இப்படியும் ஓர் அப்பா!
(மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்)
ஜோதிர்லதா கிரிஜா
“அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது. ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல அப்பா, நல்ல அம்மா?’ என்கிறீர்களா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் உண்டு. பெற்றோர்களிலும் சராசரி, சராசரிக்கும் மேல், மிக. மிக உயர்ந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தப்படக் கூடியவர்கள் உண்டு என்பதும் உண்மைதானே?
எல்லாருக்கும்தான் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு வாய்த்த அப்பா பெரும்பாலான பிற அப்பாக்களிடருந்து மாறுபட்டவர். விதிவிலக்கானவர்.
நான் என் பெற்றோர்க்கு மூத்த மகள் பதிநான்கு ஆண்டுகள் “தவம்” இருந்து பெறப்பட்ட பெண்ணாம்! சொல்லுவார்கள். வத்தலக்குன்டுக்கு அருகில் உள்ள தேவதானப்பட்டியின் காமாட்சி அம்மனுக்கு வேண்டுதல் செய்துகொண்ட் பின் பிறந்தவளாம். அந்தக் கோவிலில் காமாட்சி அம்மன் ஒரு தொட்டிலில் ஜோதி வடிவில் ஒரு குழந்தையாய்ப் பள்ளிகொண்டிருப்பதாக நம்புகிறார்கள். கண்களைக் கட்டிக்கொண்டுதான் கூரை வேய்வார்களாம். இன்றேல் பார்வை போய்விடுமாம். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்காதீர்கள். அதனால்தான் ‘ந்ம்புகிறார்கள்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். ‘காமாட்சி’ என்பது மிகவும் புழங்கும் சாதாரணமான பெயர் என்று கருதிய என் அப்பா “ஜோதிர்லதா”, “கிரிஜா” ஆகிய இரு பெயர்களை எனக்குச் சூட்டினார். இப்பெயர்களின் இணைப்பே எனது ‘புனைபெயர்’ ஆயிற்று.
எங்கள் அப்பா மற்ற அப்பாக்களினின்று எவ்வாறு மாறுபட்டவர் என்பதைப் பார்ப்போம். காலை ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பிவிட்டுவிடுவார். காலைக் கடன்களை முடித்த பின் என்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லுவார். அங்கே, அவருடன் சேர்ந்து நானும் அவர் கற்றுக்கொடுத்திருந்த உடற்பயிற்சிகளைச் சுமார் அரை மணி நேரம் போல் செய்தாக வேண்டும். எந்தச் சால்ஜாப்பும் சொல்ல முடியாது.
சாப்பாட்டு நேரம், விளையாட்டு நேரம், படிக்கும் நேரம் முதலியவற்றுக்குக் கால அட்டவணை போட்டுவைத்திருப்பார். அதில் கண்டுள்ள படி நான் செயல்பட்டாக வேண்டும். மாலை ஐந்து மணிக்கு விளையாடப் போனால், சரியாக ஆறு மணிக்கு நான் வீடு திரும்ப வேண்டும். எதிர்வீட்டுச் சுவர்க் கெடியாரம் ஆறு முறை அடித்ததும் நான் கிளம்பாவிட்டால், எங்கள் வீட்டு வாசல்படியில் நின்றுகொண்டு, ‘கிரிஜாஆஆ..’ என்று பெரிதாய்க் குரல் எழுப்பிக் கூப்பிடுவார். நான் உடனே பாதி ஆட்டத்தில் ஓடிவிடுவேன். இதனால், ஆறு மணிக்குள் முடிக்க முடியாத ஆட்டங்களுக்கு என் தோழிகள் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நான் ஓராமாக நின்று வேடிக்கை தான் பார்க்கும்படி ஆகும். கண்டிப்பும் கறாரும் நிறந்த அப்பாவாதலால், எரிச்சலையும் ஏமாற்றத்தையும் விழுங்கியே ஆக வேண்டும். ஆத்திரம் ஆத்திரமாக வரும். (உரிய வயதில் அவரது அருமையைப் புரிந்துகொண்டது வேறு விஷயம்.)
எங்கள் அப்பா ஒரு மல்லர் – அதாவது மற்போர் வல்லுநர். சிலம்பமும் ஆடுவார். ஒருமுறை எங்களூர் அக்கிரகாரத்துக்கு வந்த ஆறு “தீவட்டி”க் கொள்ளையரை எதிர்த்து ஒற்றை ஆளாய்ச் சிலம்பம் ஆடி விரட்டியடித்தவர். இதை அவருடைய நண்பர் ஒருவர் கூறக் கேட்டுத்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். தாமாக எதையும் பற்றிப் பீற்றிக் கொள்ளாதவர். காடுகள், மலைகள் என்றெல்லாம் அஞ்சாமல் சுற்றுவார். ஒரு முறை தேக்கடியில் யானைக் கும்பலில் சிக்கி, எப்படியோ தப்பித்து வந்த பின், அது பற்றிக் கேள்விப்பட்டு அழுத எங்கள் பாட்டியிடம் அவரது கட்டாயத்தின் பேரில இனிப் போக மாட்டேன் என்று வாக்குறுதி யளித்தாராம்.
‘இந்த நாடெம் சொந்த நாடென்றேத்துவோம் அதை வாழ்த்துவோம்’ என்று அதன் ஒவ்வோர் அடியும் முடியும் வண்ணம் அவர் எழுதிய நடைப்பாட்டைத்தான் (march song) இன்றும் சாரணர்கள் பாடிவ்ருகிறார்கள்.
விடுதலைப் போராட்டக் காலத்தில், அன்னீ பெசன்ட் அம்மையாருடன் கடிதப் போக்குவரத்துக் கொண்டிருந்தார். சிறந்த நாட்டுப்பற்றாளர். ஆனால், தாம் பெற்ற பிள்ளைகளுள் என் அப்பா மட்டுமே குடும்பப் பொறுப்பும், தம் பெற்றோர் மீது பாசமும் கொண்டிருந்தவர் என்பதால் எங்கள் பாட்டி அழுது, கெஞ்சியதன் பேரில், விடுதலைப் போராட்டத்தில் அவர் குதிக்கவில்லை. தவிர, மதுரைக் கலெக்டர் அலுவகத்தில் நல்ல வேலை கிடைத்தும், வெள்ளக்காரக் கலெக்டரின் கீழ் வேலை செய்ய விரும்பாததால் அதை ஏற்காமல், முதலில் சாரணத் தலைவராகவும், பிறகு பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்தார். நல்லொழுக்கமும் நாட்டுப்பற்றும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதும் தேசத்தொண்டுதானே என்று சமாதானம் செய்துகொண்டவர்.
ஓர் ஆணுக்குக் கல்வி கற்பிப்பதையும் விட, ஒரு பெண்ணுக்குக் கல்வி கற்பிப்பதே அதிக முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். ‘ஓர் ஆண் கல்வி கற்பதால் அவன் மட்டுமே பயன் அடைவான்; ஆனால் ஒரு பெண் கல்வி கற்றாலோ அவள் சார்ந்துள்ள குடும்பம் முழுவதுமே பயனடையும்’ என்பார். அதானாலேயே, வத்தலக்குண்டு அக்கிரகாரத்து வைதீக மனிதர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து, அப்பாவைச் சந்தித்து என் படிப்புக்கு எதிராய்க் குரல் எழுப்பியதைப் பொருட்படுத்தாமல், பள்ளிபடிப்பை என்னைத் தொடரச் செய்தவர். மிகக் குறைந்த அளவே கல்வியறிவு கொண்டிருந்த எங்கள் அம்மாவுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுததாராம். எங்கள் அம்மா பெருமையாய்ச் சொல்லுவார்.
எங்கள் அப்பா எத்தகைய முற்போக்குவாதி என்பதற்கு இதோ ஒரு நிகழ்ச்சி. ஒரு முறை எங்கள் அப்பாவின் தீர்ப்புக்கு ஒரு வழக்கு வந்தது. (எங்களூர் மக்களிடையே எழும் சண்டை-சச்சரவுகளை அவர் தான் தீர்த்து வைப்பார்.)
வழக்கு இதுதான் –
ஒரு மார்கழி மாதத்தில், அவ்வாண்டு மதுரைக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் விடுமுறையில் எங்கள் ஊருக்கு வந்திருந்தனர். பஜனை மடப் பிரசாதத்தை அவர்களுள் ஓர் இளைஞன் அங்கிருந்த பிராமணர் அல்லாத ஒரு முதியவர்க்கு அளிக்க முற்பட்ட போது. அவர் அதைப் பெற்றுக்கொள்ளத் தயங்கி யுள்ளார். காரணம், அவருக்குப் பிரசாதம் அளிப்பது வழக்கத்தில் இல்லை. அருகில் இருந்த பிராமணர்களும் அதைத் தடுத்துள்ளனர். ‘இதென்னப்பா புது வழக்கம்?. பிராமணர்களுக்கு மட்டும்தான் பிரசாதம்!’ என்று அவர்கள் குறுக்கிட்டுச் சொல்ல, நியாயவாதியான இளைனன் அதை ஏற்காததால், வழக்கு என் அப்பாவிடம் வந்தது. அப்பா சொன்னார்: “பிராமணர் அல்லாத அந்தப் பெரியவர் காலை நான்கு மணிக்கெல்லாம் மஞ்சளாற்றில் குளித்துவிட்டு, ஈர உடையுடன் அக்கிரகாரத் தெருக்களை பிராமணர்களுக்கும் முன்னால் பஜனைப் பாட்டுகள் பாடியவாறு வலம் வருகிறார். அதன் பின் ஐந்தரை மணி யளவில் புறப்படும் பிராமணர்களின் தெருவலத்தில் தாமும் பாடியவாறு மீண்டும் கலந்து கொள்ளுகிறார். அதன் பின் பூஜையைப் பார்க்கப் பஜனை மடத்துக்கு வருகிறார். அவர் மிக நல்ல பெரியவர். அவருக்குத் தான் நீங்கள் முதலில் பிரசாதம் வழங்க வேண்டும். அதன் பிறகே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊரில் அவர் ஒருவரே உண்மையான பிராமணர்” என்று சொல்லிவிட்டார். இளைஞர்கள் மகிழ்ச்சியுடனும், பிற பிராமணர்கள் கசப்புடனும் திரும்பிப் போனார்கள்.
அவர்கள் போன பிறகு, என் அம்மா அப்பாவைப் பிடி பிடியென்று பிடித்துக்கொண்டார்: “உங்கள் தீர்ப்பு மிகவும் சரிதான். அத்தோடு நிறுத்திக் கொள்ளமல் ‘அவர் மட்டுமே உண்மையான பிராமணர்’ என்று சொல்லி ஏன் அக்கிரகாரத்துப் பிராமணர்களை எல்லாம் பகைத்துக் கொள்ளுகிறீர்கள்? ஏற்கெனவே அவர்கள் கருத்தை மீறி கிரிஜாவைப் படிக்க வைப்பதன் மூலம் சம்பாதித்துக்கொண்ட பகைமை போதாதா?” என்ரு அவர் புலம்பியதற்கு, அப்பாவின் பதில், “அடச்சே, அசடே. சும்மா இரு. உனக்கு ஒண்ணும் தெரியாது.” என்பதுதான்.
‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல’ என்று தொடங்கி, ‘கல்வியழகே அழகாம்’ என்று முடியும் பாடலை அப்பா அடிக்கடி சொல்லுவார். .
திடீரென்று ஒரு நாள் – எனக்கு ஆறு வயது இருக்கும் அப்போது – ஆண்கள் அணியும பனியன் இணைந்த அரைக்கால் சட்டை வாங்கி வந்த அவர் அதை எனக்கு அணிவித்தார். அருகில் இருந்த என் அம்மா அது பற்றி வியந்து வினவிய போது, ‘மஞ்சளாற்றில் இப்போது வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீந்தக் கற்றுக் கொள்ளச் சரியான சமயம். இவளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கப் போகிறேன்’ என்று அவர் சொன்னதும் என் அம்மா அலறியடித்துக்கொண்டு ஓடி வந்து என்னை இழுத்துக்கொண்டார்: ‘இவளுக்கு எதுக்கு நீச்சலும் இன்னொன்றும்? இவளென்ன வெள்ளைக்காரக் குட்டியா? ஏதாவது ஆகிவிட்டால்?’ என்று கூவினார். ‘ எத்தனை பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்! நான் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள மாட்டேனா?’ என்று அப்பா சொன்னதை ஏற்காமல் அம்மா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். அப்பா மவுனமானார். அதன் பிறகு நீச்சல் என்னும் பேச்சையே அவர் எடுக்கவில்லை.
பள்ளிப் பருவத்தில் ஓவியத்திலும், கதை எழுதுவதிலும் நான் நாட்டம் கொண்ட போது, அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கண்டிடித்தவர். எனினும் படிப்பு முடிந்த பிறகு என் ஆர்வத்தில் தலையிடாதவர். “கண்ணன்” தொடர்கதைப் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு தரவிருப்பதைத் தெரிவிதது வந்திருந்த அஞ்சலட்டையைத் தாமே என்னிடம் முதலில் தரவேண்டும் என்னும் எண்ணத்துடன் வாசற்படியிலேயே என் வரவுக்காகாக இரவு ஏழரை மணி வரையில் உட்கார்ந்துகொண்டிருந்தார்.
இன்னா செய்தவர்க்கும் நன்னயம் செய்தவர். நியாயத்தைச் சொன்னதற்காக என் அப்பாவின் மீது சினங்கொண்டு ஒரு ரவுடி மூலம் அவரை அடித்துப் போட ஏற்பாடு செய்த ஓர் உறவினரை மன்னித்ததோடு, அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர். அலுவலகத்தில் கையாடல் செய்து அவர் மாட்டிக்கொண்ட போது பணததைத் தாமே கொடுத்து உதவி அவரது வேலையைக் காப்பாற்றித் தந்தவர்.
என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எடுத்த வித்தியாசமான முடிவை ஏற்காமல் எனக்கு அறிவுரை வழங்கினாலும், பின்னர் என்னைப் புரிந்துகொண்டு கண் கலங்கியவாறு என் முடிவை அரை மனத்துடன் ஏற்று என்னை என் போக்கில் விட்டுவிடச் சம்மதித்தவர். மகளின் மனத்தைப் புரிந்துகொண்டும், அவள் உணர்வுகளுக்கும் நோக்கங்களுக்கும் மதிப்பளித்தும் எத்தனை அப்பாக்கள் இப்படி அவளுக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்? அத்தகையோரை விரல்விட்டு எண்ணிவிடலாம்தானே?
ஆங்கில மொழிப் பாடத்தில் 25 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியாமல். தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவரை அவருடைய தந்தை – என் அப்பாவின் முந்தைய மாணவர் – என் அப்பாவிடம் ஒப்படைக்க, அவரது கடைசி வாய்ப்பில் 65% மதிப்பெண்பெற வைத்த திறமையான் ஆசிரியர் எங்கள். அப்பா.நம்ப முடிகிறதா? (அப்போது இத்தனை வாய்ப்புகள்தான் என்று கணக்கு உண்டு.) 25 எங்கே? 65 எங்கே? இதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்கு ஒரு காரணம் உண்டு. ‘இவனுக்குத்தான் படிப்பு வரும், அவனுக்கு வராது .என்ப்தெல்லாம் தப்பு’ என்று அடிக்கடி அவர் சொல்லுவார். சாதியின் அடிப்படையில் எதையும் அணுகாதவர். அதை அவர் மெய்ப்பிக்கவும் செய்தார் என்பதற்காகவே இந்த நினைவுகூரல்.
ஒரு முறை உசிலம்பட்டிப் பள்ளி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த அவருக்கு மாற்றல் உத்தரவு வந்த போது அவரை விடமாட்டோம் என்று புரட்சி செய்து முரட்டுத்தனத்துக்குப் பேர் போன அப்பள்ளி மாணவர்கள் எங்கள் அப்பாவைத் தக்க்வைத்துக் கொண்டார்களாம்.. கண்டிப்பும், கறாரும் தண்டிக்கும் குணமும் கொண்ட எங்கள் அப்பாவின் மீது அப்பள்ளியின் முரட்டு மாணவர்கள் காட்டிய மரியாதை அவ்வுர்க்காரர்களை வியப்பில் ஆழ்த்திற்று என்று அப்பாவின் நன்பர் ஒருவர் கூறத் தெரிந்துகொண்டோம்.
தம் இறுதி நாளில் அவர் எங்களுக்குச் சொன்ன அறிவுரை, ‘நியாயமாக ஒன்றைச் செய்யும் போது யாருக்கும் அஞ்சக் கூடாது; நாணயமாக நடக்க வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப் படக்கூடாது’ என்பவையாம்.
எங்கள் அப்பா காலமானதன் பின், மூன்று மாதாங்களுக்குப் பிறகு, வீடு மாற்றும் எண்ணத்தில் அருகில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டடத்தைப் பார்க்கப் போனோம். முதல் மாடிப் பகுதி காற்றோட்டமாக இருந்தது. ‘பால்கனியில் காற்று பிய்த்துக்கொண்டு அடிக்கிறது. அப்பா இங்கே உட்கார்ந்துகொண்டு படிக்கலாம்’, என்று நான் சொன்ன (உளறிய) தும், உடனிருந்தவர்கள் அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார்கள். சில கணங்களுக்குப் பிறகுதான் அப்பா இல்லை என்பது நினைவில் நெருடியது. நமக்கு மிக நெருக்கமானவர்களின் மறைவு நம் உள்ளங்களில் பதிவதில்லை என்பது புரிந்தது.
அவரது மறைவு பற்றி நாங்கள் கொடுத்த ஆங்கில நாளிதழ்த் தகவலைப் படித்துவிட்டு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அவரிடம் பயின்ற மாணவர்கள் அவருடைய அருமை-பெருமைகளை நினைவு கூர்ந்து எனக்கு நீண்ட கடிதங்கள் எழுதினார்கள். அவர்கள் எல்லாருமே அவர் தங்களுக்குக் கல்வி மட்டுமே கற்பித்தவர் அல்லர், தங்களிடம் நன்னடத்தையையும் ஏற்படுத்தியவர் என்று புகழ்ந்துரைத்த போது நாங்கள் பெருமைகொண்டோம்.
ஒரு புத்தகமே எழுதுகிற அளவுக்கு அவரைப் பற்றிய ஏராளமான செய்திகள் உள்ளன. மொத்தத்தில் அவர் மக்களாய்ப் பிறந்த நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். நான் அவரை நினைக்காத நாளில்லை. அவரைப் பற்றிய நினைவுகள் என்றும் நீங்கா.
(எழுத்தாளர் உஷா தீபன் மதிப்புக்குரிய தம் தந்தை பற்றி எழுதிய கட்டுரையும் நினைவுக்கு வருகிறது.)
*********
.
“““““““““““““““““““““jothigirija@live.com
- லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை
- ஒற்றைத் தலைவலி
- இப்படியாய்க் கழியும் கோடைகள்
- தீர்ப்பு
- புகழ் பெற்ற ஏழைகள் 19
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்
- மங்கோலியன் – I
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14
- தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !
- தீவு
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
- கவிதைகள்
- இரகசியமாய்
- தனக்கு மிஞ்சியதே தானம்
- நீங்காத நினைவுகள் 14
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]
- வேர் மறந்த தளிர்கள் – 26-27-28
- டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14
- ஸூ ஸூ .
- இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்
- நோவா’வின் படகு (Ship of Theseus)
- சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து
- முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]
- பால்காரி .. !
- தாயுமானாள்!
- பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…
- 2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !