எஸ். சிவகுமார்
சொந்தவீடு என்றாலே பிரச்சனைதான். எல்லாவற்றையும் நாமே கவனிக்க வேண்டும். இன்னொருவரைக் கைகாட்டிவிட்டு நம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்க முடியாது. ஒருவாரமாக அலைந்துக் கோபாலன் இன்றுதான் சனிக்கிழமை அந்தப் பையனைப் பிடித்தான்.
ஆறுமாதமாக முணுமுணுத்துக் கொண்டிருந்த அவன் மனைவி ராதா, போன வாரம் வெள்ளிக்கிழமை வெடிக்க ஆரம்பித்துவிட்டாள். எண்ணை தேய்த்துக் குளிக்கச் சென்றவள் கதவைச் சரியாக மூடமுடியாமல் தடுமாறினாள். என்னதான் வீட்டில் கணவனும், குழந்தைகளும் மட்டும்தான் என்றாலும், ‘கதவைச் சரியாக மூடாமல் எப்படிக் குளிப்பது ?’ என்று கோபம் வெடித்தது. சரியான சண்டை.
சொந்தவீடு கட்டிக் குடிவந்து ஆறு வருடம் ஆயிற்று. இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆரம்பமாக இப்போது கதவு பிள்ளையார் சுழி போட்டது.
இந்தக் கதவுகள் செய்து பொருத்தியக் கடைக்கு நேரிலே போய்ச் சொல்ல வேண்டிய அவசியம்கூடக் கிடையாது; தொலைபேசியில் சொன்னாலே போதும், உடனே வந்துச் சரிசெய்து விடுவார்கள். ஆனால், சேவைக் கட்டணம், தனி வரி, கூட்டு வரி என்றுப் பெரிய செலவு வைத்துவிடுவார்கள். அதுவே அங்கே வேலை செய்பவனைத் தனிப்பட்ட முறையில் வந்து வேலை பார்க்கச் சொன்னால், ஐம்பதோ, நூறோ கொடுத்தால் போதும் என்றுச் சிக்கன வழி காட்டியவளே ராதாதான்.
அந்தக் கடை வாசலிலேயே தினம் மாலையில் காத்திருந்ததில் இன்றுதான் கோபாலனிடம் சிக்கினான் ராஜன் என்கிற அந்தப் பையன். ராஜனிடம் விஷயத்தைச் சொன்னதும், “ மொதலாளி கைலேயே சொல்லிடுங்க சார் ! தனியா தொழில் பண்றேன்னு தெரிஞ்சிதின்னா என் சீட்டு கிளிஞ்சிடும் “ என்று மறுத்தான்.
கதவுப் பிரச்னை சின்னதுதான் என்றும், தன் நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருகிறது என்றும், அதனால் அவனளவிலேயே முடித்துக் கொடுக்குமாறு திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டதனால் மனமிரங்கி வீட்டுக்கு வந்துக் கதவைச் சரிசெய்ய ஒத்துக் கொண்டான் ராஜன். அந்த மாத பட்ஜெட்டில் நூறு ரூபாய் மானசீகமாக ஒதுக்கிவைத்து, சந்தோஷமாக ராஜனுடன் தன் வீட்டுக்குக் கிளம்பினான் கோபாலன்.
வீட்டுக்குள் நுழையும்போது ஏழு மணி ஆகிவிட்டது. இரவு உணவு சப்பாத்தி-குருமா என்பது வாசலில் நுழையும்போதே மணந்தது. தொலைக் காட்சியில் பக்திப் பாடல் நிகழ்ச்சியில் சிவன் மீனவனாக நொண்டி நொண்டி நடந்துவர, ‘நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண்ணே’ என்று மீனவப்பெண் பார்வதிதேவி பாடிக் கொண்டிருந்தாள். அந்தச் சத்தத்திலும் கோபாலனின் மகளும், மகனும் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். மகள் காயத்ரி பன்னிரெண்டாம் வகுப்பு. மகன் பத்ரி எட்டாம் வகுப்பு.
“ராதா! கதவு ரிப்பேர் செய்ய ஆள் கூட்டிட்டு வந்திட்டேன்” என்று வாசலிலிருந்தே உற்சாகமாகக் குரல் கொடுத்தான் கோபாலன். “வெரி குட்! வெரி குட்! “ என்று உற்சாகமாக வாசற்கதவைத் திறந்த ராதா, “காப்பி குடிக்கிறீங்களா?” என்று மெல்லிய குரலில் ரகசியமாகக் கேட்டாள். “அப்புறம்” என்று ஒற்றை வார்த்தையிலே அவளைக் கம்பீரமாக ஒதுக்கிவிட்டு ராஜனைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றான்.
