வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்:
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
– பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்
மனித குல வரலாற்றில் அன்றும், இன்றும், என்றும் புதிய உலகம் படைக்கக் கனவு காண்பவர் ஒரு சிலர் இருந்த வண்ணம் உள்ளனர்.
பொது உடைமையால் உருவாகும் உலகம் போர் இல்லாத புதிய உலகமாக அமையும். அந்த உலகில் அன்பு நிலைத்து இருக்கும். இது என்னுடையது என்று சேர்க்கும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் போகும் என்று புதிய உலகம் படைக்கப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
தற்கால 20 வயதுகளில் இருக்கும் இளைய தலைமுறையினரே, எண்ணிம கால (digital age) இணையத்தின் முதல் தலைமுறையினரான இளைய சமுதாயமே, இந்த உலகளாவிய புரட்சியின் நிகழ்கால வினையூக்கிகள் ஆவார்கள். அவர்களுக்கு உதவுவது தொழில்நுட்ப வளர்ச்சியினால் பிறந்த இணைய வழி தகவல் பரிமாற்ற முறையும், மாறிவரும் உலகின் பொருளாதாரத் தேவைகளினால் சமுதாயத்திற்கு நிகழும் நிர்ப்பந்தகளும் ஆகும்.
இவர்கள் எண்ணிம காலத்தின் இணைய தலைமுறையினர். இந்த சக்தி வாய்ந்த இணையத்தின் தோழர்களான இளைய தலைமுறையினருக்கு, தொழில் நுட்ப வளர்ச்சியை அஞ்சாமல் கையாண்டு உலகத்தை மாற்றும் சக்தி உள்ளது.
வெளிப்படையான இயக்கங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இணையத்தின் வழி உலகின் இயக்கங்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வருகிறது. புதுவகையாக இணையத்தின் ஊடக பரிமாறிக்கொள்ளும் தகவல்களால் இந்த இளைய தலைமுறையினரின் நடவடிக்கைகள், காலம் காலமாக மாறுதல்கள் இன்றி இயங்கி வந்த அரசாங்கங்களை, தொழில் நிறுவனங்களை, ஊடங்கங்களை நிலைகுலையச் செய்கின்றது.
கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரும், சிந்தனையாளரும், பேச்சாளருமான ‘டான் டாப்ஸ்காட்’ (Don Tapscott) புதியதோர் புரட்சிகரமான உலகம் மலர்ந்துள்ளது, அதற்கு அடிப்படையாக விளங்குவது இணையத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார்.
இந்தப் புரட்சிக்கு வெற்றிகரமாக வழி வகுப்பது இணைய வழி தகவல் பரிமாறல்களினால் ஏற்பட்ட முன்னேற்றம். இந்த தகவல் பரிமாறல்களில் உள்ள…
1. ஒருங்கிணைந்து செயலாற்றுதல், ஒரு பொதுக் குறிக்கோளுக்காக கூட்டு முயற்சியாக ஒத்துழைத்தல் (Collaboration)
2. வெளிப்படைத்தன்மை (Transparency)
3. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
4. முடிவெடுக்கும் திறன் (Empowerment)
ஆகிய நான்கு பண்புகள் புரட்சிகரமான வெற்றியைத் தரும் முன்னேற்றதிற்கு வழி வகுத்து வருகிறது என்கிறார் டான் டாப்ஸ்காட். இந்த “வெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்” மூலம் மனித நாகரிகத்தின் வளர்ச்சியை நல்ல முறையில் மாற்றி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க முடியும். கீழ் வரும் எடுத்துக்காட்டுகள் இந்த உண்மையை வலியுறுத்துகிறார் டான் டாப்ஸ்காட்.
1. ஒருங்கிணைந்து செயலாற்றுதல்:
ராப் மெக் ஈவன் என்பவர் தங்க சுரங்கங்களில் முதலீடு செய்பவர். அவரிடம் பணி புரியும் புவியமைப்பியல் (geologist) ஆய்வாளர்கள் உதவியினால் நிலத்தடி தங்கச் சுரங்கங்களில் தங்கம் கண்டெடுக்க முயன்றார். அவரது ஆய்வாளர்கள் தரும் தகவல்களும், புள்ளி விவரங்களும் அவருக்குத் தேவையான முறையில் அமைந்திருக்கவில்லை. பொறுமை இழந்தார் ராப் மெக் ஈவன். தனக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களையும் இணையத்தில் வெளியிட்டார். இந்தத் தகவல்களை ஆராய்ந்து தங்கம் எங்கு கிடைக்கும் என்றத் தகவலை சரியான முறையில் அறிந்து பதில் அளிப்பவர்களுக்கு அரை மில்லியன் டாலர்கள் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். அவரது சாவாலை பலர் ஏற்று ஆராய்ந்து அவருக்குத் தகவல் அளிக்க முன் வந்தார்கள். சமூக வலைதளங்கள் வழி தகவல் பரவியதால் அவரது முயற்சி வெற்றி பெற்றது. கிடைத்த தகவல்களினால் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கம் அவருக்குக் கிடைத்தது. அவரது நிறுவனத்தின் மதிப்போ பற்பல பில்லியன் டாலர்களாக உயர்ந்தது.
2. வெளிப்படைத்தன்மை:
இணையத்தின் வழியாக பெரிய நிறுவனங்களின் நடைமுறைகளும், அரசாகங்களின் நடவடிக்கைகளும் விரைவில் மக்களுக்குத் தெரிய வருகிறது. விக்கிலீக்ஸ் (WikiLeaks) நிறுவனரான ஜூலியன் அசான்ஜே (Julian Assange) போன்றவர்கள் எடுக்கும் முயற்சியினால் இரகசியமாகக் காப்பாற்றப் பட்ட தகவல்கள் அம்பலமாகின்றன. பொதுமக்களின் விரல் முனைகளில் இப்பொழுது உலக நடவைக்கைத் தகவல்கள் சுதந்திரமாக வந்து சேர்கின்றன. இது போன்ற தகவல்களின் வெளிப்படைத் தன்மையினால் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு வெறும் வெட்டிப் பேச்சுகளும், பொய்யான வாக்குறுதிகளும் உதவாது என்பதை நிறுவனங்களும், அரசாங்கங்களும் உணர்ந்து வருகின்றன. இதனால் அவர்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
3. பகிர்ந்து கொள்ளுதல்
அறிவுசார் உடமைகளை (intellectual properties) காப்புரிமை (copyright ) என்ற கட்டற்று (open source) பகிர்ந்து கொள்ளுதல் ஆக்கத் திறன் வளர்ச்சியை விரைவு படுத்தி மனித இனம் மேம்பாடு அடைய வழி வகுக்கும். எடுத்துக் காட்டாக, ஐ.பி.எம்.(IBM) நிறுவனம் 400 மில்லியன்கள் டாலர்கள் மதிப்புள்ள அதன் மென்பொருட்களை லின்னக்ஸ் (Linux) வளர்ச்சிக்குக் கொடுத்துதவியால் பல பில்லியன் டாலர்கள் வருமானம் பெற்று ஐ.பி.எம். நிறுவனம்தான் பயனடைந்தது.
வரும் ஒரு ஆண்டிற்குள் மருந்தியல் தொழில் துறையின் (pharmacological industry) தனிக்காப்புரிமை (patent rights) பெற்ற பல மருந்துகளின் காலம் முடிவடைகிறது. இதனால் அத்தொழில்துறை நிறுவனங்களின் வருமானம் 20-35% வீழ்ச்சி அடையும் நிலை ஏற்படப் போகிறது. நிறுவனங்களின் லாப முறையை நிலை நிறுத்த இந்த நிறுவனங்கள் புதிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தங்களது மருந்தியல் ஆராய்ச்சி முடிவுகளை அனைத்து மருந்தியல் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு நோய் தீர்க்க உதவும் புதிய மருந்துகளை விரைவில் கண்டு பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு பகிர்ந்து கொண்டு, ஒருங்கிணைத்து செய்யும் ஆராய்ச்சிகள் மனித குலத்தின் நோயற்ற நல்வாழ்விற்கு பெரிதும் உதவும்.
காலத்திற்கேற்ற புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அதன்படி வியாபார உத்திகளைக மாற்றாவிடில் இசைத்துறை இப்பொழுது தடுமாறும் நிலையைப் போன்ற நிலையை அடைய நேரிடும். உலகப் புகழ்வாய்ந்த இசைக் கலைஞர்களும், இசைத்துறை நிறுவனங்களும் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட மாறுதல்களை அனுசரித்து, காலதிற்கேற்ற புதிய தொழில் கட்டமைப்பு வழிகளை நடைமுறைக்கு கொண்டுவருவதைச் செயல் படுத்தவில்லை. அதைத் தவிர்த்து தரவிறக்கம் செய்து பாடல்களை கேட்க விரும்பும் பதின்ம வயதினர் மீது காப்புரிமை வழக்கு போடுவதில்தான் மும்முரமாக இருக்கின்றனர். இது தொழில்நுட்ப வளர்ச்சியை அனுசரித்து செல்லும் வகையில் அமைந்த காலத்திற்கேற்ற அணுகுமுறையல்ல. பகிர்ந்து கொண்டு பலனடைவோம் என்று சிந்தனை முறையில் அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். வளைந்து கொடுக்காவிடில் வர்த்தகத்தில் வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.
4. முடிவெடுக்கும் திறன்:
அறிவுடைமையே சக்தி தரும் என்பதை மெய்ப்பிக்கும் காலமாக எண்ணிமகாலம் திகழ்கிறது. அதிகாரம் என்பது அரசாங்க நிர்வாகங்ளில் மையப்படுத்தப் பட்டிருந்த நிலை இப்பொழுது மாறி வருகிறது. சமூக வலைதளங்கள் பழைய அதிகார காடுப்பாட்டிற்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. எந்த முடிவையும் நிர்ணயிப்பதில் பொதுமக்களின் பங்கு அதிகரித்து வருகிறது. எண்ணிம கால தலைமுறையினர் அரசு சொல்வதைக் கேட்டு நடக்கும் முந்தைய தலைமுறையினரில் இருந்து பெரிதும் மாறு பட்டவர்கள். இவர்கள் சாதாரண குடிமக்கள் அல்ல. எந்த உலக நிகழ்ச்சியிலும் இவர்களது பங்களிப்பு அதிகமாகிவிட்டது.
இதனை சமீபகாலத்தில் நடந்த உலகப் புரட்சிகளின் வழி அறியலாம். சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள் வெகு விரைவில் பரவி அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. சுதந்திரத்திற்கு வழி கோலுகிறது. துனிஷியா (Tunisia) நாட்டின் கலவரத்தில், மாணவர்களைத் தாக்கிய கொலைக் கும்பலை மாணவர்கள் கையாண்ட விதமே இதற்குச் சான்று. தாக்குதல்களை உடனுக்குடன் கைபேசியில் படம் பிடித்து அநீதி நடக்கும் இடங்களை நட்பு இராணுவக் குழுவிற்கு மாணவர்கள் காட்டிக் கொடுத்தனர். அதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். டுவிட்டெர் (Twitter) சமூகதள வழியாக செய்யப் பட்ட தகவல் பரிமாற்றம் சிரியாவின் கலவரத்தின் நிகழ்வுகளின் போக்கை நிர்ணயித்தது. இவ்வாறு அதிகாரம் பொதுமக்களின் கைக்கும் வருவதற்கு இணையம் உதவி செய்கிறது.
ஆனால், குறை என்று சொல்ல நேர்வது இந்த இளைய தலைமுறையினரின் போராட்டங்களுக்கு ஒரு குறிப்பிட தலைமை என்று ஒன்று இல்லாது போவது. அக்குறையையும் மீறி நல்வழியிலேயே இந்த இயக்கங்கள் கொண்டு வரும் மாறுதல்கள் நிகழ்கிறது. வெளிப்படையான சமுதாயத்திற்கான இந்த புதிய கொள்கைகள் இனி உலக நிகழ்வுகள் பழைய முறைக்கு செல்லும் நிலையையே இல்லாது செய்துவிட்டது.
தகவல் பரிமாற்ற வரலாறு:
வேளாண் கால (agrarian age) அறிவுடைமை அந்தந்த குழுக்களில் மையப் படுத்தப் பட்டிருந்தது. மக்கள் வாழ்வதற்காகப் பிறந்து வாழ்ந்து மடிந்தனர். அவர்கள் அறிந்ததைப் பலருக்கும் அறியப் படுத்தும் வாய்ப்பு இல்லாதிருந்தது. ஜொஹனஸ் கட்டன்பர்க் (Johannes Gutenberg) 1450 இல் அச்சு இயந்திரம் கண்டறிந்த தொழில்துறை காலத்தில், மக்கள் அறிந்தவற்றை ஆவணப் படுத்தி பலருக்கும் விரைவில் சென்றடையுமாறு பரப்பும் வசதி ஏற்பட்டது. தற்பொழுதுள்ள எண்ணிம கால இணைய வளர்ச்சியில் உலகம் மிகவும் சுருங்கி விட்டது.
இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்ததை உலக அளவில் அனைவருக்கும் எடுத்துரைக்கும் வழி ஏற்பட்டுள்ளது. உலகளாவிய நிலையில் அனைவரின் அறிவுத்திறனும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளது பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. நிறுவனங்களின் கட்டமைப்பு மாறுபட்டு ஒருங்கிணைந்து செயலாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது, நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது, அறிவையும் தகவல்களையும் பொது நலனுக்காகப் பகிர்ந்து பரிமாறிக் கொள்வதால் ஒருங்கிணைத்த சக்தி மக்கள் வசமாகிறது. இது புதிய சுதந்திரத்திற்கு வழி வகுக்கிறது. இணையவழித் தகவல் காலத்தில் உலகம் ஒரு புதிய மாற்றத்தை நோக்கிச் செல்லத் துவங்கி விட்டது.
புதுவினை செய்க அஃது
பொதுநலம் ஆதல் வேண்டும்
இதுசெய்க போர்கள் இல்லை
இன்ப நல்லுலகைக் காண்பாய்
– பாரதிதாசன், நாள்மலர்கள், பக். 134
புதிய புதிய பொருள்கள் பல படைக்க வேண்டும். அந்தப் பொருள்கள் அனைத்தும் பொதுநலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சீரிய கருத்தைச் சொன்னார் பாரதிதாசன்.
இணையத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியால், அதனை தினமும் உபயோகிக்கும் இளைய தலைமுறையின் ஆக்கபூர்வமான சிந்தனைகளால் அவர் கனவு நினைவாகி வருவதாகத் தெரிகிறது
Sources:
– Radical Openness: Four Unexpected Principles for Success (TED Books) by Anthony D. Williams and Don Tapscott (Jan 17, 2013) – http://www.amazon.com/Radical-Openness-Unexpected-Principles-ebook/dp/B00B14RIQS/
– A conversation about how the web is changing our world, Don Tapscott – http://dontapscott.com/
- பௌத்த கோவில்கள் மீது கொரிய கிறிஸ்துவர்களின் தொடர்ந்த அட்டூழியம்
- பலுச்சிஸ்தான் இந்துக்களின் வெளியேற்றம்
- மலர்மன்னனுடன் சில நாட்கள்
- அஞ்சலி – மலர்மன்னன்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..16 இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.
- குறும்பட மேதேய் ! அங்காடி தெருவின் குறும்படபோட்டி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7
- சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு
- நிஜமான கனவு
- வால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3 (Song of Myself)
- சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரையும், சுப்ரபாரதிமணியனின் கொஞ்சம் கவிதைகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44
- புதியதோர் உலகம் செய்வோம் . . .
- துயர் விழுங்கிப் பறத்தல்
- பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (11)
- குற்றமும் தண்டனையும் – எம். ஏ. சுசீலாவின் மொழிபெயர்ப்பு
- தாகூரின் கீதப் பாமாலை – 51 நேசிப்பது உன்னை !
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -3
- சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
- நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்
- டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!
- மலர்மன்னன்
- மலர்மன்னன் – மறைவு 9.2.2013
- பெருங்கதையில் ஒப்பனை
- அக்னிப்பிரவேசம்-22
- டோண்டு ராகவன் – அஞ்சலி
- தலிபான்களின் தீவிரவாதம் சரியா
- பூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]
- கூந்தல் அழகி கோகிலா..!