மைய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்த புதிது. அச்சம் என்றால் என்னவென்றே அறிந்திராத பருவம். அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாதென்னும் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு எங்கள் அப்பாவால் வளர்க்கப்பட்ட முறை. அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநரிடம் ஒரு நாள் வாய்மொழிக் கடிதம் வாங்கச் சென்ற போது ஏற்பட்ட அனுபவம். எனக்கு அவர் ஒரு கடிதத்தை வாய்மொழிந்துகொண்டிருந்த போது அவரது மேசை மீதிருந்த தொலைப்பேசி மணியடிக்க அவர் எடுத்துப் பேசினார்.
ஒலிவாங்கியைக் காதுக்கு மிக அருகே ஒட்டினாற்போல் அவர் வைத்துக்கொள்ளாததால் எதிர்முனையில் இருந்தவர் பேசியதெல்லாம் காதில் விழுந்தது.
‘குட் மார்னிங், சார்!’
‘குட் மார்னிங்.’
‘மதுரை டெலிக்ராஃப் ஆஃபீஸ்லேருந்து பேசறேன், சார். என் பேர்…….உங்க செக்ஷன் ஹெட் க்ளார்க்குக்குத்தான் முதல்ல ஃபோன் போட்டேன். யாரும் எடுக்க மாட்டேன்றாங்க. சாரி டு ட்ரபிள் யூ , சார்.”
’சரி என்ன விஷயம்? சொல்லுங்க.’
’ரெண்டு நாள் முன்னாடி என்னோட பாலிசி ப்ரொபோசல் அனுப்பி யிருக்கேன், சார். இன்னும் ரெண்டு நாள்லே எனக்கு பர்த்டே வருது. அதுக்குள்ள ப்ரொபோசலை அக்செப்ட் பண்ணினீங்கன்னா நான் கட்ட வேண்டிய ப்ரீமியம் தொகை குறையும். அதான் சார், ஃபோன் பண்றேன். செக்ஷன்ல டிலே பண்ணிடப் போறாங்க, சார். கொஞ்சம் தயவு பண்ணி ஹெல்ப் பண்ணுங்க, சார்! இந்த பர்த்டே தாண்டிடிச்சுன்னா, ப்ரீமியம் தொகை அதிகமாயிடும்னு உங்களுக்கே தெரியும், சார். அதான் ட்ரபிள் பண்றேன்.’
‘சரி, சரி. உங்க பேரைக் குறிச்சுண்டாச்சு. ஃபோனை வைங்க.’
‘தேங்க்யூ, சார்.’
அந்த அலுவலர் எரிச்சலுடன் ஒலிவாங்கியைக் கிடத்தினார். பக்கத்து மேசை அதே ஆயுள் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த மற்றோர் அலுவலருடையது. அவர் புறம் திரும்பி, ‘பாருங்க, மிஸ்டர் …! மதுரை டெலிக்ராஃப் ஆஃபீஸ்லேர்ந்து ஃபோன் பண்றான் ஒரு ஆளு. ஆஃபீஸ் டெலெஃபோனை மிஸ்யூஸ் பண்ணி என்னோட பேசறான். என்ன தைரியம் அவனுக்கு. டெலிக்ராஃப் மாஸ்டரைக் கூப்பிட்டு அவனைப் பத்திச் சொல்லி ஒரு மெமோ குடுக்கச் சொல்லப் போறேன் … என்ன சொல்றீங்க?” என்றார்
அவர் பதில் சொல்ல் வாயைத் திறப்பதற்கும் முன்னால் வழக்கம் போல் என் வாய் அதன் அதிகப்பிரசங்கித்தனத்துடன் திறந்தது: ‘எம்ஸ்க்யூஸ் மி, சர்! ஆஃபீசர்ஸ் மட்டும் ஆஃபீஸ் டெலெஃபோன்ஸை ப்ரைவேட் காரியங்களுக்கு மிஸ்யூஸ் பண்ணலாமா? எத்தனை ஆஃபீசர்ஸ், ‘நான் நாளைக்கு இன்ஸ்பெக்ஷனுக்காக சேலத்துக்குக் கிளம்பி வர்றேன். ரெண்டு டஜன் மாம்பழம் வாங்கி வைங்க’ ன்னும், ‘ நான் வர்ற வாரம் கும்பகோணம் வர்றேன் . ஒரு லிட்டர் பிடிக்கிற மாதிரி நல்ல ஈயச்சொம்பு ஒண்ணு வாங்கி வையுங்க’ ன்னும் போஸ்ட்மாஸ்டர்ஸுக்கு ஃபோன் பண்றாங்க! இன்னும் எத்தனையோ ஃப்ராடெல்லாம் ஆஃபீசர்ஸ் லெவெல்ல நடக்கிறது. ஒரு க்ளார்க் ஆஃபீஸ் ஃபோனை யூஸ் பண்றது பெரிய குத்தமா, சர்? ஆஃபீசர்ஸ் வீடுகளுக்கெல்லாம் கவர்ன்மெண்ட் ஃபோன் குடுத்திருக்காங்க. அவங்க வீட்டு ஃபேமிலி மெம்பர்ஸ் அதை யூஸ் பண்றதில்லியா!’ என்று மடை திறந்தாற்போல் கேட்டு முடிக்கவும், அதைச் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியில் அந்த அலுவலர்கள் இருவரும் வாயடைத்துப் போய் என்னைக் கண்டித்து எதுவுமே சொல்லாதிருந்து விட்டார்கள். ஒருவரை மற்றவர் ஜாடையாகப் பார்த்துக்கொண்டபின் கோப்புகளில் பார்வைகளைப் பதித்தார்கள்.
‘என்ன சொல்லிண்டிருந்தேன்?’ என்று இரண்டொரு நொடிகளுக்குப் பின் கேட்டுவிட்டு, விட்ட இடத்திலிருந்து தமது கடிதத்தை வாய்மொழியலானார் அந்த அலுவலர்.
அன்று மாலை வீடு திரும்பியதும், நான் சொன்னதுபற்றி அப்பாவிடம் கூறிய போது, அவர் முகத்தில் முதலில் ஒரு பாராட்டுப் புன்னகை தோன்றினாலும், ‘ நீ கேட்டதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால், இந்த அளவுக்கு அதிகப் பிரசங்கித்தனம் உதவாது. அது ஒரு நாள் உன்னை ஆபத்தில் கொண்டுபோய் விடும். கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்…’என்றார்!
சில நாள்கள் கழித்துப் பெரியவர்களுக்கான எழுத்தாளராக நான் அறிமுகம் ஆனதன் பின், எங்கள் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் செய்து வந்த ஊழல்களை மையமாய் வைத்து 1970 களின் ஓர் ஆண்டில் ஒரு சிறுகதையை எழுதினேன். ‘இளிக்கின்ற பித்தளைகள்’ எனும் அச் சிறுகதை தினமணி கதிர் வார இதழில் வெளிவந்தது. பெரிய பதவிகளில் இருந்துகொண்டு, ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கும் அலுவலர்கள் எப்படி யெல்லாம் ஊழல்கள் புரிந்து அலுவலகப் பணத்தை மறைமுகமாய்ச் சுரண்டுகிறார்கள் என்பதையும், ஆனால் தங்களின் கீழே பணி புரியும் மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்களை அவர்களின் சிறு குற்றங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் எப்படி யெல்லாம் தண்டிக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டிய கதை அது.
சென்னையின் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடக்க விருக்கிறது. டில்லியிலிருந்து தம் தனிப்பட்ட ஓர் அலுவலின் பொருட்டுச் சென்னைக்கு வர விரும்பும் ஓர் உயர் அதிகாரி அதற்காகவே சென்னையில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். டில்லியின் அதே தலைமை அலுவலகத்தை சேர்ந்த மற்றோர் அதிகாரி, அவருக்கு மும்பையில் ஒரு ஜோலி இருந்ததால், அங்கே ஓர் ஆய்வுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, மும்பை வழியாகச் சென்னைக்கு வரும்படியாகத் தமது பயணத்திட்டத்தை வகுக்கிறார். இவர்களை யெல்லாம் வரவேற்றுச் சென்னையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய உள்ளூர் அதிகாரி அலுவலகக் காரைத் தம் சொந்தவேலைக்குப் பயன்படுத்திவிட்டு அலுவலகத்துக்கு வருகிறார்.
கூட்டம் நடக்கவிருந்த பெரிய கூடத்தைப் பெருக்கித் துடைத்து மேசை நாற்காலிகளையும் துப்புரவு செய்யவிருக்கும் தொழிலாளிக்கு அதற்கு முதல் நாளிரவு செங்கல்பட்டில் இருந்த அவன் தாயாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் அவன் அண்ணனிடமிருந்து தந்தி வருகிறது. ஆனால் அவன் தன் பணியை முடிதத பிறகே போக வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிடுகிறார் அலுவலக மேலாளர் – அலுவலகத்திலிருந்து பல்வேறு பொருள்களைத் திருடி எடுத்துப் போகும் வழக்கமுள்ளவர்.
அந்த இளைஞன் தன் வேலையை முடித்துவிட்டு அந்தக் கூடத்தை ஒட்டி அமைந்துள்ள அலுவலரின் அறைக்குள் அதைப் பெருக்கித் துடைப்பதற்குப் போகிறான். அங்கே மேசையில் இருக்கும் தொலைபேசியைக் கண்டதும் தன் அம்மாவுக்கு உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை யறியும் அவா அவனுள் கிளர்கிறது. செங்கல்பட்டில் இருக்கும் ஒரு கடையின் இலக்கத்தை அதிலிருந்து சுழற்றுகிறான். ‘நான் மெட்ராசிலேர்ந்து முனிசாமி பேசறேங்க. எதிர் விட்டில இருக்கிற எங்கண்ணனைக் கொஞ்சம் கூப்பிடுவீங்களா?’ என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போது அவ்வறைக் கதவைத் திறந்து கொண்டு டில்லி அதிகாரிகளும் உள்ளூர் அதிகாரிகளும் அங்கு வந்து விடுகிறார்கள்.
‘என்ன தைரியம் இந்தப் பையனுக்கு! ஆஃபீசரோட ரூம்லேர்ந்து யாருக்க்கோ ஃபோன் பண்றானே! அவன் மேல ஆக்ஷன் எடுங்க!’ என்கிறார் ஒருவர்.
‘அதானே!’ என்கிறார் இன்னொருவர்.
‘சஸ்பெண்ட் ஹிம்,!’ என்கிறார் இன்னொருவர்.
’முனிசாமி மூர்ச்சையாகிறான்’ என்று கதையை முடித்த ஞாபகம்.
இந்தக் கதை வெளியான இரண்டு, மூன்று நாள்கள் கழித்துத் தபால்-தந்தி இலாகாவின் ஒரு பகுதியான தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி என் இருக்கைக்கு வந்து என்னைச் சந்தித்தார். தபால் துறையிலும் சரி, தொலைத் தொடர்புத் துறையிலும் சரி இது போன்ற ஊழல்களைப் புரிந்துகொண்டிருந்த அலுவலர்கள் இருந்தனர். இப்படிப்பட்ட ஊழலர்கள் மாநில, மைய அரசுகளின் எல்லாத் துறைகளிலும் இருக்கவே செய்தனர். எனினும் நான் பணி புரிந்து கொண்டிருந்தது தபால்-தந்தித் துறை என்பதால் அதைச் சேர்ந்த அலுவலர்களுக்கு என் மீது சினமும் மனத்தாங்கலும் விளைந்தன. என்னைச் சந்தித்த பெண் ஊழியர் அதைத்தான் எனக்குத் தெரிவித்தார். அது மட்டுமின்றி, அலுவலகத்தின் இரண்டு அலுவலர்கள் என் மீது நடவடிக்கை எடுப்பதாய் இருந்தார்கள் என்றும் அவர் எனக்குச் சொன்னார். ‘உங்களை முன் கூட்டி எச்சரிப்பதற்காகவே இந்தத் தகவலைச் சொல்லுகிறேன்… உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்றும் கேட்டார்.
எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. “என் மீது அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியட்டும் முதலில். அதன் பிறகு என்ன செய்வது என்று யோசிக்கலாம்!” என்றேன். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களைப் பற்றி மேலும் சில புகார்களை இவள் அடுக்கினால் என்ன செய்வது என்று அவர்கள்தான் பயந்து போயிருந்தார்களோ என்னவோ.
மிக அண்மையில் இந்தியாவின் மைய அமைச்சர் ஒருவர், ‘இந்தியா ஊழல்நாடு என்னும் எண்ணம் தவறானது’ என்று அறிவித்திருக்கிறார். அதைப் படித்ததும் கசப்பும் சிரிப்பும்தான் வந்தன. மேல் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை லஞ்ச்ம், ஊழல் என்று நாறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அமைச்சர் இவ்வாறு சொல்லுவது நகைப்புக்குத்தான் உரியது.
’வாராக்கடன்கள்‘ எனும் சொற்றொடரை எவன் கண்டுபிடித்தான்? அவனை முதலில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் பெரும் பண முதலைகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கொடுத்துள்ள கோடிக்கணக்கான கடனை வசூலிக்க இந்த வங்கிகளின் உச்ச மேலாளர்கள் அந்தக் கடனாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்கள். அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டியதுதானே! ஏன் செய்வதில்லை என்பதற்கான காரணம் கடனாளிகளிடம் கேட்டுப் பெறும் அல்ல்து கேட்காமலே பெறும் லஞ்சம் என்பது கண்கூடு. இப்படிப்பட்ட வங்கிகளின் மீது அரசின் அமைச்சர்களும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதன் அடிப்படை என்ன என்பதும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த உண்மை. இலட்சக் கணக்கான கோடிகள் இப்படிப் பணக்காரர்களிடம் முடங்கிக்கிடப்பது ஊழலினால் அல்லாது வேறு எதனால்? இந்தப் பெருந்தொகைகள் வசூலிக்கப் பட்டால் எத்தனை மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றலாம்!
குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்ட ஒரு மாஜி அமைச்சரை ஜாமீனின் வெளியே உலாவ விட்டிருக்கிறார்களே! இதுவும் ஊழல்தானே!
இந்தியாவில் நிலவும் ஊழல்களை அடுக்கத் தொடங்கினால் ஒரு புத்தகமே எழுதலாம். ஒரு சாதாரணக் குடிமகன் செலுத்தத் தவறிய பத்து ரூபாய்ப் பாக்கிக்காக வருமானவரி இலாகா நினைவூட்டுக்கடிதம் அனுப்பத் தவறுவதில்லை! ஆனால் கோடிக்கணக்கில் கோட்டை விடத் தயாராக இருக்கிறது அரசு
இந்த அழகில், ‘இந்தியா ஊழல் நாடு என்று சொல்லுவது’ தவறாமே! எங்கே போய் முட்டிக்கொள்ளுவது!
…….
- ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்
- புலம் பெயர் வாழ்க்கை
- நெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்
- தொடுவானம் 3. விலகி ஓடிய வசந்தம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தினம் என் பயணங்கள் – 5
- மயிரிழையில்…
- பேயுடன் பேச்சுவார்த்தை
- மருமகளின் மர்மம் – 16
- மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )
- சீதாயணம் நாடகப் படக்கதை – 20
- பெரிதே உலகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.
- நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!
- பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு
- கீழ்வானம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 46
- திண்ணையின் இலக்கியத் தடம்-22
- பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி
- இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு