ஜெயம் சீத்தா ராமா

Kannan copy

 

பல நேரங்களுல எங்கூட்டு சாப்பாட்டுல பங்குக்கு வர்ற ஒரு சாமியாருதான் நம்ம கதா நாயகரு. சாமியாருன்னா நம்ம அக்னி பிரவேசம் கதைல வர பரமஹம்சா மாரியான சாமி யாரோ இல்லாட்டி அப்போ அப்போ பேப்பருங்களுலையும் டீவிங்களுலியும் பெருமையா வந்து என்னப் பாரு என்னோட மொகரக்கட்டையப் பாருன்னு  காட்டிக்கிற சாமியாருங்க மாரியோ  அப்படியும் இல்லன்னா  பராசக்தி படத்துல வர்ற பூசாரிமாரியோ  அவுரு இல்லங்கிறதமட்டும் மொதலுலியே சொல்லிப்புடறேன். அவுரோட ஸ்பெஷாலிட்டியே ஒரு நாளைக்கி ஒரு வேளைக்கி ஒரு ஊட்ட தாண்டி அடுத்த ஊட்டுக்கு போயி சாப்பாட்டுக்கு நிக்கமாட்டாருங்கிறதுதான். மத்த விஷயங்கள போவ போவ பாப்போம்.  அவரோட பேர அவரோட வார்த்தைங்களக்கொண்டு சொன்னாதான் அவரோட பேருக்கு இருக்கிற நெசமான மவுசும் பவுசும் வெளங்கும். இல்லாட்டி? கத சொல்லி இட்டுக் கட்டினமாரியோ அவரோட பேர உங்க மூளைல  வம்படியா திணிச்சமாரியோ இல்ல  ஆயிடும்…?

 

அவுரு நெத்தில நாமம் போட்டுனு  இருப்பாரு போல. ஆனா நிச்சயமா இவுரு மத்தவங்க ளுக்கு எண்ணைக்கும் நாமம் போட்டிருக்கமாட்டாருனு எனுக்கு அசைக்க முடியாத     நம்பிக் கை இருக்குது. எங்கு ஆயாவும் ஒரு நாமக்காரிதான். ஆயா ஒரு நா கூட நாமம் வச்சிக்காம காத்தால சாப்புட்டதே இல்ல. ஆயா என்னையும் கூப்புட்டு “சாமி நீ நாமம் வச்சிக்கிறையா கண்ணு?”னு கேக்கும்.  நானும் ஆயாவோட ஆசைக்கு ஏத்தாப்புல “வச்சிக்கி றேன். ஆயா” னு சொல்லி நெத்திய காட்டுவேன். நாமம் வச்சிட்டு ”பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரத்தாண்டு”னு வர்ர மொதோ ரண்டு அடிங்கள சத்தமா சொல்லி, “மல் லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு”னு வர்ற மீதி  பாட் டோட பகுதிய தன்னோட காதுலமட்டும் விழறாப்புல சொல்லிக்கும்.

 

அப்புடி ஆயா எனுக்கு  நாமத்த போட்டு உடறப்போவெல்லாம்  எங்க அப்பாவோ சித்தப்பாவோ சித்திக்காரியோ  பெரியம்மா பசங்களோ என்ன ”பட்ட பட்ட நாமக்காரா, படி அரிசி சோத்துக்காரா, பத்து  குண்டா கூழுக்காரா, பெரும்பான வகுத்துக்காரா” னு கேலியா பாடுவாங்க. நானு எங்க ஆயாக்கிட்ட போயி “பாரு ஆயா, நாமம் வச்சிக்கினா இவங்க பாடுற பாட்ட” னு சொல்ல, எங்க ஆயா ”நாமத்தப் பத்தி அவுங்குளுக்கு என்னா கண்ணு தெரியும். நாமமுங்கிறது நாம நம்ம நெத்தியில கிருஷ்ண பரமாத்வாவுக்கு கட்டுற கோயிலு. அதப்பத்தி எல்லாம் அவுங்களுக்கு எங்க தெரியப்போவுது? யாரு என்னா பாட்டு பாடுறாங்களோ அவங்கத்தான் அப்புடின்னு நீ நெனச்சிக்கோ கண்ணு,”னுஎனுக்கு சமாதானம்  சொல்லும்.

 

தோ இந்த சாமியாரு கூட நாமம்போட்டுனு இல்ல இருக்குறாரு. இவுர மட்டும் ஏன் யாரும் பாடறதில்ல?னு எனுக்கு ஒரு கேள்வி எழும். ஆனா, நானு இந்த கேள்வியப் போயி யாருக்கிட்ட கேக்க…? அவரோட பக்கத்துல போயி நானு நின்னாக்க திருநாமத்தோட வாசனையும் திரிசனத்தோட வாசனையும் [சளி புடிச்சி இருந்தாக்கூட] என்னோட மூக்கத் தொளைக்கும். வாசனைனா அப்பேர்க்கந்த நாம வாசனை அவருக்கிட்ட இருந்து வீசும்! அவுரும் எங்க ஆயாமாரி நாமம் வச்சினு இருக்குறதால ராம பக்தராவோ கிருஷ்ண பக்தராவோத்தான் இருக்கணும்னு நானா நெனச்சிப்பேன். அவுரு பக்கத்துல நானு போயி நின்னாக்க அவுரோட மொழங்கைய்யி என் தலைய ஒரசும். அவுரோட கைத்தடி என்னோட நெஞ்சத் தொடர அளவு இருக்கும்.

 

“பகவானே, நல்லா இருக்கிங்களா?  பகவானோட அனுகிர கத்தால ஒரு கொறபாடும் இந்த பகவானுக்கு வராது.”னு சொல்லி மெள்ள எதமா பதமா முதுகத் தடவுவாரு. இல்லாங்காட்டி தலைல கைய்ய வச்சி “எல்லாம் பகவானோட செயல். எதுக்கும் கவலப்படாத சாமி.” னு எப்போவாச்சும் என்னோட மொகம் வாட்டமா இருந்தா என்னோட மொகத்துல இருக்குற வாட்டம் போராப்புல  ஆறுதலா நல்ல  வாக்கு சொல்லுவாரு.

 

அவுரு காத்தால ஏழற எட்டு மணி வாக்குல ஊட்டாண்ட வருவாரு. அவுரு வர்றதுக்கு அடையாளமா ’தட்டு –  தட் – தட்டு’ என்ற அவுரோட கைத்தடி சத்தமும் “ஜெய ஜெய ராமா, சீத்தா ராமா ஜெய ஜெய விட்டல பாண்டு ரங்கா விட்டல” என்ற பாட்டை தன் கையிலுள்ள சிப்ளாக்கட்டைய வச்சிக்கிணு  தாளம் தப்பாம பாடிக்கினே வரும் சத்தமும் கேக்கும்.  வீட்டுக்கு முன்னால வந்ததும் ”ஜெயம் சீத்தா ராமா, ஜெயம் சீத்தா ராமா, ஜெயம் சீத்தா ராமா” னு  மூணு தபா சத்தமா கூப்புடுவாரு. ஊட்டுல யாரு எந்த வேலைய  செஞ்சினு இருந்தாலும் நம்ம கதாநாயகரோட கொரலுக்கு இருக்கிற வசியத்தால பாம்பாட்டி யோட  மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் மாரியோ, தாய் பசுவோட கொரலுக்கு கட்டுபட்ட கண்ணுக்குட்டிமாரியோ அந்த ஜெயம் சீத்தாராமா இங்கிற சத்தத்துக்கு, இல்ல இல்ல சங்கீத மொழிக்குக் கட்டுப்பட்டு ஊட்ட உட்டு வெளியே வந்தே ஆவணும். ஆக, இப்போ அவுரோட பேரு என்னாங்கிறத நீங்களே ஊகம் பண்ணி இருப்பிங்க. ஆமாங்க. அவுரோட நெஜப் பேரப் பத்தி எப்புடி எனுக்குத் தெரியும்? அதனாலதான் இந்த ’ஜெயம் சீத்தாராமா’ னு அவுரு வாய் ஓயாம  சொல்லும் பேரையே நம்ம கதாநாயகருக்கு வச்சி இருக்குறேன்.  பேரப்பத்தின அலசல இப்போதைக்கு நிறுத்திக்கிட்டு நாம மேல நடக்குற கதையப் பாப்போம்.

 

அப்புடி வர்றவங்க யாரா இருப்பாங்க? ஊட்டுல இருக்குற அம்மாமாருங்களும் புள்ளைங் களான நாங்களும்தான். அவுரு குடுத்த கொரலு போதாதுன்னு ஊட்டு வாசலுக்கு வந்து நின்னு நாங்களும் “அம்மா ஜெயம் சீத்தாராமன் வந்துருக்காரு. சீக்கிரம் வாம்மா. சீக்க்கிரமா வாமா” னு ஏதோ எங்களுக்கே பசிக்கிறமாரியே கூப்புடுவோம். ஊட்டுப் பெண்மணிங்களும் “தோ வந்துட்டோம் தோ வந்துட்டோம்” னு சொல்லி வாசலுக்குவருவாங்க.

எங்க அம்மாவோ பாட்டிஆயாவோ சின்னம்மாவோ   பெரியம்மாவோ  இப்புடி யாராச்சும் ஒருத்தங்க வெளியே வந்து “எங்க ஜெயம் சீத்தாராமா, நீங்க நெறைய நாளா கண்ணு லையே தெம்புடலையே?” னு கேப்பாங்க. “தேவி நம்மள ராமன் அயோத்திக்கு வரச் சொன் னான். அவனோட விருப்பத்த எப்புடி தட்டமுடியும்?அதான்  தாயி நானு அவனையே  நம்பி அவனோட எடத்துக்குப்  போயி அவனையும் சீத்தம்மாவையும் இந்த ரெண்டு கண்ணாலை யும் பாத்து ஆனந்தப்பட்டேன்.  அவங்களாண்ட கொஞ்ச நேரம் பேசினு இருந்துட்டு அவங்க உத்தரவு குடுத்தப்பரமா இங்கத் திரும்பி வந்திருக்கேன். எல்லாம் அந்த ஜெயம் சீத்தா ராமனோட வெளையாட்டு. அத்த தவுற வேற என்னாத்த தாயி நானு சொல்ல?” னு சொல் லுவாரு. இல்லன்னா, “பாண்டுரங்கன் நம்மள பண்டரிபுரத்துக்கு வரச்சொல்லி ஆளனுப்பி உட்டிருந்தான். போயி அவனையும் அவனோட பரமபக்தையான சக்குபாயி தேவியயும்  பாத்து பேசிட்டு வந்தேன் தாயி.” னோ சொல்லுவாரு.

 

அவுரு சக்குபாயி பத்தி சொல்லறத நெனைக்கிறப்போமட்டும் எனுக்குக்கூட கண்ணு ரெண் டும் கலங்கிப் போயிடும். ஏன்னா எங்க ஆயா சக்குபாயி கதைய எனுக்கு சொன்ன விதம் அப்புடி. சக்குபாயி கதைல சக்கு பாய அவங்க மாமியாளும் நாத்தனாளும் பத்து வயசு பொண்ணுனு கூட பாக்காம அவ செய்யமுடியாத வேலைங்கள அவளுக்கு வச்சதும், அவ சலிக்காம அந்த வேலைங்கள செஞ்சதும்,  அவ பேருல ஊருல இருக்கிற பொம்பிள்ளைங்க இல்லாததும் பொல்லாததுமா கட்டின பொய் கதைங்களும், மனசு நொந்து அவ கெணத்துல உழ, பாண்டுரங்கனே ஒரு கெழவராட்டமா வேஷம் போட்டுனு வந்து காப்பாத்தினதும், அவ பக்தியா இருந்ததால பாண்டுரங்கனையே ஊட்டுல கட்டிப்போட்டுட்டு பண்டரிபுரம் போன தும், பாண்டுரங்கன் தன்னோட பக்தைக்காக சக்குபாயி வேஷத்துல இருந்து சக்குபாயோட கணவன் மித்ராவுக்கும் குடும்பத்தாருக்கும் செஞ்ச பணிவிடைங்களும், சாமி பாம்பு கடிச்ச அவள காப்பாத்தினதும் இப்புடி சக்குபாயி கதைய எங்காயா சொல்லுறப்போவே பாதி கதைல அழுகாச்சியா அழுவும். “அப்புடி பாண்டுரங்கன் எப்போ எனுக்கு தரிசனம் தருவானோ? தெரியலையே?  பண்டரிநாதா! பாண்டுரங்கா! புண்டரி சயனா! பகவானே! உனுக்கே வெளிச்சம்”னு சொல்லி கதைய முடிக்கும். சீத்தாராமரு பண்டரிபுரத்துக்கு போயிட்டு வந்தேனு சொன்னப்போ எங்க ஆயா சொன்ன கதை எனுக்கு நெனப்புக்கு  வந்துச்சி.

 

“ஏன் சீத்தாராமா, அந்த ராமன எங்க கிட்டதான் பேச சொல்லறது? இல்லேனா அந்த பாண்டுரங்கன் சக்குபாய்க்குதான் எவ்வளவோ செஞ்சி இருக்காரு இல்ல? அதுமாரி இங்கயும் ஒரு அதிசயத்த செஞ்சி காட்டுறது?”னு நானு கேக்க, எங்கம்மாவோ ஆயாவோ “சீத்தாராமா, தப்பா எதுவும் நெனச்சிக்காதிங்க. இந்த புள்ளைக்கி கொஞ்சம் வாய்த்துடுக்கு மிச்சம் சாமி. வெளையாட்டு புத்தி வேற,” னு சொல்ல “அட தாயி, கொழந்தைக்கி இருக்குற ஆசையத்தான் கேக்குது. அதுல தப்பு ஒண்ணும் இருக்குறாப்புல எனுக்குத் தெரில. கால நேரம் வரப்போ நிச்சயமா ராமரு உங்க கிட்ட பேசுவாரு சாமி. பண்டரிநாதனும் நீங்க நம்பவே முடியாதமாரியான காரியத்த உங்களுக்கு செய்வாருங்க சாமி. நானு சொல்லறது பொய் இல்ல. கண்டிப்பா ஜெயம் பலிக்கும். எல்லாம் அந்த ஜெயம் சீத்தாராமனுக்கே வெளிச்சம்.”னு சொல்லி கலகலனு சிரிப்பாரு நம்ம கதாநாயகரு.

 

அதுக்கப்பறம் வழக்கமா எங்களப் பாத்து “ஏ  புள்ளைங்களா,  நம்ம சீத்தாராம சாமி சாப்புட  தோட்டத்துல போயி நல்லதா ஒரு தலவாழ எலைய அறுத்துனு வாங்கடா” னு அம்மாவோ ஆயாவோ சொல்ல, யாரு எலைய அறுக்க போறதுங்குறதுல எங்களுக்குள்ள நீ நானுனு   போட்டி வரும். அதுக்கு நம்ம சீத்தாராமரு, ”நானே போயி அறுத்தார்றேன். யாரும் போட்டி போடவேணாம் கண்ணுங்களா!”னு சொல்லிட்டு போயி அவுருக்கு புடிச்சாப்புல ஒரு எலைய அறுத்துனு வருவாரு. அந்த எலைய ஒண்ணுக்கு ரண்டு தபா நல்லா தண்ணிய உட்டு கழுவுவாரு. திண்ணையில அவுருக்குனு வழக்கமா ஒதுக்கிவச்சாப்புல ஒரு எடத்துல கெழக்கு பாத்து ஒக்காருவாரு. அப்பறம் ஊட்டுல என்னா செஞ்சி இருக்காங்களோ,  அதாவது சோறோ, சோளக் கூழோ, பொங்கலோ, தோசையோ, இட்லியோ உப்புமாவோ, எது இருந்தாலும் அவரோட எலைல நான் மேல சொன்ன யாராச்சும் ஒருத்தங்க பரிமாறுவாங்க.

 

“நல்லா சாப்புடுங்க சீத்தாராமா” னு சொல்லி அவங்க போட, இவுரு கண்ண மூடி சீத்தாராம ஜெபத்தச் சொல்லிப்புட்டு  ஒரு புடி சோறோ ஒரு துண்டு பலகாரமோ எடுத்து ”சாமிங்களே, இது உங்குளுக்கு அம்பாளோட அனுகிரகம்” னு சொல்லி தரைல வச்சிடுவாரு.  அதுக்கப்பரம் இன்னும் கொஞ்சம் சோத்தையோ இட்லி தோசை வகைறாக்களையோ எடுத் துனு போயி ”கா கா கா“ னு காக்காங்க மாரியே கொரல மாத்திக்கினு கரைவாரு. நாங்க எல்லாம்  காக்காய்க்கு சாப்பாடு வச்சா காக்காயிங்க  வந்தா வரும். இல்லாட்டி வராது. ஆனா இந்த சீத்தாராமருக்கிட்ட என்ன மாய மந்திரம் இருக்குமோ தெரியாது.  கூப்புட்ட ஒடனே இனிப்ப்ப மொய்க்கிற ஈ கூட்டமாட்டம் காக்காயிங்க வந்து சேந்துக்கும். அதுங்களுக்கு பாதிய போட்டுட்டுஅதுங்க தின்னு திருப்தியா போன அப்பரம்   மிச்சம் இருக்குரதத்தான் சாப்புடுவாரு. இன்னும் கொஞ்சம் போடரோம். அதான் போட்டதுல எரும்புக்கும் காக்காய்க்குமா பாதி பாதி வச்சிட்டிங்களே சாமி” னு சொல்லி எங்க ஊட்டு அம்மாமாருங்க மீண்டும் சாப்பாடு போட வந்தா “தேவி போதும். போதும் தேவி. எல்லாம் நம்ம சீத்தாராமனோட கருண. இந்த அளவு சாப்பாட்டுலையே  பகவான் என்னோட வயத்த பரிபூரணமா நெறச்சிட்டான். இதுக்குமேல நம்மால ஆகாது தாயி.  நீங்க கொழந்த குட்டிங்க ளோட மங்களமா இருக்கணும். வரேன் தாயி.” னு சொல்லி தண்ணியயும் கையிலையே ஊத்தச் சொல்லி குடிச்சிப்புட்டு  கெளம்பிடுவாரு.

அந்த சீத்தாராம  சாமியார எங்க ஆளுங்க வழில பாத்தாலும் எப்புடி இருக்கிங்கனு குசலம் விசாரிப்பாங்க. “அப்புடி இவுருக்கிட்டமட்டும் எங்க ஆளுங்களுக்கு ஏன்தான் இப்புடி என்னா  ஒரு ஒறவோ? ஒட்டுதலோ?” னு எனுக்கு சந்தேகம் வரும். நம்ம சீத்தாராமரு வாரத்துக்கு ஒரு நாளோ மாசத்துக்கு ஒரு நாளோதான் எங்கூட்டுப் பக்கம் வருவாரு. அப்புடியே வந்தா லும் என்ன மொற வச்சிப்பாரோ? எப்புடிப்பட்ட மொற வச்சிப்பாரோ? தெரியாது. ஒரு நாளைக்கி எங்கூட்டுக்கு வந்தா அடுத்த நாளைக்கி எங்க பெரியம்மா ஊட்டுக்கோ சித்தி ஊட்டுக்கோ இல்லன்னா வேற அக்கம் பக்கமுள்ள ஊட்டுங்களுக்கோதான் சாப்பாட்டுக்கு போவாரு. காத்தால போன ஊட்டுக்கு ராத்திரிக்கி போவமாட்டாரு. யாரூட்டுலனாச்சும் விரும்பிக் கூப்புட்டாலும், “விசேஷம் அதனால எங்கூட்டுக்குத்தான் கண்டிப்பா சாப்புட வரணும்”னு சொல்லிக் கூப்புட்டாலும் வரமாட்டாரு.“தாயே பகவான் நம்பள எந்த ஊட்டுக்கு அனுப்புறானோ அந்த ஊட்டுக்குதானே போவமுடியும்?” னு ஒரு பதில தயாரா வச்சி இருப் பாரு.

 

நம்ம சீத்தாராமரு என்ன காரணத்தாலோ திடீர்னு ஒரு பொங்கலப்போ போனவரு. அடுத்த பொங்கல் வந்துகூட வரல. சொல்லி வச்சாப்புல எங்க அம்மாக்கிட்ட “எம்மா சீத்தாராமரு வந்து ஒரு வருஷம் ஆயிடுச்சி இல்லமா. எப்போவாச்சும் நடுவுல ஒரு தபாவாச்சு வந்தாரா? னு” நானு அம்மாக்கிட்ட கேட்டேன். அதுக்கு “ஆமா கண்ணு நீ சொன்ணமாரி  ஒரு வருஷம் ஆயிடுச்சி. அந்த சாமிக்கு  என்னா ஆச்சோ தெரியல” னு சொல்லி எங்கம்மா  வாயக் கூட மூடல ”ஜெயம் சீத்தா ராமா, ஜெயம் சீத்தாராமா, ஜெயம் சீத்தா ராமா.”” னு அந்த வழக்கமான சத்தம் வாசலுல கேக்குது!

 

“சீத்தாராமா உங்குளுக்கு நூறு வயிசு. இப்போதான் நானும் எங்க பய்யனும் ”எங்க ஜெயம் சீத்தாராமன காணுமே?” னு பேசினு இருந்தோம். சொல்லி வச்சாப்புல வந்து நிக்கிறீங்களே. உங்குளுக்கு நாங்க பேசிக்கிறது கூட தெரியுமாங்காட்டி!” னு சொல்லி சிரிச்சிச்சி எங்கம்மா. அதுக்குள்ள அக்கம் பக்கம் இருந்த எல்லா ஊட்டுக்காருங்களும் சீத்தாராமனோட கூட வந்திருக்கிற புதுக் கூட்டாளியப் பாத்து ஆச்சரியப்பட்டு வாயடைச்சி நின்னாங்கணுதான் சொல்லனும்.

 

“இது என்னா சாமிகூடவே ஒரு புதுக் கூட்டாளி?” னு கேட்டுச்சி எங்கம்மா.  அதுக்கு “தேவி! நானு தீர்த்தமலைக்கி போயிட்டு ஒரு குருவ பாத்தேன். அவுருகிட்ட இருந்து நெறையா சேதி தெரிஞ்சிக்கிட்டேன் தாயி. அங்க கொஞ்சம் நாளு இருந்துட்டு வர்றப்போ தோ இந்த ராம தூதன் என்ன புடிச்சிக்கிட்டு நீரு எங்கப் போனாலும் கூடவே வருவேன்னு அடம் புடிக்கிறாந் தாயி” னு சொன்னாரு. அப்போதான் அவரோட வந்திருக்குற அந்த கூட்டாளி யாருனு எனுக்கு புரிஞ்சிச்சி. அதுக்கப்பறம் கொழந்தைங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும்தான். அவுரு அந்த கொரங்குகிட்ட “ஆடுறா ராஜா ஆடு. உன்  ஆட்டத்த பாக்க எத்தன குட்டிக்குட்டி ராஜாங்களும் ராணிங்களும் வந்திருக்காங்க. அதனால நீ ஆடுறா ராஜா ஆடு” னு அந்த கொரங்க குஷிப்படுத்தி ஆடச் சொல்லிட்டு கொரங்கோட ஆட்டத்துக்கு ஏத்தாப்புல  இவுரு  பாடறதும், அவுரோட சிப்புளாக் கட்டைய கொரங்கு  தன்னோட கையால எடுத்துக்கிட்டு பாட்டுக்கு ஏத்தமாரி தட்டிக்கினே ஆடறதும், கொரங்கு கூட சேந்துக்கினு எங்கூட்டுக் கொழந்தைங்களும் குதுகுலமா  ஆட்டம் போடறதும் ’மேட இல்லாம பாட்டு கேக்குது. தாளத்தோட ஆட்டம் நடக்குது. இதுதானோ நம்ம ஜெயம் சீத்தா ராமரோட திருவெளையாடல் மகிம?’னு நானு நெனச்சிக்கிறேன்.

 

அம்மா  சீத்தாராமருக்கு அந்த பொங்கலன்னைக்கு கரும்பு, சக்கரைப்பொங்கல், சாப்பாடு எல்லாம் குடுத்து   ஒரு வேட்டியயும் குடுத்தனுப்புது. கொரங்குக்கு கொஞ்சம் பழம், பொரி கடலை, ஒரு மூடி தேங்கா  எல்லாம் குடுத்து ”உன் கூட்டாளிக்கு இது. நம்பி வந்தவங்கள பத்திரமா பாத்துக்கோ சீத்தாராமா”,னு சொல்லி ”போய்ட்டுவாங்க சாமி” னு சொல்லி அம்மா அனுப்ப, பள்ளிக்கூடத்துல படிச்ச பைப்பர் கதைல வந்த அந்த வித்துவானோட போன எலிங்கமாரி என்னோட தம்பி தங்கச்சிங்களும் அக்கம் பக்கத்து ஊட்டு குட்டி கொழந்தைங் களும் அந்த கொரங்கோடவே ஆட்டம் போட்டுக்கினு  சீத்தாராமர் கூடவே போறாங்க. அப்போ எங்க ரைஸ்மில்லுல வேல பாத்த மிஷின் ட்ரைவர் வீரண்ணன் போயி ஒரு அதட்டு போட்டு ”ஏ புள்ளைங்களா இப்போ என் கூட நீங்க வரல? உங்கள எல்லாத்தையும் இந்த கொரங்கோட சேத்து கெணத்துல தொபீர்னு தள்ளிப்புடுவேன்! ஆமா சொல்லிப்புட் டேன். சீக்கிரம் வாங்கோ! சீக்கிரம் வாங்கோ!”னு கத்தினு பிள்ளைங்கள தொரத்தினு போறாரு.

 

அதுக்கு எல்லா கொழந்தைங்களும் ஒண்ணா சேந்துக்கினு அவருக்கு “வெவ்வ வெவ்வ வெவ்வ” னு அவர பழிக்க, நம்ம சீத்தாராமரு ”புள்ளைங்களா, நீங்க இந்த தாத்தா திரும்பி இங்கவரணும், உங்க கூட்டாளிகூட சேந்து நீங்க இன்னொரு நாளும் ஆட்டம்போடனும்” னு  நெனச்சா அந்த தாத்தாவ கேலி பண்ணாம அவரு சொல்லரமாரியே உங்க ஊட்டுங்களுக்கு திரும்பிப் போங்க. நானும் உங்களப் பாக்க கண்டிப்பா திரும்ப வருவேன்.” னு சொல்லிட்டு  அண்னைக்கிப் போனாரு.

 

அப்புறம் அப்போ அப்போ வழக்கமா வர்றாப்புல சீத்தாராமானு சொல்லிக்கினு எப்போவாச் சும் வருவாரு, அந்த கூட்டாளியயும் கூட்டினுதான்.தீர்த்த மலைக்கி போயி வந்தப்புறம் ஊட்டுல யாருக்காச்சும் காச்சலுனு தெரிஞ்சா தவறாம வந்து ஒரு சூரணத்தையோ குலிகையோ ”மூணு நாளு சீத்தாராமரோட பேரச் சொல்லி சாப்புடுங்க ‘னு சொல்லி குடுப்பாரு. என்ன ஆச்சரியமோ அதிசயமோ காச்சலு இருந்த எடமே தெரியாம போயி காச்சலு வந்த ஆளு தெம்பா எழுந்து நடமாடுவாரு!

 

காச்சலுக்கு மட்டுமில்ல; வாந்திபேதி, கை கால் கொடைசல், சுளுக்கு, ஒத்த தலைவலி, இப்புடி பல பல வியாதிங்களுக்கும் அவுரு குடுக்குற மருந்துக்குக் கட்டுப்படாத நோவுங்க இல்ல! தேள் கடி, பாம்பு கடி, பூரான் கடி இப்புடி வெஷ கடிங்களால பாதிக்கப்பட்டவங்களு டைய வேதனைய ஒரு கல்ல வச்சி தீத்துப்புடுவாரு. ஊட்டுல எருமையோ மாடோ பாலு கறக்கலனாலும் மந்திரம் போடுவாரு. அவுரு மந்திரம் போட்டா அப்பறம் அந்த ஜீவன் கிட்ட இருந்து வர்ற பாலுக்குக் கொறவே இருக்காது! நம்ம கொழாய் கெணத்துல இருந்து தண்ணி சொரக்கிறமாரி பால்மாட்டுங்களோட காம்புங்களுல இருந்து பாலா சொரக்கும்!

 

எப்போ எந்த வைத்தியம் பண்ண ஆரம்பிச்சாலும் வேப்பிலைக் கொத்தாலையோ இல்லாட்டி தன்னோட வேட்டில வச்சிருக்கிற திருநீத்து பொட்டலத்தாலையோ ஏழு தபா தலைய சுத்துவாரு. சுத்தறப்போவே “ஜெயம் சீத்தா ராமா ஜெயம் சீத்தா ராமா” னு அந்த சீத்தாராம மந்திரத்ததான் சொல்லிக்கினே இருப்பாரு. இப்புடித்தான் அவரோட வைத்திய சாத்திரம் இருக்கும். கொணமானவங்க காசு பணமோ, அரிசி பருப்போ, பாத்திர பண்டமோ, நகநட்டோ,  துணிமணியோ, எத சந்தோஷமாக்  குடுத்தாலும் வாங்கமாட்டாரு. “என்ன சீத்தாராமா? எதுவுமே வாங்கமாட்டேனு சொன்னா எப்புடி?” னு யாராவது கேட்டா, “அந்த சீத்தாராமரு பேரச்சொல்லி படிக்கிற புள்ளைங்களுக்கு நாலு பல்பமோ, ரண்டு பென்சிலோ, ஒரு பொஸ்த கமோ வாங்கிக் குடுங்க சாமி. அதுதான் பெரிய புண்ணியம். உங்க ஊட்டுல  சரஸ்வதி கடாட்ச்சம் தங்கும்” னு சொல்லுவாரு. இல்லாம போனா ஒரு பசுவுக்கு நாலு கத்த பில்லோ, ரண்டு மொரத் தவுடோ ஒரு கிலோ புண்ணாக்கோ வாங்கி குடுங்க சாமி. உங்க ஊட்டுல லட்சுமிதேவியோட ஆசிர்வாதம் இருக்கும். ஏதோ அந்த சீத்தாராமன் உங்குளுக்கு இந்த காரியத்த செய்யிடானு எங்கிட்ட சொல்லறான். நானு செய்யறேன். வேற என்னா சாமி நம்மால ஆவறது?” னு சொல்லுவாரு. இப்புடியே அந்த ஜெயம் சீத்தா ராமர் கையால பலபேத்துக்கும் கால்நடைங்களுக்கும் நல்லது நடந்துச்சி.

 

ஒரு தீபாவளி அண்ணைக்கி எங்கூட்டுக்கு வழக்கமா வந்தாரு நம்ம சீத்தா ராமரு. ”எங்க சீத்தா ராமா உன்னோட கூட்டாளியக் காணோம்? னு எங்காயா கேட்டுச்சி. அதுக்கு அவுரு ”தாயி அந்த ராம பக்தனுக்கு நானு ஒரு நல்ல ராம பக்தையப் பாத்து கல்யாணம் முடிச்சி வச்சிட்டேன் தாயி. காலா காலத்துல செய்யவேண்டிய கடமைய நாமளும் முடிக்க வேணாமா?” னு சிரிச்சினே கேட்டாரு. அப்பறம் எங்கம்மா வழக்கமா தீபாவளி பலகாரமும் சாப்பாடும் போட்டு வேட்டித்த் துண்டும் குடுத்துச்சி. வாங்கினு “தாயி, உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் மங்களம். நானு காசி ராமேஸ்வரம்னு போக பகவாங்கிட்ட இருந்து தபால் வந்திருக்கு. எப்போ வருவனோ? இல்ல பகவானோட சித்தம் எப்புடி இருக்குமோ தெரில தாயி! நீங்க நல்லா இருக்கணும்.” னு சொல்லிப்புட்டுப் போனவருதான்.

 

அப்பறம் அவரு எங்கூரு பக்கமே திரும்பல. எங்க இருக்குராரோ?எப்புடி இருக்குறாரோ?  யாருக்கெல்லாம் என்னமாரி வைத்தியம் பண்ணறாரோ? அந்த சீத்தா ராமனுக்குத் தான் வெளிச்சம்!

0

author

குழல்வேந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *