வேர் மறந்த தளிர்கள் – 26-27-28

This entry is part 20 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013
26 திருமணம்
சொந்தத்தில்  பெண் பார்த்தால் பிரச்னைகள்  வராது  என்ற  எண்ணத்தில் முன்பே பார்த்திபனுக்குப் பெண் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்த தூரத்து உறவான, கதிரவன் குடும்பத்தில் சம்பந்தம் பேசுவதற்கு முன்பாகத் தொலைப்பேசி வழியாக விபரம் சொல்ல அழைக்கிறார் தினகரன். சொல்லி வைத்தார் போல் மறுமுனையில் கதிரவன்தான் பேசுகிறார்.
“ஹலோ….! கதிரவனா பேசுறது…?”
“கதிரவன்தான்……பேசுறேன். தினகரன்தானே பேசுறது…..?”
“வணக்கம்,ஐயா….! என்னோட குரலை உடனே கண்டு பிடிச்சிட்டுங்கிலே?”
“பல வருசமா கேட்கிறக் குரலாச்சே…..அவ்வளவு சீக்கிரத்தில  மறந்திட முடியுமா தினகரன்? “
“நலமா இருக்கிறீங்களா….?”
“ஆண்டவன் புண்ணியத்தால நலமா இருக்கேன்….! நீங்க எப்படி இருக்கிறீங்க?”
“நல்லா இருக்கேன்….! ஆமா பையன்….வீட்டுக்கு வந்துட்டாரா…..?”
“ஆமாங்க கதிரவன்….! பையன் வீட்டுக்கு வந்து மூன்று வாரமாச்சு….!”
“ஓ….அப்படியா….? பையனை இனி ஒழுங்கா….கவனிச்சிக்கங்கையா..…!”
“நிச்சயமா….!”
“ஆமா….என்ன விசியம்….?”
“நல்ல விசியம் தான்….!”
“அப்படியா….ரொம்பச் சந்தோசம்….சொல்லுங்க தினகரன்!”
“நான் சுற்றிவளைக்க விரும்பல…நேரா விசியத்துக்கு வந்திடுறேன்!”
“தினகரன்….நாம நேற்று இன்னைக்கா பழகுறோம்…..பீடிகைப் போடாம
விசியத்துக்கு வாங்க…!”
“நம்ம….பையனுக்குக் கல்யாணம் செய்யலாமுனு இருக்கோம்….!”
“நல்ல காரியமாச்சே…..!தள்ளிப் போடாம உடனே செஞ்சிடுங்க….!”
“நீங்க மனசு வைச்சா மகனுக்குக் கல்யாணத்த உடனே முடிச்சிடலாம்….!”
“தினகரன் நீங்க என்ன சொல்றீங்க….!”
“ஆமாங்க கதிரவன்…..உங்க மகளை என் மகனுக்குத் திருமணம்செய்ய விருப்பப்படுறோம் உங்க விருப்பத்தைச்   சொல்லுங்க…?”
 “உங்கப் பையனுக்கு என் மகளைக் கொடுக்கிறேன்னு சொன்னது உண்மைதான்….! அது இரண்டு வருசத்துக்கு முன்னாடி!”
“அப்படின்னா….! உங்க முடிவுல இப்ப மாற்றமிருக்கா…?”
“நான் சொல்றேனு வருத்தப் படாதிங்க தினகரன், நான் எப்பவும் வெளிப்படையாப் பேசுவேன்னு உங்களுக்கேத் தெரியும்….!”
“நாம…..உறவுக்காரங்க.உங்க மனசுல இருக்கிறத தயங்காமச் சொல்லுங்க, இதுல வருத்தப்பட என்ன இருக்கு…. !”
“என்னடா இவன் மூஞ்சில அடிச்ச மாதிரிப் பேசுறான்னு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது!  ஜெயிலுக்குச் சென்று வந்த உங்கப் பையனுக்கு மகளைக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை, என்னை மன்னிச்சிடுங்க…!”
            திடீரென, இருவரின் உரையாடலில் ஓர் இறுக்கம் ஏற்படுகிறது! மறுமுனையில் கதிரவன்  ரிஷிவரை   வைக்கும்  ஓசை பலமாகக் கேட்கிறது!
             மலை போல நம்பிக்கொண்டிருந்த நெருங்கிய உறவினர் கதிரவன் ஒட்டு உறவு  இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சற்றும் எதிர்பாராமல் பேசியது தினகரனுக்குப் பெரும் அதர்ச்சியைத் தருகிறது!
             பெண்  கொடுப்பார்கள்  என்று முழு நம்பிக்கையுடன் இருந்த தினகரனுக்கு கதிரவனின் கேள்வி, மற்ற உறவினர்களின் மீதும்   அவநம்பிக்கையை  ஏற்படுத்தியது!  கதிரவனுடனானத்        தொலைப்பேசி
உரையாடலுக்குப் பின் கணவரின் முகம் வாட்டமடைந்ததைக் கண்ட அம்பிகை துணுக்குறுகிறார்!
“என்னங்க….பெண்வீட்டுக்காரங்க என்ன சொன்னாங்க….?” விபரமறிய ஆவலுடன் கேட்கிறார் அம்பிகை.
“ம்…..என்ன சொல்லுவாங்க….?” கவலை தோய்ந்த முகத்துடன்  பதில் கூறுகிறார்.
“அவர்கள்…..என்ன சொன்னாங்கிறத, மறைக்காமச் சொல்லுங்க அமைதியுடன் அம்பிகைக் கேட்கிறார்.
“செயிலுக்குப் போன நம்ம மகனுக்குப் பெண்ணைக் கொடுக்க முடியாதுன்னு, கதிரவன் முடிவாச் சொல்லிட்டாரு….!”
“இரண்டு வருசத்துக்கு முன்னாடி தன் மகளைப் பார்த்திபனுக்குக் கட்டி வைக்கலாம்னு சொன்ன அவரா இன்றைக்கு மாற்றிப் பேசுறாரு….?  ஆச்சரியமா இருக்கே!”
“இதுல ஆச்சரியப் பட என்ன இருக்கு அம்பிகை….நம்ம நேரம் சரியில்ல!  நாம வலியப் போனாலும்,சொந்தங்கள் தலை தெரிக்க ஓடுதுங்க.பலம் கொண்ட யானை தரையில் இருக்கும் வரையில்தான் அதற்குப் பலம், சேற்றில் தவறி விழுந்துவிட்டால் அது தன் முழுபலத்தையும் இழந்துவிடும். யானையைப் போன்ற நிலைதான் இப்போது நமக்கும்!”
“நிலைமை கொஞ்சம் தடுமாறி போயிருக்கும் இந்த நேரத்தில சொந்தங்கள் ஓடோடிவந்து நம்மைக் கைத்தூக்கிவிடுவாங்கனு பார்த்தா…..! எப்ப கீழே சறுக்கி விழுவோம், நம்பமீது ஏறி குதிரை ஓட்டலாமுனு கனவு காண்கிறார்கள்!
                    27 கைகொடுத்த இல்லம்
இவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க!”  மனைவி கடுங்கோபங் கொள்கிறார்.
            வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத் தோடுப்  பழகும்   வேடதாரிகள்  நமக்கு   இனியும்  வேண்டாம்  என்ற  தீர்க்கமான  முடிவுக்கு  வந்து  விட்டனர்  கணவனும்  மனைவியும்.
           பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை,பார்த்திபன் கேட்டதும் பெரும்  அதர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்! தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான்.
            பெற்றெடுத்த தாயிக்கும் பல சிரமப்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்! யாரிடமும் தலைவணங்காதப் பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலைக் கொள்கிறான்! தனது செயலுக்காகக்  கூனிக் குறுகிப்போகிறான்!
           நான்   முந்தி  நீ  முந்தி  என்று  போட்டிப்  போட்டுக் கொண்டு  தனக்குப் பெண்  கொடுக்க  வந்த  உறவினர்கள், இப்போது  கண்டும்  காணாதது  போல்  நடந்து  கொண்டது குடும்பத்தார்  எதிர்ப்பார்க்காத  ஒன்று!  இதுநாள்  வரை மலைபோல் நம்பிக்  கொண்டிருந்தவர்கள் தங்களை  நட்டாற்றில் தவிக்கவிட்டு  வேடிக்கைப்  பார்க்கிறார்களே  என்று  எண்ணிப்பார்த்த போது  அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது!
             “பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் பிரச்னை ஏதுமின்றி வாழ்வதைத்தானே எல்லாப் பெற்றோர்களும் விரும்புவார்கள்? அவர்கள் கிடக்கிறார்கள் சுயநலமிக்கவர்கள். கடவுள் உனக்கென ஒரு பெண்ணை இந்தப் பூமியில் படைக்காமலா இருப்பார்? நீ எதற்கும் கவலைப் படாதே பார்த்திபன்.” அப்பா ஆதரவுடன் பேசிய பின்னரே,  பார்திபன் மனம் சற்று ஆறுதல் அடைகிறான்! நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று அமைதியானான்.
           ஒரு முறை எதிர்ப்பாராமல் செய்துவிட்ட தவற்றுக்கு மன்னிப்பே கிடையாதா? மனிதன் திருந்துவதற்கு வாய்பே தராத மனிதர்கள் என்ன மனிதர்கள்? சந்தர்ப்பச் சுழ்நிலை ஒரு நல்ல மனிதனையும் கெட்டவனாக்கிவிடலாம் அல்லவா? இந்த உண்மையை ஏற்க மறுக்கும் அவர்களிடம் நான் ஒருபோதும் மண்டியிடப் போவதில்லை என்று முடிவுக்கு வருகிறான் பார்த்திபன்! எதிர்காலத்தில் தனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை நிச்சயமாக அமையும் என்ற நம்பிக்கை மட்டும் அவன் உள்ளத்தில் தொக்கி நின்றது !
            தன் தனிமையப் பயன்படுத்தி,என்னைத் தப்பான வழியில் கொண்டு சென்று போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி என் வாழ்வைத் திட்டமிட்டு அழித்த  அந்தத் தீய நண்பர்கள் அழிந்து போனார்கள்! அவர்களிடையே ஏற்பட்ட நட்பை ஒரு கெட்டக் கனவாக பார்த்திபன் நினைக்கிறான்.கௌரமான குடுப்பத்தின் நல்ல பெயரைக் கூடா நட்பால் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டேனே! தனக்கு மன்னிப்பே கிடையாது!
             சிறைவாசம் அவனுக்கு நல்ல படிப்பினையைக் கொடுத்திருந்தது! அது வாழ்வின் உன்னதத்தைத் தெளிவுபடுத்தியிருந்தது! அர்த்தமுள்ள வாழ்வை இனி வாழ்வதென்ற கொள்கையை ஏற்றுக்கொண்டான்!
            தனக்கு இன்னும் பல நல்ல நண்பர்கள் இருகின்றார்கள். அவர்கள் என் குண நலன்களை அறிந்தவர்கள். என் நல்வாழ்க்கையில் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனக்கு நிச்சயம் உதவுவார்கள் என்று நண்பர்களின் உதவியைப் பார்த்திபன் நாடினான். நண்பர்கள் பலரும் அவனுக்கு உதவ முன் வந்ததை எண்ணி ஆறுதல் கொண்டான்.
              நெருங்கிய  நண்பன்  கோமகன், பார்த்திபனின்  பள்ளித்  தோழன்; மிகவும் நல்லவன்.  பிறருக்கு   உதவும்  நற்குணமுள்ளவன்.  பார்த்திபனின்  நிலைக்கா மிகவும்  வருத்த  மடைந்தவன்.  பார்த்திபனுக்காக எதுவும் செய்ய மனம் கொண்டவன்.
              மகனின் திருமணம் குறித்து மிகவும் நம்பிக்கையுள்ள கோமகனிடன்தான்அம்பிகை பேசினார்.அவர்களுக்குஉதவ  முன்வந்தான்.
செயலிலும்  உடனே  இறங்கினான்.  பார்த்திபன்  இல்லத்திற்குச்  சென்று  அவனதுப்  பெற்றோர்களைக் கண்டு பேசினான். கோமகன்   பார்த்திபன்  பெறோர்களுக்கு நல்ல  பழக்கமிருந்தது. அவன்  மீது  நல்ல  மரியாதையும்   நம்பிக்கையும்  கொண்டிருந்தனர்.
            பார்த்திபன்  அவன்  பெற்றோர்  மூவரும் கோமகனை வரவேற்கின்றனர்.  வரவேற்பு  அறையிலுள்ள  சோபாவில்  அமர்கின்றனர்.
வழங்கப்பட்ட   தேநீரை  அருந்திய   பின்னர்  கோமான்  பேசத்  தொடங்கினான். வீட்டிலுள்ள அனைவரும்  அவன் பேசுவதையே  உன்னிப்பாகக்  கேட்கின்றனர்!
                                   28 வாழ்க்கை
“அம்மா ….. நான்   பேசுவதைத்  தப்பாகக்   எண்ண வேண்டாம் ”  என்று  கூறியபடி  மூவரையும்  பார்க்கிறான்.
 “தேவை  இல்லாத  பயம்  வேண்டாம் …..சொல்ல வந்ததைத்  தயங்காமல்  சொல்லுப்பா  நாங்க  எதையும் தப்பா எடுத்துக்க  மாட்டோம்”! அம்பிகைதான் அவனுக்குத்  தைரியத்தைக் கொடுக்கிறார். கோமகன்  மீண்டும்    ஆர்வத்துடன்      பேசத்    தொடங்குகிறான்.
“எனக்கு வேண்டிய ஒருவர்,கடந்த இருபது வருசமா காப்பார் பட்டணத்தருகில் தன் சொந்த நிலத்தில் ‘ரீத்தா அன்பு இல்லம்’ என்ற பெயரில் ரீத்தா அம்மையாரும்,மாறன் அங்கிளும் மிகச்சிறப்பாக அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார்கள்.
“அந்த இல்லம் எங்கே இருக்கு…..தெளிவா சொல்லுங்க….!” தினகரன் கேட்கிறார்.
“கிள்ளானிலிருந்து கோலசிலாங்கூர் செல்லும் வழியில், இருபதாவது கிலோ மீட்டரில் இருக்குங்கையா….!” தெளிவு படுத்துகிறான் கோமகன்.
“அங்கு தங்கி இருப்பவங்க அனைவரும் நம்மவர்களா….?” விபரம் அறிய விரும்புகிறார் அம்பிகை.
“அங்கு இருப்பவர்கள் எல்லாரும் நம்மவர்கள்தாம்.நான் பத்து வருசமா   அந்த இல்லத்துக்கு உதவி செய்துவருகிறேன். அந்த இல்லத்தில்  பல  பெண்கள்  இருக்கிறார்கள். அவர்களில் பலர் சிறுவயதிலிருந்து  ரீத்தா அம்மையார் கண்காணிப்பில் வளர்ந்தவர்கள்.நன்றாகப் படித்துள்ள  அழகும்  அறிவும்  நிறைந்த  பெண்கள்  பலர்  இருக்கிறார்கள்.  அந்தப்   பெண்களில்  பிடித்த  யாரையாவது  பார்த்திபனுக்குத்  திருமணம்  செய்து  வைக்கலாமே” என்று  சொன்ன  போது  பெற்றோர்  அதிர்ந்து போகின்றனர்!
இப்படிப்பட்ட  ஒரு கருத்து  கோமகனிடமிருந்து  வரும்  என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. மூவரும்  என்ன கூறுவது  என்று  தெரியாமல்  ஒருவர்  முகத்தை  ஒருவர்  பார்த்துக்  கொண்டு பதில்  ஏதும்  கூறாமல்  மெளனம்  காக்கின்றனர்.
“என்னம்மா……நான் சொன்னதைக் கேட்டு  அதிர்ச்சியடைந்துட்டீங்களா?”  கோமகன்தான்  மெளனத்தைக்  கலைக்கிறான் !
“வந்து……கோமகன் என் ஒரே மகனுக்கு  அனாதை  இல்லத்தில்   போய்ப் பெண் எடுப்பதா…? அதான்  தயக்கமா இருக்கு …!” அம்பிகை தயங்கியபடிக் கூறுகிறார்.
         பார்த்திபன்  எந்த வித  உணர்ச்சியையும் காட்டிக்  கொள்ளாமல் , அமைதியாக  அமர்ந்திருக்கிறான்!
“அம்மா … இதில்  என்னம்மா  தயக்கம்  வேண்டி இருக்கும் ? எல்லாம்  நம் மனதைப்  பொறுத்தது.  பெரும்  மனசு  வைச்சு,  அந்தப்  பிள்ளைகளுக்கு  நம்மைப்  போன்று  நல்ல  உள்ளம்  படைத்தவர்கள்தாம்   உதவ   முடியும்.  திக்குத்தெரியாத  அந்தப்  பெண்களின் வாழ்வில்  ஒளியேற்றியப் புண்ணியம்  உங்களைச் சாரட்டும்! நல்லவர்கள்தாம்   நல்ல காரியங்களைச்  செய்ய  முடியும்!” கோமகன் சொல்லியதைக் கேட்டு அம்பிகையால் எதுவும் பேசமுடியவில்லை!
“நீங்க  மனசு வைச்சா,  இந்த  நல்ல காரியம்  நாளையே  நடக்கும்!” உறுதியுடன் கூறுகிறான்.
“ஊர் உலகம் என்ன நினைப்பாங்கனு தயக்கமா இருக்கப்பா…..!” கவலையுடன் கூறுகிறார்  அம்பிகை.“உங்க மனவேதனைக்கு யார் ஆறுதல் சொல்வாங்கச் சொல்லுங்கம்மா…?”
கோமனும் அம்பிகையும் பேசுவதைக் அமைதியுடன் கவனித்துக் கொண்டிருந்த தினகரன் தனது கருத்தைக் கூறுகிறார்.
“அம்பிகை….நாம இப்படியே மற்றவங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால்,மகனுக்கு ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாது. கோமகன் சொல்வது போல செயிறதுல தப்பே கிடையாது!”
“அம்மா….ஆதரவற்றப்  பிள்ளைகளுக்கு  உங்கள்  பிள்ளை  மூலமாக  உதவுவது  தெய்வத்  தொண்டுக்குச்  சமம்! நல்லா  யோசிச்சுச்  சொல்லுங்கம்ம……! உங்கப் பையனின் வாழ்க்கை ஆண்டவன் புண்ணியத்தால நல்லா நடக்கும்.
           என் வார்த்தையை நீங்கத் தாராளமாக நம்பலாம்.அந்த இல்லத்தில் பெண் எடுத்த பையன்கள் மற்றவங்கப் போற்றும் அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். நீங்கள் எதற்கும் கவலைப் படாம சரின்னு பதில் சொல்லுங்கம்மா!” அம்பிகையை வற்புறுத்துகிறான் கோமகன்.
“என்னங்க……! நீங்க என்ன சொல்றீங்க?” அம்பிகை கேட்கிறார்.
“கல்யாணம் செஞ்சிக் குடுத்தனம் செய்யப் போற மகனைக் கேளு அம்பிகை.பார்த்திபனுக்குச் சம்மதம்னா எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை….!”பட்டனவர்த்தனமாகத் தினகரன் தனது கருத்தைக் கூறுகிறார்!
“பார்த்திபன்….நீ யாருக்கும் இல்லாம உன் மனசில உள்ளத ஒளிவுமறைவு இல்லாமச் சொல்லிடுப்பா…!” அம்மா  அழாக்குறையாகக் கேட்கிறார்.
“அம்மா இது என் வாழ்க்கை! நான் முடிவு செய்துவிட்டேன்.ஆமாம், கோமகன் எனக்காகத் தேடித் தந்த வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கு! உதாசினம் செய்த சொந்தங்களை விட நமக்கு எந்த உறவும் இல்லாத பிறத்திப் பெண்தான் நமக்கு ஒத்துப் போகும்.
Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *