மயிரிழையில்…

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய விஷயமா..? பருப்பும் நெய்யுமாக ஆரம்பித்திருந்த விருந்தின் சந்தோஷமெல்லாம் இந்த முயற்சியிலேயே வடிந்து விட்டது.
இது ஒரு விருந்துக்கான ஏற்பாடு என்றில்லாமலேயே விருந்தாகி இருந்தது. வெள்ளிக்கிழமை. மதிய உணவு நேரம். அலுவலக நண்பன் சந்துருவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலு. கத்தரிக்காய் சாம்பார், பீர்க்கங்காய் கூட்டு, தக்காளி ரசம், கறிவேப்பிலை துகையல் என அவனது சாப்பாட்டு அய்ட்டம் முழுவதும் பாலுவுக்கு ரொம்ப பிடித்தமான மெனு.
சந்துருவுக்கு சாப்பாட்டில் அதிக நாட்டம் இருக்காது. பாலு தானே சமைத்து எடுத்து வரும் தயிர் சாதமோ, லெமன் சாதமோ அல்லது புளிப்பு, உரைப்பில்லாத சாம்பாரோ எதுவாக இருந்தாலும் பிரியமாக வாங்கிக் கொள்வான். தனது லஞ்ச்சை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பாலுவிடமிருந்து அவ்வப்போது ஒரு ஸ்பூன் காய் எடுத்து வாயில் போட்டுக் கொள்வான்.
“வத்தல், முறுக்குன்னு நொறுநொறுன்னு கடிச்சு திங்கறத விட சாஃப்ட்h வெந்த காயா இருந்தா சத்தம் வராம சாப்டுலாம்..” என்பான் சந்துரு.
குடும்பத்தை விட்டு தனியே பிரிந்திருக்கும் பாலுவுக்கு சந்துருவின் சாப்பாடு அமிர்தம் தான்.
“உண்மையிலுமே உங்கம்மா நல்லா சமைக்கிறாங்கடா…” உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
“எங்கம்மா மாதிரியே எங்க அக்கா கூட நல்லா சமைக்குதுன்னு அவங்க வீட்டுக்காரர் பெருமையடிச்சுக்குவாரு…” என்றவன் “இந்த வாரம் ஊருக்கு போகலைன்னு சொன்னியே.. நாளைக்கு லஞ்ச்க்கு எங்க வீட்டுக்கு வாயேன்..” என்றான்.
இப்போது வீடு வரை வந்த விருந்து வாய்க்குள் செல்லும் போது பிரச்சனை செய்கிறது.
சந்துருவோட அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்தவர்கள். சாதி மறுப்பு திருமணமும் கூட. சொந்தங்கள் அத்தோடு நின்று விட இரண்டு பெண்களும், ஒரு ஆணுமாக தங்களது உலகத்தை சுருக்கிக் கொண்டார்கள்.
“தம்பி.. சாம்பார் சாதத்துக்கு இன்னும் கொஞ்சம் நெய் விடுட்டுமா…” சந்துருவின் அம்மா தேவகி கேட்டது காதில் விழுந்தது. வீட்டிலேயே நெய் உருக்கியிருப்பார்கள்; போல. நல்ல மணமாக இருந்தது. பல்லின் இடுக்கில் மாட்டியிருந்ததை சட்டை செய்யாமல் நெய்யோடு சாதத்தை பிசைந்து வாயில் வைத்தான் பாலு. மெல்லுவதற்கு அவஸ்தையாக இருந்தது ருசிந்து சாப்பிட முடியாத நிலையை நொந்துக் கொண்டான்.
சின்ன வயசுல நிறைய இனிப்புகள் சாப்பிடதன் விளைவு இப்போது பிரச்சனையாக இருக்கிறது. அம்மா வழியிலும் அப்பா வழியிலும் இவன் தான் முதல் பேரன். தாத்தா பாட்டிகள் வரும் போதெல்லாம் இனிப்புக்கு பஞ்சமேயிருக்காது. சொத்தை பல்லின் குழியில் தான் அது மாட்டிக் கொண்டு பாடாய்படுத்துகிறது.
யாரோ கூப்பிடும் சத்தம்….. “இதோ வந்துட்டேம்பா..” என்ற தேவகி பக்கத்தில் நின்றிருந்த சந்துருவின் தங்கை தேவியிடம்  “வேணுங்கறத பருமாறும்மா..” என்றவாறு வெளியில் வந்தாள்..
“அண்ணா… கத்திரிக்கா கொத்சு இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமா..?”
“எனக்கு வேணாம் தேவி.. பாலுவ கவனி..”
சந்துரு அதற்குள் ரசம் சாதம் முடித்திருந்தான். காரட் பொரியல், காளான் மஞ்சூரியன்;, உருளைக்கிழங்கு பால்கறி, கத்திரிக்காய் கொத்சு, அப்பளம் என்ற இலைநீள மெனுவில் கத்திரிக்காய் மட்டுமே சாப்பிட்டிருந்தான்.
தேவகி வருவதற்குள் இந்த அவஸ்தையை முடிக்க வேண்டும். வேகமாக நாக்கை வலது புறம் சுழற்றி சொத்தை பல்லை  ஆழமாக துழாவினான். ‘ம்ஹ{ம்.. வருவதாக இல்லை..”
சந்துருவுக்கு இருபத்தேழு வயசாகிறது. கிட்டத்தட்ட பாலுவுக்கும் அதே வயது தான். அக்காவுக்கு திருமணமாகி விட்டது. தேவிக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாக அவ்வப்போது சொல்லுவான் “ஏன்டீ.. அந்த தம்பி எலையில உப்பு வைக்கல பாரு..” சொல்லிக் கொண்டே உள்ளே வந்த தேவகியின்; கைகளில் அயர்ன் செய்யப்பட்ட சந்துருவின் பேண்ட் சட்டைகள் இருந்தது.
சாப்பிடும் போது சொத்தை பல்லால் அடிக்கடி பிரச்சனையாகி விடுகிறது. ஒரு முறை ஹோட்டலில் காலிஃப்ளவர் அறுபந்தைந்து சாப்பிட்டான். அது பல்லுக்குள் மாட்டிக் கொண்டு ரொம்ப அவஸ்தையாகி விட்டது. மிச்சத்தை அப்படியே பார்சல் கட்டச் சொல்லி ரூம்க்கு எடுத்து வந்து இடது பக்கமாகவே அருவி அருவி முழுவதையும் சாப்பிட்டு விட்டான். ஆனாலும் ஏதோ திருப்தி இல்லாத தனம் இருந்தது. சொத்தையாய் போன அந்த பல்லை பிடுங்கும் மூடோடு பல் டாக்டரி;டம் போயிருந்தான் பாலு.
“வலி இருக்குதா சார்…” என்றார் பல் டாக்டர்.
“வலி இல்ல… ஆனா சாப்பிடறப்போ ரொம்ப பிரச்சனையா இருக்கு.. பல்லுல போய் போய் ஒக்காந்துக்குது.. அந்த பல்ல புடுங்கிக்கலாம்னு பாக்றேன்..”
“வேணாம் சார்.. கடவா பல்ல புடுங்கிட்டா கன்னம் சப்பையா தெரியும்.. வேணும்னா பல் ஓட்டய அடைச்சுடட்டுமா…”
“அத எப்டி சார் அடைக்கறது…?”
“ரூட்கெனால்  செஞ்சுக்கிட்டீங்கன்னா பல்லையும் எடுக்க வேணாம்.. சாப்டுறதுக்கும் பிரச்சனை வராது… என்ன சொல்றீங்க சார்…?”
பல் ஓட்டைய அடைச்சு ஒரு வருஷமா நல்லா சாப்பிட முடிஞ்சுது. இப்ப கொஞ்சம் நாளா எதாவது அதுல சிக்கிக்குது. அதுவும் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு பல் குத்தும் குச்சியை வைத்துக் கொண்டு மல்லுக்கட்ட வேண்டியிருந்தது.
பாலுவுக்கு ஒரே தங்கச்சி. கல்யாணம் ஆயிடுச்சு. இவனோட கல்யாணம் தான் இப்போ அப்போன்னு தட்டிக்கிட்டு இருக்கு. பொண்ணுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சுருக்கணும்கிறது தான் இவனோட ஒரே கண்டிஷன்.
“என்னா தம்பி.. ரொம்ப மெதுவா சாப்டுறீங்க.. இன்னும் வடை, பாயாசமெல்லாம் சாப்புடுணும்.. இதுக்கே அசந்தா எப்புடி..?” பக்கத்தில் வந்து காலியாக இருந்த டம்ளரில் நீரை நிறைத்தாள் தேவகி.
எழுந்து வாஷ்பேசினுக்கு சென்று வாயை கொப்பளித்து விட்டு வந்தால் என்ன..? பல்லில் சிக்கியிருப்பது வந்து விடாதா..? திடீரென்று எழுந்தால் ஏன்? ஏன்?னு பதறுவாங்களோ…? ச்சே.. அருமையா சமைச்சிருக்காங்க.. திருப்தியா சாப்பிட முடியல..
அதற்குள் சந்துரு சாப்பிட்டு கை கழுவியிருந்தான். “என்னடா.. அந்த தம்பி சாப்புடுது.. நீ எழுந்திருச்சு போயிட்ட..?
“அவன் ஒண்ணும் நெனைச்சுக்க மாட்டாம்மா… அவன் மெதுவா ரசித்து ருசிச்சு தான் சாப்டுவான்..”
“அது சரி.. உன்னை மாதிரி கோழிக்கணக்கா கொறிப்பாங்களாக்கும்…” தேவி அண்ணனை கிண்டல் செய்தாள். தண்ணீர் குடிக்கும் சாக்கில் அவளை நிமிர்ந்து பார்த்தான். சின்ன நெற்றி அடம்பலான புருவம் மத்தியில் சின்ன பொட்டு.. பொட்டு வைக்கும் இடத்திலிருந்தே நீள மூக்கு ஆரம்பித்து விடுகிறது. வட்டமான முகம்.. மாநிறம்.. பாந்தமாக தான் இருக்கிறாள். அனிச்சையாக கண் அவள் தலைமுடியைப் பார்த்தது. எவ்ளோ நீள முடி..?
காளான் மஞ்சூரியன் என்றால் விரும்பி சாப்பிடுவான் பாலு. சந்துரு அதை வீட்டில் சொல்லியிருக்க வேண்டும். வீட்டில் செய்ய முயன்று ஓரளவு வெற்றியும் கண்டிருந்தனர். ஒரே வாயில் உள்ளே தள்ளி வேண்டுமென்றே வலது பக்கமே மென்றான். காளானோடு உள்ளே போய் விட்டால் கூட பரவாயில்லை. எப்படியும் வெளியே வந்து விட தானே போகிறது.
“காளான் நல்லாருக்கா தம்பி..? தேவி தான் இன்னிக்கு சமையல் முழுக்க. காளான்ல ஏதோ புதுசா செய்றேன்னு செஞ்சா.. இதுக்கு என்னா பேருடீ…?”
“மஷ்ரூம் மஞ்சூரியன்… நல்லாயிருக்குங்களா…?”
“சூப்பர்ங்க…” எல்லாமே நன்றாக இருந்தது. ஆனால்; அவஸ்தை தான் தீரவில்லை.  அது இப்போது மேல் வரிசை கடைவாய் பல்லுக்கும், கீழ்வரிசை கடைவாய் பல்லுக்கும் ஏணி மாதிரி நின்றிருக்கும் போல. வாயை திறக்கும் போது தெரிந்தது. தேவியின் நீளக்கூந்தலைப் பார்த்துக் கொண்டான்.
தங்கை கல்யாண விருந்திற்கு இவன் தான் மெனு போட்டிருந்தான். நடப்பு கல்யாணங்களில் இல்லாத புதுபுது அயிட்டங்கள். கல்யாணத்தை விட சாப்பாட்டை ரசித்தவர்கள் தான் அதிகம். எல்லோரும் கிளம்பின பிறகு தங்கச்சி, புது மாப்பிள்ளை, அம்மா, அப்பாவுடன் உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிட்டான். அப்போது கூட இப்படி தான் இலையில் அயிட்டங்கள் காலியாக ஆக பரிமாறிக் கொண்டே இருந்தார்கள்.
“தக்காளி ரசம் இன்னும் கொஞ்சம் போடட்டுமா தம்பி.. எங்க தேவி கைப்பக்குவத்துக்கு அவளுக்கு அமையற மாப்ளை குடுத்து வச்சுருக்குணும்…” சொல்லிக் கொண்டே ரசத்தை இலையில் மெல்ல சரித்தாள் தேவகி. உண்மையிலுமே ரசம் அருமையாக இருந்தது. வேகமாக சாப்பிடதில் மேலும் கீழுமாக நின்றிருந்த அவஸ்தை அறுந்து போனது தெரிந்தது. ஆனால் பல்லிலிருந்து வெளியே வரவில்லை..
“பாயாசம் டம்ளர்ல குடிக்கிறீங்களா.. இலையில ஊத்துட்டுங்களா..” தேவி தான் கேட்டாள்.
“இலையிலயே சாப்டுறேன்..” பாசிப்பருப்பு பாயாசம் இலையில் விழுந்தது. மேலே முந்திரிப்பருப்புகளும், திராட்சையும் முழித்து கிடந்தன. ஒரு உலர்திராட்சையை எடுத்து வாயில் போட்டான். லேசாக கசந்திருந்தது. வாயிலிருந்து மெதுவாக வெளியே உதிர்த்தான். நல்லவேளை இருவரும் அவனை கவனிக்கவில்லை. டைனிங்டேபிள் இருந்த இடமும் அதற்கு வாகாக தான் இருந்தது. நாலு பேர் அமரும் டேபிள் என்றாலும் எதிரும் புதிருமாக இருவர் அமர்ந்தால் தான் இடையூறு இல்லாமல் சாப்பிட முடியும். ஹாலில் இருப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கும் முதுகை காட்டியவாறு அமர்ந்திருந்தான் பாலு. இதனால் தான் இத்தனை நேர அவஸ்தைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது. திராட்சையில் ஒட்டியவாறு சிறு துணுக்கும் வெளியே வந்திருந்தது. சட்டென்று நாக்கால் கடைவாய் பல்லை துழாவினான். முழுவதுமாக அவஸ்தை தீரவில்லை என்பது புரிந்தது..
“வர வர எனக்கு முடியலப்பா.. சீக்கிரமா கல்யாணத்தப் பண்ணிக்கோ..” இப்போல்லாம் பாலுவோட அம்மா அடிக்கடி இப்படி சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
“இங்க பாருடா.. வேலைக்கு போகாதவளா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்கு தினுசுதினுசா பண்ணி போடறது பத்தாதுன்னு அப்றம் அவளுக்கும் பண்ணி போடற மாதிரி வச்சுடாதே.. உங்கம்மா பாவம்…” என்பார் அப்பா முன்னெச்சரிக்கையாக.
சந்துரு செல்போனில் பிசியாக இருந்தான். அவன் எப்போதுமே இப்படி தான். கடமை தான் முதலில் என்கிற கட்சி. அலுவலகத்தில் கூட அவனுக்கு அதிக நண்பர்கள் இல்லை. அவனது இந்த மேம்போக்கான அப்பாவித்தனம் பாலுவுக்கு மிகவும் பிடித்து போனது. மெதுவாக பேச்சு கொடுத்துப் பார்த்தான். ஏதோ ஒன்று சந்துருவுக்கும் பிடித்து போக இப்போ ரெண்டு பேரும் நல்ல சிநேகிதர்களாகி விட்டனர். ஒரே வயது.. திருமணமாகதவர்கள் என்று ஒத்த தகுதிகள் சேர்ந்துக் கொள்ள நெருக்கம் அதிகமாகி விட்டது.
“தேவிக்கா.. தேவிக்கா…” வெளியே குரல் கேட்டது.
“பக்கத்து வீட்டு ஹரிணி தான் வந்திருந்தாள். “அக்கா.. அம்மா சாயங்காலம் நேரமே வெளிய கௌம்பிடுவாளாம்.. அதுனால சீக்ரமே வந்து வெத்தலபாக்கு வாங்கிக்க வர சொன்னா..” கொலுவுக்கு அழைத்தப்படி குங்குமச்சிமிழை நீட்டியது அந்த பெண்.
சாதம் போட்டு தயிரை ஊற்றினாள். “நார்த்தாங்கா ஊறுகா வைக்கவா…? எலுமிச்ச ஊறுகா வைக்கவா..? தேவகி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“மாமி.. நீங்களும் குங்குமம் இட்டுக்க வாங்கோ…”
“இதோ வந்துட்டேன்…” நார்த்தாங்கா ஊறுகாயை அவன் இலையில் வைத்து விட்டு வாசல் பக்கம் நகர்ந்தாள் தேவகி.
சந்துரு இன்னும் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான். கையை நன்கு வாய்க்குள் விட்டு சொத்தை பற்குழியிலிருந்து இழுத்தான். உணவுத் துணுக்குகளோடு மீதமான அவஸ்தையும். வெளியே வந்தது. வேகமாக எடுத்து இலையின் ஓரத்தில் வைத்தான். இப்போது நிறைய சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.
“தம்பி… என்ன வேணுங்க..?” தேவகியும் தேவியும் குங்குமம் இட்டுக் கொண்டவர்களாக அருகில் வந்தார்கள். தேவி வடையை எடுத்து இலையில் வைத்தாள்.
இலையின் ஒரத்தில் இருந்ததை பார்த்து விட்டவளாக சொன்னாள் தேவகி. “விருந்து சாப்பாட்டுல முடி கெடந்து போச்சுன்னா கால காலத்தும் உறவு நெலைக்கும்னு பெரியவங்க சொல்வாங்க..” குரலில் சங்கடத்தை காண்பிக்காதவளாக பேசினாள்;.
திடீரென்று மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. “இன்னும் கொஞ்சம் பாயாசம் போடுங்க.. என்றான் தேவியிடம்.

Series Navigation
author

கலைச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *