கவிதைகள்

This entry is part 24 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

ஜென் பாதை

 

அந்திப் பொழுது

பறவைகள் கூடடையும்

விடியும் வரை

சுவர்க்கோழி சப்தம்

 

முன்பனி

கம்பளி ஆடைக்குள்

நானும், நிலாவும்

 

தண்ணீருக்கு வெளியே

தத்தளிக்கும் மீன்

சில நாழிகைக்குள்

குழம்பில் மிதக்கும்

 

கருக்கல்

இருளைக் கிழிக்கும்

பரிதியின் கிரணம்

 

சிதறிய நீர்த்துளிகள்

ஒவ்வொன்றிலும்

பரிதியின் பிம்பம்

 

கொட்டும் மழை

வெள்ள நீரில்

மிதக்கும் பிணம்

 

மேகத்தை பின்தொடர்ந்தேன்

சிறிது தொலைவைக் கடந்ததும்

மேகம் கரைந்தது

வானம் எஞ்சியது

 

கொட்டிக் கிடக்கும்

சில்லறைகளாய்

வானத்து நட்சத்திரங்கள்

 

மலைகள் நகர்கிறது

மழை வான் நோக்கிப்

பெய்கிறது

என்றாலும் இயற்கை

இரவையும், பகலையும்

தனித்து விட்டிருக்கிறது

 

 

 

 

 

ஜென் மலர்

 

குடையை

துளையாக்கிவிட்டுத்தான்

மழை நின்று போனது

 

வேப்ப மரத்தில்

குடிகொண்டிருக்கும்

அம்மனை சாக்காக வைத்து

சில பேர் பிழைப்பு நடக்கிறது

 

தாழப் பறக்கும்

பறவையின் மீது விழும்

உயரப் பறக்கும்

பறவையின் நிழல்

 

மூடுபனி

நண்பகல்

காரிருள்

 

விஷம் வேண்டாம்

கொல்வதற்கு

நாவிலிருந்து வெளிப்படும்

வார்த்தை போதும்

 

சோளக் கொல்லை பொம்மையின்

வைக்கோல் தொப்பியில்

துளித்துளியாக பனித்துளி

 

பயணங்கள்

நித்ய பயணிகள்

இலக்கைச் சென்றடையாமல்

அலையும் மேகங்கள்

 

நீண்ட துாரப் பயணங்கள்

வெளிப்படுத்தின

சில கவிதைகள்

சில கண்ணீர்த்துளிகள்

 

பின்னிரவில்

திருடன் உள்நுழைந்தான்

களவாடிச் செல்வதற்கு

காலணா கூட என்னிடம் இல்லை

 

 

 

 

 

ஜென் வாசனை

 

பூவின் சுகந்தம்

எவருடைய நாசியென்று

பேதம் பார்ப்பதில்லை

 

நிலா வெளிச்சம்

கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்

எவரோ விடை பெறுகிறார்

 

தேடி அலைந்தேன்

பகலின் விளிம்பையும்

இரவின் விளிம்பையும்

கண்டடைந்தவர் மீண்டார்

என்று சரித்திரம் பகரவில்லை

 

மரத்தடியில்

கண் அயர்ந்தேன்

காற்றில் பூக்கள் விழுந்தது

அது விடைபெறுவது

காதில் விழுந்தது

 

குளத்தில்

வழுக்கி விழுந்தேன்

நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும்

போது கூட

உன் ஞாபகம்

 

மனிதர்களுக்குத் தெரியாமல்

செய்யும் தவறுகளை

கடவுள் கண்டுபிடித்து விடுகிறார்

 

சில்வண்டுகள்

பூவை நாடும்

இரவு

கடவுள் மனிதர்களுக்கு

அளித்த வரப்பிரசாதம்

 

சிற்பியின் கண்களுக்கு

கல்லில் ஒளிந்திருக்கும்

சிலை தெரியும்

 

கல்லாக இருப்பவள்

எவரின் காலடிபட்டு

மீண்டும் பெண்ணாவாள்

 

காலம்

திருடிப் போகாமல்

இருந்திருந்தால்

கடப்பதற்கு இன்னும்

தொலைவு இருந்திருக்கும்.

 

Series Navigationஉலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்குவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -13 மூன்று அங்க நாடகம்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *