ஒரு விடுமுறையில் தமிழகம் சென்றிருந்தேன். அப்போது மகாபலிபுரம் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க விரும்பினேன்.
நான் கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நாவலை விரும்பி திரும்பத் திரும்ப பலமுறைகள் படித்து மகிழ்ந்திருந்ததால் மகாபலிபுரம் மீது அதிகமான ஈர்ப்பு உண்டானது.
முதலில் கடற்கரைக் கோவில் சென்றேன். சுற்றுச் சுவர்கள் சரிவர பராமரிக்கப் படாவிடினும், அதன் பழமையிலும் தனி அழகைக் கண்டேன். கோவிலின் அழகிய அமைப்பும், அருகில் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பும் அதன் சரித்திரத்தைக் கூறுவது போன்றிருந்தது. சிவகாமியின் சபதத்தில் இந்த கோவில் பற்றி கல்கி ஏன் எழுதவில்லை என்ற எண்ணமும் தோன்றியது.
மகேந்திரப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள அபூர்வ சிற்பங்களைக் கண்டு பிரமித்த நிலையில் வீடியோவில் பதிவு செய்து கொண்டேன்.
ஒரே பாறையில் குடைந்து செதுக்கியுள்ள குகை மண்டபத்தில் உட்கார்ந்து இளைப்பாறியபோது பல்லவ சிற்பிகளின் கலைத் திறனை எண்ணி வியந்தேன். இதே மகாபலிபுரத்தின் எழில்தானே அன்று கல்கியையும் அந்த மாபெரும் காவியத்தை எழுத வைத்திருக்கும் என்றும் எண்ணிக்கொண்டேன்.
வீதியின் மறு பக்கத்தில் சிற்பக் கூடங்கள் வரிசை வரிசையாக இருந்தன. அங்கு சென்று பார்த்தேன். சிற்பிகள் பாறைகளில் உளியால் செதுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் கைவண்ணத்தில் அந்த உயிரற்ற பாறைகள் கொஞ்சங்கொஞ்சமாக உயிர் பெறுவது தெரிந்தது. சிற்பக் கலைக்கு பொறுமை மிகவும் தேவை என்பதும் தெரிந்தது. அதோடு மிகவும் நிதானமும் தேவை என்பதும் உண்மை. கொஞ்சம் தவறி பாறை உடைந்து விட்டால் அதை மீண்டும் ஒட்ட முடியாது.
அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த சிற்பிகளிடம் பேசியபோது அவர்கள் பரம்பரை பரம்பரையான சிற்பிகள் என்பதும் தெரிய வந்தது.
அதே வரிசையில் சிற்பங்கள் விற்கும் கடைகளும் இருந்தன.
கருங்கல், மரம், உலோகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதை வாங்குவது என்ற தடுமாற்றம் உண்டானது.
கண்களை மூடி தியானத்தில் இருந்த கருங்கல் புத்தர் சிலை ஒன்றை எடுத்துக்கொண்டேன். புத்தர் அரண்மனை வாசத்தையும், அன்பு மனைவியையும் துறந்து சந்நியாசி கோலம் பூண்டு ஏற்றத் தாழ்வு மிக்க சமுதாயத்தில் சமத்துவம் போதிக்க முயன்ற விதம் என்னைக் கவர்ந்திருந்தது. வெறும் போதனையுடன் நில்லாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் புத்தர்.
கனமான கருங்கல் சிலைதான். பிரயாணத்தின்போது கைப் பையில் தூக்கிச் செல்லலாம்.
வேறு எதை வாங்கலாம் என்று யோசித்து திரும்பினேன்.
தொலைவில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் என்னைப் பார்த்து சிரிப்பது போன்றிருந்தது! நான் அவரை நோக்கிச் சென்றேன். ஆம். அவர் சிரித்துக்கொண்டுதான் ஆடுகிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள அதே நடராஜரின் அச்சு.
நான் சிதம்பரத்தில்தான் பிறந்து வளர்ந்தவன். எனது முன்னோர்கள் வழிபட்ட கடவுள் அவர்.
அவரை உற்று நோக்கினேன். ” என்னையும் உன்னோடு கொண்டு போ . ” என்று சொல்வது போன்றிருந்தது. தூக்கிப் பார்த்தேன். புத்தாரைவிட நான்கு மடங்கு கனம். உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. பளபளக்கும் தங்க நிறம்.
” இது என்ன உலோகம்? இவ்வளவு கனமாக உள்ளதே! ” விற்பனையாளரிடம் வினவினேன்.
” சார். இது ஐம்பொன் சிவன். ” என்றார்.
தங்கம், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையை ஐம்பொன் என்பது நான் அறிந்ததுதான்.
அதன் விலை பத்தாயிரம் ரூபாய் என்றார். நான் புத்தரை இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். அவர் வெறும் கருங்கல். ஆனால் இவரோ ஐம்பொன்! பேரம் பேசி ஒருவாராக எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். அதற்கான ரசீதையும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். ஒரு வேளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கோவில் சிலையை கடத்திச் செல்கிறேன் என்று எண்ணலாம் அல்லவா.
மகள் சில்வியா வீட்டில் பிரயாணப் பெட்டிகளை தயார் செய்தேன். இரண்டு பெட்டிகளை நூல்கள் அடைத்துக்கொண்டன. கைப்பையில் புத்தரையும் சிவனையும் கச்சிதமாக வைத்துத் தந்தார் மருமகன் குமரன்.
அன்று நள்ளிரவில் புத்தரும் சிவனும் பிரயாணச் சீட்டு இல்லாமலேயே என்னுடன் விமானத்தில் பயணம் செய்தனர்!
வீடு திரும்பியதும் முதல் வேலையாக புத்தரை என்னுடைய படிக்கும் அறையில் மேசை மீது வைத்தேன். தாண்டவமாதும் சிவனை ஹாலில் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்தேன்.
அதன் பின்புதான் பிரச்னை எழுந்தது.
சிவனைப் பார்த்த சில உறவினர்கள் முகம் சுளித்தனர்.
” இதை ஏன் கொண்டு வந்தீர்கள்? ” இப்படிக் கெட்டவர் என்னுடைய மூத்த மைத்துனர் இயேசுதுரை.
” இதைக் கும்பிட நான் கொண்டு வரவில்லை. கலை அம்சத்திற்காக கொண்டு வந்துள்ளேன். இது நான் பிறந்த ஊரான சிதம்பரத்தை நினைவு படுத்தும். ” நான் சமாளித்தேன்.
அநேகமாக அனைத்து கிறிஸ்துவ உறவினரும் நண்பர்களும் அது பற்றி ஏதாவது கேட்கத்தான் செய்தனர். நான் அது பற்றி கவலை கொள்ளவில்லை.
என் நண்பர் ஒருவரிடம் அது பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டேன்.
” ஆமாம். பொதுவாக சிவனை வீட்டின் நடுவில் வைத்திருந்தால் வீடு ஆட்டம் கண்டுவிடும். ” அவர் திட்டவட்டமாகக் கூறினார். அவர் ஒரு ஹிந்து.
எதற்கு வீண் வம்பு என்ற எண்ணத்துடன் சிவனை அங்கிருந்து அகற்றி அவரையும் எனது படிக்கும் அறையில் புத்தரின் பக்கத்தில் வைத்துக்கொண்டேன்.
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தரைத் துடைத்து
பளபளக்கச் செய்வேன். சிவனுக்கு உலோக பாளிஸ் போட்டு மின்னச் செய்வேன்.
வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பூக்கள் அப்போது நிறைய பூத்திருந்தன. அவற்றில் சிலவற்றைப் பறித்து புத்தருக்கும் சிவனுக்கும் வைத்து அழகு பார்த்தேன். ஆனால் நான் அவர்களை வணங்கவில்லை. நான் அனைத்தையும் கலைக் கண்களுடன்தான் பார்த்தேன். ஆனால் மற்றவர் கண்களுக்கு இது சந்தேகத்தை உண்டுபண்ணிவிட்டது.
மற்றவர் என்பது வேறு யாரும் இல்லை. அவள் என் மனைவிதான். புத்தர் பற்றி அவள் ஏதும் சொல்லவில்லை. ஆனால் சிவனை அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவரை யாரிடமாவது கொடுத்துவிடச் சொன்னாள். நான் மறுத்துவிட்டேன்.
நல்ல வேளையாக அந்த நேரம் பார்த்து என்னுடைய பால்ய நண்பன் செல்வன் தாய்லாந்திலிருந்து வந்து சேர்ந்தான்.
அவன் பிறப்பால் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவன். ( நான் அதிலிருந்து பிரிந்து வந்த சீர்திருத்த்தச் சபையைச் சேர்ந்தவன் – தமிழ் சுவிசேஷ லூத்தரன் திருச்சபை )
ஆனால் அப்போது அவன் சிவபக்தன்! திருவண்ணாமலை சிவ ஆலயம் சென்றபோது சிவபெருமானின் தரிசனம் கிடைத்து அன்றிலிருந்து சிவபக்தனாக மாறிவிட்டான். கைலாஷ் வரை யாத்திரையும் சென்று வந்துள்ளான்.
அவன் சிங்கப்பூரில் என்னோடு வளர்ந்தவன். சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் ( Political Science ) பட்டம் பெற்றவன். அவன் ஆங்கில எழுத்தாளன். சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ பற்றி ஒரு ஆங்கில நூல் எழுதி மலேசியாவில் பத்தாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன! ( அது சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுவிட்டது ).
ஒரு கத்தோலிக்க கிருஸ்துவன் சிவனை வழிபடுவது வினோதமே. ஆனால் அவன் அதோடு நிற்கவில்லை. புத்தரைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால்தான் தாய்லாந்து சென்று ஒரு புத்த மடத்தில் பல மாதங்கள் தங்கி புத்த பிக்குகளின் வாழக்கை முறையை அறிந்து வந்துள்ளான் ,
செல்வன் உண்மையான கடவுளை தேடி இன்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவன். மதங்களைப் பற்றி நிறைய படித்து வாதிடுபவன்.
என் நண்பன் மீது மனைவிக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.
அவளை நான் பெண் பார்த்தபோது அவனும் இன்னொரு பால்ய நண்பனான நா. கோவிந்தசாமியும் ( அவன் சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளனும் கணினித் தந்தையுமாவான். அவன்தான் உலகில் முதன்முதலாக தமிழில் விசைப் பலகையை கண்டு பிடித்தவன். அவன் இப்போது உயிருடன் இல்லை )
பெண்ணைப் பார்த்ததும் , ” அழகான இளம் பெண் ” என்று செல்வன் வர்ணித்தான் . அப்போது அவளுக்கு வயது பதினெட்டு . என் வயது இருபத்தெட்டு.
செல்வன் வந்தது எனக்கு சாதகமானது.
அறைக்குள் நுழைந்த அவன் சிவனைப் பார்த்து பிரமித்து நின்றான்.
” என் அப்பன் எப்போது இங்கே வந்தார்? ” என்னைப் பார்த்து கேட்டான். இரு கரம் கூப்பி அவரை வணங்கினான்.
நான் மகாபலிபுரம் பற்றி கூறினேன்.
” இவரும் இங்கு வந்துள்ளாரா? இவரிடம் இருந்துதான் இங்கே வந்தேன். இங்கும் இவர் உள்ளாரே? ” புத்தரைப் பார்த்துக் கூறினான்.
அன்று இரவு விடிய விடிய அவன் சிவன் பற்றி விளக்கம் தந்து கொண்டிருந்தான்.
சைவ சித்தாந்தம், ஓம் என்பது பற்றியெல்லாம் விளக்கம் கூறினான். ஒரே மதத்தைப் பற்றி மட்டும் தெரிந்திருப்பது போதாது, அனைத்து மதங்கள் பற்றியும் அறிந்திருப்பது நல்லது என்றான்.
அவன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்ட நான் சிவனை ஒரு கலைப் பொருளாகத்தான் கொண்டுவந்துள்ளேன் என்பதையும், அவர் சிதம்பரத்தின் சின்னம் என்பதையும் கூறினேன். அவன் அது பற்றி கவலை கொள்ளவில்லை. சிவன் தன்னை எவ்வாறு அழைத்து தன் வசமாக்கினார் என்பதையே திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தான்.
நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதை என் மனைவியும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். நான் வேலைக்குச் சென்றபோது அவளிடமும் அவன் சிவன் பற்றிதான் பேசிக்கொண்டிருப்பானாம். எனக்கு அது கேட்டு உள்ளூர மகிழ்ச்சிதான்.
இவ்வாறு சிவபக்தன் செல்வன் என்னுடன் ஒரு வாரம் கழித்துவிட்டு மெர்சிங் கடற்கரையிலுள்ள தன்னுடைய குடிலுக்குச் சென்றுவிட்டான். அங்குதான் அவன் தனிமையில் இரவு பகலாக ஆங்கில நூல்களில் மூழ்கிக் கிடந்தான்.
கொஞ்ச நாட்கள் புத்தரும் சிவனும் என்னுடைய அறையில் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் இருந்தனர். புத்தர் அதே தியான நிலையில். சிவன் அதே ஆனந்த தாண்டவ நிலையில்!
ஆனால் அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.
வீட்டிலும் குடும்பத்திலும் எழும் சிறு சிறு பிரச்னைகளும் சிவனின் தலையில் விழுந்தது. அவரை யாரிடமாவது தந்துவிடுமாறு என் மனைவி நச்சரித்தாள்.
நான் புத்தரைப்போல் அமைதி காத்தேன். சிவனாரோ எது பற்றியும் கவலை இன்றி தொடர்ந்து இடது காலைத் தூக்கியவண்ணம் ஆடிக்கொண்டிருந்தார்.
அப்போது பார்த்து சிங்கபூரிலிருந்து என்னுடைய பால்ய சிநேகிதி லலிதா கணவருடன் வருகை தந்தாள். சிவனைப் பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.
” உனக்கு வேண்டாம் என்றால் எனக்கு தந்துவிடு .” என்று அவள் என்னிடம் சொன்னபோது நல்ல வேளையாக மனைவி அருகில் இல்லை. இருந்திருந்தால் அன்றே சிவன் அவளுடன் சிங்கப்பூர் சென்றிருப்பார்!
ஒரு நாள் நிலமை விபரீதமானது. அன்று மனைவிக்கும் எனக்கும் சண்டை பெரிதாகிவிட்டது. என்றுமே கோபப்படாத நான் அன்று நிலை தடுமாறிவிட்டேன்.
அந்த கோபத்தில் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்த சிவனைத் தூக்கி காரில் வைத்துக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு புறப்பட்டேன்.
உள்ளூரில் எனக்கு இன்னொரு தோழி இருந்தாள். அவளும் என்னிடம் கேட்டிருந்தாள். அவளிடமே சிவனைத் தந்துவிடலாம் என்றுதான் கிளம்பினேன்.
எனது வீடு ஒரு மலை மீது அமைந்திருந்தது. கீழே செல்லும் வீதி வலது பக்கம் வளைந்து சென்று பிரதான வீதியை அடையும். வேகமாகச் சென்ற நான் அங்கு காரை வளைக்காமல் நேராகச் சென்றுவிட்டேன். அடுத்த நிமிடம் டமார் என்ற ஓசையுடன் எதிரே நின்ற கனரக வாகனத்தின் மீது மோதி நின்றது. ஒரு கணம் நான் நிலை தடுமாறி அதிர்ச்சியில் நினைவிழந்தேன்.
விழித்துப் பார்த்தபோது அருகில் என் வீட்டுக்குப் பின்புறம் வாழும் சீன நண்பர் நின்று கொண்டிருந்தார்.
என்னுடைய வலது கையில் அடிபட்டு வீங்கி வலித்தது. நெற்றியில் இரத்தம் வழிந்தது.
சிரிது நேரத்தில் காரை இழுத்துச் செல்ல பழுது பார்க்கும் ஆட்களும் காவல் துறையினரும் வந்து விட்டனர்.
சீன நண்பர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எக்ஸ்ரே படத்தில் எலும்பு முறிவு தெரிந்தது. மாவுக் கட்டு போட்டுக்கொண்டு இரண்டு வார மருத்துவ விடுப்புடன் வீடு திரும்பினேன்.
மறு நாள் காலையில்தான் கார் பட்டறைக்குச் சென்றேன். அதன் முன்பக்கம் பரிதாபமாக நொறுங்கியிருந்தது. முன் இருக்கையில் வைத்திருந்த என்னுடைய சிவனைக் காணவில்லை!உள்ளே நுழைந்து இருக்கைகளின் அடியில் தேடினேன்.
அங்கு அவர் படுத்த நிலையில் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆனந்தம் அடைந்தவனாக அவரைத் தூக்கிக் கொண்டேன். நண்பரின் காரில் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம். எங்களைப் பார்த்த மனைவி ஏதும் சொல்லவில்லை.
இன்றும் என்னுடைய சிவன் என் அறைக்குள் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டுதானிருக்கிறார்!
( முடிந்தது )
- நீங்காத நினைவுகள் – 19
- மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
- மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
- சிலை
- அழகிப்போட்டி
- நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
- திண்ணையின் இலக்கியத்தடம்-4
- புகழ் பெற்ற ஏழைகள் - 28
- ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
- அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
- அத்தம்மா
- டௌரி தராத கௌரி கல்யாணம் …22
- பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
- தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
- கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
- அவசரகாலம்
- நீண்டதொரு பயணம்
- கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
- தேடுகிறேன் உன்னை…!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
- புண்ணிய விதைகள் – சிறுகதை
- காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
- சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
- பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
- தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
- காதலற்ற மனங்கள்