‘ என் மோனாலிசா….’

This entry is part 2 of 29 in the series 1 டிசம்பர் 2013

12463_494054220661320_525265555_n

நாட்குறிப்பில் பதிவிடாத விடயம் 1:

க்கா, என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்த அன்றையப் பொழுது இன்னமும் என் ஞாபகத்தில்  அழுத்தமாய் பதிந்திருக்கிறது.அது மதியத்திற்கு முந்திய வேளை.

அக்கா மோனாலிசா புன்னகையுடன் உள்ளே வந்தார்.

“எப்படி இருக்க?” என்றார் அதே புன்னகை மாறாமல்.நான் சிரித்தேன். என்னைப் பெரிய மனுசி போல் மதித்து, அப்படி  நலம் விசாரித்தது நாணத்தை உண்டு பண்ணியது.

“ அதற்குள்ள வேலை முடிந்து விட்டதா?” மணியைப் பார்த்தேன் பன்னிரெண்டை தாண்டியிருந்தது.

“இல்லை, இது சாப்பாட்டு நேரம்.அங்கு இருக்க பிடிக்காமல் உன்னைப் பார்க்க வந்தேன்.நீ வேலைக்குப் போகலைன்னு உன் அப்பா  காலையில் சொன்னார்”

“ஆமாக்கா”

“பெண்ணா பிறந்துட்டா இப்படி தான் படுணும்.வயிற்று வலி எப்படி இருக்கு?மருந்து எதும் சாப்பிட்டியா?”

நான் பதிலெதும் சொல்லாது புன்னகைத்தவாறு அக்காவையே பார்த்தேன்.என் இயல்பை அவர் புரிந்து கொண்டார்.பெண்ணாக இருந்தபோதும் இது போன்ற விடயங்களை   பகிர்ந்து கொள்ள நாணப்படுவேன் என அவர் அறிந்து கொண்டார். அக்காவை உணவருந்தச்சொல்லி வற்புறுத்தினேன்.

“வேண்டாம்.சாப்பிட்டு விட்டேன்.சும்மா பேசிட்டுப் போகத்தான் வந்தேன்.இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு. கொஞ்சம் பேசிட்டுப் போறேன்”

“ஜூஸ் எடுத்து வரேன்’கா”

நான் பதிலுக்கு காத்திருக்கவில்லை.மனம் குதூகலித்தது.அக்காவைப் பார்த்ததும் அப்படியொரு மகிழ்ச்சி.மகா அக்கா, எனக்கு அறிமுகமான குறுகியக் காலத்திலேயே  என்னை உரிமையோடு நடத்தத் தொடங்கியிருந்தார்.

எழுத்துலகில் அவர் எனக்கு முன்னதாக   நீண்ட காலம் எழுதிவந்தவர்.படைப்புலகம் எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியிருந்தது.அவரது பிரபலத்தை மீறி  என்னிடம் மிக இயல்பாகப் பழகினார்.அரசியலைப் பற்றிய அவரது ஞானம்,சர்ச்சையில் வெளிப்படும் அவரது எழுத்து வீச்சு,படைப்பில் இழைந்தோடும் நகைச்சுவை,கவிதையில் தெறிக்கின்ற கவித்துவம்  என்னை அசர வைக்கும்.

பத்திரிகையில் மாத்திரமே பார்த்தறிந்த முகத்தை முதன் முறையாக நேரில் கண்டபோது பேசத் தயங்கி பேசாமலேயே வந்து விட்டேன்.வீடு வந்த பின் அவர் நின்றத் தோரணை,அவரது அசைவுகள் எல்லாவற்றையும் மனக்கண்ணில் கொண்டு வந்து ரதித்தேன். திரையுலக நட்சத்திரங்கள்  தந்திராத பரவசத்தைப் படைப்பாளியை பார்க்கையில்  பெறுகிறேன்.இன்று வரையில் அப்படித்தான்.அக்காவிடமும் ஒரு முறை இதனைச் சொல்லியிருக்கிறேன்.

“பைத்தியம்” என்ற ஒற்றை வார்த்தையை  உதிர்ந்தார்.

அவரது அறிமுகம் கிடைத்த பின் இப்படி அக்கா என்னைத் தேடிக்கொண்டு வருவது மாதத்தில் இரண்டு மூன்று தடவை நிச்சயம் நிகழ்ந்து விடும்.என் வீட்டிற்குச் செல்லும் சாலையைக் கடந்து தான்  அக்காவின் தொழிற்சாலை அமைந்திருந்தது.அக்காவின் வீடு எங்கள் நகரத்தின் தெற்கு திசையில் இருந்தது.

.நகரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அவரது வீடு இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்..கிழக்கில் இருந்த எங்கள் வீட்டிற்கும் நகரத்திற்குமான தூரமும் எறக்குறைய அதுதான். ஆக, மகா அக்கா தான் வேலைப் பார்க்கும் தொழிற்சாலையை அடைய  தினமும் ஆறு கிலோ மீட்டரைக் கடந்தாக வேண்டும்.அக்கா மிதிவண்டியில் வேலைக்கு வருவார்.

நான் குளிர் பானத்துடன் அக்காவை நோக்கிப் போனேன். அவரது கவனம் மேசையின் மீது இருந்த நாளிதழில் பதிந்திருந்தது. ஒடிசலான ஒயரமான தேகம். கல்யாண வயதை எட்டியப் பருவம்.அவருடையக் கூந்தலை மொத்தமாக வழித்து மேலே தூக்கி இரப்பர் வளையம் போட்டு கட்டியிருந்தார்.கீழே  கூந்தலை தொங்கவிடாமல் அதை சடைப்பின்னி இறுதியில் இன்னொரு இரப்பர் வளையத்தில் நுனியை கொஞ்சம் விட்டு கட்டியிருந்தார்.அது அக்காவின்  அமைப்புக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாது போல் இருந்தது.

எப்போதும் இப்படி ஒரே மாதிரிதான் அவர் தலை வாரியிருப்பார்.என்னைப் போல் இரட்டை சடையோ அல்லது அடுக்கு சடையோ  போட்டதில்லை.அப்படிப் பின்னினால்  தலையுடன் ஒட்டியது போலிருக்கும் அவரின்  கூந்தலுக்கு அழகாக இருக்கும் என்பது என் எண்ணம்.ஆனால் இதனை ஒரு முறைக்கூட அக்காவிடம் சொன்னதில்லை.அப்படிச் சொல்ல எனக்குள் எதோவொரு பயம். அக்கா மட்டும் என் கூந்தலை அடிக்கடி விமர்சிப்பார்.

“அலையலையா நீண்டிருக்கு..வெட்டி விடாதே” என்பார்.

அக்காவை மனதால் நான் நெருங்கியிருந்தும்  பல முறை என் அன்பை வெளியே காட்ட முடியாதபடி இருந்துள்ளேன்.அதற்கு காரணங்களும் இருந்தன. அக்கா எந்த நேரத்தில் எதை பேசுவார் என்பது பல சமயத்தில் கணிக்க முடியாது.பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று சிந்தனையில் மூழ்கி விடுவார்.படைப்பில் உள்ள நகச்சுவை உணர்வை பேச்சில் பார்க்க இயலாது.நான் மிகுந்த ரசனையுடன் பேசுவதை சாதாரணமாக பார்ப்பார்.ஆனால் எதையும் பொறுமையாக கேட்கும் பழக்கமுடையவர்.

இலக்கியத்தைப் பற்றி ஆழமாக பேசும் அவர் குடும்ப விசயங்களைப் பற்றி பேச ஆர்வம் காட்டுவதில்லை.நானாக ஏதாவது கேட்டாலும் மலுப்பலாய் பதில் வரும்.அப்படியே ஏதும் பேசினால் அதுவும் ஆழமாக இருக்காது.அது போலவே என் குடும்பத்தைப் பற்றி அக்கா அக்கறைக் காட்டிப் பேசியதில்லை.அதில் எனக்கு வருத்தம் இருந்தது.ஆயினும் நாங்கள் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அது குறித்து நானும் அதிக கவனம் கொள்ளவில்லை.

கொண்டு வந்த குளிர் பானத்தை பருகக் கொடுத்தேன்.

அவரின் முகத்தில் எதோ கவலை நிழலாய் படிந்திருப்பது போல் தோன்றியது.நெருக்கத்தில் அந்த முகத்தை உற்று பார்க்கையில் அவரது சிறிய கண்கள் அழகை இருந்தன.சிரிக்கும் போது அவை தாமாகவே மூடிக்கொண்டிருப்பது போல் தோற்றம் தரும்.மெல்லியக் கோடுகளாய் அடர்த்தியில்லாத புருவங்கள்.எட்டத்தில் இருந்து பார்த்தால் அக்காவிற்கு புருவங்கள் இல்லாதது போலத்தான் தெரியும்.

“நீ வேலை பார்க்கும் அச்சகத்தில் எதும் வேலை காலி இருக்கா?”

அக்கா திடிரென்று கேட்டார்.எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

விடயம் 2:

தன் பின் அக்காவை சில வாரங்கள் காணவில்லை.பத்திரிகையில் வரும் படைப்புகளில் மாத்திரமே அக்காவின் முகத்தைப் பார்த்து கொண்டேன்.அந்த சமயத்தில் எங்கள் நகரத்தின் பள்ளி மண்டபம் ஒன்றில் புத்தக வெளியீட்டு விழா நடக்கவிருந்தது.தலைநகரிலிருந்து புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சிறப்பு வருகையாளராக வருவதை அறிந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு செல்ல ஆசை கொண்டு அக்காவை காணச் சென்றேன்.

அக்காவின் வீடு மேட்டு பகுதியில் இருந்தது.சாலை ஓரத்திலான வீடு.ஆனால் வீட்டிற்குப் பின்னால் அடர்ந்த காடு.நான் மிதிவண்டியை தள்ளிக்கொண்டே மேட்டில் ஏறினேன்.

அதுவொரு ஞாயிற்றுக்கிழமை   என்பதால் அக்கா வீட்டில் தான் இருந்தார். என்னைக் கண்டதும் உதடுகள் பிரிக்காது புன்னகைத்தார். வழக்கம் போல் என்னை அவசர அவசரமாக இழுத்துக் கொண்டு  அவர் வீட்டுடன் ஒட்டியிருக்கும் மேக்கடை வீட்டிற்கு அழைத்து சென்றார்.மேக்கடை வீடும் தரைவீடு போல் பலகையினால் ஆனது.மலாய்க்காரர்களின் வீட்டு அமைப்புடன் அது இருந்தது.  கீழே  அடைத்துக்கொண்டிருந்த நிறையப் பழையச் சாமன்களுடன் சில மிதிவண்டிகளும் இருந்தன.

மேலே மூன்று அறைகள் விரிசையாக அமைந்திருந்தன.அவை மூன்றுக்கும் சேர்த்து நீள வடிவில் திறந்த முற்றம்.முற்றத்தில் ஒரு மேசையும் நாற்காலியும் மட்டும் இருந்தன.சில சமயத்தில் மகா அக்கா அங்கு அமர்ந்து எழுதுவதை பார்த்துள்ளேன்.நான் வரும் போதெல்லாம் முற்றத்தின் ஓரமாக நின்று, எதிர் திசையை நோக்கி மரஞ்செடி, கொடிகளை ரசிப்பேன்.

“எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடுத்திருக்குக்கா,இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் நிறைய கற்பனை வரும்” என்பேன்,  குதூகலத்துடன்.அதற்கு அக்கா சிரித்துக் கொள்வார்

“இரவானால் நிறைய கொசுக்களும் வரும்”

அந்த மேக்கடை வீட்டிற்கு மின்சாரம் இல்லை என்பதை பின்னொரு நாளில் நான் அறிந்து கொண்டேன்.அன்று நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்வதாக நாங்கள் பேசி முடிவெடுத்தோம்.ஆயினும் அந்த நூல் வெளியிட்டு விழாவின் போது அக்கா வரவே இல்லை.வெகுநேரம் நான் அவருக்காக மண்டபத்தில் காத்திருந்தது தான் மிச்சம்.மறுநாள் அக்கா நான் பணிப்புரிந்த அச்சகத்திற்கு தேடிக்கொண்டு வந்தார்.முதல் நாள் வர முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டார். சம்பிரதாயத்திற்காக ஏன்  எனக் கேட்டேன்.

“வேற என்ன கையில் பணமில்லை.தேதி பத்து ஆச்சு.இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை.வீட்டில் ரொம்ப கஷ்டமா இருக்கு.”

அக்காவின் வீட்டில் அக்காவுடன் சேர்த்து அண்ணனும் அப்பாவும் வேலை செய்வது எனக்கு தெரிந்திருந்தது.அப்படியிருக்கையில் என்ன சிரமம் என எனக்குப் புரியவில்லை.இன்னும் வீட்டில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதுவும் தெரியவில்லை.தங்கை ஒருத்தி இடைநிலைப் பள்ளியில் படிப்பது நான் அறிந்த சில விபரங்களில் ஒன்று.

அக்கா என் மனஓட்டத்தை அறிந்தாரோ என்னமோ மேலும் பேசினார்.

“அப்பா தினசரி சமையலுக்கு காய்கறிகளை  வாங்கி தருவதோடு சரி.மற்றது எல்லாம் நான் தான் பார்க்கணும்.அண்ணன் கொஞ்சம் பணம் கொடுத்து கொண்டிருந்தார்.இப்ப அதுவும் இல்லை.கல்யாணத்திற்கு பணம் சேர்க்கிறார்”

நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சமயத்தில் வேலையை விட்டுட்டு வந்திடலாம் என நினைப்பேன்.குடும்பச் சூழல் பொறுமை காக்க வைக்கிறது.ஆனால் இந்த பொறுமை எதுவரை எனத் தெரியாது” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

விடயம் 3:

ன்று  ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்குப் பயணப்பட்டோம்.அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது.அக்கா வற்புறுத்தி அழைத்ததால் ஒத்துக்கொண்டேன்.எங்கள் இருவரின் கவிதைகளும் அந்த நிகழ்ச்சியில் வெளியீடு செய்யும் நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட அந்த நகரை அடைந்ததும் ஓர் உணவகத்தில்  நிகழ்ச்சியின் தலைவருக்காக காத்திருந்தோம்.அரை மணிநேர காத்திருந்தலுக்கு பின் தலைவர் வந்தார்.அறிமுகத்திற்கு பிறகு அவர் எங்களுடன் அமர்ந்து இலக்கியம் பேசினார்.அவர் பேசும் போது என்னைக் குறி வைத்தே பேசினார்.என் மீது பதித்த பார்வையை விலக்காமல் என் முகம் பார்த்து, என் படைப்புகள் குறித்து பேசிக்கொண்டே போனார்.நிறைய அறிவுரைகளைப் பிரச்சாரமாகச் செய்தார்.அக்கா அருகில் அமர்ந்திருப்பதையும் மறந்து அவர் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிகுந்த சங்கடத்தை விளைவித்தது.எங்களை மதிய உணவு சாப்பிட சொல்லி வற்புறுதியும் நாங்கள் மறுத்து விட்டோம்.உண்மையில் நாங்கள் அன்று காலையில், அதாவது பேருந்து எடுப்பதற்கு முன் வெறும் தேனீர் மாத்திரமே அருந்தியிருந்தோம்.

சிறிது நேரத்திற்கு பின் எங்களை அழைத்து போக ஒரு வாகனம் வந்தது. அக்காவும் நானும்  பத்திரமாக ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.தூரத்திலிருந்து வருகை தரும் பெண்படைப்பாளிகள் தங்குவதாக அங்கு ஏற்பாடாகியிருந்தது..சில மாநிலங்களில் இருந்து சில படைப்பாளிகள் வந்திருந்தார்கள்.மிக கலகலப்பாக அன்றைய இரவு நகர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி.அந்த வீட்டின் அம்மா எங்களிடம் மிகக் கனிவாக நடந்துக்கொண்டார்.அவரை எனக்குப் பிடித்திருந்தது.அதைவிட அவரது வீடு முழுவது நாட்டிய உடையணிந்து அபிநயம் புரிந்துகொண்டிருந்த தமது மகளின் படங்களை மாட்டி வைத்திருந்தது மிகவும் கவர்ந்திருந்தது.

விடயம் 4:

காலையிலேயே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டோம்.என் வாழ்வில் நான் முதல் முதலாக புடவையுடுத்தி கலந்துக்கொண்ட நிகழ்ச்சி அது தான்.மிகுந்த கூச்சமாக இருந்தது.அக்கா வற்புறுத்தியதால் உடுத்திருந்தேன்.நாங்கள் அமர்ந்திருந்த பிரமுகர் வரிசையின் முன் வரிசையில் எங்களுக்குப் போதித்த ஆசிரியர்.அவரை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியில் வணக்கம் சொன்னார் அக்கா.நானும் சொன்னேன்.ஆனால் எங்கள் ஆசிரியர் சிறு தலையசைப்புக் கூட செய்யாமல் பக்கத்தில் இருந்த பிரபல எழுத்தாளர்களுடன் பேசுவதில் சுவாரசியமாக இருந்தார்.அக்காவின் முகத்தில் அந்த மோனாலிசா புன்னைகை வந்தமர்ந்திருந்தது.

நிகழ்ச்சியில் உச்சமாக நூல் வெளியீடு.நிகழ்வில் என் கவிதை சிறப்பாக வாசிக்கப்பட்டு, எனக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டபோது எனக்குள் மின் அதிர்வு.நினைவுச் சின்னத்தை வாங்கி வந்து அமர்கையில் எங்கள் ஆசிரியர் பின்னால் திரும்பி “பரவாயில்லியே நம்ம ஊருக்கு பெருமைச் சேர்த்துட்ட “ என்றார். புன்னகைத்து வைத்தேன்.அக்கா என் கரத்தைப் பற்றி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் பாதியில் நானும் அக்காவும் கிளம்பி விட்டோம்.தூர பயணம் என்பதால்,  பேருந்து கிடைப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்க நேரத்துடன் புறப்பட்டோம்.

பேருந்தில் அக்காவின் முகம் ஜீவனற்று இருந்தது.

“ஏனக்கா?” என்றேன்.

“இலக்கியத்திலும் அரசியல் உள்ளது” என்றார்.அவரது கரத்திலிருந்த கவிதை நூலை வெறித்து பார்த்தார்.

அந்த நூலில் அனைத்து படைப்பாளர்களின் கவிதைகள் எல்லாம் இரண்டு இரண்டாக இடம் பெற்றிருந்தன.அக்காவுடையது மட்டும் ஒன்று தான்.அதன் பின் இன்றுவரை அந்த நூலை நான் தொட்டுப் பார்ப்பதே கிடையாது.

விடயம் 5:

வேலையே வேண்டாம் எனத் தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்.உடலே பற்றிக் கொண்டு எரிகிறது.இன்னும் நான் அங்க வேலை பார்த்தால் தன்மானமே இல்லை என்று தான் அர்த்தம்”

முதன் முதலில் அக்காவின் கோபத்தை கண்டது அன்றுதான்.

“எந்த இனத்து முதலாளிக்கிட்டயும் வேலைப் பார்த்துவிடலாம்.தமிழன் கிட்ட மட்டும் வேலைப் பார்க்க முடியாது.ரொம்ப கரைச்சல்.சம்பளம் சரியா வராது” வேதனையோடு சொன்னார்.

அக்காவின் வேதனைப்  புரிந்தது.

“சரி.உன் எதிர் வீட்டுப் பெண் வேலை பார்க்கும் இடத்தில் வேலைக்கு ஆள் எடுப்பதாக சொன்னாரே கொஞ்சம் விசாரித்துச் சொல்.எனக்கு மட்டும் அல்ல,என் கூட வேலை பார்த்த நான்கு பேருக்கும் வேலை வேண்டும்” என்றார்.

“சரிக்கா.நாளைக்கே கேட்டுட்டு வர சொல்கிறேன். நிச்சயம் கிடைக்கும்கா”

அக்காவிற்கு என் வார்த்தைகள் ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்.வழக்கமான மோனாலிசா புன்னகையை பிரசவித்தார்.இயல்பு நிலைக்குத் திரும்பி, இலக்கியம் பேசினார்.

“உன் கதை போன வாரம் வந்தது… சொந்த அனுபவமா?” என்றார்.

எனக்கு சுளீர் என்றது.அக்காவின் பார்வை என் வீட்டிற்குள் எதையோ தேடியது. என் கதையில் வந்த குடிக்கும் அப்பாவையும்,வதைப்பட்ட அம்மாவையும் கல்யாண கனவோடு ஏங்கியப் பெண்ணையும் தேடுகிறாரோ என சந்தேகம் வந்தது.சிறுகோபமும் வந்தது.

“நல்ல இருந்தது.பொருத்தமா முத்திரைக்கதையாக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.இப்படி எங்கள் வீட்டிலும் சண்டை நடக்கும் தெரியுமா…?ஆனால் எப்போதாவது அல்ல,அனுதினமும்.எங்கப்பாவிற்கு எங்கம்மாவிற்கும் அது தான் வேலை” சொல்லி விட்டு சிரிக்க முயன்றார்.

எனக்கு எனோ அன்று அக்காவின் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் போனது.அனுபவத்தை தான் ஒரு படைப்பாளி எழுத வேண்டுமா.. என்ற கேள்வி மனதைக் குடைந்தது.இருந்தும் அதனை அக்காவிடம் கேட்கத் துணிவில்லை.ஆனால் இந்த புனைவை இன்றைய இலக்கியச் சூழலில் எழுதும்போது அனுவத்தை ஒரு படைப்பாளி எழுதுவதில் எந்த தவறுமில்லை எனப் புரிகிறது.

விடயம் 6:

 

ன் மகா அக்காவிற்கு வேலை கிடைத்து விட்டது” மறு நாள் மாலையில்  எதிர் வீட்டுப்பெண் நல்ல சேதியை சொன்னார்

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.எப்போது மறுநாள் விடியும் எனக் காத்திருந்தேன். அக்காவிற்கு வேலை கிடைத்து விட்டதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. மறுநாள் அவரைத் தேடிக்கொண்டு ஓடினேன்.

மேல் முற்றத்தை  பார்த்தேன்.நாற்காலி காலியாக தெரிந்தது.தரை  வீட்டின் வாசலில் நின்று, ‘அக்கா’ எனக் குரல் கொடுத்தேன்.

அந்த அம்மாள் வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

“என்ன..” என அதட்டுவது போல் கேட்டார்.

“அக்காவை பார்க்கணும்”

“அது குளிக்குது.உள்ளே வந்து உட்கார்” எனச் சொல்லி விட்டு உள்ளே நுழைந்து விட்டார்.உள்ளே போகலாமா வேண்டாமா எனத் தயங்கினேன். நான் கொண்டு வந்திருக்கும் நல்ல சேதி கேட்டு அக்கா முகம் மலர்வதைக் காணும் ஆவலில் வீட்டினுள் நுழைந்தேன்.

தொலைக்காட்சியில் எதோ தமிழ் படம் ஓடிக்கொண்டிருந்தது.அந்த சிறிய கூடத்தில்  கைலி சட்டை அணிந்திருந்த இரு பெண்கள் ஆர்வமாக படம் பார்த்து கொண்டிருந்தார்கள்.அக்காவை விட வயதில் மூத்தவர்களாக தெரிந்தார்கள்.நான் நுழைவதைக் கூட அவர்கள் கவனிக்கவில்லை.நான் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.அந்த கூடம் பொலிவற்று இருந்தது.மெல்லியதாக படர்ந்த இருட்டு வேறு.அந்த அம்மாளும் தரையில் அமர்ந்து படம் பார்த்தார்.கொஞ்ச நேரத்தில் படக்காட்சி மாறியது.கதாநாயகனுக்கும் வில்லன்களுக்கும் இடையில் சண்டை.நாயகன் வில்லன்களை அடித்து நொறுக்கத் தொடங்கினார்.

திடிரென  கூடத்தில் கூச்சல் எழுந்தது.

“ஆ..குத்துடா…எத்துடா… எத்து”

நான்  திடுக்கிட்டேன்.அந்த இரு பெண்களும் கதாநாயகனைப் போல்   காலையும் கையையும் ஆட்டி குத்துவது போலவும் எத்துவது போலவும் பாவங்கள் காட்டிக்கொண்டிருந்தார்கள்.கூச்சலும் இட்டார்கள்.முதலில் அது யதார்த்தம் என நினைத்தேன்.சில கணங்களிலேயே அது தீவிரமானதும் அதன் விபரீதம் மெல்ல உரைக்கத் தொடங்கியது.அவர்கள் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன்.நிறைவற்ற தன்மை அதில் தெரிந்தது.

அப்படியானால்….?

என் உள்ளம் நடுங்கியது.எழுந்து விடலாமா எனத் தோன்றியது.அதற்குள் அக்கா பின் கட்டிலிருந்து வந்துவிட்டார்.துண்டை தோளில் மாட்டியிருந்தார்.என்னைப் பார்த்ததும் அவரது விழிகள் மெல்ல அதிர்ந்தன.

எனக்கும் தர்மசங்கடமாக இருந்தது.சூழலை மறந்து என்னை இயல்பாக்கிக் கொண்டு, என்ன காரியமாக வந்தேன் என்பதைச் சொன்னேன்.

கூடத்தில் கூச்சல் இன்னும் நின்றபாடில்லை.

“சும்மா இருக்கிங்களா?” அக்கா குரலை உயர்த்தினார்.உடனே அவர்கள் அடங்கிப் போனார்கள்.

“மற்ற நாலு பேருக்கு?”

“அவர்களுக்கும் வேலை நிச்சயமாம்.நாளை அவர்களையும் கூட்டிட்டுப் போங்கள்”

திடீரென்று மீண்டும் அந்தக் கூச்சல் எழுந்தது.அவர்கள் முன்பு செய்தது போலவே செய்தார்கள்.நான் திரையைப் பார்த்தேன்.மற்றுமொரு சண்டைக் காட்சி.

“ஐயோ ” அக்கா கத்தினார்.அவர்கள் கேட்பதாக இல்லை, தொடர்ந்தார்கள்.

அக்கா கோபத்துடன் என்னை வெளியே அழைத்து கொண்டு வந்தார்.எனக்குள் இருந்த நடுக்கம்  குறையவில்லை.நான் அங்கு சென்ற ஓவ்வொரு முறையும் அக்கா அவசராவசரமாக என்னை அழைத்துக்கொண்டு மேக்கடை வீட்டிற்கு செல்வது நினைவுக்கு வந்தது.அக்காவின் செய்கையின் அர்த்தம் அந்தக் கணத்தில் புரிந்தது.

அது எப்படி அந்த இரு பெண்களும் இப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள்?அவர்களது முக அமைப்பு அக்காவுடன் ஒத்திருந்தது.நிறம் மட்டும் அந்த அம்மாளைப் போன்று கூடுதல் வெளுப்பு.ஏறக்குறைய அவர்கள் இருவர்களுக்கு ஒத்த வயது அல்லது ஓரிரண்டு கூடக்குறைவாக இருக்கலாம்.

அக்கா வெளியே வந்த பின் என் மிதிவண்டியிடம் வந்து நின்றார்.அவர் என்னைப் புறப்பட சொல்கிறார் எனப் புரிந்து கொண்டேன்.

“சரிக்கா ”புறப்பட ஆயத்தமானேன்.

அக்கா ஏதும் சொல்லாமல் என் முகத்தையே பார்த்தார்.அந்த மெலிந்த புருவங்களுக்கு கீழிருந்த விழிகள் என்னை ஊடுருவி பார்த்தன.அதில் கூர்மை  தெரிந்தது.

‘இதையெல்லாம் எழுதி தொலைத்துடாதே’ என்பது போல இருந்தது.

பார்வையின் வெம்மையை  வாங்கிக்கொள்ள வலுவில்லாமல் காட்டுப் பகுதியைப் பார்த்தேன்.அந்த அடர்ந்தக் காடு மாதிரி நிறைய விடயங்கள் அக்காவிற்குள்ளும் இருந்தன.

“கிளம்பு” அக்கா மெல்லியக் குரலில் சொன்னார்.அதை மாத்திரம் தான் சொல்ல முடியும் என்பது போல.

இன்று வரை எனக்கு வியப்பு தருவது.. அத்தனை சோகங்கள்… சோதனைகள்  இருந்தும்  எப்படி மகா அக்கா ஏதும் நடவாத மாதிரி இருந்தார் என்பதுதான். அக்காவின் நினைவு வரும் போதெல்லாம் அக்காவின் சொல்லப்படாத சோகங்களுக்காகவும் அந்த இரு ஜீவன்களுக்காகவும் பிராத்தனை செய்வேன்.இந்த நிமிடத்திலும் எனக்கொரு பிராத்தனை உண்டு.

‘எந்த சூழலிலும் இந்தக் குறிப்புகள் அக்காவின் கண்களில் பட்டுவிடக் கூடாது’

 

{முற்றும்}

Series Navigation100- ஆவது கவனக மற்றும் நினைவாற்றல் கலை நிகழ்ச்சிபடிமை திரைப்பட பயிற்சி இயக்கம் – மாணவர் சேர்க்கை.இலங்கைசூரியனைச் சுற்றி உரசி வந்த வால்மீன் ஐசான் [Sun-Grazing Comet Ison ] அக்கினிப் பிழம்பில் சிக்கிச் சிதைந்து ஆவியானதுஒரு விஞ்ஞான இஸ்லாமியர், மூன்று மெஞ்ஞான இந்துக்கள், ஒரு மெஞ்ஞான் கிறிஸ்துவர் & மேற்கு தொடர்ச்சி மலை.எளிமையும் எதார்த்தமும் கலந்த வளவ துரையனின் “சின்னசாமியின் கதை”டௌரி தராத கௌரி கல்யாணம்….! -27மஹாகவிதை இலக்கிய இதழ் நடத்தும் பாரதி விழாகிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்தாகூரின் கீதப் பாமாலை – 91 என் ஆத்ம சமர்ப்பணம்.. !புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 35நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3திண்ணையின் இலக்கியத் தடம் -11குப்புரகசியம் பேசுதல் – ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரைபிராயசித்தம்கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 11 காண்டவ வனம்பம்ப்La Vie en Rose (பிரான்ஸ், இயக்குநர் – ஒலிவியர் டஹன்)சீதாயணம் நாடகம் -9 படக்கதை -9ஆனாவும் ஆவன்னாவும் !-திரு பி ஏ கிருஷ்ணன் எழுதிய அறிவியலும்தொழில் நுட்பமும் ஒன்றா என்ற கட்டுரையின் எதிர்வினை
author

வாணி ஜெயம்,பாகான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *