பிரச்சார நெடியின்றி சொல்ல வந்ததை,அழுத்தமான வசனங்களாலும் , இயல்பாகவே அமைந்து விட்ட காட்சிகளைக்கொண்டும்,காட்சிகளுக்கு பொருந்தும் அளவான இசையோடும் என இவ்வளவையும் வைத்துக்கொண்டு கூடவே ஒரு செய்தியும் சொல்லவேண்டும் என நினைத்து எடுத்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் காந்தி. செண்ட்டிமெண்ட்டலாக K Series-ல் ஆரம்பிக்கும் ‘ஏக்தா கபூரின்’ டீவி சீரியல்களுக்கென வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரிடமிருந்து இப்படி ஒரு நம் மனதில் அழுந்தப் பதியவைக்கும் படம், முதலில் ஒரு சபாஷ் போட்டுவிட்டுத்தான் விமர்சனம் எல்லாம்.
தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்கிறான் அந்தப்பையன் சார்வாகா.( வினய் ஷுக்லா) நீதிமன்றத்தாழ்வாரத்தில் எப்படி இங்கு வந்தது எனத்தெரியாமல் ஒரு ரயில் பூச்சி ஊறிக் கொண்டேயிருக்கிறது. அத்தனை தரையோடு தரையாக வைத்த ஆங்கிள் இப்போதுதான் முதன் முறையாகப்பார்க்கிறேன். எத்தனையோ பேர் நடந்து செல்கின்றனர். காலை கோர்ட் ஆரம்பிக்கும் நேரம் அத்தனை பரபரப்புக்குமிடையில் அந்த ரயில் பூச்சி தனது அத்தனை கால்களையும் ஒருசேர முன்னோக்கித்தள்ளிக்கொண்டு பயணிக்கிறது. யாருடைய காலில் எப்போது மிதிபடுமோ என்று நமக்குள்ளே ஒரு துடிப்பு. ஜெயின் துறவி மைத்ரேயா ( நீரஜ் கபி ) யாரோ தம் கையில் வலுக் கட்டாயமாகத் திணித்த அந்த விளம்பரக்காகிதத்தை தரையின் அடியோடு ஒட்டிவைத்து பூச்சியை அதன் மீதேறி பயணிக்கவைத்து பின் அருகிலிருக்கும் ஒரு செடியில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார். சார்வாகா’வின் கால்களேயில்லாத கேள்விக்கணைகள் மைத்ரேயரை நோக்கி “ இப்ப அந்தப்பூச்சியை கொண்டுபோய் செடியில விட்டுட்டீங்க, அது தற்கொலை மூலமா நிர்வாணத்தை அடைவதற்கு தாழ்வாரத்துக்கு வந்திருக்கலாமில்லயா..? இப்படி அதனின் சைக்கிள் முழுமையாகாமல் ஏன் தடுத்து விட்டீர்கள் , ஹ்ம்..இப்ப அது மறுபடி இங்க எப்டி வர்றதுன்னு தெரியாம எத்தன மணி நேரம் எத்தன நாளாகுமோன்னு சுத்திக்கிட்டு இருக்கும் ?“.மெலிதான புன்முறுவல் ஜெயின் துறவியின் முகத்தில்.
அதற்குள் கோர்ட் அழைப்பு வர உள்ளே செல்கிறார் , அவர் தொடுத்த வழக்கு ‘ விலங்குகளை ஒரு ‘Guinea Pig’ போல கூண்டுக்குள் அடைத்து வைத்து அவற்றிற்கு சுவாசிக்கக்கூட சரியான இடைவெளி தராமல் அத்தனை ஆராய்ச்சிகளும் செய்வது குறித்தான வழக்கு. அவரின் வக்கீல் எத்தனையோ இவருக்காக வாதாடுகிறார். ‘கடைசியில் எப்படியும் சாகத்தானே போகிறது அந்த முயல்களும், எலிகளும், அவற்றை எப்படி அடைத்துவைத்தாலென்ன ?’ என்ற எதிர்த்தரப்பு வக்கீலின் வாதம். நாமும் அதேபோன்ற எலிகளும் முயல்களும் தான். இந்த உலகில் படைக்கப்பட்டு அத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகி கடைசியில் மரிக்கத்தான் போகிறோம், இருக்கும் வரை கொஞ்சம் நல்லவாழ்வு வாழ்ந்துவிட்டுப் போகலாமே என்ற அடிப்படை வாதம் தான் அந்தக்காட்சிகளின் உட்கருத்து. ‘சீக்கிரம் கொன்றுவிடு , அதிகம் சிரமப்படுத்தாதே’ என்பது. ( இதே போன்று ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் Hostel என்றவொரு ஹாலிவுட் திரைப்படம் ,மிகவும் குரூரமான நினைத்துப்பார்க்கவும் இயலாத காட்சிகள் கொண்ட மனிதர்கள் மீதான வலிந்த வதைகளைத் தெளிவாகக்காட்டிய படம் அது , அதில் ஒருவன் ‘சீக்கிரம் கொன்றுவிடு’ என்பான் அதைத்தான் மைத்ரேயும் சொல்கிறார் )
ஒரு கட்டத்தில் ‘ஈமெயில் கூட ஞானி’யாகலாம் என்று புதிர் போடுகிறான் சார்வாகா. எப்படி ? அதன் கூட எதேனும் அட்டாச்மெண்ட்’ இல்லையென்றால் என ஞானியும் சிரிக்கிறார் அப்போது. An Email Without an attachment is a saint
தொடர்ந்தும் நடந்து கொண்டேயிருக்கிறார் அந்த துறவி. புற்று நோயின் கடைசிக்கட்டத்தில் வசிக்கும் அவர். ‘சார்வாகா’ விடாமல் அவரைத்துளைத்தெடுக்கிறான், அவருக்கு அந்த நோய்க்கென ஆங்கில மருந்துகள் உட்கொள்தல் அத்தனை பிடிக்கவில்லை, அதற்காக எத்தனை விலங்குகளை இம்சித்திருப்பார்கள் என்ற அடிப்படை வாதம் அவரது. ‘நீங்க எங்களுக்கு வேண்டும், உங்கள் போதனைகள் எங்களுக்கு எப்போதும் வேண்டும் , அதற்காக மருந்து உட்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கூத்தாடுகிறான்.
சாறுண்ணிகள் பற்றிய அவனின் விளக்கங்கள் அவரைக்கொஞ்சம் கொஞ்சமாகக்கரைக்கின்றன. எறும்பின் உடலில் உணவின் வழி உட்சென்று பின் எறும்பையே தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முழுதாக தமது ஊட்டங்கள் கிடைத்தபின் அதை வெடித்துச்சிதறவும் வைக்கும் என்ற சார்வாகனின் விளக்கம் அவரின் முற்றிய புற்றுநோயை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கடைசியில் அவரும் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்கிறார்.
அந்தப்பெண் ‘அலியா கமால்’க்கு (ஐடா எல்காஷெஃப்) கண்பார்வை இல்லை. அத்தனை சப்தங்களையும், கூடவே மேக்புக்கின் தொடர்ந்து மெனுக்களையும் , அதன் தெரிவுகளையும் பின்னிருந்து எடுத்துச்சொல்லிக் கொண்டேயிருக்கும் மென்பொருள் வைத்துக்கொண்டு அவள் எடுத்த புகைப்படங்களைத் திருத்துகிறாள். ஒருபக்கம் பிரிண்டரில் கொடுத்த காகிதத்தை அடுத்த பக்கம் வருகிறதாவென கை விரல்கள் வைத்து , இத்தனை நேரத்துக்குள் பிரிண்ட்டவுட் வந்துவிடும் என்ற அவளின் கணிப்பு இம்மியும் பிசகாமல்,அடுத்த பக்கம் அவள் கைகளை அருவும் புகைப்படங்களை விரல்களை வைத்துப் புடைத்திருக்கும் பகுதிகளை வைத்துக்கண்டறிகிறாள். சபாஷ் ஆனந்த் காந்தி. இத்தனை அற்புதமாக , இத்தனை நுணுக்கத்துடன் ஒரு விழி இழந்தவளின் துயரத்தை யாரும் காட்டியதில்லை. அல் பசீனோ நடித்த ‘ செண்ட் ஆஃப் அ விமனில்’ (Scent of a Women ) கூட இத்தனை நுணுக்கங்களை நான் பார்த்ததில்லை. நம்ம கமலின் ‘ராஜபார்வை’யை விட்டுவிடலாம். அது ஒரு விழியிழந்தவனை எங்கனம் அடுத்தவர் நடத்துவர் என மட்டுமே காட்டிய படம் ஓரளவு ‘அல் பசீனோ’வை அபிநயித்திருப்பார் நம்ம கமல்.
கேள்விகள் இவளையும் விட்டு வைக்கவில்லை, உங்கள் படங்கள் எப்போதும் ஏன் ‘கருப்பு வெள்ளை’ யிலேயே இருக்கின்றன , அதற்கென நீங்கள் வருத்தப்படுவதில்லையா ?’ என்ற மனதை அறுக்கும் அந்தக்கேள்வி அவளைக்கூறுபோடுகிறது. அவளுக்குத்தெரிந்ததெல்லாம் இருள்,மற்றும் அவள் எப்போதும் காண விரும்பும் அதன் எதிர்ப்புறமான வெளிச்சம் என்ற இரண்டு மட்டுமே. அதையே அவளின் புகைப்படங்கள் நமக்குச்சொல்கிறது. ஹிந்தியில் ஒரு பழமொழி உண்டு ‘ அந்தே கோ க்யா மாங்க்த்தா ஹை ?’ கண்பார்வையற்றவனுக்கு என்ன வேண்டும் ‘ என்ற அடிப்படையான பதிலை வரவழைக்கும் கேள்வி அது. அவர் எடுத்த புகைப்படங்களை அவருக்கு கண்பார்வை வந்தபின்னர் அவர் கையில் வைத்துப் பார்க்கும்போது மட்டுமே நமக்கும் காண்பிக்கிறார் இயக்குநர்.
இது போன்று பல நுண்ணிய காட்சிகள் நம்மை இதுவரை ஊகித்திராத இடங்களுக்கு அழைத்துச்செல்கிறது. இனிப்புக்கடைகளில் ஈக்களைப் பிடித்து எரித்துக்கொல்வதற்கென FlyKillers வைத்திருப்பர், அதில் பட்டு அந்த ஈ சாவது, அருகில் பட்டறையில் பற்றவைப்பு வைத்துக்கொண்டிருப்பதான ஒலியுடன் ஒத்துப்போகிறது என்பதை அவள் சப்தங்களாலேயே கண்டுபிடிக்கிறாள். ஹ்ம்…என்ன ஒரு காட்சியடா அது ?
இந்தப்பாகம் மட்டும் கொஞ்சம் ஜனரஞ்சகமாகக்காண்பித்திருக்கிறார் இயக்குநர், பணம் பணம் மட்டுமே வாழ்க்கை என்றலையும் ஒரு சாதாரண ‘ஸ்டாக் மார்க்கெட் ப்ரோக்கர்’ ( சோகம் ஷா ) அவருக்கென ஒரு பாட்டி , கிராமப்புறத்தில் கருத்தடை சாதனங்கள் விழிப்புணர்வு பற்றி முகாம்கள் நடத்தி, எதேனும் ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட நினைக்கும் அந்த முதியவராக அவரின் பாட்டி.‘இத்தனை விளம்பரங்கள், எத்தனை முகாம்கள் நடத்தினீங்க , அதெல்லாம் கேட்டிருந்தாங்கன்னா இவ்வளவு ஜனத்தொகை பெருகியிருக்குமா’ என்று விட்டேற்றியாகக் கேள்வி கேட்கிறான் அந்த ப்ரோக்கர் நவீன். எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறாள் அந்த முதியவள் , வெறும் பணம் மட்டும் வாழ்க்கையில்லை , முடிந்தளவு இந்தச்சமூகத்திற்கென எதாவது செய்ய நினை என்று’ எனினும் அவன் கேட்பவனில்லை.
மிகப்பரவலாக எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும் ‘சிறுநீரகத்திருட்டில்’ சிறுநீரகம் இழந்தவனுக்கு நியாயம் கிடைக்கவேண்டி எதேனும் செய்யவேண்டும் என்ற உந்துதல் தமக்காகவே தோன்றுகிறது அந்தப் பணந்தின்னிக்கு. எதோ தவறு செய்கிறோம் அதைத்திருத்திக்கொள்ளவேணும் என்று தோன்றி அவனுக்கு உதவி செய்ய எங்கெங்கோ பயணித்து ஒருவாறு அந்த ‘சிறுநீரகம்’ இழந்தவனுக்கு ரொக்கம் மட்டுமே வாங்கிக்கொடுக்க முடிகிறது , இருப்பினும் அவனுக்கு அவனின் சிறுநீரகம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் முதியவளின் அருகில் வந்து கடைசியில் அமர்கிறான். ‘நானி என்னால அதச்செய்ய முடியலயே’ என்று குமைந்து போகிறான். ‘ இத்னா ஹி ஹோகா’ இவ்வளவு தான் முடியும் என்று அவனைச் சமாதானப்படுத்துகிறார் அந்த முதியவர். முயலாமல் இருப்பது தான் தவறு ,இயன்றவரை முயன்று அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதிருப்பினும் அதன் அருகிலிருக்கும் எதோ ஒன்றைப்பெற்று விடமுடியும் என்பதற்கு இந்த ப்ரோக்கர் ஒரு சான்று.
சிறுநீரகம் இழந்தவனைத்தேடி அலைந்து சேரிக்குச்செல்லும்போது அவ்வப்போது அந்த இடுக்குச்சந்துகளில் சிக்கிக்கொள்ளும் அந்த ப்ரோக்கரின் தாட்டியான நண்பர் தொடர்ந்தும் இறுக்கமாகவே சென்று கொண்டிருக்கும் படத்தை நமக்கென கொஞ்சம் தளரவைக்கிறார்.
இப்படி ஒரு மனிதனின் உடலில் இருந்து எட்டு பாகங்கள் வரை எடுக்கவும் எட்டு பேர்களுக்கு உதவவும் இயலும் என்ற கருத்தை அழகாகக்காட்டியிருக்கிறார் இயக்குநர். கடைசிக்காட்சிகள் குகை போன்ற நம் உடலில் கொஞ்சம் உள்ளே இறங்கிப்பார்த்தோமானால் வைரங்களும், மணிகளும் கொட்டிக்கிடக்கின்றன அவைகளை நாம் இவ்வுலகை விட்டுச்சென்ற போதும் பிறருக்கு உயிர் வாழ உதவும் வகையில் கொடுத்துச் செல்லமாலமெனவும் தெளிவாக விளங்கவைக்கிறார்.
பல உலக மொழிகள் பேசி எங்கும் வியாபித்திருக்கிறது திரைப்படம். கூடவே ஓடிக்கொண்டிருக்கும் ஆங்கில சப்டைட்டில்கள் படத்துடன் நம்மை ஒன்ற வைக்கத்தான் செய்கிறது இப்போதெல்லாம் உறுப்புக்கொடைகள் பற்றி சில படங்கள் வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன. விழிக்கொடை எப்போதோ எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவலான ஒன்று. அது பற்றியதான விழிப்புணர்வும் பரவலாகவே இருக்கிறது. உடலின் இன்னபிற பயன்படுத்தத்தக்க பாகங்களையும் பிறர்க்கு கொடையாகக் கொடுக்கலாம் என்பது இப்போதுதான் பேசப்படுகிறது. இருப்பினும் இதை இந்த ‘தீஸஸின் கப்பல்’ சீரியஸாகவே பேசியிருக்கிறது. தமிழில் வெளிவந்த ‘வானம்’. ‘சென்னையில் ஒரு நாள்’ போன்று நிறைந்த வணிக அம்சங்கள் ஏதுமின்றி , அதற்காக எப்போதும் போரடிக்கும் ஆவணப்பட பாணியுமல்லாது , அரங்கில் அமர்ந்து பார்க்கும் வண்ணம் சுவாரசியமாகக்கதை நகர்த்தலாலும், வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் இல்லாமலிருப்பதாலும், மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என்று ஏகத்துக்கு ‘க்ளீஷேக்கள்’ இல்லாமல் இருப்பதும் வலுச்சேர்க்கிறது..
பெட்டிக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்த இந்த சர்வதேச அளவிலான விருதுகளை அள்ளிக்குவித்த படம் கிரன் ராவின் (ஆமீர் கானின் மனைவி) பெருத்த முயற்சியோடு நமக்குக்காணக்கிடைத்திருக்கிறது. எனவே டிவிடிக்காகவும், டொரண்ட்டுக்காகவும் காத்திருக்காது தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய படம் இது.
அதுவே இந்த உயிர்க்கொடைக்கு நம்மாலியன்ற சிறு துரும்பைக்கிள்ளிப்போடும் உதவியாக இருக்கக்கூடும்
– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
- லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை
- ஒற்றைத் தலைவலி
- இப்படியாய்க் கழியும் கோடைகள்
- தீர்ப்பு
- புகழ் பெற்ற ஏழைகள் 19
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்
- மங்கோலியன் – I
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14
- தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !
- தீவு
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
- கவிதைகள்
- இரகசியமாய்
- தனக்கு மிஞ்சியதே தானம்
- நீங்காத நினைவுகள் 14
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]
- வேர் மறந்த தளிர்கள் – 26-27-28
- டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14
- ஸூ ஸூ .
- இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்
- நோவா’வின் படகு (Ship of Theseus)
- சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து
- முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]
- பால்காரி .. !
- தாயுமானாள்!
- பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…
- 2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !