தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது.
வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை
அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?!
சுற்றி நின்றவர் சிரித்தனர். மகிழ்ச்சியாலா அல்லது அவர்கள் போராட்டத்திற்கு ஓர் கூட்டாளி வந்துவிட்டான் என்பதாலா?!
நாம் இலக்கியம் படைக்கும் பொழுதே வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்திருக்கின்றோம். மனிதனின் வளர்ச்சியையும் அப்படியே பிரித்துப் பார்ப்பதே சிறந்தது.
குழந்தையின் அழுகுரலைக் கேட்ட தாய் பிரசவ வேதனைகளிலிருந்து முழுமையாக மீண்டிருக்கா விட்டாலும் பாசத் துடிப்பால் குழந்தையை அணைத்துக் கொள்கின்றாள். குழந்தையின் அச்சம் குறைகின்றது. கருவறையின் சூட்டை உணர்கின்றது. மனித வரலாற்றைப் பார்க்கும் பொழுது முதலில் அவன் உணர்ந்ததுவும் அச்சமும் ஆச்சரியமுமே. அவையே இன்று நாம் பார்க்கும் வளர்ச்சிகளுக்குக்குரிய காரணிகள். குழந்தையின் அச்சம் குறையவும் அதற்கு அமுதம் கிடைக்கின்றது. புது அனுபவம். இதுவரை உணராத மகிழ்ச்சியில் கை கால்களை அசைத்துக் கொள்கின்றது.
மனிதன் தோன்றிவிட்டான். இனி அவன் பயணத்தைப் பார்க்க வேண்டும். எல்லாம் எழுத முடியாவிட்டாலும் சிலவற்றையாவது பதிய விரும்புகின்றேன்.
குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் முக்கியம். இன்று பல தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு குறைந்துவிடும் என்று நினைத்து புட்டிப்பால் கொடுப்பது நடைமுறையில் நுழைந்துவிட்டது. குழந்தையின் வளர்ச்சிக்கு பல வகையிலும் தாய்ப்பாலே சிறந்தது. இன்றைய நாகரீகத்தில் முதல் இழப்பு அங்கே ஆரம்பம்.
பெண்ணிற்கு இன்று பல வேலைகள். அவசர யுகம். எல்லோருடைய தேவைகளையும் கவனிக்க வேண்டும். அவளும் வேலைக்குப் போவதாக இருந்தால் இன்னும் அவசரம். இந்த ஓட்டப் பந்தயத்தில் பாதிக்கப்பட்டது குழந்தையின் பராமரிப்பு. குடிசையில் சில தாய்மார்கள் குழந்தைக்குச் சாராயம் கொடுத்து மயக்கத்தில் கிடத்திவிட்டு வீட்டு வேலைக்குச் செல்லும் கொடுமையைப் பார்த்திருக்கின்றேன். குடிகாரக் கணவனையும் அவன் கொடுத்த குழந்தைகளையும் காப்பாற்ற தாய்ப் பாசம் பலி.
ஒரு காலத்தில் நம்மிடையே கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அதனால் வீடும் சமுதாயமும் பெற்ற நன்மைகள் பல. . பன்னாட்டு அமைப்பு ஒன்றில் பெண்களின் சிறப்பு உறுப்பினராக இருந்ததைச் சொல்லியிருக்கின்றேன். எங்கள் தலைவியின் பெயர் ANN FORWARD.. நானும் அவர்களும் ஒரு நாள் ஜெனிவாவில் தனியாக நடந்து சென்று ஏரிக்கரையில் உட்கார்ந்து இந்திய வாழ்க்கையை அலசினோம். அப்பொழுது அவர்கள் புகழ்ந்து கூறியது
இந்தியாவில் இருந்த கூட்டுக் குடும்ப அமைப்பைப்பற்றித்தான். “அது ஓர் பிரமிக்கத் தக்க அமைப்பு .. இப்பொழுது அதன் மாற்றம் குடும்ப நலனை மிகவும் பாதித்து வருகின்றது” என்றும் சொன்னார்கள்.ஆசியாவிற்கும் பசிபிக் பகுதிக்கும் நான் பொறுப்பாளர். எங்கள் தலைவிக்கு உலகின் எல்லாப் பகுதிகளின் வாழ்க்கையும் தெரியும்.
மாற்றம் என்பது இயற்கை. ஆனாலும் நாம் இழந்துவிட்ட பல நன்மைகளை மறத்தல் கூடாது.
குடும்பத்தில் ஓர் மரியாதை இருக்கும். பெரியவர்கள், அனுபவப்பட்டவர்களால் குடும்பம் இயங்கியது. பாடம் சொல்லிக் கொடுக்காமலேயே பார்த்து, பழகி பண்பாடுகளைக் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அதிகாலையில் எழுந்திருப்பது முதல் ஓர் ஒழுங்கு இருக்கும். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் இருப்பார்கள். பாட்டி சொல்லும் கதைகள் நீதிக் கதைகளாக இருக்கும். பள்ளியில் இருந்த அந்த சிறப்பு வகுப்பைக் கூட எடுத்துவிட்டோம். வீட்டிலே வயசுப் பெண் இருந்தால் முதலில் அவள் திருமணம் முடித்துத்தான் ஆண்பிள்ளைகளின் திருமணம் நடத்துவர். மற்றவர்கள் பார்க்க கணவன் மனைவி உரசல், கொஞ்சல் இருக்காது. எப்பொழுது மனைவியை அணைப்போம் என்ற ஏக்கமும் பின்னர் கிடைக்கும் சுகமும் தனித்தன்மை கொண்டது. காத்திருத்தலிலும் ஓர் நன்மை. அவர்கள் கட்டுப்பாட்டால் சிறுவர்களின் மனம் அலைபாயாது. சிறுவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் செதுக்கப்பட்டது.
அழகும் ரசனையும் கூட மாறிவிட்டது
ஒரு முறை சில எழுத்தாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடந்த உரையாடலைக் கூற விரும்புகின்றேன்.
பெண் உடுத்தும் ஆடையில் கவர்ச்சியுள்ளது எது என்று.
ஆண்களும் பெண்களும் அப்பொழுது அங்கு இருந்தோம். ஒவ்வொருவரும் ஒன்று சொன்னோம். அப்பொழுது ஒருவர் கூறியது.
“ 9 கஜம் புடவைக் கட்டு “ என்றார். நாங்கள் கேள்விக் குறியுடன் பார்க்கவும் விளக்கம் கொடுத்தார். இடையழகும் தொடை அழகும் அந்தப் புடவைக் கட்டில்தான். திறந்தவெளியரங்கு மாதிரி உடலைக் காட்டினால் முதலில் பார்க்கத் தோன்றும். ஆனால் ரசனை குன்றி வேடிக்கையாகிவிடும். ஆனால் மறைந்து தெரியும் அழகிற்குக் கவர்ச்சி அதிகம். இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே என்ற ஆவலைத் தூண்டுவது அப்படிப்பட்ட உடை அலங்காரத்தில்தான் .
இன்று பத்திரிகை முதல் திரைப்படங்கள் வரை தெருக்களிலும் விளம்பரப் படங்களிலும் பெண்களைப் பார்க்கும் பொழுது நாம் சுவையான, ரசனையான நிமிடங்களைத் தொலைத்துவிட்டோம் என்பதைக் கூட உணரும் நிலையில் இல்லை. நம்மைவிட்டுத் தள்ளுங்கள். இத்தகைய ஊடகத் தாக்கங்களின் மத்தியில் வளரும் பிஞ்சுகளை எண்ணிப் பாருங்கள். அவர்கள் மன வளர்ச்சி எப்படி இருக்கும் ? இந்தத்தொடரைக் குழந்தைகள் படிக்கப் போவதில்லை. எனவே நாம் மனம்விட்டு நம் குறைகளைப் பேசிக் கொள்ளலாம்
.” Sex education “ என்று திட்டமிடும் பொழுது சிறியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்ற பெரியவர்கள் என்று பிரித்து எழுதுவது நல்லது.
இந்த நாட்டில்தான் காம சாஸ்திரம் எழுதப்பட்டது. அக்காலத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதாவது மன்னர்கள், பொருள்படைத்தோர் இவர்களை மகிழ்விக்க ஓர் பரத்தையர் பிரிவையே தோற்றுவிதிருந்தனர். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் கலை. சிலப்பதிகாரம் மாதவியும் இக்கலையைக் கற்றிருந்தாள். கோவலன் வாயிலாக அவள் கற்ற கலைகளில் சில வருணிக்கின்றான். காமம் என்பது கெட்ட சொல் அல்ல. வாழ்வியலில் முக்கியமானது. வள்ளுவரும் அறத்துப்பால், பொருட்பால் அடுத்து இன்பத்துப்பால் என்று எழுதியுள்ளார். காதல்பால் என்று எழுதவில்லை வாழ்வியலைப்பற்றி எழுதியவர் வள்ளுவரைவிடச் சிறந்தவர் யார்?
காமத்திலும் எல்லையுண்டு. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்ற பழமொழி அர்த்தம் நிறைந்தது. உண்ணும் உணவிலிருந்து எல்லாவற்றிலும் ஓர் அளவுடன் இருப்பது உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது.
இன்றைய புற வாழ்வின் போக்கு எப்படி இருக்கின்றது? அலுத்துச் சலித்துப் போன மனத்தின் உற்சாகத்திற்கு வந்தது கூத்து. ஆனால் இன்று வாழ்க்கையே கூத்தாகி விட்டது. கானல் நீரைப்போல் சினிமாவைப் பார்த்து விட்டு மயக்க நிலையில் மனம் இருக்கின்றது. உலகில் பல இடங்களில் பார்த்ததில் தமிழகம் போல அதிகமான சினிமாப் பைத்தியங்கள் மற்ற இடங்களில் இல்லை. ரசிகர்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக நோய்போல் வாழ்வியலிலும் எல்லா நிலைகளிலும் பொய்மைக் கவர்ச்சி நுழைந்துவிட்டது.
பெரியவர்களின் ரசனைகள் பிள்ளைகளைப் பாதிக்கின்றதே !
கல்லுக்குப் பால் அபிஷேகம் மூடப் பழக்கம். கட்டவுட்டிற்குப் பால் அபிஷேகம் கலாரசனை
குடிக்கத் தண்ணீர் இல்லை. கவலை எதற்கு ? திரும்பிய பக்கமெல்லாம் மதுக்கடைகள் !.
முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் பிள்ளைகளைப் புதை குழிக்கு அழைத்துச் செல்கின்றார்களே!
என்னிடம் ஒரு ஆசிரியை கூறியது
ஒரு நாள் பள்ளிக்கூட சுவற்றோரம் பள்ளிச் சிறுவன் ஒருவனும் ஒருத்தியும் ஆடைகளைக் கழற்றிவிட்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றனர். டீச்சர் சத்தம் போடவும் அவர்கள் அப்பாவித்தனமாக அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகிறோம் என்று கூறியிருக்கின்றார்கள். அந்தக் குழந்தைகள் தவறு என்று தெரிந்து எதையும் செய்யவில்லை. அதையும் விளையாட்டு என்று நினைத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் குழந்தைகளை ஆக்கியது யார் குற்றம்? வீட்டிலே, வெளியிலே , குழந்தைகளின் ஆரோக்கியமான மன வளர்ச்சிக்குரிய சூழ்நிலை இல்லை குழந்தை சிறுவனாகி பின் இளைஞனாகின்றான். அதற்குள் அவனுக்குள் எத்தனை பிசாசுகள் நுழைக்கப்படுகின்றன. இளைஞர்களைப் பெரியவர்கள் குறை கூறும்பொழுது , நேரில் இருந்தால் வாதிடுவேன் வாய்மூடி நிற்கமாட்டேன்.
இன்றைய இளைஞர்களை விமர்சிக்கின்றோமே, அதற்கு யார் பொறுப்பு. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகியிருக்கின்றோம்.
நிறைய குழுமங்களில் நான் இருக்கின்றேன். எனவே உலகில் நிறைய பிள்ளைகளும் உண்டு. ஒரு இளைஞன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்
திருமணமாகமல் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்துவாழ்வது. அதைப் பற்றிய என் கருத்தை அறிய ஆவல்.
நானும் பதில் மடல் அனுப்பினேன்
இந்தக் கலாச்சாரம் இப்பொழுது பரவி வருகின்றது. அதிலும் மேலை நாடுகளில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் இப்படி வாழ்கின்றார்கள். அவர்களுக்குக் குழந்தை பிறந்தாலும் அந்த ஆண் மணமாகா விட்டாலும் தன் மகன் என்பதை ஏற்றுக் கொள்வான். திருமண காலத்தில் மற்றவனுக்குப் பிறந்த மகனையும் தன் மகனாக எண்ணி நடத்துகின்றான். இந்திய மண்ணின் கலாச்சாரம் வேறு. மேலும் தமிழ் நாட்டின் பண்பாடு சமுதாயக் கட்டுப் பாட்டில் இருக்கின்றது (பல பெயரளவில் இருந்தாலும் பழையதைப் பேசிக் கொண்டிருக்கின்றோம் )
திருமணம் ஆகும் முன்னர் ஒர் ஆணும் பெண்ணும் சேர்ந்து சுற்றினால் காதலர்கள்.
திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்தால் அந்தப் பெண்ணிற்குப் பெயர் காதலி இல்லை. பெண்டாட்டியும் இல்லை. வைப்பட்டி என்பார்கள். ஒட்ட இருப்பவனும் ஒரு நாள் மணம் தேடி ஓடிவிடுவான். பிறக்கும் குழந்தைக்கு அப்பன் பெயர் இருக்காது. அவனும் ஒத்துக் கொள்ளமாட்டான். அந்தக் குழந்தை என்ன தவறு செய்தது ?
ஆஸ்திரேலியா நாட்டின் கதை இங்கும் தொடரும். இந்த நாட்டிற்கு அது சரியில்லை.
சென்னைக்கு நான் சென்ற பொழுது அவன் என்னைப்பரர்க்க வந்தான் வந்தவன் என் கால்களில் விழுந்து வணங்கினான்.
அப்பொழுது அவன் சொன்னது
அம்மா, என் கடித்தைப் படித்து நீங்கள் திட்டியிருந்தால் கிழவின்னு நினச்சு என் இஷ்டம்போல் நடந்திருப்ப்பேன். ஆனால் சரியாக விளக்கம் கூறினீர்கள். பாவம், புண்ணியம், கலாச்சாரம் என்று எதுவும் நீங்கள் எழுதவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தப்பு செய்யக் கூடாதுன்னு முடிவு செய்தேன்.
இது கதையல்ல. நிஜம். பெரியவர்கள் சிறுவர்களிடம், இளைஞர்களிடம் பேசும் பொழுது உளவியல் ரீதியாகப் பேச வேண்டும். மற்ற காரணங்களை அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் சில குறைபாடுகள் உண்டு. கொடியது என்று சொல்வது மாமியார் மருமகளை நடத்துவது. அடிமையைப் போல் பெண் வாழ்ந்தாள். பெண்ணியம் பேசுகின்றவர்களுக்கும் தெரியும். பெண்ணிற்கு எதிரி ஆணின் ஆதிக்கம் மட்டுமல்ல. பெண்ணின் பொறாமைக் குணமும் கூடத்தான். எப்படியிருந்தாலும் பெண் பாதிக்கப்படுகின்றாள். அன்று வீட்டு வேலைகளில் தாய் மூழ்கி இருந்தாலும் பாட்டியின் அன்பும் அரவணைப்பும் குழந்தைக்குக் கிடைத்தது.
இன்று கூட்டுக் குடும்பம் சிதறிவிட்டது. வாழும் நிலை மாறிவிட்டது. மாமியார் இப்பொழுது மருமகளுக்குள் அடக்கம். தாயும் பரபரப்பான நிலை. பாட்டியும் மற்ற வீட்டு வேலைகளில் இருப்பாள். ஓரிடத்தில் உட்கார்ந்து சந்தோஷமாகச் சத்தம்போட்டு சிரிக்கக் கூட முடியாத நிலை. பாதிப்பு குழந்தைக்குத்தான்.
குடும்பத்தில் பல பிரச்சனைகள்
குழந்தைகள் முன்னால் சண்டை. குழந்தையிடமே “அம்மா கிட்டே சொல்லாதே” என்றும் தகப்பனும் “அப்பா கிட்டே சொல்லாதே” என்று தாயும் பொய் சொல்லக் கற்றுக் கொடுத்துவிடுகின்றனர்.. திருட்டுத்தனம் அப்பொழுதே ஆரம்பமாகிவிடுகின்றது. அக்காலத்தில் குழந்தைகள் அதிகம் கேள்விகள் கேட்க மாட்டார்கள். இப்பொழுதோ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பெரியவர்கள் திகைக்கின்றோம். ஒன்றிரண்டு கேள்விகளுக்கு தாய் பதில் சொல்வாள் பின்னர் “போடா, எனக்கு வேலை” என்று சொல்லிச் சென்றுவிடுவாள்.
அப்பாகிட்டே கேட்டால் அவருக்கும் வேலையாம். என்ன தெரியுமா ? செய்திகள் படிப்பது. அரசியல் சண்டைகள் படிக்க சிலருக்கு ஆர்வம். சினிமாக் கிசு கிசு படிக்க சிலருக்கு ஆர்வம். வேறு சிலருக்கு ஆன்மீகம் படிக்க வேண்டும். சொர்க்கம் போக முயற்சி. அவனால் ஏற்பட்ட குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பார்க்காமல் ஆன்மீகம் படித்துவிட்டால் சொர்க்க வாசல் திறந்துவிடுமா? சம்பாதித்துக் கொடுப்பதுடன் கடமை முடிகின்றது என்று நினைப்பது சரியா? பிள்ளைகள் மார்க்குகள் கேட்பது, எதிர்பார்த்தபடி இல்லையென்றால் அடியும் திட்டும் குழந்தைக்குக் கிடைக்கும். அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் என்னென்ன பங்கு எடுக்கின்றார்கள்? ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். வெட்டிப் பேச்சும் சம்பந்தமில்லாதவைகளில் அக்கறை காட்டுவதும் சரியா? ஒவ்வொருவரும் தன்னைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நம்முடைய அசட்டை முதுமையில் பாதிப்பைப் பலவகையிலும் உணர வைக்கும்.
நாளுக்கு நாள் வளரும் வக்ரகுணம் பயத்தைக் கொடுக்கின்றது. மனைவியை நம்பாமல் பெண்ணுறுப்பில் பூட்டு போடும் கணவனின் குணத்திற்குப் பெயரென்ன? ஆஸ்திரேலியாவில் ஓராண்டு இருந்தேன். நூலகம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றைப் படித்தவுடன் அரண்டு போனேன். 250 வருடம்தான் ஆகின்றது. அதற்குள் நடந்தவைகள். ஒரு கணவனுக்கு எது இன்பம் கொடுத்தது தெரியுமா? மனைவியின் கை கால்களைக் கட்டிலில் நான்குபுறம் கயிற்றால் கட்டிவிட்டு பின்னர் அவளைச் சவுக்கால் அடிப்பது. அவள் துடித்தால் அவனுக்கு இன்பம். பெண்ணுறுப்பில் மெழுகுவர்த்தி ஏற்றி உள் நுழைத்துப் புண்ணாக்கி அவள் கதறுவதைக் கேட்பதில் இன்பம். வக்கிரம். அவள் செத்துவிட்டாள். அவன் கைது செய்யப்பட்டு தண்டனையும் கிடைத்தது. ஆனால் சில மாதங்களில் வெளிவந்துவிட்டான். ஏன் தெரியுமா? அவன் மனைவியின் பாட்டி ஓர் விலைமாதாம் . இந்த விலைமாதுக் கதை கொடுமையானது. இங்கிலாந்தில் கைதிகளை வைக்க இடமில்லையென்று பல்லாயிரக்கணக்கான பெண் கைதிகளை சிட்னியில் திறந்த வெளிச் சிறைக்கு அனுப்பினார்கள். அவர்களின் பணிகளில் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல ,சிறை ஊழியர்கள் முதல் கைதிகள் வரை உடல் தேவைகளையும் இவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பன் பெயர் கிடையாது. இது இன்னும் நிற்கவில்லை அய்யா. என் பேரனுடன் படித்த பல மாணவர்களுக்கு அப்பன் பெயர் தெரியாது. கைதியாய் கொண்டுவரப்பட்டு அவர்களை விலைமாதாக்கிய சமூகம்.. அங்கே குழந்தைகளின் மன நிலை பாருங்கள்.
அமெரிக்காவில் பள்ளிச் சிறுவர்கள் இருவர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து ஐம்பது மாணவர்களுக்குமேல் சுட்டுக் கொன்றுவிட்டு தங்களையும் அழித்துக் கொண்டார்கள் ஏன்? பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்குப் பிள்ளைகள் பலி. இன்று இந்தியாவில் என்ன நடக்கின்றது ?
ஊடகத் தாக்கங்களில் பிள்ளைகளும் உருண்டு கொண்டிருக்கின்றார்கள். பள்ளிகள் சென்றாலும் எத்தனை பிரிவுகள். சாதிகள், மதங்கள்!, பணத்தில் ஏற்ற தாழ்வுகள். இதில் அரசியல் சுழல் வேறு. தண்ணீர் கிடைப்பது கஷ்டம் ஆனால் குடிக்க மது கிடைக்கும். செக்ஸ்ஸும் மலிவுச் சரக்கு. குழந்தைகளின் மன வளர்ச்சி எப்படி இருக்கும்? பேசத் தெரிந்த பெரியவர்களுக்குத் தெரியாதா? கால்ரா நோய் பரவுகின்றது என்று தெரியவும் தடுப்பூசி போட ஓடுவோம். இந்த வரும்கால மனிதர்களை, நம் இரத்தத்தில் உதித்தவர்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்கின்றோம்? நமக்குள் ஒற்றுமையில்லை. சிந்தனையில் தெளிவில்லை. பேசுவதில் காட்டும் அக்கறை நல்ல செயலில் இறங்குவதில் இல்லை. வீட்டுக்குள்ளும் பெண் இரண்டு வயதுக் குழந்தையைக் கூட ட்யூஷனுக்கு அனுப்புகின்றாள். ஏன்? சீரியல் பார்க்க வேண்டும்.
இன்னொரு கொடுமையும் வளர ஆரம்பித்திருக்கின்றது. ஆடம்பர வாழ்க்கைக்கு தன் மகளை மாடலிங், தொலைக்கட்சி, சினிமா உலகத்தில் நுழைய விடுவதைப் பெற்றோர்களே செய்கின்றார்கள். ஓர் ஆண் பல பெண்களுடன் பேசினாலும் அவன் அரசியலில் பிரமுகனாயிருந்தாலும் நடிகனாக இருந்தாலும் அதிகம் விமர்சிக்கப்படுவதில்லை. அரசியலில் இருக்கும் பெண்களை, நடிகைகளை எப்படியெல்லாம் விமர்சிக்கின்றோம்.
காட்டுவாசியாக இருந்த பொழுது இருந்த கட்டுப்பாடுகள் கூட நாட்டுவாசி யாக விட்டுப் போய்விட்டன. பண்பாடுகள் என்பது மேடையில் முழங்க மட்டுமா? நம் குழந்தைகள், நம் இளைஞர்கள் இவர்களின் எதிர்காலத்தைக் கொஞ்சமாவது எண்ணிப்பார்க்க வேண்டாமா? கிழவியின் கசப்பான மருந்தை இந்தத் தாயார் கொடுக்கின்றேன். இப்படி எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும். என் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளூங்கள்.
என்ன செய்வது?
இந்தக் கேள்வியும் பலரின் மனங்களில் கிடந்து தவிப்பதும் உணர்கின்றேன். இந்தத் தொடர் முடியும் பொழுது என் அனுபவங்களைக் கொண்டு சில ஆலோசனைகள் எழுதுவேன். முடிந்தவர்கள் அவரவர் வாழும் பகுதியிலாவது முயன்று பாருங்கள். நிலைமை முற்றி விட்டதால் உடனே பலன் தெரியா விட்டாலும் நல்ல தொரு வருங்காலத்திற்கு அடிக்கல் போட்ட நிம்மதியாவது கிடைக்கும்.
குழந்தைகளின் மன வளர்ச்சியில் விளையாட்டும் பெரும் பங்கு வகிக்கின்றது. சொல்லப் போனால் குழந்தையாய் இருக்கும் பொழுதே ஆரம்பமாகிவிடும். கை அசைவும் பார்வையும் ஒன்று சேர்வதும் ஒரு பொருளைத் தொடும் முயற்சியில் ஆரம்பம். பொருளின் மென்மை, கடினம், வடிவங்கள், வர்ணங்கள் போன்ற இன்னும் பல காணும் பொருள்களிலிருந்து கற்றுக் கொள்ளும். தவழும் பொழுது ஒரு பொருளை வைத்து எடுக்கச் சொன்னால் தவழ்ந்து செல்லும் ஆர்வத்திற்கேற்ப வேகம் வரும். உற்சாகம் பிறக்கும். தேடுதல் பழக்கமும் ஏற்படும். இப்படி பல பயன்கள் ஒரு வயதிற்குள், பின்னர் விளையாட்டின் மூலம் ஒவ்வொன்றும் தெரிந்து கொள்ளலாம். திறனை வளர்க்கலாம். முயற்சி செய்யும் பழக்கமும் வளரும். ஆனால் சில பொம்மைகளை மட்டும் போட்டுவிட்டு குழந்தையையும் ஓர் உயிருள்ள பொம்மையாக்கி விடுகின்றோம். வீட்டில் கிடக்கும் பொருகளிலிருந்தே கூட விளையாட்டுப் பொருட்கள் செய்யலாம். இதுபற்றி புத்தகங்கள் இருக்கின்றன. கதை படிக்கும் ஆர்வமும் இருக்கட்டும் இதையும் வாங்கி இருமுறை படித்தாலும் போதும். குழந்தைக்கும் நல்லது. தாய்மார்களுக்கும் ஓய்வு கிடைக்கும்.
குழந்தைகளிடம் பள்ளியில் நடந்தவைகளை விசாரியுங்கள். குழந்தையின் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள். மனம் சோர்ந்திருந்தால் உற்சாகப் படுத்துங்கள். தோல்வி எதுவும் ஏற்பட்டிருந்தால் தன்னம்பிக்கையை வளர்க்கவும். வாழ்க்கையின் ஒழுங்கினைக் கற்றுக் கொடுக்கவும். முன்மாதிரியாகப் பெற்றோர்களும் குடும்பத்தில் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தவும். முதுகில் சுமையுடன் பள்ளிக்குச் சென்று, திரும்பும் பொழுது மனச்சுமையுடன் வரும் குழந்தைகள் உண்டு. பெற்றோர்கள் குழந்தையுடன் உற்சாகமாகப் பழகுங்கள். பெரியவர்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கும். இருந்தாலும் பிஞ்சு மனம் வாடவிடக் கூடாது.
மனவளர்ச்சி பற்றி ஓரளவே எழுதியுள்ளேன். நம் சிந்தனையில் கொஞ்சம் தெளிவு இருந்தால் போதும். எல்லோருக்கும் இவைகள் தெரியும்.
குழந்தைகள் வளர்ச்சிக்காக அரசு கொண்டுவந்த மூன்று பெரிய திட்டங்களை அடுத்துப் பார்க்கப் போகின்றோம்.
“அன்பு, அருள், இன்முகம், களை இவற்றோடு கூடிய உருவப் படங்களை மாட்டி வையுங்கள். குடும்பத்தில் அமைதியும், இன்பமும் நிலவும். குழந்தைகளும், நல்லவர்களாக, அழகு மிக்கோராகப் பிறப்பார்கள், வளர்வார்கள்.”
வேதாத்ரி மகரிஷி
தொடரும்.
- உன் காலடி வானம்
- பரிணாமம் (சிறுகதை)
- ஒரு புதையலைத் தேடி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23
- நினைவுகளின் சுவட்டில் (95)
- மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்
- காற்றின்மரணம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5
- கசந்த….லட்டு….!
- சிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.
- இசை என்ற இன்ப வெள்ளம்
- தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- கவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36
- அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-
- ஜிக்கி
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
- கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)
- முள்வெளி அத்தியாயம் -19
- நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
- தாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது
- பஞ்சதந்திரம் தொடர் 54
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு
- பொறுப்பு – சிறுகதை
- நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
- தரிசனம்
- கனலில் பூத்த கவிதை!
- தசரதன் இறக்கவில்லை!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி
- சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?
- கொடுக்கப்பட பலி
- வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
- அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி