பம்ப்

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013
                 balloon_angio             

நான் சுமார் பதினைந்து வருடங்களாக மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கையான ” தமிழ் நேசன் ” ஞாயிறு மலர்களில் ” மருத்துவ கேள்வி பதில் ” பகுதி எழுதிவருகிறேன்.

இது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. வாசகர்கள் கேட்கும் சிக்கலான சில கேள்விகளுக்கு சரியான பதில் தர மருத்துவ நூல்களைப் புரட்டுவதும், தெரிந்த மருத்துவ நிபுணர்களை நாடுவதும் மனதுக்கு இதமானது.

நான் மருத்துவம் படித்தது 1965 முதல் 1971 வரை இந்த 32 வருட இடைவெளியில் மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. அதீத வளர்ச்சியும் அதிநவீனக் கருவிகளும், தொலைத் தொடர்பு வசதிகளும், இன்று சிகிச்சை முறைகளையே மாற்றிவருகின்றன. இதனால் நான் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தால் மட்டுமே இன்றைய நவீனத்துவ எழுத்தாளர்கள்போன்று மருத்துவத் துறையிலும் மிளிரமுடியும்..

என்னுடைய மருத்துவப் பகுதியில் எனது முகவரியும் கைத் தொலைபேசி எண்களும் வெளிவரும். வாசகர்கள் நேரிடையாக எனக்கு கடிதம் அனுப்புவர்.

தங்களிடைய பிரச்னையை பத்திரிகையில் வெளியிட விரும்பாதவர்கள் தொலைபேசி வழியாக அழைத்து சந்தேகங்களைக் கேட்பார்கள். இது எனக்கு சில நேரங்களில் பொறுமையைச் சோதிப்பதாக இருந்தாலும், பொறுமையாகவே அவர்களிடம் பேசுவேன்.

ஆண்களில் பலர் விரைப்புத் தன்மை குறைந்து விட்டதால் மனைவியைத் திருப்தி படுத்த முடியவில்லை என்று புலம்புவார்கள். அதற்குப் பரிகாரம் கேட்பர். பெண்களும் தங்களுக்குள்ள பாலியல் பிரச்னை பற்றி கூறுவர். பெரும்பாலும் கணவரின் துரித விந்து வெளியேற்றம் பற்றி கேட்பார்கள்.

மணமாகாத பெண்கள் சிலர் மார்பு வளர்ச்சி இல்லை என்றும், அவற்றை பெரிதாக்குவது எப்படி என்று கேட்பார்கள். வேறு சிலர் மார்பு மிகவும் பெரிதாக உள்ளதால் ஆண்கள் அதையே பார்க்கின்றனர் என்று கூறி அவற்றை சிறிதாக்குவது எப்படி என்றும் கேட்பார்கள். நான் இவற்றுக்கும் ஒருவாறு பதில் கூறி சமாளிப்பேன்.

இதுபோன்று உடல் சார்ந்தும் , உள்ளம் சார்ந்தும் பல கேள்விகள் கேட்பார்கள். அப்படிதான் ஒரு நாள் அந்த தொலை பேசி அழைப்பும் வந்தது. அதன் உரையாடல் இப்படி நடந்தது.

” ஹலோ வணக்கம் டாக்டர். தமிழ் நேசனில் உங்களுடைய கேள்வி பதில் படிப்பேன். ”

” அப்படியா? நன்றி. வணக்கம். நீங்கள் எங்கிருந்து அழைகிறீர்கள்? ”

” நான் சிவா. கோலாலம்பூரிலிருந்து அழைக்கிறேன். ”

” சரி. சொல்லுங்கள். ஏதும் பிரச்னையா? ”

” பிரச்னை எனக்கு இல்லைங்க டாக்டர். நம் இனத்து மக்களுக்கு.”

” நீங்கள் சொல்வது புரியலையே . புரியும்படி சொல்லுங்களேன்? ”

” டாக்டர் . நீங்கள் அரசாங்க சேவையில்தானே உள்ளீர்கள்? ”

” ஆமாம். ”

” மாதச் சம்பளம்தானே வாங்குகிறீர்கள்? ”

” ஆமாம். இதற்கும் நீங்கள் சொல்ல வந்த பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்? ”

” நிறைய உள்ளது டாக்டர். நீங்கள் சம்மதித்தால் சம்பளத்தை விட நிறைய சம்பாதிக்கலாம். அதுவும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதைச் செய்யலாம். ”

” புதிர் போட்டே பேசுகிறீர்களே? நீங்கள் எதைச் செய்யலாம் என்கிறீர்கள்? ”

” டாக்டர் நான் ஒரு பிஸ்னஸ்மேன். நீங்கள் சரி என்றால் நான் நேரில் வந்து உங்களைச் சந்திக்கிறேன். இந்த வீக்கெண்ட் ( Weekend ) பார்க்கலாமா?”

” சரி பார்ப்போம். இங்கு வந்ததும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். ”

எங்கள் தொடர்பு துண்டித்தது.

இவர் பெரிய மர்மப் பேர்வழிப்போன்றே எனக்குத் தோன்றியது. விஷயம் என்னவென்று நேரில் சொல்வதாகக் கூறுகிறாரே?

இதில் ஏதும் சட்டவிரோதச் செயல் ( போதைத் மருந்து தொடர்புடையது ) இருக்குமோ என்றுகூட சந்தேகம் கொண்டேன். இங்கு சில கிளினிக்குகளில் தூக்க மாத்திரைகளையும் போதை உண்டுபண்ணும் வேறு சில மாத்திரைகளையும் விற்று பணம் ஈட்டுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போதெல்லாம் நேரடி விற்பனை ( Direct Selling ) என்ற பெயரில் நிறைய ” டாக்டர்கள் ” உருவாகி வருகின்றனர். ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொண்டு அனைத்து வியாதிகளையும் ( சளி காய்ச்சல் முதல் புற்று நோய் வரை ) குணமாக்கலாம் என்று கூறிவருவர். இது இயற்கை மருந்து, பக்கவிளைவுகள் இருக்காது என்றும் தைரியமூட்டுவார்கள். இவர் இதுபோன்றவரா என்றும் யோசித்தேன்.

எதற்கும் அவரை நேரில் சந்தித்த பின்பு முடிவெடுக்கலாம் என்று வேலையைத் தொடர்ந்தேன்.

குறிப்பிட்ட நாளில் சிவாவை ஒரு உணவகத்தில் சந்தித்தேன், அவருக்கு முப்பது வயதிருக்கும். கருத்த நிறம். குள்ளமான உருவம். முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார். பார்க்க வசதியானவர்போல் தென்பட்டார். கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். சூடாக தேநீர் பருகியவாறு பேசினோம்.

” டாக்டர். நீங்கள் வாரந்தோறும் தமிழ் நேசனில் எழுதுவது மிகவும் பயனுள்ளது. இதற்கு ஏதாவது சன்மானம் தருகிறார்களா? ” என்று ஆரம்பித்தார்.

” ஆமாம். மாதம் நானூறு வெள்ளி தருகிறார்கள். ” நான் உண்மையைச் சொன்னேன்.

” பரவாயில்லை. எழுதுபவர்களுக்கு இங்கு சன்மானம் தருவது குறைவுதான். நான் ஒரு பிஸ்னஸ்மேன் டாக்டர். நீங்கள் எழுதுவதை வைத்தே நிறைய சம்பாதிக்கும் ஒரு பிஸ்னஸ் உங்களுக்கு தர வந்துள்ளேன்.

” அது என்ன பிஸ்னஸ்? நான் எழுதுவதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? விளக்கமாக சொல்லுங்களேன். ”

அப்போது அவர் கொண்டுவந்துள்ள பையிலிருந்து ஒரு மொத்தமான கோப்பை ( file ) வெளியில் எடுத்து மேசைமீது வைத்து பிரித்துக் காட்டினார

அதில் ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாடு ( Erectile Dysfunction ) பற்றிய விளக்கங்கள் அடங்கிய வண்ணத் தாள்கள் நிறைய வைக்கப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினேன். நிறைய செய்திகளை அதுபற்றி சேகரித்திருந்தார்.

கடைசி சில [பக்கங்களில் வியாக்ரா ( வியாக்ரா ) மாத்திரை பற்றிய குறிப்புகளும் அதன் பக்க விளைவுகள் பற்றியும் வைத்திருந்தார்.

எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்துவிட்டு அவரைப் பார்த்தேன்.

அவருடைய கண்களில் ஒருவிதமான நம்பிக்கையின் ஒளி பிரகாசித்தது.

” டாக்டர். நம்முடைய இனத்து ஆண்கள் பலருக்கு இந்த பிரச்னை உள்ளது உங்களுக்குத் தெரியும். இதை வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பிஸ்னஸ் டார்கெட் குரூப் ( Business target group ) இவர்கள்தான். ” ஆர்வத்துடன் கூறிவிட்டு என்னைப் பார்த்தார்.

” நீங்கள் கூறுவது உண்மையே. நம் சமூகத்தில் நீரிழிவு வியாதி அதிகம். இது உள்ள பலருக்கு இந்த பிரச்னை உள்ளது. பலர் என்னிடம் நேரிலும் தொலை பேசியிலும் இது பற்றி கேட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே வியாக்ரா மாத்திரை பற்றி தெரிந்துள்ளது. அதைப் பயன்படுத்தலாமா என்று கேட்பார்கள். அதன் பக்க விளைவுகள் பற்றியும் கேட்பார்கள். சிலர் பயன்படுத்த பயமாக உள்ளது என்றும் கூறுவார்கள். ”  நான் ஆமோதித்தேன்.

” சரியாகச் சொன்னீர்கள். டையபெட்டீஸ் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பும், அதிக கொலஸ்ட்ராலும் , இருதய பிரச்னையும் உள்ளது இயற்கை. இவர்கள் இவற்றுக்கு மாத்திரைகள் சாப்பிடுவார்கள். இதுபோன்றவர்கள் வியாக்ரா மாத்திரையை உட்கொள்வது ஆபத்தை உண்டுபண்ணலாம். இது பற்றிய லிட்டரேச்சர் ( Literature ) நிறையவே வைத்துளேன். ”

அவர் கூறியது உண்மையே.

வியாக்ரா மாத்திரையை உட்கொண்டதும் விரைப்புத்தன்மை உண்டாவது உண்மை என்பதற்காக யார் வேண்டுமானாலும் அதை பார்மசியில் வாங்கி உட்கொள்வது தவறு. இரத்தவோட்டம் தொடர்புடைய கண், காது பிரச்னை உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் அல்லது குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு , பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்,கல்லீரல், சிறுநீரகம் நோய் உள்ளவர்கள் மற்றும் ஆண்குறியில் பிரச்னை ( கோணலான வடிவம் – இதை Peyronie’s Disease என்று அழைப்பதுண்டு ) உள்ளவர்கள் அனைவருமே வியாக்ரா மாத்திரை எடுக்கக்கூடாது.

” டாக்டர் .வேக்கியூம் பம்ப் ( vacuum pump ) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே டாக்டர்? ” என்று கெட்டவாறே இன்னொரு கோப்பை வெளியில் எடுத்து என்னிடம் நீட்டினார்.

நான் அதை வாங்கிப் புரட்டினேன். அதில் வித விதமான வேக்கியூம் பம்ப் களின் படங்கள் இருந்தன. எனக்கு இது பற்றி தெரிந்திருந்தாலும் அதை இதுவரை பார்த்ததில்லை. அதை எப்படி பயன்படுத்துவது என்பதும் தெரியாது. எனக்கு தெரிந்த யாரும் இதை பயன்படுத்துவதாகவும் என்னிடம் சொன்னதில்லை. இந்த விஷயத்தையெல்லாம் யார்தான் வெளியில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்?

நான் ஆவலுடன் அவரைப் பார்த்தேன்.

‘ டாக்டர். வியாக்ரா மாத்திரையைவிட இது மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் சம்மதித்தால் நாம் இருவரும் இணைந்து இந்த வேக்கியூம் பம்ப்பை நம் மக்களிடையே அறிமுகம் செய்யலாம். அதன்மூலம் நல்ல வருமானம் பெறலாம். ” இப்போதான் அவர் நல்ல வியாபாரி என்பதைப் புரிந்துகொண்டேன்.

” நல்ல விஷயம்தான். இது வேறு எங்கும் விற்பனை ஆகிறதா? அது பற்றி தெரியுமா? ” வினவினேன்.

” சில இடங்களில் கிடைக்கிறது. ஆனால் யாருக்கும் இது பற்றி தெரியாது. அப்படி தெரிந்தாலும் அங்கு சென்று வாங்க தயங்குவார்கள். இது ஒருவகையில் தன்மானப் பிரச்னை. தனக்கு ஆண்மைக் குறைவு என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஏராளம்பேர் உள்ளனர். ” இந்த சூழலில் நாம் எப்படி இதைச் செய்வது? உங்களுடைய வியாபார நுணுக்கம்தான் என்ன? ” இது ஒரு நல்ல முயற்சி போன்று எனக்குத் தோன்றியது.

” நான் முன்பே இதை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுவிட்டேன். அது ஆஸ்திரேலியாவில் உள்ளது. விலை பற்றியெல்லாம் விசாரித்துவிட்டேன். மாதிரிக்கு எனக்கு சிலவற்றை அனுப்பியுள்ளனர். இதோ இவற்றைப் பாருங்கள். ” பையிலிருந்து ஐந்து விதமான பம்ப் களை எடுத்து மேசைமீது வைத்தார்.

நான் அவற்றை எடுத்து பார்த்தேன். அப்போதுதான் அவற்றை முதன்முதலாகப் பார்க்கிறேன்.

அது ஒரு ப்ளாஸ்டிக் குழாய். பார்க்க கண்ணாடி போன்றிருந்தது. மேல் பகுதி திறந்திருந்தது. கீழ்ப் பகுதியில் காற்றை வெளியேற்றும் பம்ப் இணைக்கப்பட்டிருந்தது. அதில் அழுத்தும் கைப்பிடிகள் இருந்தன . அந்த கைப்பிடியுடன் அதைத்தூக்க லேசாகவே இருந்தது.

” இதை எப்படிப் பயன்படுத்துவது ? ” அவற்றில் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அவரிடம் கேட்டேன்.

அவரும் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, ” இதைப் பயன்படுத்துவது ரொம்ப சிம்பல் ( simple ) டாக்டர், உடல் உறவு கொள்ள தயார் ஆகும்போது இதை இப்படி பிடித்துக்கொண்டு ஆண் உறுப்பை இதனுள் விடவேண்டும். மேல்பகுதியை அந்தப் பகுதி தோலுடன் நன்றாக அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையால் பம்ப் பிடிகளை பிடித்து அழுத்த வேண்டும். அப்போது குழாய்க்குள் உள்ள காற்று வெளியேறி அதனுள் வேக்கியூம் உண்டாகும். இரத்தம் ஆண்குறிக்குள் புகும். உடன் அது விறைக்கும். முழுதாக விறைத்ததும் மேல்பகுதியில் குழாயின் மேல் பகுதியில் மாட்டப்பட்டிருக்கும் இரப்பர் வளையத்தை மேல்நோக்கி தள்ளி ஆண்குறியின் அடிப்பகுதில் இறுக்கமாக மாட்டிவிடவேண்டும். அதன்பின்பு பிளாஷ்டிக் குழையை பாம்புடன் அகற்றிவிடலாம். இப்போது திருப்தியாக அரை மணி நேரம் வரை உடல் உறவில் ஈடுபடலாம். விந்து வெளியேறியதும் அந்த இரப்பர் வளையத்தை எடுத்துவிடலாம். ”

கேட்பதற்கு மிகவும் சுலபமாகத்தான் இருந்தது. இப்படி செயற்கையாக விறைப்பை உண்டுபண்ண ஐந்து நிமிடமே ஆகும்.

ஆனால் இதை இப்படி சொல்லிச் செய்யச் சொல்வது சற்று சிரமமே. அது பற்றி அவரிடம் கேட்டேன்.

” ஆமாம் டாக்டர். இதை டெமன்ஸ்ட்ரேட் ( demonstrate ) செய்து காட்டணும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். என்ன கொஞ்சம் கூச்சமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால் நம்மீது நம்பிக்கை பிறக்கும். ” அவரும் நம்பிக்கையுடன் கூறினார்.

இது ஒரு நல்ல முயற்சிதான் என்று தெரிந்தது. ஆனால் என்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. விறைப்புத்தன்மை இல்லாதவர்களையெல்லாம் நான் பரிசோதனை செய்து பார்ப்பது இயலாத காரியம். இதையும் அவரிடமே கேட்டேன்.

” இது நல்ல சேவை போன்றே தெரிகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதில் என்னுடைய பங்கு என்ன ? ”

” ஆஸ்திரேலியாவிலிருந்து பம்புகள் கொண்டுவந்து விநியோகம் செய்வது என் பொறுப்பு. ஆட்களை அடையாளம் கண்டு தருவது உங்கள் பொறுப்பு. ”

” எப்படி ”

” அது வெகு சுலபம். உங்களுக்கு தமிழ் நேசனில் நிறைய வாசகர்கள் உள்ளனர். நீங்கள் விறைப்புத்தன்மைக்

குறைவு பற்றி உங்கள் பகுதியில் எழுதுங்கள். அதில் இந்த பம்ப் பற்றி விளக்கமும் படமும் போட்டால்

போதும். அதன்பின் பாருங்கள் அந்த அதிசயத்தை. ”

” என்ன அதிசயம்? ”

” மக்கள் உங்களை தூங்கவிட மாட்டார்கள். போன் மேல் போன் வந்துகொண்டிருக்கும். உங்களிடம் பம்ப் பற்றி கேட்பார்கள். நீங்கள் அவர்களின் தொடர்பு நம்பர் கேட்டு குறித்துக்கொண்டு, என் பெயரைச் சொல்லிவிடுங்கள். என்னிடம் நீங்கள் தொடர்பு நம்பர் தந்ததும் நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். ”

நான் உங்களுக்கு அவர்களின் தொடர்பு எண்ணையும் பெயரையும் தருவதுதான் என் வேலை . பம்ப் விற்பனை செய்வது உங்கள் வேலை..அப்படித்தானே? ”

‘ பயப்படாதீர்கள். டாக்டர். என்னை நம்புங்கள். நீங்கள் எனக்குத் தரும் ஒவ்வொரு ஆளுக்கும் உங்களுக்கு பணம் தந்துவிடுவேன். ”

” எப்படி? ஒரு பம்ப் விலை எவ்வளவு? அதில் எனக்கு எவ்வளவு கிடைக்கும்? ”

” சாதாரண கொரியாவில் கிடைக்கும் பம்ப் விலை 500 வெள்ளி முதல் 1000 வெள்ளி வரை விற்கலாம். ஆஸ்திரேலியாவிலிருந்து வருவது ஒரிஜினல் ( original ). அதை 1500 வெள்ளிக்கு விற்கலாம். இதில் 500 முதல் 1000 வெள்ளிக்கு விற்றால் உங்களுக்கு 50 வெள்ளியும், 1000 முதல் 1500 வெள்ளிக்கு விற்றால் உங்களுக்கு 100 வெள்ளியும் அனுப்பிவிடுகிறேன். சம்மதம்தானே உங்களுக்கு? ”

நான் எதையும் யோசிக்காமல் சரியென்று கூறிவிட்டேன். இது என் எழுத்துக்காகக் கிடைக்கப்போகும் கூடுதல் சன்மானம் என்ற ஆறுதலுடன் மகிழ்ச்சியடைந்தேன்.

அவர் உடன் கோலாலம்பூர் செல்லவேண்டும் என்று விடை பெற்றார். எப்படியும் நான்கு மணி நேரமாவது அவர் கார் ஓட்டவேண்டும். நானும் வீடு திரும்பினேன்.

இரண்டு வாரத்தில் விறைப்புத்தன்மை குறைவு பற்றிய என்னுடைய கட்டுரையும், வேக்கியூம் பம்ப் படமும் பிரசுரமானது. கொஞ்ச நேரத்தில் முதல் அழைப்பு வந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது!

நான் அழைத்தவர்களின் பெயர்களையும் , தொலை பேசி எண்களையும் ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைக்க முடிவு செய்தேன்.

அன்று காலையிலிருந்து ஒரு வாரமாக தொடர்ந்து இரவு பகலாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. என்னால் அதை நம்பமுடியவில்லை. அதுபோல் நூற்றுக்கு மேற்பட்டவரின் பெயர்கள் கிடைத்துவிட்டன!

அவர்கள் அழைத்த சில நிமிடங்களில் சிவாவுக்கு தெரிவித்துவிடுவேன். அவர் அவர்களுடன் அதுபற்றி மேற்கொண்டு தொடர்புகொண்டு பம்ப் விற்பனை செய்வார்.

அவரிடம் பேசும்போது அவர் ஒரு சிலரை நேரில் பார்த்து விட்டதாகக் கூறினார். தமிழர்கள் என்பதால் பணம் தருவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறினார். மறு வாரமும் ஒரு சிலர் ஆர்டர் தந்துள்ளதாகக் கூறினார். கையில் பணம் வந்ததும் எனக்குத் தரவேண்டியதைத் தந்து விடுவதாகக் கூறினார்.

அதுபோன்று இரண்டு வாரம் , மூன்று வாரம், நான்கு வாரமும் சென்றுவிட்டது. எனக்கு ஏதும் அனுப்பவில்லை. அதன்பின்பு அவரை அழைத்தாலும் உடன் பதில் வருவதில்லை. எனக்கு அப்போதுதான் அவர் மேல் சந்தேகம் எழுந்தது. எத்தனை பம்புகள் விற்றார் என்பதும் எனக்குத் தெரியாது. கடைசிவரை எனக்கு ஒரு காசும் தரவில்லை. அத்துடன் எங்கள் தொடர்பும் நின்றுபோனது!

( முடிந்தது )

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    ஷாலி says:

    என்ன ஸார்! படம் எடுக்குற பாம்பை …..ஸாரி! பம்பைப் பற்றி விலாவாரியா விளக்கி கடைசியில் புஷ் ….என்று பம்பு யாவாரம் படுத்து விட்டதே!1500 வெள்ளி பாம்புக்கு வெறும் 100 வெள்ளி உங்களுக்கு, இதுவே குறைவாகவே தெரிகிறது.இதிலேயும் உங்களுக்கு படம் காட்டிய பாம்புப் பிடாரன் பயங்கரமான ஆளுதான்.பாம்பு வாங்கிய ஆளுகளுக்காவது படம் எடுத்துச்சா?இல்லே அங்கேயும் ஊத்திக்கிச்சா? கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க ஸார்!
    அன்பினாலே உண்டாகும் இன்பநிலை!-அந்தக்காலம்.
    பம்பினாலே உண்டாகும் இன்பநிலை!-இந்தக்காலம்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஸ்ரீவிஜி,

    பம்ப் படித்துவிட்டு பக்கவிளைவுகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளதற்கு நன்றி. இல்லாமலா இருக்கும்? உள்ளன! வியாபார நுணுக்கம் காரணமாக அவற்றைக் கூறாமல் தவிர்த்தேன். நீங்கள் அதையும் இப்படி கிளப்பி விட்டு பம்ப் வியாபாரத்தைக் கெடுத்துவிடுவீர்களோ என ஐயுறுகிறேன்! சரி பரவாயில்லை. அதையும் சொல்லிவிடுகிறேன்.

    * விரைத்துள்ள ஆண்குறியின் பகுதியில் நிறமாற்றம் ஏற்படும். ” சிவப்பான ” தோல் உள்ளவர்களுக்கு சிவந்தநீல ( purple ) நிறமாகும். கருப்பு நிறத்தவருக்கு நிற மாற்றம் சொல்வது சிரமம்.

    * விரைத்துள்ள பகுதியில் வெப்பம் குறைந்தும் மதமதப்பாகவும் இருக்கும்.

    * இரப்பர் போட்ட பகுதியில் தோல் கருத்தும், தழும்பும் ஏற்பட்டு பின் மறையும்.

    * தொழில் சிறு சிறு சிவப்பு புள்ளிகள் தோன்றலாம். ( இது தோலுக்கு அடியில் உண்டாகும் இரத்தக் கசிவு.

    * சரியாக பம்ப்பை மாட்டாவிட்டால் உரசி காயம் உண்டாகி வலி உண்டாகலாம்.

    * இரப்பர் வளையம் போட்டுள்ளதற்கு மேலுள்ள ஆண்குறியின் பகுதி துவண்ட நிலையில் இருக்கும். இதனால் விரைத்துள்ள பகுதி தொங்க நேரிடலாம். இதைத் தவிர்க்க பம்ப்பை நன்றாக ஆண்குறியின் அடிவரை ஒட்டி வைத்து அழுத்திப் பிடிக்கவேண்டும். அங்குள்ள முடி இடைஞ்சலாக இருந்தால் அவற்றை எடுத்துவிடவேண்டும்.

    * இரப்பர் வளையம் இறுக்கமாக அடிப்பகுதியை பிடித்திருப்பதால் உச்ச கட்டத்தில் விந்து வெளியேறும்போது அது முழுமையாக வெளியேற முடியாமல் தடைப்பட்டு வலிக்கலாம். உச்ச கட்டம் முடிந்து ஆண்குறி சுருங்கியபின் இரப்பர் வளையம் வெளியேறியபின் விந்து தானாக வழிந்து வெளியேறலாம். ஆனால் இதனால் உச்ச கட்டம் பாதிக்காது. நீண்ட நேரம் தடை இல்லாமல் உடல் உறவு கொள்ளலாம்.

    * இரத்தத் தொடர்புடைய வியாதிகள் ( இரத்த சோகை, இரத்தவோட்டக் குறைவு, இரத்தக் குழாய் அடைப்பு ) உள்ளவர்கள் பம்ப் பயன்படுத்தக்கூடாது.

    * இரத்தத்தை லேசாக ஆக்கும் ஆஸ்பிரின் , வார்பாரின், ப்ளேவிக்ஸ், இபூப்ரோபென் போன்ற மாத்திரைகளை உட்கொள்பவர்கள் பயன்படுத்தக்கூடாது.
    எது எப்படியோ. 80 சதவிகிதத்தினர் இதைப் பயன்படுத்தி இன்பம் காண்கின்றனர். 30 சதவிகிதத்தனர் பாதியில் விட்டுவிடுகின்றனர்.

    இப்போ திருப்திதானே விஜயா? … அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    Gangadurai Ganesan says:

    டாக்டர், வடிவேலு ஸ்டைலில் சொல்வது போல இதுதான் பம்ப் அடித்து சென்றுவிடுவது போலும். நீங்கள் பதிவிட்ட பிரச்சனை மிகவும் கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *