1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது. தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு ‘சகோதரர்கள்’ என்றும் பூடகமாய்த் தெரிவித்துவிட்டு இவ்வாறு கூறினார். “நான் (கற்பக) விநாயகம், அவர் (ரவி) ஆறுமுகம். விநாயகரும், ஆறுமுகமும் சகோதரர்கள்தானே!” என்றார்.
பாள்ளியில் பயின்ற காலத்திலேயே சொற்பொழிவு ஆற்றுவதில் திறமைசாலியாக விளங்கிய ரவி ஆறுமுகம் அப்போது பேசியதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியபின் கற்பகவிநாயகம அவர்கள் ஒரு கதை சொன்னார். அது கீழ் வருமாறு:
“தேவகோட்டை மாநகரத்தில் ஒரு தந்தை இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். அந்த நான்கு மகன்களில் மூன்று பேர் மிகவும் நன்றாகப் படிப்பவர்கள். மிகச் சிறந்த புத்திசாலிகள். எந்த வகுப்பில் இருந்தாலும், அதில் முதல் இடத்தைப் பெற்றுவிடுவார்கள். அந்த நான்கு மகன்களில் இரண்டாவதாய்ப் பிறந்தவன் படிப்பு வராத மாணவன். ‘சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது’ என்று கூறுவார்களல்லவா? அதற்கு எடுத்துக்காட்டாய் இருந்து வந்த மாணவன். ஆனால் அவன் எப்படியோ தட்டித் தடுமாறியும் தப்பித்தவறியும் பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் வந்து விட்டான். ஆனாலும், எதிர்பார்த்தது போன்றே, பள்ளி இறுதித் தேர்வில் தோற்றுப் போனான். முதல் முறை மட்டுமல்லாமல் இரண்டாம் முறையும் அவன் தோல்வியைத் தழுவினான். அவனுடைய வகுப்புத் தோழர்கள் அனைவரும் தேர்வில் வெற்றியடைந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள். இதன் விளைவாக அவனைப் பெற்ற தாய்-தந்தையரும் கூட அவனை ஆதரவாய்ப் பார்க்கவில்லை. இதனால் அவன் உள்ளத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை வேர்விட்டுவிட்டது. வாழ்க்கை வெறுத்துப் போன மனநிலையில், அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் எனும் முடிவுக்கு வந்துவிடுகிறான்.
தேவகோட்டையிலிருந்து புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போய் அங்கே தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறான். அதற்குரிய நாளாக ஒரு வெள்ளிக்கிழமையை அவன் தேர்ந்தெடுக்கிறான்.
இவ்வாறு முடிவு செய்த பிறகு அவன் தேவகோட்டையில் இருக்கும் ஒரு நூலகத்துக்குப் போகிறான். அங்கே எடுத்த எடுபில் அவனுக்குப் படிக்கக் கிடைக்கும் புத்தகம் “சத்திய சோதனை” எனும் தலைப்புள்ள புத்தகம். அதைப் படிக்கிற போது ஏதோ ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற உணர்வு அவனை ஆட்கொள்ளுகிறது. ஒரு முறை, இரு முறை, மூன்று முறை அவன் அதை மறுபடியும் மறுபடியும் படிக்கிறான். தற்கொலைக்கு அவன் தேர்ந்தெடுத்து வைத்திருந்த வெள்ளிக்கிழமை கடந்து சென்று விடுகிறது. அவன் தனக்குத் தானே விதித்து வைத்திருந்த தூக்குத் தண்டனைக்குரிய நாள் அவனால் தள்ளிப் போடப்படுகிறது.
ஆனால் அந்த நாள் வருவதற்கு முன்னால் அவன் ஒரு முடிவுக்கு வருகிறான். அதாவது – “நான் தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை. வாழ்க்கையில் போராடி எப்படியாவது வெற்றி பெறுவேன்” என்பதே அந்த முடிவாயிற்று. அந்த முடிவின்படி, அவன் மறுபடியும் கவனத்துடன் உழைத்துப் படித்துப் பள்ளி இறுதித் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுக் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை வெற்றிகரமாய் முடித்து பீ.ஏ. பட்டமும் பெற்று விடுகிறான். பிறகு, சென்னையில், சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞராய்ப் பணி யாற்றுகிறான். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் உயர்வு பெறுகிறான்.
அவன்தான் இப்போது உங்கள் முன் நின்று கதை சொன்ன கற்பக விநாயகம். இப்போது நான் சொன்னது ஓர் உண்மையான சிறுகதை. ஒரு நல்ல நூல் ஒரு மனிதனை எப்படி மாற்றி விடுகிறது, பார்த்தீர்களா!
மகாத்மா காந்தியின் சத்திய சோதன தம் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த அவநம்பிக்கை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, உயிரை விட்டு விடவேண்டும் என்கிற சோர்வு ஆகியவற்றை யெல்லாம் அறவே போக்கியதோடு, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்கிற உந்துதலையும் அதற்கான மனத்தெம்பு, உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றையும் தம்மிடம் விளைவித்ததாய்க் கற்பகவிநாயகம் அவர்கள் சொல்லியுள்ள நிலையில், சில அறிவுஜீவிகள், ‘எழுத்தால் எதையும் சாதிக்க முடியாது. யார் என்ன உபதேசித்தாலும், அறிவுரை வழங்கினாலும் மனிதர்கள் மாறவே மாட்டார்கள். உலகம் அது பாட்டுக்குத் தன் போக்கில்தான் இயங்கிக்கொண்டிருக்கும்! அதைத் திருத்தவே முடியாது’ என்றெல்லாம் சொல்லுகிறார்களே!
கற்பகவிநாயகம் மேலும் சொன்னார்: ‘நான் என் இள வயதில் படித்த சில நல்ல நூல்கள என்னுள் நல்ல மாற்றங்களை விளைவித்துள்ளன என்றால் அது மிகையல்ல. ஆக, நல்ல நூல்கள் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. நாம் அனைவரும் படிக்கிறோம்தான். ஆனால் படிப்பவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். படிப்பால் பெற்ற அறிவை நாம் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்கிற கருத்தை நாம் ஏற்று அதன்படி நடப்பதில்லை. … நூல்களைப் படிப்பதன் நோக்கம் நம் எண்ணங்களைச் சுத்த்ப்படுத்திக்கொள்ளுவதுதான். நம் இதயத்தைத் தூயமையாக்கிக் கொள்ளுவதுதான்…..
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ – ஆன்மக் கனிவுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வாடிய பயிரைக் கண்டே வாடவேண்டும் என்றால், வாடிய உயிரைக்கண்டு நாம் எப்படி வாட வேண்டும்? அந்த உணர்வை இலக்கியம் நமக்குத் தருகிறது. ஆன்மிக உணர்வையும் இலக்கியம் உண்டாக்குகிறது. நல்ல இலக்கியங்கள் நம்மிடம் கடவுட்தன்மையை ஏற்படுத்துகின்றன.
”அரிச்சந்திரா” நாடகத்தைப் பார்த்த காந்தி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார். வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அந்நாடகம் “மகாத்மா” காந்தியாக்கியது! …’
பணப்பித்தும், பதவிப்பித்தும் பிடித்தவர்களைச் சாடிய பின்னர், தமது சொற்பொழிவின் முடிவில் கற்பக விநாயகம் அவர்கள் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கீழ்க்காணும் பொன்மொழிகளையும் கூறினார்.
“பணம் இருந்தால் –
கட்டிலை வாங்கலாம் – தூக்கத்தை வாங்க முடியாது;
நூல்களை வாங்கலாம் – அறிவை வாங்க முடியாது;
உணவை வாங்கலாம் – பசியை வாங்க முடியாது;
அழகான உடைகள் வாங்கலாம்- அழகை வாங்க முடியாது;
மருந்தை வாங்கலாம் – ஆரோக்கியத்தை வாங்க முடியாது;
ஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம்- மகிழ்ச்சியை வாங்க முடியாது.
கோவிலை வாங்கலாம் – ஆனால் கடவுளை வாங்க முடியாது!”
இறுதியாக, “நன்றாகப் பேசினார்” என்கிற பாராட்டோ கைதட்டல்களோ முக்கியமல்ல. மனம் எவ்வளவு தூய்மையாகிறது என்பதுதான் பேச்சு, இலக்கியம் ஆகியவற்றின் பயனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வெறும் கைதட்டல் என்னை ஏமாற்றுவதோடு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளுவதற்கான வெறும் பொழுதுபோக்கு!” என்றார்.
கற்பக விநாயகம் அவர்கள் தம் உள்ளத்திலிருந்து புறப்பட்ட சொற்களை ஆணித்தரமாக உதிர்த்தபோது அவரது பேச்சைப் பாராட்டாதவர்கள் இல்லை!
………
- மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ”ஆனைச்சாத்தன்”
- கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்
- நீங்காத நினைவுகள் – 31
- வளரும் அறிவியல் – மின் இதழ்
- ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4
- தினம் என் பயணங்கள் – 2
- திண்ணையின் இலக்கியத் தடம்- 19
- சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்
- ஸ்ரீதரன் கதைகள்
- தாயகம் கடந்த தமிழ்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 17