சமீப நேரத்தில் யாரும் புழங்காததினால் குளியலறை ஈரமில்லாமல் இருந்தது. கையிலிருந்த கருவிப்பெட்டியைக் கீழே வைத்த ராஜன், இரண்டு முறை கதவை மூடித்திறந்துப் பார்த்தான். “கதவு எறங்கிடிச்சு; அவ்வளவுதான். நீங்களே டைட் வச்சிருக்கலாம் சார்.” என்று அனாவசியமாகத் தன்னைக் கூட்டிவந்ததற்கு அலுத்துக்கொண்டு, பெட்டியிலிருந்துப் பெரிய திருப்புளியை எடுத்து கீலில் இருந்த திருகுகளை இறுக்கினான்.
இறுக்கி முடித்தபிறகு மறுபடி மூடித்திறந்துப் பார்த்தான். எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. “சார்! ஹிஞ்சு எல்லாம் துருப்பிடுச்சிருக்கு. எல்லாத்தையும் களட்டிட்டிட்டு வேறதான் போடணும். என்ன செய்யலாம் சொல்லுங்க ” என்றான் ராஜன். “அதுக்கு எவ்ளோ ஆகும்? “ என்று பயந்துகொண்டே கேட்டான் கோபாலன். “மூணு ஹிஞ்சு, ஸ்க்ரூவு நூறு ரூபாப் பக்கம் ஆகும் சார்” என்று பதில் வந்தது. கதவுதான் இப்போது முக்கியம்; பட்ஜெட்டை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான் கோபாலன்.
சரியென்று ஒத்துக் கொண்ட கோபாலனிடம் “சார், கதவுல எல்லா ஸ்க்ரூவிலயும் தேங்காயெண்ணை போட்டு ராத்திரி பூரா நல்லா ஊற வச்சிருங்க. ஒரு நூறு ரூபா குடுத்தீங்கன்னா சாமான் வாங்கிட்டுவந்து நாளை காலைலே எட்டு மணிக்கு வந்து ஒர்க்கை முடிச்சிடறேன்” என்று அவன் முகத்தைப் பார்த்தான் ராஜன்.
தெரியாதவனை நம்பி எப்படி நூறு ரூபாய் கொடுப்பது என்று யோசித்த கோபாலன், “அந்த டூல் பாக்ஸ்-ஐ எதுக்கு இப்ப சொமந்துகிட்டுப் போறே? காலைல இங்கதானே வரப்போறே! இங்கயே வச்சுட்டுப்போயேன்!” என்று கருவிப்பெட்டியைப் பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்துக்கொண்டுப் பணம் கொடுத்தான்.
நூறு ரூபாவோடு ராஜன் புறப்பட, இந்த மாதம் பங்குகொள்ள வேண்டிய மூன்று திருமணங்களுக்காக ஒதுக்கியிருந்த மொய்ப்பணத்தில் இந்த இருநூறு ரூபாயைக் குறைத்துக் கொள்ளவேண்டியதுதான் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டு உடை மாற்றிய பிறகு மற்ற வழக்கமான விஷயங்களுக்குத் திரும்பினான் கோபாலன்.
அடுத்த நாள். ஞாயிற்றுக் கிழமை. கதவைச் சரிசெய்யும் வரை குளியலறைக்குள் யாரும் நுழையவேண்டாம் என்று காலையிலேயே உத்தரவு போட்டுவிட்டான் கோபாலன். தரை ஈரம் ஆகாமல் இருந்தால்தானே நல்லது ! எதிர்பார்த்தபடி சரியாக எட்டுமணிக்கு ராஜன் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததுமே எல்லா வேலைகளும் முடிந்த மாதிரி தெம்பு வந்தது எல்லோருக்கும்.
கதவை நன்றாகத் திறந்துவைத்துவிட்டுத் திருப்புளி எடுத்து மேற்புறமாக இருந்த முதல் கீலில் கதவுச் சட்டத்தின் பக்கம் இருந்த ஒவ்வாரு திருகையும் மெதுவாகத் திருகி எடுத்தான் ராஜன். மூன்று திருகையும் எடுத்ததும் கீல் சட்டத்திலிருந்து விலகியது. கதவு மேலும் கொஞ்சம் இறங்கியது.
வேலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோபாலன், ஓடிவந்துக் கதவைத் தாங்கிப் பிடித்தான்.
“அதல்லாம் கீள உளாது; நான் பாத்துக்கறேன் சார்! “ என்றுத் தன் இடதுபக்கத் தோளைக் கதவுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு ராஜன் அடுத்த கீலில் கைவைத்தான். அதுவும் சமரசமாக ஒத்துழைத்து மூன்று திருகுகள் ராஜனின் காலடியில் வந்து விழுந்தன.
கதவின் பாரம் கொஞ்சம் அழுத்தியதில் தன் இடது தோளைக் கொஞ்சம் சரிசெய்துகொண்டான்.
‘மூன்றாவது கீலையும் சட்டத்திலிருந்து கழற்றி விட்டால், கதவைக் கீழே படுக்க வைத்துப் பழைய கீலை எல்லாம் கதவிலிருந்துக் கழற்றிவிட்டுப் புதிதாய் வாங்கி வந்த மூன்று கீலையும் போட்டுவிடலாம். பிறகு நிறுத்த வைத்துச் சட்டத்தில் திருக அரை மணி நேரம் போதும் அதற்கு. அப்புறம் அப்படியே நண்பனோடு முந்தாநாள் வெளியான ‘தலை’ படத்துக்குப் போய்விடலாம்’ என்று தனக்குள் யோசித்துக் கொண்டே, கீழாக இருந்தக் கடைசிக் கீலின் திருகைக் கழற்ற ஆரம்பித்தான் ராஜன்.
முந்தைய இரவு முழுவதும் எண்ணையில் ஊறியிருந்தாலும், அதிகமாகத் தண்ணீர் பட்டதினாலோ என்னவோ, எத்தனை திருகியும் ஒரு திருகுகூட அசைந்துகொடுக்கவில்லை. “சார், இதுமட்டும் களட்ட வரமாட்டேங்குது. புடிங்கித்தான் எடுக்கணும்” என்றவன், “அந்த சுத்தியல கொஞ்சம் எடுத்துக் குடுங்க சார்! “ என்றுக் கதவிலிருந்து முதுகை நகர்த்தாமல் கோபாலனிடம் விண்ணப்பித்தான்.
திருப்புளியைக் கீலின் மேற்புறத்து இடுக்கில் வைத்து அதன் தலைமேல் கோபாலன் எடுத்துக் கொடுத்தச் சுத்தியலால் மெதுவாகத் தட்டினான் ராஜன். அது அடம் பிடித்தது. “கதவைப் பிடிச்சிக்கவா? “ என்று கோபாலன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ‘வேண்டாம்’ என்று தலையசைத்துவிட்டு இன்னொரு தட்டுத் தட்டினான்.
இதோடு போராடிக் கடைசியில் திரைபடத்துக்குப் போகமுடியாமல் போய்விடுமோ என்று அச்சம் வந்தது ராஜனுக்கு. இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. பதினோரு மணிக் காட்சிக்கு ஏற்கனவே சீட்டு எடுத்தாகிவிட்டது. ‘உன்னை விட்டேனா பார்’ என்று மூன்றாம் முறையாகச் சுத்தியலால் ஓங்கி ஒரு அடி அடித்தான் ராஜன்.
அவனுடைய அச்சம், கோபம், அவசரம் எல்லாம் அவன் கைவழி இறங்கி இம்முறை அடி மிகப் பலமாக விழுந்தது. அந்தக் கீழ்க் கீலோடு அதீத பந்தம் கொண்டிருந்தக் கதவும் அதைவிட்டுப் பிரிய மனமில்லாமல் ராஜனின் தோளை உதைத்துவிட்டுக் குளியலறையின் உட்புறமாகக் கீலோடு எகிறி விழுந்தது. விழுந்த வேகத்தில் தனித்தனிப் பாளங்களாகப் பலகைகளாக உடைந்துத் தெறித்தது.
அதிர்ச்சியிலிருந்துக் கோபாலன் மீள்வதற்குள், “சாரி சார்! “ என்றான் ராஜன்.
“இதையெல்லாம் அரால்டைட் வச்சு ஒட்டி மாட்டிடலாமா? “ என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் கோபாலன்.
“இல்ல சார், இது பழைய மாடல் நாலு பீஸ் கதவு; அதான் புட்டுகிச்சு. இப்பல்லாம் சிங்கிள் பீஸ்ல கதவு வந்திடிச்சு. பேசாம அதுமாதிரி மாத்திடலாம் சார்” என்றுக் கவலைப்படாமல் ‘எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பதுபோல ஆலோசனை சொனான் ராஜன்.
கோபாலனுக்குத் தலை சுற்றியது. மறுபடி பட்ஜெட் போட ஆரம்பித்தான்.
- கதவு
- விடுப்பு
- மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி
- புகழ் பெற்ற ஏழைகள் 15. உலகை உலுக்கி அச்சுறுத்திய ஏழை
- தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28
- நீங்காத நினைவுகள் – 10
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்
- கூரியர்
- மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….
- வேர் மறந்த தளிர்கள் – 17,18,19
- முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18
- சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்
- உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…
- வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்