாடல்
- புள்ளியில் விரியும் வானம்
- சுப்புமணியும் சீஜிலும்
- பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்