குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
ஒரு பெண்ணின் கதை
அவள் ஓர் அழகான விதவை
அவளுக்கு ஒரு மகன் மட்டும் உண்டு. அரசில் பணி கிடைத்ததால் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அவள் அழகும் தனிமையும் பலருக்கு சபலத்தை ஏற்படுத்தியது. அதிலும் சிலர் வேட்டை நாயைப் போல் சுற்றிச் சுற்றி வந்தனர். அவள் கண்ணியமாக வாழ்ந்தும் வீண்பழி சுமத்தி அவளை வேதனைப் படுத்தினர். அவளுடைய நேர் மேலதிகாரி ஓர் பெண். நிலைமையைப் புரிந்து இடமாற்றம் கொடுத்தாள். போகும் இடமெல்லாம் நிழல்போல் பிரச்சனை தொடர்ந்தது. எப்பொழுதும் காவல் வைக்க அவளென்ன அமைச்சரா ? ஓடிக் கொண்டே இருந்த அவள் ஓர் நாள் ஒரு வெறியனுக்குப் பலியானாள். அழுதாள். மீண்டும் ஒருவன் அவளை அழித்தான். அழுகை நின்றது. இந்தத் தொடர் சம்பவங்கள் அவளை வேறு வழிக்கு அழைத்துச் சென்று விட்டது. ஏற்கனவே அவளை அதிகார வட்டத்தில் ஒருவன் வேட்டையாட முயன்று கொண்டிருந்தான். ஓர் ஒப்பந்தம் போட்டு அவனுடன் இணைந்துவிட்டாள். இனி வேலை பார்க்க வேண்டாம். அவனுடைய ஆசை நாயகியானாள். எல்லா வசதிகளூம் கிடைக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரி பெண்பித்தன் மட்டுமல்ல பேராசைக்காரனும் கூட. குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரன். அரசியல்வாதிகளின் உச்சத்தின் பக்கத்தில் போய்விட்டான்.
அவன் அரசியல் பேச ஓர் அந்தரங்க இடம் வேண்டும். அல்லது பலர்கண்ணில் படும் குறிப்பாகப் பத்திரிகைகளின் பார்வையில் பட்டுவிடும். எனவே ஓர் பெரிய பங்களா வாங்கினான். இவள்தான் அங்கே குடியிருப்பு. வருகின்றவர்கள் அவள் விருந்தாளிகள் என்று ஆரம்பத்தில் சொன்னான். பின்னர் அவளையும் விருந்தாக்கினான்.
அவள் மனத்தளவில் என்றோ செத்துவிட்டாள். மகனையும் வெளியில் படிக்க வைத்து வெளி நாட்டிற்கு அனுப்பிவிட்டாள். இப்பொழுது அவள் கெட்டிக்கார வியாபாரி. ஊரின் பெரிய மனிதர்களை எப்படி ரகசியமாக வரவேற்க, அவர்கள் விரும்பும் பெண்களை ரகசியமாக அனுபவிக்க, அலங்கார அறைகள் அமைக்க எல்லாவற்றிலும் கைதேர்ந்துவிட்டாள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் கிடையாது. மிக மிக உயர்ந்தவர்கள், சக்தி படைத்தவர்கள் அவள் வாடிக்கயாளர்கள். இப்பொழுது அவளால் யாரையும் ஆட்டிவைக்க முடியும். இப்பொழுது விருந்துணவில் அவள் கிடையாது. விலகி இருந்து வித விதமான விருந்துகள் வெளியிலிருந்து பெற்று விருந்தோம்பல் செய்தாள்.
அவள் வாழ்க்கை இப்படியானதற்குக் யார் காரணம் ?
அவள் குற்றவாளியா?
செத்திருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகின்றதா?
பெற்றமனம் அவளை சாகவிடவில்லை. அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது? மகனை வாழ வைத்துவிட்டாள். அவளும் கோயிலுக்குப் போவாள். வீட்டில் பூஜை அறை உண்டு. கடவுளைப் பார்த்தால் சிரிப்பாள். அழமாட்டாள். செத்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதைப்பற்றி அவளுக்குக் கவலை இல்லை. உயிருடன் இருக்கும் பொழுது அவள் அனுபவிக்காத நரக வாழ்க்கையா?
அய்யா, பெரியோர்களே இது கதையல்ல, இது நிஜம்.
என்னிடம் பணியாற்றிய பல்லாயிரக் கணக்கான பெண்களில் இவளும் ஒருத்தி. ஆரம்பத்தில் மட்டும் பாதுகாப்பு தர முடிந்தது.
என் தோல்விகளின் எண்ணிக்கையில் அவளும் ஒருத்தி.
தமிழ் மண்ணிலேயும் பரத்தையர் சேரி இருந்தது. அவர்களுக்கென்று தனி ஊர்கள், வேளம் என்று அழைக்கப்பட்ட சிறப்புப் பகுதிகள் இருந்தன. பின்னர் தெருக்களாகி, அந்த நிலையும் மாறி வீடுவரை வந்து சமுதாயத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொத்தமங்கல சுப்பு அவர்கள் எழுதிய தில்லானா மோகனாம்பாள் கதையில் அப்படியே காட்சிப்படுத்தி யிருப்பார்.
மும்பை, டில்லி, கல்கத்தா ஆகிய இடங்களில் சிகப்பு விளக்குப் பகுதி என்று விலைமாதர்களின் வியாபார மையங்கள் ! சுற்றுலா வருகின்றவர்களின் பசிக்கு அரசே கனிவுடன் அமைத்துக் கொடுத்த இல்லங்கள். நாம் விருந்தோம்புதலில் மிக மிக உன்னதமானவர்களாயிற்றே.
மும்பையின் சிகப்புவிளக்குப் பகுதிக்குத் துரையின் காரில் மத்திப்பிற்குரிய சாரியுடன் சென்று கொண்டிருந்தேன் சாரி கொதித்துப்போய் உட்கார்ந்திருந்தார். பாவக் குழிநோக்கிச் செல்வதைப்போன்று பதட்டம். இது அவர் பண்பு. இந்தப் பண்பு அவரிடம் எப்படி வந்தது?. இது சிந்தனைக்குரிய விஷயம்
மனிதன் நாகரீகம் பெறப் பெற பண்பாட்டையும் வளர்த்தான். அதில் ஆனந்தமும் அமைதியும் கண்டான். ஏற்கனவே அச்சமும் ஆச்சரியமும் தோற்றுவித்த இறைக் கொள்கையில் இதனையும் ஓர் விதியாகச் சேர்த்தான். பின்னர் தோன்றிய சித்தர்கள் தன் சித்தத்தை அடக்கி சக்தியை வளர்த்துக் காட்டியவைகள் வியப்பைக் கொடுத்தது. முழுமையாக அவனால் உதற முடியா விட்டாலும் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகம் புரிந்து கொண்டான்
இங்கே என் அனுபவம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன்
கணினி கற்ற சமயம். பலர் கணினி உலகில் அறிமுகமாயினர். அதன்பின் சென்னைக்குச் சென்ற பொழுது சிலரைக் காண விழைந்தேன். கணினியில் என் கோரிக்கையையும் வைத்தேன். சென்னைக்குச் சென்ற பொழுது அந்த முறை என் தங்கை சரசா வீட்டில் குரோம்பேட்டையில் தங்கினேன். இரவு ஏழு மணி இருக்கும். என்னைப் பார்க்க இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் ராமா. ஆன்மீகத்தில் பற்று கொண்டவர் ஆஞ்சனேய பக்தர். அவருடன் வந்தவர் புதியவர். பார்க்க இளைஞராகத் தெரிந்தார். பின்னர்தான் அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் எனத்தெரிந்தது பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் என்னை இரு கேள்விகள் கேட்டார்
1951 இல் தானே முதல் முறையாக சுவாமி சிவானந்தா அவர்கள் உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அதுவும் அவராக அனுப்பினார். அப்பொழுது உங்களுக்கு அவரை யார் என்றே தெரியாதல்லவா?
கேள்வியைக் கேட்டு அதிர்ந்து போனேன். அந்தப் புதியவர்க்கு இந்த உண்மை எப்படி தெரிந்தது?
அடுத்த கேள்வியும் என்னை அதிரவைத்த கேள்வி.
உங்களிடம் ஒரு முருகன் சிலை இருக்குமே. நீங்கள் 1952 இல் அதனை வாங்கினீர்கள். சின்னஞ்சிறு தந்தச் சிலை. அதன் வேல் காணாமல் போயிருக்குமே?!
ஆச்சரியத்தில் மலைத்துப் போய் உட்கார்ந்துவிட்டேன். அவர் காலில் விழுந்து வணங்கவில்லை.
இந்த அம்மாள் கதை அளக்கின்றார்கள் என்ற பாட்டு ஆரம்பித்துவிடுமே. நம்மால் தேடலுக்குச் செல்ல முடியாது. புரிந்து கொள்ளும் ஆர்வமும் கிடையாது. நம்மால் முடியாதுதான். அரசியல், சினிமா இன்னும் பல மாயைகளில் மயங்கிக் கிடக்கும் நமக்கு இது எதற்கு? எவனாவது பேசினால் சொல்லால் அடிக்கலாம். . நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் இயல்பு. என் அனுபவங் களைக் கூறி வருகின்றேன். அவ்வளவுதான்.
வந்த புதியவர் மந்திரம் கற்றவர் இல்லை. நம்மைப்போல் உடை உடுத்தியிருந்தார். காவி உடையில் இல்லை. அவரால் எப்படி முடிந்த்து? TIME MECHINE ஆங்கிலத்தில் கூறினால்,, விஞ்ஞானம் என்று சொல்லிவிட்டால் தலையாட்டிவிடுவோம். விஞ்ஞானம் என்றோ தோன்றிவிட்டது. பல சித்தர்கள் இந்த மண்ணில் மட்டுமல்ல பல இடங்களில் வாழ்ந்திருந்தனர். அவர்கள் கண்டவைகள் வியக்கத்தக்கன. மெஞ்ஞானிகளான அவர்கள் சிறந்த விஞ்ஞானிகள். வந்தவரைப் பார்ப்போம்.
அவர் உணவில் கட்டுப்பாடுண்டு. வீரியத்தை வீணாக்காமல் பிரம்மச்சரியம் காத்தவர். அவ்வப்பொழுது இமயமலைக்குச் சென்று வருவார். அவர் நம்மில் ஒருவராகவும் நம்மில் மாறுபட்டவராகவும் வாழ்ந்துவந்தார். அந்த பிரம்மச்சாரிக்குத் தொலை நோக்கு சக்தி இருப்பது உணர முடிந்தது. தமிழகம் செல்லும் பொழுதெல்லாம் ஒரு முறையாவது எங்கிருந்தோ வந்து பார்த்துவிட்டுப் போவார். ஒரு நிலையான முகவரி அவருக்குக் கிடையாது. நாம் நினைக்கலாம். பிறந்தது வாழத்தானே, ஏன் ஆசைகளை அடக்கி வாழ வேண்டும்? இந்த எண்ணம் தவறானது என்று கூறவில்லை. கடவுள் மறுப்பு கூறுகின்றவர்கள் கூட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்கின்றார்களே, அவைகளின் பொருள் என்ன? ஒன்றை மட்டும் உதாரணமாக எடுத்துப் பார்ப்போம்.
ஒருத்தியை மணந்து கொண்டு அமைதியான தாம்பத்தியம் நடத்துவது. நமக்கு அமைதியைக் கொடுக்கவல்ல இல்லறம். ஒருவன் ஒருத்தி என்ற வாழ்க்கைக்குக் கட்டுப்பட்டு கண்ணியம் காப்பது கடமை என்றால் அதனை மறுத்தல் அறிவுடைமையாகுமா? மேடையில் முழங்குவதும் எழுத்தில் அலங்கார வார்த்தையைக் கோர்ப்பதுவும், இருக்கின்றவர்களில் எத்தனை பேர்கள் ஒருத்தியுடன் மட்டும் வாழ்கின்றனர்? உண்மையாக உழைத்து, நேர்மையுடன் பொருளீட்டி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கின்றவர்கள் எத்தனை பேர்கள்? அடுத்தவர்க்கு உதவ முடியாவிட்டாலும் சொல்லால் செயலால் பிறரை நோகடிக்காமல் வாழ்பவர்கள் எத்தனை பேர்கள் ? அக்கினிப் பரீட்சை வைத்தால் சாம்பல்தான் மிச்சம். வேதனையின் வெடிப்பு எனது குமுறல்.
போய்க் கொண்டிருக்கும் இடம் சிற்றின்பம் கிடைக்கும் சந்தையைப் பார்க்க.
பேசுவது சித்தத்தை ஒருநிலைப்படுத்துவது.
பொருந்தவில்லையல்லவா?
போர்க்களத்தில்தான் கீதை பிறந்தது.
சாரியின் குமுறல் என்னைச் சிந்திக்க வைத்து புலம்ப வைத்தது. போகின்ற பாதையில் கார் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. புதியவன் ஒருவன் உடன் ஏறிக் கொண்டான். சாரி இறங்கி என்னருகில் உட்கார்ந்தார். வந்தவன் அப்பகுதியின் காவல்காரன். வேகமாகக் காரைச் செலுத்தாமல் மெதுவாகச் செலுத்தும்படி கூறினேன். ஊர்வலத்தில் செல்வது போல் வண்டி ஊர்ந்த்து. என் பார்வை அப்பகுதியில் படர்ந்து சென்றது. என் மனம் குமுறியது. என்ன செய்ய முடியும்? வாழ்வியலில் இதுவும் ஓர் பக்கம்.
ஒரு காலத்தில் சென்னையில் இருந்த மூர்மார்க்கட் நினைவிற்கு வந்தது. ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்ததால் பயணிகள் அங்கு வந்து வீட்டிற்குப் பொருட்கள் வாங்கிச் செல்வர். கடைகளில் கொட்டிக் கிடக்கும். இருக்கும் இடத்தில் பொருட்களை அடைத்து வைத்திருப்பர். பெரிய கடைகளில் வைக்கப்படும் நேர்த்தியை இங்கு காணமுடியாது. விலையும் வாங்குவதற்கேற்ப மலிவாக இருக்கும்.
இப்பகுதியில் பெண்கள் பொருட்களைப் போல் குவிந்து நின்றனர். ஆடைகளும் குறைவே. பார்வையில் ஓர் அழைப்பு. சில இடங்களில் கையாட்டி கூப்பிட்டனர். பார்க்கின்றவன் கேலிச் சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றவனும் உண்டு. அழைப்பை ஏற்று வீட்டிற்குள் நுழைந்தவனும் உண்டு. சில வீடுகளில் மாடிகளில் கூட கூட்டமாக பொம்மைகளைப் போல் நின்று கொண்டிருந்தனர்.
சிகப்பு விளக்கு பகுதி என்று ஏன் பெயர் வந்தது? எல்லா வீடுகளிலும் அந்த சிகப்பு விளக்கு இருக்காது. இத்தொழிலுக்கு அனுமதி பெற்றவர்கள் மருத்துவ பரிசோதனை முதற்கொண்டு செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அந்த விளக்கு எரியும். அதே தெருவில் அந்த விளக்கில்லாத வீடுகளும் இருக்கும். ஹோட்டல்களில் போலீஸ் வந்து கைது செய்வதைப் போல் இந்த வீடுகளுக்கு வரமாட்டார்கள். தயக்கமின்றி தொழிலை நடத்தலாம். இங்கிருப்பவர்கள் இந்த நாட்டின் எப்பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இது ஓர் பாரதவிலாஸ். இங்கே சாதி, மொழிப் பிரச்சனைகள் கிடையாது. முதல் நுழைவு விருப்பத்துடன் இருக்காது. எங்கிருந்தோ கடத்தப்பட்டு வந்தவர்கள். நாட்கள் செல்லச் செல்ல ஓர் குடும்பமாகிவிடுவர். இதுதான் அந்த பெண்களின் வாழ்க்கை. ஏற்கனவே நாம் அறிந்தவைதான்.
அந்தத் தெருவில் உள்ள ஓர் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றான் உடன்வந்த காவல்காரன். ஓர் பெண் நுழைவது வித்தியாசமானது. முகப்பில் இருந்த அம்மா எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். சாரி வராமல் இருக்க முடியாது. அவர்தான் எங்கள் உரையாடல்களுக்கு மொழிபெயர்ப்பாளர். வீட்டின் நடுவில் இருந்த அறையில் உட்கார்ந்தோம். நாற்காலிகள் இருந்தன. வீட்டில் இருப்பவைகளைச் சேகரித்து அந்த இடத்தில் போட்டிருக்க வேண்டும். தனித் தனி அறைகள் சில இருந்தன. அந்த தொழிலுக்கு வேண்டுமே. அங்கே போய்ப்பார்க்க எண்ணவில்லை. காமக் களியாட்டாம் பற்றி எழுதப் போவதில்லை. இப்பொழுது செக்ஸ் கல்வி என்று சொல்லி, சில பத்திரிகைகளில் எத்தனை விதமான செய்திகள் படங்களுடன் வருகின்றன.
நான்கு பெண்கள் வந்து அமர்ந்தனர். அவர்களில் ஒருத்தி தமிழ் நாட்டைச் சேர்ந்தவள். காவல்காரன் தேர்வு செய்யும் பொழுதே தமிழ்ப் பெண் ஒருத்தி இருக்கும்படியாகத் தேர்ந்தெடுத்திருந்தான். தொழில் உத்தி தெரிந்தவன். அதுமட்டுமல்ல. அவனுக்கும் தமிழ் தெரியும்.
அவர்கள் அங்கு எப்படி வந்து சேர்ந்தார்கள், எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்ற விசாரணை செய்யவில்லை. பத்திரிகைகளில், கதைகளில், திரைப்படங்களில் பார்த்திருக் கின்றோம். சாதாரணமாக நலன் விசாரித்து அவர்கள் பொழுது போக்குகள் பற்றி கேட்டேன். நம் வீட்டில் இருப்பது போல் தொலைக் காட்சி பெட்டி இருந்தது. படித்தவர்கள் படிக்க செய்திதாள்களும் கதைப் புத்தகங்களும் சில இருந்தன. அவள் பொழுது போக்குக்கு மட்டுமல்ல வருகின்றவர்கள் தங்கும் நேரம் குறைவாக இருப்பினும் பேசுவதற்கு உலக விஷயங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். வருகின்றவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அவர்கள் எப்பொழுதாவது சேர்ந்து வெளியில் செல்வார்கள். முக்கியமாக கோயில்களுக்குச் செல்வார்களாம். சினிமாவிற்கும் கடற்கரைக்கும் எப்பொழுதாவது போவதுண்டாம். அந்த அம்மாவும் இப்படி வந்தவள்தான். கொஞ்சம் வயதாகவும் பதவி உயர்வு. அம்மாவாகி விட்டாள்.
உரையாடல் தொடங்கியது
கல்யாணம் செய்துகிட்டு குடும்பமா இருக்க முடியல்லியே என்ற வருத்தம் இருக்கா?
“தொடக்கத்திலே இருந்தது. இப்போ உலகம் போற போக்கிலே எந்தக் குடும்பத்திலே முழு நிம்மதியா இருக்காங்க? கொஞ்ச பேர்கள் இருப்பாங்க. அடியும் மிதியும்பட்டு குடிகாரனுடன் குடும்பம் நடத்தறதைவிட இங்கே தொல்லை குறைச்சல். எங்களுக்கு வருத்தமோ ஏக்கமோ இல்லே. ஒரே ஒரு வருத்தம்தான். குழந்தை இருந்துச்சுன்னா சொந்தம்பந்தம் நினைப்பு வருது. அது நல்லா வளரணுமேன்னு தோணூது. அதுக்கு மட்டும் ஒரு வழி கிடைச்சா நிம்மதியா இருக்கும்.”
சிலர் அவர்கள் ஊர்களுக்குச் சென்று வருவதுண்டு. வெளியூரில் வேலை பார்ப்பதாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் எல்லா பெற்றோர்களும் இவளையே வீட்டுக்குள் நுழைய விடமாட்டார்கள். அப்பன் பேரு தெரியாத குழந்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்க்காரி தன் பெற்றோர்க்குப் பணம் அனுப்புவதாகக் கூறினாள். இவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளை ஊருக்கு அனுப்பு வார்கள். அல்லது உள்ளூரில் இருக்கும் சிறுவர்கள் விடுதிகளுக்கு அனுப்பி படிக்க வைக்கின் றார்கள். அந்தப் பெண்களிடம் இருந்த ஒரே கவலை தங்கள் குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதே. இச்சூழலில் வளர்வதை விரும்பவில்லை. ஆரம்பத்தில் வந்த பொழுது கஷ்டமாக இருந்தாலும் இப்பொழுது சந்தோஷமாக இருப்பதாகக் கூறினர். அந்த அம்மாவைத் தங்கள் தாயாராக நினைக்கின்றார்கள்.
“நானும் அப்படி வந்தவதான்மா, கஷ்டம் தெரியும். எனக்கும் வேறு யாரு இருக்காங்க. இவங்களைத்தான் என் புள்ளங்களா நினைக்கிறேன்.” இது அம்மாவின் கூற்று(மொழிபெயர்ப்பில் )
உரையாடல் அனைத்தும் உண்மையாக இருத்தல்வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கூட்டிக் குறைத்து, மாற்றி, மறைத்துப் பேசியவைகளும் இருக்கலாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை.
ஒரு கேள்வியும் பதிலும் எழுதப்படவேண்டும்
நீங்கள் செய்யும் தொழில் பாவமாகத் தெரியவில்லையா?
இல்லை. நாங்கள் யார் குடும்பத்தையும் கெடுக்கவில்லை. எங்களிடம் வரும் ஆண்களும் எங்களால் அவர்கள் குடும்பத்தில் பிளவை உண்டுபண்ணுவ தில்லை. இதில் எங்கே பாவம் வந்தது ?
அங்கே இருந்த அம்மாவுக்காக சொன்னவையல்ல. ஆத்மார்த்தமாக வந்த பதில் என்னை ஆட்டி வைத்த பதில்.
ஒருவன் குடும்பத்தைப் பாதிப்பது பாவம்.
பாவம் என்ற சொல் பிடிக்கவில்லையா? மூடப் பழக்கத்தில் வரும் ஓர் சொல். தவறு என்று சொல்லிக் கொள்ளலாம்.
எத்தனை பேர்கள் எண்ணிப் பார்க்கின்றோம். குடி, செக்ஸ், பேராசை, சுயநலம், சுரண்டல் , பொறாமை இப்படி எத்தனை பேய்கள் வசம் அடிமைப்பட்டு குடும்பத்தை, அதன் நிம்மதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றோம். அடுத்தவர் குடும்பத்தை மட்டுமல்ல. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் தாம்பத்ய சுகத்தை, அமைதியை அழித்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதில் ஆண் என்றும் பெண் என்றும் பிரிக்கவில்லை.சமுதாயத்தில் கண்ணியமானவர்கள், பொருள் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் என்று சொல்லிக் கீழ்த்தரமாக நடப்பவர்கள் பாவிகளா? எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டு, எல்லாம் இழந்து உடல்வைத்து தொழில் நடத்தும் இவர்கள் பாவிகளா?
இயற்கை என்றால் ஆளுக்கு ஒருமாதிரி என்று இயங்காது. பிள்ளை சுமப்பது பத்து மாதங்கள் என்றால் இந்தியாவானாலும் அமெரிக்காவானாலும் உலகில் எப்பகுதியானாலும் ஒரே மாதிரிதான். மனிதன்தான் புது இலக்கணம் படைத்தவன். நிலங்களை வைத்து குலங்களின் பெயர்களைக் கூறியது, அவைகளில் உயர் குலம் என்றும் உயர்குலம் அல்லர் என்றும் பிரித்து உயர்குலத்திற்கு மட்டும் கற்பு என்று தனக்கேற்றவாறு இலக்கணம் படைத்தவன் மனிதன். எனவே சிகப்பு விளக்கு பெண்களுக்குக் கற்பு கட்டாயமில்லை. எனவே பாவமில்லை. நாம் எல்லோருமே ஏதோ ஒருவகையில் தவறு செய்கிறோம். எண்ணங்களில் செயல்களில் பாவம் செய்கின்றோம். அந்தப் பெண்கள் முன்னால் தலை குனிந்தேன்.
அறிவுரைகள் ஆஸ்ரமத்தில்தான் கிடைக்கும் என்பதில்லை. விலை மாதர் இல்லங்களிலும் கிடைக்கும்.
உடனே எழுந்து விடவில்லை. அக்கறையில் இன்னும் ஒரு கேள்வி கேட்டேன்
இப்படி வாழ்வதில் உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு நோய் வருமே?
மீண்டும் சாட்டையடி கிடைத்தது.
யாருக்குத்தான் வியாதி வரல்லே. மனுஷனாப் பிறந்தா வியாதியும் வரும். சாவும் வரும். எங்களுக்கு மட்டுமா ஆஸ்பத்திரி இருக்கு?
பேசிய பெண்கள் முகங்களில் ஆத்திரம் இல்லை. அமைதியாகப் பதில் கூறிவந்தனர்
நாம் எப்படி இருக்கின்றோம்? நமக்குப் பிடிக்காதவர் பற்றி ஒருவர் புகழ்ந்து விட்டால் உடனே வசைப்பாட்டு பாடத்தொடங்கிவிடுகின்றோம். நமக்குப் பிடித்தவர்களைப்பற்றி பிறர் ஒரு சின்னக் குறை கூடச் சொல்லக் கூடாது. பொங்கி எழுந்துவிடுவோம்.. ஒருவருக்குப் பிடித்தவர் அடுத்தவர்க்கும் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை. எனவே எதற்கும் சண்டை. கூச்சல். வெட்டி விமர்சனங்கள். யாருக்காகப் பரிந்து பேசுகின்றோமோ யாருக்காக சண்டை போட்டுக் கொள்கின்றோமோ அவன் கோடீஸ்வரனாக, கொக்கரித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். நாமோ புலம்பி விட்டு அதிலே சமாதானம் காண்கின்றோம்.
கனத்த மனத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினேன்
காரில் ஏறும்பொழுது கொஞ்ச தூரம் தானும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு காவல்காரனும் உடன் ஏறினான். ஏற விட்டுத்தான் அவன் நோக்கம் புரிந்தது. அவனும் பேச விரும்பினான்.
அம்மா, என் தொழிலும் மோசமாத் தெரியலாம். பெரியமனுஷங்க போர்வையிலே வேஷம் போட்டு நாங்க ஊரை ஏமாத்தல்லே.
ஒரு அனுபவம் சொல்றேன்மா. பெரிய மனுஷன் மும்பையில் உயர்ந்த வகுப்பு பெட்டியில் ஏறுவான். என்னைப் போல் ஒருத்தனும் ஒரு பெண்ணுடன் ஏறுவான். கொஞ்ச நேரத்துலே அந்தப் பொண்ணு பெரிய மனுஷன் பொட்டிக்குப் போகும். நாங்க வெளியில் சுத்துவோம். டிக்கட் கலெக்டர் கண்டுக்க மாட்டாங்க. கொஞ்ச துரம் போய் நிற்கும் ஸ்டேஷனில் பொண்ணும் வந்துடும். நாங்க சேர்ந்து இறங்கிடுவோம். இதுக்குப் பேர் என்னம்மா? வேலையைப் பார்க்க வரேன்னும், ஜனங்களைப் பார்க்க வரேன்னும் வந்துட்டு ராத்திரி இவங்க அடிக்கும் கும்மாளத்திற்கு எத்தனை பேருங்க வேலை செய்யறாங்க. படிச்சவங்க கூட அப்படி ஆடும் போது, நாங்க ஏழைங்க, ஏதோ புழைக்கிறோம். பச்சோந்தி பயலுங்க அவங்க செய்யறது பாவம் இல்லைன்னா நாங்களும் செய்யறது பாவம் இல்லே. மனம் விட்டுப் பேச அனுமதிச்சிங்களே அதுக்கு நன்றிம்மா. நீங்க நிச்சயம் இதை எழுதணும்.
அவன் இறங்கிவிட்டான். ஆனால் அவன் சொன்னது என் ஆழ்மனத்தில் தங்கிவிட்டது.
என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எல்லாத் தரப்பிலும் பன்முகம் உடையவர்களைப் பார்த்திருக்கின்றேஎன். விளையாட்டுப் பருவம் தாண்டிய பிறகு என்னைப் புரட்டி எடுத்துச் சென்றது காட்டாறுதான். சிகப்பு விளக்கு பகுதியின் சிருங்கார விளையாட்டுகளை நான் எழுதவில்லை.அது தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கச் சில தகவல்கள் தர வேண்டியது என் கடமை.
“எங்கள் வீட்டில் குறை இல்லை. மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம். “
இப்படிச் சொல்லத் தோன்றும். நான் வரும் பொழுது உங்கள் வீட்டில் ஒரு மணி நேரமாவது தங்க ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் வெளியே போய்விட்டு கொஞ்ச நேரம் கழித்துவாருங்கள். உங்கள் குடும்பத்தில் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள், வேதனைகளின் பட்டியல் தருகின்றேன். நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எல்லாக் குடும்பங்களும் தீமையில் மிதக்கின்றன என்று சொல்லவில்லை. ஊரில் காலரா, சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல் இருக்கின்றது என்ற செய்தி அறிந்தால் உடனே தற்காப்பிற்குத் தடுப்பூசி போட எண்ண வேண்டித்தானே அறிவு. நாமும் நம் குழந்தைகளூம் வீட்டிற்குள் அடைந்து கிடக்க முடியாது. இப்பொழுது வீடுகளுக்குள்ளும் தீய காற்று நுழைந்துவிட்டது.
பள்ளியில் மாணவன் மண்டையை உடைக்கின்றார் ஆசிரியர். மாணவன் ஆசிரியரைக் கத்தியால் குத்துகின்றான். ஆசிரியை மாணவனைக் கூட்டிக் கொண்டு ஓடுகின்றாள். தகப்பன் பத்திரிகை செய்திகளில் அல்லது திண்ணைப் பேச்சில் மும்முரம். தாய்க்கோ சீரியல்களின் நாயகிகளைப் பற்றிக் கவலை. சிறுவர்களுக்கு யார்? இளைஞர்களுக்கு தோழர்களும் கணினிகளும். பரவசப் படுத்தும் காட்சிகள் எத்தனை எத்தனை? அதிகாரத்தில் பூமிக்குள் இருக்கும் கல்லையும் மண்ணையும் மனிதன் திருடி கோடீஸ்வரனாகின்றான். எல்லாம் கலப்படம். கடவுளைக் கல்லாக்கி விட்டோம். கட்சித் தலைவர்களும் நடிகர்களும் தெய்வமாகி விட்டார்கள். கொள்கைகளும் காசு கிடைக்கும் இடங்களுக்கு மாறி மாறி ஓடுவதைப் பொறுத்திருக்கின்றது. சுய உணர்வை மயக்கி யாகி விட்ட்து. எங்கும் மதுக்கடை. மயக்கும் எழுத்து, பேச்சு, காட்சிகள்.
நாம் புதை குழியில் அமிழ்ந்து கொண்டிருக்கின்றோம். எப்படித் தப்புவது, சிலரையாவது எப்படி காப்பாற்றுவது என்று சிந்திப்போமே. கிசு கிசு செய்திகளும் சுடச் சுடச் செய்திகளும்தான் வேண்டுமா? வேதாந்தம் படிக்கச் சொல்ல வில்லை. வெட்டிப் பேச்சைக் குறைக்கலாமே. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று சொன்னாலும் சரி ஆன்மீகம் என்று சொன்னாலும் சரி அமைதி காக்க வழி தேடுவோமே.
சிகப்பு விளக்கு பகுதிக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம். நம் சமுதாயத்தில், ஏன் உலகில், சிகப்பு விளக்கு எரிகிறது என்று எண்ணிப் பாருங்கள். இது செக்ஸ் இல்லங்களை அடையாளம் காட்டும் விளக்கல்ல. நம் வாழ்க்கை அமிழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டும் அபாய அறிவிப்பு இந்த சிகப்பு விளக்கு !
வேலூரில் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றும் பொழுது வேலூர் சிறைக்கு அடிக்கடி செல்வேன். அப்பொழுது சிறை கண்காணிப்பாளாராக இருந்தவர் திரு குணசேகரன். அந்தக் குடும்பத்துடன் பழகினேன். அங்கே சென்றால் அவர்கள் வீட்டுக்கு மட்டும் போகாமல் சிறைக் கம்பிகளுக்குப் பின் இருந்த குற்றவாளிகளிடமும் பேசுவேன்.
கச்சேரி தெருவில் ஶ்ரீசாதானா என்று ஒரு இல்லம். அதுவும் சமூக நலத்துறையைச் சேர்ந்ததுதான். நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுவரும் விலைமாதர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்குப் புனர் வாழ்வு கொடுக்கும் முயற்சி நடக்கும். அந்த இடம்பற்றிக் கூறும் பொழுதே ஓர் அவலக் கதை நினைவிற்கு வருகின்றது. கதையல்ல. அதுவும் நிஜம். அடுத்து அதுபற்றி கூறுகின்றேன்.
வாழ்வியல் என்றால் நாம் பேச நிறையவே இருக்கின்றன. ஆன்மீகம் முதல், அதாவது சோதிடம், மனவளக்கலை, இன்னும் பல கலைகள், அரசியல் உட்பட எல்லாம் பேசலாம்.இறைவன் எனக்கு சக்தியும் ஆயுளையும் கொடுக்கும் வரை சமுதாயத்திற்கு முடிந்த தொண்டுகள் செய்ய விரும்புகின்றேன்.
“கிளர்ச்சிகள் எல்லாம் மகிழ்ச்சிகள் அல்ல
உண்மையான மகிழ்ச்சி உங்களுடன் அடுத்தவரையும் மகிழ வைக்கும். உங்களோடு சேர்ந்து உங்களுக்கு நெருங்கியவர்களையும் மகிழ வைக்கும். உண்மையான மகிழ்ச்சி நேர்வழியில்தான் வரும். பின்னால் வருந்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் கிளர்ச்சி மகிழ்ச்சியைத் தருவது போல் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடாது. ஆசைப் பட்டதைப் பெற எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும் உங்கள் நல்ல தன்மைகளைப் படிப்படியாக அழிக்கும். உங்களையும் உங்களுக்கு நெருங்கியவர்களையும் கடைசியில் துக்கத்தில் ஆழ்த்திவிடும்.
எனவே மகிழ்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள்.
மகிழ்ச்சியை நாடுங்கள் கிளர்ச்சியை விலக்குங்கள் “
வாழும் கலை –என். கணேசன் (www.enganeshan.blogspot.com )
தொடரும்
படத்திற்கு நன்றி.
- ஒரு கூட்டம் புறாக்கள்
- பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்
- ஆலமரத்துக்கிளிகள்
- சும்மா வந்தவர்கள்
- மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்
- வெளிநடப்பு
- இந்திய தேசத்தின் தலைகுனிவு
- சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்
- கண்ணீரில் எழுதுகிறேன்..
- சிறை
- நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
- ஓடியது யார்?
- ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
- காதல் துளி
- மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்
- தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !
- அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
- குரானின் கருவும் உருவும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30
- எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
- கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
- நம்பிக்கை ஒளி! – 1
- நினைவுகளின் சுவட்டில் (101)
- மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை
- பத்தி எரியுது பவர் கட்டு
- அக்னிப்பிரவேசம் -3
- வெற்றியின் ரகசியம்!
- கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்
- என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்
- ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
- “சொள்ள மாடா! மாத்தி யோசி!”
- பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
- அனைவருக்குமான அசோகமித்திரன்!