“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? தெரியவில்லை. (படிப்பது குறைந்துகொண்டு வருவதாய்ச் சொல்லப்படும் இந்நாளில் தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியே அநேகருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி இருக்க, சிலஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட தாமரை மணாளனைப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறதாம்?) அற்புதமான அந்த எழுத்தாளர் பற்றி மற்ற எழுத்தாளர்களே பேசாத நிலையில் பிறரைப் பற்றி என்ன சொல்ல!
1968 இன் இறுதி (என்று நினைவு) யில் அவரது அறிமுகம எனக்குக் கிடைத்தது. திருநெல்வேலிக்காரரான தாமரை மணாளன் ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணியில் சேர்ந்திருந்த புதிது. ஏதோ வேலையாய் எங்கள் அலுவலகத்துக்கு ஒரு நாள் அவர் வந்திருந்தார். அப்போது அமரர் குயிலி ராஜேஸ்வரி எங்கள் அலுவலகத்தில் வரவேற்பாளராய்ப் பணி புரிந்து கொண்டிருந்தார். குயிலி என்னைக் கூப்பிட்டு அனுப்பி அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரது அந்த வருகைக்குப் பிறகு எங்களிடையே நட்பு மலர்ந்தது.
ஆனந்த விகடன் அலுவலகம் எங்கள் அலுவலகத்துக்கு அருகில் இருந்ததால், சாப்பாட்டு இடைவேளையின் போது சில நாள்களில் அவர் எங்கள் அலுவலகம் வருவார். வரவேற்பறையில் அமர்ந்து மூவரும் பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அரசியல், இலக்கியம், சமுதாயம் என்று பல்வேறு தலைப்புகள் எங்கள் உரையாடலில் அடிபடும். பெண்களின் பிரச்சினைகள் பற்றியும் பேசுவோம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை, பெண்கள் பிரச்சினைகள் பற்றிய கருத்துகள் தாமரை மணாளனிடம் நிறைய அளவுக்கு இருந்தன. ஆண்களைப் பற்றி நான் கூறும் கருத்துகளை யெல்லாம், புன்சிரிப்புடன் செவிமடுத்தவாறு இருப்பார். அவற்றைப் பெருமளவு ஒப்புக்கொண்ட இசைவு அவர் முகத்தில் தெரியும்.
எங்களிடையே இவ்வாறு அறிமுகமாகிச் சில நாள்களுக்குப் பிறகு, “ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘அரியும் சிவனும் ஒண்ணு’ எனும் உங்கள் அறிமுகக் குறுநாவல் பற்றி மணியன் சார் என்னிடம் கூறினார். அதைப் படிக்கச் சொல்லி எடுத்தும் கொடுத்தார். சர்ச்சைக்குரிய கதை!” என்று அதை விமர்சித்த பின், “உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்லலாமா?” என்று வினவினார்.
“தாராளாமாக!”
“உங்கள் குறுநாவலில் உரைடயாடல்கள் நிறைய இருந்தன. இந்தக் கதைக்கு அவை பொருத்தமாகத்தான் இருந்தன. உண்மையாகவே சொல்லுகிறேன். ஆனால் இனி எழுதும் கதைகளில் கதாபாத்திரங்களை அடிக்கடி பேச வைக்காதீர்கள். உரைநடை அதிகம் இருக்கட்டும்.”
“உங்கள் யோசனையை மனத்தில் வைத்துக் கொள்ளுவேன்,” என்றேன்.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல், தாமரைமணாளன் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். திருநெல்வேலிக்காரராதலால் அந்த மாவட்ட வட்டார வழக்கு அவருக்கு மிகவும் அத்துப்படி. ஆனால், அதை விடவும் சிறப்பான அம்சம் என்னவெனில், அவர் நடையில் நக்கல், கிண்டல் ஆகியன ததும்பி வழியும் என்பதுதான். படிப்பவர் முகத்தில் புன்சிரிப்புத் தோன்றாமல் இருக்காது. மிகவும் மாறுபாடான அவரது எழுத்து நடை பிற எழுத்தாளர்களால் எளிதில் பின்பற்ற்ப்பட முடியாத அரிய நடையாகும். அவருக்கு நியாயமாய்க் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவருடைய படைப்புகளை யெல்லாம் நாட்டுடமையாக்கக் கோரி அவர் காலமானதன் பிறகு முந்தைய முதல்வருக்கு – அவரது வீட்டு முகவரிக்கு – நான் எழுதிய கடிதங்கள் கவனிக்கப்பட்டனவா இல்லையா என்பது தெரியவில்லை. கவனிக்கப்பட்டு, ஆனால் அதைச் செய்ய முடியாதபடி, வேறு ஏதேனும் சட்டச் சிக்கல் ஏற்பட்டிருந்திருக்க்க் கூடுமோ என்னவோ!
ஒரு முறை எங்கள் சந்திப்பின் போது ஆண்-பெண் காதல் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னார்: “பெண்களுக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம். அவர்களுக்குக் காதலிக்கவே தெரியாது. எவனாவது வந்து தனது காதலைச் சொல்லி மணந்து கொள்ளக் கேட்டால் வெட்கப்பட்டுத் தலையாட்டி அதை எதிரொலித்து ஏற்க மட்டுமே அவர்களுக்குத் தெரியும்!”
“நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். காதல் வசப்பட்டாலும், ஒரு பெண் தானாக ஆணை முந்திக்கொண்டு அதை வெளிப்படுத்தும் மரபு நம்மிடம் இல்லை. ஏன்? பெரும்பாலான நாடுகளில் இல்லை. அதனால், பெண்களிடம் நாம் ஏற்படுத்தியுள்ள கூச்சம் அவர்களது இயல்பாகவே மாறி, ஒரு தயக்கத்தில் முடிந்திருக்கக்கூடும்!” என்று நான் மறுத்துச் சொன்னதைக் குயிலி ஆதரித்தார்.
“சரி, அப்படியே இருக்கட்டும். உங்கள் கூற்றை நான் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளுகிறேன். காதல் எனும் உணர்வின் வெளிப்பாட்டைப் பற்றி மட்டுமே நான் இவ்வாறு சொல்லவில்லை. பெண்களும் காதலிப்பார்கள் என்றாலும் அவர்களின் காதலில் ஆண்களின் காதலில் இருக்கும் ஆழமோ தீவிரமோ இருப்பதில்லை என்றுதான் சொல்ல வந்தேன்,” என்று தாமரை மணாளன் தமது நிலைப்பாட்டை விளக்கினார்.
நான் தொடர்ந்தேன்: “ சமீபத்தில் ஓர் இளம் பெண்ணின் கொலை பேருந்து ஒன்றில் நடந்ததே, ஞாபகம் இருக்கிறதா? அதன் தாக்கத்திலிருந்து மெட்ராஸ் இன்னும் விடுபடவில்லை. அவள் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தினுள் ஏறி அவள் வயிற்றினுள் அவள் காதலன் செருகிய கத்தி 4 அங்குல ஆழத்துக்குக் குத்தி உட்சென்றிருந்ததாம். அந்த ஆழத்தையா காதலின் ஆழம் என்கிறீர்கள்?” – இவ்வாறு நான் வெடித்த்தும் அவரது முகம் இருண்டது.
அவளைக் குத்திக் கொலைசெய்த பின் அந்த இளைஞன் தப்பி ஓட முயலவில்லை. காவல்துறைக்குச் சென்று சரண் அடைந்தான் எனும் செய்தி உடனே பரவிற்று. இருவரும் மனங்கள் இணைந்து ஒருவரை யொருவர் காதலித்தவர்களாம்! அந்தப் பெண் உயர்ச்சாதியைச் சேர்ந்தவள். அவனோ (அப்போது அழைக்கப்பட்டபடி) ஓர் அரிசனன். அவர்களது காதல் தெரியவந்த பின், பெண்ணின் பெற்றோர் அதை ஏற்க மறுத்துவிட்டனராம். மூத்த மகளான அவள் ‘கீழ்ச்சாதி’ இளைஞனை மணந்தால், திருமண வயதில் இருந்த அவள் தங்கைகளுக்குத் திருமணமே ஆகாதாம். எனவே அவள் தன் காதலை விட்டுவிட வேண்டும் என்று அவள் பெற்றோர் விட்ட் கண்ணீரில் அவள் கரைந்து போய்க் காதலனிடம் சேதியைச் சொல்லித் தன்னை விட்டு விடக் கெஞ்சி யிருந்திருக்கிறாள். (இன்றே அந்நிலைதானென்னும் போது, 40 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை.) அவனோ அவளுக்குத் தன் மேல் அன்பில்லை என்று வாதாடியிருந்திருக்கிறான். அவர்கள் சந்திப்பு அவள் ஒத்துழைக்காததால் நின்று போனது. அதன் பின் அவள் திருமணம் நிச்சயமானது தெரியவந்ததும் அவன் அவளைக் கொன்று விட்டான்.
“மிஸ்டர் தாமரை மணாளன்! தனக்குக் கிடைக்காத காதலி வேறு எவனுக்கும் கிடைக்கக் கூடாது என்கிற நினைப்புக்குப் பெயர்தான் காதலா! அவள் உயிரைப் பறித்த அந்தக் கத்திக்குத்துதான் அந்தக் காதலின் ஆழமா!” என்று என்னிடமிருந்து மீண்டும் வெடித்துச் சிதறிய கேள்விக்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
“என்ன, பதிலைக் காணோம்? காதலியைக் கொல்ல முற்படுவதுதான் காதலின் அடையாளமா!”
“அந்த அளவுக்கு அவன் அவளை வெறித்தனமாய் நேசித்திருக்கிறான் என்றுதான் கொள்ள வேண்டும்.”
“எந்த அளவுக்கு? அவள் வேறு எவனுக்கும் கிடைத்துவிடக் கூடாது என்று போறாமை கொள்ளுகிற அளவுக்கு. அது காதல் இல்லை, மிஸ்டர் தாமரை மணாளன்! வெறி மட்டுமே அவனுள் இருந்தது. காதல் இல்லை. எனவே ‘வெறித்தனமாய்’ என்று நீங்கள் சொன்னது மட்டுமே சரி. பெண்களின் காதலில் ஆழம் இருக்காது என்கிறீர்கள். இன்னொன்று சொல்லட்டுமா? இந்நாளில் திருமணம் செய்துகொள்ளாமலே பல பெண்கள் ஒற்றையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அது எதனால் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?”
“நீங்களே சொல்லுங்கள். எதனால் என்கிறீர்கள்?”
“திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் பெண்களில் பெரும்பாலோரைப் பொறுத்த மட்டில், அவர்கள் தாங்கள் காதலித்தவனை மணந்துகொள்ள முடியாமல் போன நிலைதான் காரணம், மிஸ்டர் தாமரை மணாளன்! வேறு சிலர் ஏழைமை, பெற்றோர் இல்லாமை போன்ற காரணங்களால் அப்படி இருக்க நேர்ந்திருக்கக் கூடும். ஆனால், காதல் நிறைவேறாத காரணத்துக்காக ஆயுள் முச்சூடும் பிரும்மசாரிகளாக இருந்துவிடும் ஆணகளின் எண்ணிக்கை மிக, மிக அற்பம்! இல்லையா?”
தாமரை மணாளனின் முகம் மேலும் இருண்டுபோனது. பெருமூச்செறிந்த பின், “நீங்கள் சொல்லுவது சரிதான். இந்தக் கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்ததில்லை! காதலில் தோற்றுப்போன பெண்களில் பலர் திருமணம் செய்துகொள்ளுவதில்லைதான். அயாம் சாரி!” என்றார்.
“காதலில் தோற்றுப்போனவர்கள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் காதலில் ஜெயித்தவர்கள், மிஸ்டர் தாமரை மணாளன்!”
“என்னது!”
“ஆமாம். யோசியுங்கள், மிஸ்டர் தாமரை மணாளன்! காரணம் எதுவாக இருந்தாலும், காதலித்த பெண்ணை விடுத்து, வேறு பெண்ணுக்குத் தாலி கட்டினவன்தான் காதலில் தோற்றுப் போனவன்! காதலித்தவனுக்கல்லாது வேறு எவனுக்கும் தாலிக்குக் கழுத்தை நீட்டாதவள்தான் காதலில் வெற்றி பெற்றவள்!”
தாமரை மணாளன் விழிகளை மலர்த்தி என்னை நோக்கிய பின், “கரெக்ட்!” என்று என்னோடு ஒத்துப் போனார்.
சில நாள்கள் கழித்து அவர் ஆனந்த விகடனிலிருந்து விலகி, அமரர் மணியன் தொடங்கிய “இதயம் பேசுகிறது” வார இதழின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இலக்கியப் பணிக்காக நான் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபின் எங்கள் சந்திப்பு நின்று போயிற்று.
சில ஆண்டுகள் கழித்து, அதனின்றும் விலகி, வாசுகி எனும் மாதமிருமுறை (அல்லது மாத இதழா? நினைவில்லை) இதழில் ஆசிரியர் பொறுப்பேற்றார். அதில் அவர் எழுதி வந்த கடைசிப்பக்கக் கட்டுரை சுவையானது. அதன் ஓர் இதழில் அவர் பின் வரும் கருத்தை அந்தச் சிறு கட்டுரையின் இடையே தெரிவித்திருந்தார்: அதில் உண்மையான வேதனை ததும்பியது.
“ஒரு பசுமாட்டை ஒரு காளைமாடு வெட்கங்கெட்ட முறையில் துரத்திக்கொண்டு ஓடியதைக் காண நேர்ந்தது. அதன் விருப்பத்துக்கு இணங்க விரும்பாத பசுமாடு அதனிடமிருந்து தப்புவதற்காக நாலு கால் பாய்ச்சலில் தலை தெறிக்க ஓடியது. அதைக் கண்ட்தும், மனித ஆண்களும் இந்தக் காளைமாட்டைப் போல்தானே வெட்கங்கெட்டுப் போய், விருப்பமற்ற பெண்களைத் துரத்திக் கற்பழிக்கிறார்கள் என்று தோன்றியது. மனித இனத்தில் மட்டுமல்லாது, பிற எல்லா இனங்களிலும் பெண்பாலரின் நிலை இதுதான் போலும்!”
உண்மைதான் தாமரை மணாளன்! இன்றைத் தேதியில் நீங்கள் உயிருடன் இருநதால் இது போன்றவை பற்றி நிறையவே எழுதுவீர்கள்.
இலக்கிய உலகம் கொடுத்துவைக்கவில்லை! (அவருடைய படைப்புகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு இதை எழுதவில்லை. படித்தவை மிகக் கொஞ்சமே. அவற்றின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கருத்து வெளியிடப்படுகிறது. படிக்காதவை அதிகம். எனவே இக்கட்டுரை அவரை முழுமையாக விமர்சிப்பதாகாது. நேயர்கள் இதனை முழுமையான விமர்சனமாய்க் கொள்ள வேண்டாம்.)`
jothigirija@live.com
- 1. சாகசச் செயல் வீரன்
- தீவு
- புகழ் பெற்ற ஏழைகள் -18
- ஐயனார் கோயில் குதிரை வீரன்
- மெங்கின் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 13
- சூறாவளி ( தொடர்ச்சி )
- மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்
- இன்ப அதிர்ச்சி
- நீங்காத நினைவுகள் 13
- சதக்கா
- கஃபாவில் கேட்ட துஆ
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31
- அசல் துக்ளக் இதுதானோ?
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’
- புது ரூபாய் நோட்டு
- தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21
- குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -35 என்னைப் பற்றிய பாடல் – 28 (Song of Myself) எனது காதலிகள் .. !
- வணக்கம் அநிருத்
- விக்ரமாதித்யன் கவிதைகள் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை முன் வைத்து..
- உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு
- கவிதைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -13 மூன்று அங்க நாடகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! மிகப் பெரும் புதிய வால்மீன் உற்பத்தி வளையத் தட்டு ஏற்பாடு கண்டுபிடிப்பு
- வேர் மறந்த தளிர்கள் – 23-24-25