புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

 ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com     

42.மக்கள் கவிஞராகத் திகழ்ந்த ஏ​ழை…….

     வாங்க….வாங்க….வாங்க….என்னது ​பொங்கல் வாழ்த்துக்களா….! வாழ்த்துக்கள்….! ​பொங்கல் வந்தா​லே மன​செல்லாம் பூரிச்சுப் ​போயிடுது…இல்லீங்களா… இன்னக்கி ​நேத்தா இந்தப் ​பொங்கல் விழாவக் ​கொண்டாடு​றோம்….ஆண்டாண்டு காலமாக் ​கொண்டாடிக்கிட்டு வர்​ரோம்… நாம மட்டும் ​கொண்டாடா​மே நம்ம வீட்டுல இருக்குற மாடுகளுக்கும் நன்றி ​சொல்ற விழாவா இந்தப் ​பொங்கல் அ​மைஞ்சிருக்கிறது ​ரொம்ப ​ரொம்பச் சிறப்பானது…. இ​றைவனுக்கு மட்டுமல்லாம விவசாயத்துக்கு உதவியா இருந்த உயிரினங்கள் அ​னைத்திற்கும் நன்றி ​சொல்ற விழாவா இந்தப் ​பொங்கல் விளங்குகின்றது…

இந்தப் ​பொங்கல் விழா​வை அறுவ​டைத் திருநாள்னும் ​சொல்வாங்க… இந்தப் ​பொங்கல் விழாவி​னை உழவர் ​பெருமக்கள் அ​னைவரும் ​ரொம்ப உற்சாகத்​​தோட ​கொண்டாடுவாங்க…நல்லா ம​ழை ​பெய்து வி​ளைச்சல் அதிகமா இருந்தா உழவர்கள் மனம்பூரிச்சுப் ​போயிப் ​பொங்கலக் ​கொண்டாடுவாங்க…உழவர்களும் உழவுத் ​தொழிலும் இல்​லைன்னா இந்த உலக​மே இல்​லைங்க…அதனாலதான நம்ம வள்ளுவப் ​பெருந்த​கைகூட,

“உழுதுண்டு வாழ்வா​ரே வாழ்வர் மற்​றெல்லாம்

​தொழுதுண்டு பின்​செல் பவர்”

அப்படின்னு ​சொல்றார். உலகத்து​லே​யே உழவுக்கு அடுத்ததுதாங்க மற்ற ​தொழில்கள் எல்லாம்…இதப் புரிஞ்சுகிட்டு உழவருக்கும் உழவுக்கும் மதிப்புக் ​கொடுக்கணும்…அப்பத்தான் நம்ம நாடு, ஏன் இந்த உலக​மே வறு​மை இல்லாம ​செழிப்பான பா​தையில முன்​னேறும்…என்னங்க நான் ​பொங்கலப் பத்திப் ​பேசிக்கிட்​டே ​போ​றேனா…? ஆமா ​போன வாரம் நான் ​கேட்ட ​கேள்விக்கு வி​டையக் கண்டுபிடிச்சுட்டீங்களா…?

என்னது அதப்பத்தித்தான் நான் ​பேசிக்கிட்டிருக்​கேனா…?எப்படி? உழவ​ரைப் ​பெரு​மைப்படுத்தி உழவருக்காகப் ​போராடி அவர்களது வாழ்க்​கை உயர ​வேண்டு​மென்பதற்காகப் பாடுபட்டவர், மக்கள் கவிஞர், தி​ரையி​சைத் திருவள்ளுவர், தி​ரையி​சைச் சித்தர் என்​றெல்லாம் பாராட்டப்பட்டவர்தான் நம்ம பட்டுக்​கோட்​டையார்…அவரப்பத்தித்தான் ​போனவாரம் நீங்க ​கேட்டீங்க…இப்ப​வேற உழவப் பத்தியும் உழவரப் பத்தியும் ​சொன்னீங்க… உழவுத் ​தொழிலுக்காகவும் உழவர்களுக்காகவும் பாடுபட்டவர் பட்டுக்​கோட்​டையாராத்தான் இருக்க முடியும்…என்ன நான் சரியாச் ​சொன்​னேனா..?

​ரொம்பச் சரியாச் ​சொன்னீங்க…உலகத்து​லே​யே வர்ஜில் அப்படீங்கற கி​ரேக்க கவிஞரத்தான் உழவுக் கவிஞன் அப்படீன்னு ​சொல்லுவாங்க…அதுமாதிரி நம்ப பட்டுக்​கோட்​டையா​ரையும் உழவுக் கவிஞர்னு ​சொல்லலாம்… ஆமா அவரப் பத்தி நீங்க ​சொல்லுங்க​ளே….என்னது நான்தான் ​சொல்லணுமா…? ஏன்…? ஓ..​ஹோ…​ஹோ…நான்தான் நல்லாச் ​சொல்லு​வேனா…சரி…சரி… ​சொல்​றேன் ​கேட்டுக்​கோங்க..

பட்டுக்​கோட்​டை கல்யாணசுந்தரம் அவர்கள் தஞ்​சை மாவட்டத்தில் உள்ள ​செங்கப்படுத்தான் காடு என்ற சிற்றூரில் அருணாசலக் கவிராயருக்கும் விசாலாட்சிக்கும் நான்காவது குழந்​தையாக 13.4.1930-ஆம் ஆண்டு பிறந்தார். பட்டுக்​கோட்​டையாரின் அண்ணன் கணபதிசுந்தரம் ஓவியம் வ​ரைவதில் மிகச் சிறந்தவர். அ​தே​போன்று அவரது தந்​தையாரும் இயல்பாக​வே கவி​தை பு​னையும் ஆற்றல் ப​டைத்தவராக விளங்கினார்.

கல்யாணசுந்தரம் சிறுவனாக இருந்த​போது அவரது அண்ணன் கணபதிசுந்தரத்​தோடு உள்ளூர் திண்​ணைப் பள்ளிக்கூடத்தில் அரிச்சுவடி படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. பள்ளி ​சென்று பயிலாமல் வல்ல​மை ​பெற்ற நூ​லோருள் பட்டுக்​கோட்​டையாரும் ஒருவராகத் திகழ்கிறார். பள்ளி ​சென்று பயிலாவிட்டாலும் பட்டுக்​கோட்​டையார் தனது அண்ணனிடம் அடிப்ப​டைக் கல்வி​யைக் கற்றுக் ​கொண்டார்.

அண்ணன் கணபதி சுந்தரம் தம்பி கல்யாணசுந்தரத்தின்பால் அளவற்ற அன்பு ​கொண்டவர். தம்பியின் வளர்ச்சியின் மீது அக்க​றை ​கொண்டவர். அதனால்தான் இறுதிவ​ரை பட்டுக்​கோட்​டையார் தம் வாழ்க்​கை வழிகாட்டியாக தம் அண்ண​னைக் ​கொண்டிருந்தார்.

ஊர்ச்சூழலும் ​பொதுவு​டை​மை இயக்கவாதியாதலும்

பட்டுக்​கோட்​டையார் வாழ்ந்த காலத்தில் அவரது ஊரில் நிலவு​டை​மை ஆதிக்கம் த​லைவிரித்தாடியது. நிலவு​டை​மையாளரும் ​பெருநிலக்கிழார்களும் ​செங்கம்ப​டைத்தான் காட்டின் சர்வாதிகாரிகளாக விளங்கினார்கள். விவசாயத் ​தொழிலாளர்களும், சிறுவிவசாயிகளும் இந்த நில முதலாளிகளின் கீழ் அடி​மைத் ​தொழில் புரியும் அவல நி​லையில் இருந்தனர்.

ஊரில் நிலவிய சமூகக் ​கொடு​மைகளும், நிலவு​டை​மையாளர்களின் ஆதிக்கப் ​போக்குகளும் நி​றைந்த சமூகப் பின்னணிதான் பட்டுக்​கோட்​டையா​ரைப் ​​பொதுவு​டை​மைவாதியாக மாற்றியது எனலாம்.

தியாகி சிவராமனுடனும், வாட்டாக்குடி இரணியனுடனும் ​சேர்ந்து விவசாயிக​ளை ஒன்று திரட்டி, நில முத​லைகளுக்கு எதிராகப் ​போர்க்​கொடி தூக்கியவர் பட்டுக்​கோட்​டையார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டுக்​கோட்​டையில் நிலவு​டை​மையாளர்க்கு எதிராகப் பல ​போராட்டங்க​ளை நடத்தியதால் சிவராம​னையும், இரணிய​னையும் காவலர்கள் சுட்டுக் ​கொன்றனர். இவர்க​ளோடு ​தோ​ளோடு ​தோன் நின்று விவசாயி சங்கத்தில் பட்டுக்​கோட்​டையார் ஈடுபட்டிருந்ததால் அவர்மீதும் நிலவு​டை​மையாளர்களின் பார்​வை பதிந்தது. அவ​ரையும் அழித்துவிடத் தருணம் பார்த்திருந்தனர்.

அவர்களின் ​கொடு​மையிலிருந்து தப்ப முயன்ற பட்டுக்​கோட்​டையார் தனது அண்ணனுடன் ​சென்​னைக்கு வி​ரைந்தார். ​​சென்​னையில் ஏற்பட்ட ​நெருக்கடியாலும், அங்கு நிலவிய சூழலாலும் மீண்டும் தங்கள் ஊருக்​கே திரும்பி வந்தார் பட்டுக்​கோட்​டையார்.

நாடகத்து​றையில் ஈடுபடல்

அக்காலத்தில் பட்டுக்​கோட்​டை​யைச் ​சேர்ந்த டி.எஸ். து​ரைராஜ் என்பவர் மாடர்ன் தி​யேட்டரில் நடித்துக் ​கொண்டிருந்தார். அவ​ரை அணுகினால் வாய்ப்புக்கி​டைக்கும் என எண்ணிய பட்டுக்​கோட்​டையார் ​சேலத்திற்கு வி​ரைந்தார். அவ​ரைக் கண்ட டி.எஸ்.து​ரைராஜ், “தற்​போது இங்கு இடமில்​லை, நாங்க​ளெல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுப் பின்பு சினிமாவுக்கு வந்​தோம். நீயும் முதலில் நாடகம் நடித்துவிட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்தது” என்று கூறிச் சக்தி நாடக சபாவின் கிருஷ்ணமூர்த்திக்குப் பட்டுக்​கோட்​டையா​ரை நாடகக் குழுவில் ​சேர்ப்பதற்கு ஒரு கடிதத்​தைக் ​கொடுத்தனுப்பினார். து​ரைராஜின் கடிதத்​தைக் கண்ட கிருஷ்ணமூர்த்தியவர்கள் பட்டுக்​கோட்​டையா​ரைத் தம் நாடகக் குழுவில் ​சேர்த்துக் ​கொண்டார்.

​தொடக்கத்தில் இவருக்கு ​வேஷம் தரவில்​லை. நாடக சபாவுக்கான ஆயத்த ​வே​லைக​ளை​யே பட்டுக்​கோட்​டையார் ​செய்து வந்தார். பட்டுக்​கேட்​டையாரது குட்டிக்க​தைக​ளையும், பாடல் திற​மை​யையும் உணர்ந்து பின்னர் சபாவினர் நடிப்பதற்கு வாய்ப்புக் ​கொடுத்தனர். பட்டுக்​கோட்​டையாரின் நடிப்பு அவருக்குப் புக​ழைத் தந்தது.

பாரதிதாசனாரும் பட்டுக்​கோட்​டையாரும்

சக்தி நாடகசபா தமிழகத்தில் பல இடங்களில் நாடகத்​தை நடத்திவிட்டுப் புது​வைக்கு வந்த​போது அக்குழுவில் இருந்த பட்டுக்​கோட்​டையார் பாரதிதாச​னைக் காண விரும்பினார். அதனால் பட்டுக்​கோட்​டையார் தனது அண்ணன் கணபதியிடம் ​சொல்லி பாரதிதாசன் படத்​தை வ​ரைந்து வாங்கிக் ​கொண்டார். பன்னிரண்டு மாம்பழங்க​ளையும் வாங்கிக் ​கொண்டு பாரதிதாச​னைச் சந்தித்தார். படத்​தையும் பழங்க​ளையும் பட்டுக்​கோட்​டையார் பாரதிதாசனிடம் அளித்த​போது பாரதிதாசன் உணர்ச்சிப் ​பெருக்கில் தழுவிக் ​கொண்டு பட்டுக்​கோட்​டையாரின் விவரங்க​ளைக் ​கேட்டுத் ​தெரிந்து​கொண்டார். அன்றுமுதல் பாரதிதாச​னோடு கல்யாணசுந்தரத்திற்கு ​நெருக்கமான உறவு ஏற்பட்டது.

1952-ஆம் ஆண்டு கடும்புயலால் தஞ்​சை மாவட்டத்தின் கடற்க​ரை ஊர்கள் ​பெரிதும் பாதிக்கப்பட்டன. ​செங்கம்ப​டைத்தான் காடும் பாதிப்புக்குள்ளாகியது. இதனால் பட்டுக்​கோட்​டையாரின் வீடும் நாசமாகியது. வீட்​டை சரி​செய்ய சற்றுக் காலம் ஆகுமாதலால் பட்டுக்​கோட்​டையார் தமது ஊ​ரைவிடுத்து மீண்டும் பாரதிதாச​னைச் சந்திக்கப் புது​வைக்குச் ​சென்றார். ஏற்கன​வே அஞ்சா​​நெஞ்சன் அழகிரிசாமியவர்கள் ஒருமு​றை பட்டுக்​கோட்​டையா​ரைப் புரட்சிக்கவிஞருக்கு நன்கு அறிமுகம் ​செய்து இருந்ததால் புரட்சிக்கவிஞர் தம்முடன் தங்கியிருந்து குயில் இத​ழை ​வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு பட்டுக்​கோட்​டையா​ரைக் ​கேட்டுக் ​கொண்டார்.

பட்டுக்​கோட்​டையார் பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவி​தை இலக்கணங்க​ளைக் கற்றுக் ​கொண்டார். இயல்பாகப் ​பொங்கிவரும் கவி​தையுணர்வும் பட்டறிவால் ​பெற்ற சமூகப் பார்​வையும் ​கொண்ட பட்டுக்​கோட்​டையாரின் கவித்திற​னை பாரதிதாசனின் நட்பு ​மேலும் ​செழு​மையாக்கியது. புது​வையில் இருந்த காலத்தில் பல்​வேறு கவி​தை​ளை பட்டுக்​கோட்​டையார் எழுதினார்.

பா​வேந்தரின் பாராட்டும் தி​ரையுலக நு​ழைவும்

பட்டுக்​கோட்​டையார் பாடல்பு​னையும் திறனால் பா​வேந்தரின் பாராட்​டைப் ​பெற்றார். ஒருநாள் கவிஞர் பாரதிதாசன் பட்டுக்​கோட்​டையா​ரையும் அவரது சக கவிஞர்க​ளையும் அ​ழைத்து ஒரு காகிதத்​தைக் ​கையில் பிடித்து வாசித்துக் காட்டி, ஏய் ஆம்பி​ளைப் பசங்களா இ​தைப் பாருங்கடா! அகல்யா என்ற ​பெண்​ணொருத்தி எப்படிப் பாடல் எழுதியிருக்கிறாள். நீங்களும்தாம் எழுதுகிறீர்கள் என்று மகிழ்வுடன் கல்யாணசுந்தரத்திடம் காகிதத்​தை நீட்டினார். கல்யாணசுந்தரத்திற்கு ​ஒன்றும் ​​பேசமுடியவில்​லை. அவருக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏ​னெனில் அ.கல்யாணசுந்தரம் என்ப​தைச் சுருக்கி அகல்யா என்று பட்டுக்​கோட்​டையார்தான் அக்கவி​தை​யை எழுதினார் என்பது ​நோக்கத்தக்கது. அத​னைப் பட்டுக்​கோட்​டையார் யாருக்கும் ​தெரிவிக்கவில்​லை.

பா​வேந்தர் பட்டுக்​கோட்​டையாரின் பாட்டுத்திற​னை வளர்க்க உதவியாக இருந்தார். ​மேலும் தி​ரையுலகில் பட்டுக்​கோட்​டையார் நு​ழைவதற்குக் காரணமாகவும் இருந்தார். மாடர்ன் தி​யேட்டரில் வசனம், பாடல்கள் ஆகியவற்​றை எழுதுகின்ற பணிகளில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். அப்​போது பட்டுக்​கோட்​டையா​ரையும் தம்முடன் அ​ழைத்துச் ​சென்று தி​ரைத்து​​றையில் ஈடுபடுத்தினார்.

இந்நி​லையில் பாரதிதாசனுக்கு மாடர்ன் தி​யேட்டர்சாருடன் பிணக்கு ஏற்பட்டது. அதனால் பாரதிதாசன் அந்நிறுவனத்​தைவிட்டு ​வெளி​யேறினார். அவ​ரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டுவிட்டார். அத​னைக் கண்ட பாரதிதாசன் பட்டுக்​கோட்​டையா​ரை வாஞ்​சையுடன் தட்டிக் ​கொடுத்து, “நீ முன்​னேற ​வேண்டியவன்; ​பொறுத்துக் ​கொண்டு இங்​கே​யே இருடா” என்று கூறிவிட்டுப் புது​வைக்குத் திரும்பினார்.

பட்டுக்​கோட்​டையாரின் கவி​தை வளர்ச்சிக்கும் தி​ரைப்பட நு​ழைவுக்கும் பல்லாற்றானும் பாரதிதாசனார் து​ணைபுரிந்ததால்தான் பட்டுக்​கோட்​டையார் கவி​தை, கடிதம் எழுதுவதற்கு முன்னர் பாரதிதாசன் து​ணை என எழுதும் வழக்கத்​தை ​மேற்​கொண்டார். பட்டுக்கோட்டையார் பாரதிதாசனைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டார். இதனை,

‘‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மு. அண்ணாமலையும் கொஞ்சநாள் எங்கிட்ட புதுச்சேரியில் இருந்தாங்க. இரண்டு பேரும் என்பாட்டைப் பேர்த்து எழுதுவானுங்க. பட்டுக்கோட்டை இருக்கானே ரொம்ப அமைதி. என் எதிரிலேயே பயபக்தியோட வாய்கூடத் திறக்காம உட்கார்ந்து இருப்பான். என்கிட்ட அளவு கடந்த மரியாதை. எதை எழுதினாலும், ‘‘பாரதிதாசன் வாழ்க’’ன்னு மேலே போட்டுட்டுத்தான் எழுதுவான். அவன் இவ்வளவு வேகமா வளருவான்னு நான் அப்ப நெனைக்கல. அந்த அறிகுறி எதுவும் அப்பத் தெரியல’’ (கே.ஜீவபாரதி, காலமறிந்து கூவிய சேவல், பக்.,106 – 107) என்ற பாவேந்தரின் கூற்றே தெளிவுறுத்துகின்றது.

தன்மானக் கவிஞர்

பட்டுக்​கோட்​டையார் இள​மைக் காலந்​தொட்​டே தன்மானத்​தோடு வளர்ந்தவர், வறு​மை இருந்த​போதும் சுயமரியா​தையுடன் ​பெரு​மையாக வாழ்ந்தவர். அக்காலத்தில் தி​ரைப்பட உலகில் எழுதப்பட்ட பாடல்களுக்குப் பட முதலாளிகள் கடன் ​சொல்லிவிடுவார்கள. அதனால் பட்​டெழுதியவர்கள் ​பெரிதும் துன்பப்பட்டிருக்கிறார்கள். ​வைத்திய நாத அய்யர் என்பவர் ஐம்பதுகளில் படம் எடுத்தவர், அவர் படத்தில் பட்டுக்​கோட்​டையார் பாடல் எழுதினார் ஆனால் பாட்டு எழுதியதற்குப் பட்டுக்​கோட்​டையாருக்கு அவர் பணம் ​கொடுக்கவில்​லை. தினமும் பட்டுக்​கோட்​டையார் அவ​ரைப் பார்க்க   அ​லையாய் அ​லைந்தார். வறு​மை அவ​ரை நடக்க ​வைத்தது.

ஒருநாள் பணம் ​வேண்டிப் பட்டுக்​கோட்​டையார் ​வைத்தியநாத அய்யர் வீட்டிற்குச் ​சென்றிருக்கிறார், அய்யர் கவிஞ​ரைப் பார்த்துவிட்டு ​வெளி​யே இரு என்று கூறினார். இத​னைக் ​கேட்ட பட்டுக்​கோட்​டையாருக்கு அவரின் நடத்​தைப் பிடிக்காது ஒரு காகிதத்​தை எடுத்து அதில்,

“தாயால் பிறந்​தேன்

தமிழால் வளர்ந்​தேன்

நா​யே ​நேற்றுன்​னை

நடுத்​தெருவில் சந்தித்​தேன்

நீயார் என்​னை

நில்​லென்று ​சொல்வதற்கு”

என்று எழுதி அய்யர் வீட்டு வாசல் கதவில் ​செருகி ​வைத்துவிட்டு வந்துவிட்டார். இத​னைக் கண்ட அய்யர் ஆகா தமிழ்க்கவிஞன் அறம்பாடிவிட்டா​னே என்று கருதி பணத்துடன் ஓ​டோடி வந்து பட்டுக்​கோட்​டையாரிடம் ​கொடுத்துவிட்டுச் ​சென்றார்.

இன்​னொரு மு​றை மாடர் தி​யேட்டர்ஸ் சுந்தரத்​தைப் பார்க்கக் கவிஞர் தம் நண்ப​ரோடு ​சென்றார். உள்​ளே வந்த கவிஞ​ரையும் அவரு​டைய நண்பர்க​ளையும் சிறிது ​நேரம் மரியா​தைக்குக்கூட உட்காருங்கள் எனக் கூறவில்​லை மாடர்ன்தி​யேட்டர் சுந்தரம். இத​னைக் கண்ட பட்டுக்​கோட்​டையார் எதற்கும் அஞ்சாமல்,”மரியா​தை ​கொடுத்து மரியா​தை ​பெறுங்கள்” எனக் காகிதத்தில் எழுதி சுந்தரத்திடம் நீட்டினார். அத​னைப் படித்துப் பார்த்த சுந்தரம் அன்றிலிருந்து தம் அ​றைக்குள் வருபவர்கள் அமர்வதற்கு நாற்காலி ​போடும் பழக்கத்​தை ​மேற்​கொண்டார். பாத்துக்கிட்டிங்களா…எவ்வளவு தன்மானம் மிக்கவராகப் பட்டுக்​கோட்​டையார் விளங்கினாருன்னு… அதனாலதான் பிற்காலத்துல பட்டுக்​கோட்​டையார்,

“மானமில்லாக் ​கோ​​​ழையுடன் ​சேரக்கூடாது” என்றும்

“உன் நரம்​போடுதான் பின்னிவளரணும்

தன்மான உணர்ச்சி”

என்று பாடினார்.

உழவுக் கவிஞர்

உழவின்மீதும், உழவர்கள் மீதும் பட்டுக்​கோட்​டையார் மிகுந்த பற்றுடன் விளங்கினார். அவரது பாடல்களில் உழவர்க​ளைப் பற்றிய குறிப்புகள் இடம்​பெறாது இருக்காது. உழவர்க​ளை உயர்வாகக் கருதியவர் பட்டுக்​கோட்​டையார்.

நடிப்பிற்காகக்கூட உழவர்களை இழிவாக நடத்தத் தெரியாதவர் மக்கள் கவிஞர். ‘‘1954-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் கண்ணின் மணிகள் நாடகம் நடிக்கப்பட்டது. இதில் மக்கள் கவிஞர் ஒரு போலீஸ்காரராக நடித்தார். போலீஸ் வேடத்துடன் மேடைக்கு வந்தார். ஒரு விவசாயியை அடித்துக் கைது செய்ய வேண்டிய காட்சி.

கவிஞரோ தடியைக் கீழே போட்டுவிட்டு விவசாயியின்மேல் கையை வைத்து லேசாகத் தள்ளினார். திரைக்கு உள்ள இருந்து நாடக இயக்குநர் அடி!அடி! என்று கத்துகிறார். கவிஞர் அடிக்காமல் சிரிக்கிறார். ரசிகர்கள் கூட்டமே இதைக் கண்டு சிரித்தது.

நாடகம் முடிந்தபின், ‘ஏன் நீங்கள் அவரை அடிக்கவில்லை?’’ என்று அவரை நாடக இயக்குநர் ஏ.வீரப்பன் கேட்டார். நான் அடித்தால் நாடகமே நடக்காமல் போய்விடும். அதனால் அடிக்கவில்லை என்றார் மக்கள் கவிஞர்’’ என்று தோழர் மாயாண்டி பாரதி குறிப்பிடுவது மக்கள் கவிஞரின் உளக்கிடக்கையையும் அவரது தூய எண்ணத்தையும் காட்டுவதாக உள்ளது.

அனைவருக்கும் நல்ல உடை, நல்ல உணவு, நல்ல இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் பட்டுக்​கோட்​டையார். மற்றவர்கள் நல்ல உடை உடுத்தினால் மட்டுமே தாம் உடுத்துவது மகிழ்ச்சியைத் தரும் என்று கருதினார் பட்டுக்கோட்டையார்.

ஒருமுறை விவசாயிகள் மாநாடு கீரமங்கலத்தில் நடந்தபோது அம்மாநாட்டிற்கு வந்து டி.ஓ.ஆர்.சந்திரன் வீட்டில் தங்கி இருந்தால். நிகழ்ச்சிகு ஆரம்பிக்க கவிஞரை அழைத்துவர அந்த வீட்டிற்குச் சென்றேன். பட்டுவேட்டி சட்டையைக் காட்டி, ‘‘இதைப் போட்டுக்கிட்டு நிகழ்ச்சிக்கு வரட்டுமா?’’ன்னு கவிஞர் கேட்டார். ‘‘ஏன் அப்படிக் கேக்குறீங்க?’’ன்னு நான் கேட்டேன். அதற்குக் கவிஞர், ‘‘இல்ல…. விவசாயிக பட்டினியில் வாடும்போது நீ பட்டுவேட்டி கட்டிக்கிட்டுப் போகாத. தோழர் மாசிலாமணி கண்டிப்பார்’’ன்னு சென்னையில் தோழர் மாயாண்டி பாரதி கூறினார். அதனாலதான் கேட்டேன்’’ என்றார்.

‘‘பட்டுச் சட்டை போடுறது தப்பில்லை. பாமர மக்கள மறந்திடக் கூடாது. .. நீங்க மறந்திருந்தா இந்த மாநாட்டுக்கே வந்திருக்க மாட்டீங்களே! உங்களோட உள்ளம் எங்களுக்கும் ஏழை மக்களுக்கும் தெரியும்.அதனால சும்மா போட்டுக்குங்க. தப்பில்லை’’ன்னு நான் சொன்ன பின்னாலதான் கவிஞர் பட்டாடையைப் போட்டுக் கொண்டார் என்று பட்டுக்கோட்டை வட்டார பொதுவுடைமை கட்சியின் செயலாளராக இருந்த எம்.மாசிலாமணி குறிப்பிடுகின்றார். (காலமறிந்து கூவிய சேவல், ப., 133). இந்த நிகழ்ச்சி மக்கள் கவிஞரின் மனதையும் அப்பழுக்கற்ற அவரது வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

வறு​மை​யைக் கண்டு கலங்காத நம்பிக்​கையாளர்

பட்டுக்​கோட்​டையார் வறுமையில் உழன்றவர். உண்ண உணவின்றிப் பல நாட்கள் பட்டினியால் வாடியவர். அவர் உடுத்தியிருந்த நாலுமுழ வேட்டி கிழிந்த போது அவர்,

‘‘ஓரம் கிழிஞ்சாலும் ஒட்டுப் போட்டுக் கட்டிக்கலாம் – இது

நடுவே கிழிஞ்சுதடி நாகரத்தினமே! – அதுவும்

நாலுமுழ வேட்டியடி கனகரத்தினமே!’’ (ப.,231)

என்று நகைச்சுவை தோன்றப் பாடுகின்றார். ஒருசமயம் மக்கள் கவிஞர் சாதரண செருப்பைக் (நடையன் என்று கூறுவர்) கால்களில் போட்டுக் கொண்டு நடந்தார். செருப்பின் வார் அறுந்துவிட்டது. செருப்பைப் போடமுடியவில்லை. அதனைத் தைக்கவும் இயலாது. இத்தகைய சூழலில் செருப்பின்றி வெறுங்கால்களோடு எவ்வாறு தார்ச் சாலையில் நடக்க இயலும். கவிஞர் அதுகுறித்துக் கலங்காது,

‘‘உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்

செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான்!

நெருப்பினில் வீழ்ந்து எதிர்நீச்சல் அடிக்கத்

துணிந்தான்! கொதிக்கும் தார் குளிர் நீர்!’’ (ப.,231)

என்று மனத்துணிவுடன் கவிஞர் பாடுகின்றார்.

கவிஞர் வறுமையில் வாடினாலும் அவர் கவிதைகளில் வறுமையும் இல்லை வெறுமையும் இல்லை. வறுமையால் வாடும் மக்கள் மனச் சோர்வு அடைந்திடாது இருக்க மக்கள் கவிஞர்,

‘‘என்றும் துன்பம் இல்லை இனிச் சோகம் இல்லை

பெறும் இன்பநிலை வெகு தூரம் இல்லை!

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை

நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை!

………………………….. …………………………………….. ……………………………………………….

இனிச் செல்கின்ற தேசத்தில் பேதமில்லை!

கொடும் தீமை பொறாமை வீரோதமில்லை!’’ (ப.,303)

என மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுகின்றார்.

​​பொதுவு​டை​மைக் கவிஞ​ர்

மக்கள் கவிஞர்தான்பட்ட வறுமையை வாழ்க்கைப் போராட்டத்தைத் தனக்கு வசதி வந்தபோதும் மறக்கவில்லை. ஒழுக்கப்பட்டவர்களுக்காக அனுதாபப்பட்டு எழுதாமல் ஒடுக்கப்பட்டவர்களின் குராக ஒலித்தவர் மக்கள் கவிஞர்.

பட்டுக்கோட்டையார் எந்த நிலையிலும் பொதுவுடைமை இயக்கத்தை மறவாது அவ்வியக்கத்துடன் இணைந்தே இருந்தார். இதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

‘‘1957 தேர்தல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தோற்றனர். தோல்விக்குக் காரணத்த கவிஞர் என்னிடம் விவாதித்தார். தேர்தலில் வெற்றி பெறவிட்டாலும் நம்முடைய கருத்துக்கள மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல இந்தத் தேர்தல் பயன்படுவது பற்றியும் நமக்கிருக்கிற வாய்ப்பு வசதியில் இவ்வளவுதான் முடிந்தது என்றும் சொன்னேன்’’.

‘‘சரி!சரி! அடுத்த தேர்தலுக்கு நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன். டேப் அடிச்சு ஜனங்களைத் திரட்டி நம்ம தோழர்களை ஜெயிக்க வைக்க முயற்சிக்கிறேன்’’ என்றார். அடுத்த எலெக்ஷன் வந்தது. ஆனால் மக்கள் கவிஞர் திரும்பி வரமுடியாத இடத்திற்குச் சென்று விட்டார்.’’

என்று பட்டுக்கோட்டை வட்டார பொதுவுடைமை இயக்க வட்டாரச் செயலாளர் எம்.மாசிலாமணி அவர்கள் குறிப்பிடுவது(சமூகவியலும் இலக்கியமும், ப., 134) மக்கள் கவிஞர் எந்நிலையிலும் கொள்கைமாறா பொதுவுடைமைக் கவிஞராகவே திகழ்ந்தார் என்பதனை உறுதிப்படுத்தகிறது.

மக்கள் கவிஞர் மார்க்சிய கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்ததால்,

‘‘கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது

சிந்திச்சு முன்னேற வேணுடிமடி’’

என்று தத்துவக் கண்ணோட்டத்துடனும்,

‘‘வசதியிருக்கிறவன்தரமாட்டான் – அவனை

வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’’

‘‘தனியுடைமைக் கொடுமைகள் தீரத்

தொண்டு செய்யடா’’

என்று போராட்ட உணர்வைத் தூண்டுகின்ற வண்ணம் அழுத்தமாக பொதுவுடைமைக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடுகின்றார்.

தோழர் ஜீவாவுடன் கொண்ட நட்பு

பட்டுக்கோட்டையார் ஜீவா அவர்களைத் தனது உடன் பிறந்த மூத்த சகோதரராகவே கருதினார். ஜீவா அவர்களும் தனது உடன் பிறந்த இளைய சகோதரராகவே உரிமையுடன் மக்கள் கவிஞருடன் பழகிவந்தார். இதனை,

‘‘அண்ணன் தம்பி போல பழகி வந்தாங்க. அடிக்கடி எங்க வீட்டுக்கு ஜீவா வருவாரு. சிலநாள் அவருடன் கே. முத்தையாவும் வருவாரு. யாரு வந்தாலும் எங்க வீட்ல இருந்த முதல் அறையிலதான் காத்திருப்பாங்க. ஆனா ஜீவா மட்டும் உரிமையோடு வீட்டுக்குள்ள வந்திருவாரு. கவிஞர் இறந்த பின்னால நாங்க இங்க வந்திட்டோம். பட்டுக்கோட்டைக்கு கூட்டத்திற்கு வந்திருந்த ஜீவா ரத்தினம் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு இங்க வந்து எங்களப் பாத்திட்டுப் போனாரு. அதுதான் நான் அவரக் கடைசியாப் பார்த்தது’’(கே.ஜீவபாரதி, காலமறிந்து கூவிய சேவல், பக்., 120-121)

என்ற மக்கள் கவிஞரின் துணைவியாரின் கூற்றும்,

‘‘ஒரு முறை ஜீவா வீட்டிற்குக் கவிஞர் சென்றிருக்கிறார். வீட்டிற்குள் சத்தம் கேட்கிறது. ஜீவாவும் அவர் மனைவியும் ஆவேசமாகப் பெசிக் கொள்கிறார்கள். நீண்ட நாட்களாக ஜீவாவிடம் அவர் மனைவி பட்டுப்புடவை கேட்டிருக்கிறார். அதை வாங்கிக் கொடுக்காததால் வந்த சத்தமே இது. இதைப் புரிந்து கொண்ட கவிஞர் மறுநாள் ஜீவா வீட்டிற்குப் பட்டுப்புடைவையுடன சென்றிருக்கிறார். அந்தளவிற்கு ஜீவா மீது கவிஞருக்கு அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு’’ (மேலது நூல், பக்., 134-135)

என்ற மக்கள் கவிஞரின் தோழர் எம்.மாசிலாமணியின் கூற்றும் தெளிவுறுத்துவனவாக உள்ளன.

ஜீவாவும் கவிஞருக்கு வேண்டிய நூல்களை வாங்கி வந்து கொடுப்பார். மக்கள் கவிஞர் அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார். ஜீவா அவர்கள் தன்னைத் தம்பி என்று அழைப்பதையே மக்கள் கவிஞர் விரும்பினார். இதனை,

‘‘நான் உடல்நலக் குறைவால் சமீபத்தில் குற்றாலம் சென்றிருந்தேன். திரும்பி வரும்போது ‘குற்றாலக் குறவஞசி’ ஒன்று வாங்கி வருமாறு கவிஞர் கடிதம் எழுதினார். வாங்கி வந்தேன்.அந்த புத்தகத்தில் ‘அன்புத் தம்பி கவிஞர் கல்யாணசுந்தரத்திற்கு’ என்று எழுதினேன். அது கண்ட அவர் ‘‘நான் என்ன கவிஞர் ஆகிவிட்டேனா?’’ என்று கேட்டது அவரது அசாத்திய தன்னடக்கதைத்ததான் காட்டுகிறது’’ (காலம் அருளிய கவிஞன் (கட்டுரை) ஜீவானந்தம், தாமரை, அக்டோபர், 1960)

என்ற ஜீவாவின் கூற்றுத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது.

கவிஞர்கள் பாராட்டிய மக்கள் கவிஞர்

மக்கள் கவிஞர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கவிஞர்களும் அவரை மனமாறப் போற்றிப் புகழ்ந்தனர். ஒருமுறை கவியரசு கண்ணதாசன் சொந்தப்படம் எடுக்க நினைத்து அதில் தன்னைப் போன்ற பிற கவிஞர்களின் பாடலும் இடம்பெற வேண்டுமென நினைத்து அன்றைய திரைத்துறையில் பெரிய கவிஞர் எனப் போற்றப்படும் ஒருவரிடம் ஒரு பாடல் எழுதித்தரச் சொல்ல அவரும் அதற்கு நேரமில்லை. ஏற்கனவே நான் எழுதின பல பாடல்கள் உஎள்ளன. அதைத் தருகிறேன். ஏதாவது ஒன்றைப் பொறுக்கித் தேர்ந்தெடுத்துக் கொள் எனக் கூறிவிட இது கவியரசுக்குப் பெரும் அவமானமாகப் போய்விடவே சரி அப்புறமாக வருகிறேன்! என வெளியே வந்தாராம். பின்னொருநாளில் கவியரசு பட்டுக்கோட்டையாரிடம் சென்று கேட்க, உடனே கவிஞர் தயக்கமின்றிப் பாடல் எழுதிக் கொடுத்துவிட்டார். இதுபற்றிக் கண்ணதாசன் கூறும்போது என் தம்பி பட்டுக்கோட்டையாரின் பண்பு அந்தத் தலைக்கனம் பிடித்த கவிஞனுக்குச் சிறிதும் இல்லையெனக் குறிப்பிட்டாராம்.

அதைப்போன்றே அப்போது திரையிசைத் துறையில் வாத்தியார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட உடுமலை நாராயண கவியிடம் ஒருவர் பட்டுக்கோட்டையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கு அவர், ‘‘அவன் கோட்டை! நான் பேட்டை’’ என்று குறிப்பிட்டார். இது ஒன்றே மக்கள் கவிஞரின் மாண்பினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

மரணத்தை வென்ற மகா கவிஞர்

1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. 1958-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாள் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். 08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ம் வயதில் மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.

மரணம் மனிதன் பயப்படும் ஒரு சொல். மரணித்தல் மனிதன் விரும்பாத ஒன்று. மரணம் தங்களுக்கு வரக்கூடாது என்று தடுக்க நினைக்கும் மனிதர்களே இங்கு அதிகம். ஆனால் தங்களுக்கு நேரப்போகும் மரணத்தை எண்ணி எந்தவிதக் கவலையும் கொள்ளாதவராக மக்கள் கவிஞர் விளங்கினார்.

இதற்கு பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியை மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பராகிய ஏ. வீரப்பன்,

‘‘நானும் பட்டுக்கோட்டையாரும், மூடப்பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ளுவது கிடையாது. ஒருமுறை நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தபோது இறந்துபோனபின் பிணத்தை வைத்துக் கொண்டு மக்கள் கூத்தடிப்பது அழுவது எனக்குப் பிடிக்காது. நான் இறந்தாலும் சரி நீ இறந்தாலும் சரி அழவே கூடாது. யார் உயிருடன் இருக்கின்றார்களோ அவர் அன்று பிரியாணி வாங்கிச் சாப்பிடணும் என்று பட்டுக்கோட்டையார் என்னிடம் கூறினார். ஆம் (8.10.1959) இன்று அவர் இறந்து விட்டார். நான் அழவில்லை. அவர் எனக்கிட்ட கட்டளைப்படியே பிரியாணி சாப்பிட்டேன். எனக்குச் சாப்பிட மனசு இடங்கொடுக்கவில்லை. என்ன செய்ய! என்னுடைய ஆருயிர் நண்பனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் என்னுள் இருந்து என்னை வழிநடத்தியதால் பிரியாணி சாப்பிட்டேன் என்னைப் பார்க்க மைலாப்பூர் வரும்போது,‘‘மேலோர் வாழும் இடத்திற்கு வருகிறேன்’’ எனக்கூறும் கல்யாணம் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். ‘‘சென்றதினி மீளாது’’ என்று அவன் கூறிய வார்த்தை அவனுக்குப் பலித்துவிட்டது’’ (கார்த்திகேயன், பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை, ப., 67)

என்று மக்கள் கவிஞர் இறந்த அன்று கூறி அஞ்சலி செலுத்துகின்றார்.

மக்கள் கவிஞரைக் குறித்து,

‘‘இன்றைக்குிருப்பவர் நாளைக் கிருப்பவர்

என்றைக்கும் வாழ்பவர் ஆவதில்லை

என்றைக்கு வாழ்ந்தவன் இன்றைக்கு வாழ்பவன்

என்றைக்கும் வாழ்பவன் மக்கள் கவி’’ (இளந்தேவன்)

‘‘கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஓர் பொழுதும்

பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே

வாழும் தமிழ் நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்

வாழ்கின்ற காலம் வரைவாழ்ந்துவரும் நின்பெயரே’’

             (கண்ணதாசன்)

என்று கவிஞர் இளந்தேவன், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் பாடுவதைப் போன்று மக்கள் கவிஞர் தமிழர்தம் நெஞ்சில் நிலைத்து நின்று வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். மரணத்​தை ​வென்ற மகாகவிஞராகப் பட்டுக்​கோட்​டையார் திகழ்கின்றார். என்னங்க ​கேட்டுக்கிட்டீங்களா…

வாழ்க்​கையில உயர்வதற்கு முயற்சியும் உ​ழைப்பும் ​நேர்​மையும்தான் முக்கியம்னு…​நேரிய வழி​யே நம்​மை வாழ்க்​கையில முன்​னேற்றும்…நல்ல வழியில ​போங்க..​வெற்றி ஒங்களுக்குத்தான்… ஆமாங்க இது உண்​மைங்க…

​வெளிநாட்டுல பிறந்தவங்க…அஞ்சு வயசு​லே​யே தனது தந்​தையா​ரை இழந்து வறு​மையில வாடினாங்க..​பெண்விடுத​லைக்காகப் ​போராடினாங்க… இந்தியாவுக்கு வந்தாங்க..இந்திய விடுத​லைப் ​போராட்டத்துல பங்கு ​​கொண்டாங்க…பிரம்மஞான ச​பையத் ​தோற்றுவித்தாங்க…அவங்க யாருன்னு ​தெரியுதா….?என்ன ​யோசிக்கிறீங்களா…​யோசிங்க அடுத்தவாரம் பார்ப்​போம்…(​​தொடரும்………..43)

Series Navigationஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது“மணிக்கொடி’ – எனது முன்னுரைதொடாதேசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​6​இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு”புள்ளும் சிலம்பின காண்”தினம் என் பயணங்கள் – 1உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழாதாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2திருக்குறளும் தந்தை பெரியாரும்படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்விதூதும், தூதுவிடும் பொருள்களும்மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *