ஆத்மா
முகவரி முழுமையாகத்தான் இருந்தது.
அருளாளன்,
நம்பர் 199, ஜகன்னாதன் தெரு,
தளவாய் நகர்,
பெசன்ட் நகர் சுடுகாடு எதிரில்,
சென்னை – 600 090.
நான்காவது வரியை படித்துவிட்டு லேசாக பீதியுற்று மேனேஜரிடம் திரும்பினான் ஆத்மா.
‘ஸார், இது… இன்னிக்கே டெலிவெரியா?’
‘ஆமா ஆத்மா.. உன்னைத்தான் அந்த ஏரியாவுல போட்டிருக்கேன்.. பக்கம் தானே.. முடிச்சிடு.. நேரமாகுது’
கூரியர் கடை ஷட்டரை இறக்கி விட்டு வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் மேனேஜர் இருப்பது பேச்சிலேயே தெரிந்தது.
‘அதுக்கில்லை ஸார்.. மணி ஒன்பது ஆகப்போகுது… அதான்..’ இழுத்தான் ஆத்மா.
‘அதெல்லாம் பாத்தா முடியுமா…ஆத்மா??.. கிளம்பு கிளம்பு.. இதை முடிச்சிட்டு வீட்டுக்கு போ’
அவசரம் கிட்டத்தட்ட இரைஞ்சுதலுக்கு இறங்கி வந்திருந்தது பயமுறுத்தியது.
நந்தனம் கலைக் கல்லூரியில் படித்த சரித்திரம் எதற்கும் பெயரவில்லை. அங்கே இங்கே என்று வேலைக்கு அலைந்ததில் ஒரு ஓட்டு வீட்டில் இயங்கிய நிறுவனமொன்று ஆத்மாவிற்கு வேலைக்கு உத்திரவாதம் சொல்லி, அவனிடமிருந்து நான்காயிரம் பிடுங்கிக்கொண்டு, பெயருக்கு கொஞ்சம் ஆங்கிலம் கற்பித்து, இந்த கூரியர் கம்பெனியில் தள்ளிவிட்டிருந்தது.
மேனேஜர் ஒரு எடக்கு நாட்டான். குல தெய்வம் பெயரில் தான் அலுவலகம் ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லி ஆரம்பித்திருக்கிறான். கோளாத்தம்மன் கூரியர் சர்வீஸ்.
எவன் வருவான்!!
அதனால் கஸ்டமர் பிடிக்க கிட்டத்தட்ட தள்ளுமுள்ளு தான். எத்தனை லோ க்ளாஸ் சர்வீஸாக இருந்தாலும் வளைத்துப் போடுவதில் மேனேஜர் கில்லாடி. இறுதியில் கூரியரை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆத்மா போன்ற கடை நிலை ஊழியர்களுடையதுதானே.
அலுவலகத்தின் வாசலைக் கடந்து இரவு ஒன்பது மணியின் வெற்றுச் சாலையை அசுவாரஸ்யமாய்க் கடக்கையில் எதிர்பட்டான் சுந்தரேசன்.
‘என்ன கிளம்பிட்டயா ஆத்மா, வீட்டுக்கு?’
‘ஆங்.. இல்லை.. காட்டுக்கு’
‘என்னது!! காட்டுக்கா?’
‘ஆமா, சுடுகாட்டுக்கு.. பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு..’
‘என்னடா சொல்ற?’
‘பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு பக்கமா ஒரு டெலிவரிடா..’
‘பேஷ்..பேஷ்.. இப்போல்லாம் பேய் பிசாசுங்க கூட கூரியர் பண்ணுதுங்களா? அப்படி எதைடா கூரியர் பண்ணியிருக்கும்?’
முகத்தை படு சீரியஸாக வைத்துக்கொண்டு சுந்தரேசன் கேட்க, ஆத்மாவின் அடிவயிற்றில் கிரைன்டர் உருண்டது.
‘டேய் சுந்தரேசா, உனக்காக எத்தனை பண்ணியிருக்கேன்… எனக்காக இந்த ஒரே ஒரு தடவை, இதை நீ பண்ணிடேன்.. உனக்கு தான் தெரியுமே எனக்கு பேய் பிசாசுன்னா ரொம்ப பயம்னு’ என்றான் ஆத்மா பரிதாபமாக.
‘நீ ஏன் பயப்படணும் ஆத்மா.. நீ தான் ஆத்மாவாச்சே.. என் பாட்டி கூட உன்னைப் பத்தி நான் கொழந்தையா இருக்கச்சே சொல்லிருக்கா?’
‘என்னது? நீ குழந்தையா இருக்கச்சேயே உன் பாட்டி என்னைப் பத்தி சொல்லிருக்காளா? உன்னையே எனக்கு இப்ப கொஞ்ச நாளாதானே தெரியும்?’
‘செத்த பின்னாடி உடம்பிலேருந்து ஆத்மா வெளியேறி வேற ஒரு உடம்புல புகாம நின்னுட்டா அதுதான் பேய் பிசாசெல்லாம்ன்னு என் பாட்டி கூட சொல்லிருக்கா. ஆக, அதெல்லாம் ஆத்மா தானாம்.. அதாவது நீ தானாம்’
‘நெரங்கெட்ட நேரமா கடிக்காத சுந்தரேசா…எனக்கு என்ன வழி?’
‘வழியா!! அதைப் பத்தியெல்லாம் என் பாட்டி ஒண்ணும் சொல்லலையே!!’
‘கடுப்பேத்தாத சுந்து … ஏதாவது சொல்லித் தொலையேன்’
‘என்னத்தை சொல்ல?.. இதோ பாரு.. நான் ஒண்ணும் ப்ரேவ் ஹார்ட் மெல் கிப்சன் கிடையாது.. ஆனா உன்னைப் பாத்தாலும் கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு.. அதனால் கொஞ்சம் ஐடியா வேணும்னா சொல்லித் தரேன்..’
‘சொல்லித்தொலை’
‘தோ பார்.. ஒன்பது மணி ரொம்ப சீக்கிரம்.. இத்தனை நேரத்துக்கு எல்லா பேயும் இரண்டாவது ஜாமத்துல தூங்கிட்டு இருக்கும்ன்னு சொல்வா பாட்டி.. அதுவுமில்லாம, நாய்க்கும் மாட்டுக்கும் பேய் கண்ணுக்கு தெரியுமாம்… பேயை பாத்துட்டா குலைக்கிற நாய் கூட ஒரு மாதிரி ஊளையிடுமாம்… பாட்டி சொல்வா.. பேய்க்கு நாய்ன்னா பயமாம். நாயை பேயால ஒண்ணும் செய்ய முடியாதாம்.. இந்த குழப்பத்தை பயன்படுத்தி சமாளிச்சிடு. நாய் ஒண்ணு கூட துணைக்கு இருக்குறது பெட்டர். அதனால ஒரு நாய் கிடைச்சா விட்றாத’
‘போடாங்க.. இந்த அர்த்த ராத்திரியில நாய்க்கு நான் எங்க போவேன்?’
‘நீ எங்கயும் போக வேண்டாம்.. பெசன்ட் நகர்ல நிறைய வீடுங்கள்ல நாய் இருக்கும்.. அது குலைக்கிதா, ஊளையிடுதா பாரு.. குலைச்சா பரவாயில்லை’
‘ஊளையிட்டா?’
‘நாயை கட்டிப்புடிச்சிக்கோ’
‘ஆங்.. நாய் கடிச்சிட்டா?’
‘பேய் கிட்ட அடி வாங்கி சாகுறதுக்கு, நாய்கிட்ட கடி வாங்கி பொழைக்கிறது பெட்டர் ஆத்மா…’
ஆத்மா, தோளில் கைபையுடன் குறிப்பிட்ட அந்த பெசன்ட் நகர் தெருவில் நுழைந்த போது தெருவே அமைதியாக இருந்தது. எந்த வீட்டிலும் நாய் குரைக்கும் சப்தம் கேட்கவில்லை. நாய் குரைக்காமல் இருப்பது குறித்து சுந்தரேசன் ஏதும் சொன்னானா என்று மனதிற்குள்ளாக நினைவூட்டிப் பார்த்து புருவம் சுருக்கினான் ஆத்மா. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஏதோ ஒரு தனித்துவ நரம்பின் இருப்பை உணர முடிந்த கணத்தில், பதற்றம் பற்றிக்கொண்டது. இதயத்துடிப்பை துல்லியமாக கேட்க முடிந்தது. இந்த அர்த்த ராத்திரியில், பயமுருத்தும் மயானத்திற்கு அருகில், இருந்து இருந்து சுந்தரேசன் தந்த ஒரே உருப்படியான உதவி ஒரு நாயின் துணை! இப்போது அது கூட இல்லை என்றாகிவிட்டபோது ஆத்மாவிற்கு உள்ளுக்குள் உதறலே வந்துவிட்டது.
மயான கட்டிடத்தின் கதவுகள் ஒருக்களித்து சார்த்தப்பட்டிருந்தன. அதன் மதில் சுவர்கள் ஓங்கி உயர்ந்து லேசான பயம் தந்தது.
கூரியரில் இருந்த முகவரி கனகச்சிதமாக எரி மயான கட்டிடத்தின் எதிரால் சற்று தள்ளி அமைந்திருந்தது. மோசமான விஷயம் என்னவெனில், அந்த வீட்டை அடைய மின்மயான கட்டிடத்தை கடக்கவே வேண்டியிருந்தது.
ஆத்மா அடி மேல் அடி எடுத்து வைத்தான். மெல்ல மயான கட்டிடத்தின் பிரதான வாசலை நெருங்கினான். முகத்தை தாழ்த்தி நிலத்தை மத்திமமாக பார்த்தபடி அவசரமாக இரண்டு மூன்று அடி எடுத்து வைத்து வாசலைக் கடந்தவன், ஏதோ ஒரு பிரஞை ஏற்பட்டு, காதுகளின் பின்னால் ஏதோ ஒர் உருவத்தை தொடர முயன்று அவசரமாக திரும்ப, யாரும் இல்லாமல், அமைதியான காலியான தெரு போக்கு காட்டியது.
ஏமாற்றத்துடன் திரும்பி மீண்டும் அடி மேல் அடி எடுத்து வைத்து குறிப்பிட்ட அந்த வீட்டின் வாசலை அடைந்தான் ஆத்மா. அந்த வீட்டின் கதவுகள் சார்த்தப்பட்டிருந்தது. வாசலில் பொறுப்பாக ஒரு மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பக்கவாட்டின் ஜன்னல்களினூடே ஹாலில் விளக்கெரிவதை பார்க்கவும், சன்னமாக தொலைக்காட்சி குரல்களை கேட்கவும் முடிந்தது. தெருவே என்ன நடக்கிறதென அவதானிக்கும் பொருட்டு பேரமைதி காத்தபடி அவனையே உற்று கவனிப்பது போன்ற பிரஞை ஏற்பட்டது.
ஆத்மா மனத்தின் சந்து பொந்துகளில் மிச்சமிருந்து கொஞ்ச நஞ்ச தைரியங்களை திரட்டிக்கொண்டு, வாசலில் கட்டங்கள் கட்டிய இரும்பு கேட்டில் தேட, பக்கவாட்டில் அழைப்பு மணி இருப்பது தெரிந்தது. ஆத்மா, மெல்ல தன் வலது கையை உயர்த்தி, அழைப்பு மணியை தழுவ நீளுகையில், முதுகின் பின்னால் ஏதோ நிழலாட, அதிர்ந்து திரும்பினான் ஆத்மா.
தூரத்து தெருவிளக்கின் பின்னனியில் தெரிந்த அந்த நிழல் மெல்ல மெல்ல பெரிதாகிக் கொண்டே வர, இதயத்திற்கு வெகு அருகாமையில் ஏதோவொரு ரத்த நாளம் மக்கர் செய்வது போல் உணர்ந்தான் ஆத்மா. அந்த உருவம் கிட்டத்தில் நெருங்க நெருங்க, இதயத்துடிப்பு பலமாக ஆக, கிட்டத்தில் அது ஒரு நாய் என்று கண்டுகொண்டான் ஆத்மா. ஒடுங்கிய உடலாய், முகம் கழுத்து பிடறி முதுகில் என எங்கிலும் சொறி வந்து பார்க்கவே அசூயையாக இருந்தாலும், அந்த நாய். ஆத்மாவிற்கு அந்த நொடியில், ஆபத்மாந்தவனாகத்தான் பட்டது. தனது நீண்ட நாக்கை வெளியே நீட்டி, தனது கீழ்த்தாடை பற்கள் மீது விலாவி வாயை அகலத் திறந்து சாகசமாக கொட்டாவி விட்டது அந்த நாய்.
சுந்தரேசன் சொன்னது போல் அல்லாமல், அது குலைக்காமல் நின்றதில் ஆறுதலாக உணர்ந்தான் ஆத்மா. யார் வீட்டு நாய் என்று தெரியவில்லை!.. ஆபத்மாந்தவனாக திடீரென்று தோன்றி நம்பிக்கை அளித்துவிட்டு, உடனே எங்கேனும் ஓடிப் போய் விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்து மீண்டும் பயம் வந்தது ஆத்மாவிற்கு. அந்த நாயின் கழுத்தில் சங்கிலியோ, கயிறோ இருக்கவில்லை எனும்போது கொண்டு வந்திருந்த கூரியரை தந்துவிட்டு போகும் வரை அந்த நாய் எங்கும் ஓடிப்போகாமல் அங்கேயே நிற்க வேண்டுமே என்று தோன்றி மேற்கொண்டு தைரியப்பட்டு அவன் தனது விரல்களால் அழைப்பு மணியை ஒற்றினான். தொடர்ந்து தொலைக்காட்சியின் சத்தம் சன்னமாக, கதவின் கீழே நிழலாடுவது தெரிந்த நொடிகளில், ஆத்மாவின் முதுகின் பின்னால் கேட்டது அந்த ஒலி.
‘ஒஓஉ உ உ ஊ ஊ ஊ ‘
அதிர்ந்து திரும்பினான் ஆத்மா. உருண்ட விழிகளுடன், அந்த நாய் வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்க, அதன் ஊளைச்சத்தம் அந்த தெருவின் அமைதியை கலைத்தது.
‘நாய்க்கும் மாட்டுக்கும் பேய் கண்ணுக்கு தெரியுமாம்… பேயை பாத்துட்டா குலைக்கிற நாய் கூட ஒரு மாதிரி ஊளையிடுமாம்…’ என்று சுந்தரேசனின் பாட்டி இப்போது ஆத்மாவிற்கும் சொன்னாள்.
துரதிருஷ்டவசமான அந்த சூழல் அமானுஷயமாகிக் கொண்டிருப்பதாகப் பட்டது ஆத்மாவிற்கு. யாரும் துணைக்கில்லாமல் தனியாக மாட்டிக்கொண்டது பலவீனமாகத் தோன்றிய நொடிகளில், அந்த வீட்டின் கதவு திறக்கப்பட, அழைப்பு மணியை அழுத்திய பிறகு ஊளையிடத் துவங்கிய நாயையும், கதவு திறப்பதையும், உள்ளுக்குள் அபத்தமாக தாமதமாக தொடர்புபடுத்தி ஆத்மா, கதவின் பக்கம் அதிர்ச்சியுடன் திரும்ப….
இந்த இடத்தில் கதையின் வாசகர்களாகிய உங்களுக்கெல்லாம், கதாசிரியனாகிய ஆத்மா என்கிற நான் சில விஷயங்கள் சொல்லிக்கொள்ள விழைகிறேன். செளகர்யமாக இந்தக் கதை இதுவரை பயணப்பட்டு வந்துவிட்டது. இங்கிருந்து, இந்தக் கதையை, எப்படியெல்லாம் முடிக்கலாம்? அழைப்பு மணி ஒலி கேட்டு ஒரு பெரியவர் உள்ளிருந்து வந்தார், அவர் கால்கள் தரையில் இருக்கவில்லை என்று முடிக்கலாமா? கதவு தானாக திறக்க, யாரும் கண்ணுக்கு புலப்படாமல், வெறும் குரலாக ‘யாரு வேணும்?’ என்று மட்டும் கேட்டது என்று முடிக்கலாமா? முடிக்கலாம். இப்படியெல்லாம் கூட முடிக்கலாம் தான். ஆனால், அதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் நான் அப்படி ஆசாமி இல்லை. இந்தக் கதையை மேற்கொண்டு பின்வருமாறு தொடர விரும்புகிறேன்.
அழைப்பு மணி ஒலி கேட்டு ஒரு பெரியவர் உள்ளிருந்து கதவு திறந்து வெளியே வந்தார்.
ஆத்மா அவரின் கால்களை ஆர்வமுடன் தேடினான். அவரின் பாதங்கள் தரையில் அழுத்தமாக பதிந்திருப்பதை ஊர்ஜிதம் செய்த போது, ‘அப்பாடா!!’ என்று உள்ளுக்குள் நிம்மதி பரவியது.
ஆத்மா தோள்பையில் கைவிட்டு கூரியரை பேனாவுடன் எடுத்து நீட்ட, அந்த பெரியவர் வாங்கிக் கொண்டு, ஆத்மா நீட்டிய காகிதத்தில் தனது கையெழுத்தை கிறுக்கிவிட்டு பேனாவை ஆத்மாவின் கைகளில் செருகிவிட்டு நிமிர்ந்த அந்த பெரியவரிடம் வாய் திறந்தான் ஆத்மா.
‘ஏன் சார், இந்த கத்து கத்துதே இது உங்க வீட்டு நாயா?’
‘எந்த நாய்?’
‘இதோ, ஊளையிடுதே இந்த நாய்ங்க?’
‘நாயா? இந்த தெருவிலே நாயே கிடையாதேங்க. இரண்டு நாள் முன்னவரை ஒண்ணு இருந்திச்சு. வீட்டுல என்ன மீந்தாலும் அதுக்கு போடுவேன்.. நல்லா திண்ணும். காவல் காக்கும். சொறி புடிச்சு போச்சு. தெருப்பசங்கதான் கல்லால அடிச்சே கொன்னாங்க. இந்த மயானத்துலதான் ஓரமாய் பொதைச்சது. தெருவே வெறிச்சோடிப்போய் கிடக்கு. நீங்க என்னடான்ன நாய் குளைக்கிதுங்கறீங்க?’ என்றார் அந்த பெரியவர்.
ஆத்மா, அதிர்ச்சியுடன் அந்த நாயை திரும்பிப் பார்க்க, அந்த நாய் இப்போது அவனையே உற்று பார்த்தபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
– ஆத்மா (writeraathma@gmail.com)
- கதவு
- விடுப்பு
- மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி
- புகழ் பெற்ற ஏழைகள் 15. உலகை உலுக்கி அச்சுறுத்திய ஏழை
- தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28
- நீங்காத நினைவுகள் – 10
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்
- கூரியர்
- மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….
- வேர் மறந்த தளிர்கள் – 17,18,19
- முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18
- சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்
- உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…
- வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்