குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்

This entry is part 16 of 29 in the series 18 நவம்பர் 2012

குன்றக்குடியில் கி பி எட்டாம் நூற்றாண்டில் முதலாம் பாண்டியன் அமைத்த  ஒரு குடைவரைக்  கோயில் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு.

 

அதன் பக்கவாட்டு மலைப்பகுதிக்குச் சென்றால் அங்கே சமணர்கள் அமைத்த படுகைகள் இருக்கின்றன.. அவற்றைப் பார்த்திருக்கின்றீர்களா. அடுத்தமுறை சென்றால் இவை இரண்டையும் தவற விடாதீர்கள்.

 

காரைக்குடியில் இருந்து  8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது குன்றக்குடி. குன்றக்குடிக்கு எப்போது சென்றாலும் மலைமேலிருக்கும் சண்முகநாதனை வணங்கி வருவதுடன் அன்றைய ஆலயதரிசனம் முடிந்துவிடும். ஆனால் இந்த முறை சென்ற போது அங்கே கும்பபிஷேகத்துக்கான மண்டப வேலைகள் மற்றும் பணிகள் நடைபெற்று வந்ததால் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள படிக்கட்டுக்களிலோ அல்லது மேற்குப் பக்கம் உள்ள படிக்கட்டு வழியாகவோ செல்ல வேண்டி வந்தது.

 

கோயில் மண்டபத்தில் நின்று காதையும் தும்பிக்கையையும் அசைத்துக் கொண்டிருந்த வேழ முகத்து யானையைத் தாண்டி விநாயகரையும் ஆழத்துத் தூணில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயப் பிரபுவையும், கீழே அருள் பாலிக்கும் சுப்ரமணியரையும் வணங்கி உள்புறமாகச் சென்றால் அங்கே ஒரு அதிசயம் காத்திருந்தது.

 

பிறந்து வளர்ந்து பல காலமாக வந்து போய்க் கொண்டிருக்கும் ஊர் என்றாலும் இந்த முறை அது அற்புத தரிசனமாக அமைந்தது. அங்கே ஒரு மண்டபம் இருந்தது. அது தொல்லியல் துறை போர்டைத் தாங்கி இருந்தது. அங்கே முத்து கணேசன் என்ற தொல்லியல் துறையின் ஊழியர் இருந்தார். அவர் இது பற்றி விளக்கமாகக் கூறினார்.

 

இந்தக் குடைவரைக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிப்பில் இருப்பதாகக் கூறினார்.  முதலில் வெளிப்புறமாக பல சிலைகள் இருந்தன.  பக்கவாட்டில் இரண்டு சன்னதிகள். ஒன்றில் தேனாக்ஷி அம்மனும். இன்னொன்றில் சிவபெருமானும் கண்கொள்ளாக் காட்சி அளித்தனர்.

 

உள்ளே இன்னொரு சன்னதியில் ஆவுடையப்பர் இவர் எல்லா சிவலிங்கத் திருமேனி போலவும் இடப்புறம் கோமுகி இல்லாமல் வலப்புறம் உள்ள கோமுகியோடு அமைந்திருந்தார். மிகப் பிரம்மாண்டமான லிங்கத் திருமேனி. வெளியே முருகன் வள்ளி தெய்வானையோடு அருள் பாலிக்க இரண்டு சுவர்களிலும் அச்சு அசலாக இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்ட பிரம்மா, விஷ்ணு , சிவன் சிலைகள். மற்றும் பூதகணங்கள்.

சன்னதியின் இடப்பக்கம் நான்கு வலப்பக்கம் மூன்று தெய்வத் திருமேனிகள் ஒரே பாறையில் வடிக்கப்பட்டிருந்தன.

 

“புல்லாகிப் பூண்டாகிப், பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாய்க் கல்லாய் மனிதராய்த் தேவராய்,  கணங்களாய் வல்லசுரராய்.. எனப் பூத கணங்கள் சூழ இறைவன் வீற்றிருக்கும் இடத்தில் கால பைரவரும், காளிங்க மர்த்தன நடனம் புரியும் மூன்று கிருஷ்ணர் விக்கிரஹங்களும் காணக் கண் கோடி வேண்டும்.  காளியும் அருள் பாலிக்கிறாள். விநாயகர் பக்கத்து கல் சுவற்றில் துவார பாலகர்களோடு அருள் பாலிக்கிறார்.

 

இரண்டு துவார பாலகர்களில் ஒருவருக்கு தலையில் இருபுறங்களிலும் கொம்பு இருக்கிறது. இயற்கை முறைப்படி செதுக்கப்பட்ட சாரளங்களில் காற்று அள்ளிக் குமிக்கிறது . வெளியே மழை பொழிய அந்தச் சன்னதியில் இருக்கும்போது பூத கணங்கள் சூழ  இந்த உலகையே ஆட்டுவிக்கும் ருத்ரனின் ஆனந்த தாண்டவமாடுகிறாரா அல்லது காளிங்கனின் மேல் கிருஷ்ணர் மதங்க நர்த்தனம் புரிகிறாரா என ஒரு மயக்கம் தோன்றி மயிர்க்கூச்செறிந்தது.

 

எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான். மெய்யே உன் பொன்னடிகள் கண்டிங்கு வீடுற்றேன் என்ற திருவாசகப் பாடல் மனதுள் ஓடியது. தேனாக்ஷியம்மன் துணையோடு அருள் பாலிக்கும் கோயில் விட்டு வெளியே வந்தால் இன்னொரு மண்டபம். அதில் நிஷ்டையில் சண்டேசுவரர் இருக்கிறார்.

 

இந்தக் கோயில் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் முதலாம் பாண்டியனால் கட்டப்பட்டது எனவும், இதுதான் ஆதி கோயில் எனவும், அதன் பின்  மலைக்கு மேலே அமைக்கப்பட்ட கோயிலுக்கு  மட்டும் மக்கள் சென்று வணங்கிச் சென்றுவிடுவதால் இதன் சிறப்பு அவ்வளவாக வெளியே தெரியவில்லை எனவும் கூறினார். இவை பற்றி குன்றக்குடி தல புராண நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

 

பக்கவாட்டில் குன்றக்குடி ஆதீனம் தாண்டி உள்ள மலைப்பாதையில் சென்றால் அங்கே மலையில் அந்தக் காலத்தில் சமணர்கள்  அமைத்த படுக்கைகள் இருப்பதாகக் கூறினார். மழை நேரம் செல்ல முடியவில்லை என்பதால் செல்லவில்லை. அடுத்த முறை பார்க்கலாம் என ஒத்தி வைத்து மலைமேல் இருக்கும் சண்முகக் கடவுளை வணங்கி வந்தோம்.

—————————————–

Series Navigationகோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணிநன்னயம்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Comments

  1. Avatar
    K A V Y A says:

    //சமணர்கள் அமைத்த படுக்கைகள் //

    தலைப்பில் படுகைகள், இங்கே படுக்கைகள்.

    எது சரி? முதலில் படுகைகள் என்றால் என்ன பொருள்? ஏன் கேட்கிறேனென்றால், சமணர்கள் வாழ்ந்த இடங்களை படுகைகள் என்கிறார்கள்! என்ன பொருள்? தமிழ் தெரிந்தவர்கள் அல்ல, அறிந்தவர்கள் எனக்கு இங்கே இப்பவே சொல்லவும்.

    தலைப்பைப் பார்த்து உள்ளே நுழைந்தேன். கடைசிப்பத்தியில் கொஞ்சூண்டு சமணர்களைப்பற்றிச் சொல்லி விட்டு பின்னர் சொல்வதாக விட்டுவிட்டார். காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *