சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)

This entry is part 10 of 33 in the series 19 மே 2013

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார். க.நா.சு.வுக்கு அவர் படிப்பினூடேயே, எழுத்தினூடேயே, விமர்சனப் பார்வை என்பது உடன் வளர்ந்தது. விருப்புடன் வளர்த்துக்கொண்டது. ஆனால் செல்லப்பா அப்படியில்லை. விமர்சனம் தேவை என்ற நினைப்பு கடைசியில் க.நா.சுவுடனான பழக்கத்தில் தோன்றியதும், சுதேசமித்திரன் பத்திரிகையில் க.நா.சு வுடன் சேர்ந்து விமர்சன கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததும், பின்னர் அந்த பத்திரிகை கொடுக்கும் இடம் தனக்கு போதவில்லை என்றும், அதைக்கூட தொடர்ந்து கொடுக்கப் போவதுமில்லை என்றும், தோன்றியதும், விமர்சனத்துக்கென்றே தனி இதழ் ஆரம்பித்துவிடவேண்டும் என்று முடிவெடுக்கும் அளவுக்கு விமர்சனத்தில் அவரது ஈடுபாடு தீவிரமாயிற்று. அந்த விமர்சன உணர்வை அவரது சிந்தையில் விதைத்த க.நா.சுவுக்கு அந்த தீவிரம் இருக்க வில்லை. அதன் அவசியம் தெரியும். எழுதுவார் கிடைத்த இடத்தில். கிடைக்க வில்லையென்றால் பேசிக் கழியும் அவரது விமர்சன உணர்வுகள். அவரது விமர்சன நூல்களின் தேர்வும் படிப்பும் அவரது இயல்பில் நேர்ந்தது. ஆனால், செல்லப்பாவோ, அது காறும் அதன் பக்கமே தலைவைத்துப் படுக்காதவர். ஆனால் இப்போது முனைப்புக்கொண்ட தீவிரத்தில் விமர்சனம் எழுதவும், அதற்கென்று பத்திரிகை தொடங்கியதும் அவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளத் தொடங்கினார். அக்காலங்களில் அவர் எப்போதும் படித்துக் கொண்டிருந்தது விமர்சன நூல்கள் தான். தமிழில் ஏது விமர்சன நூல்கள்?. அ.ச.ஞான சம்பந்தமும், மு. வரதராசனாரும் எழுதியிருந்த பாடப்புத்தகங்கள் தான். அவற்றின் குணமே தனி. கண்டமேனிக்கு கலவையாக பத்திரிகைகளில் தெரிய வந்த பெயர்களையெல்லாம் சொல்லி, “நாவல்கள் எழுதி மகிழ்ந்தனர் அல்லது சிறு கதைகளாக இருப்பின் “ இவர்களும் சிறுகதைகள் எழுதி மகிழ்ந்தனர்” என்று இருக்கும். சம்பிரதாய கதை சொல்லலை மீறியது என்றால், அது என்னவென்று சொல்லத்தெரியாது “புதிய முறையில், புதிய உத்தி கண்டு எழுதி மகிழ்ந்தார்” என்று ஒரு சமாளிப்பு இருக்கும். ஒரு அணு அளவு கூட தராதரம் தெரியாத எதுவும் சொல்லாத எழுத்து அவர்களது. இதை அவர்கள் “நடுநிலை” என்று சொல்லி இவர்களும் “மகிழ்வார்களோ” என்னவோ தெரியாது. ஆக, செல்லப்பாவுக்கு அக்காலங்களில் உதவியது பிரிட்டீஷ் கௌன்ஸிலும் அமெரிக்கன் இன்ஃபர்மேஷன் செண்டரும் தான் இரண்டிலும் உறுப்பினராகி, புத்தகங்கள் எடுத்து வந்து படித்துக்கொண்டே இருப்பாராம். இதை அறுபதுகளின் ஆரம்ப வருஷங்களில் அவரே எனக்குச் சொன்னது. அவருடனே எப்போதும் உடனிருந்த சச்சிதானந்தமும் எனக்குச் சொல்லியிருக்கிறார். எதற்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தன் சுபாவத்தின் முனைப்பில் படித்தது தானே தவிர அவர் அக்காலங்களில் எழுதிய விமர்சனம் எதிலும் ஐ.ஏ ரிச்சர்ட்ஸோ, வில்லியம் எம்ப்ஸனோ மேற்கோள்களோடு இடை புகவில்லை. “என்பனார் புலவர்” என்ற மரபான வாக்கிய முடிவுக்கு பதிலாக, “என்பனார் ஆங்கில இலக்கியச் சான்றோர்” என்ற சாட்சியங்கள் அவர் விமர்சனக் கருத்துக்கள் முடிவில் எங்கிலும் இருந்ததில்லை. காகித பொம்மைகள் செய்யக் கற்றது போல, ஜல்லிக்கட்டைப் படம் பிடிக்க பாக்ஸ் காமிரா வாங்கி படம் எடுக்க கற்றுக் கொண்டது போல. தன் வீட்டுப் பின்புறத்தில் தானே காய்கறித் தோட்டம் உருவாக்கியது போலத் தான். க.நா.சு.வுக்கு இயல்பாக வந்ததை, அவரால் தூண்டப்பெற்ற செல்லப்பா தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று செய்த காரியம். பின்னர் எழுத்து பத்திரிகையில் தற்செயலாக புதுக்கவிதைக்கு பலமான மேடையாகிப் போனதும், அவர் யாப்பிலக்கணம் படிக்க ஆரம்பித்தார். யாப்பை ஒதுக்கிய ஒன்று தான் புதுக்கவிதை என்ற போதும், அதற்கும் ரிதிம் உண்டு, அது முன் தீர்மானிக்கப்படாத, ஒவ்வொரு கவிதை வரியும், சொல்லப்பட்டாத, சட்டமிடப்படாத, படிக்கும் போதே தானே உருவாக்கிக்கொள்ளும் ரிதும் அல்லவா? அவர் எழுதிய மூன்று நீண்ட கவிதைகளிலும் அவை மிக நீண்டவை என்ற போதிலும், ஒரு வேகமும், ஆங்காங்கே ஒரு கிண்டலும் கொண்டிருப்பதைக் காணலாம். புதுக்கவிதைக் காரர்கள் யாப்பறியாதவர்கள், அதனால் தான் புதுகவிதையில் தஞ்சம் அடைந்தார்கள் என்று சொல்லிவிட்டால் போதும், தம் கட்சி வென்று விட்டதான ஒரு எக்காளம் யாப்பு படித்துப் பட்டம் பெற்றும் கவிதையின் வாசனையே அறியாத தமிழ்ப் புலவர் கூட்டத்தினருக்கு அன்று இருந்தது. அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, செல்லப்பா, பா வகைகளையும் அவற்றின் லக்ஷணங்களையும் பற்றிப் பேசவும் மற்றோர் கூற்றை மறுக்கவும் செய்யத் தொடங்கினார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், பின்னால் அவர்களே பூமியைப் புரட்ட வல்ல நெம்புகோல் கவிதை படைக்கத் தொடங்கினார்கள். இவர்களது கோஷ புதுக்கவிதைகளுக்கென்றே வானம்பாடி என்று ஒரு பத்திரிகையே நடத்தினர். அதற்கு தாமரையும், இலங்கை கமிஸார் கலாநிதிகளும் தம் அங்கீகார ஆசிகள் வழங்கினர்

எழுத்து தொடங்குமுன் அவர் சிறுகதைக்காரராகத் தெரியவந்து, வெளிவந்த அவரது சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு. ஒன்று, அக்காலங்களில் செல்லப்பாவை அடையாளம் காட்டும் சரசாவின் பொம்மை. கலைமகள் பிரசுரம். அதற்கும் முன் நான் படித்திருந்த மணல் வீடு தொகுப்பு, ஜோதி நிலையம் பிரசுரித்தது என்று தெரிகிறது. எழுத்து பத்திரிகை தொடங்கி விமர்சனத்தை ஒரு வேள்வியாகவே நிகழ்த்தத் தொடங்கிய பின், அவர் சிறுகதைக்காரராக எழுத்துலகில் நுழைந்தவர் என்பது மறைந்து விமர்சகப் பட்டமே நிரந்தரமாகைப் போனது இருப்பினும் எழுத்துவில் அவர் ஜீவனாம்சம் என்ற நாவல், தொடர்ந்தது அவ்வப்போது எழுத்துவில் அவரது சிறு கதைகள், உடன் அன்பளிப்பாக வாடிவாசல் ஒரு குறு நாவல் என்று விமர்சனங்களை விட சிருஷ்டி எழுத்துக்களே அதிகம் அவரிடமிருந்து வந்துள்ளன. அதிலும் ஜீவனாம்சமும் சரி, வாடிவாசலும் சரி, அது காறும் தமிழில் சொல்லப்படாத உலகங்களை, எழுதப்பட்டிராத சொல் முறையில் எழுதப்பட்டவை. அந்தந்தக் களத்திற்கான ஏற்ற கதை சொல்லல். ஒன்று மரபு சார்ந்த பிராமண குடும்பப் பெண்ணின் பிரக்ஞை ஒட்டமாக மற்றது நாடகப் பண்பு மிகுந்த நேரடி கதை சொல்லலாக, எழுத்து பிரசுரம் என்று எழுத்துக்குப் பின் ஒரு சில வருஷங்களில் தொடங்கிய போது, அறுபது என்ற அவரது சிறுகதைத் தொகுப்பும் அவற்றில் ஒன்றாகியது. எழுத்து பிரசுரம் தொடங்கிய பிறகு அவரது சிருஷ்டி எழுத்துக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக பிரசுரம் பெற்றது அவரதேயான எழுத்து பிரசுரம் மூலம் தான். அந்த வருடங்களில் தான் ஒரு முறை சென்னையில் அவரைப் பார்த்த போது அது வரை அவர் எழுதியிருந்த சிறு கதைகள் அத்தனையையும் ஏழு சிறு தொகுப்புகளாக வெளியிட்டிருந்தார். சிறு தொகுப்புகளாக வெளியிட்டது யாரும் உடன் சுலபமாகப்பணம் கொடுத்து வாங்கமுடியும் என்ற காரணத்தால். ஒரே தொகுப்பாக வெளியிட்டிருந்தால் அது நன்றாகவும் இருக்கும். அது தான் முறையும் கூட. மதிப்புடன் பார்க்கத் தோன்றும். ஆனால் அதன் விலை சுலபமாக வாங்கத் தடையாக இருக்கும். “இவ்வளவு கதைகள் எழுதி யிருக்கிறீர்கள் என்பது இப்போது தான் தெரிகிறது” என்றோ என்னவோ அப்போது சொல்லிவிட்டேன். என் அளவில் அது எனக்குத் தெரிந்த உண்மை. அப்போது அவர் உடன் சொன்ன வார்த்தை அதிர்ச்சி தருவதாகவும் சோகம் நிறைந்ததாகவும் இருந்தது. அவர் சொன்னார், “நாம பண்ணலைன்னா இருந்த இடம் தெரியாம புல் முளைச்சுப் போயிடும்.” அப்போது தான் நினைத்துப் பார்த்தேன். . கலைமகளுக்கு கதை எழுதி அனுப்பக் கேட்டு கி.வா.ஜ முப்பது கடிதங்களுக்கும் மேலாக எழுதியதாக இரண்டு பேருமே எங்கோ எழுதிப் படித்திருக்கிறேன். எழுத்து ஆரம்பிப்பதற்கு முன் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன, கலைமகளும் ஜோதிபிரசுரமும் வெளியிட்டு. அதன் பிறகு செல்லப்பா சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறார் தான் ஆனால் அவர் எழுத்து எதையும் வெளிப்பிரசுரங்கள் ஏதும் வெளியிட்டதில்லை. அவரை விமர்சகராகவே தமிழ் உலகம் குறுக்கிப் பார்த்தது. அதன் பிறகு அவரது சிருஷ்டி எழுத்து எல்லாமே அவரே பிரசுரித்து வந்தவை தான். ஏழு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு நாவல்கள், ஒரு நாடகம், இரண்டு கவிதைத் தொகுதிகள் “மாற்று இதயம் வேண்டும்“ என ஒன்று, “நீ இன்று இருந்தால்,,” என இன்னொன்று. அவர் எழுதிய நாடகம் முறைப் பெண், நவீன நாடக மோஸ்தர் பரவத் தொடங்கியிருந்த காலம். முறைப் பெண் செல்லப்பா வாழ்ந்த மண்ணின் மனிதர்களின் வாழ்க்கையை சார்ந்தது. கிராமத்து மனிதர்கள் தேவர்கள் சமூகம். அவர்களது நம்பிக்கைகள் பிடிவாதங்கள், பார்வைகளைப் பேசுவது. தமிழ் வாழ்க்கையிலிருந்து எழுந்த இயல்பான ஒன்று. இதற்கு முன், க.நாசு திஜானகிராமன், பி.எஸ் ராமையா, கு அழகிரி சாமி, எல்லோருமே நாடகங்கள் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் செல்லப்பாவின் முறைப் பெண் தான் நாடகமேடையேற்றத் தகுந்த, நாடகப்பண்புகள் கொண்ட நாடகம். எதுவும் புதிதாகச் செய்யும் போது அது பற்றி நன்கு தெரிந்து கற்றுச் செய்யும் குணம் கொண்ட செல்லப்பா நாடகம் எழுதுவதிலும் அதை நிரூபித்ததாக இருந்தது. ஆனால் அதில் பழம் கிராம வாழ்க்கை தான் காட்சிப்படுத்தப்பட்டதே தவிர, நவீன என்று நடிப்பிலும், கருத்திலும் சொல்முறையிலும் மோஸ்தர் ஆகிக்கொண்டு வந்தவை எதுவும் இல்லாத காரணத்தால் நவீன நாடகங்களுக்கென கூத்துப் பட்டறை நடத்தி வந்த, எழுத்துவிலே வளர்ந்த ந.முத்து சாமிக்கோ, அல்லது புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் நாடக பள்ளியின் பொறுப்பேற்றிருந்த இன்னொரு நாடகாசிரியரான இந்திரா பார்த்த சாரதிக்கோ இது ஏற்புடையதாக இருக்கவில்லை. அவரவர் நடத்தி வந்த பள்ளிகளுக்கு அவரவர் நாடகங்களைத் தான் தேர்ந்து கொண்டார்கள் அல்லது புதிதாக எழுதினார்கள், ஒருத்தர் மற்றவர் நாடகங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்னும் போது இருவருமே செல்லப்பா நாடகத்தைத் தொடாததில் ஆச்சரியப் படுவதற் கில்லை. தமிழ் நாட்டில் இது நடக்காத காரியமும் இல்லை. தில்லியில் பெண்ணேஸ்வரனின் யதார்த்தாதான், ந. முத்துசாமியின் இங்கிலாந்து நாடகத்தை மேடையேற்றிய யதார்த்தாதான், முறைப் பெண் நாடகத்தையும் நாடகம் தான் என்று ஏற்று மேடையேற்றியது. அதை நன்றாகவே செய்திருந்தது. பின் அதை சென்னைக்கு எடுத்துச் சென்று, செல்லப்பாவின் முன்னிலையிலேயே நிகழ்த்திக் காட்டியது. இந்த நவீன நாடகக் காரங்க என்ன குளறுபடி செய்திருப்பாங்களோ என்ற பயத்தோடேயே இருந்த செல்லப்பா வை பெண்ணேஸ்வரன் மேடையேற்றியதைப் பார்த்து அமைதியடைந்திருக்கிறார். நாடகத்தில் எல்லோரும் இயல்பாகவே பேசியிருக்கின்றனர். இயல்பாகவே நடந்தும் இருக்கின்றனர். நவீன பாணி கூத்து ஏதும் அதில் இருக்கவில்லை. செல்லப்பா சில தவறுகளையும் சுட்டிக் காட்டினார் என்று பெண்ணேஸ்வரன் எழுதியதைப் படித்த நினைவு எனக்கு அதன் பிறகு முறைப்பெண் பற்றிப் பேசுவாரில்லை. அனேகமாக செல்லப்பா சொன்னபடி “புல் முளைத்துவிடும்” என்றே தோன்றுகிறது.

தன் வாழ்க்கையின் மிக முக்கிய லக்ஷியங்களாகக் கருதிய ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய அவரது விமர்சனப் பார்வை கொண்ட இரண்டு புத்தகங்கள் ஊதுவத்திப் புல், மாயத் தச்சன் சச்சிதானந்தம் பொறுப்பில் வெளிவந்தன. பி.எஸ் ராமையாவின் கதைகளைப் பற்றியது விளக்கு தந்த பரிசுப் பணத்தைக் கொண்டு வெளி ரங்கராஜன் முயற்சியில் வெளிவந்தது. பரிசுத் தொகை எனக்கு வேண்டாம், ராமையா புத்தகம் வெளியிட அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று செல்லப்பா தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

வயது முதிர்ந்து நடமாட்டம் வெகுவாகக் குறைந்த விட்டதும், முன்னைப் போல புத்தகங்களை மூட்டை கட்டி கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நடைப் பயணம் கொள்ள முடியாது போயிற்று. இருப்பினும் அவர் பிரசுர சாத்தியங்கள் எதுவுமே கண்முன் தெரியாத போதும் எழுதிக்கொண்டு தான் இருந்திருக்கிறார். அவரால் வத்தலக்குண்டுவிலும் இருக்கமுடியவில்லை. பங்களூரிலும் இருக்க முடியவில்லை. அவர் மனமெல்லாம் சென்னையில் தான் பலமாக ஆழமாக வேரூன்றியிருந்தது. சென்னையில் அவருக்கும் அவரது புத்தகக் கட்டுக்களுக்கும் கையெழுத்துப் பிரதிகளுக்கும் கிடைத்தது ஒரு ஒடுங்கிய நீண்ட அறை. நாலடிக்கு பத்தடி என்றிருக்குமா அது? ஒரு மின் விசிறி கூட இல்லாது சென்னைக் கோடை மாதங்களின் வெக்கையில் அந்த ஒடுங்கிய அறையில் தான், அடுக்கப் பட்ட புத்தகங்களிடையே, அவர் திருத்தித் திருத்தி சுதந்திர தாகம் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். “ஒரு மின் விசிறியாவது வைத்துக் கொள்ளுங்கள்,” என்று உதவ வந்த ஒரு அன்பரின் வேண்டு கோளையும் நிர்தாக்ஷண்யமாக மறுத்து விட்டதாகச் சொன்னார்கள். இந்தப் பிடிவாதத்தின் பின் இருந்த உயரிய கொள்கைப்பற்று என்னவென்று எனக்கும் தெரிந்த தில்லை. யாரும் சொல்லவும் இல்லை.

சுதந்திர தாகம் மூன்று பாகங்கள் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல், ஒரு நீண்ட சரித்திரமாக, விடுதலைப் போராட்டத்தின் ஒரு தமிழ் நாட்டின் மூலையில் நடந்த நிகழ்வுகளின் ஆவணமாக அவருக்கே உரிய நுணுக்க விவரங்களோடு, ..எத்தனை முறை திருத்தித் திருத்தி எழுதியிருப்பாரோ அந்த ஒடுங்கிய அறையில் தான் அது முற்றுப் பெற்றிருக்கவேண்டும். ஆனாலும் அது அச்சாகியது. அவருக்கு உதவ முன்வந்த பலரில் ஒருவர் சுகுமாரன் என்று தான் அவர் பெயர் என்று என் நினைவு. அவரை நானும் சச்சிதானந்தமும் ஒரு முறை சந்தித்திருக்கிறோம். செல்லப்பாவிடம் மிகுந்த மதிப்பும் அக்கறையும் கொண்டவர். அவர் உதவியிருக்கக் கூடும். கடைசியில் அவரது வாழ்க்கையின் கடைசி லக்ஷியமாக அது வெளிவந்ததில் அவருக்கு மன சாந்தி கிடைத்திருக்கும்.

பெண்ணேஸ்வரன் அந்த ஒடுங்கிய அறையில் செல்லப்பா வாழ்ந்த நாட்களில் அதன் ஆவணமாகவே அந்தப் பின்னணியில் ஒரு டாகுமெண்டரி எடுத்ததும் மனதுக்கு நிறைவு தரும் காரியங்கள். அதில் செல்லப்பா விரிவாகப் பேசியிருப்பார் தான். ஆனால் அதில் மிக முக்கியமான பதிவாக நான் கருதுவது மாமி அதில் பேசியிருப்பது ஒன்று. செல்லப்பாவிடமே தன்னை முற்றாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு ஜீவன். மிகவும் கஷ்டப்பட்ட ஜீவன். செல்லப்பாவும் தான். ஆனால் செல்லப்பாவின் பிடிவாதங்களும் லக்ஷியங்களும் கொடுக்கும் கஷ்டங்களும் உண்டே. அதையும் சேர்த்துக்கஷ்டப்பட்டவர் மாமி. இரண்டாவது மிக முக்கியமான காட்சி ஒன்று. அவர் முப்பதுகளின் ஆரம்பத்தில், காந்தி விடுத்த ஒத்துழையாமைக் குரலுக்கு செவிமடுத்து சிறை சென்றது. அவருக்கு கொடுத்த கைதி எண் பொறித்த வில்லையை எப்படியோ எடுத்து வந்து இன்னமும் பத்திரமாக வைத்திருப்பதைக் காட்டினார். கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக அவர் பாதுகாத்து வரும் சொத்து அது.

அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நான் சென்னைக்கு ஒரு நாடகப் பட்டறையில் கலந்து கொள்ள வந்திருந்த போது பாரதி மணி, நான் இன்னும் பல நண்பர்கள் சென்றிருந்தோம். அப்போது தான் முதன் முறையாக அந்த இடத்தைப் பார்க்கிறேன். முன்னர் இருந்த பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு சந்து அது. முதலில் எங்கள் முன் வந்தவர் மாமி தான். நாங்கள் வாங்கிச் சென்றிருந்த பழங்களைக் கொடுத்தோம். அவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. “அவர் கிட்டயே கொடுங்கோ. நான் வாங்கிண்டா சத்தம் போடுவார்” என்றார். உள்ளே போனோம். நாங்கள் நாலைந்து பேர் இருந்தோம். எல்லோருக்கும் இடம் இருக்கவில்லை. புத்தகக் குவியல்களை அகற்றி இடம் ஏற்படுத்திக்கொண்டோம். பழங்களை வாங்கிக்கொண்டு மாமியைக் கூப்பிட்டு அவரிடம் அதைக் கொடுத்தார். இந்த விவரங்களை வேண்டுமென்றே தான் எழுதுகிறேன். பேசிக்கொண்டிருந்தோம். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை. சுதந்திர தாகம் படித்தீர்களா? என்று கேட்டார். ”இப்போதான் வாங்கினேன். இங்கு ஒரு நாடகப் பட்டறைக்கு வரவேண்டிவந்து விட்டது. திரும்பிப்போய்த் தான் படிக்கணும். பெரிய புத்தகம். நாளாகும்” என்றேன். பக்கத்தில் இருக்கும் சிற்றுண்டிக் கடையிலிருந்து ஏதோ தின்பண்டங்கள் கொண்டு வரச் சொன்னார் ”வரச் சொல்லியிருக்கேன் அவரும் வருவார். அவர் பக்கத்திலே இருக்கறது சௌகரியமா இருக்கு” என்றார் செல்லப்பா. இரண்டு மணி நேரம் போல இருந்திருப்போமோ என்னவோ. பேச்சில் தான் அவர் பழைய செல்லப்பாவாக இருந்தாரே ஒழிய, உடல் மிகவும் மெலிந்து நடக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு நாங்கள் அவரைப் பார்க்கவில்லை. அவர் அதிக காலம் இருக்கவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு சாஹித்ய அகாடமி தில்லியின் விருது அவரது சுதந்திர தாகம் நாவலுக்கு அளிக்கப்பட்டது. தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடமையாக்கியது. அவரது சிறுகதைகள் முழுதுமாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியது. அவரது வாடிவாசல் காலச்சுவடு பிரசுரமாக வெளிவந்தது. பல தலைமுறைக் காலம் செல்லப்பாவோடு மிக நெருக்கமாகப் பழகிய வல்லிக்கண்ணன் தான், முன்னோடியான செல்லப்பாவின் நினைவில் ஏதாவது செய்யவேண்டும்” என்று ஒரு கூட்டத்தில் சொன்னாரென்றும், ”அதை நீங்களே செய்யுங்கள்,” என்று அவரிடம் அந்தக் காரியம் ஒப்படைக்கப்பட்டது. எழுத்து: சி.சு. செல்லப்பா: தொகுப்பு என்ற அந்த ’ஏதாவது’ என்று செய்யப் பட்ட தொகுப்பில் எழுத்து பத்திரிகையின் முதல் இதழும் கடைசி இதழும் முழுமையாகத் திரும்பத் தரப்பட்டுள்ளது. எழுத்துவின் பன்னிரண்டு ஆண்டுகள் இதழ்கள் அத்தனையும் சின்னக் குத்தூசி (நான் சொல்லவேண்டியதில்லை. யார் என்று. கழக உலகமும் மற்றோரும் அறிவார்கள்) யிடம் வல்லிக்கண்ணன் ஒப்படைத்து ”ஏதாவது” எழுதச் சொல்ல அவர் எண்பது பக்கங்களுக்கு அத்தனை இத்ழ்களின் பொருளடக்கத்தைப் பட்டியலிட்டுத் தந்திருக்கிறார். செல்லப்பா உயிருடனிருந்த போதும், எழுத்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்த போதும், சின்ன குத்தூசி என்னும் ஒரு தரப்பு அரசியல் கருத்துரையாளர் ஏதும் கருத்துரைத்துள்ளாரா என்பது தெரியாது. இப்போதும் இந்த எண்பது நீண்ட பக்கங்களில் ஏதும் சொல்லியிருப்பது புலப்படாது. மற்றபடி வேறு என்ன சொல்ல?. திகசி யும் வல்லிக்கண்ணனும் தமது வழக்கப்படி தம் பாராட்டுக்களை எழுதியுள்ளார்கள். திகசி ஆசிரியப் பொறுப்பில் இருந்த தாமரையின் அரசியல் எப்படியானாலும், அவரை செல்லப்பாவின் வீட்டில் சினேகத்தோடு அன்றாடம் பார்ப்பவரைப் போல பழகுவதைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் எங்கும் ஒரு விதி விலக்காக ஒரு ஒளிக்கீற்று தோன்றக் கூடாதா? அப்படி ஒரு எழுத்து இதில் வந்திருப்பது எழுத்தாளரோ, இலக்கியவாதியோ அல்லாத, செல்லப்பாவின் கடைசி வருடங்களில் உதவியாக இருந்து பழகிய சிற்றுண்டிக்காரர் ஏ.என்.எஸ் மணியன் தான். ராமனுக்கு ஒரு குஹன் கிடைக்கவில்லையா? இந்த மணியன் தான் செல்லப்பாவின் சுதந்திர தாகம் பிரசுரமாவதற்கு ரூ 5000 கொடுத்தாக செய்தி. கொடுக்க முடியுமா என்ற கேள்வியோ, திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வியோ எழவில்லை. திரும்பக் கிடைக்கவில்லை, எதிர்பார்க்கவுமில்லை என்று தான் நாம் நினைத்துக் கொள்ளவேண்டும். செல்லப்பா உயிரோடு இருந்த போது புத்தகக் கட்டுககள் அடுக்கித் தான் வைக்கப்பட்டிருந்தன. விற்றதாகச் செய்தி இல்லை. ”ஒரு கவிதை எழுதிக் கொடுத்து விடுவேன், பத்திரிகை வந்துவிடும்,” என்று எட்டணா மிச்சம் செய்த பெருமையைச் சொன்ன வசதி படைத்த கவிஞரை நினைத்துக் கொண்டேன்.

இதற்கு அடுத்து வந்த புத்தகம் சாதனைச் செம்மல்: சி.சு.செல்லப்பா

முன்னூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட புத்தகம் .எழுதியது வி. ராமமூர்த்தி. புதிய பெயர். பழக்கமில்லாத பெயர். கிரிக்கெட் வர்ணனை தருபவர் என்று அவர் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் வி. ராமமூர்த்தி கிரிக்கெட் வர்ணணையே தம் தொழிலாகக் கொண்டிருந்தவர் என்ற போதிலும் தமக்கும், செல்லப்பாவுக்கும் மிக நேர்மையாகவும் உண்மையாகவும் எழுதியிருக்கிறார்.. செல்லப்பா எழுதியதையெல்லாம் படித்திருக்கிறார். வாடிவாசல் அவருக்கு மிகவும் பிடித்த நாவல். ”நீ இன்றிருந்தால்” கவிதை முழுதையும் இதில் சேர்த்திருக்கிறார். ஏதும் பகட்டும் பாவனைகளும் அற்று, தன் ரசனையை எழுதியிருக்கிறார். செல்லப்பாவின் அனைத்து எழுத்துக்களையும், அவரது ஆளுமையின் பல பரிமாணங்களையும் பற்றி மிகுந்த சிரத்தையுடன் எழுதியிருப்பது தெரிகிறது. இதில் நான் காணும் ஒரே குறை, சாதனைச்செம்மல் என்ற தலைப்புத் தான். செல்லப்பாவைச் சாதனையாளராகக் கண்டிருப்பதெல்லாம் சரி தான். ஆனால் இந்த அடுக்குமொழியாக வந்துள்ள அடைமொழியில் கழகங்களின் கலாச்சாரம் எவ்வளவு தூரம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பது தெரிகிறது.

காவ்யா தன் வழ்க்கமான செல்லப்பா இலக்கியத் தடம் என்று ஒரு தொகுப்பு வெளியிட்டது. அதில் கி.அ.சச்சிதானந்தம், ராஜமார்த்தாண்டன் இருவரின் சிறந்த நினைவுச் சித்திரங்கள் இருக்கின்றன. அவருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து அளித்ததும் காவ்யா தான் என்று நினைக்கிறேன்.

கடைசியில் நினைவு படுத்த, செல்லப்பாவின் விமர்சன எழுத்து எதுவும் யாராலும் தொடப்படவில்லை. ஆயினும் அவரை நினைப்போர் முன் எழும் சித்திரம் விமர்சகர் என்று தான். செல்லப்பா கவலைப்பட்டது போல் புல் முளைத்து விட்டதா என்ன?

Series Navigationதிருப்புகழில் ராமாயணம்வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    ushadeepan says:

    சி.சு.செ. அவர்களை நினைவு கூர்ந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைத் தொடர் அனைவராலும் வாசித்து, உள் வாங்க வேண்டியவை. விழுமியங்களை உள்ளடக்கிய மதிப்பு மிக்க தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையானவர் சி.சு.செ. அவர் இருந்த காலத்திலும் சரி, மறைந்த காலத்திலும் சரி எத்தனை பேர் அவரைச் சரியாகப் புரிந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது கேள்வியே. தமி்ழ்ப் படைப்புலகின் தவிர்க்க முடியாத வக்கிரம் இது. தாங்கள் பயிற்சி பெறுவதற்காக,தங்களை வளர்த்துக் கொள்வதற்காக, தாங்கள் நிலைப்பதற்காக எல்லாவற்றையும் படிப்பார்கள். பயன்படுத்திக் கொள்வார்கள்,. ஆனால் மனம் திறந்து வெளியே எதையும் சொல்லிவிட மாட்டார்கள். பதிலாக முரணான விஷயங்கள் எதுவும் கிடைத்தால், தென்பட்டால், அதற்குத் தவறாமல் எதிர்வினை செய்வார்கள். இவையெல்லாவற்றையும் மீறி காலம் நல்லவர்களைத் தூக்கி நிறுத்தும். அதுவே யதார்த்தம், உண்மை. – உஷாதீபன்

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //இவையெல்லாவற்றையும் மீறி காலம் நல்லவர்களைத் தூக்கி நிறுத்தும். அதுவே யதார்த்தம், உண்மை//

      “இவையெல்லாவற்றையும் மீறி காலம் நல்ல எழுத்தாளர்களைத் தூக்கி நிறுத்தும். இஃதே உண்மை” என்று எழுதப்பட்டிருந்தாலே சரி.

      ஒரு எழுத்தாளர் நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பவர் இலக்கியம் படிக்க வரவே கூடாது. அவரின் குணப்பாங்கு எப்படியிருந்தாலும் அவர் எழுத்துக்கள் வேறு; அவரின் குணம் வேறு என்றுதான் பார்ப்பார்கள்.

      ஒருவேளை குணம் வேண்டும் எழுத்தாளனுக்கு என்றால், நம்மிடையே பாரதியார் கூட தேறமாட்டார்; காரணம் குடும்பத்தைப் பட்டினி போட்டவர் அவர். கண்ணதாசன் தேறவே மாட்டார் அவரின் களவொழுக்கம் அப்படிப்பட்டது.

      குடிகாரர்கள்; குடும்பங்களைக்கெடுத்தவர்கள் (Russel philandered with Eliot’s wife), பல குற்றங்களைச்செய்து சிறைத்தண்டனை அனுபவித்தர்கள்; பல பெண்களைச்சுகித்தவர்கள்; என்று பட்டியல் விரியும்.

      தமிழ் இலக்கியத்திலிருந்தும், உலக இலக்கியத்திலிருந்தும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக்காணலாம். அதே சமயம், கெட்டவனாக இருந்தாலே இலக்கியம் சிறக்கும் என்றும் சொல்ல்வில்லை.

      கெட்டவனோ நல்லவனோ, அதற்கும் அவன் எழுத்துக்கும் தொடர்பில்லை. இருந்தாலும், அது அவனின் திற்மையால் சிறக்கவே செய்யும். Whether he has flaws in his character or good nature, both will be unconsciously used as his impulses to create his work – and whether that work is great depends upon his ability as a writer. இதன்படி அயோக்கியனாக இருப்பினும் கூட நல்ல இலக்கியத்தைத் தர முடியும். யோக்கியான இருந்தாலும் கூட நல்ல இலக்கியத்தைத் தர முடியாமலும் போக முடியும்.

      டி வி சீரியலில் நடிப்பவர்களின் சொந்த வாழ்க்கையா குடைந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நடிப்படித்தானே இரசிக்கிறீர்கள்? எழுத்திலக்கியத்தில் மட்டும் ஏன் குட்டிக்கரணம் போடுகிறீர்கள்?

      இலக்கியம், இலக்கியவாதிகளைப்பற்றி கட்டுரை வரைவோரும் பின்னூட்டங்களிடுவோரும் சிறிதாவது இலக்கிய வரைவுகளைப்பற்றித் தெரிந்து கொண்டு எழுதினால் தவறுகள் நேரா. We must care to know some elements of basic literary theory before we want to discuss writers and their work. The theory is, more or less, common across literature. of all languages.

      1. Avatar
        ushadeepan says:

        சி.சு.செ.யின் எழுத்தைப் பற்றிச் சொல்லி, அதற்கு எதிர்வினை செய்பவர்கள் எப்படி என்று சொல்லி, அந்த முரணை வலியுறுத்தி, சி.சு.செ.யை முன்னிறுத்தினேன் நான். அவர் எழுத்தை நவீன இலக்கியவாதிகள் அறிவார்கள். தேர்ந்த வாசகர்களால் அதை உணர முடியும். ஆனால் அவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரை நேரில், உடனிருந்து அறிந்தவன் நான். ஆகையால் நான் சி.சு.செ.யின் நல்ல தன்மைகளை வலியுறுத்தவே காலம் நல்லவர்களைத் தூக்கி நிறுத்தும் என்று சொன்னேன். அவரை நான் உணர்ந்ததும், சொன்னதும் சரி.

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          நீங்கள் எழுதியது உங்களுக்குச் சரியாக இருக்கலாம். பொதுவில் தவறான முடிவுகளுக்கு வழிகோலும் என்பதே என் கருத்து. நான் பொதுவாகத்தான் எழுதுகிறேன். தனிநபராக எழுதவில்லை. எனவே என் கருத்துக்கள் தனிநபராக எழுதுபவர்கள் கருத்துக்களில் உள்ள வேண்டா விளைவுகளை எடுத்துக்காட்டும்.

          எழத்தாளர்களின் நல்லவர் கெட்டவர் எனப்பிரிப்பது இலக்கிய வளர்ச்சிக்கு எதிராகும். இதுதான் பொதுக்கருத்து. ஏனென்றால், அவர் நல்லவர் எனவே அவரின் நூலகளைப்படியுங்கள். இவர் கெட்டவர் இவரின் நூல்களைப்படிக்காதீர் என்ற உட்கருத்துக்கு வழிகோலும். இலக்கிய விமர்சனம் என்ற போர்வையில் பலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களை வைத்து எழுத்தாளர்களைத் தரம் பிரிக்கிறார்கள்.

          உண்மையான விமர்சனம் எழுத்தை மட்டுமே பார்க்கும். எ.கா எனக்கு ஜெயகாந்தனையும் சாரு நிவேதாவையும் ஜெயமோஹனையும் தனிநபராபக பிடிக்காது. ஆனால் அவர்களின் புதினங்களையும் சாருவின் கட்டுரைகளையும் (குறிப்பாக ஜே ஜே சில குறிப்புகள் பற்றி எழுதியது) மிகவும் இரசித்துப் படித்ததுண்டு.. அவை பற்றி நான் விமர்சனம் எழுதினால் அவை பற்றி மட்டுமே இருக்கும். அவர்களைப்பற்றி இருக்காது. Give the Devil its due என்பதே கொள்கை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. இது பொதுவாழ்க்கை நீதி மட்டுமன்று; இலக்கிய நீதியுமாகும்.

          சி சு செல்லப்பா எவ்வளவுதான் மஹா உத்தம சிரோன்மணியாக – தனிநபர் வாழ்க்கையில் – இருப்பினும் அன்னாரின் எழுத்துக்களின் சாரமில்லாவிட்டால் அவை நீர்த்துப்போகும். இதுதான் பொது உண்மை.

          காலம் தன் கடமையைச் செய்யட்டும். அல்லலுற்று ஆற்றாது அழ‌ வேண்டாம்.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    //முன்னூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட புத்தகம் .எழுதியது வி. ராமமூர்த்தி. புதிய பெயர். பழக்கமில்லாத பெயர். கிரிக்கெட் வர்ணனை தருபவர் என்று அவர் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் வி. ராமமூர்த்தி கிரிக்கெட் வர்ணணையே தம் தொழிலாகக் கொண்டிருந்தவர் என்ற போதிலும் தமக்கும்,//

    வி.ராம மூர்த்தி முன்னால் தமிழக ஐ ஏ எஸ் அதிகாரி. கிரிக்கெட்டில் ஆர்வமிக்கவர். தொலக்காட்சிப் பெட்டி இல்லாக்காலத்தில் ட்ரான்ஸிஸ்டர்தான். அதுவும் ஆங்கில வர்ணனைதான். தமிழிலே சிற்ப்பான வர்ணனை செய்து தமிழக இளைஞர்களின் இதய்ங்களின் நீங்காயிடம் பிடித்தவரை ‘புதிய பெயர். பழக்க்மில்லாத பெயர்’ என்றது delightfully comic. ஏன், delightfully? ராமமூர்த்தி தன் மனத்துக்குகந்த கிரிக்கெட்டுடன் தன்னைச்சேர்த்தபடியால்.

    அவர் பாவம் அப்பாவித்தனமாக தன் நூலுக்கு //சாதனைச் செம்மல்: சி.சு.செல்லப்பா// என்ற பெயரிட்டுவிட்டார். அதைப்பற்றி வெசா எழுதுகிறார்:

    //இதில் நான் காணும் ஒரே குறை, சாதனைச்செம்மல் என்ற தலைப்புத் தான். செல்லப்பாவைச் சாதனையாளராகக் கண்டிருப்பதெல்லாம் சரி தான். ஆனால் இந்த அடுக்குமொழியாக வந்துள்ள அடைமொழியில் கழகங்களின் கலாச்சாரம் எவ்வளவு தூரம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பது தெரிகிறது.//

    அடுக்கு மொழியைக்கண்டாலும் கேட்டாலுமே வெறுப்பு உடனே தொற்றுவிடுகிறதென்றால், தமிழ் மொழி அப்படி பாவம் செய்த மொழியாகி விட்டது போலும். அய்யோ!

    This is not delightfully comic. It is tragically comic to see ghosts of Kazhagam even in an innocuous title of a book by a man who is admired for his erudition and character. Ve Sa can discredit Kazhagams – we support it. But he should not discredit good apolitical figures like V Ramamurthy IAS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *