நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’

This entry is part 6 of 31 in the series 13 அக்டோபர் 2013

vanndasan

மொழி ததும்பும் மனம் வாய்க்கப் பெறுவது ஒரு பெரும்பேறு. சட்டென்று வெள்ளம் பொங்கிப் பெருகும் நாட்களில் கிணற்றின் மேல்விளிம்புவரைக்கும் உயர்ந்துவந்து ததும்பும் தண்ணீர்போல மொழி மனத்தில் பொங்கித் ததும்புகிறது. அத்தருணம் ஒரு படைப்பாளியின் வாழ்வில் ஓர் அபூர்வத்தருணம். மொழி பழகும் ஒரு குழந்தை கண்ணில் படுகிற ஒவ்வொன்றுக்கும் தன் போக்கில் ஒரு பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தி அழைக்கத் தொடங்குவதுபோல, அந்த அபூர்வத்தருணத்தில் படைப்பாளி தன் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பார்க்கிறான். புதிதாக அடையாளப்படுத்த முனைகிறான். புதிய சொற்கள். புதிய புனைவுகள். புதிய உவமைகள். புதிய தொடர்கள். மொழியால் அதன் ஆகிருதியை அள்ளிவிடமுடியாதா என்னும்  கனவு அவனைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. சமீப காலமாக, உத்வேகத்தோடு புதியபுதிய கோணங்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதிவரும் . வண்ணதாசன் அபூர்வத்தருணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவராகத் தோன்றுகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒருவர் எதையோ படித்துவிட்டு அல்லது எழுதிவிட்டு பின்னிரவில் தூங்கப் போகிறார். அப்படி ஒரு பழக்கம். விளக்குகளை அணைத்துவிட்டு, படுக்கையில் அமரப்போகும் வேளையில் ஜன்னல் வழியாக உள்ளே இறங்கி தரையில் புரளும் பூனையைப் பார்க்கிறார். அக்காட்சியை மொழியால் அள்ள நினைக்கும் படைப்புமனம், அந்தப் பூனையையும் ஓர் எழுத்தாளராக உருவகித்துப் பார்க்கிறது. நாம் வெளிச்சத்தில் எழுதுகிறோம். பூனை இரவில் எழுதுகிறது. நாம் எழுதுகோலைக்கொண்டு தாளில் எழுதுகிறோம். பூனை தன் உடலையே எழுதுகோலாக்கி, இந்தத் தரையையே தாளாக்கி எழுதுகிறது. இனிமேல் அந்த அறை வெறும் அறை அல்ல, பூனை எழுதிய அறை.

ஒருவர் அதிகாலையில் தேநீர்க்கடைக்குச் செல்கிறார். அப்போது இன்னொருவரும் தேநீர்க்கடைக்கு வந்து சேர்கிறார். மனநிலை பிறழ்ந்தவர். எதையோ யாசகம் கேட்கிறார். அவர் தன் வலது கையில் ஒரு புறாவின் இறகைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அழகான புத்தம்புதிதான இறகு. தனக்கு எடுக்கத் தோன்றாத இறகை, அவர் எடுத்துவைத்திருக்கிறாரே என்று அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எடுத்துக்கொள்ளத் தோன்றிய கணம் ஓர் அற்புதக்கணம். மனம் பிறழ்ந்தவனுக்கு வாய்க்கும் அற்புதக்கணம் வளமான மனநிலை உள்ளவனுக்கு வாய்க்காதது துரதிருஷ்டம். அறிவு அகக்கண்ணைத் திறப்பதற்கு மாறாக மூடிவிடுகிறதோ என்று தோன்றுகிறது. மனம் பிறழ்ந்தவனே பாக்கியவானாக இருக்கிறான். நல்ல மனநிலை உள்ளவன் இழப்புணர்வால் குன்றிப் போகிறான். எங்கோ தெருவில் கிடந்த இறகை எடுத்துவைத்துக்கொண்டு அழகுபார்க்கத் தெரிந்தவன், தேநீர் யாசகம் வேண்டி கடைவாசலில் வந்து நிற்கிறான். வேகவேகமாக அதிகாலை நடையை முடித்துக்கொண்டு தேநீர்க்கடையின் முன்னால் வந்து நிற்பவன் அற்புதக்கணம் தனக்கு வாய்க்காததை எண்ணி மனம் நொந்துபோகிறான். யாருக்கு மனப்பிறழ்வு, மனப்பிறழ்வை மதிப்பிடும் அளவுகோல் எது என யோசனை விரிகிறது. மொழியால் அள்ளப்பட்ட அக்காட்சி புதிய மதிப்பீட்டை முன்வைக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து வயதில் சேகரித்த ஒரு பழைய மாட்டு லாடம் திடீரென ஒரு முன்னிரவில் ஒருவருக்கு ஞாபகம் வருகிறது. கிணற்றுக்குள் வீசப்பட்ட பாதாளக்கரண்டி எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டுவருவதுபோல, அந்த லாடத்தின் ஞாபகம் அன்றைய வாழ்க்கையை, அன்றைய கோலத்தை நினைவின் மேல்தளத்துக்கு இழுத்து வருகிறது. லாடத்தை, அது பூட்டப்பட்ட குளம்புக்கால்களை, அந்த லாடத்தோடு அந்த மாடு நடந்த சாலையை, அந்தச் சாலையோரத்து மரங்களை, அம்மரங்கள் உதிர்த்த பழங்களை என அடுத்தடுத்து ஏராளமான நினைவுகள் வந்தபடியே உள்ளன. எல்லாவற்றையும் மொழி அள்ளி வீசுகிறது. லாடம் என்பது என்ன? வண்டி மாட்டுக்கு ஏன் அதை அடிக்கவேண்டும்? வண்டிப்பாதையின் தரையை மாட்டின் கால்கள் பழகிக்கொள்வது மிகவும் முக்கியம். பாதை பழகப்பழகத்தானே, வண்டியை இழுக்கமுடியும்? வண்டியை இழுத்தால்தானே பாரத்தை கரைசேர்க்கமுடியும்?  லாடமின்மை ஒரு சுதந்திரம். லாடம் அந்தச் சுதந்திரத்தையே மறக்கவைத்துவிடுகிறது. வண்டிமாடுகள் மேயப்போவதில்லை. வண்டியிலிருந்து விடுவித்தாலும் வண்டிக்கு அருகிலேயே நின்று புல் தின்பது அதற்குப் பழகிவிட்டது. மாட்டுக்கு காலில் லாடம் என்றால், மனிதனுக்கு மனதில் லாடம். அவன் சுதந்திரத்தை அது பறித்தெடுத்துக்கொள்கிறது. அவன் கனவு, காதல், மகிழ்ச்சி, பரவசம் எல்லாவற்றையும் மொத்தமாகப் பறித்துவைத்துக்கொள்கிறது. அறுபது வருஷ வாழ்க்கை வெறும் லாடமாக அல்லவா போய்விடுகிறது. யாருடைய பாரத்தையோ சுமந்துசென்று யாருக்கோ கொண்டுசேர்ப்பதிலேயே அந்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது அல்லவா? மொழி அள்ளி அள்ளி நம் கண்முன்னால் வீசும் உண்மையின் முன்னால் இயலாமையின் பாரம் தாளாமல் நாம் கண்ணீர் விட்டுக் கசிந்து நிற்கிறோம்.

பார்வையற்றோர் பள்ளியிலிருந்து இரண்டுபேர் ஒரு கடைக்கு வருகிறார்கள். அரிசியின் பெயரையும் விலையையும் கேட்டு, அரிசியைத் தொட்டும் அள்ளியும் பார்க்கிறார்கள். குத்துக்குத்தாக அரிசியை எடுத்து உள்ளங்கையிலிருந்து உதிரவிடுகிறார்கள். பிறகு எதுவுமே வாங்காமல், எதுவுமே சொல்லாமல் வந்ததுபோலவே இருவரும் கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள். இந்தக் காட்சியையே ஒரு வினாவாக்கி அசைபோடும்போது, அதற்குரிய விடையை மொழி அள்ளிவந்து கொடுத்துவிடுகிறது. தம் ஊரின் அறுவடைவயலின் வாசனை நினைவு வந்திருக்கலாம் என ஒரு சாத்தியப்பாடுமட்டுமே முன்வைக்கப்படுகிறது. அரிசியைத் தொட்டுப் பார்த்ததும் அள்ளிப் பார்த்ததும் சில கணங்களுக்காகவாவது பழைய வாசனையை மனத்தில் நிரப்பிக்கொண்டு செல்லும் தந்திரம்தானா? அரிசி ஒரு புள்ளி. வாசனை இன்னொரு புள்ளி. மனத்துக்கு வாசனை. வயிற்றுக்கு அரிசி. வாசனையை வைத்து வயிற்றை நிரப்பிக்கொள்ளமுடியாது. வாசனை இல்லாமல் வயிறு நிறையாது. இந்த இரட்டைவாழ்க்கையை அளந்துசொல்வதற்காகத்தான் இந்தக் காட்சியே சித்தரிக்கப்படுகிறதா? கடைக்குச் செல்வதே வாசனையில் லயித்து நிற்கும் சுகத்துக்காகத்தான்போல.

வாசனையை நினைத்துக்கொள்கிறவர்களைபோல வேலை செய்த பள்ளிக்கூடத்தின்மீது உயிரையே வைத்துக்கொண்டிருக்கிறார் ஓர் ஆசிரியர். அவர் இறுதி ஊர்வலம் அவர் நேசித்த அந்தப் பள்ளிக்கூடம் வழியாகவே செல்கிறது. அவர் தலை அந்தப் பக்கம் திரும்பியதுபோல இருக்கிறது. அவர் உதடுகள் அசைவதுபோல இருக்கிறது. அவர் கவனம் முழுக்க பள்ளிக்கூடத்திலேயே பதிந்திருப்பதுபோல இருக்கிறது. மரணத்தால்கூட அந்த ஆசையைப் பிரிக்கமுடியவில்லை.

தொலைதூரத்திலிருந்து அழைக்கும் மனைவியோடு பேசமுடியாமல் மெளனத்தில் உறைந்துபோவது மிகப்பெரிய கொடுமை. ஒரு தேநீர்க்கடைக்காரனிடமும், ஆட்டோ ஓட்டுநரிடமும் அடுக்ககக் காவலாளியிடமும் ரத்தவங்கித் தாதியிடமும் பாதையோர உணவகத்தாரிடமும் மிக இயல்பாகப் பேச முடிந்த ஒருவன், ஊரிலிருந்து அழைக்கும் மனைவியோடுமட்டும் ஏன் பேசமுடியாமல் மெளனத்தில் மூழ்குகிறான்? மரணத்தால்கூட பிரிக்கமுடியாத ஆசையால் வதைபடுகிறவனா அவன்? அல்லது மனைவியின் எளிய ஆசையை நிறைவேற்ற முடியாமல்போன கசப்புணர்வில் வெந்து நலிகிறவனா அவன்? அந்த மெளனத்துக்கான பதிலில் எழுதப்படாத ஏராளமான கவிதைகள் உள்ளன.

தலைக்கவசம் விற்கும் ஒருவன், தர்பூசணிப்பழம் விற்கும் இன்னொருவன், நடுவில் ராதையின் பொம்மைகளை விற்கும் பொம்மைக்காரி. மூன்று புள்ளிகளிடையே நிகழும் மெளனநாடகத்தை நாம் ஒருபோதும் மறக்கவே முடியாது.  கத்திக்காரனின் பக்கம் சிந்தாத சிரிப்பை, தலைக்கவசக்காரனிடம் சிந்துகிறாள் பொம்மைக்காரி. அவள் சிரிப்பு ஒருவனுடைய மனத்தில் ஆனந்தத்தையும் இன்னொருவனுடைய மனத்தில் ஆத்திரத்தையும் நிரப்புகிறது. யாரும் விலைகேட்காத தர்பூசணியை ஆத்திரத்துடன் வெட்டும் பழக்கடைக்காரனின் சித்திரம் உறையவைத்துவிடுகிறது.

நினைவுகளின் பரணிலிருந்து கைக்குக் கிடைத்ததை உருவி உருவி எடுத்துக் கீழே போடுவதுபோல, கல்யாண்ஜி ஒவ்வொரு நினைவையும் காட்சியையும் மொழியால் அள்ளி கவிதைகளாக வடித்திருக்கிறார். அவற்றிலிருந்து நம்மால் அள்ளமுடிந்த அளவுக்கு நம் வாசக அனுபவம் விரிவடையும்.

(பூனை எழுதிய அறை –  கல்யாண்ஜி. சந்தியா பதிப்பகம். 77, 53 வது தெரு, ஒன்பதாவது அவென்யு, அசோக் நகர், சென்னை- 83.)

Series Navigationஅழகிப்போட்டிதிண்ணையின் இலக்கியத்தடம்-4
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    rathnavel natarajan says:

    பூனை எழுதிய அறை –
    படிக்க வேண்டிய புத்தகம். அருமையான எழுத்து நடை, மனதை பரவசப்படுத்துகிறது.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு பாவண்ணன்.
    வணக்கம் ஐயா திரு Vannadasan Sivasankaran.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அழகான மொழியில் அருமையான நூல் அறிமுகம் … வாழ்த்துகள் திரு பாவண்ணன் அவர்களே…டாக்டர் ஜி., ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *