புலம் பெயர் வாழ்க்கை

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

 

 

ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த  அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள.  அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.

ஒரு தலைமுறைக்காலம் சிலருக்கு பிறந்த மண்ணுடன் உறவுகளை அவ்வப் போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ளது. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை ஈழ மண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது அந்த வரலாறு. ஈழத் தமிழரை உலகெங்கும் வீசியெறிந்துள்ளது இரண்டு தலைமுறை வரலாறு

துன்பத்தினிடையே தான் புதிய, நினைத்துப் பார்க்காத மலர்ச்சிகளையும் மனிதரின் வாழவேண்டும் என்ற துடிப்பும். பச்சையே பார்க்கமுடியாத அடிவானம் வரை நீளும் பாலையில் கூட அபூர்வ மிக அழகான வித விதமான கத்தாழைகள் பூக்கும் மலர்கள் பார்க்க வினோதமானவை. உயிர்ப்பு இத்தகைய ஆச்சரியங்களைக் கொண்டது. எங்கு எது மலரும், எது எத்தகைய பயனுமற்ற விளைச்சல்களைப் பரப்பும் என்று யார் சொல்ல முடியும்? அமைதியான காலங்களில் வெற்றுப் பிரசாரங்களையும் கோஷங்களையும் தந்த ஒரு இனம், அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ உயிர்த்தரிப்புக்கு வீசப்படும்போது அதன் ஜீவத்துடிப்பின் அடியோட்ட உணர்வுகளை மீட்டெடுக்கிறது. எதிர் நிற்கும் வாழ்வை அதன் குணத்தில் எதிர் கொள்கிறது. அதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அரசியல், சித்தாந்த, ஜாதீய கோஷங்களை ஒதுக்கி.

அதன் வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தங்களையும் மீட்டெடுக்கிறது.

இதையெல்லாம் வெற்று அரசியல் வாய்ப்பாடுகளில் அடைத்துவிட முடியாது. மனித ஜீவனின் அர்த்தங்கள் இப்படியெல்லாம் சுலபத்தில் சுலப, தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் சித்தாந்த வாய்ப்பாடுகளில் சிக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆளுமையையும் பொருத்தது இது. எந்த ஆளுமை எப்படி எதிர்வினையாக்கும் என்பதும் எந்த  அரசியல் சமூகவியல் வாய்ப்பாடுகளிலும் அடங்கிவிடுவதில்லை. ஒரு வாய்ப்பாடு உருவாக்கப்பட்டதுமே, அதை மீறும் ஒரு ஜீவன் உடன் தோன்றிவிடுகிறது.

எங்கெங்கோ அலையாடப்பட்ட வாழ்க்கையில் உயிர்தரிப்பதே முழுமையும் முக்கியமானதுமாகிப் போய்விடும் நிர்ப்பந்தங்களில், அன்னிய மண்ணில் இரவு பூராவும் யந்திரங்களோடு யந்திரமாக இயங்கிவிட்டு, காலையில் தினசரி செய்தித்தாட்களை வீடு வீடாக வினியோகித்துவிட்டு வீடு திரும்பினால் பசிக்கு உண்டு படுக்கையில் விழச் சொல்லுமா, இல்லை கவிதை எழுதச் சொல்லுமா? இந்நிலைகளில், கவிதை எழுதும் ஜீவனை எப்படிப் புரிந்து கொள்வது? அல்லல் பட்ட ஜீவன் வாழும் இந்த மனிதக் கூட்டம் தான் தன் மொழியைப் பற்றிக் கவலைப் படுகிறது. உலகப் பரப்பு முழுதும் வீசி எறியப்பட்ட தமிழரோடு தமிழில் உறவு கொள்ள விழைகிறது. அதற்கு ஏற்ப புதிதாகத் தோன்றிய இணையத்தை தன் வசப் படுத்துகிறது. ஆச்சரியம் தான். இதில் முதல் காலடி வைப்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். தமிழுக்கு அதை வளைத்துக் கொண்டு வந்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்கு அந்தத் தேவை இருந்தது, செய்தார்கள் என்பது வேறு விஷயம்.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் என்று ஒருவர் சொன்னதாகப் படித்தேன். இதைவிட சின்னத் தனம் வேறு இருக்க முடியாது. சின்னத் தனமோ அல்லது தமிழருக்கே பழக்கமாகிப் போன வார்த்தை அலங்கார மோகமோ, எது காரணம் என்பது தேடுவது இது கொண்டுள்ள சின்னத்தனத்தை மறைப்பது தான்.

உலகப் பரப்பு முழுதையும் தமிழ் இலக்கியத்தின் கதைக் களமாக்கியது புலம் பெயர்ந்தோரின் காரியம் தான். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ப. சிங்காரம், ஜெயந்தி சங்கர், என, இப்படி ஒரு நீண்ட அணிவகுப்பே முன் நிற்கிறது. இன்றைய  தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் இவர்கள். பல வண்ணங்களும் வளமும் பரப்பும் சேர்த்தவர்கள் இவர்கள்.

சமீபத்தில் வல்லமை என்னும் ஒரு இணைய இதழ் ஒரு வருட காலத்திற்கு சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் எனக்குத் தெரிய வந்த சிறப்பான சிருஷ்டித் திறன்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களது தான்.  அமெரிக்காவிலிருந்து, மிச்சிகனா? பழமை பேசி, பெல்ஜியத்தில் வாழும் மாதவன் இளங்கோ, ஆஸ்திரேலியாவில் வாழும் சுதாகர்,, இவர்களில் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் தந்தவர்கள் பழமை பேசி, மாதவன் இளங்கோ பின் இப்போது நாம் அதிகம் பேசப் போகும் சுதாகர். இவர்கள் அனைவரும்  தாம் வாழும் வாழ்க்கையை எழுதுபவர்கள். தாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றி எழுதுகிறார்கள். எல்லோரும் எனக்குத் தெரிந்த வரையில் இணைய இதழ்களிலிருந்தே, எழுத வந்தவரகள். புதிய திறன்கள். புதிய உலகங்களை, புதிய மனிதர்களை, புதிய உறவுகளை, புதிய வாழ்க்கைச் சிக்கல்களை, புதிய தார்மீக இடற்பாடுகளைப் பற்றி எழுதுபவர்கள். பிறந்த மண்ணின், விட்டு விட்டு வந்த மண்ணின் நினைவுகளும் மனிதர்களும் இன்னம் மறக்கவில்லை தான். எதையும் முழுதாக அழித்துத் துடைத்துவிட முடியுமா என்ன?

சுதாகர் ஈழமண்ணிலிருந்து 1995-ல் வெளியேறியவர். இப்போது வாழ்வது ஆஸ்திரேலியாவில். தான் எழுதியவற்றிலிருந்து பன்னிரெண்டு கதைகளை ஒரு தொகுப்பிற்காக முன் வைத்துள்ளார்.

விளக்கின் இருள் என்று ஒரு கதை: மெல்போர்னில் வாசம் கோடை வெப்பம் தமிழ் நாட்டை ஒத்தது. வாழ்வது எங்கும் போல ரசாயன கழிவுகளும் மின்னணுக் கழிவுகளும் இட்டு நிரப்பிய மண்ணின் மேல். மெதேன் வாயு நிலத்தடியிலிருந்து மேலெழுகிறது. சிலர் பயந்து வீடுகளைக் காலி செய்து வேறிடம் போகிறார்கள். ரியல் எஸ்டேட் காரர்கள் இது தான் நல்ல வாய்ப்பு என எண்ணி வீடுகளை மலிவு விலையில் வாங்கத் தொடங்குகிறார்கள். பிலிப்பைன்ஸ் ப்ரொபஸர் லோரென்ஸோ ஆஸ்வாஸப் படுத்துகிறார். இன்னும் கொஞ்ச நாளில் இது சரியாகிவிடும் என்கிறார்.  சிலர் தைரிய சாலிகள். பாராளுமன்றத்தில் சர்ச்சை கிளம்புகிறது. எதற்கும் ப்ரொபஸர் லோரென்ஸோவைக் கேட்கலாம் என்று போனால், இதுகாறும் தைரியம் சொன்னவரே காலி செய்துவிட்டுப் போய்விட்டது தெரிகிறது.

இன்னொரு கதையில் இலங்கையிலிருந்து ஒரு சிறு பெண் ரசிகை பள்ளி மாணவி அவள் அவளிடமிருந்து கடிதங்கள் வருகின்றன மனைவியின் கிண்டலுக்கோ எரிச்சலுக்கும் ஆளானவர் விடுமுறையில் இலங்கைக்குப் போக, அந்தப் பெண்  சாதனாவைப் பார்க்கப் போக, சிங்களவர்களும் ஆர்மிக்காரர்களும் நிறைந்த அந்த பழம் கிராமம் சென்று சாதனா வீட்டைத் தட்ட அடுத்த வீட்டுக் காரர் நடந்த கதையைச் சொல்கிறார்: வெளியே பள்ளிக்குப் போகும் போதும் வரும்போதும் இடையில் ஆர்மிக்காரர்களின் ஹிம்ஸை (மார்பைத் தடவி இதென்ன குண்டை ஒளிச்சு வச்சிருக்கியா?…) பொறுக்கமுடியாது நிஜமாகவே குண்டை மார்புக்குள் ஒளித்து ஆர்மி காம்புக்குள் போய் வெடித்துச் செத்துவிட்டாள் என்று  அந்தப்பெண் இறந்த செய்தியைச் சொல்கிறார் அவர்.

சொந்த மண்ணிலிருந்து உயிருக்கு பயந்து ஆஸ்திரேலியா போயாச்சு. ஆனால் அங்கு ஏதாவது வேலை செய்தால் தானே பிழைக்கலாம். வேலை அனுபவஸ்தர்களுக்குத் தான் கிடைக்கும். ஆர்க்கிடெக்டாக  உயர் கல்வியும் பயிற்சியும் இருந்தாலும், ஆஸ்திரேலியா அனுபவம் வேண்டுமே? அங்கு வேலை செய்தால் தானே கிடைக்கும் எந்த வேலையாயினும் சரி, செய்தால் தானே அனுபவம் வரும்? வேலை தேடினால், அனுபவம் என்ன என்று கேள்வி வரும். இரக்கம் கொண்டவர் சிபாரிசில் வேலைக்குச் சென்றால் அது கணக்குப் பிரிவில் ஏதோ வேலை. இடையில் ஆசனவாயில் நோய். ஏதேதோ மருந்து தேடி, கடைசியில் அது மிக மோசமான நிலைக்குப் போகிறது. மருத்துவ செலவு இலவசம் தான் ஆஸ்திரேலியாவில். இரண்டு மூன்று தடவை ஆபரேஷன் செய்தும் சரியாகவில்லை. யார் யாரோ தன் உடலை வைத்து அனுபவம் தேடிச் சேர்ப்பதாகத் தெரிகிறது. இந்த தடவை சீனியர் டாக்டர் ஃபரகரிடம் தான் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்து ஃபரகருக்காகக் காத்திருந்து அவரைக் கேட்டால் அவர் என்ன சொல்கிறார்? . ”இது வரை ஆபரேஷன் செய்த சாகிடி என் உதவியாளர். அவரும் ஆபரேஷன் செய்தால் தானே அனுபவம் பெற்று எனக்குப் பின் என் இடத்தைப் பெறுவார்? என் வயது 65. நான் இல்லையென்றால் அவர் தானே செய்யவேண்டும்?” இடையில் வேலைக்கு மனுச் செய்த இடத்திலிருந்து பதில் வருகிறது. ”உங்களை விட அதிக வருஷங்கள் அனுபவம் பெற்றவர்கள் இருப்பதால் உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்?”

வவுனியாவில் இருந்த காலம். கொழும்புவில் தெமட்ட கொட அங்கிள், சரியான முசுடு. அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் எப்படி இப்படி ஒரு முசுடாக இருக்கமுடியும்? ஒரு முறை பாலாவுக்கு அம்மை வந்தது என்று அவனிருந்த இடத்தை டெட்டால் போடு கழுவி, அவன் உபயோகப்படுத்திய பொருட்களைக் கூட வீட்டில் வைக்கப் பிடிக்கவில்லை மாமாவுக்கு. அவர் மனைவி அவருடன் வாழப் பிடிக்காது வெளியேறி, அவ்வப்போது தன் மகளை மாத்திரம் பார்த்துப் போகிறாள். இப்பொது அந்த அங்கிள் கனடாவில். சாகக் கிடக்கிறார் முதியோர் இல்லத்தில். பாலாவும் கலைச் செல்வியும் கனடா போனபோது பழசை எல்லாம் மறந்துவிட்டு சாகக் கிடக்கும் மனிதனைப் பார்க்கவேண்டும் என்று செல்வி, தன் கணவன் பாலாவை வற்புறுத்துகிறாள். பார்க்க வந்திருக்கும் பாலாவை யாரென்று தெரியாது என்று அலட்சியம் செய்கிறார் சாகக் கிடக்கும் தெமட்டகொட அங்கிள். அங்கிள் இறந்துவிடுகிறார். உறவினர் யாருக்கும் பாலா, தான் அங்கிளைப் பார்த்து வெறுத்துவிட்ட செய்தியைச் சொல்லவில்லை. யாராயிருந்தாலும் மன்னிக்கத் தெரியாத மனுஷன் என்றே அவனைப் பற்றிய நினைப்பு அவர்களுக்கு. பார்த்துவிட்டு வந்ததைச் சொல்வதற்கென்ன என்று கலைச்செல்வி கேட்கிறாள். யார் அவரைப் பார்க்கப் போனார்கள்? என்று தன் வெறுப்பை உமிழ்கிறான் பாலா.

இப்போது இருப்பது நியூசிலெண்ட் ஆக்லண்டு நகரில். மனைவி சாந்தினி கர்ப்பமாக இருக்கிறாள். மருத்துவ மனையில் பிறக்கப் போவது என்ன குழந்தை என்று சொல்லமுடியவில்லை என்கிறார்கள். உசிலம்பட்டி என்ன, ஆசிய நாடுகளிலிலேயே எங்கும் பெண்குழந்தைக்கு நேரும் கதியை உலகம்  அறிந்த எச்சரிக்கை உணர்வு. தன் வீடு செல்லும் பாதையில் எதிரில் இருக்கும் எண்பது வயது கிழவி கிறேஸ். போலந்து நாட்டவள். சாந்தினிக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறாள். தனிக்கட்டை. புருஷன் இறந்து 30- வருடங்கள் ஆகிவிட்டன. நான்கு பிள்ளைகளும் தனித்தனியே. அவ்வப்போது வந்து போவார்கள். நியூஸிலெண்டில் 18 வயதானால் பிள்ளைகளைப் பெற்றோருடன் இருக்க விடுவதில்லை. அரசு உதவி செய்கிறது. தானே கார் ஓட்டிக்கொண்டு எல்லோருக்கும் உதவியாக, தன் காரியத்தை தானே பார்த்துக்கொள்வாள் கிறேஸ். நியூஸிலெண்டின் ஆதி குடிகளான மௌரிகளுக்கு தன் நாட்டில் வந்து நிறைந்துள்ள வெள்ளையரைக் கண்டால் பிடிப்பதில்லை. ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்று சொல்கிறான் ஒரு மௌரி. குழந்தை சாக்லெட் சாப்பிட்டு மேல் உறையைத் தூக்கி எறிந்தால், அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட கட்டளை வெளியிலிருப்பவரிடமிருந்து வரும். சாந்தினிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. கிறேஸ் வரவில்லையே ஏன் என்று கேள்வி எழ அவள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால், மனித நடமாட்டம் ஏதும் அங்கு இல்லை. ஜன்னல் வழியாகப் பார்த்து அவள் சலனமற்றுக்கிடப்பது கண்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்து உள்ளே போனால் அவள் காலடியில் ஒரு குளிர் உடுப்பு. அதனுடன் ஒரு சீட்டு. “for the new born baby” என்று எழுதியிருந்தது அதில்.

ஒரு புறம் அன்னியரோடு ஒட்டுறவு. இன்னொரு புறம் அன்னியரைக் கண்டால் வெறுப்பு.

இரண்டு குழந்தைகளும் மனைவியுமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேவன் மாரடைப்பில் இறந்து போகிறார். யாருக்கும் செய்தி சொல்ல முடியாது. ஆர்மியின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இடம். வெளியில் ஒரு வெள்ளைத் துணியை ஆகாயத்தில் வீசிக்கொண்டு போய் செய்தி சொல்லிவரவா என்ற பக்கத்து வீட்டு கிழவர் மார்க்கண்டின் கேள்விக்கு, ”ஏன் சுடப்பட்டு சாகிறதுக்கா?” என்று இறந்தவரின் மனைவி வாசுகியிடமிருந்து பதில் வருகிறது .யாழ்ப்பாணத்திலேயே இன்னொரு இடத்தில் இருக்கும் தங்கை வீட்டில் செத்தவீடு சடங்குகள் நடக்கின்றன. ஒப்பாரி நன்றாக வைக்கத் தெரிந்த பாக்கியம் வந்து சேர்கிறாள். இன்னொரு தங்கை கனடாவில். யாழ்ப்பாணத்தில் வாசுகி வீட்டில் செத்தவீட்டு சடங்குகள் விடி காலையில் தான் நடக்கின்றன. ஒரு தங்கையின் கணவர் இறந்த செய்தியை அதே நகரத்தில் இருக்கும் இன்னொரு தங்கைக்கு உடன் செய்தி சொல்லமுடியாது ஆர்மியின் பிடிப்பில் அடங்கி வாழும் தமிழ் இனத்தின் அவலத்தை குரல் எழுப்பாமல், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாது சொல்லிவிடுகிறது கதை.

இந்த கதை மட்டுமல்ல. சுதாகரின் எழுத்தே எந்த அவலத்தையும், வாழ்க்கையின் எந்த ஏற்ற இறக்கத்தையும், ஆரவாரமோ, இரைச்சலோ இல்லாது, கிட்ட இருந்தும் எட்டப் பார்வையுடன், சொல்ல முடிந்து விடுகிறது. ஒரு பத்திரிகையாளரைப் போல, ஆனால் தானும் ஒரு மனிதனாக, அவலத்தையும் சந்தோஷங்களையும் புரிந்து கொள்ளும் மனிதனாக. கண்ணுக்குத் தெரியும் ஒரு பக்கம் மாத்திரமல்ல, இன்னொரு பக்கமும் இதற்கு உண்டு என்ற தெரிவுடன். மௌரிகள் வாழும் இடத்தில் தான், கிறேஸும் வாழ்கிறாள். இந்தியாவில்,இலங்கையில் இருக்கும் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் நியூஸிலெண்ட் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் ஏதும் வித்தியாசமில்லை. இராசாயனக் கழிவு மூடப்பட்ட மண்ணில் எழுந்த வீட்டை விற்பவர்களும் அவர்கள் தான். மெதேன் காஸ் செய்தி பரப்பி மலிவாக வீட்டை வாங்க வழி செய்பவர்களும் அவர்கள் தான். கெமிஸ்ட்ரி ப்ரொஃபஸர்களுக்கும்  இதில் இடமுண்டு. எங்கு சென்றால் என்ன? உலகம் எல்லா வண்ணங்களையும் கொண்டது.

தன் பன்னிரண்டு கதைகளைத் தொகுத்திருக்கிறார் சுதாகர். அவர் எழுதியுள்ளது இன்னம் உண்டு. நம்மிடமும்  ஹெமிங்வே மாதிரி ஒதுங்கி நின்று மனித வாழ்க்கையின் மனிதர்களின் பல வண்ண சித்தரிப்பைத் தரும் ஒருவர் இருக்கிறார். இனி வரும் சுதாகர் எழுத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அவருக்கென ஒரு ஆளுமை இருக்கிறது.

வெங்கட் சாமிநாதன்/22.1.2014

Series Navigation
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Comments

  1. Avatar
    meenal says:

    இதுவரை சுதாகரின் நூல்களைப் படித்ததில்லை.இனிமேல் படிக்கதூண்டுதுங்க உங்க விமர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *