டாக்டர் ஜி.ஜான்சன்
வாழ்க்கையில் பல சம்பவங்கள் தானாக நிகழ்ந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன, இவை நிகழாமல் தடை செய்ய நம்மால் இயலாது. இவற்றை நாம் விபத்துகள் என்று கூறி ஆறுதல் அடைகிறோம்.
இதற்கு ஒரு நல்ல உதாரணம் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜாவின் அகால மரணம். திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் வண்டி நகர்ந்தபோது ஏறிய அவர் தவறி வண்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் வீழ்ந்து கோர மரணமுற்றார்! காலத்தால் அழியாத இனிய குரலுக்குச் சொந்தக்காரர் ஏ.எம். ராஜா . அவரின் மறைவு உலகத் தமிழர்களுக்கு பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் உண்டுபண்ணியது! .
” தனிமையிலே இனிமை காண முடியுமா ? ”
” கலையே என் வாழ்கையின் திசை மாற்றினால் ,
நீ இல்லையேல் நான் இல்லையே.”
” என் காதல் இன்பம் இதுதானா
சிறைக் காவல் நிலைதானா ? ”
” மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா .” இதுபோன்ற ஏராளமான ஏ .எம்.ராஜா பாடல்கள் தமிழர் இல்லங்களில் இன்றும் ஒலித்தவண்ணம்தான் உள்ளன!
அவரின் குரலில் அன்றும் இன்றும் பலர் பாட முயன்று ,பாடியும் வருகின்றனர். ஆனால் அவரின் வசீகரமான இனிய குரல் அவருக்கே உரியதுதான்.
1964 லில் சிங்கப்பூரில் ஓர் இளைஞர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஏ. எம் ,ராஜ மாதிரியே பாடி புகழ் பெற்றார். அவருக்கு சிங்கப்பூர் ஏ .எம் .ராஜா என்ற பெயரும் தரப்பட்டது.அவ்வளவு தத்ரூபமாக அவரின் குரல் ஏ .எம்.ராஜாவை ஒத்திருக்கும்!
அவர்தான் சார்லஸ். என் வயதுடைய இளைஞர், எனக்கு நெருங்கிய உறவினர்
அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்த வில்லை. எங்கள் வட்டாரத்தில் பல தமிழ் இளைஞர்கள் குண்டர் கோஷ்டிகளில் அங்கம் வகித்திருந்த காலம் அது. சார்லசுக்கு அவர்களுடன் தொடர்பு அதிகம் . அவர்களுடன் சேர்ந்து முன்கோபமும் முரட்டு சுபாவமும் கொண்டவராக மாறிக் கொண்டிருந்தார்.
நான் நான்காம் படிவம் ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தேன். அதுவே சிங்கப்பூரின் சிறந்த பள்ளி.
மாலை நேரத்தில் நான் பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையின் விளையாட்டுத் திடலில் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர்களில் முக்கியமானவர்கள் நா.கோவிந்தசாமி, தமிழ்ச் செல்வன், ஜெயப்பிரகாசம். அவ்வப்போது சார்லசும் அங்கு வருவதுண்டு. ஒருமாதிரி உடலை சாய்த்து ஸ்டைலாக நடந்து வரும்போதே ஏதாவது சினிமா பாட்டை அவரின் வாய் முணுமுணுக்கும் .
தமிழர்கள் அதிகம் இருந்த பகுதி அது. பொங்கல் தினத்தை தமிழர் திருநாள் என்று கொண்டாடுவோம்.தமிழவேள் கோ.சாரங்கபாணி சிங்கபூர் மலாயா தமிழர்களின் தனிப் பெரும் தலைவராகத் திகழ்ந்த காலம் அது. தமிழர்களின் ஒற்றுமைத் திருநாளாகத் தமிழர் திருநாளை கொண்டாட ஊக்குவித்தார்.
கதை, கட்டுரை, கவிதை, பேச்சு,விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதமே எல்லா ஊர்களிலும் நடைபெறும். பொங்கல் தினத்தன்று தமிழர் திருநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
எங்கள் வட்டாரத் தமிழர் திருநாள் விழாவில் வருடந்தோறும் ஒரு நாடகம் அரங்கேறும்.பெரும்பாலும் சிங்கப்பூரின் பிரபலமான நாடகக் குழுவினரை அழைத்து நாடகம் நடத்துவர். அதற்கு அவர்களுக்கு செலவுத் தொகையும் தரப்படும்.
நான் அந்த வருட அமைப்புக் கூட்டத்தில் நாடகத்தை நானே நடத்த அனுமதி பெற்றேன்.நான் பள்ளி மாணவன்தான்.ஆனால் தமிழ் முரசு, தமிழ் நேசன் பத்திரிகைகளில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்தேன். அதனால்தான் அந்த வாய்ப்பு கிட்டியது.
அதுவே நான் எழுதிய முதல் நாடகம்.. நாடகத்தின் பெயர் ” கண்ணீர்த் துளிகள் “. அதில் நானே கதாநாயகன். கதாநாயகி சித்திரா தேவி. இவர் என் பக்கத்துக்கு வீட்டுப் பெண். வயது பதினைந்து இருக்கும். ( இவர் இப்போது சிங்கப்பூரின் பிரபல சின்னத்திரை நடிகையாகி சிங்கப்பூர் அரசின் வாழ்நாள் விருது பெற்றுள்ளார் ) அவரை ஒரு நடிகை ஆவதற்கு வழிகாட்டியே நான்தான்.
அந்த நாடகத்தில் சார்லசுக்கு டாக்டர் வேடம் தந்தேன். நாடகம் சிறப்பாக அரங்கேறி பெரும் வரவேற்பையும் பெற்றது.
நாடகத்திற்கு தென்றல் இசைக் குழுவினர் பின்னணி இசை வழங்கினர். இடைவேளையில் சார்லஸ் பாட அவர்கள் பின்னணி வழங்கினர். அவர் ஏ .எம்.ராஜாவின் குரலில் பாடி அனைவரையும் அசத்திவிட்டார்! அதுவே அவரை ஒரு சிறந்த பாடகராக உருவாக்கிய முதல் படி எனலாம்.
தென்றல் இசைக் குழுவின் கிலேர்நெட் ஜோசப் , கிட்டார் ஜோசப் இருவரும் எனக்கு நன்கு பழக்கம். அவர்கள் சார்லசை தங்கள் இசைக் குழுவில் சேர்த்துக் கொண்டனர். சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் சார்லசின் குரல் ஒலித்தது. அவரின் புகழ் தமிழர்களிடையே பரவியது.
சிங்கப்பூர் சிறிய நாடுதான். அங்கு வாழும் தமிழர்களும் குறைவானவர்கள் தான். குறைவான எண்ணிக்கைக் கொண்ட மக்களிடயே கொஞ்சம் திறமை உள்ளவர்கள் எளிதில் புகழ் பெறுவது இயல்பே. இது எழுத்து, மேடைப் பேச்சு, இசை, நடிப்பு போன்ற அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு புகழ்ப்பெற்ற பாடகரின் குரலில் அப்படியே பாடும் திறமை தமிழகத்தில் வாழும் மக்களிடம்கூட காண்பது சிரமம்( இப்போது கூட தமிழகத்தில் ஒருசிலர் ஏ .எம்.ராஜா குரலில் பாடுவதைக் கேட்டுள்ளேன்.. ஆனால் அதில் எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை ) ஆனால் சார்லஸ் ஏ .எம்.ராஜாவின் குரலில் பாடியது மிகவும் தத்ரூபமாக அமைந்துவிட்டது. கண்களை மூடிக் கொண்டு கேட்டால் ஏ .எம். ராஜா பாடுவது போன்றுதான் ஒலிக்கும்.
இது நடந்து மறு வருடம் நான் மருத்துவம் பயில தமிழகம் சென்றுவிட்டேன். விடுமுறைகளில்தான் சிங்கப்பூர் வருவேன்.
ஆறு ஆண்டுகள் கழித்து நிரந்தரமாக சிங்கப்பூர் திரும்பினேன்.சார்லஸ் புகழ் மிக்க பாடகராகத் திகழ்ந்தார். ஒரு பஞ்சாபிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்திருந்தார். இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
நான் மலேசியாவில் திருமணம் செய்துகொண்டபின் இன்னும் சில வருடங்கள் கழித்து குளுவாங் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தேன்.
ஒரு நாள் என்னுடன் சார்லஸ் தொடர்பு கொண்டார். தனக்கு வலது தொடையில் ஒரு கட்டி உள்ளதாகக் கூறினார். மருத்துவர்கள் அதனால் ஆபத்து ஏதும் இல்லை என்று கூறுகின்றனராம்.அதை அழுத்தினால் வலிக்கவில்லை என்றார். நான் இது புற்று நோய் இல்லை என்றேன். அனேகமாக இது லைப்போமா கட்டியாக இருக்கும் என்றேன்.
சில நாட்கள் கழித்து தான் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். நான் காரணம் கேட்டேன். மனைவியின் துன்புறுத்தலால் அந்த கட்டியை அகற்றிவிட சேர்ந்துள்ளதகக் கூறினார்.
அந்த கட்டி அகற்றப்பட்டு இரண்டு நாட்கள் மருத்துவமையில் நன்றாக இருந்தார்.அது சாதாரண அறுவைச் சிகிச்சைதானே என்று நான் சிங்கப்பூர் சென்று பார்க்கவில்லை. தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.
மூன்றாம் நாள் அவரின் மனைவி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் சொன்னது கேட்டு அதிர்சியுற்றேன் .
இரவில் அவர் கழிவறையில் மயங்கி விழுந்து மூச்சு திணறியதாம். உடன் அவசரப் பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை தரப்பட்டதாம். ஆனால் பலனின்றி உயிர் பிரிந்து விட்டதாம்! இந்தத் துயரச் செய்தியை அவர் சொல்லி விட்டு விம்மி விம்மி அழுதார்.
நான் உடன் மனைவியுடன் சிங்கப்பூர் விரைந்தேன்
அதற்குள் தனியார் சீன மண்டபத்தில் உடல் சவப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கட்டியை அகற்றியபோது இரத்தக் கட்டி ( blood clot ) சிரையில் ( vein )புகுந்துள்ளதாம்.அது இருதயத்தில் அடைப்பை ( embolism ) உண்டுபண்ணியதாம். இதுவே மருத்துவர்கள் கூறிய விளக்கமாம். ஆனால் இரண்டு நாட்கள் கழிந்தபின் இப்படியும் ஆகுமா என்ற சந்தேகம் எனக்கு எழவே செய்தது.
தேவை இல்லாமல் அந்தக் கட்டியை அகற்றப் போய் இப்படி உயரே போய்விட்டதே என்று அனைவரும் வருந்தினோம்.
அன்று மாலை மவுண்ட் வெர்னென் ( Mount Vernen ) மின்சார சுடலையில் சிங்கப்பூர் ஏ .எம்.ராஜா சார்லசை மிகுந்த துயரத்துடன் வழியனுப்பி வைத்தோம்!
( முடிந்தது )
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
- சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
- கவிதாவின் கவிதைகள்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
- எதிர்பாராதது
- காலம் கடத்தல்
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4
- சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
- நீங்காத நினைவுகள் – 5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12
- கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்
- விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
- சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
- நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 9.அறிவால் உலகை வியக்க வைத்த ஏழை….
- வேர் மறந்த தளிர்கள் 4-5
- அக்னிப்பிரவேசம்-36