பயோ டேட்டா
பெயர்; : அகிலேஷ்
வகுப்பு : 6th “B
ஸ்கூல் : சரஸ்வதி வித்யாலயா
பிடித்தது : டி.வி., சாக்லேட், பிரைட் ரைஸ், எம்.ஜி.எம். வீடியோ கேம், தனுஷ்கா
பிடிக்காதது : நிலா மிஸ், தன்ராஜ் சார், புளிக்குழம்பு, சாம்பார் ரைஸ், படிப்பு, ராஜேஸ் (கிளாஸ் லீடர்)
லட்சியம் : ஜான் ஷீனாவையும, அண்டர் டேக்கரையும் அடித்து வீழ்த்துவது
சிறப்புத் தகுதி : எனக்குப் பேய்னா பயமே கிடையாது.
இன்று சன் டீ.வி.யில் அந்த பேய் நாடகத்தைப் பார்த்தேன். எல்லா பேய்களும் ஒரே இடத்தில் இருந்துதான் ஆடைகளைத் திருடுகின்றன. திருடுவது என்று முடிவாகிவிட்டால் ஒரு நல்ல கடையில் திருட வேண்டியதுதானே. ஏன் பைத்தியகார ஆஸ்பத்திரியிலிருந்து ஆடைகளை திருடுகின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த பேய்களுக்கு அறிவே கிடையாது. ஒரு இடத்திற்கு வருவதற்கு முன் கொடுக்க வேண்டிய சிம்டம்ஸ்களையெல்லாம், பழைய ஜெய் சங்கர் படத்திலிருந்து ஒரே மாதிரி கடைபிடிக்கின்றன. எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது.
கடந்த இரண்டு நாட்களாக ஜன்னல் கதவு தானாக அடித்துக் கொள்கிறது. உஷ்…..புஷ்….. என்று காற்று வேறு அடிக்கிறது. எந்த பேய் என் கோபத்துக்கு ஆளாகப் போகிறது என்றுதான் எனக்குப் தெரியவில்லை. அநேகமாக இன்று என் கையில் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு ஒரு பேய் இரண்டாவது முறை உயிரை விடப் போகிறது என்று நினைக்கிறேன். நான் வெகு நேரமாக நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருந்தேன். அதோ அந்த திரைச் சீலைக்குப் பின்னே ஒரு அழுக்கு பிடித்த கை தெரிகிறது. இன்று அதற்F இருக்கிறது வேட்டு…
திரைச்சீலைக்கு பின்னே எனது இடது கையை நுழைத்து துலாவினேன். அப்படியே தடவிப்பார்த்தில் ஒரு காது சிக்கியது. வசமாக பிடித்து தரதரவென இழுத்து வந்து நடுக்கூடத்தில் போட்டேன். அது வீல் வீல் என்று கத்தியது.
வாய்க்கு நடுவில் விரலை வைத்து உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்………….. என்று அதட்டினேன்.
அந்த பேய் வாயைப் பொத்திக்கொண்டு அழுகையை அடக்கப்பார்த்து தோற்றுப்போனது.
சிறிது நேரம் அதன் அழுகை அடங்கட்டும் என காத்திருந்தேன்.
அது ஒரு குட்டிப் பேய். சுமாராக என் உயரம்தான் இருக்கும். வயது கூட என்னுடைய வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். தொழிலுக்கு புதிது போல. ரொம்பவே பயந்தது. ஃபிரிட்ஜிலிருந்து ஒரு ஐஸ்கிரீமை எடுத்துக் கொடுத்தேன். நான் நினைத்ததைப் போலவே அழுகை நின்றுவிட்டது. நல்ல பசியாக இருந்தது போல. ஒரு பீட்சாவை ஓவனில் வைத்து சூடாக்கி கொடுத்தேன். அதையும் கபளீகரம் செய்தது அந்த பேய்.
நான் அதனிடம் கேட்டேன்
”சாப்பிட்டு எத்தனை நாட்களாகிறது”
இரண்டு கையை தூக்கி காண்பித்தது. ஒவ்வொரு கையிலும் தலா 3 விரல்கள் தான் இருந்தன. ஒரு கையில் இரண்டு விரல்களை மடக்கி மொத்தம் நான்கு விரல்களைக் காட்டியது. சாப்பிட்டு நான்கு நாட்களாகி விட்டதாம். பாவம். ஏழை பேய் போல.
அந்த குட்டிப் பேய்க்கு மூன்று கண்கள் இருந்தது. மூன்று கண்களையும் முழித்து முழித்துப் பார்த்தது. பயத்தில் முழிகள் மூன்றையும் உருட்டியது.
“சரி…………………. சரி……………… பயப்படாத. நாம் ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆகிடுவோம்…. சரியா!”
சற்று நேரம் சந்தேகத்துடன் பார்த்த அந்த பேய் பின், தன் விலக்காத பற்கள் அனைத்தும் வெளியே தெரியும்படி காட்டி சிரித்தது. பின் அந்த பேயிடம் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டேன்.
”அடுத்த முறை சிரித்தால் முன்பே கூறிவிடு, நான் அந்தப் பக்கம் திரும்பிக் கொள்கிறேன்” என்று
அந்தப் பேய் பல் விலக்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது போல. பல் முழுவதும் ஒரே கரை கரையாக காணப்பட்டது. அந்தப் பேய்க்கு கோல்கேட் பேஸ்டை எடுத்துக் கொடுத்தேன். பேய் பதற்றத்துடன் கேட்டது.
”என்ன இது”
”ஓ…. நீ இதைப் பார்த்ததே இல்லையா, இப்பொழுதுதான் புரிகிறது உன் பல் ஏன் இவ்வளவு கருப்பா இருக்குன்னு…. இதுதான் டூத் பேஸ்ட். இதுல பல் விலக்குனா பல் சுத்தமா இருக்கும். உன் வாய்ல திசைக்கொன்னா நீட்டிக்கிட்டு நிக்குதே, அய்யனாரு கோவில்ல குத்தி வச்ச அருவா மாதிரி, அதை சுத்தம்மா வச்சுகிட்டா என்ன?”
அந்தப் பேய் என்னுடைய வற்புறுத்தல் தாங்காமல் பல் துலக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் அது பல் துலக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
பல் துலக்கி முடித்தவுடன் அதனை சிரிகக்ச் சொன்னேன்.சற்று சிரமப்பட்டு அந்தப் பேய் சிரித்தது. முன்பிருந்ததற்கு இப்பொழுது பரவாயில்லை.
“நீ இப்போ ரொம்ப அழகா இருக்க” என்று (பொய்யாக) கூறினேன்.
உடனே அந்தப் பேய் வெட்கப்பட்டது. பின் அதை திணறடித்த அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
”உங்கள் குலத்துக்கே கால்கள் கிடையாதே. பின் எப்படி நீங்கள் நடந்து வரும் போது ஜல்….ஜல்…..ஜல்…..என்று சத்தம் வருகிறது”
தனது உருண்டையான கண்களை நாலாபுறமும் உருட்டி திருதிருவென பார்தத்து. ஒவ்வொரு முறையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அதற்கு தெரியாத கேள்வியைக் கேட்டால் அது அழுது விடுவது போல் பார்க்கிறது. பின் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறியது.
”அது எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.”
”ஓஹோ………”
“சரி உன் நகங்கள் ஏன் இவ்வளவு நீளமாக வளர்ந்திருக்கிறது. அதை நான் வெட்டி விடவா?”
“முடியவே முடியாது என்று மறுத்துவிட்டது. நான் என் விரல்களை காண்பித்தேன். மேலும் நெய்ல் பாலிஷ் என்று ஒன்று இருக்கிறது என்றும் அதை நகங்களில் தடவிக் கொண்டால் மிக அழகாக இருக்கும் என்று கூறினேன்.
“அழகாக” என்ற வார்த்தையைக் கேட்வுடன் அதன் கண்கள் பளிச்சிட்டதை நான் கவனிக்கத் தவறவில்லை. அந்த பேய் கூறியது
“நான் அந்த நெய்ல் பாலீசை பார்க்கலாமா?”
“அதற்கு நீ முதலில் நகம் வெட்டிக் கொள்ள வேண்டுமே?”
கடுமையான சிந்தனைக்குப் பின் என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. சில நிமிட போராட்டத்துக்குப் பின் பேயின் நகங்களை சீர் செய்து, நெய்ல் பாலீஸ் போட்டவுடன். அதன் முகத்ததில் பளிச்சென்று ஒரு சிரிப்பு. பின் உடனே சோகமாகிப் போனது.
“ஏன் சோகமாயிட்டே”
“இனிமே என் நகத்தைப் பார்த்து யாருமே பயப்பட மாட்டாங்களே”
எதுக்காக பயப்படனும். இனிமே உன் நகத்தோட அழகைப் பார்த்து எல்லாரும் ரசிப்பாங்க. தயவு செஞ்சு உன் வன்முறை எண்ணத்தை கைவிடு. என்னோட பிரியா டீச்சர் மாதிரி கொடூரமான வன்முறை எண்ணத்தோட நடந்துக்காத. அதான் உனக்கு நல்லது”
திடீரென யோசனைக்குள் ஆழ்ந்தது அந்தப் பேய். அதன் யோசனையை கலைத்தேன்.
“சரி உன் கிட்ட ஒரு கேள்வி கேட்பேன்
“என்ன”
“நீ வாழ்க்கைல என்னைக்காவது குளிச்சிருக்கியா?“
புரியாமல் விழித்தது பேய், கேள்வியை மாற்றிப்போட்டுக் கேட்டேன்.
“உனக்கு குளிக்குறதுன்னா என்னன்னு தெரியுமா?”
“தெரியாது”
“பின் நான் சுத்தமாக குளிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன். தன் தரப்பு வாதங்களை அந்தப் பேய் கூறிது.
தான் குளித்தால் அதை அதன் குலத்திலிருந்தே ஒதுக்கி வைத்து விடுவார்களாம். பாவம்.
“சரி நீ குளிக்க வேண்டாம். ஆனால் சற்று தள்ளி நின்று பேசு” என்று கூறியதும் புரியாமல் விழித்தது.
“சரி…..இப்படி நைட் 12 மணிக்கு ஊரைச் சுத்திக்கிட்ட இருக்கியே, வீட்டுல அப்பா அம்மா எதுவும் கேக்க மாட்டாங்களா?”
“ம்ஹும்…… பகல்ல ஊரை சுத்துனாத்தான் திட்டுவாங்க, ராத்திரி தான் எங்களோட ட்யூட்டி டைம்மே ஸ்டார்ட் ஆகும். அதனால ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, ஆனா விடியறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடனும்னு சொல்லிருக்காங்க, சில ரவுடிப் பேய்ல்லாம் பகல்ல சுத்துமாம், அதனாலதான் அவ்ளோ ஸ்ட்ரிக்டா எங்க வீட்டுல இருக்காங்க”
“ராத்திரில அப்படி என்ன பண்ணுவ”
“வீடு வீடா போய் எல்லாரையும் பயமுறுத்துவேன்”
“ஏன் பயமுறுத்துற”
“சும்மா டைம்பாசுக்குத்தான்”
“இதெல்லாம் ஒரு வேலையா, உருப்படியா ஏதாவது பண்ணலாம்ல”
“என்ன பண்றது”
“ஸ்கூலுக்குப் போ”
“ஸ்கூலிக்குப் போயி என்ன பண்றது”
“நல்லா படி”
“நல்லா படிச்சு என்ன பண்றது”
“நல்லா படிச்சு என்ன பண்றது”
“நல்ல வேலைக்குப் போ”
“நல்ல வேலைக்குப் போயி என்ன பண்றது”
“நல்ல வேலைக்குப் போனா நல்லா சம்பாதிக்கலாம்”
“நல்லா சம்பாரிச்சு என்ன பண்றது”
“நல்லா சம்பாரிச்சா ஜாலியா இருக்கலாம்”
“நான் இப்பவே ஜாலியாத்தானே இருக்கேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டப்படணும்”
“ஓ…….. நீ நெறையா ஆன்மீக புக்ஸ் எல்லாம் படிப்பியோ?….. நீ ஒரு புத்திசாலிப் பேய்தான்”
“தேங்யூ…..”
“சரி……. நீ எப்படி என் கண்ணுக்கு மட்டும் தெரியுற”
“அதான் எனக்கும் தெரியல, நான் எப்படி உன் கண்ணுக்கு மட்டும் தெரியறேன்”
“ ஆஹா…..சூப்பர், நீ ஒரு பெரிய தத்துவத்தையே எனக்கு சொல்லிக் கொடுத்துட்ட”
“என்ன தத்துவம்”
“யாராவது ஒரு கேள்வி கேட்டா, அந்தக் கேள்வியையே திருப்பி கேட்டு பதிலா சொல்றது……..ஆஹா…..அருமை நாளைக்கு என் ஸ்கூல் டீச்சர் என்கிட்ட ஏதாவது கேள்வி கேட்டா இதே முறையை பயன்படுத்தி பதில் சொல்லிடுறேன்”
டீச்சர் – ஏன்டா ஹோம் ஒர்க் செய்யல
நான் – அதானே ஏன் நான் ஹோம் வொர்க் செய்யல
டீச்சர் – ஏன்டா யூனிஃபார்ம் போட்டு வரல
நான் – அதானே ஏன் நான் யூனிஃபார்ம் போட்டு வரல
டீச்சர் – ஏன்டா மார்க் கம்மியா எடுத்துருக்க
நான் – அதானே நான் ஏன் மார்க் கம்மியா எடுத்திருக்கேன்.
“ஆஹா அருமை நீ ஒரு தத்துவவாதி பேய். உன்னை நான் பாராட்டுகிறேன்.”
அந்தப் பேய்…….. பேய் மாதிரி விழித்துக் கொண்டிருந்தது.
“ஏன் இப்படி பேய் மாதிரி முழிச்சு பாக்குற. நான் சொல்றது எதுவுமே உனக்குப் புரியலையா?”
தலையை மேலும், கீழும் பாவமாக ஆட்டியது.
“சரி……அதைவிடு, உன் சட்டையை கழற்றி குடு நான் வாஷிங்மெஷினில் போட்டு துவச்சுத்தர்றேன்”
அந்தப் பேய் கோபித்துக் கொண்டது. பின் கோபத்தில் மேலமூச்சு கீழ்மூச்சு வாங்க திணறித் திணறி கூறிது.
“அழுக்குச் சட்டைதான் எங்கறது யூனிஃபார்ம். தொவைச்சு போடற கெட்டப்பழக்கம் எல்லாம் எங்க இனத்துக்கே கிடையாது”
“ஓ……….. சாரி………அப்படின்னா என்ன மன்னிச்சுடு”
“சரி……நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்பேன். கோபப்படாம பதில் சொல்லுவியா”
“அது நீ கேக்குற கேள்விய பொறுத்தது”
“உங்க உலகத்துல இருக்குற பொம்பளை பேய்கள் எல்லாம் வரும்பொது மல்லிகைப் பூ வாசனை வருதே அந்த நாத்தம்புடிச்ச தலைக்கு எதுக்கு மல்லிகைப்பூ”
“மல்லிகைப்பூ எங்க உலத்தோட தேசியப் பூ…. பொம்பளை பேய்கள் எல்லாரும் அதை தலையிலவச்சுக்கணும்ங்கறது எங்க உலகத்தோட சட்டம்”
“சரி ஒரு கலர் புடவையாவது கட்டித் தொலைக்க வேண்டியதுதானே, எதுக்கு வெள்ளை வெளேர்ர்ன்னு ஒரு பொடவையைக் கட்டிகிட்டு ஊரைச் சுத்திகிட்டு இருக்காங்க”
“எங்களுக்கு தேசியப் பூன்னு ஒண்ணு இருக்கிற மாதிரி, தேசிய கலர்ன்னு ஒண்ணு இருக்கு, வெள்ளைதான் எங்களோட தேசியக் கலர்”
“எங்க ஸ்கூல் யூனி்ஃபார்ம் கூட வொய்ட் அண்ட் வொய்ட்தான், எனக்குஅது சுத்தம்மா பிடிக்காது, அதெப்படி அழுக்காகாமல் தும்பைப் பூ மாதிரி வெள்ளை வெளேர்ன்னு சேலையை வச்சிருக்காங்க,அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லேன்”
“ஓ…… அதுவா, பொம்பளை பேய்கள் எல்லாம் சோம்பேறிப் பேய்கள், ராத்திரி 12 மணிக்கு வந்து கெக்க பெக்கன்னு சிரிச்சுட்டுஅரை மணி நேரத்துல வீடடுக்கு போயிடுவாங்க. அதனால அவங்க சேலை அழுக்காகுறதே இல்லை. ஆனா நாங்க அப்படி இல்லை, விடிய விடிய வேலை செய்வோம். உழைப்புதான் எங்க உயிர் மூச்சு”
“என்ன நீ……. உங்க உலகத்துல பொம்பளைப் பேய்கள் எல்லோரும் சோம்பேறிகள்ன்னு சொல்ற, பெண் பேய்களை உனக்கு மதிக்கத் தெரியாதா, எங்க ஸ்கூல்ல, எங்க டீச்சர் பேயை நாங்க எவ்ளோ மரியாதையோட மிஸ்ன்னு கூப்பிடுவோம் தெரியுமா…. ஆண்டுவிழாவில் கூட அன்புக்குபம், பண்புக்கும் பாத்திரிமான நல்லாசிரியை பிரியா அவர்களேன்னுதான் பச்சை பொய் சொல்வோம்….. இந்த மாதிரியெல்லாம் உங்கள உலகத்துல நடதுக்க மாட்டிங்களா”
அப்பொழுதுதான் ஆச்சரியமான அந்த விஷயத்தை நான் கவனித்தேன். அந்த பேய்க்கு பயத்தில் உடல் நடுங்கியது. உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியது. மூத்திர வாடை வேறு அடித்தது.
பேயைப் பற்றி சில விஷயங்களை நான் கண்டுபிடித்தீருக்கிறேன். இந்த கண்டுபிடிப்பு எனக்கு மட்டுமே சொந்தம்.
கண்டுபிடிப்புகள் –
1. பேய்க்கு பயம் உண்டு
2. பேய்க்கு பயத்தில் உடல் நடுங்குகிறது
3.பேய்க்கு வேர்வை வெளிப்படுகிறது
4. அந்த மூத்திரவாடை பற்றி என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாது.
அநாகரிகமாக அந்த பேயை நான் சோதிக்க விரும்பவில்லை.
நான் ஏ.சியை போடடுவிட்டேன். பேய்க்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தேன். பின் முதுகில் இதமாக தடவிக் கொடுத்தேன். அந்தப் பேய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. பின் நிதானமாகஅந்தப் பேய் நிறுத்தி நிறுத்தி பேசியது.
“ஐயோ……பொம்பளை பேய்கள் பத்தி எதுவும் தப்பா பேசாத அப்புறம். பொம்பளை பேய்கள் சங்கத்துல நிக்கவச்சு கண்டன தீர்மானம் நிறைவேத்திடுவாங்க”
“ஓஹோ…………. உங்க உலகத்துல ஒரு பிரியா மிஸ் இருக்காங்களா”
“என்ன………………. என்ன சொன்ன?”
“இல்ல…………இல்ல……………. ஒண்ணுமில்லை. நான் எதுவுமே சொல்லலையே”
நான் திணறுவதைப் புரிந்து கொண்டு அந்தப் பேய் சிரித்தது. வீடே அதிரும்படியாக சிரித்தது. எனக்கு வந்த கோபத்துக்க ஓங்கி ஒரு குத்துவிட்டேன் அதன் முகத்தில்.
“உனக்கு அழகாக ஸ்மைல் பண்ணத் தெரியாதா? எதுக்கு இப்படி பேய் மாதிரி அலறிக் கொண்டு சிரிக்கிற”
“நான் உண்மையிலேயே பேய்தான”
“இருந்தாலும் இனிமே நீ அப்படி சிரிக்கக் கூடாது, எப்படி அழகாக ஸ்மைல் பண்ணனும்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன் சரியா”
“எங்க நான் சிரிக்கிற மாதிரி சிரி”
“ஹி…..ஹி…..ஹி…..ஹி……ஹி……ஹி…..”
அந்தப் பேய் சிரித்தது
“……..கி…….கி….கி……கி…..கி….கி…கி……”
“முண்டம், முண்டம்அப்படியில்ல என்ன நல்லா பாரு இப்படித்தான் சிரிக்கணும். ஸ்டைலா……..ஹி…..ஹி…..ஹி…..ஹி…..ஹி……ஹி…..”
பேய் சிரித்தது “ கி….கி….கி….கி….கி….கி…..கி…கி…..”
“மடப்பேயே, அறிவுகெட்ட நாயே, சிரிக்கச் சொன்னா ஏன் வாந்தி எடுக்கிற, இனிமே சிரிச்சன்னா பல்ல தட்டிருவேன் ஜாக்கிரதை”
அந்தப் பேய் முதலில் பயந்தது பின் கோபிததுக் கொண்டது. பின் என் கோபம் அடங்கியதும், அந்தப் பேயின் மீது பரிதாபம் பிறந்தது. அதை சமாதானப்படுத்துமு் விதமாக……பாபா ரஜினியைப் போல விரல்களை நீட்டி பழம் காட்டினேன். அந்தப் பேயும் புரிந்து கொண்டு சமாதான உடன்படிக்கையாக விரல்களை நீட்டி பழம்காட்டியது.
அப்பொழுது ஜன்னல் படபடவென அடித்துக் கொண்டது. “ஐயோ உங்க உலகத்துல இருந்து இன்னொரு பேய் இங்கதான் சுத்திகிட்டு இருக்குபோல” என்று பதற்றத்துடன் கூறினேன்.
பேய் கூறியது “இல்லையே இங்க நான் மட்டும்தான இருக்கேன். வேற எந்த பேயும் இங்கே இல்லையே, எதை வைச்சு இன்னொரு பேய் இங்க இருக்குன்னு சொல்ற”
“ஏன்னு உனக்குத் தெரியாதா, லூசு புடிச்ச நாய்கள், சாரி….. பேய்கள் வரும்போது, கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் டப்…..டப்…..டப்….ன்னு அடிச்சுகிட்டு வர்றீங்களே, எவ்ளோ காஸ்ட்லி ஜன்னல், இப்படியா அதை சேதப்படுத்துறது. உங்கள நம்பி கண்ணாடில ஜன்னலபோட முடியுதா, நீங்க போட்டு தற்டுறதுல ஜன்னலகண்ணாடி எலாம் ஒடைஞ்சு போயிடாது???”
அந்த பேய் நான் வருத்தமுற்றதை நினைத்து உண்மையிலேயே வருந்தியது போல.
“உங்கள் வீட்டு சொத்துக்களை சேதப்படுத்துறது எங்க நோக்கம் இல்ல. உங்கள பயமுறுத்துறதுதான் எங்க நோக்கம் அதை முதல்ல புரிஞ்சுக்கோ”
“ஆமாமா……நல்ல நோக்கம் போ….”
இருவரும் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் கோபத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.
பின் பேயாக பார்த்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
“சரி……சரி…… மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு இருக்காத………இனிமே ஜன்னல் கதவை தட்டாமல் உள்ளே வர்றேன்”
“வெரிகுட், இப்படித்தான் சொல்ற பேச்சைக் கேட்கணும்”
“சரி…….நீங்க எப்படி திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போறீங்க, உங்களுக்குஎப்படி இந்த மறைஞ்சு பேற சக்தி கிடைக்குது”
“அது அப்படித்தான்”
“அப்படித்தான்னா…….எப்படி”
“அப்படித்தான்னா, அப்படித்தான்…..அதெல்லாம் நீயும் பேயா ஆனபிறகு தானா வரும், அதுவரை அவசரப்படாம இரு”
“இங்க பாருங்க…… கோவப்படாதீங்க…….. சிலருக்குத்தான் சில விஷயம் கிடைக்கும்.எல்லோருக்கும் எல்லா விஷயமும் கிடைச்சிடாது. உங்களுக்கு கிடைச்சிருக்குற நல்ல விஷயங்களை வச்சு நீங்க சந்தோஷமா இருங்க”
“ம்ம்ம்….. நீ ஒரு தத்துவப் பேய்ங்கிறத அடிக்கடி நிரூபிக்கிற”
“சரி அதைவிடு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்”
“என்ன”
“க்ரட்ஜ் படத்துல நடிச்ச குட்டிப்பேய் உன்னோட நண்பனா, அவனை ஒருநாள் இங்க கூட்டி வாயேன்”
“இல்லை அவனை கூட்டி வர முடியாது, அவன் ஜப்பான்ல இருக்கான்”
“இருந்தா என்ன கூட்டிட்டு வா”
“அதெல்லாம் முடியாது, விசா, இமிகிரேஷன் பிராப்ளம் எல்லாம் இருக்கு”
“என்ன விசாவா, உங்களுக்குக் கூட விசா உண்டா”
“இந்திய பேய்களுக்கு கிடையாது, ஆனால், ஜப்பான் பேய்களுக்கு எல்லா கட்டுப்பாடுகளும் உண்டு. அவங்க இப்படித்தான் எப்பவுமே ஒழுங்கா நடந்துக்கனும்னு நினைப்பாங்க, ஆனா நம்ம ஊருல அப்படி இல்லை. எந்தப் பேய் வேணும்னாலும் வரலாம், எந்தப் பேய் வேணாலும் போகலாம். இந்தியா ஒரு சுதந்திர நாடு…..”
“இந்திய பேய்களையெல்லாம் கட்டுப்படுத்த ஆள் இல்லாமல் தான் இப்படி திரிகிறார்கள். இவர்கள் ஒழுக்கமே இல்லாத பேய்கள், பேயாக மாறிய பின்னரும் ஏன் இப்படி ஒழுங்கில்லாமல் திரிகிறார்கள் என்றுதான் புரியவில்லை. பேய்கள் கட்டுப்பாட்டு அசோஷியேசன் என்று ஒன்றை ஆரம்பித்து இவர்களையெலாம் திருத்த வேண்டும். இல்லையென்றால் இவரகள் அனைவரும் கட்டுப்பாடில்லாம் தறிகெட்டு போய் விடுவார்கள். என் எண்ணங்களை அந்த பேய்க்கு விளக்கமா எடுத்துக் கூறி ஒரு அசோஷியேசன் ஆரம்பிப்பதற்கான ஐடியாவை கொடுத்தேன். அந்த பேயும் ஒப்புக் கொண்டு விடிய காலை 5 மணிக்கு அவசர அவசரமாக சென்று மறைந்தது.
——————————————–
- ஜெயமோகனின் ‘களம்’ சிறுகதை பற்றிய விமர்சனம்
- புலம் பெயர் வாழ்க்கை
- நெய்தல்திணை மற்றும் நாட்டுப்புற பாடல்களில் மீனவத்தொழில்சார் நிலைகள்
- தொடுவானம் 3. விலகி ஓடிய வசந்தம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தினம் என் பயணங்கள் – 5
- மயிரிழையில்…
- பேயுடன் பேச்சுவார்த்தை
- மருமகளின் மர்மம் – 16
- மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )
- சீதாயணம் நாடகப் படக்கதை – 20
- பெரிதே உலகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.
- நீங்காத நினைவுகள் – 34 ஈயமும் பித்தளையும்!
- பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு
- கீழ்வானம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 46
- திண்ணையின் இலக்கியத் தடம்-22
- பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி
- இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு