1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? மாமியார் இறந்து ஒரு வருடம் ஆயிற்று. வருஷாப்தீகத்துக்காக மனைவியுடன் தில்லியிலிருந்து திருமுல்லைவாயிலுக்கு வந்திருந்தேன். திரும்பி தில்லி போக வேண்டும். சென்னையில் மனைவியின் அக்கா பெண் வீட்டில் சில நாட்கள். எனக்கு ஏதோ தூரத்து உறவினர் என்பதை விட சினேகிதம் தரும் நெருக்கம் அதிகம் அவர்களுடன். கொஞ்ச நாட்களாக தனக்கு ஒரு வீட்டு மனை இருப்பதாகவும் ப்ராவிடண்ட் ஃபண்ட் பணத்தில் வாங்கியதாகவும் மனைவி அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டிருப்பாள். அப்படிச் சொல்லும் சந்தர்ப்பங்கள் விசேஷமானவை
தில்லியில் பத்து வருடங்களுக்கும் மேலாக பல ஹோட்டல அறைகள் மாறி, நினைத்த போது, மனம் விரும்பியபோது எல்லாம் மாறி வாழ்ந்திருக்கிறேன். பெரிய விஷயம் இல்லை. கௌரவப் பிரசினை என்றால், அடுத்த சில மணிநேரத்தில் வேறு ஹோட்டலுக்கு மாறிவிடுவேன். ”சாதாரணமாத்தான் சொன்னேன் கோவிச்சுண்டுட்டார்”, என்று புலம்புவார் நான் காலி செய்த ஹோட்டல்காரர். ஆனால் நிலைமை தலைகீழாகியது கல்யாணத்துக்குப் பிறகு மனைவியோடு ஒற்றை அறை குடித்தனம். ஒரு குடித்தனம் வைத்ததும் அடுத்த அறையை எதுக்கும் பார்த்து வைத்துக்கொள்வோம் என்று நினைக்கும் நிர்ப்பந்தங்கள். எந்த ஊரில் எந்த காலத்தில் வீட்டுச் சொந்தக்காரியும் வாடகைக்குக் குடியிருப்பவளும் சுமுகமாக இருந்திருக்கிறார்கள்? அப்போதெல்லாம் மனைவி பெருமையாகச் சொல்வாள் “மெட்ராஸில் எனக்கு ஒரு ப்ளாட் இருக்கு. என் ப்ராவிடண்ட் பண்ட் பணத்தில் வாங்கியது” என்பாள். அதற்கு அர்த்தம் என்னைப் போல இருக்க இடம் தேடி ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பெட்டி படுக்கையோடு அலைபவள் இல்லை அவளுக்கு. மெட்ராஸில் ஒரு ப்ளாட் இருக்காக்கும்.
”எங்கே இருக்கு? அதை வேணா பாத்துட்டு வரலாமே? என்றார் என் நண்பராகிப் போன உறவுக்காரர். “ஆமாம் சித்தி, எங்கே இருக்குன்னாவது தெரிஞ்சுக்க வேண்டாமா? என்றாள் அவர் மனைவி. அவர்களுக்கு நான் சித்தப்பா. அவர்களுக்கு மாத்திரம் என்ன, அவர்கள் இரண்டு குமாரர்களுக்கும், பின் அவர்களுக்குக் கல்யாணம் ஆகி அவர்களுக்குப் பிறந்த பேரக்குழந்தைகளுக்கும் நாங்கள் சித்தி சித்தப்பா தான். சித்தி சித்தப்பாவாகவே நாங்கள் அமரர்கள். ஒரு மூன்று வயசுக் குழந்தை, அதன் அப்பா அம்மா, தாத்தா பாட்டி எல்லோரும் அவளைச் சித்தி என்று அழைப்பதில் என் மனைவிக்கு கொள்ளை சந்தோஷம்.
என் மனைவிக்கு அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அவள் வாங்கியதாகச் சொல்லும் இடம் எங்கே என்று அவளுக்கே தெரியாது. காரணம் அது என் மாமியார் வாங்கியது. தன் பெண் கல்யாணம் ஆகிப் போனபிறகு தான் ஒரு குடிசை போட்டுக்கொண்டாவது இருக்க ஒரு இடம் வேண்டும் என்று வாங்கியது. யாரோ தெரிந்தவர் ஊர்க்காரர் சொல்லி ஒரு பெரிய மனை வாங்கி இரண்டு பேரும் ஆளுக்குப் பாதியாக பங்கு போட்டுக்கொண்டது. பணம் கொடுத்தது, ரெஜிஸ்டர் செய்தது, தனக்குப் பின் தன் பெண்ணுக்கு அது சொந்தமாகணும் என்றும் எழுதி ரெஜிஸ்டர் செய்தது எல்லாம் அந்த தெரிந்த நண்பர் மூலம் தான். எல்லாம் தெரிந்தவர் என்ற நம்பிக்கையில் தான். நாலு இடம் போய்ப் பார்த்து, விசாரித்து, …அதெல்லாம் நடக்காத காரியம். மாமியாரின் வயசுக்கும் தள்ளாமைக்கும். பணம் கொடுத்தது என் மனைவியின் ப்ராவிடண்ட் ஃபண்டிலிருந்து. ”எனக்கு ஒரு ப்ளாட் இருக்கு மெட்ராஸிலே” என்று இந்த கதையின் கடைசி வாக்கியம் முடிகிற காரணம் இது தான்.
பாக்கணும்னு ஆசைதான் என் மனைவிக்கு. ஆனால் இவர்களிடம் எல்லாத்தையும் எடுத்துக் காண்பிக்கலாமா? மனைப் பத்திரம் என்ன கல்கியா ஆனந்த விகடனா? நாங்கள் தில்லிக்குப் போகவேண்டியவர்கள். இவர்களும் வாடகைக்கு இருக்கும் மெட்ராஸ் காரர்கள். இந்தக் காலத்தில் யாரை நம்புவது, நம்பாமலிருப்பது? ”மடிப்பாக்கத்திலேன்னு தெரியும். நான் பாத்து வைக்கறேனே நாளைக்குள்ளே,” என்று சொல்லி அந்த சங்கடமான கணத்திலேயிருந்து தப்பினாள். என் நண்பருக்கு ஏதோ எங்கோ பொறி தட்டியது. முகத்தைச் சுருக்குவதா வேண்டாமா என்றா? எல்.ஐ.ஸியில் வேலை பார்ப்பவர். மலர்ச்சியோடு உற்சாகமாக முகத்தை வைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டவர். சரி ப்ளாட் நம்பர், இடம், எதுக்கு மேற்கே, எதுக்கு கிழக்கேன்னெல்லாம் எழுதியிருக்கும். பத்திரம் பத்திரமா இருக்கட்டும். ஒரு பேப்பர்லே குறிச்சு எடுத்துண்டு வாங்கோ அது போறும்,”என்றார். கெட்டிக்காரர். எல்லாரும் எல்.ஐ.ஸி ஏஜெண்டாகி சம்பாதிச்சிட முடியுமா? அதுக்குன்னு பேச சாமர்த்தியம் வேண்டாமா?
ஒருத்தர் குளிக்கவும் இன்னொருத்தர் மார்க்கெட்டுக்கும் போன சமயம் பார்த்து, அந்த பத்திரத்தின் விவரக் குறிப்பு தயாராகியது. ப்ளாட் நம்பர் 31A. ஊர்க்காரருடையது 31B. மடிப்பாக்கம் சரி. ஆனால் சுத்தி என்னென்னவோ பாக்கங்கள். அச்சரவாக்கமா, பெரும்பாக்கமா, நினைவில் இல்லை. ஆனால் நண்பருக்கு அது போதுமானதாக இருந்தது.
அவர் வழிகாட்டலில் தான் மடிப்பாக்கம் போகவேண்டும். அவரே விசாரித்து வந்தார். எலெக்ட்ரிக் ட்ரெயினில் மௌண்ட்
ஸ்டேஷன் போய் இறங்க வேண்டும். மௌண்ட்க்கு எதிர்பக்கத்தில் இறங்கி மூன்று மைல் தூரம் உள்ளே போகவேண்டுமாம். ரயிலை விட்டு இறங்கினால் மாட்டு வண்டி கிடைக்குமாம். அவனிடம் சொன்னால் அவன் கொண்டு விட்டு விடுவான் என்று சொல்கிறார்கள் என்றார். எங்களை விட அவர் தான் அதிகம் அக்கறை காட்டினார். விசாரித்து வந்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால் மௌண்ட் வரைக்கு ட்ரெயினில் போகணும். அங்கிருந்து மாட்டு வண்டியில் மூணு மைல் உள்ளே போகணும். இதுக்குத் தான் மெட்ராஸில் வீட்டு மனை என்று பெயரா? மெட்ராஸா, இல்லை தாம்பரம், செங்கல்பட்டு.. இப்படியா? யாரோ வயதான மாமியாரை ஏமாற்றியிருக்கிறார்கள். ஒருவேளை இந்த மெட்ராஸ் சந்தடியெல்லாம் இல்லாமல் தூர ஏதோ கிராமத்தில் வயதான காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என்று தோணியதா தெரியவில்லை. ஆனால் அவர்கள் யாருடைய மனமும் கோணாமல் வாய்மூடியிருந்தேன்.
இப்போது நினைவில் இல்லை. நண்பர் இருந்தது திருவல்லிக்கேணியில். ஜாம்பஜாரை ஒட்டி ஏதோ ஒரு தெருவில் நாலு குடித்தனங்கள் கொண்ட ஒரு வீட்டில். போன தடவை வேறு தெருவில் இன்னொரு வீட்டில் ஒற்றை அறை வாசம். இப்போது. என் தில்லி வாசம் போல் தான் வருஷத்துக்கொரு மாற்றம். அதுவல்ல விஷயம். திருவல்லிக்கேணியிலிருந்து எலெக்ட்ரிக் ட்ரேய்ன் பிடிக்க செண்ட்ரல் போனோமா? நினைவில் இல்லை. ட்ரெயினில் போய்க்கொண்டிருந்ததும், இறங்கி ஒரு மாட்டு வண்டி பிடித்ததும் தான் நினைவில் இருக்கிறது.
ஒன்றிரண்டு மாட்டு வண்டிகள் தான் இருந்தன. அதிகம் வாடிக்கை கிடைக்காது போலத் தோன்றியது. வாடிக்கை கிடைத்த சந்தோஷம் அவனுக்கா, இல்லை வண்டி கிடைத்த சந்தோஷம் எங்களுக்கா? நிச்சயமாக சொல்ல முடியாது.
இப்போது அந்த இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது. கொஞ்சம் தள்ளி இன்னொரு கோவில். ரயில் லைனை ஒட்டிய தெருவில். பழண்டி அம்மன் கோயில் என்று பேர். இந்தக் கோயில்கள் எதையும் அன்று பார்த்த தாக நினைவில் இல்லை. இப்போது இருக்கும் ஆதம்பாக்கம் கூட நினைவில் இல்லை. காலனி பின்னால் வந்திருக்கலாம். ஆனால் கோயில்?. ஆதம்பாக்கம் என்ற பெயருக்காவது ஒரு கிராமத்தைப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.
மாட்டு வண்டிப் பயணம் நன்றாகத் தான் இருந்தது. வண்டித் தடம் தாம். இரு பக்கமும் மூன்று மைல் தூரத்துக்கு வயல் வெளி தான். ஏதும் சின்ன கட்டிடங்கள் கூட இடையிடையே பார்த்ததாக நினவில்லை. மடிப்பாக்கம் எது என்று தெரிந்த ஆள் அந்த மாட்டு வண்டிக்காரன் தான். மதராஸ் வந்து மாட்டு வண்டியில் வயல்வெளிகளினூடே கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் ஒரு பயணம் இருக்கும் என்று நினைக்கக் கூட இல்லை. உடையாளூரிலிருந்து பட்டீஸ்வரம் மாட்டு வண்டிலே போகிற மாதிரி இருந்தது. இப்போ அங்கும் பஸ் ஓடுகிறது.
கடைசியில் எந்தப் பயணமும் முடியத் தானே வேண்டும். ஒரு இடத்தில் வண்டி நின்றது. “இதாங்க மடிப்பாக்கம்” என்றான். வண்டிக் காரன். இறங்கிப் பார்த்தால் சுற்றி ஏதோ தூரத்தில் ஒரு காரை வீடும் பின் தள்ளி குடிசைகள் ஒன்றிரண்டு தெரிந்ததே தவிர வீட்டுமனைகள் என்று அடையாளம் சொல்ல ஏதும் இல்லை. வண்டி நின்ற இடத்திற்கு வரும் சற்று முன்பு இன்று இருக்கும் உள்ளகரம் என்ற ஊரும் அதில் இருக்கும் குமரன் தியேட்டரும் வேண்டாம். அதற்கு எதிரே நிற்கும் பிரம்மாண்ட அரச மரமும் பாதாள விநாயகர் கோயிலுமாவது இருக்க வேண்டுமே. இல்லை. வெற்று வயல் வெளி தான். ஆங்காங்கே மனைகளைக் குறிக்க கல் பதித்து இருந்தது. இதில் 31A-யையோ, 31B- யையோ எப்படிக் கண்டு பிடிப்பது.? ஆனால் ஒரு பர்லாங்க் தூரத்தில் தெரிந்த காரை விட்டைப் போய்ப் பார்க்கலாம் என்றார் நண்பர். நாங்கள் இரண்டு தம்பதியர் தன் வீட்டை நோக்கி வருவதைப் பார்த்திருக்கவேண்டும் அந்த வீட்டுச்சொந்தக் காரர். நாங்க கிட்ட நெருங்கியது அவர் கதவைத் திறந்து வெளியே வந்து எங்களுக்காகக் காத்திருந்து வரவேற்றார். வீடு நன்றாகத் தான் இருந்தது. சுற்றி தென்னங்கன்றுகளும் சில பூச்செடிகளும், செம்பரத்தையும், அரளியுமாக இருந்தன.
வந்தவர் முப்பது வயதிருக்கும் கிட்டத் தட்ட. “வாங்க, மனை வாங்கியிருக்கேக்கங்களா இல்லெ வாங்கின இடத்தைப் பாக்க வந்தீங்களா? என்று கேட்டார். எங்களுக்கு இங்கே மனை இருக்கு. ஆனா எதுன்னுதான் தெரியலை. ப்ளாட் நம். 31A என்றோம். “உள்ளே வாங்கோ பாத்துச் சொல்றேன்” என்று தன் ப்ளூப்ரிண்டைப் பார்த்து, தன் மனை நம்பரை வைத்து எங்கள் ப்ளாட் எங்கே என்று அடையாளம் காண்பித்தார். ப்ளாட்டில் என்ன இருக்கும்? அடுத்தது உங்க ஊர்க்காரரோடது தான். அவர் வர்ரதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும். நீங்க எங்கே இருக்கேள்? என்ன செய்யலாம்னு உத்தேசம் என்றெல்லாம் கேட்டார். பேச்சு கொஞ்சம் வளர்ந்து கொண்டு போயிற்று.
இப்போ இப்படி இருக்கேன்னு நெனக்காதேங்கோ. ரொம்ப நல்ல இடம். கொஞ்ச நாள்லே பாருங்க, ரொம்ப மாறிப் போயிடும்.
அவர் ஒரு கண்ட்ராக்டர் என்று தெரிந்தது. எதுக்கும் இருக்கட்டும் என்று இங்கே ஒரு வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். தொழிலுக்கு சௌகரியமா இருக்கட்டும் என்று. (இப்போ மடிப்பாக்கம் பூராவும் புவனேஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்று போர்டு போட்டிருக்குமே, அவரோட மூதாதையரோ இவர்? இருக்கலாம்)
ரொம்ப யோசிக்காதேங்கோ இப்பவே ஒரு வீட்டைக் கட்டிப் போட்டுட்டேங்கன்னா, வசதியாவும் இருக்கும். குறைச்ச செலவிலேயும் பண்ணிடலாம். அப்பறம் உங்க வசதி போல வந்துக்கலாம்.” என்றார்.
பண்ண வேண்டியது தான். நீங்க சொல்றதும் சரிதான்.” என்றார் நண்பர். பேசவேண்டும். கொஞ்சம் ஆதரவா பேசலாமே என்று இருக்கும்.
”ரொம்ப வேண்டாம். ஒரு 12,000 கொடுங்கோ. போறும். நானே கட்டித் தரேன். ஒரு கிணறு தோண்டி, ரண்டு ரூம், ஒரு ஹால், கிச்சன், பாத் ரூம் டாய்லெட், போறுமே. நமக்கு எவ்வளவு தேவை?. அப்பறம் வேணுமான எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம்”
என்றார், கொஞ்சம் பேச்சு வளர்ந்தது.
“சரி வரோம். உங்களைப் பாத்ததிலே ரொம்ப சந்தோஷம். உங்க அட்ரஸ் கொடுங்கோ, நீங்க இங்க அப்பப்போ தான் வருவீங்கன்னு தோன்றது. உங்க டெலெபோன் நம்பர் இருக்கோ இருந்தா அதையும் கொடுங்க,” பார்க்கலாம்
என் நண்பர் தான் பேசினார். அவரும் விவரங்களை ஒரு பேப்பரில் எழுதித் தந்தார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மாட்டு வண்டி நின்ற இடத்துக்கு வந்தோம்.
நாம என்ன தில்லிலேயேவா இருக்கப் போறோம்? என்று மனைவி வழியில் பேச்சை எடுத்தாள். அது வாஸ்தவம் தான். ரிடையர் ஆறதுக்குக் கொஞ்சம் முன்னாடி யோசிக்கலாம். இன்னம் 40 வருஷம் இருக்கே அதுக்கு? என்றேன்.
அதுக்குள்ளே இங்கே எவனாவது குடிசை போட்டான்னா அவ்வளவு தான். இங்கே வரக்கூட கஷ்டப்படவேண்டாம் என்றாள்.
தில்லியில் இரு சின்ன வீட்டுக்குக் கூட சொசைடி மெம்பராகி சொசைடி அரசாங்கத்திடம் இடம் வாங்கி வீடு கட்டி…….. இருக்கா தான். அதெல்லாம் செய்து. ரூ 26,000 ஆகும். அது ஒரு ரூம். இங்கே ரண்டு ரூம் 12,000 ஆகறது. செய்யலாம் தான் சீப் தான். ஆனால் மௌண்ட் வரை ட்ரெயினில் அப்பறம் மாட்டு வண்டி பிடிச்சு போக வர ஆறு மைல். ……நடக்கற காரியா தெரியலை.
அது நடக்கற காரியாமானது 33 வருஷங்கள் கழித்து. கி.பி. 2000-ல். அப்போதும் மனையைக் கண்டு பிடித்தது கஷ்டப்பட்டுத் தான். ரோடு மாட்டு வண்டி ஓட்டி வந்த லக்ஷணத்தில் தான் இருந்தது. குண்டும் குழியும் சாக்கடைத் தண்ணீர் வழிந்தோட குப்பைகள் அதில் மிதக்க. 12,000 –ல் ஆகவேண்டியது 10 லக்ஷத்தில் முடிந்தது,. கிணறு தோண்டுவதற்கு பதிலாக, 200 அடி ஆழத்துக்கு போர் போட்டால் உப்புத் தண்ணீர் கிடைக்கும். 1968-ல் காணாத பழண்டி அம்மன், பாதாள விநாயகர் குமரன் தியேட்டர் எல்லாரும் எனக்குச் கொஞ்சம் முன்னால் குடியேறியிருந்தனர்.
- உன் காலடி வானம்
- பரிணாமம் (சிறுகதை)
- ஒரு புதையலைத் தேடி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
- நினைவுகளின் சுவட்டில் (95)
- மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
- காற்றின்மரணம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5
- கசந்த….லட்டு….!
- சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.
- இசை என்ற இன்ப வெள்ளம்
- தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
- அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
- ஜிக்கி
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
- முள்வெளி அத்தியாயம் -19
- நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
- தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
- பஞ்சதந்திரம் தொடர் 54
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
- பொறுப்பு – சிறுகதை
- நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
- தரிசனம்
- கனலில் பூத்த கவிதை!
- தசரதன் இறக்கவில்லை!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி
- சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?
- கொடுக்கப்பட பலி
- வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
- அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி