பைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன், குறிப்பாகக் கம்பீர நடை நடந்து வரும் புலியுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது. ஒருநாள் நடுநிசியில், வேண்டாம், வேண்டாம் என்று தடுக்கிற தன்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணனையும் எழுப்பி இழுத்துக் கொண்டு கையில் ஒரு இறைச்சித் துண்டுடன் புறப்பட்டுவிடுகிறான்.. கூண்டைக் காவல் செய்யும் பணியாள் சொல்லச் சொல்லக் கேட்காமல் புலியுடன் சினேகம் பண்ணிக் கொள்ள பை தொடர்ந்து முன்னேறுகிறான்.
எவர் கண்ணிலும் படாமல் உள்ளே இருக்கும் புலிக்கு வா, வா, எனப் பை இடைவிடாமல் அழைப்புக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். எதிர்பார்ப்பு பொறுமை இழக்கும் தறுவாயில், நீண்டுகொண்டே போகிற கூண்டின் மூன்றாம் கட்டிலிருந்து புலி மெதுவாக வெளிப்படுகிறது.
பையின் முதுகுக்குப் பின்னால் ஒண்டிக்கொண்டிருக்கும் அண்ணன் புலியின் வருகையைக் கண்டதுமே பின்வாங்கித் தலைதெறிக்க ஓடி விடுகிறான். பை மட்டும் ஆடாமல், அசையாமல், அயராமல் இறைச்சித் துண்டை நீட்டியபடி உட்கார்ந்திருக்கிறான். புலி மெதுவாக, மிக மிக மெதுவாக, திகிலைத் தூண்டி விடுகிற மாதிரி முன்னேறி வருகிறது.
புலி முன்னங் காலை நீட்டிப் பையின் கையிலிருந்து இறைச்சித் துண்டை வாங்கிக் கொள்கிற அளவுக்கு அருகில் வந்துவிட்ட அந்தக் கண நேரப் பொழுதில் திடீரெனப் பெருங் குரலில் ஓர் அதட்டல் கேட்டுப் புலி அலறிப் புடைத்துக் கொண்டு திரும்பிக் கூண்டுக்குள் ஓடிப் போகிறது. மனிதக் குரலுக்கு அஞ்சியே பழகிவிட்ட தோஷம்!
பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கோபம் தலைக்கேற நிற்கிறார் அப்பா. கூடவே அம்மாவும் பதறிப் போய் நிற்கிறாள். நல்ல வேளையாய், நல்ல வேளையாய்த்தானா (?), காவல்காரன் அவர்களை எழுப்பி அழைத்து வந்துவிட்டிருக்கிறான். இருவேறு இனங்களிடையே நல்லிணக்கம் தோன்றும் அரிய தருணம் கை நழுவிப் போயிற்று. ஆனால் மகனின் பைத்தியக்காரத்தனம் தந்தைக்குப் பிடிபடவில்லை. அடங்காத கோபத் துடன், ‘எதற்காக இப்படிச் செய்தாய்’ என்று கத்துகிறார்.
“நான் அதோடு சினேகம் செய்துகொள்ள விரும்பினேன்” என்கிறான் மகன்.
“முட்டாள்! அது வேட்டையாடும் மிருகம். நீ மனிதன்!” என்கிறார், தகப்பன்.
“ஆனால் அதற்கு உயிர் இருக்கிறதே” என்கிறான், மகன். உயிர் உள்ளவை அனைத்தும் பரஸ்பரம் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல் லாம் விவரம் தெரிந்து விளக்கம் அளிக்கிற வயதில்லை, அவனுக்கு. உள்ளுணர்வில் ஏதோ இயல்பாய்த் தோன்றியிருக்கிறது, அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.
புலியின் சுபாவம் இன்னதென்று மகனுக்குப் புரிய வைக்க முடிவு செய்கி றார், தந்தை. உயிருள்ள ஆட்டைப் பிடித்துக்கொண்டு வந்து கூண்டுக்குள் கட்டிப் போடக் காவலாளிக்கு உத்தரவு போடுகிறார். காவல்காரனுக்கே கூட மனம் கேட்கவில்லை. ‘அறியாப் பையங்க…’ என்று தயங்குகிறான். அம்மாவும் சிறு பையன் எதிரே அந்த கோரக் காட்சி வேண்டாம் என்கி றாள். தந்தை கேட்பதாக இல்லை. சொன்னதைச் செய் என்று காவலாளி யிடம் கண்டிப்பாகக் கூறிவிடுகிறார்.
ஆடு கூண்டுக்குள் கட்டி வைக்கப்படுகிறது. புலிக்கு சமிக்ஞை ஒலி அனுப்பப் படுகிறது. புலி உள்ளேயிருந்து பாய்ந்து வந்து மிரண்டு நிற்கும் ஆட்டை நொடிப் பொழுதில் கவ்வி ரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துக் கொண்டு திரும்பிப் போகிறது.
ஆனால் சிறுவன் பை அந்த குரூரத்தைக் காணவில்லை. சரியான நேரத்தில் அம்மா அவன் தலையை இழுத்துத் தன் வயிற்றோடு முகம் புதையச் செய்துவிடுகிறாள்.
மனிதன் வேறு, மிருகம் வேறு. மனிதன் மிருகத்தை அடக்கி ஆள வேண்டுமே தவிர அதனோடு சினேகம் பாராட்ட முடியாது என்று மகனுக்குப் புரிய வைக்கும் தகப்பனின் முயற்சி பயனற்றுப் போகிறது.
பையின் வாழ்க்கை (Life of Pie) என்கிற ஆங்கிலத் திரைப்படத்தில் இது ஒரு முக்கியமான காட்சி மட்டுமல்ல, அது சொல்ல வரும் செய்தியே இதை ஒட்டியதுதான்.
யான் மார்ட்டெல் (Yann Martel) எழுதி, லண்டனைச் சேர்ந்த பல பதிப்பகத் தாரால் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் கனடாவின் நாஃப் கனடா (Knoff Canada) பதிப்பகம் ஏற்றுக் கொண்டுவிட, 2001 ஆம் ஆண்டு ஒருவாறாக வெளிவந்த புதினம் லைஃப் ஆஃப் பை. அதைத் தழுவி அதே பெயரில் இடையிடையே முப்பரிமாணக் காட்சிகளுடன் தயாரிக்கப்பட்ட திரைப் படம், 2012 நவம்பரில் வெளியாயிற்று, படத்தின் இயக்குநர் முந்தைய படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்ற, தைவானைச் சேர்ந்த ஆங் லீ (Ang Lee). திரைக் கதை டேவிட் மேகீ (David Magee). ஒளிப் பதிவாளர் க்ளாடியோ மிராண்டா (Cladio Miranda).
புத்தகமாக வெளிவந்தபோதே பெரிதும் கவனம் ஈர்த்த புதினம் திரைப் படமாக வருகையில் ஆர்வத்தைத் தூண்டத் தவறுவதில்லை. புதினம், திரைப்படம் இரண்டும் இரு வேறு அழகியல் தளங்களில் இயங்குபவை. ஒரு தளத்தில் இயங்குவதை வேறு தளத்துக்கு மாற்றி இயங்கச் செய்கை யில் அந்தத் தளத்தின் விதிமுறைகளுக்கு இணங்க வித்தியாசப்படுவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். புதினத்தைச் சிதைக்காமல், புதினத்தின் அடிப்படையிலிருந்து விலகாமல் திரைப்படம் அமைந்துவிடுமானால் அதுவே புதினத்திற்கு நியாயம் செய்வதாகிவிடும். பையின் வாழ்க்கை புதினத்துக்கு பையின் வாழ்க்கை திரைப்படம் நியாயம் செய்திருப்பதோடு, திரைப்பட மொழியின் பிரகாரம் பல அம்சங்களில் அதற்கு மெருகூட்டியும் இருக்கிறது. நவீனத் தொழில் நுட்ப சாதனைகள் இதற்குக் கை கொடுத்து, சாகசங்களின் களமாகத் திரையைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஃபிரஞ்சு இந்தியாவின் தலைநகராக விளங்கிய பாண்டிச்சேரியில் கதை ஆரம்பமாகிறது. அங்கே ஒரு ஹிந்து குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறக்கும் பைக்குத் தொடக்கத்தில் சூட்டப்பட்ட பெயர் பிஸைன் மோலிதோர். ஃ;ப்ரான்சில் உள்ள ஒரு நீச்சல் குளத்தின் நினைவாக அவனுக்கு அப்படியொரு பெயரைப் பெற்றோர் வைத்துவிடுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்க்கையில் பட்டேல் என்ற பின்னொட்டு டன் அந்தப் பெயரைப் பெற்றோர் பதிவு செய்துவிடுவது அவனுக்குச் சங்கடமாகப் போய்விடுகிறது. சக மாணவர்கள் அவனை ஒண்ணுக்கு அடிக்கும் பட்டேல் (Pissing Patel) என்று கேலி செய்யத் தொடங்கி, காலப் போக்கில் அதுதான் அவன் பெயரே என்பது போல ஆசிரியர்களுங்கூட அவனை அப்படியே அழைக்கத் தொடங்கிவிட, அவன் நொந்து போகிறான். பொறுமை எல்லை மீறி, ஒருநாள் தனது பெயர் கணிதத்தில் வரும் ஒரு முக்கிய குறியீடான பை என்று வகுப்பறையின் கரும் பலகையில் எழுதிக் காட்டுகிறான். அது முதல் அவன் பை என்றே அறியப்படுகிறான்.
பையின் குடும்பம் தமிழில்தான் பேசிக் கொள்கிறது. தந்தையைப அப்பா என்றும் தாயை அம்மா என்றும்தான் மகன்கள் அழைக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் விவரப் பட்டியல் ஓடும்போது பின்னணியில் மென்மையாக இழையோடுவதுகூடத் தமிழில் பாடப்படும் தாலாட்டுதான். இடையிடையே தமிழில் உரையாடால்கள் வேறு. ஆனால் குடும்பப் பெயர் என்னவோ பட்டேல் என்பதாக இருக்கிறது. ஒருவேளை இருவேறு மொழி யினரால் உருவான குடும்பமாக இருக்கலாம்!
பை ஹிந்துக் குடும்பத்தில் ஹிந்துவாகத்தான் பிறக்கிறான். மண்ணை உண்டு, கண்டித்த அன்னைக்குத் தன் வாயைத் திறந்து அண்ட சராசரங் களையெல்லாம் காண்பித்து மருட்டிய கண்ணபிரானின் லீலைகளை யெல்லாம் கேட்டுத்தான் வளர்கிறான். ஆனால் சிறிது பெரியவனானதும் சமயங்களிடையே வேறுபாடுகளை அறிய கிறிஸ்தவ ஆலயத்திற்கும் இஸ்லாமிய மசூதிக்கும் சென்று வருகிறான். வீட்டில் அனைவரோடும் சேர்ந்து உண்கையில் மூன்று சமயங்களின் சம்பிரதாயங்களையும் அவன் கடைப்பிடிப்பது கண்டு தந்தை வியக்கிறார். தான் மூன்று சமயங்களையும் பின்பற்றுவதாகச் சொல்லும் மகனிடம் நீ ஏதாவது ஒரு மதத்தைச் சேர்ந்த வனாகத்தான் இருக்க முடியும் என்று சொல்கிறார். எதனால் அப்படி என்று வியக்கும் சிறுவனுக்கு விடை தருவார் இல்லை. வளர்ந்து பெரியவனாகி விட்ட பிறகு பை (இர்ஃபான் கான்) தன்னை ஒரு கத்தோலிக்க ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறான். கத்தோலிக்கம் என்ற சொல்லை அனைத்தையும் ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் ஏற்றுக் கொள்ளல் என்ற பரந்துபட்ட பொருளிலேயே அவன் பயன்படுத்துவதாகக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
பாண்டிச்சேரியில் ஃப்ரெஞ்சுக் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் பையின் தந்தைக்கு உயிரியல் பூங்காவைத் தொடர்ந்து நடத்த இயலாத இக்கட்டு ஏற்பட்டுவிடுகிறது. பூங்கா அரசுக்குச் சொந்தம். அதில் உள்ள விலங்குகள் மட்டுமே பையின் தந்தைக்குச் சொந்தம். அவர் கனடாவுக்குக் குடிபெயர முடிவு செய்கிறார். விலங்குகளையும் தம்மோடு கூட்டிச் செல்ல முடிவு எடுக்கிறார். கனடாவில்தான் அவற்றை நல்ல விலைக்கு விற்க முடியும்.
விலங்குகளையும் சுமந்து செல்லக் கூடிய சரக்குக் கப்பலில் குடும்பம் புறப்படுகிறது. ஆனால் கடல் பயணம் நடுவழியிலேயே முடங்கி விடுகி றது. ஓர் இரவில் முரட்டுத்தனமாக வீசத் தொடங்கும் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொள்ளும் கப்பல் தாக்குப் பிடிக்க மாட்டாமல் மூழ்குகிறது. பை மட்டும் உயிர் காக்கும் படகில் விழுந்து பிழைத்துக்கொள்கிறான். படகில் தான் மட்டும் இல்லை, தன்னோடு ஒரு அடிபட்ட வரிக் குதிரை, மாமிச மலை போன்ற ஒரு உராங் உட்டான் குரங்கு, ஒரு கழுதைப் புலி ஆகியன வும் தப்பி வந்திருப்பதைக் கண்டுகொள்கிறான். அதன் பிறகுதான் தங்க ளோடு இன்னொரு விலங்கும் படகிற்கு வந்துசேர்ந்திருப்பது தெரிய வருகிறது. சிறுவயதில் பை சினேகம் பண்ணிக்கொள்ள விரும்பிய அதே புலி!
மற்ற விலங்குகள் ஒவ்வொன்றாக மரித்துவிட தனிமைப் பட்டுப்போன பை என்கிற மனிதனுக்கும் புலி என்கிற மிருகத்திற்கும் கட்டாயத்தின் பேரில் மொட்டு அவிழ்வதே போல் சிறுகச்சிறுக மலரும் நட்பு உயிர்த் திருத்தலுக்கான அர்த்தத்தை இருவருமே உணர்ந்துகொள்ள வாய்ப்பைத் தருகிறது.
ஊழிக் கூத்தாடும் கடலுக்குத் தன்னில் சிக்கித் தவிக்கும் அந்த இருவர் பற்றி எவ்விதக் கவலையும் இல்லை. அது பாட்டுக்கு அவர்களுக்குப் பலவாறான அற்புத அனுபவங்களையும் ஆபத்துகளையும் அளித்துக் கொண்டு தனது இருத்தலை இருக்கும் விதமாகத் தொடர்கிறது. அந்த அனுபவங்களுக்குப் பிறகு, இடையில் ஒரு உயிர்க் கொல்லித் தீவில் கரை ஏறி அதன் இயல்பறிந்து அங்கிருந்து தப்பிச் சிறுபடகில் மீண்டும் எவ்வித உத்தரவாதமும் இல்லாத கடலில் மனிதனும் மிருகமும் சேர்ந்து பயணம் தொடர்கின்றனர். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எங்கும் நீர்ப்பரப்பு தவிர ஏதுமில்லை என்ற நிலையில் அச்சுறுத்தும் தனிமையை எதிர் கொள்ள மனிதனுக்கு மிருகமும் மிருகத்துக்கு மனிதனுமே துணை. இப்போது பைக்கு அது மிருகம் அல்ல. ரிச்சர்டு பார்க்கர் என்கிற சினேகிதன்.
பலநாள் பயணத்திற்குப் பிறகு பையும் ரிச்சர்டு பார்க்கரும் மெக்ஸிகோ கடலோரத்தில் கரை ஒதுங்குகிறார்கள். கரை மணலில் பை உடல் களைத்துக் குப்புற விழுகிறான். ரிச்சர்டு பார்க்கரும் அவனோடு சேர்ந்து கரையேறுகிறது. மணல் வெளிக்குப் பின்னால் இருண்டு கிடக்கும் அடர்ந்த காடு. ரிச்சர்டு பார்க்கர் முன்னே சென்று ஒரு கணம் தயங்கி நின்று அதன்பின் தொடர்ந்து நடந்து காட்டுக்குள் நுழைந்து மறைகிறது. இப்போது அது ரிச்ச்சர்டு பார்க்கர் இல்லை.
காட்டினுள் சென்று மறையுமுன் அது ஒருமுறை தன்னைத் திரும்பியும் பார்க்கவில்லை என்பதுதான் பையை மிகவும் பாதிக்கிறது. ஆனால் தனக்குரிய வாழ்விடத்தை அது அடையாளம் கண்டுகொண்டவரை சரிதான்.
நடுக் கடலில் உடைந்து மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபர் பைதான். காப்பீட்டு அதிகாரிகள் இழப்பீடு அளிப்பதற்காக அவனிடம் நடந்த விவரம் கேட்கிறார்கள். தன்னோடு படகில் பயணம் செய்த காயம் பட்ட வரிக் குதிரையை கழுதைப் புலி அடித்துக் கொன்று தின்றதோடு குரங்கையும் தாக்கிக்கொன்று விட்டதாகவும் புலியும் தானும் மட்டுமே எஞ்சிக் கரை சேர்ந்ததாகவும் பை சொல்லும் தகவலை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவன் சொல்லும் கதையைப் பதிவு செய்தால் செல்லுபடி ஆகாதாம். பை இப்போது உண்மையிலேயே ஒரு கதை சொல்கிறான். உயிர் காக்கும் படகில் தானும் தன் தாயும், கையை ஒடித்துக்கொண்ட ஒரு மாலுமியும், கப்பல் சமையல்காரரும் தப்பி வந்ததாகவும், கரை காணாக் கடலில் சமையல்காரர் உணவுக்காகவும் மீன் பிடிக்க இரையாகவும் பயன்படுத்திக்கொள்ளத் தன் தாயையும் மாலுமியையும் கொன்று துண்டம் போட்டுவிட்டதாகவும் சொல்லி, சுய நலனுக்காக எதற்கும் துணியும் மானுட குரூரத்தை வர்ணிக்கிறான். காப்பீட்டுக்காரர் களுக்கு அவன் முதலில் சொன்ன கதையே பரவாயில்லை என்றாகி விடுகிறது. குரங்கை அவன் தாயாகவும் கை ஒடிந்த மாலுமி வரிக் குதிரை என்றும் சமையல்காரர் கழுதைப் புலி என்றும் பைதான் புலி என்றும் அவர்கள் முடிவு செய்து கொள்கிறார்கள். இரண்டில் எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுமாறு பை சொல்கிறான். எப்படியும் கப்பல் கவிழ்ந்ததற்கான சரியான காரணம் விளங்கப் போவதில்லை. முதலில் சொன்ன புலியும் மனிதனும் கதையே மேல் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். கடவுளும் இதைத்தான் ஏற்றுக் கொள்வார், என்கிறான் பை.
வளர்ந்து பெரிய இளைஞனாகிவிட்ட பை தனது பழைய நினைவுகளி லிருந்து நடந்தவற்றைச் சொல்வதாகவே கதை முழுவதும் நகர்கிறது. இளைஞனாக நடிக்கும் இர்ஃபான் கான் தேசிய நாடகப் பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். நடுக் கடலில் புலியுடன் பயணம் செய்யும் இளம் பையாக நடிக்கும் சூரஜ் சர்மாவும் தில்லி நாடகப் பள்ளியில் பயின்றபின் நியூயார்க் அகாடமி ஒன்றில் இயக்குநர் பயிற்சியைத் தொடர்பவர். படத்தில் தனக்குரிய பாத்திரம்தான் மிகவும் கடினமானது என்பதை நன்கு உணர்ந்து தனது பொறுப்பை நிறைவு செய்திருக்கிறார். நடுக்கடலில் புலியுடன் பிணைப்பை ஏற்படுத் திக் கொள்ளப் பை மேற்கொள்ளும் முயற்சிகளில் சூரஜ்ஜின் நடிப்பு ஓர் உண்மையை நிறுவும் பிரயத்தனமாகவே இருக்கிறது.
‘பின்பு தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரங்களின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
பின்னும் தேவன், இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களை யும் உங்களுக்குக் கொடுத்தேன். அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக் கக் கடவது’ என்றார்.
(ஆதியாகமம் 1-28,29)
இவையெல்லாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், தான் படைத்த முதல் ஆண்-பெண் இருவருக்கும் இறைவன் சொன்னதாகக் காணப்படும் வாசகங்கள். வெறும் வாசகங்கள் அல்ல, அவர் அளிக்கும் வாக்குத் தத்தங்கள், பிரகடனங்கள்.
நிலம், நீர், ஆகாயம், காற்று, இரவு பகல், புல் பூண்டு, மரம் செடி கொடிகள், உயிரினங்கள் ஆகிய சகலத்தையும் ஒவ்வொரு நாளாக ஐந்து நாட்களில் படைத்துவிட்டு, ஆறாம் நாள் ஆணும்-பெண்ணுமாக மனிதனை யும் படைத்த இறைவன், அதோடு இருந்துவிடாமல் தாம் படைத்த அனைத் தையும் ஆண்டு அனுபவித்துக் கொள்ளும் அதிகாரத்தை மனிதரிடமே அளித்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வு கொள்ளப் போய்விட்டான்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இஸ்லாமும் இந்தக் கோட்பாட்டை ஒப்புக் கொள்கிறது. பூமிக்கும், பூமியில் உள்ள சகலத்திற்கும் மனிதனே அனுபோக பாத்தியதை உள்ள எஜமானன்!
இதனால்தான் கிறிஸ்தவமும் இஸ்லாமும் உலகம் முழுவதையும் ஆட் கொள்வதை இறைவனே தமக்கு அளித்திருக்கிற அதிகாரம் எனக் கருதி போட்டி போட்டுக்கொண்டு தம்மைப் பரவலாக்கிக் கொள்வதில் பிழை ஏதும் காணவில்லை, போலும். உலகில் இவ்விரு சமயங்களும் பிரதானமாக விளங்குவதாலேயே அவற்றின் தாக்கம் பிற சமயங்கள் சார்ந்த சமூகங்களையும் பாதித்து, இயற்கை வளங்களை வரைமுறை யின்றி உறிஞ்சிக் கொள்வதிலும், சகல பிராணிகளையும் உயிருள்ளவை யாகக் கருதாமல் புரதம், இரும்புத் தாது, ஒமேகா-3 என ஊட்டச் சத்து களாகவும், காலணி, இடுப்புப் பட்டை, மேல்சட்டை, கைப்பை போன்ற வெறும் நுகர் பொருள்களாகவும் கொள்வதிலும் எவ்வித மன உறுத்தலும் இன்றி, யார் அதிகம் சுரண்டிக் கொள்வது என்று மனித சமுதாயங்களுக் கிடையே ஒரு பந்தயமே நடந்து வருகிறது. அடுத்து வருகிற தனது தலைமுறைகளுக்கு எதுவும் மிஞ்சாதே என்ற கவலைகூட அவற்றுக்கு இல்லை.
உலகையும் அதில் உள்ள சகலத்தையும் மனிதனுக்காகவே இறைச் சக்தி படைத்தளித்துள்ளது என்று ஆபிரகாமியச் சமயங்கள் வலியுறுத்துகையில், அவற்றுக்கு முற்பட்ட ஹிந்து சமயக் கோட்பாடோ, “இவ்வுலகமும் அதில் உள்ள அசையும், அசையாப் பொருள்கள் சகலமும் இறைச் சக்தியால் பொதிந்து வைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவற்றில் எதையும் தனது என்கிற அகங்காரத்துடன் அபகரித்துக் கொள்ளாதே. எதனோடும் உரிமை பாராட்டாமல் இருத்தலே மகிழ்வு தரும். அவ்வாறே மகிழ்ந்திருப்பாயாக” என்று மனிதனுக்கு அறிவுறுத்துகிறது (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம். யத் கிம் ச ஜகத்யம் ஜகத் ஸர்வம் தேன த்யாக்தேன புஞ்சித மா க்ரிதஹ கஸ்யஸ்வித் தனம் – ஈசாவாஸ்ய உபநிடதத்தின் தொடக்க வாக்கியம்).
சுக்ல யஜுர் வேதத்தின் அந்தமாக வரும் ஈசாவாஸ்ய உபநிடதம் மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகையால் அதன் தொடக்க வாக்கியத்தை ஹிந்து சமயத்தின் பிரதானக் கோட்பாடாகவே கொள்ள வேண்டும் இந்த நுட்ப மான தத்துவ வாக்கியத்துக்கு வெறும் உலகியல் ரீதியில், ‘பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாதே’ என்று பொருள் சொல்பவர்களும் இருக் கிறார்கள். ஆனால் இந்த உலகையும் அதில் உள்ள மானுட இனம் உள்ளிட்ட சகலத்தையும் இறைச் சக்தி தன்னுள் பொதிந்து வைத்துக் கொண்டுள்ளது என்று ஆழ்ந்த உள்ளுணர்வுடன் எழுந்த உன்னதச் சிந்தனையின் தூண்டுதலால் பொதுவாக மனித இனம் முழுவதையுமே முதலில் அழைத்து ஓர் உண்மையைச் சொல்லிவிட்டு, அதன் பின், ஆகையால் எதையும் எவரிடமிருந்தும் அபகரித்துக் கொள்ளாமல் மகிழ்ந்திருக்குமாறு அறிவுறுத்தும்போது, அந்த அறிவுரை தனிநபர்களுக்கு அல்லாமல் முழு மனித இனத்துக்கும் சொல்லப்பட்டதாகக் கருதுவதே பொருத்தமாக இருக்கும்.
பையின் வாழ்க்கையும் இதையே புரிந்துகொள்கிறது. பையின் தந்தை மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் ஆபிரகாமிய கருத்தியலுக்கு ஏற்பப் பிற உயிரினங்கள் அனைத்தையும் தனக்குக் கீழாகவும் தனது உபயோகத்திற்காகவே படைக்கப்பட்டனவாகவும் நம்பியபோதிலும், மனிதன் வேறு, மிருகம் வேறு, மிருகத்தை மனிதன் அடக்கி ஆளத்தான் வேண்டுமேயல்லாது அதனுடன் நட்பு பாராட்டலாகாது என்று சாதித்தா லும் மகன் பை தனது வாழ்க்கையின் மூலம் உண்மையைச் சரியாகவே புரிந்து கொள்கிறன்:
மனிதனும் மிருகமும் பரிணாமம் என்கிற நீண்ட சங்கிலியின் இரு கண்ணிகள்தான் என்பதே அது.
(நன்றி: ஆழம் மாத இதழ் (கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014) : இதழின் இடப் பற்றாக்குறை கருதி, அதில் வெளியிடுகையில் இக்கட்டுரையின் சில பகுதிகள் வெட்டப்பட்டுள்ளன. திண்ணை.காம் வாகசகர்களுக்காக முழுமையான வடிவில் கட்டுரையை அளித்துள்ளேன் – மலர்மன்னன்)
+++++++
- கமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்
- உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3
- தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்
- ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )
- சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’
- லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்
- தேவலோகக் கன்னி
- வால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)
- “காப்பி” கதைகள் பற்றி
- இரு கவரிமான்கள் – 3
- பதில்
- அக்னிப்பிரவேசம்-16
- சங்க இலக்கியங்களில் அலர்
- கவிதைகள்
- நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….
- மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ
- பெண்களின் விதிகள்
- தண்டனை யாருக்கு?
- வள்ளியம்மை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -9
- அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
- அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்
- தில்லி பாலுறவு பலாத்காரத்துக்கு எதிரான மக்கள் பேரணி
- வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள் -41