அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை. இப்போது போல், பள்ளிகளில் சனிக்கிழமைகளில் எல்லாம் பள்ளிக்கூடத்தைத் திறந்து வைத்துக் கொடுமை பண்ணியதில்லை. அப்பா என்னைக் கூப்பிட்டு, டேய்… மூர்த்தி அப்பா என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா …. இங்க பாரு, அழகான நாய்க்குட்டி!.
இப்பொழுது எனக்கு இருபத்தெட்டு வயதாகிறது. இதுவரையிலும் அப்பா, எனக்கு வாங்கிக் கொடுத்தவை எத்தனையோ இருக்கும். அத்தனையையும் விஞ்சி, ஜிக்கி மட்டும் என்னை பலமுறை நினைவுக்குள் கொண்டு செல்கிறான். அது ஒருவேளை ஜிக்கியைத் தவிர மற்றவை உயிரற்ற பொருள் என்பதால் நினைவலைக்குள் வராமல் இருக்கக் கூடும்.
ஜிக்கி புஸ்… புஸ்ன்னு இருக்கும். கருப்பும் வெள்ளையும் கலந்த வண்ணத்தில் இருந்தது. அதுக்கு, தான் எங்க இருக்கோம்னு தெரியல. அதுக்கு பால் ஊத்துறது, பால்ல சாதத்தை பிசஞ்சு குடுக்கிறதுன்னு எல்லாத்தையும் நானே செய்வேன். ஜிக்கி வருவதற்கு முன், வீட்டுக்குள் நான் இருந்ததே இல்லை. ஆனா ஜிக்கி வந்ததற்கப்புறம் அப்பப்ப வீட்ல இருந்ததைப் பார்த்து, அம்மா பலமுறை பக்கத்து வீட்டு மாமிகளிடம் சிலாகித்துக் கொண்டிருப்பாள்.
அம்மா சிலாகித்துக் கொண்டிருந்தது ரொம்ப நாளெல்லாம் நீடிக்கல. காரணம், நாயோடு நான் ஒட்டி உறவாடுவது, அம்மாவுக்கு சுத்தமா பிடிக்கல. நாயோடு பழகி இருக்கிறீர்களா? உங்கள் மண்டையை, அதன் மண்டையோடும் முகத்தோடும் முட்டி விளையாடி இருக்கிறீர்களா? நாய் உங்கள் கழுத்தில் கொஞ்சி விளையாடும் போது, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற கூச்ச உணர்வை அனுபவித்திருக்கிறீர்களா? அதையே, மீண்டும் மீண்டும் செய்து விளையாட உங்களுக்குத் தோன்றியதுண்டா? நாய் மீது தலை வைத்து படுத்திருக்கிறீர்களா? நாய், உங்கள் கால் பாதங்களை தன் நாவால் வருடி விடுகிற போது, உங்களுக்குள் ஏற்படுகிற உணர்வு எத்தகையது?
இதையெல்லாம் காண சகிக்காமல்தான் அம்மா என் மீது கோபப்பட்டுக் கொண்டிருந்தாள். டேய் மூர்த்தி, சீக்கு… கீக்கு வந்துடப் போதுறா… என்று பலமுறை புலம்பி இருக்கிறாள். நான் ஒருமுறையேனும் அதைக் கண்டுகொண்டதில்லை. அம்மா, ஜிக்கியை வீட்டுக்குள் அனுமதித்ததில்லை. அதற்கான அனுமதி வீட்டிலுள்ள தார்சால் வரை தான். வீட்டின் செருப்புக் கழட்டிவிடும் அறையைத் தான் தார்சால் என்று சொல்லுவார்கள்.
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல வைத்தாலும் நாய் நாய்தான் என்று அறிவுரை வேறு சொல்லி கொண்டே இருந்ததால், நானும் ஜிக்கியை உள்ளே அனுமதிக்காமல் இருந்ததற்கு ஆட்சேபனம் செய்ய வில்லை. என்னுடைய பயமெல்லாம், எங்கே அம்மா நாயைப் பத்தி விட்டுருவாளோ என்பதால் சில நேரம் மௌனித்துக் கொண்டதுண்டு. இந்த விடயத்தைத் தவிர மற்ற எல்லா விடயங்களிலும் ஜிக்கி என் சொல் படிதான் நடக்கும்.
நான் வீட்டின் உள்ளே இருக்கும்போது, ஜிக்கிக்கு என்னுடன் விளையாட விருப்பமிருந்தால் முன்வாசல் திண்டின் மீதேறி, தனது முன்னங்கால்களை சன்னல் கம்பிகளில் பற்றிக் கொண்டு குரைக்கும். நான் வரும் வரை, அது கொஞ்சலான குரைப்பை நிறுத்துவதே இல்லை. நாய் குரைக்கிற தொனியைக் கவனித்திருக்கிறீர்களா? கொஞ்சும் போது குரைப்பதற்கும், கோபத்தில் குரைப்பதற்கும், நடு சாமத்தில் ஊர் நாய்களோடு சேர்ந்து கொண்டு குரைப்பதற்கும், அறியா மனிதர்களைக் கண்டால் குரைப்பதற்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்? மனிதனைப் போலவே அது தன் குணாதிசியங்களை வெளிப்படுத்துகிறது. மனிதனால் அதிகம் புரிந்து கொள்ளக்கூடிய விலங்குகளில் குரங்கு, நாய், யானை ஆகிய மூன்றின் பங்குதான் அதிகம் என்கிறார்கள்.
மற்ற இரண்டையும் வளர்ப்பது மிகக் குறைவே. அவ்வகையில், நாய்க்கும் நமக்குமான உறவு பல நேரங்களில் என்னை மெய்சிலிர்க்க வைத்ததுண்டு.
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து சைக்கிளை விட்டு இறங்குவதற்குள் ஜிக்கி என் மீது காட்டுகிற அன்பு இருக்கிறதே.. எனக்காகவே காத்துக் கிடந்திருக்கும் போல. சைக்கிளை நிறுத்திய அடுத்த நிமிடம், நாங்கள் இருவரும் கிளியாந்தட்டு ஆட்டத்தையும், கபடி ஆட்டத்தையும் ஆடாமல் இருந்ததில்லை. அப்படி சொல்வதைக் காட்டிலும் அதனோடு விளையாடாமல் அது என்னை வீட்டுக்குள் உள்ளே செல்ல அனுமதித்ததில்லை என்பதே சரியாக இருக்கும்.
கிளியாந்தட்டு ஆட்டம் என்பது என்ன தெரியுமா? பல கட்டங்களைப் போட்டு ஒவ்வொரு கட்டத்திற்கும் அடுத்த கட்டத்திற்கும் நடுவில் உள்ள பொதுக்கோட்டில், கிளி (பையன்) நிற்பான். அவன் மறித்துக் கொண்டிருக்க அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, அதாவது அவர்களின் கைகளால் உங்களைத் தொடாதவண்ணம் நீங்கள் எல்லாக் கட்டத்தையும் தாண்டி சென்று விட்டால், உங்கள் அணி வெற்றி பெற்றது என்று அர்த்தம்.
இப்போதெல்லாம் இந்த ஆட்டங்கள் என்ன ஆகின? விஞ்ஞானமும், காலமும், சூழ்நிலைகளும்தான் மனித வாழ்வியலில், வாழ்வு எப்படி நகர வேண்டும் என்று தீர்மானிக்கின்றனவா? மனிதனின் கட்டுக்குள்தான் எல்லாமும் என்றால் மனிதன் பழைய விளையாட்டை எவ்வாறு மறந்து போயிருக்கிறான்? இன்று வரையிலும் மாற்றத்தைத் தவிர அத்தனையும் மாறி விடும் என்பதற்கான அடையாளங்கள்தான் விளையாட்டுக்களும் மாறி நிற்பதற்குக் காரணமா?
எது எப்படி மாறியிருந்தாலும் ஜிக்கியோடு எனக்கு இருந்த உறவு அற்புதமானது. ஜிக்கி என்னோடு விளையாடுகிறது. ஜிக்கி நான் படிக்கும் போதோ, மூட் அவுட் ஆகி இருந்தாலோ என்னைத் தொந்தரவு செய்ததில்லை. எனக்கும் அம்மாவுக்கும் கூட ஜிக்கியால் பலமுறை சண்டை வந்ததுண்டு.
எனக்குத் தருகிற எந்த தின்பண்டமானாலும்(ஸ்நாக்ஸ்), ஜிக்கிக்கு நான் பாதிக்குப் பாதிக் கொடுப்பது அம்மாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. டேய், அதுக்கு எதை சாப்பிடக் குடுக்கணும்ன்னு உனக்குத் தெரியாதா. அது என்ன விலைத் தெரியுமாடா? அம்மாவின் என் மீதான பாசம், அப்பா அதிகப் பணம் செலவழித்து இவனுக்காக வாங்கிட்டு வந்ததை, அநியாயமா நாய்க்குப் பாதிக்குப் பாதி போடுறானே என்பதாக இருக்கும். ஆனா ஜிக்கி மீதான என்னுடைய பாசம் அதற்குக் கொடுக்காமல் சாப்பிட்டால் ஒரு குற்ற உணர்ச்சியைத் தருவதாக உணர்ந்திருக்கக் கூடும். அதனாலேயே ஜிக்கிக்குக் கொடுத்திருக்கக் கூடும்.
அம்மா, அதை வளர்த்தாலும் இறுதியில் அது ஒரு நாய் என்பதாகவேப் பார்க்கிறாள். என்னால் அப்படி அதைப் பார்க்க இயலாததுதான் எங்களுக்குள் சண்டை வந்ததற்கான காரணமாக இருக்கக் கூடும்.
வெளியூருக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு செல்ல வேண்டியக் கட்டாயம் வரும் போது, ஜிக்கிக் குறித்த கவலை என்னை ஆட்கொள்ளும். பக்கத்து வீட்டு லக்ஷ்மி அக்கா வீட்டுல அரிசி கொடுத்து, நாய்க்கு பொங்கி போடுங்கக்கா என்று கொடுத்தால் மட்டுமே அம்மா அப்பாவோடு செல்வேன். லக்ஷ்மி அக்கா சரின்னு சொன்ன பிறகு, பலமுறை வெளியூர் சென்றதுண்டு. வெளியூர் சென்ற பிறகு, ஜிக்கிக் குறித்து நான் நினைத்தேனோ இல்லையோ, வெளியூரிலிருந்து பஸ்ஸை விட்டு இறங்குவதைக் கண்டவுடன், ஜிக்கி என் மீது பாய்ஞ்சு பாய்ஞ்சு.. கொஞ்சும். அழாதக் குறையாக அது என் காலைச் சுற்றி சுற்றி வரும். இன்று வரையிலும் ஜிக்கி என் மீது காட்டிய பாசம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
நாயை நீங்கள் வளர்த்திருக்கிறீர்களா? நீங்கள் நெடுனாளிகைக் காணாதிருந்து பின்னர் உங்கள் நாயைக் காணும் போது, அது காட்டும் அன்பை உணர்ந்திருக்கிறீர்களா? கொஞ்சி ஆனந்தக் கண்ணீர் விடுவதைக் கண்டிருக்கிறீர்களா? நீங்கள் சொல்கிற மொழிக்கு, நாய் கட்டுப்படுவதை ரசித்திருக்கிறீர்களா? பலமுறை அதனோடு உரையாடும் போது, அது தன் மறுமொழியை சொல்கிற அழகைக் கண்டிருக்கிறீர்களா?
ஜிக்கி குளிப்பதற்கு பலமுறை அடம் பிடித்ததுண்டு. அதை வீட்டில் கட்டி வைத்துக் குளிப்பாட்டுவது ஒரு அடக்கு முறை என்பதாகவே உணர்ந்ததால், அதை என்னோடு பம்புசெட்டுக்குக் குளிக்கக் கூட்டிப் போவேன். அதனுடன் மெல்லக் கொஞ்சியவாறு, ஜிக்கியைத் தூக்கித் தொட்டிக்குள் போட்டு குளிப்பாட்டியதுண்டு. சில நேரம் வயல் காரர் பார்த்து அவரிடம் திட்டு வாங்கியதுமுண்டு.
ஜிக்கியைக் குளிப்பாட்டுதல் போன்ற நேரங்களில் ஜிக்கியோடு நான் சிறு சிறு சண்டை போட்டதுண்டு. அதை மனிதனைப் பாவிப்பது போல அதற்கு அறிவுரை கூறியதுண்டு.
எனக்கும் ஒரு பையனுக்கும் கோலி விளையாடிய போது ஒருமுறை சண்டை வந்து விட்டது. அவன் என்னை அடிப்பதைக் கண்ட உடன் ஜிக்கி அவனைக் கடித்துக் குதறி விட்டது. நானாக ஜிக்கியை அதட்ட, கடிப்பதை நிறுத்தியது. ஜிக்கி என் மீது வைத்திருந்த தீவர பாசத்தை உணர்ந்த நாளது!. அன்றிலிருந்து ஜிக்கியோடு நான் செல்வதைக் கண்டால், யாரும் என்னிடம் வம்பு வைத்ததில்லை.
ஜிக்கியால் எப்படி மனிதர்களை இனம் காண முடிகிறது என்பது கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். குறிப்பாக வீட்டுக்கு அதிகமாய் வந்து செல்பவர்களை அது மிரட்டுவதில்லை. நாய்கள் கூட ஆடை மொழியை வைத்து மனிதர்களை எடை போடுவதை அறிந்துள்ளீர்களா? வேற்று மனிதர்கள் என உணரும் போது அது ஏன் குரைக்கிறது? ஒருவேளை பயத்தால் குரைக்கிறதா? நம்மைப் பாதுகாக்க குரைக்கிறதா? நான்தான் இந்த வீட்டின் காவலாளி என்கிற பொறுப்போடு குரைக்கிறதா?
ஜிக்கி …. ஜிக்கி…. என்று நான் அழைக்கிற குரல் கேட்டு, அது பாய்ந்து வருகிற அழகு இருக்கிறதே. அதற்காகவே பல முறை அதை அழைத்ததுண்டு. ஜிக்கி என் வார்த்தைகளுக்கு மட்டும் கட்டுப்படுவதாலோ என்னவோ, ஜிக்கி மீது நான் வைத்திருந்த மதிப்பு அதிகமாக இருக்கக் கூடும்.
நாய் அடுத்தவர்களைக் கடிக்கவோ, மிரட்டவோ செய்ய வேண்டுமானால் அதற்கான பொது பாஷை என்ன தெரியுமா? “ஷூ..” என நீங்கள் சொன்னால், அது நீங்கள் அதற்கு இட்டக் கட்டளையாக எடுத்துச் செயல்படுவதைக் கண்காணித்து இருக்கிறீர்களா? நாய் நடக்கும் போது அது நிமிர்ந்து கம்பீரமாக நடந்து வருவதைப் பாருங்கள். நாயிடம் நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ விடயங்கள் ஒளிந்துக் கிடப்பதை உணர முடியும்.
ஜிக்கிக்கும் எனக்குமான உறவு பல கோணங்களில் உள்ளதாகவே இன்றும் உணர்கிறேன். அதற்கு உணவு பரிமாறிய போது நல்ல தாயாக, அதனோடு விளையாடிய போது நண்பனாக, எனக்கு ஒன்று என்றால் துடிக்கிற ஒரு சகோதரனாக, எங்களுக்குள் எதோ ஒரு இனம் புரியா உறவு நீடித்தது, இன்று வரை என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
ஜிக்கி, அந்தப் பையனைக் கடித்ததை வர்மமாகக் கொண்டு, எட்டு மாதங்களில் இருமுறைக் கொல்ல முயற்சித்துத் தோல்வி அடைந்த கோழைகள், அதற்கு உணவில் விஷம் கலந்து வைத்ததைத் தின்று இருக்கிறது. தண்ணீர் குடித்திருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். அது பஞ்சாயத்துக் காம்பவுண்டுல செத்துக் கிடந்ததைப் பார்த்த போது நானும் செத்துப் போனதாகவே உணர்ந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, பாட்டி இறந்த போது அழாதிருந்த நான், ஜிக்கி இறந்த பொழுது அழுததை நினைத்தால் இன்றும் கண்ணீர்த் துளிகள் என்னையும் அறியாமல் வந்து விழுகிறது.
——————–
- உன் காலடி வானம்
- பரிணாமம் (சிறுகதை)
- ஒரு புதையலைத் தேடி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
- நினைவுகளின் சுவட்டில் (95)
- மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
- காற்றின்மரணம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5
- கசந்த….லட்டு….!
- சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.
- இசை என்ற இன்ப வெள்ளம்
- தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
- அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
- ஜிக்கி
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
- முள்வெளி அத்தியாயம் -19
- நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
- தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
- பஞ்சதந்திரம் தொடர் 54
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
- பொறுப்பு – சிறுகதை
- நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
- தரிசனம்
- கனலில் பூத்த கவிதை!
- தசரதன் இறக்கவில்லை!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி
- சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?
- கொடுக்கப்பட பலி
- வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
- அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி