ஒட்டுப்பொறுக்கி

This entry is part 2 of 29 in the series 24 மார்ச் 2013

பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன்,வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் சென்ற ஆடுஜீவிதத்தமிழன் என எல்லோருக்குள்ளும் ஒரு ஒட்டுப்பொறுக்கி உண்டு. இப்போதும் கூட அமேரிக்காக்காரனுக்கு ராத்திரி இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தொண்டூழியம் பார்க்கிறவனும் ஒட்டுப்பொறுக்கி தான். எப்போதும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் அவனது ஆருடத்தில் நாடு கடத்தப்படும் யோகம் உண்டு என்பதே ஒரு சோகம். முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைசாமி அதைப் பெருமையாகச்(?)சொல்லுவார். “முன்னால கடூழியம் பார்ப்பதற்காகப்போனான் , இப்ப தம் அறிவை விற்கத்தானே போறான்” என்று ! 

இதுபோல கொத்தடிமைகள் கதைகளாகவும், நாடகங்களாகவும், திரையிலும் பார்த்துச்சலித்தவைதானே. என்ன ஒரு ஆதர்ச நாயகன் வந்து அவர்களுக்குள்ளாகவே இருந்து கொண்டு கடைசியில் போரிட்டு அனைவரையும் விடுவிப்பான். இங்கு கொஞ்சம் மாறுதலுக்கென அப்படி ஏதும் நிகழாமல் பார்த்துக் கொள்கிறார் பாலா.! வேறொன்றும் புதிதில்லை. இதை அனுராக் காஷ்யப் ஹிந்தி/ஆங்கில துணை எழுத்துகளுடன் வடநாட்டிலும் வெளியிட்டிருக்கிறார் என்பது ஏன் என்று புரியத்தானில்லை.

அந்தக் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்திற்கென அதர்வா அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்கிறார். கூடவே அலையும் வேதிகா அவரைச்சீண்டிக்கொண்டிருப்பதிலேயே பொழுது கழிகிறது. இலையில் அமர்ந்தும் ஏதும் வைக்கவிடாமல் அவரை அழ வைக்கும் முயற்சிகள் வெகுவாக மனதைக்கவர்கிறது. பெரியப்பா ( விக்ரமாதித்யன் நம்பி) எங்கே எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார் அதர்வா, அவரை அலைக்கழித்து அலைக்கழித்து கடைசி வரை அவர் இறந்ததை சொல்லவே இல்லை அவருக்கு. அதர்வாவும் மறந்தே விடுகிறார்.இத்தனை தேடியவர் அடுத்த நாள் அவர் மனைவியைக் காணும்போது ஒரு வார்த்தை கூடவா கேட்காமல் இருப்பார் ?! ஹ்ம்… நாமும் அதை மறந்துவிடுவதே நல்லது..! 

அந்தப் பஞ்சாயத்துக்காட்சிகளில் வேதிகா மரத்தின் பின் நின்றுகொண்டு சைகை மொழியில் அதர்வாவுடன் பேசும் காட்சி , எனக்கு ஏனோ அந்த ‘தெய்வத்திருமகளில்’ கடைசி நேர நீதிமன்றக்காட்சிகளை நினைவு படுத்திக் கொண்டேயிருந்தது.இருப்பினும் அந்தத் ‘திருமகளில்’ இருந்த காட்சியின் இறுக்கம் கிஞ்சித்தும் இங்கு இல்லை.மனதில் ஒட்டவே இல்லை.

பாத்திரத்தேர்வுகளில் கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி (நான் கடவுளிலும் அந்த மனம் பிறழ்ந்த சிறு குழந்தையின் தாத்தாவாக நடித்திருந்தார்) பிறகு அந்த தன்ஷிகா , என்னமா உணர்ச்சிகளை ஒரு நொடியில் கைதேர்ந்த நடிகை போல காண்பிக்கிறார். அந்தக்கூனல் கிழவியையும் கூடச் சொல்லலாம்.

கல்யாணத்தில் அந்தச் சிங்கி அடிக்கும் பையனை காணக்கண்கோடி வேணும். வேலையை முழு மனதுடன் செய்யும் அந்தப்பாங்கு , ஒவ்வொருத்தரிடமும் அருகில் நின்று வேலை வாங்கி இருக்கிறார் பாலா. அந்தக் கங்காணியை விடவும் கம்பௌண்டர் கதாபாத்திரமும் அவரின் உடல் மொழியும் அருமை.

இடைவேளை வரை வேதிகாவுக்கும் அதர்வாவுக்குமான சீண்டல்களும் , ஏசல்களுமாகவே கழிகிறது. அந்த உடைந்த கட்டிடத்துக்குள் அவர்கள் உறவு கொள்ளும்வரை. குழந்தை பிறந்து அவன் கொஞ்சம் பெரியவனான பின் அதே கட்டிடத்தில் சென்று அமர்ந்து கொண்டிருப்பதும் , அவனின் குழந்தை அங்கே அவளால் முடியாத அழுகையை அழுதுகொண்டிருப்பதும் கவிதை. எனினும் வேதிகா சிறிதும் ஒட்டவில்லை படத்தில். பழைய படங்களில் அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாது ஏழையாய் இருப்பினும் ரோஸ்பவுடர் கட்டாயம் பூசியிருப்பார்கள் அதுபோல இங்கு இவருக்கும் கரும்பூச்சு பூசப்பட்டு அவரை மெனக்கெட்டு நமக்கு கருப்பியாகக் காட்டுவது நன்றாகவே தெரிகிறது. உடல்மொழி வாய்க்கவேயில்லை, சொல்லிக் கொடுத்தது போல நடித்துவிட்டு , சரியாகத்தான் செய்தோமா என்று சந்தேகத்தோடே இருப்பது அவரின் கண்களிலே தெரிவது ரொம்பவே வேதனை. லைலா’ இல்லாது போனது நன்றாகவே தெரிகிறது.

ஆங்கில மொழி வாசனை கூட அறியாத இன்றைய தமிழ்க்காதலர்கள் கூட எப்போதும் “I love You” சொல்லிப் பார்த்தே பழகிய நமக்கு நாஞ்சிலாரின் “ நினைக்கிறேன்” என்ற சொல்லே புதிதாகவும் போதுமானதாகவும் இருப்பது நிறைவு. “வெள்ளைக்காரி சூட்டுக்கு ஒன்னால ஈடுகுடுக்க முடியாதுடே”, “இவனுக்கு தாயத்து கைல கட்றதா இல்லை புடுக்குல கட்றதான்னு தெரியலயே” “ ஒன் வண்டியக் கொண்டு போய் ஊர்க்காரன் குண்டிக்குள்ள விட்றா” என்ற வசனங்கள் அந்த கிராமத்து மொழி இன்னும் சிதையாது நம்கூடவே தங்கிவிடாதா என்று நம்மை ஏங்க வைக்கிறது.

அதர்வாவின் கால் நரம்புகள் வெட்டப்பட்ட பின்னர் கதையும் நொண்டியடிக்கிறது. நகர மறுக்கும் காட்சிகள் தொடர்ந்து என் கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அடிப்படையில் இது போன்ற காட்சிகளும் இதைப்போன்ற வலுவான சோகப்பின்னணித்திரைப்படங்களும் சுளுவில் நம்மைக்கரைத்து விடுவது போல இங்கு எங்குமே அமையவில்லை என்பதே ஒரு பெரும் சோகம். எதோ பாலா காண்பிக்கிறார் இன்னும் படம் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுப்போவோம் என்றே தோணியது எனக்கு.!

கல்யாணத்துக்கு வாசிக்கப்படும் பாட்டு எங்கே என்று இருக்கிறது , இதிலொன்றும் புதிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை , ஹ்ம்,,என்ன சொல்வது நாம் பார்த்துப்பழகிய தேவர் மகனின் “மாசறு பொன்னே வருக” வையே வாசித்து வைத்திருக்கலாம். பாலா படங்களில் எப்போதும் யார் இசையமைத்தாலும் பாடல்கள் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. மேலும் அதற்கு முக்கியத்துவம் தருவது போல காட்சிகளும் உண்டாக்கப்படுவதில்லை. போகிற போக்கில் வந்து செல்பவையாகவே இருக்கும். இங்கும் அதுவே. பிரகாஷ் குமார் தமக்குக்கொடுத்த அரிய வாய்ப்பை வெகு சுலபமாகத்தவற விட்டிருக்கிறார்.

இப்படி ஒரு வலுவான கதைக்கு உரமூட்ட அழுத்தமான பின்னணி இசை மிகவும் அவசியம். சலீல் சௌத்ரி,நுஸ்ரத் ஃபதே அலிகான், நௌஷாத், போன்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு இது. சேது’வை பின்னணி இசையின்றி சத்தத்தை முழுவதுமாகக்குறைத்து விட்டு கொஞ்ச நேரம் பாருங்கள்.அப்போது தெரியும் இசை உங்களை என்னவெல்லாம் செய்கிறது என்று. விக்ரமை அந்த பைத்தியக்கார மடத்தில் வந்து அவள் பார்த்துவிட்டுச்செல்லும் போது அதுவரை கவனிக்காதிருந்துவிட்டு , பின்னர் அவள் செல்லும் போது அவளின் முதுகை நோக்கி கூவுவார் விக்ரம் , மனதை அறுக்கும் பச்சைப்பின்னணியில், அந்த இசை உங்களை ஏதும் செய்ய இயலாத கையறு நிலைக்கு தாமாகவே கை பிடித்துக்கூட்டிச்செல்லும் , ஹ்ம்…Bandit Queen ல், அந்த பூலான் தேவி காடையர்களால் மூன்று நாள் இடைவிடாது தொடர்ந்த வன்புணர்வுக்குப்பின் , ஆடையின்றி நடக்க விடுவார்கள், அந்தப் பின்னணியில் இசைப்பது மிருகங்களின் மனதைக்கூடக்கரைத்து அவற்றின் கண்களில் நீரை அவை அறியாது வெளிக்கொண்டு வந்து விடும்.

இங்கும் அது போன்றே ஒரு காட்சிவருகிறது. அந்த கருத்தக்கன்னி’யை வெள்ளைக்காரனிடம் அனுப்பிவிட்டு அவள் கணவன் காலை மடித்துக்குந்தியிருக்க , பின்னர் அங்கு வந்து சேரும் அதர்வா’ விளக்கை பிடித்துக்கொண்டு செல்லும் காட்சி. இப்படி நிறையக்காட்சிகள் தீனி போட்டிருப்பினும் ஏதும் செய்வதறியாது எப்படியேனும் இதை நகர்த்தி தப்பித்துவிடவேண்டும் என்று இசைத்தது போலவே இருக்கிறது.’தீம் ம்யூஸிக்’ என்ற கன்செப்ட் இல்லாவிட்டாலும், அப்போக்கலிப்டோ’வின் இசையை தரவிறக்கிப் பயன்படுத்திருக்க வேண்டாம். படத்தில் எல்லாம் அசலாக இருக்கையில் இசை மட்டும் நகல்.

அத்தனை தூரம் போகாவிட்டாலும் “ நீங்க நல்லவரா கெட்டவரா” என்று நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கும் அந்த மணி காலகாலத்துக்கு நம் காதுகளிலும் மனத்திலும் ஒலித்துக்கொண்டே நம்மை அறுத்துக்கொண்டே இருக்கும். ஹ்ம் அத்தனையையும் கொட்டிக் கவிழ்த்துவிட்டாயடா பாவி ! நந்தா’வில் யுவனுடன் முதலில் பயணிப்பதில் இருந்த சிரமத்தைக்காட்டிலும் இங்கு இமாயலச் சிரமப்பட்டிருப்பார் பாலா என்றே நினைக்கிறேன். இதனை இவன் செய்வான் என்றாய்ந்து அவன் கண் விடலே சாலச்சிறந்தது.

அதர்வா தன் வாழ்க்கைக்காக ஓடுகிறான் , அந்த மலைச்சரிவிலிருந்து விழுந்து எழுந்து, பிறகு அவர்களிடம் பிடிபட்டு கால் நரம்பை அறுக்கும் வரை கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்கும் கூடுதலாக காட்சி நகர்கிறது. எந்தவொரு தாக்கத்தையும் பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தாது போவதற்கு முழுக்காரணம் கற்பனையற்ற, மலினமான இசை மட்டுமே. பாலா நீங்க ஒண்ணு பண்ணுங்க, பின்னணி இசையை முழுதுமாக ஊறி எடுத்துவிட்டு அந்தப் பண்ணைப்புரத்துக்காரனை வைத்து மீண்டும் ஒலி சேருங்கள். புண்ணியமாப்போகும் உங்களுக்கு. காலகாலத்துக்கும் நம் மனதை விட்டு அகலாது நிற்கும் அது.

அந்த ஆங்கிலேயர் கூட்டம் தமக்குள் பேசிக்கொண்டு ஒரு மருத்துவரைக்கொண்டு வர முடிவெடுக்கும் அத்தனை காட்சிகளும் முழுக்க எதோ பள்ளிக்கூட நாடகம் போலவே அமைந்திருக்கிறது. மெச்சூரிட்டியே தெரியவில்லை.பாலா தான் அந்தக்காட்சிகளை இயக்கினாரா..? ஆமா அந்த மருத்துவர் “பரிசுத்தம்“ நோய்க்கு மருந்து கொடுக்க வந்தாரா இல்லை மதத்தைப்பரப்ப வந்தாரா ..? அதோடு ஒரு பாட்டும் ஆட்டமும் வேறு, படத்தின் சீரியஸ்னெஸ்ஸை மழுங்கடிப்பது போலவே அதைத் தொடர்ந்த காட்சிகள்.. சாரி பாலா..! இந்த மருத்துவர் சம்பந்தமான காட்சிகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்திருந்தால் எல்லாம் குணமாகிவிடும் என்று அவர்களைக்கேலி செய்வது போல Sarcastic Comedy யாக காட்சிகளை நகர்த்தியிருப்பது அழகில்லை பாலா. இது அவர் எப்போதும் சார்ந்திருக்கும் தமக்கேயுரித்தான சில மதப்பின்னணிச் சித்தாந்தங்களுக்கு உரமூட்டுவது போலத்தானிருக்கிறது.

இங்கு ஒளிப்பதிவு கிராமத்து முன்பகுதி Sepia Tone லும் பிற்பகுதி பச்சையிலைக்காடுகளுமாக , அந்தப்பச்சை சேது’வில் அந்த பைத்தியக்கார மடத்தைக்காண்பித்தது போன்ற மனதை உள்ளிருந்து அறுக்கும் பச்சையாக இன்றி வசந்தம் வந்தது போல இருக்கிறது. உண்மையில் அந்தக்கிராமம் பச்சைப்பசேலெனவும், இந்தப்பனிக்காடு ஒளிமங்கிய அவர்கள் வாழ்வை Sepia Tone-ல் பிரதிபலிப்பதாகவும் காட்டியிருந்தால் , படத்தின் அடிப்படை எண்ணம் ஈடேறியிருக்கும். ஒரு வேளை Contrast ஆக இருக்கவேண்டுமென்று கூட ஒளிப்பதிவாளர் செழியனும் பாலாவும் நினைத்திருக்கலாம். ஆனால் அதுதான் ஏனோ ஒட்டவேயில்லை ஒரு காட்சியும்.ஒவ்வொருமுறை திரும்ப ஊருக்குச் செல்ல எத்தனிக்கும் அத்தனை பேரையும்,கொம்பூதி வரவழைக்கும் காட்சிகள் திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான Camera Angles-ல் சலிப்பை வரவழைக்கிறது.

‘நியாயம்மாரே, என் பாட்டுக்கு தமுக்கு அடிச்சிக்கிட்டு கஞ்சியோ கூழோ குடிச்சுக்கிட்டு கிடந்தேனே’ என்று கடைசிக்காட்சிகளில் குன்று மேல் அமர்ந்து அதர்வா அரற்றும் காட்சி, அந்த நேரத்தில் வேதிகா குழந்தையுடன் வந்து சேர்வது ஒரு கவிதை போல விரிகிறது. அந்தக்காட்சி முழுதும் பின்னணியில் இயல்பான ஒலிகளை மட்டுமே கொடுத்து விட்டிருந்தால் இன்னமும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும் பார்ப்பவர் மனதில். ஹ்ம்..என்ன சொல்வது ? பார்ப்பவன் மனதில் ஓலம் ஒலிக்க விடவில்லை , மாறாக பயாஸ்கோப் பார்ப்பவனின் மனநிலையில் அமர்ந்திருக்கின்றனர். நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான்.

நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப்புழுதியில் எறிந்தது போல அத்தனையும் பாழாகிறது. இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் பாலா என்ற கலைஞனைப்பற்றி. சரியான தொழில் நுட்பத்தேர்வுகள் இல்லாமையே ஏகத்துக்கு முட்டுக்கட்டைகள் போல விரவிக்கிடக்கிறது படம் முழுக்க. ஒரு முழுமையான படைப்பாக மாற விடாமல் அத்தனை பேரும் சேர்ந்து தடுத்தேவிட்டனர். மேலும் அந்த எரியும் பனிக்காட்டிற்குச்செல்லும் மிக நீண்ட பயணத்தை வழக்கமான வணிகத் திரைப்படங்களைப்போல வழக்கம்போல பின்னணியில் ஒரு பாட்டால் நகர்த்திக் கொண்டு சென்றிருக்க வேண்டாம்.

எதோ ஒரு ஆவணப்படத்தைப்பார்ப்பது போன்ற உணர்வு படம் முழுக்க இருந்து கொண்டேயிருப்பது ஒரு பெரிய குறை.கடைசி நேரத்திருப்பங்களோ இல்லை எப்போதும் பாலாவின் படங்களில் காணக்கிடைக்கும் வெகு மலினமான வழக்கமான முடிவுகளோ இல்லாதிருப்பதே படத்துக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இப்படியான ஒரு ஆவணம் திரையில் பதிவு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் இனி தமிழுக்கு இல்லை என்று சமாதானமடைந்து கொள்ளலாம் என்பதைத்தவிர வேறொன்றும் இப்படம் பெரிதாகச் சாதித்து விடவில்லை.

– சின்னப்பயல் (Chinnappayal@gmail.com)

Series Navigationஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13
author

சின்னப்பயல்

Similar Posts

15 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைசாமி அதைப் பெருமையாகச்(?)சொல்லுவார். “முன்னால கடூழியம் பார்ப்பதற்காகப்போனான் , இப்ப தம் அறிவை விற்கத்தானே போறான்” என்று ! –>>> சொல்லிவிட்டு, “தமிழ் மொழி தமிழர் தம் அடையாளமான ஜீன்ஸ் முழுக்கை சட்டையை தன் பெண்ணிற்கு மாட்டி விட்டு,கீதாஞ்சலி எனும் தமிழ் கவிதைத் தொகுப்பின் பெயரை அப் பெண்ணிற்கு சூடி அமெரிக்கா அனுப்பி அங்கு செட்டில் ஆக்கி விட்டு, இங்கு தமிழ் மொழியின் எழுத்துக்களை மாற்றி எழுதப் போராடும் மேதை.. அவர்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இவை ஆணாதிக்க வசவுகள்.

      ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போதுதான் பெரியோரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவது. அதே போல சிறுவர்களும்.

      என்ன படிக்கவேண்டும், எப்படி உடுத்தவேண்டும், எங்குபோய் செட்டிலாக வேண்டுமென்பனவெல்லாம் வளர்ந்த பின் நாமாகவே எடுக்கும் முடிவுகள்.

      அவற்றையும் திரு குழந்தைசாமி செய்தார் என்பது செய்ய வேண்டுமென்னும் ஆணாதிக்கச்சொற்களின் மறுவடிவம்.

      ஒருவன் வெள்ளைக்காரியைக்கட்டிக்கொண்டும்கூட தமிழ்மொழிக்காக பாடுபடலாம். தமிழனையோ தமிழச்சியையோக்கட்டிகொண்டுதான் தமிழுக்காக பேசவேண்டுமென்பது சிந்தனை சிறிதும் இல்லாக்கருத்துக்கள்.

      தமிழ் மொழி, அஃது எப்படி போக வேண்டும், எப்படிப் பாதுக்காகப்பட‌ வேண்டும் என்பவற்றை எவரும் எங்கிருந்தும் சொல்லலாம். எந்தவொரு அடிப்படைத்தகுதிகள் தேவையேயில்லை.

  2. Avatar
    paandiyan says:

    படம் வெளிவந்த நாள் மற்றும் மறுநாள் எல்லாம் ஐயோ இனி நான் எப்படி தேநீர் குடிப்பேன் , award வேறு யாருக்கும் மிஞ்சுமா என்ற ரேஞ்சில் போன விமர்சனம் , award இல்லை என்றதும் வேறு பாதையில் போகின்றது. எல்லாம் காலத்தின் கோலம் ..டைட்டில் ஒன்றுதான் இப்பொது எல்லாம் யாரும் குறையாக சொல்லவில்லை என்பது ஒரு ஆறுதல் ..

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      டைட்டில் கூட அருவருப்பான ஒன்றே எனபதை நான் கொட்டகையில் முதலில் கேட்டபோது உணர்ந்தேன். ஒரு நல்ல மனிதனை பொறுக்கி என்பதும், அப்படித்தான் அவர்கள் அழைத்தார்கள் என கற்பனை பண்ணியது ஒரு கேவலமான மனநிலையை நமக்குக்காட்டுகிறது.

      மனதினிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்.

      இனி படத்தைப்பற்றி என் மற்றைய கருத்துக்கள்.

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    முதல் பாதி ஓரளவு சமாளித்துப்பார்த்துவிட்டேன். இரண்டாவது பாதியும் தேறும் என உட்கார்ந்திருந்தேன். மேலும், வீட்டில் 80 உருபா நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு பாதியில் எழுந்துவரக்கூடாதென்ற கட்டளை. நுழைவுச்சீட்டைக்கண்டிப்பாகக் காட்டவேண்டும்.

    மறுபாதி ஒரு சங்கடமான நெழிவு. சி ப செய்ததைப்போல நானும் அடிக்கடி கடியார முள்ளைப்பார்க்கவேண்டியது. நல்ல வேளை இரவு 8.30 க்குள் படமுடிந்து வெளியே வந்தவுடன் மதுரையின் இரவுக்குளிர்காற்றை மீண்டும் சுவாசிக்கும்போது புத்துணர்ச்சி வந்தது.

    சி பவின் கருத்தான படம் ஒரு ஆவணப்படத்தைப்பார்க்கும் உணர்வைத்தந்தது என்பது காயதல் உவத்தலின்றி, ஒரு திரைப்படத்தை அப்படத்திற்காகவே பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் உணர்வு.

    ஏன்? ஆவணப்படத்தும் திரைப்படத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கும்? இருக்கவேண்டும்?

    ஆவணப்படம் ஒரு கருத்தை பிரபலப்படுத்தி அதற்காக அனுதாபத்தை நம்மிடம் சம்பாதிக்க எல்லா நேரடி முனைப்புகளோடும் எடுக்கப்படும் ஒன்று. திரைப்படம் அதே கருத்தை நம் முன்வைத்து நம் அனுதாபத்தை நேரடி முனைப்புகளோடு வைக்காமல் இலைமறை காயாகக் காட்டி நம்மை ஈர்க்க வைப்பது. இதில் வெறும் செல்லுலாயிடு இமேஜஸ்கள் மட்டுமல்லாமல், அவற்றை கலையுணர்வோடு காட்டி (அவை முனைப்புக்களுள் முக்கியமானது) காட்டுவது. இப்படிக்காட்டுவதனால், அனுதாபத்தை ந்ம்மை மிரட்டிப்பிடுங்காமல், நாமாகவே நம்மையறியமாலே நம் அனுதாபங்களைப் பறிகொடுத்து விடுவோம். எனவே சொலவார்கள். 3 மணி நேரம் என்னைப்படம் உறையை வைத்துவிட்டது என்பார்கள்.

    பாலாவின் படம் நம்மை மிரட்டி அனுதாபத்தைச் சம்பாதிக்கத் துடிக்கிறது. உண்மையை மெதுவாக பக்குவமாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனம், அதை ஓங்கியுறைக்கும்போது ஐயப்படுகிறது.

    தீம் ஒரு ஹெவி ச்பஜக்ட். இப்படிப்பட்ட சப்ஜகட்டுக்கு இப்படிப்பட்ட இயக்குனரால்தான் முடியும் என்ற கணக்கு தெரிந்தவொன்று. பாலாவை நம்பிக்கொடுக்கப்பட்டது தான் ஒரு குருவி தன தலைமீது வைக்கப்பட்டது எனக்காட்டுவதைபோல படத்தை சொதப்பி விட்டார்.

    எல்லாமே செயற்கைத்தனம். அதாவது எதார்த்தமாக எடுககிறேன் என அழுத்தமாகப் பிரயாசைப்படும்போது அது செயற்கையாகிறது. நடிகர்கள் அனைவருமே செயற்கையாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஓரிருவரைத்தவிர. சி ப சொன்னது போல அந்த மூதாட்டி.

    காட்சியமைப்புக்கள் செயறகை. முதலில் காட்டிய சிற்றூரே பெரும்செயற்கை.

    ஒரு செயலை ஒருமுறை காட்டும்போது இரசிககலாம். நன்றாக இருப்பின் இன்னொருமுறை இரசிக்கலாம். ஆனால் படம் முழுவதும் திரும்பத்திருமபக்காட்டுவது, இயக்குனரின் கற்பனைவறட்சி, நமக்கு இரசனை வறட்சி.

    …cont’d

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    தமிழ்மக்கள் அடிப்படை மனிதப்பண்பில்லார் என்பதை அக்கிராம மக்களைக்காட்டி நம்ப வைக்கிறார். நானும் கிராமமக்களைப்பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். சேரியில் வாழந்தாலும் மற்றபகுதிகளில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு மனித நேய உணர்வுண்டு. பாலவைப்பொறுத்தவரை இல்லை.

    எப்போதும் எதற்கும் சிரிக்கிறார்கள். எல்லாரையும் அடித்து உதைக்கிறார்கள் காலால் கையால் அசிங்கமான சொற்களால். எதற்கெடுத்தாலும் அடி. ஒட்டுப்பொறுக்கி என்று ஊருக்கு நல்லது செய்து உழைத்து ‘இரந்துண்ணும்’ ஒரு அப்பாவி இளைஞனுக்கு அப்படி அசிங்கமான பெயரை வைக்கிறார்கள். அதை ஒருதடவை யன்று; பலபல தடவைகளில் அழைத்து அவனை அழ வைக்கிறார்கள். திருமணவிருந்தில் கூட பசித்தவனுக்கு ஒருகலவம் உணவு கொடுக்காமல் அவன் படும் வேதனையைப்பார்த்து சிரித்துமகிழ்ந்தது போதாதென்று அடித்தும் மகிழ்கிறார்கள். என் வாழ்க்கையில் எங்கேயும் இப்படிப்பட்ட கொடிய தமிழர்களைக்கண்டதுமில்லை; கேட்டதுமில்லை.

    இப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதர்களாக, அதுவும் ஏழை மக்களைக்காட்டி மகிழ்கிறார் பாலா.

    இதுதான் முதல்பாதி. இப்படி தமிழர்களை உண்மைக்கு மாறாகக் காட்டி அவமானப்படுத்தும் படத்தை நான் பார்க்கவேண்டுமா? ஆனால் என்ன செய்ய ? வீட்டு மிரட்டலுக்குப் பயப்படவேண்டுமே.

    வெள்ளைக்காரனும் நமக்கும் உள்ள பெரிய வேறுபாடு: professionalism. தன் செய்யும் தொழிலை மதிப்பவன். அதில் எவ்வள்வு தூரம் நீதியோடு செய்யவேண்டுமோ அப்படிச்செய்பவன். நம்மால் முடியவில்லை. எனவேதான் பப்ளிக் சர்வீஸ் கமிசன் சேர்மன், மெம்பர்ஸ், பலகலைக்கழக வைஸ் சான்சலர் எல்லாரும் அடிக்கடி ஜெயிலுக்குப்போகிறார்கள். ஆசிரியர்கள் மாணவச்சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள்.

    நம்மில் ஒருவர் அந்த தேயிலைத்தோட்ட மானேஜராக இருந்தால் தொழிலாளிபெண்கள் பலரை வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்வோம்.

    வெள்ளைக்காரன் தோட்டத்தொழிலாளிகளோடு நேரடியாக பேசுவதைக்கேவலமாக நினைப்பவன். அவன் ஸ்டேடஸை அவன் எபபோதும் காப்பாற்றுவான். தொழிலாளிகளைக்கவனிக்க கங்காணிவைத்து அவனைத்தான் அடிப்பான். அதுதான் யதார்த்தம். குதிரையில் வருபவனுக்கு தோட்டம் சொந்தமன்று. சொந்தக்காரன் இங்கிலாந்தில் அல்லது கல்கத்தாவில்தான் இருப்பான். வெள்ளைக்கார‌ மேனேஜர் தன் தொழிலுக்குத் துரோஹம் பண்ணமாட்டான்.

    பாலா வெள்ளைக்காரனை அவ்வளவு கொடூரமாக சித்தரிக்கிறார். தோட்டத்திலே புகுந்து அவர்களின் பின்புறத்தைத்தட்டுவதாகவும், முன்புறத்தைக் கிள்ளிவிடுவதாகவும் சித்தரிக்கிறார்.

    அடுத்து மதமாற்றம் பற்றி…

    1. Avatar
      paandiyan says:

      //வெள்ளைக்காரனை அவ்வளவு கொடூரமாக சித்தரிக்கிறார்//
      அப்படியே http://charuonline.com/blog/ போய் படித்தால் வெள்ளைக்காரன் விசயம் எங்கே இடித்து உள்ளது என்று தெளிவாக புரியும் ஒரு விமர்சனம் வெரி detailed ஆக வேண்டும் என்றால் அதைதான் அனைவரும் படிக்க வேண்டும்.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        பாண்டியன்!

        உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

        திண்ணை உங்களுக்காக; எனக்காக,

        நம் கருத்தென்ன என்பதை பதிவிட.

        ஒரு தமிழ்த்திரைப்படம் அனைத்துத்தமிழருக்காக. ஒவ்வொருவரும் அப்படத்தை அவரவர் வழியிலேயே அனுபவிப்பார்.

        அந்த அனுபவத்தை நீங்களோ, நானும் சொல்லத்தான் திண்ணை.

        வேறெவரோ எங்கோ எழுதியதை இங்கே ஏன் வந்து விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

        முத்துக்குமாரசுவாமி சொன்னதாக நான் எழுதியதை, நான் ஏற்கனவே பல பதிவர்களிடம் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேன். நெல்லையிலிருந்து பச்சைமலைக்கு நடந்து சொல்ல 48 நாட்கள் ஆகா. முத்துக்குமார சுவாமியின் கருத்துக்கு விளம்பரத்தைத் தேடன்று.

        மற்றவர் கருத்துக்களை இங்கு வந்து போட்டு அவர்களுக்கு விளம்பரம் கொடுக்காதீர்.

        1. Avatar
          paandiyan says:

          அய்யா கணபதி ராமன் , மதுரைகாரன்ன்னு சொல்லறீங்க , விசயத்தை கப்ப்ன்னு புடிக்கவேன்டாமா?? நான் சொன்னது “வெள்ளைக்காரன் விசயம் எங்கே இடித்து உள்ளது ” என்று அதில் உள்ளவிசயம், comparision பண்ணிய பியானிஸ்ட் எல்லாம் இதுவரை யாரும் பண்ணாத ஒன்று ..

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    இடைவேளைக்குப்பிறகு, இன்னும் இன்னும் சோகம் தொடரும், இறுதியில் ஏதாவது வழிபிறக்கும் என்று நினைத்தால் பார்வையாளனின் தவறன்று. அல்லது வழியே பிறக்காமல் மடிந்தனர் என்றாலும் இயக்குனர் என்ன கடவுளா தீர்க்க முடியாப் பிரச்சினைகளுக்கு வழிகளைத்தர எனபோய் விடலாம்.

    இரண்டுமே நடக்கவில்லை. மாறாக, படம் வேறு வழியில் குரூரமாக பயணிக்கிறது. கங்காணியின் கொடுமை, வெள்ளைக்காரனின் ஏகாதிபத்தியம், உழைப்பாளரின் அடிமைத்தனம் என்பதெல்லாம் தூர தள்ளிவிட்டு, இந்த்துவ அரசியலைக் கையிலெடுக்கிறார் பாலா.

    அது நாவலில் இல்லை; இவர் புகுத்தினார்; அல்லது அவை உண்மை நிகழ்வுகளின் பிரதிகளே என்பனவெல்லாம் இணையதளங்களில் வாதங்களாகி வருகின்றன. I am not concerned with Internet politics.

    என்னைப் பொறுத்தவரை, எதைக்காட்ட விரும்புகிறாரோ அதை உருப்படியாக; நம்பும்படி; இரசிக்கும்படி செய்ய வேண்டும். செய்தாரா?

    தோட்டத் தொழிலாளர்களிடையே கொள்ளை நோய். அவர்களை ஏமாற்றி வாழும் போலி மருத்துவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தொழிலாளர்கள் கொத்து கொத்தாக மடிகிறார்கள். வெள்ளைக்கார மானேஜர் ஒரு ஆங்கில மருத்துவனை அனுப்புகிறான். அவனோ மருத்துவ தொழிலை மறந்து மத மாற்றத்தில் ஈடுபடுகிறான். இயேசு குணப்படுத்துவார் என்ற பெந்தேகோஸ்தே வசனத்தைப் பேசுகிறான். இதை அவன் செய்ய ஒரு குரூரமான அல்லேலுயா என்ற குத்தாட்டமும், ரொட்டித்துண்டுகளை அவர்கள் மேல் வீசியெறிந்து மதமாற்றம் செய்பவனாகவும் காட்டப்படுகிறான். அவனை இந்தியனாகவும் காட்டுகிறார். கடைசி மூச்சை இழுத்துக்கொண்டு போராடும் தொழிலாளியை அவன் மருத்துவமனையில் கிடக்க, அவன் அவர்களைத்தாண்டி இங்கு வந்து குடித்துக் குத்தாட்டம் போடுகிறான்.

    பாலாவின் ஸ்டைல் வெகு குழந்தைத்தனமாக இங்கு இருக்கிறது. எந்த ஒரு மருத்துவரும் ஒரு நோயாளி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க குடித்து விட்டு கும்மாளம் போட மாட்டான். அவன் எவனாக இருந்தாலும், மத மாற்றம் செய்பவனாக இருந்தாலும் முதலில் நோயைக் குணப்படுத்த முயல்வான். நோய் குணமானால், நோயாளியை இலகுவாக மதமாற்றம் செய்யவியலாதா? முடியும். மதமாற்றம் செய்தோர் ஏழைமக்களுக்கு முதலில் கொடுத்தவை மருத்துவச்சாலைகள்; இலவச சிகிச்சை; இடம்; உணவு, பள்ளி கல்லூரிகள், இலவச கல்வி – இவற்றையெல்லாம் இந்துமதம் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் இந்துக்கள் என்பதை அவர்கள் நெற்றி நீற்றுகீறுகள் மூலம் நமக்குத் தெளிவாக்க காட்டுகிறார். மிசுனோரிகள் முதலில் வேண்டியதைச் செய்த பின்னர்தான் மதமாற்றம் செய்தார்கள். திண்ணை ஜயபாரதன் சொன்னதைப்போல பசித்தவனுக்கு முதலில் வேண்டியது ஒரு வேளை உணவு. இல்லையா?
    இந்த அடிப்படை ஞானமில்லாமல் பாலா குடித்துக்கும்மாளம் போட்டு மதமாற்றம் பண்ணினார்கள் என்று காட்டும்போது, அமெச்சுர்த்தன மட்டுமன்றி, அசிங்கமான கற்பனையை குரூரமாக்காட்டுவதாக அமைகிறது.

    இந்துத்வாவுக்குப் பிரச்சாரம் செய்ய விரும்பினால் அதை உருப்படியாகச்செய்ய வேண்டும். செய்வன திருந்தச்செய் என்பதே என் கருத்து.

    Cinema is a medium of mass entertainment. Not a medium for propaganda. It at all you need to take up an agenda for propaganda through this medium, do so artfully and convincingly. If you don’t, you don’t have an art but a third rate politics.

    Someone should guide this man Bala in the basics of cinematic art.

    The director of Alagarsamiyin Kudirai has done it well: a propaganda against superstitions shown as a layer beneath layer, indirectly and artfully and we all enjoyed watching that.

    As I said already, a heavy and serious subject but given to a director who is not up to even the minimum level to handle it !

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    அடுத்த சி.பவின் புகழ்: அதாவது ‘நான் அவளை நினைத்தேன்’ என்பது வெகு சிறப்பாம்.

    முதலில் நமக்கு என்ன காட்டுகிறார் பாலா. திருநெல்வேலி (1939ல் திருனெல்வேலி என்பது தூத்துக்குடி மாவட்டத்தையும் உள்ளடக்கியது) கிராமம். அங்குள்ள மக்கள். அவர்கள் பேச்சு அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான். ஒரு தேனிமாவட்டக்காரன் (பாலா), ஒரு குமரிமாவட்டக்காரனும் (நாஞ்சில் நாடனும்) அப்பேச்சைப் பாடாக படுத்தியிருக்கிறார்கள் இப்படத்தில்.

    பேச்சு என்பது வெறும் சொற்களல்ல நாடன் என்ற சுப்பிரமணியன் அவர்களே. பேச்சு என்பது ஏற்றம், இறக்கம், அழுத்தம், இழுப்பு – அனைத்தும், மேலும் பல (சொற்களின் திரிபுகள் எ.கா மதுரையில் அவிங்க). நெல்லை மாவட்டக்கிராமத்தில் வந்து ஒரு மாதம் இருந்துபார்த்தால் மட்டுமே அவர்கள் பேச்சுவழக்கு புரியும்.

    எவனும், அவளை நினைக்கிறேன் என்று அன்றும் இன்றும் சொவது கிடையாது. இது சுப்பிரமணியத்தின் கற்பனை பேச்சு. ஆனால் சிற்ப்பு சி.பா சொன்னதைப்போல. சிற்ப்பு இங்கு தேவையில்லை. எதார்த்தமே.

    அவன், எனக்குப்பிடிச்சிருக்கு என்று மட்டுமே சொல்வான். அப்படத்தில் முனகுவான்.

    இதைப்போல நெல்லைப்பேச்சு கோர்வையாகப் பேசப்படவில்லை. ஒரு சில பாத்திரங்களைத்தவிர.

    “‘நியாயம்மாரே..” இது நெல்லைக்கிராமியத்தமிழன்று.

    இப்படி ஏராளம்.

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    பாலாவும் அவர் குழுவும் தமிழக வரைபடத்தையே பார்த்திருக்க மாட்டார்கள் போல. நெல்லை எங்கே இருக்கிறது: பச்சைமலை எங்கே இருக்கிறது? 48 நாட்களாகுமா? இதை முத்துக்குமாரசுவாமி சுட்டிக்காட்டியதாக நான் படித்தேன் இன்று. அவர் அவ்வூர்க்காரர்.

    ஒரு படம் எடுப்பதற்கு முன், அப்படத்தின் நிலைக்கலனைப்பற்றி கொஞ்சம் அடிப்படை அறிவைப் பெற்றுக்கொள்வது நன்று.

    இல்லாவிட்டால் மணிரத்தினம் செய்த அடிப்படைப்பிழைகள் (கடல் படத்தில்); பாலாவின் அடிப்படைப்பிழைகளைத் தவிர்க்கவியலா. பார்ப்பவருக்கு இவர்களெல்லாம் என்ன பெரிய டிரக்டர்ஸ் என்று பீலா விடுகிறார்கள் என சிரிக்கத்தோன்றும்.

    இறுதியாக ஒன்று சொல்லி முடித்துக்கொள்கிறேன்: கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால் நல்ல படமாக இஃதமைந்திருக்கும்.

    Bala has missed the bus.

  8. Avatar
    சின்னப்பயல் says:

    இத்தனை பின்னூட்டங்களும் எதிர்வினைகளும் எழுதும் கணபதி ராமன் விமர்சனமே எழுதீருக்கலாமே..;) இருப்பினும் நன்றி கணபதி உங்களின் விரிவான பின்னூட்டங்களுக்கு, ;)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *