கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’

This entry is part 13 of 35 in the series 29 ஜூலை 2012

மரபுக்கவிதைகள் 1950களில் அமோகமாக வளர்ச்சியுற்றது. பாரதியின் தாசனான பாவேந்தர் தனது விருத்தப் பாக்களால் தனது குருநாதரைவிட சொல்லாட்சி, கவிநயம் காரணமாய் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தார். அவரைப் பின்பற்றி ஒரு இளைஞர் பட்டாளமே அவரது பாணியில் எழுதிக் குவித்தார்கள். அவர்களை ‘பொன்னி’ இலக்கிய இதழ் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்று தலைப்பிட்டு அறிமுப்படுத்தியது. கவிஞர் வாணிதாசனும், மு.அண்ணாமலையும், பொன்னடியானும், பெரி.சிவனடியானும் மற்றும் பலரும் அதன்மூலம் பிரபலமானார்கள். அந்த பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர்களில் இன்னும் சிலர் அதே பாணியில் இன்றும் எழுதி பாவேந்தரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவிஞர்களில ஒருவர் கவிஞர் அருகாவூர்.ஆதிராஜ் அவர்கள். அவர் எழுதியுள்ள குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’ பாவேந்தரது கவிதைகளை நினைவூட்டுகிறது.

‘குறத்தியின் காதல்’ தொடக்கமே எளிய சந்த நடையில், கும்மி மெட்டில் நெஞ்சைக் கவர்ந்து தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவது கவிஞருக்கு முதல் வெற்றி. பாவேந்தரின் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ போல இயற்கை எழிலை முன்னிறுத்தி,

‘ஊருக்கு மேற்கில் உயர்ந்தமலை -அதன்
உச்சியைப் பார்த்தவர் யாருமில்லை! – கீழே
பூரித் தடர்ந்த பெருங்காடு உள்ளே
போகத் திரும்பப் பெரும்பாடு’ – என்று கும்மாளி இட்டுத் தொடங்குகிறது குறுங்காவியம்.

கதை நமக்குப் பழக்கமான கிராமீயக் காதல்தான்! கதை மாந்தர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்
குடியினர். அவர்களின் தலைவன் ஒரு புலியைக் கொன்று வருபவனுக்கே தன் மகள் வள்ளியைக் கொடுப்பதாக
அறிவித்திருப்பவன். வள்ளியைக் கைப்பிடிக்க நல்லவனான குப்பனும் தீய பண்புகளின் உருவான முத்தையனும்
போட்டி இடுகிறார்கள். வள்ளியும் குப்பனும் காதலர்கள். புலி தேடிப் புறப்பட்ட குப்பனை முத்தையனின் வஞ்சகம்
வீழ்த்துகிறது. குப்பனைத் தேடிப் புறப்படுகிறாள் வள்ளி. அவளது காதல் நிறைவேறுகிறதா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

இயற்கைக் காட்சிகளை கவிஞர் வருணிக்கும் அழகை ரசிப்பதற்காகவே இதனைப் படிக்க வேண்டும்.
மலை,காடு,ஆறு மற்றும் இயற்கை நிகழ்வுகள் பற்றிய வருணனைகள், கவிஞர் நம்மையும் உடன் அழைத்துச் சென்று காட்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. குறவர் வசிப்பிடங்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் ஊடே காட்சிப்படுத்துகிறார்.

ஆங்காங்கே பளிச்சிடும் சமூக சீர்திருத்தக் கருத்துகளும் கருதத் தக்கன.

‘எண்ணங்கள் வேறாகிச் சாதிகளாய் – இங்கு
எத்தனை சண்டைகள் நாட்டினிலே – மலர்
வண்ணங்கள் வேறுதான் லட்சியமோ – ஒன்று
வாசம் பொழிந்திடும் காட்டினிலே’ – போன்ற சிந்தனைகள் இதமளிப்பவை.

கதை முடிவில் குப்பனும், வள்ளியும் ஒன்று சேரும் வரை காவியச்சுவையுடன் வளர்ந்த குறுங்காவியம் பின்னர் ஜைன மதப்பிரசாரமாக மாறி விட்டது இலக்கியச் சுவைஞர்களுக்கு சற்றே ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
இலக்கியம் திடீரென்று நீதி நூல் ஆனது வாசிப்புச் சுவையினை தடை செய்கிறது. அது ஆசிரியரின் விருப்பம், உரிமை என்று நூலின் கவிச்சுவையில் ஆழ்ந்தவர்களுக்கு ஒதுக்கிவிட இயலாது. ஆனால் அணிந்துரை எழுதியுள்ள ‘அருகன் தத்துவ’ ஆசிரியர் புலவர் தோ.ஜம்புகுமாரன் ‘நம்ம சமயத்திலே இப்படியொரு குறுங்காவியம் எழுதியவர் யாரும் இல்லை’ என்று பாராட்டி மகிழ்வதை அச்சமயம் சாராதார் எப்படி மறுக்க முடியும்? 0

நூல் : குறத்தியின் காதல்
ஆசிரியர்: அருகாவூர்.ஆதிராஜ்
வெளியீடு: மல்லிகா ராஜ்குமார், திண்டிவனம்.
விலை: ரு. 40-00.

Series Navigationதற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *