மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36

This entry is part 14 of 35 in the series 29 ஜூலை 2012

42. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய நகர சாம்ராச்சியத்தை உலுக்கிய உள்நாட்டு பிரச்சினை முடிவுக்கு வந்ததைப்போல தெரிகிறது. கிருஷ்ணபுர படை எறும்பு கூட்டத்தில் தீக்கங்கு விழுந்ததுபோல சிதறி ஓடுகின்றது. ஆளுயர புரவியொன்றில் இரகுநாதநாய்க்கர் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ஆழம்குறைந்திருக்குமென நம்பப்பட்ட கொள்ளிட நதியின் நீர்ப்பரப்பைத் தேடி நடந்தும் நீந்தியும் அவரது படைகள் பின் தொடர்வதையும் அவதானித்தாள். குதிரைகளின் அடிவயிற்றை எந்தி வெருட்ட அவை நுரையொழுக முன்கால்களை வதைத்துக்கொண்டு பரபரப்பதும்; ஆற்றை நெருங்க யோசித்து துதிக்கையை உயர்த்தி பின்னர் பெரும் பிளிறலுடன் நீரை சேறாக்கியவண்ணம் எதிர்க்கரையை ஆனைகள் தேடுவதும், ஆயுதங்களுடன் எருதுகள் பூட்டிய பாரவண்டிகள் கரையேறுவதும் தெரிகின்றன.

புவனகிரியையும் தெற்கில் பெருவாரியான நிலப்பரப்புகளையும் ஊர்களையும் தஞ்சை நாயக்கரிடம் இழந்து வேட்டைநாய்கள் துரத்தும் பன்றிபோல ஓடிவரும் நாயக்கரின் அச்சம்பீடித்த கண்களை இங்கிருந்தே அவள் பார்க்க முடிந்தது. நாயக்கரின் விழிவெண்படலத்திற் கோர்த்திருந்த நீரில் சஞ்சலத்தின் அலைகளைக் கண்டாள். அவருடைய பெரிய கண்களில் தஞ்சைக்குத் திரும்பி அவரது மகளும் தஞ்சை இரகுநாதநாயக்கரின் மனைவியுமான தாயாரம்மாளின் உதவியைகேட்டுபெறலாமென்கிற எண்ணம் உதித்திருப்பதும் தெரிகிறது. எச்சம நாய்க்கரிடம் யாரை மீண்டும் தூதனுப்பலாமெனும் யோசனைகூட ஓரமாக விழியோரம் ஒட்டிக்கிடக்கிறது. பொதுவாகவே நாயக்கருக்கு மதுவருந்தியதுபோல விழிகள் சிவந்திருப்பதுண்டு. தற்போது அவை பிடுங்கப்பட்ட கண்கள் மீண்டும் முகத்தில் அப்பியதுபோலவிருந்தன. பரிதாபத்திற்குரிய தோற்றத்திலிருந்தார். அவளுக்கு வியப்பாக இருந்தது. தில்லையின் திருசித்திரகூடத்தில் தீட்சதர்கள் வரிசையாய் கோபுரத்திலேறி கீழேகுதித்து உயிர்விட்டபோதும் தில்லை கோவிந்தராஜரின் திருப்பணியே முக்கியமென சாதித்த நாயக்கரின் கர்வமும் வீம்பும் எங்கே போனதென்ற கேள்வி. எவ்வளவு கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்திருப்பார். எத்தனை அதிகாரமாக முடிவுகளைத் திணிப்பார். விஜயநகரத்திற்கெதிராக எத்தனைமுறை உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்? ஆயினும் ஒவ்வொரு முறையும் எப்படி இம்மனிதரால் மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்திருக்க ஆயிற்று?. விநோதமான மனிதர். தனக்குள் ஒரு கமலக்கண்ணிபோல, கிருஷ்ணப்பருக்குள் வேறொருவருர் இருக்கக்கூடுமென்று நினைத்தாள். .

எல்லோரிடமும் இரு குணங்களுடன் செயல்படுகிற ஜீவன்களிருக்குமோ? அவரவர் தமக்குரிய குணத்தை மற்றவரிடம் தேடி அறிய முடிந்தால், உலகில் குற்றம் பார்க்காது சுற்றத்துடன் ஒழுகுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமோ? இம்மனிதரின் செயல்பாடுகள் குறித்து சாதாரணப்பெண்ணான செண்பகம் வியக்கலாம் ஆனால் அவளுள் இருந்து, தமக்குத் தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப்பில்லையென நம்பிக்கை வைத்திருந்த கமலக்கண்ணிக்கு புரியாமல் போனதெப்பபடி?

– பெண்ணே! நீ கயிற்றில் பாம்பு, கானலில் நீர்!

செண்பகத்திற்கு ஆச்சரியம். இதற்குமுன்பும் இக்குரலை கேட்டிருக்கிறாள். இவள் குரல் சாயலில் தொனித்தது. எனினும் இவள் நம்புவதுபோல அல்லது பலரும் சொல்வதுபோல இவளுக்குள் உறையும் வேற்று ஜீவனின் பாசாங்கு குரலென்பதில் ஐயமில்லை. மார்புக்கூட்டிலிருந்து வெண்புறாவாக விடுபட்டு, செவிக்குழிகளில் சிறகடித்து களைத்து நித்தம் நித்தம் இறகுகளை உதிர்க்கும் குரல். கமலக்கண்ணியாகப் பிறரை நம்பவைத்ததுபோக, இவளே அந்நம்பிக்கையில் முத்திபெற்றிருந்தாள். அம்முத்தியில் விடுதலை இல்லை. திறப்பு இல்லை. ஓளியில்லை. காரணம், நீரைக்கிழித்தபடி பாம்புபோல கண்ணுக்குத் தெரிந்தும் கையிற் பிடிபடாமலும் நெளியும் சத்தியங்கள் அம்முத்தியில் இருக்கின்றன.

கமலக்கண்ணி: பிரம்மம், விஷ்ணு, பரஸ்வரூபம்.
செண்பகம்: பொய், மாயை, ஸ்வஸ்வரூபம்.

கிருஷ்ணப்பநாயக்கர் இராப்பிச்சைக்காரன்போல நேற்றிரவு இவள் முன்னே யாசித்து நின்றகாட்சி நினைவுக்குக்குவந்தது. அவர் யாசித்தது செண்பகத்திடமல்ல கமலக்கண்ணியென்ற பெண்தெய்வத்திடம். பைத்தியக்காரி! இங்கே மண்டியிடாத மனிதர்களென்று எவரேனும் இருக்கிறார்களா என்ன? மலஜலம் கழிக்காத உயிரொன்றிருந்தால் என்னிடம் சொல், நானும் மண்டியிடாத மனிதர்கள் உலகிலுண்டாவென விசாரித்துரைக்கிறேன். அவரவர்க்கென்று எஜமானர்கள் இருக்கிறார்கள், எல்லோரும் எல்லோரிடமும் கை தொழுவதில்லை. நாயக்கர் யாசித்தது கமலக்கண்ணியிடம். செண்பகத்திடம் மண்டியிட அவரென்ன அற்பஜீவனா? இராயர் நாயக்கரிடம் மாத்திரமல்ல; சித்ராங்கி, ஜெகதீசனென பிறரிடம்கூட நீ தோற்றது நிஜம். செண்பகமென்ற உண்மை கசப்பதுபோல இருந்தது, சிக்கமனையும் சேர்த்தே அவ்வுண்மை எரித்திருக்கிறது.

– யாரங்கே?

– அம்மா!

– நமது ஆபத்துதவிகள் தலைவனை உடனே என்னை வந்து பார்க்கச்சொல்.

– அதற்கென்ன சொல்கிறேனம்மா.

– உடனடியாக தெரிவிக்கவேண்டும். தாமதித்தல் ஆகாது!

– அப்படியே ஆகட்டும்.

பணிப்பெண் விலகிச்சென்றதும், நகத்தைக் கடித்துக்கொண்டு அறையில் பலமுறை நடந்தாள். இவளது மனநிலையை புரிந்துகொண்டிருந்த அடிமைப்பெண்கள் உள்ளே நுழைய துணிச்சலின்றி காத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் கதவருகே காலடி சத்தம், கதவைத் திறந்தாள்.

– அம்மா அழைத்திருந்தீர்களா?

– தலிச்சேரியிலிருந்து அழைத்துவந்த பைத்தியக்காரனை எங்கே அடைத்து வைத்திருக்கிறீர்கள்?

– அரண்மனை சிறையில்.

– அவனை உடனடியாக அழைத்துவரவேண்டும்!

– ஏதேனும் அவசரமா?

– என்ன கேள்வி? இச்சஷணமே அவன் வேண்டும்.

மீண்டும் அமைதியின்றி காத்திருந்தாள். ஒவ்வொரு நொடியும் யுகம்போல கழிந்தது. இம்முறை உடலில் பதற்றம் கூடியிருந்தது. தீயில் கால்வைத்த மனநிலையிலிருந்தாள். பொறுமையின்றி எட்டியெட்டி வீதியைபார்த்து அலுத்து கட்டிலில் விழுகையில் கதவை மெல்ல தட்டுகிறார்கள். கதவைத் திறந்தபோது மரணம் இவளைப் பார்த்து சிரிப்பதுபோல இருந்தது. அவனைக் கைப்பிடித்து அவள் அறைக்குத் திரும்புவதை அடிமைப்பெண்களும் ஆபத்துதவிகளும் வியப்புடன் அவதானிப்பதை அலட்சியம் செய்து கதவை மூடி தாளிட்டாள்.

பதினைந்து வருட இடைவெளிக்குப்பிறகு ஜெகதீசனைக் காண்கிறாள். ஆங்காங்கே சரீரத்தில் தடிப்பும், ரணமும் கொப்புளங்களுமாக இருந்தான், முகத்திலும், கைகால்மூட்டுகளிலும் வீக்கமும் சலக்கசிவுமாக அசகரோகத்துடன், அழுகிய பழவாடை வீசியது. வயதுக்குப் பொருந்தாத வயோதிகம் தெரிந்தது. புருவம், மூக்கு, செவிகள், முகவாய், மார்பு, அக்குள் எங்கும் செம்பட்டை நிறத்தில் ரோமங்கள். நீலக் கண்களில் தீ ஜுவாலைகள் நெளிந்தன. நின்றுகொண்டே உறங்குவதுபோல இருந்தான். தோளைப்பிடித்து உலுக்கினாள். இவள் உலுக்கலுக்குக் காத்திருந்தவன்போல குலுங்கி குலுங்கிச் சிரித்தான். சினமுற்றவளாய் அவன் இருகைகளையும் வாங்கி இவள் தோளில் வைத்து:

– என்னைத் தெரிகிறதாவென்றாள்?

பதிலேதுமின்றி மீண்டும் அவள் இருப்பை மறந்தவனாய் தலையை உயர்த்தி மோட்டுவளையை பார்ப்பவன்போல பிரக்ஞையற்றிருந்தான்.

கோபத்துடன் உள்ளே ஓடினாள். கையில் தூபகலசம்போல ஏதோவொன்று.

– பாவி எல்லாம் உம்மால் நேர்ந்தது! எனக் கூவினாள். தலையில் தூபகலசம் ‘ணங்’கென்று இறங்கியவேகத்தில் இரத்தம் பீறிட்டு செண்பகத்தின் முகத்தில் தெறித்தது. ஜெகதீசனும் கருஞ்சிவப்பு குருதியில் நனைந்தான்.

எதிர்பாராத தாக்குதலோ, உடைந்தமண்டையோ, வழியும் இரத்தமோ அவனைப் பாதிக்க இல்லை.

‘ஹி..ஹி..

மீண்டும் அவளை எரிச்சலூட்டும் சிரிப்பு. இம்முறை அவள் இடுப்பிற் சொருகிவைத்திருந்த குறுவாளை எடுத்தாள், அவன் கரத்திற் திணித்து:

– சாகலாமென்றுதான் காத்திருந்தேன்! அதை நீயே முடித்துவிடு- குறுவாளுடனிருந்த அவன் கையைப்பற்றி தம் மார்பில் குத்துவதுபோல இயக்கிக்காட்டினாள். கண்சிமிட்டும் நேரம் அவள் கண்களை நேராகப்பார்த்தான், வாயசைப்பது தெரிந்தது. குறுவாளைக் கையாளத் தயங்குவதுபோல விலகிநின்றான். நாய்போல ஊளையிட்டுக்கொண்டு அவள்மீது பாய்ந்தான்.

மறுநாள் வைகறைப்பொழுதில் அடிமைப்பெண்கள் ஆபத்துதவிகள் உதவியுடன் கதவைத் திறந்து பார்க்கும்வரை அவளைக் குத்திக்கொண்டிருந்தான்.
————————————-

43. ஏனம்மா இன்னமுமா கோவிலுக்குப் புறப்படுகிறீர்கள்? -நந்தகோபால்பிள்ளை தெருவாசலில் நுழைந்தவர் குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தார்.

– இதோ ஆயிற்று அப்பா. உங்களுக்காகத்தான் காத்திருந்தோம்.

– கழுத்து காதெல்லாம் ஏன் மூளியாய் இருக்கிறது, நகை நட்டுகளை எப்போது அணிவதாக உத்தேசம்? எல்லாவற்றையும் இங்கே நானொருவன் நினைவூட்டவேண்டும், தவறினால் நமதில்லத்தில் எதுவும் நடவாது. அம்மா எங்கே? கூப்பிடு அவளை.

– என்ன இது வந்ததும் வாராததுமாக கூச்சலிடுகிறீர். நீர்தான் நமதில்லத்தின் காரியங்களை இதுநாள்வரை ஒப்பேத்தினதுபோல அதிகாரம்.

– உனது புத்ரியை வெறும் கழுத்துடன் பார்ப்பது நன்றாக இருக்கிறதா. திறவுகோலை கொடுப்பதுதானே, அவள் ஆசைக்கு எதைவேண்டுமென்றாலும் பூட்டிக்கொள்ளட்டுமே. ஏன் தடுக்கிறாய்?

– நான் எங்கே தடுக்கிறேன். நீங்களே உமது அருமைமகளுக்கு புத்திசொல்லுங்கள். இத்தனை வயதுக்குப்பிறகும் மகளை குற்றம் சொல்ல உங்களுக்கு மனம் வராதே!

– அப்பா இப்போது என்னநடந்துவிட்டது. அம்மாள் நகைபெட்டியை என்னிடம் காலையிலேயே ஒப்படைத்துவிட்டாள். நான் தான் யோசிக்கிறேன். யுத்தகாலங்களில் தலைதூக்கிய கள்ளர் பயம் இப்போதுதான் சிறிது தணிந்திருக்கிறது. இவ்வளவு நகைகளையும் பூட்டிக்கொண்டு போகவேண்டுமா என்ன.
– நமது பெண், நகைகளை அணிந்தாலும் அணியாவிட்டாலும் அழகிதான்- பிள்ளையின் மனைவி.

– பெற்றபெண்ணுக்கு நகைபூட்டி பார்க்கக்கூடாதென்கிறவள் அநேகமாக நீ ஒருத்திதான் என நினைக்கிறேன். நகை அழகுக்காக இல்லை. ஊர் உலகம் அளிக்கும் மரியாதைக்காக. பிரதானியின் குமாரத்தி நகையிலும், உடையிலும் சிக்கனம் காட்டினால், கிருஷ்ணபுரத்தில் தரித்திரமென்று சனங்கள் பேச ஆரம்பித்துவிடுவார்கள். குடியானவன் வயிறொட்டிக் கிடக்கலாம். நாடாள்பவன் பெருவயிறுடனிருப்பதுதான் சுபிட்சத்தின் அடையாளம். நீ நன்றாக உடுத்திக்கொண்டு என் பேர்த்திக்கும் வேண்டிய நகைகளை பூட்டி அழைத்து வா. காஞ்சிபுரத்திலிருந்து நமக்கென தறிபோட்டு முதலியார் கொடுத்துவிட்ட பட்டாடைகளை உன் புத்ரியிடம் அளித்தாயா. மாப்பிள்ளைக்கும் எடுத்துக்கொடு. இந்தத் திருவிழாவில் நமது அருமை பேர்த்தியை மறந்து போனேன். எங்கே அவள்? .

– அடிமைப்பெண் அவளுக்கு அகிற்புகை காட்டிக்கொண்டிருக்கிறாள்.

– மாப்பிள்ளை எங்கே?

– இதோ வந்துவிட்டேன் மாமா. கோவிலுக்கு வேண்டியதையெல்லாம் வண்டியில் ஏற்றிவிட்டு வந்தேன். ஏழுமலை பத்தரை கோவிலுக்கு அழைத்துவர ஆள்போயிருக்கிறது. நாவிதனும் வந்துவிடுவான், சொல்லி ஆயிற்று.

– கோவிலுக்குப் போன வண்டியில் எல்லாமிருந்தததா, காசிநாதன் மறதி ஆசாமி. கூடையில் பட்டியல் பிறகாரம் தேவையானவற்றை எடுத்துவைத்தானாவென்று பார்த்தீர்களா?

– ம்..மஞ்சள்தூள், குங்குமம், விபூதி- அகில், கற்பூரம்,அரிசி, பன்னீர்,நெய், மஞ்சள்கிழங்கு, கலச செம்பு, கலச வஸ்த்ரம், வெற்றிலை, பாக்கு தேங்காய், வாழைப்பழம், வெல்லம், எருவிராட்டி, நல்லெண்ணை, விளக்கு திரி, பூக்கள், தாம்பாளங்கள், பஞ்சபாத்திர உத்தரணி, தரைவிரிப்பு, பட்டுப்பாயென எல்லாமுமிருந்தது. பட்டியல் சரியா? இலைக்கட்டுதான் குறைந்திருந்தது. தலைச்சுமையாக அனுப்பியிருக்கிறேன். இரண்டு நாழிகையில் எல்லோருமே புறப்பட்டுவிடலாம். வண்டிகள் தயார்.

விஜயநகர சாம்ராச்சியத்து உள்நாட்டுயுத்தம் முடிவுக்குவந்திருந்தது. வடக்கே சந்திரகிரி தொடங்கி தெற்கே மதுரைவரை ஏழைக்குடியானவர்களை குறிப்பாக யுத்தம் பெரிதும் சோதித்திருந்தது. இருந்தவர்கள் ஆடுமாடுகளையும் தட்டுமுட்டு சாமான்களையும் விற்று சாப்பிட்டார்கள் இல்லாதவர்கள் புல்லரிசி, சாமை, குப்பைகீரையென தேடி அலைந்தார்கள். மன்னர்கள் அடித்துக்கொண்டது கள்வர்களுக்கும் வசதியாகப்போயிற்று. தென்பிரதேசங்களிலிருந்து வந்திருந்த கள்வர்கள் பயத்தில் கிருஷ்ணபுரம் அரண்டுக்கிடந்தது. விவசாயமும் நொடித்துப்போனது.

வழக்கம்போல இராச்சிய பரிபாலகர்கள் தங்கள் பகைமையை பெண்கொடுத்து பெண் எடுத்து முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். வடக்கில் விஜய நகர சாம்ராச்சியத்தில் எத்துராஜர் மகளை, எச்சம்ம நாயுடுவின் தயவால் விஜயநகர இராச்சியத்தின் மஹா இராயரென முடிசூட்டிக்கொண்ட ஸ்ரீரங்கர் மகன் இராமதேவன் திருமணம்செய்துகொண்டான், தற்காலிகமாக ஆட்சியுரிமை பிரச்சினை ஓய்ந்திருக்கிறது. தெற்கிலும் மதுரை முத்துவீரப்ப நாயக்கர் தனது மகளொருத்தியை தஞ்சை இரகுநாதநாயக்கருக்கு மணமுடித்துவைத்து பகைமையை முடித்துக்கொண்டார். கிருஷ்ணப்ப நாயக்கரும் எச்சம்ம நாயுடுவிடமும் இராமதேவனிடமும் சமாதானத்தை அறிவித்து புதிய மன்னருக்கு காணிக்கைகளை அனுப்பிவைத்தார். விஜய நகரசாம்ராச்சியமும், அதன்கீழிருந்த சிற்றரசுகளும், பாளையங்களும் வழக்கம்போல இராச்சியபரிபாலனத்தில் அக்கறைகாட்டின.

கோனார் பரம்பரையினருக்கென நாயக்கர்கள் கட்டிகொடுத்திருந்த தர்மராஜர்- திரௌபதை அம்மன் கோவில் நந்தகோபால் பிள்ளக்குக் குலதெய்வம், மருமகன் கார்மேகத்திற்கும் குல தெய்வம் ஆனது. அங்குதான் கார்மேகத்தின் மகளுக்கு முடியிறக்கி காதுகுத்தல் ஏற்பாடாகியிருந்தது. ஜெகதாம்பாளைதவிர முக்கிய உறவினர்கள் வந்திருந்தார்கள். மருமகள் அழைத்தால்தான் வருவேனென பிடிவாதமாக அவள் மறுத்துவிட்டாள். உண்டி சிறுத்தவர்களுக்கு வீம்புகூடாதென மகன் ஒரு பிற்பகற் போதில் ஆத்தாளுக்கு புத்திசொல்லிவிட்டு வந்தான். குழந்தை வாய் திறந்து முளைத்திருந்த இரண்டு பற்களைக்காட்டி அழுதபோதும் நாவிதர் சிரத்தையுடன் முடியை எடுத்து தலையின் குளுமைக்கு சந்தணத்தையும் குழைத்து பூசினார். இருந்தும் குழந்தை வெகு நேரம் மூக்கொழுக அழுதது, அந்த அழுகை காதுகுத்தலின்போது கூடிப்போயிற்று. தாய் மாமன் இல்லாத குறையை தாத்தா நந்தகோபால்பிள்ளையே தீர்த்துவைத்தார். கர்ணபூஷணத்தை பேர்த்தியின் சரீர பூஷணமென நினைத்தவர்போல பிள்ளை தங்கத்தால் இழைத்துவிட்டார். பின்னிரவுகளில் கோட்டைத் தடாகங்களில் பிள்ளை நடத்திய புதையல் வேட்டைக்கு ஏதேனும் பலன் கிடைத்திருக்குமாவென்ற சந்தேகம் கார்மேகத்திற்கு இருந்தது.

காதுகுத்தல் முடிந்து அம்மனுக்கு தீபாரதனை. பூசாரி வேப்பிலையை அம்மனின் மஞ்சள் பாவாடையில் வைத்து ஓரிலையைக்கிள்ளி குழந்தையின் வாயில் வைத்தார். குழந்தை மென்று துப்பியது. பின்னர் பூசை முடித்து நைவேத்ய அர்ப்பணம் செய்து தூபம் காட்டினார். முதலில் பிள்ளையிடம் தீபம் வந்தது. அவர் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டதும், கார்மேகத்திடம் வந்தது. தீபத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்கிறபோது, எதிரே ஒரு ஓரமாக தூணைப்பிடித்துக்கொண்டு நின்றிருந்த பெண்மணியைக் கவனித்தான். எங்கோ கண்டிருந்ததுபோல இருந்தது. அவளாக இருக்குமோ என நினத்ததும் மந்திரத்தால் கட்டுண்டவன் போல அவளிடம் சென்றான். பூசாரி உட்பட பிரதானியின் குடும்பம் திரும்பிப்பார்த்தது. பிள்ளைக்கு கார்மேகத்தின் தாய் ஜெகதாம்பாவாக இருக்குமோவென்ற சந்தேகம். அப்பெண்மணி தோளிலிருந்த புடவைத் தலைப்பை எடுத்து கொஞ்சம் உயர்த்திப்பிடித்து முகத்தை மறைக்க முயன்று இயாலதென்பதை உணர்ந்தவளாய்:

– சௌக்கியமாக இருக்கிறீர்களா? என கார்மேகத்தை வினவினாள்

– ம் இருக்கிறேன், உன் அம்மா?

– இறந்து விட்டார்கள்.

– இங்கென்ன செய்கிறீர்கள்.

– பெருக்கி மெழுகுகிறேன். உழவாரப்பணி செய்கிறேன், வயிற்றுபாட்டிற்கு பிரச்சினையில்லை. அவர் என்றாவாது ஒரு நாள் திரும்பவும் வருவாரென மனம் சொல்கிறது.

– யார்?

– எங்கள் வீட்டுத் திண்ணையில் கண்டிருப்பீர்களே அவர்தான். நீங்கள் கடைசியாக வந்திருந்தபோது புறப்பட்டுபோனவர் திரும்ப வரவேயில்லை.

கார்மேகம் பதில்சொல்ல வாய்திறந்தபோது, அவன் மனைவி அவனோடு வந்து சேர்ந்துகொண்டாள். பிள்ளையும் மற்றவர்களும் நடப்பதெதுவும் தங்களுக்கு சம்பந்தமில்லாததுபோல நின்றிருந்தார்கள்.

– யார் இவர்? -கார்மேகம் மனைவி

– அம்மாவிற்குத் தெரிந்தவர்.

– உங்கள் குழந்தையா?

– ம்.. எங்கள் குழந்தை, சித்ராங்கியென பெயர் வைத்திருக்கிறேன், ஒருவயது. இவள் நாராயணி, பாரியாள்.

– புறப்படலாமா மாப்பிள்ளை. அரசாங்கத்தில் செய்யவேண்டிய காரியங்கள் நிறையயிருக்கின்றன -பிள்ளை.

– ஏங்க அந்த அம்மாவிற்கு தேங்காயும் பழமும் கொடுக்கலாமா? – குழந்தையுடன் தமது மாமனார், மாமியாரைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்த கார்மேகத்திடம் அவன் மனைவி கேட்டாள்.

– அதற்கென்ன கொடேன் – திரும்பிப்பாராமலேயே அவனிடமிருந்து பதில் வந்தது.

வேலையாள் பழம் தேங்காயை எடுத்துக்கொண்டு வந்து தேடியபோது, பெண்மணி அங்கில்லை.

(தொடரும்)

———————————————————

Series Navigationகவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *