கமலா தேவி அரவிந்தன் பேசும் மொழி மலையாளம். மூன்று தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழித் தாத்தா பாட்டி கொல்லத்திலிருந்து வந்தவரகள். தாய்வழித் தாத்தா பாட்டி பாலக்காட்டின் ஒட்டப் பாலத்திலிருந்து வந்தவர்கள். கமலா தேவி குட்டிப் பெண்ணாக ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்றது தமிழ். வாழ்க்கை முழுதும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும். கணவர் மலையாளி.
பிரமிப்பாகவும் இருக்கிறது. தொடக்க காலத்தில் மலையாளத்தில் எழுதினாலும் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கி இப்போது சிறுகதைகள், நாவல், ரேடியோ நாடகங்கள் இத்யாதி இத்யாதி என 160 சொச்சம் புத்தகங்கள் (எண்ணிக்கையை, ஒட்டு மொத்தமாகச் சொல்லி மிகக் குறைத்துச் சொல்லி விட்டேனோ, கமலாதேவி?) வெளியாகியுள்ளன. இப்போது நான் இது பற்றி எழுதும் இடைவேளையில் அவர் இன்னும் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். எழுதி முடித்திருக்கும் வேளையில் எண்ணிக்கை இன்னும் ஒன்றிரண்டு கூடியிருக்கக் கூடும் சாத்தியம் உண்டு. பிரமிப்பு தான எனக்கு
ஆனால் எனக்கு அவர் பெயர் கேட்டதும் எழுதியதைப் படித்ததும் வெகு சமீபத்தில், வல்லமை என்னும் தமிழ் இணையத்திலிருந்து தான் தமிழ் முரசு, போன்ற மலேசிய சிங்கப்பூர் பத்திரிகைகளில் அவர் நிறைய எழுதி பரிசுகளும் பெற்றிருக்கிறார். அவர் நம்மூர் கணையாழியிலும், அமெரிக்க தென்றல் பத்திரிகையிலும் எழுதியிருப்பதைத் தெரிந்து கொண்டதெல்லாம் இருக்கட்டும். அதிகம் இல்லை. நூற்றுக் கணக்கில் எழுதியவரைப் பற்றித் தெரிந்து கொண்டது இவ்வளவு தான் என்றால் அது பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இல்லை. சை பீர் முகம்மது தொகுத்துள்ள மலேசிய சிறுகதைத் தொகுப்பிலும் இவர் பெயர் இல்லை. ஒரு வேளை மலேசியா என்றால் பூகோள சித்திரத்தில், அது சிங்கப்பூரை உள்ளடக்கியதாக இருந்தாலும், சிங்கப்பூர் எழுத்து மாத்திரம் தனித்து சிறகடித்துப் பறக்கிறதோ என்னமோ. என்னவாக இருந்தாலும் தமிழ் நாட்டில் இருக்கும் எனக்கும் மற்றவர்களில் பெரும்பாலோருக்கும் கமலா அரவிந்தன் பெயரை தெரிந்திராதது நம் குறைதான். ஒரு காலத்தில் நா. பார்த்த சாரதியும் பகீரதனும் இலங்கைப் பயணம் சென்று இலங்கைத் தமிழ் எழுத்து தமிழகத்திற்கு இருபது வருடங்கள் பின் தங்கியுள்ளது என்று சொல்லி, பெரும் பூசலைக் கிளப்பி, வாங்கியும் கட்டிக்கொண்டது நினைவில் இருக்கிறது. கமலா தேவி அரவிந்தனின் சிறு கதைத் தொகுப்பு ஒன்றும் போன வருடமோ என்னவோ சென்னையில் வெளியிடப்பட்டது.
ஆனால் இவ்வளவு எழுதிக்குவித்திருப்பவரின் எழுத்துக்களை ஒரு சேர குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது இப்போது தான். இப்படிச் சேர்த்துப் பார்க்கும் போது தான் ஒரு எழுத்தாளரின் ஆளுமை பற்றியும் அவர் எழுத்தின் குணம் பற்றியும் ஒருவாறு அறிந்து கொள்ள முடியும். அது அவரது வாழ்க்கை பற்றியும் அது தந்த அனுபவங்கள் பற்றியும் அவ்வனுபவங்களைச் சொல்ல அவர் எடுத்தாளும் மொழி பற்றியும் நமக்குச் சொல்லும். கமலா தேவி அரவிந்தனின் தாய் மொழி மலையாளம். கற்றும், பழகியும் வரும் மொழி தமிழ். வாழ்வது சீன மொழி பெரும்பான்மையாக வழங்கும் சூழலில். மலாய் மொழி பேசுவோரும் இருப்பார்கள். விந்தையான கலவை தான். கற்ற மொழி இயல்பான படைப்பு இலக்கிய வெளிப்பாட்டுக்கு கருவியாக முடியுமா? ஆகியிருக்கிறது கமலா தேவியின் எழுத்தில். மலையாளமும் ஆங்காங்கே தெளித்து விடப்பட்டிருப்பதும், சிங்கப்பூரில் பழகும் மலாயும், மலாய் சீனமும் இயல்பாக வந்து சேர்ந்து கொள்ளும் என்று யூகிக்கலாம்..
இடையிடையே கொஞ்சம் வெகு தீவிர செந்தமிழும் சேர்ந்து கொள்கிறது. (அலமாரியின் இழுப்பான் என்கிறார் ஒரு இடத்தில். நாம் அலமாரியின் மேல் அறை, கீழ் அறை என்று தானே சொல் வோம். சிங்கப்பூராருக்கு இழுப்பான் என்ற சொல் எங்கிருந்து கிடைத்திருக்கும் என்று யோசித்தேன். தெரியவில்லை.
மொழி எப்படியோ அப்படித்தானே சூழல் தரும் கதைகளும் இருக்கும்! கமலா தேவி எழுதுவது பெரும்பாலும் தமிழர்களைப் பற்றித் தான்.
ஒரு நாள் பொழுது கதை சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ஒரு சிறு குடும்பம், சிறுவன் செங்கோடனுக்கு சிங்கப்பூர் பிடித்துப் போகிறது. ஆனால் அப்பா ராமநாதனுக்கு (பெயர்களில் ஒரு நிரடல் இருக்கிறதல்லவா?) தன் மகன் செங்கோடனை கட்டாய தேச சேவை யிலிருந்து தப்புவிக்க குடும்பத்தோடு சொந்த ஊர் தேனிக்குப் போகிறார். அங்கு தம்பியின் கடனுக்கு பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு தம்பியோடு அண்ணனின் குடும்பமும் நொடித்துப் போகிறது. ஒரு நல்ல மனுஷன் மறுபடியும் செங்கோடனை சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்கிறது. விமான நிலயத்தில் சிக்கல். அவன் தேச சேவையிலிருந்து தப்பினவனாக கைது செய்யப் படுகிறான். தேச சேவை செய்யத் தயார் என்று சொன்ன போதும் தகுந்த ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் சிறையிலடைக்கப் படுகிறான். தவறு அவனது அறியாத்தனம். இருந்தாலும் அவனுக்கு சிங்கப்பூர் மண்ணுக்குத் திரும்பியதில் சந்தோஷம் தான். பிறந்த மண் தான் தாய் மண். முதல் நாள் சிறைப்பட்டாலும் சரி.
சிங்கப்பூரின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பார்த்து வியப்பார். உண்டு. அது சிங்கப்பூரை அறிந்தார்க்கு. ஜெயந்தி சங்கரின் ஒரு கதையில் தமிழ் நாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வந்த ஒரு பெண் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு காசு கொடுக்க மறந்து கடைக்கு வெளியே சிறிது தூரம் நடந்து விடுகிறாள். பின் நினைவுக்கு வரவே திரும்ப ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் அவள் திருட்டுப் பட்டம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் படுகிறாள். அவள் மறதியை நம்புவார் யாருமில்லை. மறு நாள் அவள் வீட்டுக்குத் திரும்பியதும் சொல்வது, ”என்னை ஊருக்குத் திருப்பி அனுப்புங்கள், நான் இங்கே இருக்கப் போவதில்லை”.
இதே மறதியை நுளம்பு கதையிலும் காணலாம். வேறு விளைவுகள் அதில். மனைவியை பிரசவத்துக்கு தமிழ் நாட்டுக்கு அனுப்பிய மச்சக்காளை சாப்பிடுவது தாவீது கடையில். அண்ணன் தங்கை போல் பழகும் பாத்திமா 10 வெள்ளியை 100 வெள்ளி என்று தவறாக நினைத்துக் கொடுத்த சில்லரையை மச்சக்காளை அடுத்து பார்க்கும்போது திருப்பிக் கொடுக்கிற போது “இப்படியா கவனம் இல்லாம கொடுக்கறது?” என்று சொன்னதற்கு,. எங்க பணம் அண்ணன் கிட்டே தானே பத்திரமா இருக்கு? எங்கே போயிடும்?” என்று பதில் வருகிறது. இந்த சம்பவமோ பதிலோ, உறவுகளோ அல்ல. கமலா தேவி இதைச் சொல்லும் முறையும் மொழியும் தான் நம்மை ஈர்க்கின்றன.
கமலா தேவியின் இன்னொரு கதை, சூரிய கிரஹணத் தெரு. சிங்கப்பூரின் ஒரு இருண்ட வெளியைக் காட்டுகிறது. அது இருண்டு கிடப்பது நம்மால் தான். பிழைப்பு நாடி இருக்கும் அப்பாவி கிராமத்துப் பெண்களை மந்தையாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்ட், பிரியாணியும் இன்னும் மற்றதும் கொடுத்து குஷிப்படுத்தி பாஸ்போர்டை வாங்கிச் சென்றவன் சென்றவன் தான். லாட்ஜில் இருக்கும் பையன் (கூட்டாளி) “இனி அவன் வரமாட்டான், ஏமாற்றிவிட்டான்,” என்று சொல்லி இவர்களை தெருவில் பாலியல் தொழிலுக்குத் தள்ளிவிடுகிறான். எவ்வளவு பிரியமா பிரியாணி வாங்கிக்கொடுக்குறாங்க, எத்தினி தான் சாப்பிடறது! என்று மயங்கிப் போகிறார்கள். பாஸ் போர்ட்டை வாங்கிக்கொண்டு விரைபவனை,
”இன்னாக்கா, அண்ணாத்தை நம்மள கண்டுக்கவே இல்லியே” ன்னு ராமாயி மொணவ,
“தே, நம்ம கிட்டே உக்காந்து ஊட்டு நாயம் பேசறதுதான் அவுங்களுக்கு வேலையா, அக்கறையா டிக்கிட்டு போட்டு, ராணி கணக்கா, ஏரோப்ளேன்ல வச்சு கூட்டியாந்து, வந்தன்னிக்கே, பிரியாணியும் கறியுமா வயிறு பொடைக்க சாப்பாடு போட்டு வச்சிக்கிறது பத்தாதாங்காட்டியும், இன்னும் நம்ம ஊத்த வாயிகிட்டே உக்காந்து கதை பேசாததுதான் குத்தமாப் போச்சாக்கும்”
என்று ஏமாறுவதும் பிரியத்தோடு தான் ஏமாறுகிறார்கள். இது கமலா தேவி பள்ளியில் படித்த தமிழோடு கதை எழுத வரவில்லை, என்பதும் தெரிகிறது. இதையெல்லாம் சிங்கப்பூரில் எங்கு கற்றார் என்று நாம் வியக்கலாம்.
எங்கு போனால் என்ன, சிங்கப்பூரானால் என்ன, விருத்தாசலமோ, திண்டுக்கல்லோ ஆனால் என்ன, ஆணின் மிருகத்தனத்துக்கு இரையாகும் பெண்கள் எங்கும் தான். உத்தமி, திரிபு, போன்ற கதைகளில். இதில் ஒரு பெண் எழுத்தாளரின் ரசிகராக வந்து சேர்ந்து பின் கணவனாகி தன்னை ஒரு மிருகம் என்று காட்டிக்கொண்டவனிடமும் வீட்டுக்கு வந்த வேலைக்காரி யிடமும் அவமானப்பட்டு வெளியேறிய முதுமைப் பிராயத்து பெண் எழுத்தாளர் ஒருவரையும் சந்திக்கிறோம்.
இப்படி பல கதைகள். கமலா தேவிக்கு தான் கதை சொல்லும் முறை, நிறைய விவரங்கள், அதற்கேற்ற தமிழும் அந்த வாழ்க்கையும் பேச்சும் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளைச் சேர்ந்ததாகும் என்னும் போது இதை எங்கு கற்றார்? எப்படி இவ்வளவு நம்பகமான சித்திரத்தை எழுத முடிகிறது, சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டு என்று வியக்கத் தோன்றுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த கதைகள் சில உண்டு. ஆன்மீகத் தேடலில், தன் மனைவியின் கிண்டலையும் கடுப்பையும் பொருட்படுத்தாது, ஸ்வாமிகள் ஒருவரின் ஆஸ்ரமத்துக்கு உரிய பணம் செலுத்திப் போய் அங்கு தரப்படும் ராகி, கஞ்சி, பிஸ்கட் போன்ற எளிய உணவு, பழகாத வாழ்க்கை, தியானப் பயிற்சிகளைக் கண்டு சிலிர்த்துப் போன சிவனேசன், ஒரு நாள் ஸ்வாமிகள் கோபத்துடன் குடிலை விட்டு வெளியேறிய காரணம், இன்று அவருக்கு இட்லியும் சட்னியும் சாப்பிடும் முறை, அது கிடைக்காதது தான் என்று சொல்லப்பட்டதும் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறார் ஆன்மீகத் தேடலில் வந்த பக்தன், சிவனேசன். உலகைத் துறந்ததாகச் சொன்ன துறவிக்கு இட்லியைத் துறக்க முடியாது போகிறது. கதை, இட்லி
ஆண்களே நிரம்பியிருந்த அலுவலகத்தில் வந்து சேர்ந்த ஒரு அழகு சுந்தரி, மாளவிகா எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கிவிடுகிறாள். பின் என்ன காரணமோ, எல்லோரும் ஒரு கட்டத்தில் ஒதுங்கி விடுகிறார்கள். முதலில் பாராமுகமாக இருந்த சிவபிரகாஷ், இப்போது ”மாலு, மாலு” என்று கொஞ்சல் மொழியுடன் அவளைச் சுற்றி வட்டமிடுகிறான். திருமணம் செய்துகொண்டால் என்று துணிந்தவனுக்குப் பிறகு தான் தெரிகிறது அவள் திருநங்கை என்று. திருநங்கைகள் மயக்கும் அளவுக்கு அழகாக இருப்பார்களா என்ன?
தன் குடும்பத்தில் தன் பிள்ளைகள், மருமகள்கள் எல்லோரும் அலட்சியம் செய்ய, தன்னிடம் பரிவு கொண்ட ஒரு சிறு பெண்ணோடு சேர்த்து அபவாதமாகப் பேச்சைப் பொறுக்க முடியாத முதியவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார். அப்படியும் அபவாதப் பேச்சு நிற்பதில்லை என்பது மனித சுபாவத்தின் சோகங்களில் ஒன்று.
வெகு சிறப்பாக எழுதப்பட்ட கதைகள் என்று நான் குறிப்பிட்டுள்ள இவற்றிலும் கூட எனக்கு சொல்லப்பட்ட விஷயத்திலும், எழுதப்பட்ட திறனிலும் முதல் இடத்தைப் பெறுவது மாம்பழ புளி சேரி என்ற கதை. சிங்கப்பூரில் வாழும் ஆசான் ராகவன் நாயரிடம் நாடகம் கற்க வரும் ரஹீம், ராமன் குட்டி என்று இருவர். ஒருவன் வெல்டர். இன்னொருவன் கட்டிடத் தொழிலாளி. ஏங்கிக்கிடக்கும் ராகவன் நாயருக்கு இந்த சின்னதாக மினுக்கும் ஒளியே நம்பிக்கை கொள்ள வைக்கிறது அதுவும் இதென்ன கேரளமா என்ன?. சிங்கப்பூர். யோகம் தான் வாடிச் சோர்ந்திருக்கும் ஒரு ஆசானுக்கு வேறு என்ன வேண்டும்? இரண்டு வருங்கால சீடப் பிள்ளைக்கும் நடக்கும் விருந்தோபசாரம் அந்த நம்பிக்கை காரணமாகவும் இருக்கலாம். நல்லதாக வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு சந்தோஷமடையும் நல்ல மனசாகவும் இருக்கலாம். சிஷ்யப்பிள்ளைகள் பார்க்கவியின் ஒவ்வொரு பண்டத்தையும் சப்புக் கொட்டி ரசித்துச் சாப்பிட ராகவன் நாயருக்கு எங்கேயோ நினைவு. என்ன நடக்கும்? என்ற கவலை. பாடம் எல்லாம் சம்பிரமமாக ஒன்று விடாமல் நடக்கிறது. திடீரென்று ரஹீம் வந்து ஒரு கடிதம் கொடுக்கிறான். ராமன் குட்டி நாட்டுக்குக் கிளம்பியாயிற்று. ஒரு பொண்ணும், மாமனார் கொடுக்கும் பல லட்சங்களையும் பெற்றுவர. ரஹீம் சொல்கிறான். அவன் மாமனார் கொடுக்கும் பணத்தில் நாடகப் பள்ளி தொடங்கலாம். நிறுத்தப் போவதில்லை என்று. திடீரென்று ராகவன் நாயர் பார்க்கவியிடம் மாம்பழ புளிசேரி கேட்கிறார். அன்று சாப்பிடாமல் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தார். இன்று சந்தோஷமாக வேண்டியது சாப்பிடலாம் என்று தோன்றுகிறது.
கமலா தேவிக்கு தமிழ் கற்ற மொழியாக இருக்கலாம். வாழ்வது சிங்கப்பூராக இருக்கலாம். படைப்பு மொழி மலையாளத்தோடு தமிழாக இருக்கலாம். கதை தமிழர்களின் சிங்கப்பூர் வாழ்க்கையாகவும் விட்டு வந்த, பின் திரும்பப் போகும் தமிழ் நாடு சிறிய பெரிய ஊர்களாகவும் இருக்கலாம். அவருக்கு என சொல்ல அந்த வாழ்க்கையின் நுணுக்கங்களும், வாழும் மனிதர்களையும் தெரிகிறது. அவர்களின் இயல்பான மொழியும் தெரிகிறது. அந்த மொழியின் இயல்பான சாயல்களும் தெரிகிறது.
இவ்வளவு நிறைய எழுதுகிறவர் இன்னும் மற்ற துறைகளிலும் வடிவங்களிலும் எழுதுகிறவர் ஒரு எளிய, தடங்கல் இல்லாது படிக்கத் தூண்டுகிற, வண்ணங்கள் கொண்ட அழகான பாணியையும் பெற்றிருக்கிறார். அத்தனையும் ஒரு பெண்ணுக்கே உரிய சாயலுடன் மொழியுடன். ஒரு அன்னிய மண்ணில், ஒரு பெரிய நகரமேயாயினும் ஒரு சிறிய பிரதேசத்தில் எவ்வளவு திறன்கள். நிரம்பிக்கிடக்கின்றன! ஆச்சரியம் தான். நமக்குத் தான் தெரிவதில்லை. இதுகாறும் நான் ஜெயந்தி சங்கர், இளங்கோவன், லக்ஷ்மி, போன்று ஒரு சிலரைத் தான் சிங்கப்பூர் தந்துள்ளதாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது கமலா அரவிந்தனின் பெயரும் கவனிக்க வேண்டிய பெயர்களில் ஒன்றாகச் சேர்ந்து விட்டது.
- கமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்
- உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3
- தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்
- ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )
- சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’
- லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்
- தேவலோகக் கன்னி
- வால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)
- “காப்பி” கதைகள் பற்றி
- இரு கவரிமான்கள் – 3
- பதில்
- அக்னிப்பிரவேசம்-16
- சங்க இலக்கியங்களில் அலர்
- கவிதைகள்
- நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….
- மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ
- பெண்களின் விதிகள்
- தண்டனை யாருக்கு?
- வள்ளியம்மை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -9
- அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
- அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்
- தில்லி பாலுறவு பலாத்காரத்துக்கு எதிரான மக்கள் பேரணி
- வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள் -41