இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
திருக்குறள் உலகப் பொதுமறை எனத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகமாகத் திகழ்கின்றது. திருக்குறளை சட்ட இலக்கியம் என்று கூறலாம். மனிதன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பது இலக்கியத்தின் நோக்கம். மனிதனுக்கு வழிகாட்ட எத்தனையோ இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது “திருக்குறளே” ஆகும்.
திருக்குறள் மனித உரிமைகளைக் கூறும் மனித உரிமைப் பிரகடன இலக்கியமாக அமைந்துள்ளது. திருக்குறள் மொழியும் இம்மனித உரிமைக் கருத்துக்கள், அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். இதனை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டு, செயல் வடிவம் கொடுத்து, காத்து வந்தால் இந்த வையகம் உன்னதமான நிலையை அடையும்.
மனித உரிமை விளக்கம்
‘மனித உரிமை’ என்பது இன்றையச் சூழலில் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. அந்தந்த நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் – இவற்றைப் பொறுத்து ‘மனித உரிமைச் சட்டமும்’, அதைப் பயன்படுத்தும் முறையும், விளக்கங்களும் மாறுபடுகின்றன. ஐ.நா.சபையானது (United Nations Organization) உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ‘மனித உரிமை சாஸனத்தை’ உருவாக்கி உள்ளது. இச்சபையானது மனித உரிமைகள் பிரகடனத்தையும் 1948-ம் ஆண்டு செய்துள்ளது. ஐ.நா.சபையானது மனித உரிமைகளை உருவாக்கினாலும் அவற்றை அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
10-12–1948 அன்று ஐக்கிய நாட்டுச் சபை உலக மனித உரிமைப் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) உருவாக்கிய, மனித உரிமைப் பிரகடனத்தின்படி மனித உரிமை எனப்படுவது ‘ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகள்’ ஆகும். (Human rights are the rights one has simply because one is a human being) எல்லா மனிதர்களுக்கும் அவ்வுரிமைகள் பொதுவானவை.
மனித உரிமை என்பது மனிதனுக்கு உள்ள அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் குறிக்கும். பொருளாதார நிலை, நாடு, எல்லைகள், வயது, திறமை, இனம், பால் ஆகியவற்றைக் கடந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதாக மனித உரிமை அமைந்திலங்குகின்றது. வாழ்வுரிமை(Right to Life), சுதந்திரம்(Freedom), சமத்துவம்(Equality), நீதி(Justice), சிந்தனைச் சுதந்திரம்(Freedom of Thought), எழுத்து / பேச்சு சுதந்திரம்(Freedom of Expression) உள்ளிட்டவை அடிப்படை உரிமைகளில் அடங்கும்.
மனித உரிமைகளின் வகைகள்
மனித உரிமைகள் இரு வகைப்படும். அவையாவன,
1. குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights), 2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural rights)
என்பனவாகும்.
1.குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights)
குடி / அரசியல் உரிமைகளை ஆறுவகைகளாகப் பகுக்கலாம். அவையாவன,
(அ) வாழ்வுரிமை (Right to life)
(ஆ) நாட்டின் உரிமை (Right to nationality)
(இ) சட்டத்தின் முன் சமமான தன்மை (Equality before law)
(ஈ) சிந்தனை உரிமை (Freedom of thought)
(உ) எழுத்து / பேச்சு உரிமை (Freedom of expression)
(ஊ) பாதுகாப்பு உரிமை
என்பனவாகும்.
2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural rights)
சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை,
(அ) உணவு உரிமை (Right to food)
(ஆ) உறையுள் உரிமை (Right to shelter)
(இ) வாழ்க்கைத் தகுதி (Standard of living right)
(ஈ) வேலைக்கு உரிமை (Right to work)
(உ) கல்வி உரிமை (Right to education)
(ஊ) கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பு (Right of participation in cultural activities)
(எ) தனிச் சொத்து உரிமை (Right to personal property)
என ஏழுவகைகளாகப் பகுக்கலாம்.
அரசோ பிறரோ அடுத்தவருடைய மனித உரிமைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும். சுருங்கக் கூறின், பால், இன வேறுபாடின்றி உலகின் அனைத்து ஆண், பெண்களுக்குள்ள உரிமைகள் மனித உரிமைகள் ஆகும். ஒருவரது பிறப்பு, நாடு, சாதி, சமயம், சொத்து, நிறம் ஆகிய எதனாலும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை மனித உரிமைகள் ஆகும்.
திருக்குறளில் மனித உரிமைகள்
திருக்குறளில்,
1. வாழ்வு உரிமை ( Right to life)
2 .பொருளாதார உரிமை ( Economic right)
3. கல்வி உரிமை (Right to education)
4. பேச்சுரிமை ( Right to expression)
5. நீதி பெறும் உரிமை (Right to equality before law)
6 .தன்னுரிமை ( Right against self injury)
ஆகிய மனித உரிமைகள் காணப்படுகின்றன.
1வாழ்வுரிமை
உலகில் பிறந்த அனைவருக்கும் வாழுகின்ற உரிமை உள்ளது. வாழ்வுரிமை என்பது உயிர் வாழும் உரிமை எனப் பொருள் கொள்ளுதல் சரியாகாது; தரமான வாழ்விற்குரிய உரிமை எனக் கொள்ளவேண்டும். வாழ்க்கைத் தரம், சுகாதாரச் சுற்றுச்சூழல், தூய்மையான பணியிடம், தேவையான ஓய்வு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதே வாழ்வுரிமை ஆகும்.
சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் முதல் பிரிவானது, “எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கின்றனர். அவர்களுக்கு அறிவும், மனசாட்சியும் உள்ளன. எனவே, ஒருவருக்கு ஒருவர் சகோதர உணர்வோடும், ஒருவரை ஒருவர் மதித்தும் வாழ வேண்டியது அவர்தம் கடமையாகும்” என்று குறிப்பிடுகின்றது. இதனைத் திருவள்ளுவர்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள் 972)
என்று உணர்ர்த்தியுள்ளார்!
பிறப்பினால் எவரும் வேறுபடுவதில்லை; பிறப்பினால் மனிதர்களை வேறுபடுத்துவது தவறு. “உழைப்பே உயர்வளிக்கும்” என அறிவுறுத்துகிறார். மேலும் ஒவ்வொருவருக்கும் பசி, பிணி, பகையின்றி வாழும் உரிமை உள்ளதென்றும், அவற்றினின்று தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமையென்பதை,
“உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேறாது இயல்வது நாடு” (குறள் 734)
எனத் திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
பொருள் வரும் வழிகளை உண்டாக்குதல், பெற்ற பொருட்களைச் சேர்த்தல், சேர்த்தவற்றைக் காத்தல், அவற்றைக் குடிமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தல் ஆகியவற்றைச் சிறப்பாகத் திறன்படச் செய்பவனே நல்ல அரசன் என்ற கருத்தை,
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” (குறள் 385)
என்று வள்ளுவர் மொழிகின்றார். அத்தகு அரசனின் கீழ் வாழும் குடிமக்கள் அச்சமும், கவலையுமின்றி இனிது வாழ்வர்; அவர்தம் வாழ்க்கைத் தரம் நன்கு விளங்கும். இத்தகு வாழ்வுரிமை அவ்வரசின் கீழ் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு என வள்ளுவர் அறிவுறுத்துவது நோக்கத்தக்கது.
உணவு உரிமை
வாழ்வுரிமைகளில் மிகவும் இன்றியமையாதது “உணவு உரிமை” ஆகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசியின்றி உணவுண்டு மகிழ்வாக வாழ்வதற்கு உரிமை உடையன. மேலும் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது உலகை ஆளுகின்ற அரசாங்கத்தின், சமுதாயத்தின் கடமையாகும். வள்ளுவர் வாழ்ந்த சமுதாயத்தில் பொதுவுடைமை, ஜனநாயகம் போன்ற கருத்துக்கள் தழைத்தோங்காத காலம். தனியுடைமைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயம். அத்தகைய சமுதாயத்தில் வளமையும் வறுமையும், ஏற்றமும் தாழ்வும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி, பசியால் இறந்தநிலையும் வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்துள்ளது. இச்சீர்கேட்டினை எண்ணி மனம் வெதும்பிய வள்ளுவர் தமது திருக்குறளில் நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களைப் படைத்துள்ளார். ஒரு சாரார் வளமுடன் வாழும் நிலையில், மற்றொரு சாரார் பிச்சை எடுத்து உண்ணும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறதல்லவா? அதற்குக் காரணமாக நாம் அனைவரும் விதியை நொந்து கொள்ளுகிறோம்! இறைவனைச் இழித்தும் பழித்தும் தூற்றுகிறோம்!
திருவள்ளுவர் இந்நிலைக்கு இறைவனும், விதியும் காரணமென்றால், அவ்விறைவன் எதற்கு என்று நினைத்து,
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்” (குறள் 1062)
என்று சாபமிடுகிறார்!
பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் இறைவன் உயிர்களைப் படைத்திருந்தால், அப்படிப் படைத்தவனே இந்த உலகிற்கு வந்து பிச்சையெடுப்பவரைப்போல தானும் அலைந்து திரிந்து கெட்டுப் போகட்டும் எனக் கோபமுற்றுக் கூறுகிறார்!
சமுதாயத்தில் எல்லோரும், எல்லாமும் பெற்றுச் சமமாக வாழும் உரிமை உள்ளது என்பதை இக்குறள் நமக்கு எடுத்தோதுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வு, அதனால் ஏற்படும் வறுமை, அதன் விளைவாய் இரத்தல் ஆகியவை கொடுமை. இக்கெடுமைகளற்ற சமுதாயமே மனிதனையும் மனித வாழ்வையும் உயர்த்த முடியும் என்ற கருத்தை இதன்மூலம் தெளிவுறுத்துகிறார்.
பொருளாதார உரிமை
பொருள் தேடும் உரிமை, அதனைப் பாதுகாக்கும் உரிமை சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு எனத் திருக்குறள் தெளிவுறுத்துகிறது. அப்படிப் பொருள் தேடுவது அறவழியில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
வினைத்தூய்மை என்ற அதிகாரத்தில்,
“அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற் பா லவை” (குறள் 656)
என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
பிறர் வருந்தும்படி ஒருவன் அடைந்த பொருள் அனைத்தும், பொருளானது தன்னைப் பெற்றவன் வருந்தி அழும்படி அவனை விட்டுப் போய்விடும் தன்மை கொண்டது. நல்ல வழியில் வந்த பொருள் தொலைந்தாலும் பின்னர் நன்மையே தரும். பொருளாதார உரிமை அனைவருக்கும் உண்டு. அப்பொருளைத் தேடுவதற்காக அடுத்தவர் உரிமையை மீறுவது தவறு; அற வழி தவறி முறையற்ற வகையில் பிறரை வஞ்சித்துப் பொருள் சேர்ப்பது கீழ்த்தரமான செயலாகும்; அஃது இகழ்தற்குரியது. வள்ளுவர் இதனை,
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை” (குறள் 656)
என்று எடுத்துரைக்கின்றார்.
தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது.
அறமற்ற வழியில் பொருள் சேர்த்தல் தவறு என்று மக்களுக்கு உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைதனை உணர்த்துவதால் லஞ்சமற்ற, சுரண்டலற்ற சமுதாயத்திற்கு வள்ளுவப் பெருந்தகை வழி காட்டுகிறார்!
பிறருக்குக் கொடுமை செய்து கீழ்த்தரமாக நடத்துதல்
உலக மனித உரிமைகள் பிரகடத்தின் 5-ம் பிரிவுவானது “எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது. கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது” என்று எடுத்துரைக்கின்றது. அரசு குடிமக்களை கண்ணோட்டமின்றி வருத்தக்கூடாது. அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீரே கொடுங்கோல் அரசைத் தேய்க்கும் படையாக அமையும். எனவே அரசன் நேர்மையான முறையில் தன் குடி மக்களைக் காத்து நேரிய வழியில் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். இதனை,
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீற் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை” (குறள் 555)
என்ற திருக்குறள் எடுத்துரைக்கின்றது. கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே முறையற்ற ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.
உணர்வுகளைப் புண்படுத்துதல்
மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துதல் மனித உரிமை மீறல் ஆகும். மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்பதை,
“இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது”. (குறள் 99)
எனத் திருவள்ளுவர் தெளிவுறுத்துகிறார்.
பிறர் சொல்லும் இனிமையான சொற்கள் தனக்கு இன்பத்தைத் தருவதை உணர்ந்த பிறகும், மற்றவர்களிடம் கடுமையான சொற்களைப் பேசுவதனை மனிதர்கள் தவிர்த்தல் வேண்டும்.
பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருவதைக் காண்கின்றவன், தன் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றவன், தான் மட்டும் பிறரிடம் வன்சொல் கூறி அவர்கள் மனத்தைப் புண்படுத்துதல் முறையாகாது. அது மனித உரிமை மீறலாகும் என்று வள்ளுவர் மொழிகின்றார்.
எழுத்துரிமையும் பேச்சுரிமையும்
மனித உரிமைகளுள் முக்கியமான ஒரு உரிமை தன் கருத்துக்களை எழுத்து, பேச்சு மூலம் வெளிப்படுத்துவது. இது இல்லையெனில், மற்ற உரிமைகளும் பயனற்றுப் போகும். மனிதனுக்குச் சொல்லுரிமை இருக்கிறது என்று கூறும் திருவள்ளுவர், அத்திறமையை வளர்த்துக் கொள்வதற்கு ,
“சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இனிமை அறிந்து”. (குறள் 645)
என்று வழி காட்டுகிறார்.
தான் சொல்லுகின்ற சொல்லை வெல்லக் கூடிய வேறு ஒரு சொல் எதுவும் இல்லை என்பதை நன்கு அறிந்த பின்னரே சொல்ல நினைத்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை,
“சொலல் வல்லன் சோர்வு இலான் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது” (குறள் 647)
என்று தெளிவுறுத்துகின்றார். எதையும் சொல்லுவதில் வல்லவனாகவும், மறதியும், சோர்வும் இல்லாமல் சொல்லுபவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் உள்ள சொல்வன்மைமிக்கவனை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. வள்ளுவரின் இக்குறட்பாக்கள் மனிதனுக்குள்ள எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.
நீதி பெறும் உரிமை
உலக மனித உரிமைப் பிரகடத்தின் 7, 8 பிரிவுகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எடுத்துரைக்கின்றது. இவ்வுலகில் வாழும் அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்புரிமை படைத்தவர். எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அடிப்படை உரிமைகள் சட்டப்படி அளிக்கப்படவும், அவை மீறப்படும் பொழுது தகுதி வாய்ந்த நீதி அமைப்புகளின் மூலம் தீர்வுகள் பெறும் உரிமையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்டு.
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”. (குறள் 388)
நீதி நெறி முறைகள் தவறாமல் குடிமக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை மக்கள் ஒப்பற்ற தெய்வமென மதித்துப் போற்றுவர்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், நீதியைப் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நிலை நாட்டுவது அரசின் கடமை என்பதைத் திருவள்ளுவர் அறத்துப்பால் “நடுவு நிலைமை” அதிகாரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.
வலியுறுத்துகிறார். அரசு மட்டுமல்லாது மக்களும் நடுவு நிலைமை தவறாது வாழ வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்தியிருப்பது போற்றுதற்குரியதாகும்.
கல்வி உரிமை
கல்வியானது உலகை உய்விக்கும் ஒப்பற்ற கருவியாகும். கல்வியே மனிதனை மனிதனாக்குகின்றது, பண்பட்ட மக்களாக மாற்றுகின்றது. சமுதாயம் முன்னேற்றம் காண்பது கல்வியினாலேயே என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய கல்வியை அரசு அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களையும் கல்வி கற்க வேண்டும் என்று அரசானது மக்களைக் கட்டாயப்படுத்தல் வேண்டும். அதை நமது நடுவண் அரசு சட்டமாக இயற்றியுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு, அதை முழுமையாக ஏற்று வெற்றி அடையச் செய்ய வேண்டியது மக்களின் தலையாய கடமையாகும். கல்வி பெறுவதை ஒரு மனித உரிமையாகக் கருதிக் காத்தல் வேண்டும்.
அதனாலேயே வள்ளுவர் கல்வி கற்றலின் இன்றியமையாமையை ஓர் அதிகாரம் முழுமையும் விளக்கியுள்ளார். கல்லாதலினால் ஏற்படும் கேட்டினையும் வள்ளுவப் பெருந்தகை தெளிவுபடுத்தியுள்ளார்.
கல்வி இன்னாருக்குத்தான் உரியது என்று வறையறுக்காது, அனைவருக்கும் பொது என்பதை,
“யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு”. (குறள் 397)
என வள்ளுவர் விளக்குகிறார்.
கற்றவர்களுக்குத் தன் நாட்டையும் ஊரையும் போலவே பிற நாடுகளும் ஊர்களும் உரிமை உடையவனவாகும். அப்படி இருக்க ஒருவன் சாகும்வரை கற்காமல் காலத்தை வீணாக்குவது ஏன்? என்று வியக்கிறார் வள்ளுவர். மேலும் கல்வியே மனிதர்களுக்கு உற்ற துணை என்பதை,
“கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை”. (குறள் 414)
என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். ஒருவன் கற்கவில்லையென்றாலும் கற்றவர்கள் சொல்வதைத் தவறாமல் கேட்டறிய வேண்டும். அது அவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போன்று துணையாய் அமையும். கேடில் விழுச்செல்வம் கல்வி அனைவருக்கும் உரியது; ஒருவன் அனைத்து முயற்சியும் செய்து கல்விச் செல்வத்தைப் பெற வேண்டும். அது அவனது உரிமையாகும் என்பது வள்ளுவர் தரும் கல்வியுரிமை குறித்த சிந்தனையாகும்.
தன்னுரிமை
யாரும் தன்னுடல், உயிர், உள்ளம் (ஆன்மா) ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது “தன்னுரிமை” எனப்படும்.
ஒருவன் ஒன்றை அறிந்து கொண்டே பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும். அவ்வாறு செய்தால் அவருக்கு அவர் மனமே துன்பத்தைக் கொடுக்கும் இதனை,
“தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்”. (குறள் 293)
என்று வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர். பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும். இத்தகைய தன்னுரிமைகளை,
“துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்”. (குறள் 926)
“பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்”. (குறள் 146)
என வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
கடமையும் உரிமையும்
உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. “கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை” என்று அறிஞர் மு.வரதராசனார் கூறுவது நோக்கத்தக்கது.
பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்பதை,
“குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்”. (குறள் 1023)
என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும் என்பதை உணர்ந்து மனித உரிமைக் கோட்பாடுகளை திருக்குறள்களாக வடித்துக் கொடுத்துள்ளமை போற்றுதற்குரியதாகும். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளைப் பின்பற்றி உலகம் வாழ்ந்தால் வானவர் போற்றும் நிலைக்கு உயரும் என்பது திண்ணம்.
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’
- திருக்குறளில் மனித உரிமைகள்!
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12
- கரிகாலன் விருது தேவையில்லை
- காலம்
- நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்
- எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- மூன்று அரிய பொக்கிஷங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -1
- சுத்தம் தந்த சொத்து..!
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 1
- மெல்ல நடக்கும் இந்தியா
- மஞ்சள் விழிகள்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)
- வாலிகையும் நுரையும் – (15)
- யாதுமாகி நின்றாய்….. !
- மூக்கு
- தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !
- விட்டில் பூச்சிகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)
- “தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
- புதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.
- அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
- நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி