புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ -18

This entry is part 3 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

18. உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை​செய்த ஏ​ழை…

என்னங்க த​லையப் பிடிச்சுக்கிட்​டே வர்ரீங்க…..என்னங்க ​பேசாம ஒக்காந்துட்டீங்க… என்ன குழப்பமாப் பாக்குறீங்க…. குழம்பாதீங்க… ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்கு உரிய பதில நா​னே ​சொல்லிர்​ரேன்… அவருதாங்க ஹமில்டன் நாகி. ஆமாங்க அவருதான் உலகின் முதல் இருதய மாற்று அறு​வை சிகிச்​சை ​செய்தவர்…என்ன குழப்பறீங்கன்னு ​சொல்றீங்களா? என்னது கிறிஸ்டியான் பெர்னாடின் என்பவர்தான் உலகின் முதல் இருதய மாற்று அறு​வைச் சிகிச்​சை ​செய்தவர்னு நி​னைக்கிறீங்க…நீங்க ​சொல்றது சரிதான். ஆனா கிறிஸ்டியான் பெர்னாடி​னே இந்த அறு​வை சிகிச்​சைய நான் ​செய்யல..அதச் ​செஞ்சது ஹமில்டன் நாகி என்று அவ​ரே வாக்குமூலம் ​கொடுத்தார்.

ஏன் உண்​மைய ம​றைச்சுச் ​சொன்னாங்கன்னு பாக்குறீங்களா? அதுதான் ​கொடு​மை. காரணம் என்ன ​தெரியுமா? ஹமில்டன் நாகி கருப்பர் இனத்துல பிறந்ததுதான் அவர் ​செஞ்ச தப்பு. அந்தக் காலத்தில நிற ​வேற்று​மை த​லைவிரிச்சு உலகத்​தைப் பிடிச்சு ஆட்டுச்சு. ​கருப்பர்கள், ​​வெள்​ளையர்கள் என நிற ​வேற்று​மை பார்த்து மனிதர்க​ளை இழிவுபடுத்தினார்கள். தென்னாப்பிரிக்காவுல இந்நிறக் ​கொடு​மை மிகவும் உச்சகட்டத்துல இருந்தது. அதனாலதான் கருப்பரான ஹமில்டன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வெள்ளை இனப்பெண் டெனிஸ் டார்வா​லைத் ​தொடமுடியாத நி​லை ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவம​னை நிர்வாகம் இரகசியமாக அவ​ரை அறு​வை அரங்கிற்கு அ​ழைத்துச் ​சென்று அறு​வைச் சிகிச்சை​யை ​வெற்றிகரமாக முடித்தனர். இச்​செய்தி​யை ​வெளியில் கூறினால் மருத்துவம​னைக்கும் மற்றவர்களுக்கும் அவமானமும் ​பேரிழப்பும் ஏற்படும் என்று கருதி ​வெள்​ளை இனத்தவரான கிறிஸ்டியான் பெர்னாடினின் ​பெய​ரைக் கூறினர்.

இந்த அறு​வைச் சிகிச்​சை​யை கிறிஸ்டியான் பெர்னாடினும் ஹமில்டனும் இ​ணைந்​தே ​செய்தனர். உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவர் கிறிஸ்டியான் பெர்னாடின் தலைமையில் நடைபெற்றது. டெனிஸின் இருதயத்தை ஹமில்டன் லாவகமாக அறுத்து எடுக்க அதனை லூயிஸ் வஸ்கான்ஷி என்பவருக்கு பொருத்தினார் கிறிஸ்டியான் பெர்னாட். உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப்போக அதில் ஹமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே அந்த மருத்துவம​னை நிர்வாகம் ஹமில்டனை அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தது என்பது மன​தை உறுத்தும் நிகழ்ச்சியாகும்.

உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹமில்டன். அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்கு துப்புறவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறி மருத்துவமனை நிர்வாகம் சமாளித்தது. திட்டமிட்டு ஹமில்டனின் சாத​னை இருட்டடிப்பு ​செய்யப்பட்டது. ஆனால் கிறிஸ்டியான் பெர்னாடிற்கு மனச்சான்று உறுத்திக் ​கொண்​டே இருந்தது. அவர் ​சொல்ல முற்பட்ட​போதும் முடியாது ​போனது.

இருப்பினும் இந்த உண்​மை​யை இறப்பதற்குள் எப்படியாவது கூறிவிட ​வேண்டும் என்று நி​னைத்துக் ​கொண்​டே இருந்தார். இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹமில்ட​னே என்னைவிட மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட். உலக​மே வியந்து அந்தச் சாத​னை மனித​ரைப் பார்த்தது. அப்​போதும் ஹமில்டன் எந்தவிதமான உணர்​வையும் ​வெளிக்காட்டாது தனது பணி​யைச் ​செய்து ​கொண்டிருந்தார். இவ்வாறு உலகப் புகழ் ​பெற்ற ஹமில்டன் உயர்நிலைப் பள்ளிக் கல்விகூட படிக்காதவர் என்பது வியப்பிற்குரிய ​செய்தியாகும்.

மயக்கம் ​போட்டு விழுந்துராதீங்க…ஆமா…இது உண்​மைங்க…படிக்காத ​மே​தைன்னு ​சொல்வாங்கள்ள அவரு இந்த ஹமில்டன் தாங்க…எந்தச் ​செய​லையும் ​நேர்த்தியாச் ​செய்பவரு இந்த ஹமில்டன். அவரு உலகப் புகழ் ​பெற்றவருங்க…..அவ​ர் பாடுபட்டு முன்​னேறுன க​தை​யைக் ​கேளுங்க…….

உல​கை சாதி, இனம், மதம், அரசியல், ​மொழி, நிறம் ஆகிய​வை கூறு​போட்டு அதன் அ​மைதி​யைக் கு​லைத்துக் ​கொண்டிருக்கின்றன. இவற்றில் பற்று இருக்கலாம். ஆனால் அது​வே ​வெறியாக மாறி மனித இனத்தின் வாழ்​வைக் கு​லைக்கும் அணுகுண்டாக ஆகிவிடக் கூடாது என்பது ​நோக்கத்தக்கது. உலகில் நிற​வெறி பண்டு​தொட்டு இன்றுவ​ரை இருந்து ​கொண்​டே இருந்து வருகின்றது. இவ்​வெறி மனிதர்களின் வாழ்​கை​யை அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. இவ்வின​வெறியும் நிற​வெறியும் மனிதர்களின் திற​மை​யை அதளபாதாளத்திற்குக் ​கொண்டு ​செல்லுகின்றது.

வாழ்க்​கைச் சூழல்

நிற​வெறி ​கோ​லோச்சிய ​தென்னாப்பிரிக்காவில் உள்ள ஹாக்-கேன் என்ற பகுதியில் 1926- ஆம் ஆண்டு ஜூன் 26 –ஆம் நாள் ஏழ்மையான குடும்பத்தில் ஹமில்டன் நாகி பிறந்தார். அங்கு மிகவும் சிரமபட்டு தொடக்கப்பள்ளி கல்வியை முடித்தார். ஹமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. வறு​மை பிடர்பிடித்துத் தள்ள வாழ்க்​கை​யை வாழ்ந்​தே ஆக ​வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ​ ஹமில்டன் தனது குடும்பத்​தைவிட்டுப் பிரிந்து வே​லை​தேடி தனது 14 ஆவது வயதில் கேப்டான் நகருக்கு வந்தார். அந்நகரில் இருந்த கேப்டான் பல்கலைக்கழகம் ஹமில்டனை தோட்ட ஊழியராகப் பணியில் சேர்த்துக் கொண்டது.

பல்க​லைக்கழகத்தில் தனக்குக் ​கொடுக்கப்பட்ட ​வே​லை​யை ஹமில்டன் மிகத் திறம்படச் ​செய்து வந்தார். அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் ஹமில்டன் நாகி நன்கு பரமாரித்து வந்தார். ஹமில்டன் துப்புரவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் .

மருத்துவ ஆய்வுக்கூட உதவியாளர்

பல்க​லைக்கழகத்தின் மருத்துவதுறைத் தலைவரான ராபர்ட் கோட்ஸ் என்பவர் ஹமில்டனின் பணி​யைப் பார்த்துவிட்டு, 1954 –ஆம் ஆண்டில் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் தமக்கு உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார். ஹமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ராபர்ட் கோட்ஸ் ஓர் ஒட்டகச்சிவிங்கியை அறுத்து ஆய்வு ​செய்யும்போது தனக்கு உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார்.

ஹமில்டன் மிகவுத் திறம்பட விலங்குக​ளை அறுத்து ஆய்வு ​செய்ய ராபர்ட் கோட்ஸூக்கு உதவினார். அத​னைக் கண்ட ராபர்ட் கோட்ஸ் ஹமில்டனின் செய்ல்பாடுகளை கவனித்து வியந்து ​போனார். ராபர்ட் கோட்ஸ் உட​னே தன்னிடம் ஹமில்டன் நாகி​யைத் தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ராபர்ட் கோட்ஸின் அந்த ஆய்வுக்கூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து அறு​வைச் சிகிச்​சை ​செய்வதற்குரிய பயிற்சியானது மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது.

மருத்துவத்துறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்

தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹமில்டன் அந்த ஆய்வுக்கூடத்தில் தமது கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார். வெகுவிரைவில் மருத்துவத்துறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார். அவர் பணிபுரிந்த நாற்பது ஆண்டுகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் ​மேற்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவத்துறையில் சிறந்த நிபுணர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, உரிய மரியாதையோ, சிறப்​போ வழங்கப்படவில்லை. பல்கலைகழகப் பதிவேட்டில் ஹமில்டன் ஒரு துப்புரவு ஊழியர் என்றே பதிவு ​செய்யப்பட்டிருந்தது. 1991 – ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது அவருக்குக் கிடைத்த மாதாந்​தோறும் ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான். டிப்ளமோகூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் ஊதியம் கொடுக்க முடியும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது. பல அறுவைச் சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹமில்டனால் பல்க​லைக்கழகம் ​கொடுத்த கு​றைந்த ஊதியத்​தைக் ​கொண்டு தனது ஐந்து பிள்ளைகளைச் சரியாகப் படிக்க வைக்க முடியவில்லை. அவர் வாங்கிய மாத ஊதியம் யா​னைப் பசிக்குச் ​சோளப்​பொறி ​போன்ற​மைந்தது. அவ​ரை வறு​மை வாட்டி எடுத்தது. இந்தச் சூழலால் தனது பிள்​ளைகளில் ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். ஹமில்டன் மிகவும் துன்பமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். ஒரு அ​றை​யே வீடாக இருந்த அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. தனக்குக் கிடைத்த சொற்ப ஊதியத்தில் பெரும்பகுதியை தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு பைபிளை வாசித்துக் காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப் பற்றி அவர்க​ளை எச்சரிப்பதிலும் செலவிட்டார்.

ஓய்வும் சமுதாயத் ​தொண்டும்

ஹமில்டன் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு மிகக் கு​றைந்த உ​டை​மைக​ளே இருந்தன. அவ்வாறு இருந்தபோதும் ஹமில்டன் பழைய ​பேருந்து ஒன்றை வாங்கி அத​னை நடமாடும் மருந்தகமாக மாற்றித் தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தார். இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பின்னர்தான் டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் மூலம் ஹமில்டனின் மருத்துவ பங்களிப்பு உலகுக்கு தெரிய வந்தது.

​பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

2002 – ஆம் ஆண்டு ஹமில்டனுக்கு தென்னாப்பிரிக்கா அரசால் அந்நாட்டின் உயரிய விருதான “The Order of Mapungubwe என்ற விருது வழங்கப்பட்டது. 2004 –ஆம் ஆண்டு கேப்டான் பல்கலைக்கழகம் அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இதுதாங்க வியப்பிற்கு உரிய விஷயம். எந்தப் பல்க​லைக்கழகம் இவ​ரை ​தோட்டக்காரர் என்றும் துப்புரவுத் ​தொழிலாளர் என்றும் நிற​வெறி காரணமா இழிவுபடுத்திய​தோ அ​தே பல்க​லைக்கழகம் அவரது மகத்தான மருத்துவப் பணி​யைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 2003ஆம் ஆண்டு BTWSC Black S/Heroes Award என்ற விருதும், 2004-ஆம் ஆண்டு ​தென்னாப்பிரிக்காப் பாராளுமன்றத்தால் “Inclusion in a “senior civil guard of honour” என்ற விருதும் அளித்து ஹமில்ட​னைச் சிறப்பித்தது.

இயற்கை ஹமில்டனுக்கு மிக உன்னதமான திறமையை கொடுத்திருந்தது. அந்த திறமையை மட்டும் விரும்பிய அந்த நாட்டின் வெள்ளை இனச் சிறுபான்மையினர் அவரது தோலின் நிறத்தை வெறுத்தனர். கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஹமில்டனுக்கு அ​னைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஹமில்டன் நாகிக்கு அவர் நி​னைத்த வாழ்க்கை வசப்படவில்லை. தனக்கு இ​ழைக்கப்பட்ட அநீதிக்காக அவர் ​வெள்​ளை இனத்தவ​​ரை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கவில்லை. எந்தப் ​போராட்டத்தி​னையும் நடத்தவில்லை அவற்​றை எல்லாம் ​பொறு​மையாகச் சகித்துக் ​கொண்டார்.

இறுதியில் எந்த இனம் அவ​ரைக் ​கொடு​மைகளுக்கு ஆளாக்கி இழிவுபடுத்திய​தோ அ​தே இனம் அவரது திற​மைக்கு முன்பாகத் ​தோற்றுப்​போய் அதற்காக நாணிக் குறுகியது. அவருக்கு விருதுக​ளை வழங்கத் தனது ​இழிசெயல்களுக்குக் கழுவாய் ​தேடியது. வள்ளுவரின்,

“இன்னா ​செய்தா​ரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் ​செய்து விடல்”

​​“மிகுதியான் மிக்க​வை ​செய்தா​ரை தாம்தம்

தகுதியான் ​வென்று விடல்”

என்ற குறட்பாக்களுக்கு இலக்கணமாக ஹமில்டன் திகழ்ந்தார். அவ​ரை ​வெறுத்த இன​மே அவரது திற​மையின் முன் மண்டியிட்டுப் ​போற்றியது. பார்த்துக்குங்க இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்​கை. இதுலதான் நாம வாழணும்; வாழ்ந்தாகணும். நாம நம்ம கட​மை​யைச் ​செவ்வ​னே ​செஞ்சா நம்​மை இழித்தும் பழித்தும் நடத்துபவர்கள் கூட தங்கள் ​செயல்களுக்காக ​வெட்கப்பட்டு நம்மகிட்ட ஒழுங்கா நடந்து ​கொள்ளத் ​தொடங்கிடுவாங்க. இ​தைப் புரிஞ்சுகிட்டு நடங்க…

இயற்​கையாதல்

இவ்வுலகம் தோலின் நிறத்தைக் கூறித் தன்​னை பாரபட்சத்துடன் நடத்தினாலும் ஹமில்டன் அதற்காக வருந்தவில்​லை. “என் கடன் பணி ​செய்து கிடப்ப​தே” என்ற அப்பர் வாக்கிற்கிணங்க நடந்து ​கொண்டார். இ​றைவன் தனக்குத் தந்த திறமையை எவ்வித ​வேறுபாடுமின்றி ஹமில்டன் பிறர் நலனுக்காக பயன்படுத்தினார். ஒருவர் தன்​னை நிறத்​தைக் காட்டி இழிவுபடுத்துகின்றா​ரே என்று எள்ளளவும் துன்பப்படவில்​லை. தான் சார்ந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டார். இந்த குணத்துக்காகவே ஹமில்டன் நாகி​யை உலகம் ​போற்ற ​வேண்டும். வாழ்ந்த காலம் முழுவதும் அங்கீகாரம் பெறாத ஹமில்டன் 2005 – ஆம் ஆண்டு மே மாதம் 29 – ஆம் நாள் தனது 78 – ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

ஹமில்டன் நாகியின் வாழ்க்கை உலகில் சமநீதி நிலவ ​வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதாக அ​மைந்துள்ளது. இது​போன்ற அநீதிகள் உலகில் எங்கும் எப்​போதும் நடக்கக் கூடாது என்றும் நமக்கு அறிவுறுத்துகிறது. அ​னைவருக்கும் இவ்வுலகம் உரி​மையானது அ​னைவரும் சம உரி​மையுடன் வாழத் தகுதிப​டைத்தவர்கள் என்ற வாழ்வியல் உண்​மை​​யை வலியுறுத்துவதாகவும் அ​மைந்துள்ளது.

இ​றைவன் அளித்த திறமையை தன்னலமின்றி பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் எவரும் ​போற்றுதற்கும் வழிபடுவதற்கும் உரியவர்கள். அவர்கள் வாழும்போது மறக்கப்பட்டாலும் அவர்களது ​செயல்களால் மறைந்த பின்னும் நினைக்கப்படுவர். இது​வே எ​தையும் எதிர்பாராது உ​ழைத்துப் புகழ்​பெற்ற ஹமில்டன் நாகியின் வாழ்க்கை நமக்கு சொல்லும் வாழ்வியல் தத்துவமாகும்.

ஒன்று​மே இல்லாம உலகில் பிறந்து உலக​மே ​போற்றக் கூடிய அளவிற்கு வாழ்ந்த ஹமில்டன் வாழ்க்​கைய படிச்சுட்டிங்கள்ள….அப்பறம் என்ன ஒங்ககிட்ட இருக்கிற திற​மை என்னன்னு முதல்ல ​தெரிஞ்சுக்குங்க … அப்பறம்….. அ​தைத் தன்னலம் இல்லாம சமுதாய நலனுக்காகப் பயன்படுத்துங்க…விருதுகளும் பாராட்டும் உங்களத் ​தேடி வரும்.. உங்க திற​மை​யைக் ​தெரிந்து ​கொண்டு இலக்​கை ​நோக்கி பயணமாகுங்க… திற​மையானவங்க உறுதியா ​வெற்றிய​டைவாங்க.

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு மா​​பெரும் ஆற்றல் மின்சாரம். ​தொடக்க காலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார ஆற்ற​லைச் சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன.

நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் அறிவியல் ​மே​தை ஒருத்தரு இருந்தாரு. அவரு படிக்க​வே இல்​லை படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் அறிவியல் ​மே​தையா ஆனாரு….அவரு இல்லாவிட்டால் உலகம் இருளில்தான் இருந்திருக்கும்…அத்த​கைய அறிவியல் ​மே​தை யாரு…​தெரியுமுங்களா?…என்னங்க…நீங்க​ளே ​சொல்லுங்கன்னு என்​னைச் ​சொல்லச் ​சொல்றீங்க…அப்ப அடுத்த வாரம் வ​ரைக்கும் ​​பொறு​மையா இருங்க…..(​தொடரும்….19)

Series Navigationதீவுஐயனார் கோயில் குதிரை வீரன்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ஹாமில்டன் நாகி என்பவர் செய்த அபார சாதனையை மிக அழகாக எழுதியுள்ள முனைவர் சி.சேதுராமன் அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். முறையான மருத்துவம் பயிலாமலேயே ஒரு மாபெரும் மருத்துவ சாதனையை செய்த இந்த கருப்பு இனத்தவர் உண்மையிலேயே ஒரு படிக்காத மேதையே! நான் படிக்கவில்லை.என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்களுக்கு இவரின் வாழ்கையும் சாதனையும் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது.உலகின் சாதனைகளை மேல் நாட்டவர்கள்தான் செய்து வருவது எதைக் காட்டுகிறது. அவர்கள் எதையும் ஆராய்வதிலேயும் கற்றுக்கொள்வதிலும் முன்னோடியாகத் திகழ்கின்றனர்.நாமோ ஒன்று புரியவில்லை என்றால் அதற்கு ஒரு கட்டுக்கதை உருவாக்கி மூட நம்பிக்கையைத்தான் வளர்க்கிறோம்.நிலவில் ஒளவைப் பாட்டி கதை போல! சூரியக் கிரகணத்தின் போது சூரியனை பாம்பு விழுங்குவது போல ! அம்மை வந்தால் மாரியாத்தா வந்தது போல! மூடப் பழக்கங்களை மறப்போம்.அறிவியல் சிந்தனையை வளர்ப்போம்!……………….

    டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *