அத்தியாயம் 1
திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் கோவையில் கடந்த டிசம்பர் மாதம் கடைசி சனிக்கிழமை பேச அழைத்திருந்தார்கள்.
சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10
தமிழ்நாடு இலக்கியப்பேரவையில்
திராவிட இயக்கம் அன்றும் இன்றும்
இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை
18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம்,
கோவை 45.
ஏற்கனவே, என் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் அடுத்த நாள் இருந்ததால் போவது அவர்களுக்கோ எனக்கோ பிரச்சனையாக இல்லை. இந்த தலைப்பில் நான் அந்தக் கூட்டத்தில் கட்டாயம் பேச வேண்டும் என்று விரும்பியவர் அய்யா கோவை ஞானி அவர்கள்.
கூட்டம் நான் எதிர்பார்ததை விட அதிகமாகவே இருந்தது. வரவேற்புரை ஆற்றும் போதே சொல்லிவிட்டார் அய்யா புலவர் ஆதி அவர்கள், இந்த தலைப்பை பார்த்துவிட்டு எங்கள் ஏரியா திமுக காரர்கள் கேட்கிறார்கள்,
என்னய்யா, பம்பாயிலிருந்து ஆளை வரவழைத்து திமுகாவைத் திட்டப் போகிறீர்களா என்று! இத்தனைக்கும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பை அவர்கள் மாற்றிக்கொண்டார்கள், என்னிடம் கேட்டுக்கொண்டுதான். அதாவது திராவிட இயக்கம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் நான் பேசுவதாக அழைப்பிதழில் அச்சிட்டிருந்தார்கள்.
பேச ஆரம்பிக்கும் முன்பே, திமுக வை வசைப்பாடப்போகிறேன் என்று அவர்களுக்கு ஏன் தோன்ற வேண்டும்? இதுதான் குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்று சொல்வதன் அர்த்தமோ..?
இம்மாதிரியான ஓர் அறிமுகத்தால் எனக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டது.
அதாவது, நான் என் பூர்விகக்கதையைக் கொஞ்சம் சொல்லி ஆரம்பித்தால் அவர்களுக்கு என் விமர்சனங்களின் காரணம் புரியலாம் என்று நினைத்தேன்.
எனவே, திமுக என்ற அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உதயமான அதே காலக்கட்டத்தில் மராட்டிய மாநிலம், அன்றைய பம்பாய் மாநகரிலும் உதயமாகியது என்றும் அதில் முக்கியப்பங்கு வகித்தவர் என் தந்தையார் பி.எஸ். வள்ளிநாயகம் அவர்கள் என்பதையும் சொல்லிவிட்டுத்தான் பேச ஆரம்பித்தேன். பேசி முடித்தப்பின் நிறைய எதிர்க்குரல்கள் எழுந்தன.
கேள்விகள் பறந்தன..! ஆனால் இவை எல்லாவற்றையும் நானும் எதிர்ப்பார்த்துதானே பேச ஆரம்பித்தேன். எனவே எந்தக் குழப்பமும் இன்றி அவர்கள் கேள்விகளுக்கு என் பதில்களை முன்வைத்தேன்.
கூட்டம் முடிந்தப்பின் அதில் பலர் ஓடோடி வந்துப் பாராட்டினார்கள்.
இன்னும் சிலர், எங்களால் சொல்ல முடியவில்லையம்மா, நீங்கள் மனம் விட்டு சொல்லிவிட்டீர்கள் ” என்றார்கள். இன்னும் சிலரோ “இதைவிடவும் காட்டமாகப் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தோம்”
என்றார்கள். மறுநாள் என் இலக்கிய கருத்தரங்கு நிகழ்வுக்கு அந்நிகழ்வில் கலந்துக் கொண்ட பலர் வந்திருந்தார்கள். வந்ததுடன், நேற்று இந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டோம், அதனாலெயே இன்று வந்திருக்கிறோம் என்றார்கள். எப்படியோ கூட்டத்தின் முடிவில் நன்றி சொன்ன தோழர் “எங்கள் திமுகவை எவரும் வீழ்த்த முடியாது, எந்த விமர்சனங்களும் எங்களை அசைக்க முடியாது” என்று சொல்லி முடித்தார்!
இனி, பேசியது கட்டுரை வடிவில்:
திராவிட இயக்கத்தின் சூழலில் வளர்ந்த நான் அந்த இயக்கத்தின் இன்றைய நிலமையைக் கவலையுடனும் விமர்சித்தக் காலக்கட்டத்தைக் கடந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த இயக்கத்தின் பல்வேறு பயன்பாடுகளை இச்சமூகம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்பதாலேயெ இந்த இயக்கத்தை விமர்சிப்பதே தவறு என்ற பார்வை பகித்தறிவுக்கு முரணானது என்பது மட்டுமல்ல, அதுவே ஓர் ஆதிக்க மனப்பான்மைதான்.
எந்த ஒரு இயக்கமும் சரிவுக்குப் பின் இல்லாமல் போய்விட்டது என்று சொல்வதற்கில்லை. ஏனேனில் ஒவ்வொரு இயக்கமும் சமூகத்தில் தன் பங்களிப்பை விட்டுவிட்டுத்தான் சென்றிருக்கின்றன. அந்தந்த இயக்கத்தின் தாக்கங்கள் அந்த இயக்கத்தின் அமைப்புகள் கலைக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன.
இந்தக் கருத்தை மனதில் இருத்திக் கொண்டே திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் என்ற என் உரைக்குச் செல்வது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இயக்கங்கள் எழுவதற்கான காலச்சூழல், தேவை, சமூகநிலை இயக்கங்களின் கோட்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. அதே இயக்கங்கள் நிறுவனமயமாகும் போது நீர்த்துப்போகின்றன.
உலகில் தோன்றிய இயக்கங்களைக் குறித்து ஆய்வுசெய்தவர்கள் ஒவ்வொரு இயக்கத்திற்கு நான்கு காலக்கட்டங்கள் இருக்கின்றன என்று முடிவு செய்திருக்கின்றார்கள்..
அவை :
EMERGENCE, COALESCENE, BUREAUCTRATIZATION AND DECLINE)
தோற்றம் அல்லது எழுச்சி,
இரண்டாவது ஒன்றிணைதல்
மூன்றாவது அதிகாரமையமாவது
நான்காவது சரிவு.
திராவிட இயக்கத்தையும் இந்த இயக்க கோட்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.
இந்த அடிப்படையில் தான் திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் அதன் சரிவுகளையும் நான் பார்க்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் இந்த இயக்க காலத்தில் பிறந்துவளர்ந்த ஓர் இரண்டாம் தலைமுறையின் பார்வையாகக் கூட இதைப் பார்க்கலாம்.
திராவிட இயக்க வரலாற்றை 5 காலக்கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
முதல் பகுதி பிராமணர் அல்லாதோர் இயக்கம்
இரண்டாவது நீதிக்கட்சியின் அரசியல் ..
மூன்றாவது தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கமும். .திராவிடர் கழகம்
நான்காவது திகவிலிருந்து பிரிந்த அண்ணாவும் திமுகவும்
ஐந்தாவது அண்ணாவுக்குப் பின் திமுக, அதன்பின் அதிமுக வகையாறாக்கள்
நான் இங்கே திராவிட இயக்க வரலாற்றைப் பற்றி பேச வரவில்லை. எனினும் அந்த வரலாற்றின் கட்டுமானத்தை எடுத்துச் சொல்லாமல் அதன் சரிவுகளைப் பற்றி மட்டுமே பேசுவது சரியாக இருக்காது என்பதால் இந்தக் கட்டுமானங்களிலேயே இருந்த குளறுபடிகள் இதன் சரிவுகளில் எப்படி எல்லாம் வினையாற்றின என்பதைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முதலாவதாக தந்தை பெரியாருக்கு முந்திய காலக்கட்டத்தில் தமிழ்ச் சமூகம் தான் இந்த இயக்கத்தின் தோற்றத்திற்கான காரணமாக அமைந்தது.
ஆங்கிலேய அரசின் நிர்வாகத்தில் வருவதற்கு முன்பிருந்த தமிழ்ச்சமூகத்தில் நிலவிய சாதிய அமைப்பு முறையில் போட்டி, பொறாமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் எல்லாம்
இருந்தாலும் குறிப்பிட்ட சில மேலடுக்கு சாதிகள் வரை ஒருவிதமான ஒத்திசைவு நிலவியது. என்கிறார் இதைப் பற்றி ஆய்வு செய்திருக்கும் பர்டன் ஸ்டெயின் (CLOSE COOPERATION BETWEEN BRAHMINS AND THE RESPECTABLE CULTIVATING GROUPS) 14ஆன் நூற்றாண்டிலிருந்து இந்நிலை நிலவியது என்கிறார் அவர். பார்ப்பனர்களும் நிலவுடமைக்காரர்களாக இருந்த வெள்ளாளர், ரெட்டி, கம்மாளர் சாதிகளுமே தமிழ்ச் சமூகத்தின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களாக ஒரு விதமான ஒத்திசைவு வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள்.
நிலம் சார்ந்த அதிகாரத்தில் இருந்த ஒத்திசைவு அறிவு சார்ந்த கல்வியறிவு விசயத்தில் இல்லை.
1610ல் தத்துவபோதகர் என்றழைக்கப்படும் ராபர்ட் டி நோபிளி எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியில்>>
” மதுரையில் மட்டும் 10000 க்கும் அதிகமான மாணவர்கள். அவர்கள் அனைவரும் பிராமணர்களே.இதர சாதியினர் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இக்கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்பாடு செய்யப்படிருந்தது. பிற வைசியர் சூத்திரர்கள் செல்வர் வீட்டு திண்ணையிலாவது அல்லது ஆசிரியர் வீட்டு திண்ணையிலாவது உட்கார்ந்து எழுத்துக்கூட்டவும் கணக்குப் போடவும் போனால் போகிறது என்று தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த 9 நூற்றாண்டிலிருந்து 18 நூற்றாண்டுவரையான சமூக சூழலின் விளைவுதான் ஆங்கில நிர்வாக இயந்திரம் இங்கே இயங்கத் துவங்கிய போது அவர்களது கல்வி முறையில் தேர்ந்து உத்தியோகங்களை ஏற்பதற்கு அப்போது பிராமண சமுதாயம் மட்டுமே தயார் நிலையிலும் முன்னணியிலும் இருந்தது.
இதனால் தான் மக்கள் தொகையில் 3 சதவீதமாக இருந்தப் பிராமணர்கள் சென்னைப் பல்கலை கழக பட்டாதாரிகளில் 72 சதவீதமாக இருப்பது சாத்தியப்பட்டது. அப்படி 1854ல் வருவாய் துறை வாரியத்தின் மாதக் குறிப்பில் நெல்லூர் மாவட்டம் ஜி.வெங்கட்ரமணையா என்ற உயர் பதவி வகித்த பிராமணரின் உறவினர்கள் 49 பேர் பிற பதவிகளிலும் இருந்தார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது. இதைப் போலவே வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம், வட ஆற்காடு சர்.சி.பி இராமசாமி அய்யர் குடும்பம் இவர்கள் எல்லாம் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்த காலக்கட்டம்.
எனவே இதுவரை, அறிவுசார்ந்த பின்புலத்தில் உருவாகும் அதிகாரத்தை அறியாத பிராமணரல்லாத சமூகம் தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் இழந்துவிட்டதை உணர்ந்து கொள்கிறார்கள்.
அதை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகவே பிராமணரல்லாத அமைப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் பிராமணர் அல்லாதோரில் இரு பிரிவுகள் இருந்தன.
முன்னேறியவர்கள், பிந்தங்கியவர்கள், the forward non brahmin and the backward non brahmin என்ற சமூக கட்டமைப்பில் முதலில் சொன்ன the forward non brahmin groups தான் இந்த இயக்கத்தின் தோற்றத்திற்கான காரணகர்த்தாக்களாக இருந்தார்கள்.
பிரமாணரல்லாதார் அமைப்பு தென்னிந்திய நலவுரிமை சங்கம், நீதிக்கட்சி என்ற படிநிலை வளர்ச்சியில் அரசாட்சியில் இடம் பிடித்த இரண்டாம் கட்டம் .
இக்காலக்கட்டம் தான் இந்த அமைப்பு தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு புரட்சிகரமான சமூக மாற்றங்களை செய்தது எனலாம்.
இதன் தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் மேலைநாட்டில் கல்வி கற்ற கனவான்கள்.
1927 அக்டோபர் 22, 23களில் நடந்த பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் அவர்கள் ஏற்றியிருந்த கொடியில் பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில
சொற்கள்: EQUALITY , FRATERNITY, LIBERTY , PROGRESS
என்ற நான்கு சொற்கள் , ஒன்றின் கீழ் ஒன்றாக இதே வரிசையில். அந்த மாநாட்டில் பேசிய ஆண்களும் பெண்களும் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் நடந்த கிளர்சிகளையும் புரட்சிகளையுமே பேசினார்கள்.
பிரஞ்சு நாட்டு ‘ராடிக்கல் ரிபப்பளிக்கன் பார்ட்டி’யின் சட்டதிட்டங்களை நாயர் பின்பற்றினார் என்கிறார் கோ. குமாரசுவாமி
ஆனாலும் பிராமணர் அல்லாதவர்களைச் சூத்திரர்களாக அரசு ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படுவதை எதிர்த்த இவர்கள் எந்த சூத்திரர்களுக்காக பேசினார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தமிழ்ச்சமூகத்தை பிராமணர் , பிராமணர் அல்லாதோர் என்று இருவகைப் படுத்தியவர்கள் பிராமணர் அல்லாதோரில் இருக்கும் இரு நிலையைப் பற்றி வெளிப்படையாக இன்றுவரை பேசிக்கொள்வதில்லை. அவர்களே இன்றுவரைச் சொல்லிக்கொள்ளும் அந்த சூத்திரநிலைக்கும் கீழே இருக்கும் பஞ்சமர்கள் இந்தப் பட்டியலில் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பஞ்சமர்களோடு இவர்களுக்கு ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை.
(தொடரும் அடுத்தவாரம்)
- கருகத் திருவுளமோ?
- ஒரு டிக்கெட்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1
- தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 52
- பிரான்ஸ் வள்ளுவர் கலைகூடம்.
- மருத்துவக் கட்டுரை – காச நோய்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 27
- நரகம் பக்கத்தில் – 1
- வாழ்ந்து காட்டிய வழிகாட்டி
- திரை விமர்சனம் விரட்டு
- நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்
- சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !
- பார்த்ததில்லை படித்ததுண்டு
- சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)
- பச்சைக்கிளிகள்
- தொடுவானம் 10. தினம் ஒரு குறள்
- ”செல்வப் பெண்டாட்டி”
- திண்ணையின் இலக்கியத் தடம் -29
- நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்
- நீங்காத நினைவுகள் 41
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு