(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
46. உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த ஏழை……….!
“பூஞ்சிட்டுக் கன்னங்கள்
பொன்மணிக் கிண்ணத்தில்
பால்பொங்கல் பொங்குது தண்ணீரிலே
காவிரி நீர் விட்டு கண்ணீர் உப்பிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி…
கலயங்கள் ஆடுது சோறின்றி….
கண்ணுறங்கு…கண்ணுறங்கு….”
அடடே வாங்க…வாங்க..என்னங்க ரொம்ப சோகமான பாட்டைப் பாடிக்கிட்டு வர்றீங்க…என்ன ஏதாவது பிரச்சனையா…? இல்ல யாராவது ஒங்களோட மனசு நோக நடந்துகிட்டாங்களா…? சொல்லுங்க….
என்னது வர்ற வழியில சாப்பாட்டுக்காக கையேந்திக்கிட்டு ஐயா பசிக்குது ஏதாவது இருந்தாக் கொடுங்கன்னு கெஞ்சுனாங்களா..நீங்க ஒதவி செஞ்சுட்டு..அவங்க நெலமையப் பாத்துட்டு மனசு கஷ்டப்படுறீங்களா… இங்க பாருங்க கவலப் படாதீங்க.. ஒலகம் முழுக்க இந்த வறுமைங்கறது இருக்குது.. நம்ம நாட்டுல மட்டுமில்லங்க எல்லா நாடுகள்ளயும் இருக்குது…
பலபேரு தங்களோட வறுமைய வெளியில காட்டிக்க மாட்டாங்க…தெரியுங்களா..? ஒங்களுக்கு ஒரு விஷயத்தச் சொல்றேன் கேளுங்க…ஒரு பிச்சக்காரன் பசியினால ரொம்பத் துடியாத் துடிச்சான்.. ஒவ்வொரு கடையாப் போயி கையேந்தினான்.. ஒருத்தரும் அவனுக்கு இரக்கம் காட்டல..மனசு நொந்து போன அவன்,
“கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா?இறைவன் கற்பித்தானா…?”
அப்படீன்னு இறைவன நொந்துகிட்டு பாடிக்கிட்டே போனான். அதைக் கேட்ட இன்னொரு பிச்சைக்காரன்,
“கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்திருந்தால் இறைவன்
கற்பித்திருந்தால் – அதையுந்தான்
கடையில்தான் வைத்துத்தான் விற்றிருப்பான்
மனிதன் விற்றிருப்பான்”
அப்படீன்னு பாடினான் அதைக் கேட்டதும் பாடுன பிச்சக்காரன் பாடுறத நிப்பாட்டிட்டான்…
மனிசங்க உணவை வீணடிப்பாங்களே தவிர அதை பசிக்கிற மக்களுக்குக் கொடுப்பமேன்னு கொடுக்கமாட்டாங்க… என்ன செய்யறதுங்க… மனிசனாப் பாத்துத் திருந்தணும்..இந்த வறுமை இருக்கே பலரோட திறமைகளை எல்லாம் வெட்டிப் பொதச்சுடுங்க.. அதுவும் இளமையில வறுமை வந்துட்டா அதவிடக் கொடுமை வேற இல்லீங்க.. அதனாலதான நம்ம முன்னோர்கள்,
“கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”
அப்படீன்னு சொல்லி வச்சிருக்காங்க…
அப்படியே வறுமை வந்தாலும் அதை எதிர்த்துப் போராடிப் பலபேரு வாழ்க்கையில முன்னேறி இருக்கறாங்க… அப்படிப்பட்டவருதான் நான் போன வாரம் சொன்னேன்ன அந்த அறிஞர்…என்ன அவரக் கண்டுபிடிச்சுட்டீங்களா….? என்னது தெரியலையா…? சரி…சரி… அவர நானே ஒங்களுக்குச் சொல்லிடறேன்.. ஒருத்தருக்கு இளமையில வறுமை வந்து பின்னர் அந்த வறுமை அவரோட முயற்சியால போயிடும்..சில சமயம் போகாது…அப்படிப் போகாம வாழ்நாள் முழுவதும் திறமை இருந்தும் வறுமையில வாடினாரு.. வறுமையே வாழ்க்கையா ஆகிப்போச்சு அவருக்கு.. அவருதாங்க உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவேல் ஜான்சன். என்ன ஆச்சரியமாப் பாக்குறீங்க.. அவரோட கதையக் கேட்டா கல்லுங் க ரையுங்க..ஆமாங்க…இராமாயணத்துல இராமனோட அம்பு வாலியோட மார்புல பட்டு ஊடுருவத் தொடங்கிடுச்சு.. அந்த அம்பு இதயத்துக்குள்ள போறத வாலி தன்னோட வாலாலயும், கையாலயும் புடுச்சு தடுக்க முயற்சி செஞ்சான்…இந்த இடத்த கம்பன் சொல்லணும்..இராம பாணம் எப்படி மார்புல போயி தச்சது அப்படீங்கறத,
“வண்டுபடு கதலியின் தைப்ப சென்றது நின்றது
என்செப்ப”
அப்படீன்னு சொல்லுவாரு.. வாழைப் பழத்துல ஊசி போனமாதிரி போச்சு நான் என்னத்தச் சொல்லறதுன்னு கம்பர் சொன்னதுதான் எனக்கு இப்ப நினைவுக்கு வருது..அவரோட வாழ்க்கையே வறுமைப் போராட்டத்தில தள்ளாடித் தள்ளாடி வந்துச்சுங்க.. அவரோட கடின உழைப்பில் உலகின் முதல் ஆங்கில அகராதி வெளிவந்தது. பல இழப்புகளத் தாங்கிக்கிட்டுத்தான் ஜான்சன் ஆங்கில அகராதியைத் தயாரித்தார்… அவர் தன்னோட கஷ்டத்தைப் போக்கப் பலரிடம் உதவிகள் கேட்டாரு…ஆனா அவங்கள்ளாம் உதவியே செய்யலை…… என்ன நான் சொல்றது ஒங்க மனசப்போட்டுப் பிசையுதா….? இதுமாதிரிதாங்க நம்மளால பல விசயங்களக் கேட்டுட்டு சகிச்சிக்கிட முடியாது.. சரி அவரப் பத்தி சொல்றேன் கேளுங்க…
இளமையில் வறுமை
சாமுவேல் ஜான்சன் 1709-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் நாள் மைக்கேல் ஜான்சன், சாரா ஃபோர்டு ஆகியோரின் மகனாக இங்கிலாந்தில் லிச்ஃபீல்டு(Lichfield) என்ற இடத்தில் பிறந்தார். சாமுவேல் ஜான்சனின் தந்தையார் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்தார். புத்தகங்களை விற்பனை செய்தும், புத்தகங்களைப் பைண்டிங் செய்து கிடைத்த சொற்ப வருவாயிலும் குடும்பத்தை நடத்தினார். அவரது குடும்பத்தில் ஏழ்மை தாண்டவமாடியது. இருப்பினும் தனது மகன் சாமுவேல் ஜான்சனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது பொருளாதார நிலை அதற்கு இடங்கொடுக்கவில்லை. சாமுவேல் ஜான்சனோ இளம் வயதிலேயே படிப்பதில் ஆர்வமுடையவராகவும் விருப்பமுடையவராகவும் விளங்கினார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப சாமுவேல் ஜான்சன் தாமே முயன்று புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தார்.
சிறுவயதில் குழந்தைகள் தங்களது தந்தையிடம் தின்பண்டங்கள் கேட்டு அடம்பிடிக்கும். ஆனால் சாமுவேல் ஜான்சனோ தனது தந்தையிடம் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கித் தருமாறு தனது சிறுவயதிலேயே கேட்டார்.. அனால் அவரது தந்தையால் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அவரிடம் ஜான்சனுக்குப் புத்தகங்கள் வாங்கித்தரப் பணமில்லை…அதனை நினைத்து நினைத்து ஜான்சனின் தந்தை வருந்தினார். அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. மகனின் அறிவுப் பசிக்கு வேண்டிய நூல்களை வாங்கித் தர இயலாத தன்னுடைய இழிநிலைக்காக ஜான்சனின் தந்தை பெரிதும் வருந்தினார்.
ஜான்சனின் தந்தை படிப்பதற்குப் புத்தகங்கள் கேட்ட மகனை அழைத்துத் தனது வேலையான பைண்டிங் வேலையைக் கொடுப்பார். அவ்வாறு தனது தந்தை கொடுக்கின்ற புத்தகங்களைப் பார்க்கும் ஜான்சனுக்கு அவற்றையெல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட அவை அனைத்தையும் விரும்பிப் படித்தார். அவ்வாறு படித்ததால் அவரது அறிவு விரிவடைந்தது. இளம் வயதில் பல நூல்களைக் கற்றதால் அறிவாளியாகத் திகழ்ந்தார். இத்தகைய படிப்பறிவுதான் பின்னாளில் ஜான்சன் அகராதியை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பார்த்தீங்களா…எல்லாத்துக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்….அதுதான் விதிங்கறது…விதியை நெனச்சு முடங்காம மனுசன் இருக்கணும்… அப்படி இருந்ததனாலதான் ஜான்சன் மிகப்பெரிய அறிஞராக உருவெடுத்தார். மிகச் சிறந்த கட்டுரையாளராகவும் கவிஞராகவும் இலக்கிய விமர்சகராகவும் வாழ்க்கை வரலாற்று ஆசிரியராகவும் என்று பன்முகத்தன்மை கொண்டவராகச் சாமுவேல் ஜான்சன் விளங்கினார்.
சூழலைக் கண்டு பயந்து விடாமல் அச்சூழக்கேற்ப தனது வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாரு ஜான்சன்… அதனாலதான் வறுமையால அவரது அறிவைத் தடைப்படுத்த முடியல…..அறிவில் மலையெனத் திகழ்ந்தாரு ஜான்சன்…..
திருமணமும் தொடர்ந்த வறுமையும்
சாமுவேல் ஜான்சன் தன்னை விட இருபது ஆண்டுகள் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் என்ற பெண்ணை எளிமையான முறையில் மணந்தார். எலிசபத் போர்ட்டர் பெரும் பணக்காரியாவாள். ஜான்சனின் அறிவுத்திறத்தினால் கவரப்பட்ட இவள் தன்னைவிட இளவயதுடையவராக ஜான்சன் இருந்தாலும் விரும்பியே மணந்தாள்.
மகிழ்வாகத் தொங்கிய இல்லறம் வறுமையில் தள்ளாடத் தொடங்கியது. ஜான்சனின் போதாத நேரத்தின் காரணமாக பெரும் பணக்காரியான அப்பெண் அனைத்தையும் இழக்க நேரிட்டது. எலிசபெத் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமையை மட்டுமே. கொடிய வறுமையில் இருந்த ஜான்சன் எவ்வாறேனும் அதிலிருந்து மீள வழி தேடினார். இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல, கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று சில வியாபாரிகள் இவரிடம் வந்தார்கள்.
உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியைப் பரப்பினார்கள். ஆனால், அம்மொழியானது ஒரு காலத்தில் அவர்களின் நாட்டிலேயே பயன்பாட்டில் அருகி இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன இதை நம்ப முடியலையா..? சில விஷயங்களை நம்ப முடியாவிட்டாலும் அவற்றை நம்பித்தான் ஆகணும்…ஆங்கில மொழியின் இடத்தைப் பிரெஞ்சும், லத்தீனும் பிடித்துக் கொண்டன. இருப்பினும் அந்நிலையிலிருந்து மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்றும் ஆங்கிலத்தில் அதுவரை வெளிவரவில்லை என்கிற குறையானது ஆங்கிலேயரிடையே இருந்து வந்தது. அந்தக் குறையை நீக்குவதற்காகவே ஆங்கிலேய வியாபரிகள் சாமுவேல் ஜான்சனை அணுகினர்.
ஜான்சனிடம் வந்த வியாபாரிகள் அகராதியை விரைந்து முடித்துத் தர வேண்டும் என்றனர். அவர்கள் கேட்கும்போது சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். அகராதி எழுதுவதென்பது சாதாரண வேலையன்று. மிகமிகக் கடுமையான வேலை. நாள்கள் அதிகமாகும். ஓராண்டுக்குள்ளோ இரண்டாண்டுக்குள்ளோ அவ்வேலையை முடிக்க இயலாது. ஆண்டுகள் பல ஆகும். இது ஜான்சனுக்குத் தெரிந்திருந்தும் வறுமையை விரட்டியடிப்பதற்காக நம்பிக்கையோடு ‘அகராதியை மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்’ என்று அந்த வியாபாரிகளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி அவரை ஏகத்துக்கும் வேலை வாங்கியது… அதனை மூன்று ஆண்டுகளுக்குள் முடிப்பது என்பது ஜான்சனுக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது.
அந்த நிலையில் ஜான்சனுக்குப் பொருளுதவி தேவைப்பட்டது. வறுமை ஜான்சனை வாட்டி வதைத்தது. வறுமையை விரட்டுவதற்காக ஜான்சன் செஸ்டர்பீல்ட் என பெரும் பணக்காரரிடம் பொருளுதவி கேட்டார். ஆனால் அக்கனவானோ தம்மால் உதவி செய்ய முடியாதென்று முகத்தை திருப்பிக் கொண்டார். ஜான்சனுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது. சொல்லொணாத் துயரத்துடன் தனது பணியை ஜான்சன் மேற்கொண்டார். அன்றிலிருந்து யாரிடமும் பொருளுதவி கேட்பதில்லை என்று ஜான்சன் உறுதிபூண்டார்.
வறுமை தந்த பரிசுகள்
இந்த நிலையில் ஜான்சனுக்கு காசநோய், விரை புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் உடலில் ஏற்பட்டது. உடல் உள நோய்களால் ஜான்சன் மிகுந்த வேதனைக்குள்ளானார். வறுமை அவருக்குப் பல நோய்களைத் தந்தது. இருப்பினும் கலங்காது அகராதி தயாரிக்கும் பணியில் ஜான்சன் ஈடுபட்டார். அப்பணியை ஒரு தவம்போன்று செய்தார். இந்தச் சூழலில் அவரது தாயார் காலமானார். அவரது அம்மாவை அடக்கம் செய்வதற்குக் கூட ஜான்சனிடம் பணமில்லை. தனது நண்பர்களது உதவியுடன் தனது தாய்க்குச் செய்யவேண்டிய காரியங்களை ஜான்சன் செய்தார்.
ஒரு முறை சாமுவேல் ஜான்சன் ஒருவரிடம் ஐந்து பவுண்ட் பணம் கடனாகப் பெற்றார். கடன் கொடுத்தவர் குறிப்பிட்ட நாளுக்குள் கடனைத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் கொடுத்தாரல். ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஜான்சனால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவரோ நீதிமன்றத்தை அணுக முடிவில் ஜான்சனுக்கு சிறைதண்டனை கிடைத்தது. ஜான்சன் தனது விதியை நொந்து கொண்டு சிறைக்குச் சென்று பின் மீண்டார்.
இந்தச் சோகமயமான வாழ்க்கைச் சூழலில் ஜான்சனின் அன்பு மனைவி இறந்து போய்விட்டார். ஆற்றொணாத் துயரத்திற்கு ஜான்சன் ஆளானார். பெரியவங்க வழக்கத்துல,
“தந்தையோட கல்வி போம்,
தாயோட அறுசுவை போம்,
மனைவியோட எல்லாம் போம்”
அப்படீன்னு சொல்லுவாங்க… தனக்கு எல்லாவற்றிலும் உயிருக்குயிராக இருந்து ஆறுதல் அளித்து அனைத்துக்கும் உறுதுணையாக இருந்த ஜான்சனுக்கு பெரிய நிலைகுலைவு ஏற்பட்டது.. வறுமை ஜான்சனுக்கு எப்படிப்பட்ட தாங்க முடியாத பரிசெல்லாம் கொடுத்துருக்குது பாருங்க… இருந்தாலும் ஜான்சன் அதைப் பொருட்படுத்தாம மனசத் தளரவிடாம தம் கருமமே கண்ணாகக் கொண்டு அகராதி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஜான்சனின் கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும் ஒன்பது ஆண்டுகளில் ஆங்கில அகராதி வெளிவந்தது. யாரோட துணையுமில்லாம தனியாளா இருந்து சாமுவேல் ஜான்சன் இந்த அகராதியை உருவாக்குனாரு. அந்த அகராதியில 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். என்ன தலை சுத்துதா…? அப்ப அவரோட உழைப்பு எப்படிப்பட்டதுன்னு பாத்துக்கோங்க…. இவரது அகராதி 1755 – ஆம் ஆண்டில் வெளியானது.
உலகம் முழுக்க சாமுவேல் ஜான்சனின் புகழ் பரவியது. ஜான்சன் துன்புற்ற காலத்தில் பொருளுதவி செய்யாத செஸ்டர்பீல்ட் என்ற பணக்காரர் தான் பொருளுதவி செய்ததால்தான் ஜான்சனால் இத்தகைய புகழ்பெற்ற அகராதியைத் தயாரிக்க முடிந்தது இல்லையென்றால் அகராதியைத் தயாரித்திருக்க முடியாது என்பதைப் போன்று கடிதங்கள் எழுதி பத்திரிக்கைகளில் அதனை வெளியிட்டார். ஜான்சன் மனம் நொந்து போனார். இதனைக் கண்டு கலங்காத ஜான்சன் “செஸ்டர்பீல்ட் கனவான் அவர்களே…ஏழாண்டு காலம் தங்கள் வீட்டின் முன் பொருளுதவிக்காக நான் காத்திருந்தும் சிறிதும் மனம் இரங்காதவர் அல்லவா நீங்கள் ? அவ்வாறிருக்கத் தாங்கள் உதவி செய்துதான் நான் அகராதியை முடித்ததாக கடிதம் எழுதியுள்ளீர்களே…? இது விநோதமாக அல்லவா இருக்கிறது…” என்று நகைச்சுவை இழையோட மனங்குமுறி மறுப்புக் கடிதம் எழுதி வெளியிட்டார்.
ஜான்சனின் அகராதி தொடர்ந்து ஐந்து பதிப்புகள் வெளிவந்தது. 50 ஆண்டுகள் ஆங்கிலத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக இவ்வகராதி திகழ்ந்தது.. இவரது அரிய பணியைப் பாராட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஜான்சனுக்கு மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் என்ற பட்டததை வழங்கியது. மேலும் 1765-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவரருக்கு டப்பனில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சாமுவேல் ஜான்சன் சிறந்த விமர்சகராகவும் விளங்கினார். அலங்கார வார்த்தைகளைக் கொண்டிருந்த ஆங்கில கவிதைப் போக்கை விமர்சனம் செய்து எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுத வலியுறுத்தினார். “வாழ்க்கை வரலாறுகள் புகழ்பாடும் நூல்களாக இருக்க வேண்டியதில்லை” என உரக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரையும் விமர்சித்து எழுதினார்.
ஒருமுறை சாமுவேல் ஜான்சன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். நடுவில் நாற்காலியில் இருந்து எழுந்து வெளியே சென்று சிறிது நேரம் உலாவி விட்டு மீண்டும் தமது இடத்துக்கு வந்தார். அப்போது தன்னுடைய நாற்காலியில் வேறு ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டவர், தமது இடத்தை விடுமாறு அந்த நபரிடம் பணிவாகக் கேட்டார். ஆனால் அவர் எழுந்திருக்க மறுக்கவே, நாற்காலியுடன் அவரை ஜான்சன் அலட்சியமாக தூக்கி அருகில் உள்ள பள்ளத்தில் போட்டுவிட்டார். அந்த அளவிற்கு ஜான்சன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிறரை நாடி ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்பியதில்லை. இவருடைய ஏழ்மை நிலை கண்டு யாராவது உதவி செய்ய முன்வந்தாலும் அதனையும் ஏற்றுக்கொள்ளச் சம்மதித்ததில்லை. ஜான்சன் பத்திரிக்கையாளராகவும், கட்டுரையாசிரியராகவும் சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மேலும் ரஸ்ஸல்ஸ் (Rasselas) ,அபிசீனிய (Abissinia) இளவரசர் வரலாறு ஆகிய இரு குறுநாவல்களையும் ஜான்சன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேதையின் மறைவு
இவ்வாறு புகழ் பெற்று விளங்கிய ஜான்சன் 1784-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். சாமுவேல் ஜான்சன் இறக்கின்ற வரை அவரை வறுமை தான் துரத்தியது. வறுமை துரத்தினாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இன்றையக் காலக்கட்டத்தில் எண்ணற்ற அகராதிகள் பல வந்துவிட்டாலும் அவை எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாகச் சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன ஜான்சனின் வாழ்க்கை மறக்க முடியாத வரலாறாகும். “மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான், பிறரைக் குறைகூறிக் கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்று ஜான்சன் கூறிய பொன்மொழி ஜான்சனின் வாழ்வுக்கே மிகப் பொருந்தமாக அமைந்து விட்டது. 1784-ஆம் ஆண்டு டிசம்பர மாதம் 13-ஆம் நாள் மாலையில் இறந்தார், அவரை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்தனர்.
“மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்” என்பன போன்ற டாக்டர் ஜான்சனின் பொன்மொழிகள் என்றென்றும் அனைவரையும் உயிர்ப்புள்ளவர்களாக முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும்…
அறிஞர்கள் இறப்பதில்லை…அவர்கள் அறிவுலக மேதைகளின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது அறிவுலகச் செல்வங்கள் உள்ளவரையில் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இருப்பர். அவர்களின் புகழ் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்….
என்னங்க ஜான்சனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஓர் உந்துதலைத் தருதுல்ல.. துன்பம் வந்துருச்சேன்னு வருத்தப் படாதீங்க… அவை நம்மைப் பக்குவப் படுத்தும் ஆசான்கள் அப்படீன்னு நெனச்சுக்குங்க…அப்பறம் பாருங்க ஒங்களுக்கே ஒரு துணிச்சல் வந்துரும்… அப்பறம் எதைக் கண்டும் நீங்க அச்சப்படமாட்டீங்க… அப்பறம் என்ன…?அடுத்தது ஒங்களுக்குத்தான் வெற்றி..அப்பறம் என்ன வெற்றியை நோக்கி நடைபோடுங்க…
இந்தியாவுல ஏழைக் குடும்பத்துல பிறந்தாரு ஒருத்தரு…அவருக்கு இன்றைக்கு ஒலகமே வியக்கின்ற அளவுக்கு அவர் பேருல பல ஆன்மீக நிறுவனங்கள் இருக்கு…கடவுள் உண்டா இல்லையா…? அப்படீன்னு ஒரு இளைஞர் கேட்டபோது அவரிடம் கடவுள் இருக்கான்னு சொல்லி அவருக்கு இறையுணர்வு ஏற்படுமாறு செய்தாரு…அந்த இளைஞர் உலகம் புகழ்கின்ற அளவிற்குத் தன்னோட குருவின் பெயரில் மடங்களை நிறுவினார்..கடவுளைக் கண்ட அந்த ஏழை..யாரு தெரியுமா…? என்னங்க அப்படிப் பாக்குறீங்க.. கடவுளையே நான் பாக்கல..அப்பறம் எப்படி கடவுளைப் பாத்தவங்களப் பத்தி தெரியும்னு கேக்குறீங்களா…என்னங்க என்னையச் சொல்லச் சொல்றீங்க…அப்ப பொறுமையா அடுத்தவாரம் வரைக்கும் காத்திருங்க…அடுத்தவாரம் பார்ப்போம்……………….(தொடரும்……47..)
- ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்
- புலம் பெயர் வாழ்க்கை
- நெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்
- தொடுவானம் 3. விலகி ஓடிய வசந்தம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தினம் என் பயணங்கள் – 5
- மயிரிழையில்…
- பேயுடன் பேச்சுவார்த்தை
- மருமகளின் மர்மம் – 16
- மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )
- சீதாயணம் நாடகப் படக்கதை – 20
- பெரிதே உலகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.
- நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!
- பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு
- கீழ்வானம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 46
- திண்ணையின் இலக்கியத் தடம்-22
- பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி
- இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு